“நண்பா நீ சொல்வதும் சரி தான். ஆனால் அதற்காக நம் திட்டத்தை நிறுத்தக்கூடாது. அது தனியாக நடக்கட்டும்” என்றான் மருதன்.
சிறிதுநேரம் யோசித்த கனியழகன், “சரி நண்பா. அப்படியே ஆகட்டும்.” என்றான்.
“அப்படியானால் முதல் படியாக, நம் வேலையை பக்கத்து மயிலேனி நாட்டில் ஆரம்பித்துவிடலாம்” என்று சிரித்தான் மருதன்.
“ஹ்ம்” என்று நண்பனை கட்டிக்கொண்டான் கனியழகன்.
******
பஞ்சனையில் நிம்மதியாக உறக்கம் கொள்ளும் தன்னவளை மையலோடு நோக்கி கொண்டிருந்தான் கவிந்தமிழன்.
“என் மேல் கொண்ட அளவு கடந்த அன்பால் தான் அன்பே உன்னை நோக்கி வரும் அத்துணை துயரங்களையும் தூசி போல் தட்டி செல்கிறாய் என்பதை நானறிவேன்” என்று அவளின் தலையை கோதியவன் தானும் அவளருகில் சாய்ந்து மெல்ல தன் காதல் மனைவியின் உறக்கம் கலையாமல் தன் நெஞ்சின் மேல் அவள் தலையை சாய்ந்து கொள்ள, உறக்கத்திலேயே சிறு சிணுங்களையும் விழி திறவாத முகசுழிப்பையும் பரிசாய் தந்தாள் மலரிதழ்.
“எத்தனை ரம்யமான காட்சிகளாக இருக்கட்டும் அழகிய மங்கையர்களாக இருந்தாலும் கூட தன் மனையாளின் மேல் அன்பை சுமந்து நிற்கும் ஆணிற்கு அவள் மட்டுமே இந்த அண்டத்தில் பேரழகு. எனக்கு நீ தானடி பேரழகி.” என்று மலரிதழின் உச்சியில் இதழ் பதித்தான்.
வலக்கரத்தை அவனின் மார்பினில் வளைத்தவள் முகம் மலர மீண்டும் உறக்கத்திற்கே சென்றாள்.
மெல்ல அவளையே உற்று நோக்கியவன். பின் கனிந்த குரலில் பேச ஆரம்பித்தான்.
“இளம்பருவத்திலிருந்தே பயமென்பதே அறியாதவன் நான். ஆனால் என் வாழ்வில் நீ அடியெடுத்து வைத்த நாள் முதல் எனக்குள் ஒரு வித அச்சம் தொற்றிகண்டிருக்கறதடி பெண்ணே. திண்ணமாக அவ்வச்சம் அபசகுன அச்சம் அல்ல. எனக்கென்று ஒருவள் வந்துவிட்டாள். நான் தெரிந்தோ தெரியாமலோ எனக்கிருக்கும் ஒரு சில திறமைகளை வைத்து மக்களுக்கு உதவ போய் இன்று மக்கள் என்னை கடவுளாய் பார்க்கின்றனர். அது நான்முற்பிறவியில் நான் செய்த புண்ணியம் போலும். ஆனாலும் அதே திறமைகளின் மேல் பொறாமை கொண்டு ஒரு சிலர் தீய எண்ணம் கொண்டு என்னை அழிக்க முயலுகின்றனர். எனக்கேதாவது ஆகிவிடுமோ என்ற அச்சமெல்லாம் எனக்கு என்றுமே இருந்தது இல்லையடி மலர். என்னால் உனக்கு ஏதாவது கெடுதல் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் என்னை வாட்டி வதைக்கிறது. ” என்றான் கவிந்தமிழன்.
“எனக்கு உங்களின் திறமை மேல் துளிகூட ஐயம் எழவில்லை. நீங்களிருக்கும் பொழுது யாருக்கு துணிவு வரும் என்னிடம் நெருங்க. வீணாக கவலை கொள்ளாமல் உறங்குங்கள் இரவில் விழுத்திருப்பது உடலுக்கு நல்லதல்ல” என்று புன்னகைத்தபடி உறங்கினாள்.
உறக்கத்திலும் தன் சொற்களை கேட்டுக்கொண்டிருக்கும் தன்  மனைவியை நினைத்து சிரித்தவன்.
