“நல்லா சிரிடா! அங்கங்க லவ் பண்ற பொண்ணுக்காக… அவுங்களே…!!! எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு… என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு நீ ஜாலியா இங்க நின்னு பார்த்துட்டு இருக்க.” என்று தனக்கு பின்னால் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருக்கும் தன் தங்கையை பார்த்து மெல்ல புன்முறுவல் பூக்க.
“நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன். ஆனா, நீ டென்ஷன் இல்லாம கூலா இருக்க இல்ல. உன்னை…” என்று வேகமாக வந்து அண்ணனின் கையில் கிள்ளினாள்.
“அங்க பார்த்தியா வாமிட்டிங் சென்ஸ் கொஞ்சம் கூட இல்லாம எவ்ளோ அழகா உளுந்தங்களிய சாப்பிட்டு முடிச்சிட்டா இல்ல.” என்றான் உள்ளப்பூரிப்புடன்.
“ஆமாடா! அவுங்களுக்கு அதை செஞ்சு கொடுக்கறதுக்குள்ள நாலு நாளா வீட்ல செஞ்சி எங்களை வச்சி ட்ரையல் பார்த்த இல்ல. நீ ஒழுங்கா அந்த டேஸ்ட் கொண்டு வரதுக்குள்ள கிட்சனையே ஒரு வழி பண்ணிட்ட. இன்னும் அம்மா உன்னை திட்டிகிட்டே கிளீன் பண்றாங்க ” என்றாள்.
“ஆமா! பின்ன? மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லைன்ற மாதிரி. நான் என்னைக்குமே சுடுதண்ணி வெக்க கூட சமையல் அறைபக்கம் போனது இல்லை. நான் முதல் முறையா செய்ற உளுந்துகளி நல்லா இல்லாம, அதை என் டார்லிங் சாப்பிட்டு கொஞ்சமா எடுக்குற வாமிட்ட இன்னும் நிறைய எடுக்கவா? அதனால தான் உங்களை வெச்சு மூணு நாள் உளுந்தங்களியே சமைச்சி போட்டு கரெக்டா பதமா வந்தப்புறம் என் செல்லகுட்டிக்கு கொடுத்தேன்.”
“டேய்! ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர். சரி நீ செயறல்ல? அதை நீயே கொண்டு போய் கொடுக்க வேண்டியது தானே? எதுக்கு என்னை அனுப்புற?” என்றாள்.
“கொடுக்கலாம் தான். என்ன பண்றது? எல்லாம் என் தலையெழுத்து. இவ்ளோ அழகா பூ மாதிரி ஒரு பொண்ணை படைச்ச கடவுள், அதை முதல்லயே என்கிட்டே கொடுக்க மறந்துட்டார். ஒரு நாசமா போன பிசாசுகிட்ட கொடுத்துட்டார். இன்னும் அவ அந்த ஷாக்லர்ந்து வெளிய வரல? ஏற்கனவே ஒருத்தன் ஏற்படுத்திட்டு போன காயம் ஆறதுக்கு முன்னாடியே நான் போய் நின்னா என்னை ஏத்துப்பாளா? நிச்சயமா கைல கிடைகறத எடுத்து என் மண்டைய கண்டிப்பா உடைப்பா. அதுவும் உங்க அண்ணிக்கு அந்த சுதன் மேல இருக்க கோபத்துக்கு அவ்ளோ தான் என்னை உயிரோட விட்டாலே பெரிய விஷயம்.” என்றான்.
“அப்ப எப்பிடி தான் அண்ணி மனச மாத்துவ?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“லெட் ஹெர் நீட் எ ஸ்பேஸ்? அதுக்கு தான் இந்த குழந்தை பிறக்கற வரைக்கும் நான் அவளுக்கு கொடுத்துருக்க டைம். இப்ப கூட நான் தான் இதெல்லாம் செய்றேன்னு அவளுக்கு நிச்சயமா தெரியும். ஆனா அதை காட்டிக்க மாட்டா.” என்று சிரித்தான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். ஒரு தடவை என்கிட்டே வந்துட்டான்னா? அவளை என் உள்ளங்கைல வச்சு தாங்குவேன்டா. பார்க்கலாம் அந்த நாள் என்னைக்குன்னு நானும் காத்துட்டு இருக்கேன்.” என்றான் ஒரு ஏக்க பெருமூச்சோடு.
