“ஹேப்பி பர்த்டே ஸ்ஸ்ஸி.. வா”
“ டேய் மச்சி.. நாங்க பண்ணப்போற கலாட்டால.. அவன் அங்கேயே உச்சா போயிடணும் மச்சி… சும்மா அந்த மாதிரி வச்சி செய்யணும்”என்றான் என் நண்பன் மகேஷ் கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்தமர்ந்த வண்ணம்.
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னுடைய மற்றுமொரு நண்பன் கமால்தீன் “ஓம் மச்சி.. சும்மா.. தெறிக்க விட வேணும்..”என்றான் பதிலுக்கு மகேஷ் சொல்வதையெல்லாம் கேட்டு.
மகேஷ், முகத்தில் கேலி கலந்த இளநகையோட “மச்சி.. எல்லாம் பம்மாத்துன்னு தெரிஞ்சத்துக்கப்பறம்.. சும்மா வெளு வெளுன்னு வெளுக்கப் போறான்” என்றான் கட்டிலுக்கு சற்று தொலைவில், தரையில் அமர்ந்து ஷூவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்த என்னை கடைக் கண்ணால் நோக்கி.
நானோ , ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு விட்டு, குளிக்க செல்வதற்காக எழுந்து, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு குளியலறையை நோக்கி செல்ல முற்பட்ட போது, அவர்கள் இருவரும் கிசுகிசுப்பது கேட்டது. ஆனால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.
அதுவொரு குட்டியறை. வீட்டு உரிமையாளர் கீழே இருக்க, பால்கனியுடன் அமைந்த சின்ன குட்டியறையில் நாம் மூவரும். ஐந்துக்கு ஐந்து என்ற குட்டி கட்டில் தான் உண்டு. இருவர் கட்டிலிலும், ஒருவர் தரையிலும் என டர்ன் வைத்து மாற்றி மாற்றி படுப்போம்.
கட்டில் சுவருடன் குளியலறை கழிவறை. அதற்கு சற்றுத் தள்ளி குட்டி சமையலறை என இவ்வளவு தான் எங்கள் அறை.
அவர்கள் கிசுகிசுப்பதைக் கேட்ட நான், “என்னடா.. உங்களுக்குள்ள ரகசியம் ..?”என்று கேட்டு விட்டு,அவர்கள் மறுபதிலை கேட்க நிதானமேயற்று குளியலறையினுள் நுழைந்து கொண்டேன்.
மகேஷ் , கமால், நான் மூவருமே நண்பர்கள். சிறுவயதிலிருந்து ஒன்றாய் படித்து, வளர்ந்த நண்பர்கள் வகையல்ல நாம். மாறாக மூவருக்குமே ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. ஆனால் எங்கள் மூவரையும் இணைத்த மையப் புள்ளி நாங்கள் கொழும்பில் வேலை பார்ப்பவர்கள்.
மகி எனப்படும் மகேஷின் சொந்த ஊர் காலி. பத்தாவது வரை படித்திருக்கிறான். சரளமாக ஆங்கிலம் கதைக்க வரும் என்பதால்“ஃபுட் ஸிட்டி” எனப்படும் இலங்கையின் பல இடங்களிலும் வியாபித்திருக்கும் பல்லங்காடியின் கொழும்பின் கொட்டாஞ்சேனை கிளையில் பில் போடுபவனாக பணிபுரிகிறான்.
அடுத்து கமால்தீன். கிழக்கின் கல்முனையைச் சேர்ந்த முஸ்லிம் நண்பன். இவனுடைய பின்னணி கண்டிப்பாய் சினிமா பார்ப்பது போன்ற ஓர் பிரம்மையை எம்முள் தோற்றுவிக்கும். சினிமாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று எண்ணியிருந்த எனக்கு, நிஜவாழ்வில் நடப்பதைத் தான் சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்ற புதிய எண்ணக் கருவை தோற்றுவித்தது அவன் பின்னணி.
