சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 17
நாட்கள் நகர, இன்ப உலகில் சஞ்சரித்தவனோடு பழகுபவர்களுக்கும் நாட்கள் இனிமையாகவே இருந்தது. காதல் செய்த மாயை.. அஷோக் முகத்தில் ஒட்டிய புன்னகை நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது.
சிரித்த முகமாய் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இனத்தை சேர்ந்தவன், இப்பொழுது இன்னும் இனிமையாய் பழகினான்.
வாரம் முழுவதும் தொழிலுக்காய் நேரம் ஒதுக்குபவன், வார இறுதியை மனம் போல் இன்பமாகவே செலவழிக்கப் பழகி இருந்தான்.
சுசிலாவின் தகப்பனாரின் உடல் நிலை காரணமாக சுசிலா மாதத்தின் பாதி நாட்களும் மும்பையில் கழிக்க வேண்டியதாய் போயிற்று. மீதி இருக்கும் நாட்களில் வேலையையும் பார்த்துக்கொண்டு மற்ற சொந்த விஷயங்களையும் பார்க்க வேண்டியிருக்க அவரை வீட்டில் பார்ப்பதே அபூர்வமாய் போனது.
அன்றும் அப்படி தான்.. சுசிலா இல்லாது போகவே, குளித்து முடித்து கீழே வந்தவன் உணவு மேஜையிலிருந்த சாம்பாரை மட்டும் பார்க்கவும், “ஏன் இதையும் நானே செஞ்சிருப்பேனே.. எதுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு சமைக்கணும்..” முறுமுறுத்துக் கொண்டே தோசை ஊற்றிக் கொள்ள அடுக்களைக்குள் சென்றான்.
வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் இருந்தபோதும் அவன் வீட்டிலிருக்கையில் அவன் அழைக்காமல் ஒருவரும் வீட்டிற்குள் வர அனுமதியில்லை. அவன் அறையிலிருந்து கீழ் வருவதற்கு முன்பே மைதிலி, சுசிலா சொல்லுவதைச் செய்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவாள்.
“இந்த தாத்தா எதுக்கு இப்பிடி மும்பையை கட்டிகிட்டு அழராரோ தெரியல.. பொண்ணு வேணும் ஆனா அவர் வர மாட்டார்.
இவரால நான் தனியா இருக்கவேண்டி இருக்கு. இந்த அம்மாக்கு ஒன்னு மும்பை இல்லாட்டி ஆஃபீஸ்!!
வரவர என்னைக் கண்டுக்க தான் ஆளே இல்லாமா போச்சு! இது என்ன பொழப்போ நானே தனியா தோச ஊத்தி சாப்பிட்டுகிட்டு.. ச்சா..” தனியாய் வாய்விட்டுப் புலம்பிக்கொண்டே தோசைக்கல் வைக்கப்பட்டிருந்த  அடுப்பை பற்றவைக்கவும் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வாயிலை நோக்கிச் சென்றான்.
“இது யாரு இப்போ.. மனுஷனுக்குப் பசிக்கும் போது தான் இப்பிடி சத்திய சோதனை எல்லாம் வரணுமா.. செக்யூரிட்டீனு ஒருத்தன் எதுக்கு இருக்கானோ? ராமு என்ன பண்றான்?” முகத்தில் கடுகு போட்டால் வெடித்துவிடும்.. அப்படி ஒரு கடுகடுப்போடு கதவைத் திறந்தவன். வெளியில் எதைப் பார்த்தானோ, முகத்தில் ஒரு பரவசம். அவனையும் மீறி உள்ளுக்குள் குதுகலம்.
சுதாவை வாசலில் பார்த்தவன் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.
“உள்ள கூப்பிட மாட்டீங்களா?”
வாசலிலிருந்து நகர்ந்து கொண்டே, “நான் கூப்பிட்டு நீ உள்ள வரதுக்கு நீ என்ன விருந்தாளியா..?”