“சரி.. அவங்களுக்கு உளுந்தங்களி தான் பிடிக்கும்னு உனக்கு யார் சொன்னாங்க?” என்றாள் வியப்பாக.
“அதுவா? வினோத் தான்” என்றான் கண்ணடித்தபடி.
“என்னண்ணா சொல்ற?” என்றாள் நம்பாமல் அதிர்ச்சியாக.
“ஆமாடா. எனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச உடனே நான் போய் நின்ன இடம். வினோத் வீடு தான்.” என்றான் க்ருஷ்வந்த்.
“அடிவாங்கல நீ?” என்றாள் ஆச்சர்யமாக.
“எந்த அண்ணன் தன் தங்கையின் வாழ்வில் உண்மையாய் அக்கறை கொண்டுளானோ? அவன் நிச்சயம் சந்தோஷம் தான் படுவான். வினோத்தும் சந்தோஷபட்டான்” க்ருஷ்வந்த்.
“எங்க என் தங்கை வாழ்க்கை இப்படியே அவளுக்கு ஒரு துணை இல்லாம போய்டுமோன்னு நான் கவலைப்படாத நாளே இல்லை. என் தங்கச்சிய மட்டும் நீங்க நல்லா பார்த்துக்கிட்டிங்கன்னா? ஏழுயேழு ஜென்மத்துக்கும் உங்களுக்கு கடமை பட்றுகேன்”னு கண்கலங்கினார்.” என்றான்
“அப்புறம் அவளுக்கு பிடிச்ச எல்லாத்தையும் அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன். ரோஜான்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதான் ரோஜா செடி உன்கிட்ட கொடுத்தனுப்பினேன். உளுந்தங்களியும் எப்படி செய்றதுன்னு சொன்னார். அதே மாதிரி வந்து செஞ்சு பார்த்தேன் வந்துருச்சு. அவளோட வாமிட் நிக்க லெமன் காலைல டீயா குடிச்சா சரி ஆகிடும்னு சொன்னாங்க. அதான் தினமும் மார்னிங் லெமன் டி. பட் நாளைக்கு இருந்து அதை மாத்தி ஹைபிஸ்கஸ் டி கொடுக்க போறேன்.” என்றான்.
“எல்லாம் ஓகே தான். ஆனா, அண்ணியோட அண்ணன்ன சந்திச்சத கொஞ்சம் டீடைலா சொல்லு” என்றாள் தமக்கை.
“விட மாட்டியே நீ? சரி சொல்றேன். அன்னைக்கு ஸ்ருஷ்டிமீரா பால் காய்ச்சினப்புறம் சந்தோஷை கூட்டிகிட்டு அவங்க வீட்டுக்கு போனேன். அப்போ…” என்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.
“வினோத் இவர் என்னோட ஃப்ரெண்ட் சந்தோஷ். மீரா கேட்ட மாதிரி இவரை அவங்க லாயரா ஏற்பாடு பண்ணிருங்க. இப்போ இருக்க நிலைமைல அவங்க நம்பர ஒரே ஆள் நீங்க மட்டும் தான். அதுவுமில்லாம இவர் என்னோட பிரெண்டுன்னு நான் அறிமுக படுத்தினா சுத்தமா இந்த லாயரே வேணாம்ன்னு சொல்லுவாங்க. சோ, உங்க பிரெண்டுன்னு சொல்லிருங்க. இவர் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் டிவோர்ஸ் வாங்கி கொடுத்துருவார்.” என்று தன் உயிர் தோழன் சந்தோஷை அறிமுகப்படுத்தினான்.
