மறுநாளில் இருந்து நிருபனால் நியதியை பார்க்க கூட முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து எப்போது வீடு திரும்புகிறாள் என்று கூடத் தெரியவில்லை.
கைபேசிக்கு அழைத்துக் கேட்டால் வேலையைக் காரணமாகச் சொன்னாள். நிருபனும் அவள் சொன்னதை நம்பி விட்டான்.
நிரஞ்சனுக்குப் பையன் பிறந்து இருக்க, ஜெயஸ்ரீ மூன்று மாதங்கள் சென்று நிருபனுக்குப் பெண் பார்ப்போம் என நினைத்து இருந்தார்.
வார இறுதியில் நிருபனே நியதியை அழைத்தான்.
“என்ன பண்ற?”
“வீடு கிளீன் பண்றேன்.”
“இன்னைக்கு என்ன பிளான்?”
“ஒன்னும் இல்லை, நல்லா படுத்து தூங்கப்போறேன்.”
“ஷாப்பிங் போகலையா?”
“நேத்து சாயங்காலமே ஆபீஸ் முடிஞ்சு அப்படியே போயிட்டு வந்திட்டேன்.”
“ஓ…சரி.” என்றவன், கோபத்தில் இணைப்பை துண்டித்து விட்டான். தன்னைத் தவிர்க்ககிறாள் எனத் தெளிவாகவே புரிந்தது. ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.
எது செய்யவும் விருப்பம் இல்லாமல் திரும்பப் படுத்துக் கொண்டான். முன் மதியம் போல, அழைப்பு மணியின் சத்தத்தில் உறக்கம் களைந்து எழுந்தவன் சென்று கதவை திறக்க, வெளியே நியதி நின்று கொண்டிருந்தாள்.
“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா, தூங்கிட்டு இருந்தீங்களா?” என்றதற்கு, நிருபன் பதில் எதுவும் சொல்லவில்லை.
கையில் வைத்திருந்த சின்னப் பாத்திரங்களை அவனது வீட்டில் சென்று வைத்தவள், “குழம்பு, காய் இருக்கு, சாதம் மட்டும் வச்சுக்கோங்க.” என்றாள்.
“நியதி ப்ளீஸ் அதை எடுத்திட்டு போயிடு.” என்றான் நிருபன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு.
“ஏன்” என்பது போல நியதி பார்க்க,
“நீ நினைச்சா பேசுறதுக்கும், வேண்டாம்ன்னா போறதுக்கும் நான் ஆள் இல்லை, புரியுதா?”
“இத்தனை நாள் சேர்ந்து தான் சாப்பிட்டோம், இப்ப மட்டும் ஏன் எனக்குத் தனியா கொண்டு வந்து தர…”
“இன்னைக்குக் காலையில் இருந்து நான் ஒரு வேலையும் பார்க்கலை.”
“எனக்கு எதுவும் நேரா பேசித்தான் பழக்கம். நீ ஏன் இப்படி நடந்துகிறன்னு என்னால மண்டையை உடைச்சிக்க முடியாது.”
“நட்பா இருந்தா உண்மையான நட்பா இருக்கணும். வெளிப்படையா இருக்கணும். ஆனா அதை விட்டு என் மேல பரிதாப்பட்டு இப்படிச் சாப்பாடு எல்லாம் கொடுக்காத ஓகே வா.”
நியதி எதோ சொல்ல வர அதைக் கேட்கும் பொறுமை நிருபனுக்கு இல்லை.
“ப்ளீஸ் நான் குளிச்சிட்டு வெளியப் போய்ச் சாப்பிடனும்.” என்றதும், நியதி தான் கொண்டு வந்ததைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றாள். அவளது முகம் முற்றிலும் வாடி விட்டது.
வீட்டிற்குச் சென்று பாத்திரத்தை வைத்தவள், அப்படியே சென்று அறையில் படுத்துக் கொண்டாள். நிருபன் அதற்குப் பிறகுதான் வீட்டை சுத்தம் செய்து, சலவை இயந்திரத்தில் துணிகளைப் போட்டுவிட்டு, குளித்து விட்டு வந்தவனுக்கு அப்படி ஒரு பசி. காலையிலும் உண்ணவில்லை. வீட்டில் முட்டை கூட இல்லை.
