அவளையும் அறியாமல் கண்காணித்து கொண்டிருந்த க்ருஷ்வந்திற்கு அவளின் நிலை கண்டு இந்த நேரத்தில் அவளுடன் தன்னால் இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினான்.
தினமும் யாருடைய உதவியும் கேட்க கூடாது என்ற வைராக்கியதோடு எழுந்து நடமாடுபவள், அன்று காலையில் எழும்போதே மிகுந்த சோர்வோடும் அளவுக்கதிகமான வாம்மிடிங் சென்சோடும் எழுந்தாள்.
‘என்னாச்சு எனக்கு?’ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே மயங்கி தரையில் சரிந்தாள்.
கண்விழித்த பொழுது அவளின் கட்டிலில் படுத்து இருக்க, பக்கத்தில் சூடான லெமன் புதினா வாசனையோடு ஒரு கருப்பு காப்பி காத்துகிடக்க அவளின் முகம் பூவாய் மலர்ந்தது. அதே வேகத்தில், ஓர் நொடியில் சுருங்கியும் போனது.
கையில் இருந்த காபி கோப்பையை உதட்டருகே கொண்டு சென்று நிறுத்தினாள்
யார் தன்னை இங்கே கூட்டி வந்தார்கள்? காபி யார் போட்டிருப்பார்கள்?’ என்று யோசித்துகொண்டிருந்தாள்.
அவளின் மூளையும் வயிற்றில் இருந்த குழந்தையும் ‘ஆமா இப்ப இது ரொம்ப முக்கியம். குமட்டலை நிறுத்த காபி சூடா இருக்கும் பொழுது அதை குடிச்சி குமட்டலை நிறுத்தாம யார் இதை போட்டதுன்னு இப்ப கண்டிப்பா துப்பறிஞ்சே ஆகணுமா?’ என்று கேள்வி கேட்க.
‘ஆமால்ல! முதல்ல குடிச்சிடலாம்’ என்று எண்ணி உதடு வரை கொண்டு சென்றவள் திரும்பி நிறுத்தி ‘இல்ல இதை யார் போட்டான்னு தெரியனும்? என்று மெல்ல எழுந்து வெளியே வந்தாள்.
‘யாருமே இல்லையே! ஒரு வேலை நம்மளுக்கு தோணின பிரமையா இருக்கலாம்’ என்று உள்ளே சென்றவள் அங்கே தேநீர் கோப்பை இருப்பது கண்டு ‘கனவும் இல்ல, நனவும் இல்ல. முதல்ல இதை குடிப்போம்’ என்று குடித்தாள்.
வாய் தான் வேகமாக குடித்ததே தவிர அதன் ருசியை ரசித்து குடித்தாள்.
‘இதே மாதிரி தினமும் டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று பெருமூச்சி விட்டு சிறிது நேரத்தில் புத்துணர்வோடு கிளம்பினாள்.
அன்றில் இருந்து தினமும் ஸ்ருஷ்டிமீரா எழும் முன்னரே அவளின் கட்டிலின் அருகில் இருக்கும் கண்ணாடி சன்னலின் அருகில் டி வைக்கபட்டிருக்கும்.
இவளும் எதுவும் யோசிக்காமல் எடுத்து குடித்துவிடுவாள்.
அன்றில் இருந்து தினமும் காலை எழுந்து வாசலுக்கு வந்தவுடன் அவளுக்கு ஏதாவது சின்ன வாழ்த்துமடலுடன் ஒரு சிறிய பரிசு இருக்கும்.
முதல் நாள் ஒரு சிறிய தொட்டியில் எலுமிச்சை செடி இருந்தது.
பெற்று கொண்டு வந்தவள் அதை அங்கேயே வாசலின் மேலே மாட்டி விட்டாள். அதன் இலைகளை அவ்வபொழுது எடுத்து முகர வாம்மிட்டிங் சென்ஸ் குறைய தொடங்கியது.
இதே போல் ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன செடி அல்லது வாழ்த்துமடல், ரோஜா மலர் இருக்கும்.
அவளுக்கு தன்னையும் ஒரு ஜீவனாய் மதிக்கும் உயிர் ஒன்று இந்த உலகில் இருக்கிறது என்ற எண்ணத்தில், தெரிந்து கொண்டால் விலகி விடுவார்களோ என யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாம் என்று அமைதியாய் இருந்தாள்.