வினோத்தும் சந்தோஷும் பரஸ்பரம் அறிமுகம் ஆனபின்னர் சந்தோஷ் விடைபெற, கிருஷ்வந்த் “வினோத் உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்றான்.
“சொல்லுங்க சார்!” என்றான் வினோத்.
“சார்! எல்லாம் வேண்டாம். என் பேர் கிருஷ்வந்த் அப்படியே கூப்பிடுங்க” என்றான்.
“சொல்லுங்க கிருஷ்வந்த்”.
“நான் தான் இந்த ஹெல்ப் பண்ணேன்னு நான் சொல்றவரைக்கும் உங்க தங்கச்சிக்கிட்ட சொல்லிறாதீங்க ” என்றான்.
“ஏன்?” என்றான் வினோத்.
“இல்லை! உங்ககிட்ட சொன்னா தப்பு ஒண்ணுமில்லை. நான் முதல்ல முழுசா முடிச்சிடறேன். எனக்கு உங்க தங்கச்சியை ரொம்ப பிடிச்சிருக்கு. அதுக்குள்ளையான்னு கேக்காதீங்க. அவங்களை பத்தி எல்லாமும் எனக்கு தெரியும். இப்போ தான் அவங்கள இன்னும் நிறைய பிடிச்சிருக்கு. அவங்க மனசுல அந்த ராஸ்கல் சுத்தமா இல்லைன்னு தெரிஞ்சப்புறம் தான் நான் உங்ககிட்ட இதை பத்தி பேசுறேன்” என்று அன்று நடந்த எல்லாவற்றையும் கூற, “இதை பத்தி என்கிட்டே சொல்லவே இல்லையே?” என்றான்.
“அவங்க எல்லாத்தையும் மறக்க நினைக்கிறாங்க. ஆனா அது அவ்ளோ சீக்கிரம் முடியாது. அவுங்களுக்கே தெரியாம என்கிட்டே அவங்க அம்மாவோட அன்பை தேடறாங்க. அதை முழுசா ஒத்துக்கமுடியாம மன அழுத்தத்துல இருக்காங்க. சோ கொஞ்ச நாளைக்கு அவங்களை நான் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு இருக்கேன். இந்த குழந்தை முதல்ல நல்லபடியா பிறக்கட்டும். இன்னும் கொஞச நாள் போகட்டும் நிச்சயமா அவங்களுக்கு நான் நல்ல மருந்தா இருப்பேன். அவங்க கூட காலம் முழுக்க இருக்க ஆசைப்படறேன். அதனால இப்போ விலகி இருக்கறதுன்னு தான் நல்லது”. என்று நிறுத்தினான்.
“இல்ல….!! அந்த சுதனால மீராக்கு ஏதாவது…!!! கஷ்டம் வருமோன்னு பயமா இருக்கு…!! ” என்று வினோத் திணற.
“என் விழி கண்ணோட்டத்தை மீறி யாரும் என் மீராவை டிஸ்டர்ப் பண்ண முடியாது. அதுவுமில்லாம அந்த ராஸ்கல நான் சும்மா விடமாட்டேன். முதல்ல இந்த டிவோர்ஸ் கேஸ் நல்ல படியா முடியட்டும் அப்புறம் அவனுக்கு நான் வேற பிளான் வச்சிருக்கேன். அதுக்குள்ள அம்மா அப்பா எல்லாரையும் சம்மதிக்க வைக்கணும். முதல்ல நீங்க என்ன சொல்றிங்க?” என்று வினோத் முகத்தை பார்த்தான்.
விழிகளில் நீர் மல்க கரம் கூப்பினான் வினோத்.
“ஒரு அண்ணணா என்னோட மனபாரத்தை இறக்கி வச்சிட்டிங்க. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா எல்லா பிரச்னையும் சரியாகி நல்லா இருக்கனும்” என்று கிருஷ்வந்த்தை கட்டிக்கொண்டான்.
“இது தான் நடந்தது” என்று முடித்தான்.
“சரிண்ணா! நேரமாச்சு நான் கிழ போறேன்” என்று கீழே சென்றாள்.