“இருங்க ஒரு நிமிஷம்” என்றவள் வெளியே நின்று கொண்டிருந்த ராமுவிடம் கொண்டுவந்த உணவுப் பொருட்களை உள்ளே வைக்கச் சொல்லி அவன் வெளியில் சென்றதும்,
அஷோக் புன்னகைத்தவாறே, “வா வா.. உன்ன பார்த்ததும் எப்பவும் போல கனவுனு நினைச்சேன்.. அது தான் அப்படியே நின்னுட்டேன்”
“கனவில மட்டும் பாக்கர தூரத்தில நான் இல்ல.. பாக்கணும்னு தோணி இருந்தா.. ரெண்டு எட்டு எடுத்து வச்சா பக்கத்து வீட்டில பார்த்திருக்கலாம்..”
“கொஞ்சம் பிஸி அதுதான்… கொஞ்ச நாளைக்கு இப்படி தான் பிஸியா இருக்கும். சீக்கிரம் நார்மல் ஆகிடும்.. அது என்ன எனக்குச் சாப்பாடா? ஏகபட்டது இருக்கும் போல..”
“ம்ம்.. உங்க ரெண்டு பேருக்கும். கிட்சென்ல இருந்து புகை வருது.. அம்மா உள்ளையா இருக்காங்க?” கேட்டுக்கொண்டே சென்றவள் புகைந்து கொண்டிருந்த தோசைக்கல்லைக் கண்டு, அடுப்பை அணைத்து விட்டு, “எல்லாம் உங்க வேலையா? எதுக்கு இந்த வீண் பிடிவாதம்? ஒரு வார்த்த சொன்னா மைதிலி அக்கா வந்து செஞ்சு தரமாட்டாங்களா?”
“ரெண்டு தோச தானேனு அடுப்ப பத்த வச்சேன்.. உன்ன பார்த்ததும் எப்பவும் போல சகலமும் மறந்துட்டேன்.”
அவன் பேச்சு அவளுக்கு உவகை தந்தாலும் அதை முகத்தில் கண்டு கொண்டதுபோல காட்டிக் கொள்ளவில்லை.
“அதனால தான் வெறும் சாம்பார் மட்டும் இருக்கா?”
“நான் வரது அம்மாக்கு தெரியும். காலைல பாட்டி சொன்னாங்க. நீங்க டான்னு எட்டுக்கு சாப்பிடுவீங்கனு ஓட்டாமா வந்தேன்.. சரி உக்காருங்க.. நான் ஊத்தி தரேன்.”
“என்ன ஸ்பெஷல்? பாட்டி செஞ்சதா?”
“ஏன் பேத்தி செஞ்சு கொடுத்தா சாப்பிடமாட்டீங்களா?”
“சமையல் வேல எல்லாம் தெரியுமா? இல்ல நான் தான் உன்னுடைய எலியா?” என சிரித்துக்கொண்டே ஆராய்ச்சி பார்வையை அவளிடம் செலுத்தவும்
“சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க! ஆமா.. அம்மா, வீட்டுல இருக்கதா தானே சொன்னாங்க?”
“அம்மாக்கு ஒரு அவசர வேலை.. வந்திடுவாங்க!”
அவன் அமரவும் சுடசுட தோசையோடு, கொண்டு வந்திருந்த கறி குழம்பைச் சேர்த்து பரிமார, அதை வாயில் வைத்தவன் கண் தானாய் மூடியது.
வாயிலிருந்ததை விழுங்கியவன், “இத நீயா செஞ்ச?”
“ம்ம்.. பிடிச்சிருக்கா?”
“செம… காலம் பூரா சாப்பாட்டுக்குக் கவல இல்ல”
பேசிக்கொண்டே ஒவ்வொரு வகைக் குழம்போடும் வயிறார சாப்பிட்டு முடித்து வந்தவன் கையில் அவன் விரும்பி அருந்தும் மசாலா தேநீரைக் கொடுக்க அதைக் குடித்தவன், “அசத்துர லட்டு! என் டேஸ்ட்டுக்கு எல்லாம் செஞ்சி தர.. உனக்கு இவ்வளவு நல்லா சமைக்க வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல!”