குளிர் சாதனா பெட்டியில் இருந்து ஜூஸ் எடுத்து குடித்துவிட்டு, வெளியே கிளம்பி சென்றான். வெளியவே சாப்பிட்டு விட்டு, அடுத்த வாரத்திற்கான சாமான்கள் வாங்க மாலுக்குச் சென்றான்.
ஒவ்வொரு பொருள் எடுக்கும் போதும், நியதியின் நினைவு தான். இருவரும் சேர்ந்து செல்லும் சமயங்களில், நீ இதை வாங்கு, நான் இதை வாங்கிறேன் எனப் பேசி வைத்து தான் வாங்குவார்கள். சில நாட்களாகச் சமையலும் சேர்ந்து தான் செய்தனர்.
“பெரிய இவ அவ… அவ நினைச்சா பேசுவா இல்லைனா பேச மாட்டா…. அவ இல்லைனா என்னால இருக்க முடியாதா என்ன?” எனத் தன்னையே கேட்டுக் கொண்டவன், அவள் நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்த வேலையைப் பார்த்தான்.
இரவு உணவுக்கு வழக்கம்போல அன்று செல்லும் உணவகத்திற்குச் சென்றவன், நியதி இருக்கிறாளா எனத் தேடி பார்த்தான். அவள் இல்லை எனவும், அவனும் சாப்பிடாமலே வந்து விட்டான்.
மறுநாள் ஞாயிறு சோம்பலாக விடிந்தது. வெளியே பனிப் பொலிவு வேறு அதிகம் இருக்க, குளிருக்கு இதமாக இருவரும் படுக்கையில் சுருண்டே கிடந்தனர்.
மாலையில் காபி கலந்து எடுத்துக் கொண்டு நிருபன் பால்கனிக்கு செல்ல, அங்கே அவள் வீட்டுப் பால்கனியில் நியதி நின்று இருந்தாள். அவளைப் பார்த்ததும் நிருபன் உள்ளே செல்ல திரும்ப,
“நீங்க இருங்க நான் போறேன்.” என்றவள், “இப்போ உங்களுக்கு என் இவ்வளவு கோபம் நிருபன்?”
“நீங்க தான கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்க. நீங்க கல்யாணம் பண்ணி இங்க வந்ததும், என்னோட நிலைமை இது தானே…”
“அப்பவும் என்னோட சுத்திட்டு இருப்பீங்களா?”
“அது தான் இப்ப இருந்தே விலகி இருந்துக்கலாம்ன்னு நினைச்சேன். அதுக்கு ஏன் எதோ நான் கொலை குத்தம் பண்ணிட்ட மாதிரி பார்க்கிறீங்க?”
“நீங்க பேசுங்க பேசாம போங்க, எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை.” என்றவள், நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.
அவள் பேச்சில் இருந்த நியாயம் நிருபனுக்குப் புரிந்தது. அவனுக்குத் திருமணம் முடிந்து விட்டால், இதே மாதிரி அவனால் அவளுடன் பழக முடியுமா? முடியாது தானே…
அதன் பிறகு அந்த வாரம் முழுவதும், நிருபன் அவளைப் பார்க்கவில்லை, அவளோடு பேசவில்லை. ஆனால் அவள் நினைவாகத்தான் இருந்தான்.
வெள்ளி இரவு அலுவலகம் முடிந்து நிருபன் சென்று பஸ்சில் ஏற… அதில் ஏற்கனவே நியதி இருந்தாள். அவள் பக்கத்து இருக்கை காலியாக இருக்க, அவள் அருகில் சென்று அமர்ந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
நியதி பதிலுக்குப் புன்னகைக்கவில்லை. மாறாக முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“உன்னோட கோபம் நியாயம் தான். ப்ளீஸ் இதோட அதை விட்டுடலாமே….”
“நான் ஒன்னும் கோபமா இல்லை. நீங்க தான் இருந்தீங்க.”
“ஓகே, இப்ப கோபம் இல்லை. வேற பேசலாம்.” அவன் சொன்னதற்கு இணங்கி, நியதி அவனைப் பார்க்கும் படி அமர்ந்தாள்.
“நானே வந்து உன்னைப் பார்த்து பேசனும்ன்னு நினைச்சேன். ஆனா இங்க பார்ப்பேன்னு எதிர்ப்பர்க்களை. நீயும் ப்ரீயா இருந்தா டின்னர் வெளியப் போய்ச் சாப்பிடலாமா?”