‘ஒற்றர்கள் மூலம் நடக்கும் ஒரு சில விடயங்கள் என் செவிக்கு எட்டுகிறது. நடக்கும் சதியில் இருந்து உன்னை காப்பாற்ற என் உயிரையும் துறக்க ஆயுதமாய் இருக்கிறேன் அன்பே. அதற்காக ஒரு சில செயல்களை இப்பொழுதிலிருந்தே செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஒரு வேலை துரதிஷ்டவசமாக எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், என் நம்பிக்கைக்கு பாத்திரமாகிய நம் அமைச்சர் உனக்கு உதவுவார்’ என்று நினைத்தவன் வானத்திலிருந்து பறந்து வந்து சுவற்றில் அமர்ந்த புறாவை நோக்கி சென்றான்.
‘நான் எதிர்பார்த்த செய்தி வந்துவிட்டதோ?’ என்று தனக்குள் எண்ணியபடி புறாவின் காலில் இருந்த ஓலையை எடுத்து படித்தான்.
கோபத்தின் உச்சியில் வேல் கொண்டு நின்றான் கவிந்தமிழன்.
‘அமைதியாய் இருப்பதால் எனக்கொன்றும் அறியாது என்று நினைக்கிறார்கள் மூடர்கள். நான் இந்த நாட்டின் அரசன். எனக்கு என்றால் அமைதியாயிருப்பேன். என் நாட்டு மக்களுக்கென்றால் யாராயிருந்தாலும் தீயிற்கு இறையாக்கிடுவேன் ‘ என்று மனதினுள் கர்ஜித்தவன் மலரிதழுக்கு போர்வையை கழுத்துவரை இழுத்து போர்த்தி விட்டு நெற்றியிலொரு முத்தம் பதித்து தலைகோதி “முக்கியமமான அலுவல் விரைவாக வநதுவிடுகிறேன் அன்பே!” என்று ஓலையில் குறிப்பிட்டு அவளின் பக்கத்தில் வைத்து சென்றான்.
அவனறியவில்லை இதுவே அவன் வாழ்வில் சூறாவளியை உண்டாக்கப்போகிறது என்று.
******
“நம் திட்டப்படி தானே எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது. ஏனென்றால் என் தமையன் அதிபுத்திசாலி வரபோதை முன் கூட்டியே கண்டுபிடிப்பவன். நம் திட்டத்தை கண்டு கொண்டானென்றால் நமக்கு நிச்சயம் சங்கு தான்.” என்றான் கனியழகன்.
“நண்பா! உன் அண்ணன் புத்திசாலியாக இருந்துவிட்டு போகட்டும் ஆனால் நான் அவனுக்கே பரம எதிரி. என்னால் அவனுக்கு ஈடாக எதையும் செய்யமுடியும். நீ கவலை கொள்ளாதே. எல்லாம் கச்சிதமாக நடக்கும்.” என்றான் மருதன்.
“அப்படியென்றால் இன்னும் சற்று நேரத்தில் எனக்கு யோகம் அடிக்க போகிறது  என்று சொல். ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன் நண்பா. எல்லாவற்றையும் அடைந்து இறுதியாக உன் தங்கையின் அருகே மணாளனாக அமர” என்று சிரித்தான் கனியழகன்.
“நானும் தான் நண்பா” என்று இருவரும் தழுவிக்கொண்டனர்.
“யாரங்கே?” என்று மருதன் குரல் கொடுக்க.வேகமாக பணியாள் ஒருவன் ஓடி வந்து தலை தாழ்த்தி நின்றான்.
“விரைந்து சென்று ரதத்தை ஏற்பாடு செய்ய சொல். இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் இருவரும் காட்டிற்கு செல்ல போகிறோம்.” என்றான் மருதன்.
“ஆகட்டும் அரசே” என்ற காவலாளியிடம், “எங்களுடன் யாரும் வர வேண்டாம். தேரோட்டி அமுதன் மட்டும் உடனிருந்தால் போதும். விரைந்து செல்” என்று அதட்டினான்.
அவனின் கட்டளையை நிறைவேற்ற விரைந்தோடினான் காவலாளி.
“வா நண்பா. நம் குறிக்கோளை நோக்கி முதல் அடி எடுத்துவைப்போம்” என்று இருவரும் ரதம்  நோக்கி சென்றான் மருதன் பின்னே கனியழகனும் சென்றான்.