“ம்ம்.. பத்து வயசில இருந்தே அம்மா கூட கிச்சன்ல இருந்திருக்கேன்.. இது கூட செய்யலைனா எப்படி.. சமயல் கத்துகிறது வசதி! நம்ம யார் கையையும் எதிர் பார்த்து நிக்க வேண்டாம்.. ”
“இத சமச்ச உன் கைக்கு கண்டிப்பா ஒரு பரிசு காத்திட்டு இருக்கு!”
“அப்போ தினமும் ஏதாவது தூக்கிட்டு வந்திட போறேன்.. ஏன்டா சொன்னேன்னு ஃபீல் பண்ணப்போறீங்க!” அவன் முகம் பார்த்துப் புன்னகைக்க,
சத்தமாய் சிரித்து நிருத்தியவன், “நான் விளையாட்டுக்கு சொல்லல.”
“தினமும் எதுக்கு அங்க இருந்து தூக்கிட்டு வரனும்? இங்கையே செய்யேன்.. யாரு உன்ன தடுக்க போரா? ஆனா என்ன.. நீ இப்படி சமயல் செஞ்சு தினமும் கொடுத்தா.. நான் ரெண்டு இல்ல நாலு மணி நேரம் ஜிம்-ல தான் இருக்கணும்!”
புன்னகை முகமாய் அவள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க,
“பாரு நீ கொடுத்ததும் ஒரு வார்த்தை கூட கேக்காம சாப்பிட்டேன்… நீ சாப்பிட்டியா?”
“மணி எட்டு தானே ஆகுது.. அப்பரமா சாப்பிட்டுப்பேன்!”
“வேண்டாம் இப்போவே சாப்பிடு.. நான் உனக்குத் தோச ஊத்துறேன்”
பதிலுக்குக் காத்திராமல் அஷோக் அடுப்பைப் பற்ற வைக்க, சுதாவும் ஒரு தட்டோடு அடுப்பு மேடை மேல் அமர்ந்து கொண்டாள்.
அவனோடு பேசிக்கொண்டே சாப்பிடச் சுகமாய் இருந்தது. ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்பது எதுவும் நினைவில்லை. அவன், அவன் மட்டுமே அவள் நினைவில். அவனுக்கும் அப்பிடி தான் இருந்தது. அவளோடு செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் பனித்துளியாய் கரைந்தது. எந்த வஞ்சனையும் இல்லாமல் அவள் சாப்பிடச் சாப்பிட அவன் ஊற்றிக் கொடுத்தான்.
அவள் கடைசி தோசையைச் சாப்பிடவும் அடுப்பை அணைத்துவிட்டு அவள் அருகில் நின்று கொண்டான். ஒரு துண்டு தோசையைக் கையில் எடுத்தவள் எதுவும் யொசிக்காமல் பேசிக்கொண்டே “இத நீங்க தொட்டுக்கவே இல்ல… கொஞ்சம் டேஸ்ட் பாக்கலாமில்ல..” அதை அவன் வாயருகில் நீட்ட அவனும் அதை வாங்கிக்கொண்டான்.
“இது என்ன… இன்னொரு வாய் குடு கண்டு பிடிக்கிறேன்..”
“தோச கொஞ்சம் தானே இருக்கு.. வெறும் சட்டினி தான் இருக்கு” என்று இருந்த தோசையை சட்டினியில் முக்கி அதை அவன் வாய் அருகில் கொண்டு போகும் பொழுது தான் கவனித்தாள் அவன் குரும்பை.
அந்திரத்தில் நின்றுக் கொண்டிருந்த அவள் கையை பிடித்து உணவை ருசி பார்த்தவன், “எனக்கு கத்திரிக்காவே பிடிக்காது தெரியுமா? உன் கை மணம் நினைக்கிறேன்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. புளிப்பா.. காரமா.. கூடவே இனிப்பான கையால.. இது ஒரு புது காம்பினேஷன்!“
அவளுக்கு என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. உள்ளுக்குள் எப்பொழுதும் போல் ஒரு சிலிர்ப்பு.. இன்றைய அவனுடைய பேச்சுகள்.. அவளை தன் வாழ்க்கைத் துணையாய் ஏற்க விரும்புவது போன்ற பேச்சுக்கள்..
மேக ஊர்வலம் போய்க்கொண்டிருந்தாள். எல்லாம் விழி விரித்து! இதழ் விரிய..