“ம்ம்… சரி.” என்றாள்.
இருவரும் அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கி, வேறு ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
“நியதி என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிற?”
“என்ன நினைக்கிறன்னா புரியலை?”
“இத்தனை நாள் பழகி இருக்க, என் மேல உனக்கு என்ன அபிப்ராயம்?”
“தப்பான்ன அபிப்ராயமோ, உங்க மேல நம்பிக்கை இல்லாமலோ இருந்தா… உங்களோட இந்த அளவுக்குப் பழகுவேனா நிருபன். அதோட உங்களோட இருக்கும் போது, நான் ரொம்பப் பாதுகாப்பா உணர்றேன்.”
நியதி சொன்னதைக் கேட்டு நிருபனின் முகம் மலர, அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட, இருவரும் இறங்கி அங்கிருந்த இந்திய உணவகத்திற்குள் சென்றனர்.
“அவங்களே பொண்ணு பார்த்தாலும், அந்தப் பொண்ணு எனக்குப் பிடிச்சிருந்தா தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்படியிருக்கும் போது, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா என்ன தப்பு?”
“கல்யாணம் ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை நிருபன். முதல்ல எங்க வீட்ல ஒத்துக்கணும், அப்புறம் உங்க வீட்ல ஒத்துக்கணும்.”
“அது அப்புறம் முதல்ல உனக்கு ஓகே வா சொல்லு.”
“இப்ப உடனே சொல்லுன்னா எப்படிச் சொல்ல முடியும்?”
“சரி யோசிச்சு சொல்லு.”
நியதி எதோ தீவிர யோசனையில் இருந்தாள். அதைப் பார்த்து நிருபனுக்குக் கவலையாக இருந்தது. என்ன முடிவு எடுப்பான்னு தெரியலையே? என யோசித்தபடி உணவு அருந்தினான்.
சாப்பிட்டு இருவரும் வெளியே வந்து வீட்டிற்குச் செல்லும் பஸ்சில் ஏறி, அவர்கள் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றனர்.
“உங்களைன்னு இல்லை நிருபன், நான் வேற யாரை கல்யாணம் பண்ணிக்கவும், இப்ப அவங்க விரும்ப மாட்டாங்க.”
நிருபன் புரியாத பார்வை பார்க்க, “உங்களுக்கு நான் முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும். இதை நான் வேற யார்கிட்டயும் சொல்ல விரும்பமாட்டேன். நீங்க கல்யாணத்துக்குக் கேட்டு இருக்கீங்க. அதனால உங்களுக்குச் சில விஷயங்கள் தெரியணும்.”
“எங்க குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கம்தான். அப்பா மட்டும் தான் வேலை பார்த்தாங்க. அம்மா வீட்ல தான் இருந்தாங்க. எனக்கு ஒரு அண்ணாவும், தங்கையும் இருக்காங்க.”
“எங்க அண்ணன் சரியா படிக்காம ஊர் சுத்திட்டு இருந்தார். கொஞ்ச நாள் பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தார். அப்புறம் ஒரு பெண்ணை லவ் பண்ணி வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிகிட்டார்.”
“அப்பா அவரை வீட்டுக்குள்ள சேர்க்கலை. அந்த நேரம் நான் படிப்பு முடிச்சு வேலைக்குச் சேர்ந்தேன். எடுத்ததும் பெரிய சம்பளம் எனக்கு.”
“என் ஏடியம் கார்டு கூட அப்பா தான் வச்சிருப்பார். எனக்குச் செலவுக்கு மட்டும் பணம் கொடுப்பாங்க.”
“அம்மாவும் எனக்கு உடம்பு முடியலை. என்னால வேலை பார்க்க முடியாது. மகனும் மருமகளும் நம்மோட இருக்கட்டும்ன்னு சொல்லி வீட்டுக்குள்ள விட்டாங்க.”
“அண்ணன் பிசினஸ் பண்றேன்னு நிறையக் கடன் வேற வாங்கி இருந்தார். அதுவும் என் சம்பளத்தில இருந்து தான் அடைச்சோம்.”