தந்தை கல்முனை கடலில் ஓடும் பல நூறு தோணிகளுக்கும், படகுகளுக்கும், கப்பல்களுக்கும் சொந்தக்காரர். இவனிடம் தன் தங்கை மகள் கரீமாவை மணந்தால் தான் சொத்தில் பங்கு என கறாராய் சொல்லி விட,அப்படியானால் கல்யாணமும் வேண்டாம், சொத்தும் வேண்டாம். ஆளை விடுங்கடா சாமி என்று வீட்டை விட்டு வெளியே வந்து, கொழும்பில் தஞ்சமடைந்து , தற்போழுது “ப்ரீமா” என்னும் சர்வதேச கம்பெனியில் ப்ரொய்லர் கோழிகளை பல்லங்காடிகளுக்கு சப்ளை செய்து வரும் விற்பனை முகவராக இருக்கிறான்.
அடுத்து நான். என் சொந்த இடம் கண்டி. ஏ. லெவல் படித்து முடித்து விட்டு, அருகிலிருந்த ஆடை தொழில் சாலையில் சூப்பர் வைசராக இருக்கிறேன்.
நாங்கள் மூவரும் நண்பர்களானது இந்த வாடகை அறை மூலம். முதலில் கமால், பிறகு நான், அப்புறம் மகேஷ் என ஒவ்வொருவராய் அறையில் குடியேறி படிப்படியாக நண்பர்களானோம்.
நானோ, அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று காது கொடுக்க நேரமேயற்று, என்னுடைய வேலைத் தளத்தில் பணிபுரியும் நண்பன் ஒருவனின் பேசியூலர் பார்டிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.
குளித்து முடித்து விட்டு ஃப்ரஷ்ஷாக வெளியே வந்த நான், இளநாவல் நிறத்தினாலான முழுநீளக்கை சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்து வெளியே செல்லத் தயாரானேன்.
சட்டைய டக் இன் செய்து கொண்டே, அவர்களை நோக்கி “டேய் நா கிளம்பறேன்டா.. வெளில போறதுனா.. பூட்ட போட்டுட்டு போங்கடா” என்று கூற, “சரி மச்சி.. எவ்வளோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா.. நீ போய்டுவா மாப்ள.. உனக்கு இன்னைக்கு பெரிய ட்ரீட்டே..”என்று மகி ஏதோ சொல்ல வர, அவனின் விலாவுக்கு அடித்து, அதை தடுத்தான் கமால்.
அதை மனதிற்குள் குறித்துக் கொண்ட நான்“என்னமோ பண்ணுறீங்க.. இப்போ டைமில்ல.. நைட்டு வந்து கண்டுபிடிச்சேன்னா.. அப்றோ இருக்கு”என்று சுட்டு விரல் காட்டி எச்சரித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு பார்ட்டிக்கு செல்ல தயாரானேன்.
திரும்பவும் அறைக்கு நான் மீண்ட போது என் நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் கூடிப்போயிருந்தது. பேசியூலர் பார்ட்டியில் சரக்கடிக்காத வாலிபனா? நோ சான்ஸ். நானும் குடித்தேன்.
தள்ளாட்டத்துடனேயே மாடிப்படிகளை கடந்து வந்த நான், அறைக் கதவின் முன் நின்ற படி, என் பேன்ட் பாக்கட்டினுள் கையிட்டு துலாவி, சாவியை எடுத்து, தாழ்ப்பாளை நோக்கி குனிந்த போது, அதில் பூட்டே இல்லாமல் திறந்திருப்பது புரிந்தது.
“ஓ.. அப்படின்னா.. நம்ம பசங்க.. உள்ள தான் இருக்கானுங்களா”என்று எனக்கு நானே உளறிய வண்ணம், கதவில் இலேசாக கை வைக்க, என்னைப் போல நோஞ்சானாக இருந்த கதவும் சடார் என திறந்து கொண்டது.
நான் உள்ளே நுழைந்ததும், மின்குமிழ் கூட ஒளிராமல் எங்கும் கும்மிருட்டாகவே இருந்தது.கூடவே ஏதோ செத்த எலியின் வாடை போன்ற ஒரு வித நாற்றம் அறையெங்கிலும் அடித்துக் கொண்டிருந்தது. எலியொன்று இறந்து விட்டது போலும் என்று எண்ணிக் கொண்டு உள்ளே காலடி எடுத்து வைத்தேன் நான்.