“முழிச்சது போதும்.. கை காயுது. போ போய் கை கழுவு!”
கை கழுவி வந்தவள் பின்னோடு வந்தவனிடம் மனமே இல்லாமல், “வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நான் கிளம்பட்டா?”
“இப்போ தானே.. வந்த.. அதுக்குள்ளவா?”
“அம்மா வேற வீட்டில இல்ல.. ரொம்ப நேரம் இருந்தா.. “
“இருந்தா..”
“ஒன்னும் இல்ல, நான் கிளம்பட்டா?”
பேச்சை இழுக்கும் பொருட்டு, “சும்மா எங்களைப் பாக்க வந்தியா? இல்ல ஏதாவது விஷயமா வந்தியா?” என
தலையை மெதுவாகத் தட்டிக் கொண்டவள், “அன்னைக்கு இன்டெர்வியு போனேனே.. அங்க இருந்து ஜாயினிங் மெயில் வந்திருக்கு! ஷோலிங்க நல்லூர் பிரான்ச்சில!”
“சூபர்.. கங்கரட்ஸ்..” அது அவர்களுக்குச் சொந்தமானது எனச் சொல்ல நினைத்து, அவள் இயல்பை கெடுக்க விரும்பாமல்,  சொல்லாமலே விட்டுவிட்டான்.
“தாங்க்ஸ்!”
“உன் தாங்க்ஸ் இருக்கட்டும்.. ஸ்வீட் எங்க? ஸ்வீட் இல்லாம ஒத்துக்க மாட்டேன்.. இது போங்காட்டம்” இடமும் வலமும் அவன் தலையை அசைக்க
“ஸ்வீட்டா? இப்போதைக்கு நான் தான் ஸ்வீட்.. நான் தான் லட்டாச்சே” ஏதோ அவனை மடக்கி விட்ட நினைப்பில் சிரித்தாள்.
“ஓ.. அப்போ சரி.. இந்த ஸ்வீட் போதும். பாக்க நல்லாவே இருக்கு.. ட்டேஸ்ட் பார்த்துடுவோம்..” அவளை நெருங்கினான்.
‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதின் அர்த்தம் இது தானோ?
“என்..ன.. பண்றீ..ங்க?”
“நீ தானே லட்ட எடுத்துக்க சொன்ன. அது தான் டேஸ்ட் பாக்கலாம்னு..” அவன் முன்னேர, அவள் கால்கள் நகர மறுத்துப் பின்னிக் கொண்டது.
ஒருவாறு சமாளித்து அவன் முன்னுக்கு வர வர அவளும் அவள் கால்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து நகர ஆரம்பித்தாள்.
அவன் புன்னகைத்துக் கொண்டே பொறுமையாய் முன்னேர, அந்த புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது. அவளால் புன்னகையை அடக்க முடியவில்லை. உதட்டை உள்ளிழுத்து அதை மறைக்க முயன்று தோற்றுபோனாள். அவன் விடுவதாகத் தெரியவில்லை.
“அச்சோ.. என்ன வேல இது?” அந்த நீளமான அறை ஒரு முடிவுக்கு வர சுவற்றை இடித்துக் கொண்டு நின்றாள்.
அவளின் இரு பக்கங்களிலும் இரு கையை கொண்டு சிறை செய்திருந்தான்.
“என்ன நீ இனிக்கர லட்டானு பார்த்திடவா?” புன்னகை மாறாமல் கூறிக்கொண்டே அவள் முகம் நோக்கி அவன் தலை சாய்க்க
“விளையாடாதீங்க..” என அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட முற்பட்டாள். வேரூன்றிய மரம் போல் நின்றவனை அவளால் இம்மியளவு அசைக்க முடியவில்லை.
முதல் முயற்சி தோல்வியடைய, “அம்மா..” என்றாள்
“ம்ம்.. வரட்டும்” என்றான்.
அவன் முகம் தீவரத்தைக் காட்ட, அவன் மூச்சுக் காற்று அவள் மேல் பட, அவள் சிரிப்பு போன இடம் தெரியவில்லை. இதயம் வேகமாய் ‘தட தட’ என அடிக்க, உடல் முழுவதும் உஷ்ணம் பரவி எதையோ எதிர் பார்க்க, கை அவன் நெஞ்சில் நிலைத்திருக்க அதில் ஒரு நடுக்கம்..