“அம்மா வீட்ல எந்த வேலையும் பார்க்க மாட்டாங்க. அண்ணிதான் பார்ப்பாங்க. ஆனா அதுக்கு ஈடா, வீட்டு செலவுக்கு ஒரு பைசாவும் கொடுக்கிறது இல்லை. எங்க அண்ணன் சம்பளத்தை அப்படியே சேமிச்சு தான் வைக்கிறாங்க.”
“என்னோட பணத்தை வச்சு தான் வீட்டுச் செலவு பண்ணிட்டு இருக்காங்க.”
“என்னால என்னோட வீட்லயே சுதந்திரமா இருக்க முடியலை. அந்த நேரம் இங்க போகச் சொன்னதும், சந்தோஷமா வந்திட்டேன்.”
“இங்க சம்பளம் அதிகம் இல்லையா… நான் அங்க இருக்கும்போதே, ஒரு அபார்ட்மெண்ட் கார் எல்லாம் வாங்கிட்டாங்க. இப்ப நான்தான் அதுக்கெல்லாம் லோன் கட்டிட்டு இருக்கேன்.”
“இதுல எனக்கு முன்னாடி, இருந்த நகை எல்லாம் என் தங்கைக்குப் போட்டுக் கல்யாணம் பண்ணிட்டாங்க. கல்யாண செலவுக்கு நான்தான் பணம் அனுப்பினேன்.”
“என்னைக் கல்யாணத்துக்கு வான்னு கூடக் கூப்பிடலை. வந்தா வீண் செலவு தானே மா… அந்தப் பணம் கல்யாணத்துக்காவது உதவட்டும்ன்னு சொல்லிட்டாங்க.”
“அப்பாவும் ரிடையர் ஆகிட்டார். அவருக்குப் பென்ஷன் வருது. அண்ணன் சம்பாதிக்கிறான், ஆனா செலவு பண்றது எல்லாம் என் பணம் தான்.”
“எதாவது ஒரு காரணம் சொல்லி, என்கிட்டே இருந்து பணத்தைக் கறந்திடுவாங்க. அதுதான் நானுமே இங்க ரொம்பச் சிக்கனமா எல்லாம் இருக்க மாட்டேன். என்னால முடிஞ்சது நல்லா சாப்பிடவும், ஊர் சுத்தவும் தான் முடியும்.”
“லோன் கட்றது நான். அதனால வீடும் காரும் என் பேர்ல தான் இருக்கு. ஆனா அதை அனுபவிக்கிறது மட்டும் அவங்க.”
“இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னா, அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை.”
“இதுவரை அவங்களா கல்யாண பேச்சை எடுத்தது இல்லை.” நியதி சொல்லி முடித்து விட்டு நிருபனை பார்க்க,
“கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம பொண்ணுன்னு உன் பணத்தை உரிமையா எடுத்து இருப்பாங்க. அவங்க படிக்க வச்சதுனால தான நீ இவ்வளவு சம்பாதிக்கிற.”
“போனது போகட்டும் நியதி. நீ எதுவும் அவங்ககிட்ட கேட்காத. நமக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சா போதும்.”
“எனக்கு ஓகே தான் நிருபன். உங்களை மாதிரி ஒருத்தர் கல்யாணத்துக்குக் கேட்டு, வேண்டாம்ன்னு சொல்ல நான் முட்டாள் இல்லை. ஆனா உங்க வீட்ல, எங்க வீட்ல மனப்பூர்வமா சம்மதிச்சா தான். அப்படிச் சம்மதிக்கலைனா, நீங்க இந்தக் கல்யாண பேச்சை விட்டுடணும்.”
நியதி சொன்னதற்கு நிருபன் சம்மதமாகத் தலையசைத்தான்.
நிருபன் முதலில் நிரஞ்சனிடம் தான் சொன்னான். நியதி போட்ட நிபந்தனையும் சொன்னான்.
“வீட்ல வேண்டாம்ன்னு சொன்னா, நீ அவளை விட்டுடுவியா?” நிரஞ்சன் கேட்க,
“கண்டிப்பா முடியாது. ஆனா அவகிட்ட சரின்னு சொல்லி வச்சிருக்கேன்.”
“நீ அங்க இருந்திட்டு ஒன்னும் பண்ண முடியாது. நான் சொல்றபடி கேளு.”