மூன்று மாதங்கள் முழுதும் முடிவடைந்திட்ட வேளையில் வழக்கம் போல் இன்று ‘என்ன இருக்கும்?’ என்ற ஆர்வத்தோடு சன்னலை பார்த்தவளுக்கு புதிராக இருந்தது அங்கிருந்த டிபன் பாக்ஸ். வேகமாக சென்று அதை ஆர்வமாக திறந்து பார்த்தவளுக்கு விழிநீர் வருவது போல் இருக்க உள்ளே வந்துவிட்டாள்.
தன் கட்டிலில் அமர்ந்து அமைதியாய் லெமன் டீயை அருந்தியவள். அடுத்து அந்த டிபன் பாக்சில் இருந்த உளுந்தங்களியை பார்த்து கொண்டே இருந்தாள். நினைவலைகள் தன் தாயை நினைவுபடுத்தியது.
சிறு வயதில் தன் அம்மாவுடன் இருக்கும் போது, “அம்மா! அம்மா! ப்ளீஸ் மா” என்று தன் பின்னே பூனைகுட்டி போல் சுற்றுவதை கண்டு சிரிப்பு தான் வரும் ஸ்ருஷ்டிமீராவின் அன்னைக்கு .
“இங்க பாருடி! உன்ன மாதிரி இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஒரு பன்னை ரெண்டா பிளந்து ஒரு துண்டு வெங்காயம் தக்காளி கொஞ்சூண்டு வெண்ணை வெச்சு குடுத்தா பர்கர் ன்னு வாய பொளந்துட்டு சாப்பிட ரெடியா இருகிங்களே தவிர ஒரு துண்டு தக்காளி, ஒரு வெங்காயம், கொஞ்சம் புதினா ஒரு கொட்ட பாக்களவு புளி, ஒரு பச்சைமிளகாய் என எல்லாத்தையும் உப்பு போட்டு ஒரு கரண்டி எண்ணைல வதக்கி அரைச்சா பக்கத்துக்கு தெருவுக்கு வரும் புதினா வாசனை.
ஒரு நாலு ப்ரெட்டை வெண்ணை தடவி தோசைகல்லில் வைத்து ஒரு தம்ப்ளர் பாலில் ஒரு முட்டை உடைச்சி போட்டு சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி அடுப்புல இருந்த ப்ரெட் மேல ஊத்தி பொன்னிறமா வறுக்கணும்.
வறுத்த பரெட்ல அரைச்ச புதினா பேஸ்ட்டை தடவி வட்டவடிவ மெல்லிசா அறிஞ்சி வச்ச வெங்காயம் தக்காளியை ஒரு அடுக்கு அடுக்கி மறுபடியும் ஒரு ப்ரெட் துண்டை வைத்து சாப்பிட்டு பார்த்தா அந்த பர்கர் எல்லாம் அம்மா செஞ்ச பிரட் கிட்ட வரமுடியுமா?” என்றார்.
“உன்னை …” என்று அவளை துரத்த புள்ளிமானாய் ஓடி மறைந்துவிடுவாள் ஸ்ருஷ்டிமீரா.
கண்களில் வழியும் விழிநீரை துடைத்தபடி ஒரு ஸ்பூன் உளுந்தங்களியை சாப்பிட மீண்டும் அம்மாவின் நினைவிற்கு சென்றது.
அவள் பூபெய்திய இரண்டாம் நாள் “இந்தாம்மா இதை சாப்பிடு” என்று கோதுமை நிறத்தில் அல்வா போன்று இருந்த உளுந்தங்களியை தர “என்னம்மா இது? எனக்கு வேணாம்” என்றாள்.
“வேணாம்னு சொல்ல கூடாதுடா. என் செல்லம் இல்ல. இந்த நேரத்துல இதெல்லாம் மாசத்துல ரெண்டு நாள் சாப்ட்டா.. பொட்ட புள்ளைங்களுக்கு இடுப்பெலும்பு ரொம்ப ஸ்டாங்காகும்டா.. எங்க பாட்டி தொன்நூத்தியேழு வயசு வரைக்கும் உயிரோட இருக்காங்கன்னு சொல்ற நாம, அவங்க சாப்பிட அந்த காலத்து வலிமையான உணவை சாப்பிட்ரதில்ல. பின்னாள்ல கர்ப்பம் தரிக்கிற பொண்ணுங்க சுகப்ரசவம் ஆகணும்னா இதெல்லாம் இப்ப சாப்பிட்டா தான் சத்து கிடைக்கும். அதனால அம்மா கொடுக்கிற எதையுமே வேணாம்னு சொல்லாம சாப்பிடுடா” என்று தருவார்.