போதையில் இருந்ததாலோ என்னவோ எனக்கு தூய தமிழ் நன்றாகவே அந்த கணம் வந்தது.
“****டேய் களவாணிப் பயலுங்களா.. உள்ள என்னடா லைட்ட ஓஃப் பண்ணுட்டு பண்ணுறீங்க? நா வந்தா தெரியும்.. வெள்ல வாங்கடா”என்று போதையில் கத்திய வண்ணமே, மின்குமிழ் ஆளியை நாடிப் போனேன். இருட்டில் தட்டுத் தடுமாறி, கட்டில் காலில், என் தொடையை இடித்துக் கொண்டு, அந்த எரிச்சலில், “பீப்” என்று மொழிந்து விட்டு, ஸ்விட்ச்சை போட்ட எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. சரி மெழுகுவர்த்தியை ஏற்றலாம் என்று எண்ணிக் கொண்டு, சமையலறைப் பக்கம் செல்ல நாடி, இரண்டெட்டு எடுத்து வைத்த போது, டம்ளர் கீழே விழுந்து உருண்டோடும் சத்தம் கேட்டது.
அது தானாக விழுந்த டம்ளராய் எனக்குத் தோன்றவில்லை. டம்ளர் வைக்கும் குட்டி ராக்கையில் இருந்த டம்ளர் விழ வாய்ப்பில்லை. யாராவது வேண்டுமென்றே செய்தாலே ஒழிய.
எனக்கிருந்த போதையில் அது திருடனாக இருக்கக் கூடும் என்று தோன்றவில்லை. மாறாக இந்த களவாணிப் பையன்களின் வேலையாகவே தோன்ற, அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் கடுப்பானேன்.
“டேய் மரியாதையா.. வெள்ல வாங்கடா?”என்று நான் கடுப்பான குரலில் அவ்வறை முழுதும் என் குரல் எதிரொலிக்க கத்தினேன். அப்பொழுதும் அவர்கள் வெளியே வரக் காணோம்.
அங்கணம், என் காதோரம் ஓர் ஆண்குரல் , “ஸ்ஸ்ஸி.. வா..”என்று ஹஸ்கியாக கேட்க, எனக்குள் ஊர்ஜிதமேயாயிற்று. இன்று இவர்கள் கிசுகிசு என்று பேசிக் கொண்டதற்கும், மகேஷ் பேசிய போது, கமால் அதைத் தடுத்ததற்கும் காரணம் புரிந்தது. இருவரும் திட்டமிட்டு என்னை பயமுறுத்தப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெள்ளத் தெளிவாக விளங்க, நான் மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் கை விட்டேன்.
நானும் ரௌடி தான். பெரிய தைரியசாலி தான் என்று காட்ட வேண்டும் என்பதற்காக, மெழுகுவர்த்தியை ஏற்றவில்லை நான்.
“டேய்.. நீங்களெல்லாம் என்ன கலாய்க்குறீங்கன்னு புரியுது.. நீங்களாவே வெளியில வந்துட்டா நல்லது.. இல்ல நானாவே உங்கள கண்டுபிடிச்சா.. அடி பின்னிருவேன்”என்று அந்த இருட்டறையில் கோபத்தில் உளறியபடி, தட்டுத் தடுமாறி சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.
சில நிமிடங்கள் எதுவுமே ஒலியெழுப்பாது கற்சிலை போல அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்த போது, பக்கத்தில் யாரோ வந்து உட்காருவது புரிந்தது.
அநேகமாக அது மகி அல்லது கமாலாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, அவர்களே முதலில் பேசட்டும் என்றெண்ணி நான் வாளாவிருந்த போது, அந்த உருவத்தின் கை என் வலது தோள் மீது படிந்தது. அந்தக் கையின் ஜில்லிப்பு, என் எலும்பின் ஆழம் வரை சென்று என்னைத் தீண்டியது.
கூடவே காதோரம் சிலிர்ப்பூட்டும் குரல், “ஹேப்பி பர்த்டே ஸ்ஸ்ஸி.. வா”என்று இரகசியமாய்க் கேட்க, என் முகத்தில் இதுவரை இருந்த கோபம் பறந்து, புன்னகை பூத்தது.