வாய் வறண்டு தொண்டையில் எதுவோ மாட்டியது போலத் தோன்ற, மூச்சு காற்றுக்காய் உதடு தானாய் திறக்க, அவனுக்கு அவள் பவள உதடு வா என்று அழைப்பு விட்டதோ?
அவள் அகன்ற விழி விரித்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் விழியின் வண்டுகள் தேனைத் தேடுவது போலவே அவனுக்கு தோன்றியது.
அதற்குள் வீழ்ந்தவன் எழுந்துகொள்ள விரும்பவில்லை.. அவன் மிக அருகில் நெருங்கவும், தொண்டையில் மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். அவன் மூச்சுக் காற்று அவளுக்குள் இறங்கும் தூரத்தில்.. உடல் முழுவதும் பட்டாம்பூச்சி சிறகடித்தது. கை தானாய் அவன் ட்-ஷர்ட்டை கசக்க.. கால் பலம் இழக்க.. மூடிய இமைக்குள் அவன் இன்ப சித்திரவதை செய்ய.. ஏதேதோ எண்ணங்கள்!
சிறிது நேரமாகியும் எதுவும் நிகழாமல் போகவே, மெள்ள ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். அவள் எதிரில் நின்று அவளைப் பார்த்து பெரிதாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான். கலா ரசிகன் அவள் முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான்.
அவன் கைகள் இன்னும் அதே நிலையில் இருக்க,
இரண்டு கண்களையும் திறந்தவள் அவன் ட்-ஷர்ட்டிற்கு விடுதலை கொடுத்துக்கொண்டே  நீண்ட மூச்சை இழுத்துவிட்டு, “என்ன விளையாட்டிது?” என்றாள். அது ஏக்க மூச்சா இல்லை உண்மையிலேயே நிம்மதி பெருமூச்சுதானாவென்பது அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் தெரிந்தே இருந்தது.
அவன்  முகம் அதே நிலையில் இருக்க, வலது கையை விலக்கி அவளுக்கு வழி விட்டான்.
அவள் நகரவும் அவள் நின்ற இடத்தில், அவன் முதுகைச் சாய்த்து நின்றவன் அவன் இடக்கையால் அவள் வலக்கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தான்.
அவன் முன் வந்து தட்டுத் தடுமாறி நின்றவளுக்குக் கூச்சம் வந்து ஒட்டிக்கொள்ள நிலத்தை பார்த்துக்கொண்டே, “வீட்டில அம்மா இல்லாத போது என்ன வம்பிது?” என
“அம்மா இருக்கும்போது உனக்கு ஓகேவா?”
கண்ணுயர்த்தி அவனைப் பார்க்க, அவன் அவளையே பார்த்திருந்தான்.
“சரி.. உன் விருப்பம். இனி உன் கிட்ட.. அம்மா வீட்டில இருக்கும் போது வருவேன்.. லட்டு எப்படி இனிக்குதுனு பார்க்க..”
அவள் உள்ளங்கையில் அவன் விரல்கள் தீண்டிக் கொண்டிருக்க, அவளுக்கோ கூச்சத்தோடு என்னவோ செய்தது.
வாய் பசையிட்டு ஒட்டிக் கொண்டது. அவளிடம் பதில் ஒன்றும் வராமல் போகவே, “சரி ஸ்வீட் வேண்டாம்.. வேற ஒன்னு கேட்டா தருவியா?”
‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்து வைத்தாள்.
“இன்னைக்குப் பூரா என் கூட இருப்பியா?”
‘இன்னைக்கு மட்டும் போதுமா.. நீங்க சரினு சொன்னா வாழ்நாள் பூரா இருப்பேனே..’ என மனம் சொல்ல நா எழவில்லை.
“அப்போ என் கூட வர பிடிக்கலியா?” என அவள் கையை விடுவிக்க..
‘நான் சொன்னேனா?’ என்பது போல அவன் முகம் பார்த்து நின்றாள்.