(“உளுந்தங்களி எப்படி செய்யணும்னு தெரியுமா உங்க எல்லாருக்கும்?….”)
“ஆமா உனக்கு வேற வேலையே இல்லம்மா. உனக்கு எப்ப பாரு உளுந்தங்களியே செய்ற” என்று சலித்துக்கொண்டு சமையலறையின் மேடை மேல் அமர்ந்து முந்திரியை தின்று கொண்டிருந்தாள் ஸ்ருஷ்டிமீரா.
“அப்படியாடா செல்லம்? நான் செய்யறத சாப்பிட்ரதால தான் உனக்கு கொழுப்பு. இந்த வாட்டி நீயே வந்து செய்” என்றார்.
“அம்மா சும்மா சொன்னேன்.“ என்று சிணுங்க.
“இருக்கட்டும்.. நான் நிஜமா சொல்றேன்.. நீயும் செய்ய கத்துக்க” என்றார்.
“சரி சொல்லுங்க. எப்படி செய்யணும்?” என்று முனகும் ஸ்ருஷ்டிமீராவை பார்த்து சிரித்தபடி, “ஒரு கைப்பிடி கள்ளபருப்பு, ரெண்டு கைப்பிடி உளுந்து எடுத்து அரைமணி நேரம் ஊற வைக்கணும். நான் ஏற்கனவே ஊற வெச்சிட்டேன் பாரு. அதை எடுத்து மிக்சில கரகரன்னு அரைக்கணும். தேவையான வெல்லத்தை தண்ணி சேர்த்து கரைத்து அரைத்த உளுந்து கலவைல வடிகட்டிகனும்.” என்று நிறுத்தினார்.
“சரி. செய்யறேன் ஆனா நல்லா இல்லன்னா என்னை எதுவும் குறை சொல் கூடாது.” என்றாள்.
“சரி. சரி..” என்று அவளை சமாதனபடுத்த.
அவர் சொன்னபடியே செய்ய தொடங்கினாள்.
“அறைச்சிட்டேன். இப்ப என்ன பண்ணனும்?” என்றாள் மீரா.
“வாணலில எண்ணெய் ஊத்தி அதுல இந்த கலவைய மெதுவா ஒரு கையால ஊத்திகிட்டே இன்னொரு கையால கிளறிகிட்டே இருக்கனும். கிளர்றத விட கூடாது விட்டா அடிபிடிச்சிடும். அனலை குறைடி இல்லனா அடிபிடிக்கும்” என்றார்
“அம்மா ஒரு மணி நேரமா கிளறிட்டு இருக்கேன். கை வலிக்குதும்மா இனி எப்பவுமே உன்னை கிண்டல் பண்ண மாட்டேன் என்னை விட்றுமா” என்றாள் மீரா.
“அவ்ளோ தாண்டா முடிஞ்சிது. அப்பபோ சூடான எண்ணெய் சைட்ல சேர்த்துகிட்டதால நல்லா வெந்துருச்சு. இப்போ ஒரு கரண்டி நெய்ய சூடு பண்ணி அதுல பொடிசா நறுக்கின முந்திரி பாதாம சேர்க்கணும் அப்பறம் கிளறி பாரு உளுந்தங்களி வாசனை கமகமன்னு இருக்கும்.” என்றார்.
அவர் சொன்ன படி செய்த ஸ்ருஷ்டிமீரா “இதோட இந்த அடுப்படி பக்கம் வந்தன்னா பாரு” என்று ஓடிவிட்டாள்.
தன் அன்னையின் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் கிண்ணத்தில் இருந்த உளுந்தங்களியை முழுவதும் சாப்பிட்டு இருந்தாள்.
அந்த கிணத்தை கழுவி ஒரு காகிதத்தில் நன்றி என்று எழுதி அதற்குள் வைத்து மூடினாள்.
இவை எல்லா வற்றையும் தன் வீட்டு மாடியில் இருந்து பார்த்துகொண்டிருந்த இருவிழிகளின் இதயத்தில் சிரிப்பு மலர்ந்தது.