வரும் போதே இரவு பதினொன்றரை. இப்போது பன்னிரண்டு மணியாக இருக்க வேண்டும். நவம்பர் இரண்டு பிறந்து விட்டதா? என் பிறந்த நாள். என் பிறந்த நாளை கொண்டாடவா.. இந்த ஹைட் என்ட் ஸீக் விளையாட்டு என்றெண்ணிய நான், “இதுக்காவாடா.. இப்டி விளையாடினீங்க.. தேங்க்ஸ் மச்சி”என்று மொழிந்த வண்ணம், திரும்ப முனைந்த நேரம், அந்தக் கை என் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டது.
இன்னும் அதன் அழுத்தம் அதிகமாகி சதையுடன் எலும்பையும் சேர்த்து பிடிப்பது போன்ற ஓர் வலி தோன்ற, பல்லை கடித்துக் கொண்டு, “மச்ச்ச்சீ.. வ்விளையாடாத.. வ்வலிக்குதுடா…”என்ற வண்ணம் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க பார்த்தும் முடியவில்லை.
இன்னும் அந்தப் பிடியின் சிலிர்ப்பும் அதிகமாகி, அந்தக் குளிரில் பற்கள் கடகடவென ஆடத்தொடங்க, என் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி, கையைப் பிரித்தெடுத்து விட்டு, கட்டிலில் இருந்து சட்டென எழுந்து கொண்டேன்.
எனக்கோ மேலும், கீழும் மூச்சு வாங்கி, நெற்றியெல்லாம் வியர்த்து வழியத் தொடங்கியது. வலது தோள்பட்டையோ தூக்கவே முடியாமல் வலியில் துடித்துக் கொண்டிருந்தது .
அந்நேரம் சட்டென வாசல்பக்கத்திலிருந்து, போர்வையை விலக்கிக் கொண்டு, “பே..”என்று கத்திய வண்ணம் மகேஷும், கையில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட கேக்குடன் கமாலும் உள்ளே தாவ, நான் கற்சிலையாகி நின்றிருந்தேன்.
அந்த கேக்கிலிருந்த மெழுகுவர்த்தியின் ஒழி அறையை நிரப்ப, நான் மெல்ல தலையைத் திருப்பி கட்டிலை பார்த்த போது, அங்கு யாருமே இருக்கவில்லை. ஆனால் என் தோள் பட்டை மட்டும் விண்விண் என்று வலித்துக் கொண்டேயிருந்தது.
“ஹேப்பி பர்த்டே சிவா”என்ற வண்ணம் இருவரும் எனக்கு வாழ்த்துரைக்க நானோ, கண்கள் இரண்டும் மேலே சொருக, கால்கள் பலமற்று சரிய, அப்படியே தரையில் வீழ்ந்தேன்.
மகியும், கமால்தீனும் வெளியே இருந்து அந்நேரம் தான் உள் நுழைவதை, கேக்கில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி ஒளியிலிருந்து கண் கூடாகவே பார்த்ததால், அந்த உருவம் அவர்கள் இல்லை என்பது எனக்கு நூறு வீதம் உறுதி.
அப்படியானால் அது யாராய் இருக்கக் கூடும் என்று என்ற கேள்விக்கு, விடை எனக்கு அடுத்த நாள் காலையிலேயே கிடைத்தது.
மறுநாள் காலை, கொழும்பின் உஷ்ணமான வெப்பநிலையிலும் , எவரெஸ்ட்டில் நின்று கொண்டிருப்பது போன்ற ஓர் தோற்ற மயக்க குளிரில், கம்பளிப் போர்வைக்குள் நான் முடங்கிக் கொண்டிருந்தேன்.
நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், என்னை நம்பாத என் நண்பர்கள், என் வலது தோள்பட்டையில் இருந்த, அந்த நான்கு கை விரல்களின் சிவந்த தடயத்தைக் காட்டவும், தான் நம்பினர்.
கமால், என் வீட்டிலிருந்து, எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வந்த அழைப்பையெல்லாம், என்னைப் பேச விடாமல், உண்மையை வீட்டினருக்கு கூறினால், அச்சப்படக் கூடும் என்பதால் உண்மையைக் கூறவுமாது, ஏதேதோ பொய்களை சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தான்.