“இங்க வந்து இவ்வளவு நாளா நீ எங்கையும் போகலியே.. சும்மா வெளில போகலாம். மூவி போகலாம், கடையில கொஞ்சம் வேலை இருக்கு அங்கையே ஷாப்பிங்க் பண்ணலாம். அப்புறம் வீட்டுக்கு வந்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் நாம என் ஃப்ரெண்ட் ஒருத்தன் யூ.எஸ்-ல கல்யாணம்  முடிச்சு இப்போ தான் வொய்ஃ கூட வந்திருக்கான். சோ ஃப்ரெண்ட்ஸ் வரைக்கும் பார்ட்டி வச்சுருக்கான். அதே ஹால்ல, என்னோட பெஸ்ட் ஃபிரண்டோட செண்ட் ஆஃப் பார்ட்டி இருக்கு! வரியா?”
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து,  “என்ன என்னோட வரியா?”
“காலைல சரி.. ஆனா சாயங்காலம்.. உங்க ஃப்ரெண்ஸ்க்கு நடுவில நான் எதுக்கு?”, தயங்கியவளை
“எனக்காக?”, எதிர்பார்ப்போடு கேள்வியாய் பார்த்தான்.
அவனுக்கு வேண்டியிருந்தது. அவன் வாழ்வின் எல்லா பகுதியும் அவளுக்குத் தெரியவேண்டும் என்றிருந்தது. அவளுடான வாழ்வில் இணைவதற்குள் ஓரளவேனும் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
அவன் பழக்கவழக்கங்கள், தோழர்களுடன்… அவளுக்கும் புரிதல் வேண்டும் என்றிருந்தது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அழகிய, மென்மையான திரை விரித்து.. இன்முகமாய் காதலித்து.. திருமணமான பின் உண்மை முகத்தை பார்க்க பலருக்கும் பிடிப்பதில்லை. வெரும் இன்பத்தையும் சுகத்தையும் மட்டுமே காதல் திருமணம் தரும் என்ற மிதப்பில், வாழ்வில் ஒன்று சேர, அது அள்ளி வீசும் நிதர்சனங்களை பலரால் ஏற்கமுடிவதில்லை. இதனாலேயே பலரின் திருமண வாழ்வு கசந்து விடுகிறது.
அஷோக்கிற்கு அப்படி வேண்டாம்.
இது தான் நான்.. இது தான் நீ.. இருவர் வாழ்வும் இருவருக்கும் திறந்த புத்த்கமாய்.. ஒளிவு மறைவில்லாமல்.. அப்படியே.. ஒரு புரிதலோடு ஒன்றிணைய வேண்டும்..  இருவரின் வளர்ப்பு வேறு.. உலகம் வேறு.. ஒழுங்கான புரிதல் இருந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும்.. இதே அன்போடும் காதலோடும்.. காலம் முழுதும்.
கணவன் மனைவிகிடையில் அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வேண்டும். அதற்கு திரையில்லாமல் உண்மையாய் இருக்கவேண்டும் என்று நம்பினான்.
இதற்காகவே அவள் முகம் பார்த்து நிற்க,
மறுக்க முடியாமல், “எப்போ?” என்று அவள் பதில் வரவும் அவள் தலை மறையும் வரை பொறுத்திருந்தவன், கையில் பிடிக்கும் நிலையைத் தாண்டியிருந்தான்.
இவன் கொள்கை எதுவும் அவளுக்கு இல்லை போலும்.. அவன் திறந்த புத்தகமாய் இருக்க விரும்ப.. அவள் புதைத்தது பூதமாய் விஸ்வரூபம் எடுக்கப்போகும் நேரம் நெருங்கிவிட்டதை அறியவில்லை.
இது தான் சுதா.. இவளோடு தான் என் வாழ்வு என்று  சுதாவை விரும்பி காதலித்தவன், வேறு சுதாவைக் காண நேர்ந்தால்?
அடுத்துப் பார்க்கவிருக்கும் காட்சிக்குப் பின் இதே மனநிலையில் இருப்பானா? அதைத் தாண்டும் வலிமை அவன் காதலுக்கு உள்ளதா? இல்லை காதல் சிதறிவிடுமா?