மகி என் அடர்ந்த மீசையையே கூரை போல வைத்திருந்த என் முரட்டு இதழ்களுக்குள், வெப்பமானியைத் திணித்த வண்ணம், என் வெப்ப நிலையை அளவிட்டுக் கொண்டிருந்தான்.
என் நிலையை கேள்விப்பட்டு , என்னை நலம் விசாரிக்க வந்திருந்த அத்தெருவில் பெட்டிக் கடை வைத்திருக்கும் முருகேசன் அண்ணன் கூறிய விடயத்தில் , என்னிதயமும் சரி, என்னை , பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்ட என் நண்பர்களிதயங்களும் சரி.. ஒரு கணம் மூர்ச்சையுற்ற நிலையில் நின்று விட்டது .
“தம்பி.. இதுக்கு முதல்.. இங்க.. உங்கள மாதிரியே.. ரெண்டு வயசு பசங்க.. தங்கியிருந்தாங்கப்பா.. ஒருத்தன் பேரு சிவா.. இன்னொருத்தன் பேரு மூர்த்தி.. ரெண்டு பேருமே.. இந்தத் தெருவில இருந்து மூணாவது தெரு தள்ளி இருக்க.. ஒரு பொண்ணத் தான் காதலிச்சானுங்க.. இடையில் நடந்த.. அந்த பொண்ணு யாருக்குன்ற தகராறுல.. அந்த பொண்ணும்.. சிவாவ கை காட்ட.. இந்த மூர்த்தி பையன்.. இந்த ரூம்லயே தான்பா.. தற்கொலை பண்ணிக்கிட்டான்.. இதுல ஒரு விஷயம் பார்த்தீங்கன்னா.. மூர்த்தி பையனோட ஃப்ரண்டும் சிவா தான்.. உன் பேரும் சிவா தான்.. அவன் பொறந்த நாளும் நவம்பர் ரெண்டு தான்.. உன் பொறந்த நாளும் நவம்பர் ரெண்டு தான்… எனக்கென்னமோ.. இந்த மூர்த்தி பையன் தான்.. இங்கேயே ஆவியா.. சுத்திட்டு இருக்கானோன்னு தோணுது..எதுக்கும்..கதிர்காமக் கந்தனுக்கு.. ஒரு சேவல் நேர்ந்து விட்றதா வேண்டிக்கப்பா.. எல்லாம் சரியாப் போயிடும் ”என்றார் அவர்.
நாங்கள் மூவரும் எங்கள் கண்களை, தீக்கோழி முட்டை அளவுக்கு கண்களை அகல விரித்து, எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
இந்த விடயத்தைக் கூறாமல் மறைத்த, வீட்டு உரிமையாளன் மேல் கொலை வெறியே வந்தாலும், நடந்ததைக் கூறிய பெட்டிக்கடை முருகேசண்ணன்.. எம் கண்களுக்கு தெய்வமாக தெரிந்தார் அந்நொடி.
அந்த சம்பவம் நடந்து, ஏறக்குறைய ஐந்து வருடங்களாகிறது. அந்த சம்பவத்துடன் வேறு வீட்டுக்கு மூவரும் மாற்றலாகிப் போய் விட்டோம். தற்போது மூவரும் குழந்தை, குட்டி என்று ஸெட்டிலாகியும் விட்டோம். அடிக்கடி நாங்கள் மூவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொண்டாலும், ஒரு வித அமானுஷ்ய சக்தியோடு தான்.. வாழ்ந்திருக்கிறோம் என்ற நினைப்பே குளிர் ஜுரத்தை வரவழைக்கிறது.
நான் அமானுஷ்ய சக்திகளைப் பற்றியோ, அவற்றின் நடவடிக்கைகள் பற்றியோ அதீத நம்பிக்கை கொண்டிராதவன் தான் . இருப்பினும் என் வலது தோள்பட்டையில் இருக்கும் நான்கு கை விரல்களின் சிவந்த தடயமும்,என் காதோரம் கேட்ட, “ஹேப்பி பர்த்டே ஸ்ஸ்ஸி.. வா”என்ற குரலும், முருகேசண்ணனின் கூற்றும் என் நம்பிக்கையை எப்போதுமே ஆட்டிப் பார்க்கிறது.