அவன் அழுகை கூடி கொண்டே போக “செழியன் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்களேன். துரை அண்ணா போனது வருத்தம் தான். நானும் இப்படி நடக்கும்னு எதிர்பாக்கலை. துரை அண்ணா நம்மளை விட்டு எங்கயும் போகலை. நம்ம கூடவே தான் இருக்காங்க. எப்பவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க. அவங்க குடும்பத்தை நீங்க பாத்துக்கோங்க. உங்களால முடியும். உடனே முடியாது. ஆனா நீங்க வாழ்க்கைல நல்ல நிலைக்கு வந்த அப்புறம் அவங்க குடும்பத்தையும் பாத்துக்கோங்க. அப்ப கண்டிப்பா துரை அண்ணா ஆத்மா ரொம்ப சந்தோச படும். இப்படி நீங்க அழுறது எனக்கு கஷ்டமா இருக்கு”, என்றாள் மது.
“ஆமா மது, நான் அவன் குடும்பத்தை பாத்துக்குவேன். அவன் அம்மா எனக்கும் அம்மா தான். அவன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி தான். ஆமா அவங்களுக்கு துரை போனா என்ன? அதான் நான் இருக்கேனே? எல்லாத்தையும் துரை என் கூடவே இருந்து பாப்பான். ஆனாலும் அவனை இனி பாக்க முடியாதே மது? சிரிச்சிட்டே இருப்பான் தெரியுமா?”
“இப்ப தான சொன்னேன் நீங்க அழ கூடாதுன்னு. அண்ணா நம்ம கூடவே தான் இருப்பாங்க. நீங்க விறகு வெட்ட போகும் போது கூட உங்க கூடவே தான் இருப்பாங்க”
“ஆமா, அவன் என் கூட தான் இருக்கான். சீக்கிரம் முன்னுக்கு வரணும் மது. இன்னும் ரெண்டு மூணு வருசத்துல நிறைய சம்பாதிக்கணும். ஆனா நீ எனக்கு ஒரு உதவி செய்றியா மது?”
“நான் என்ன செய்யணும்? சொல்லுங்க செய்றேன்”
“நீ டாக்டருக்கு படிக்கிறியா மது? என்னால அவ்வளவு செலவு பண்ணி படிக்க முடியாது. என் குடும்ப சூழ்நிலை அப்படி. நீ டாக்டர் ஆகிட்டா இந்த ஊருல யாருமே சாக மாட்டாங்க மது”
“கண்டிப்பா நான் டாக்டருக்கு படிக்கிறேன் சரியா?”
“சத்தியமா?”
“சத்தியமா படிக்கிறேன்”, என்று மது சொன்னதும் மேலும் வெகு நேரம் இருவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
வெயில் வர ஆரம்பித்ததும் தான் “நேரம் ஆகிட்டு மது கிளம்பலாம். உன்கூட பேசின உடனே எனக்கு மனசு லேசா இருக்கு. தேங்க்ஸ். வா வீட்டுக்கு போகலாம்”, என்று எழுந்தான் இளஞ்செழியன்.
அவனுடன் எழுந்தவள் அவன் அருகே வந்து மீண்டும் அவனை இறுக்கி அணைத்தாள். அவள் விலகியதும் “என்ன ஆச்சு மா?”, என்று கேட்டான்.
“நான் நேத்து… நேத்து பாட்டி ஒரு பையன் இறந்துட்டான்னு சொன்ன உடனே அது நீங்கன்னு நினைச்சு…”
“நானே போயிருக்கலாம் மது”, என்று சொன்னவனின் வாயை தன் விரலால் மூடியவள் “இனி இப்படி பேசாதீங்க. நீங்க இல்லைனா என்னால தாங்க முடியாது”, என்று சொன்னவள் குரல் திக்கியது.
முதல் முறையாக அவளை ஊன்றி பார்த்தான் செழியன். குண்டு குண்டு கண்களும் கொழு கொழுவென இருந்த கன்னங்களும் அவளை பேரழகியாக காட்டியது.
அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவன் மனதில் எதுவோ ஒரு புரியாத உணர்வை அவனுள் எழுப்பியது. தன் விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் “வா”, என்று சொல்லி அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.
அவன் சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து விட்டு அதை உருட்டி கொண்டு வந்தான். தெரு ஓரத்தில் வந்ததும் அவளிடம் சைக்கிளை கொடுத்தவன் “நீ வீட்டுக்கு போ”, என்றான்.
“நாளைக்கு வருவீங்களா?”, என்று கண்களில் எதிர்பார்ப்புடன் கேட்டவளை ஏமாற்ற மனதில்லாமல் “வருவேன்”, என்று சொன்னான்.
சந்தோசத்துடன் சென்றவளை பார்த்து கொண்டே நின்றவன் அவள் வீட்டுக்குள் சென்றதும் அங்கிருந்து நகன்றான்.
அடுத்து வந்த நாட்களிலும் அவர்கள் சந்திப்பு தொடர்ந்தது. கூடவே இத்தனை வருசமாக இருந்த துரையின் இடத்தை மது பூர்த்தி செய்தது போல உணர்ந்தான்.
அவனுடன் இருக்கும் போது மதுவும் சந்தோசமாக உணர்ந்தாள். ஒரு நாள் முள்ளு வெட்ட அவன் போகும் போது “நானும் வரேன்”, என்று அடம் பிடித்தாள் மது.
“அங்க முள்ளு, பாம்பு எல்லாம் இருக்கும் மது. துரை என்னை விட்டுட்டு போய்ட்டான். உனக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது”, என்றான் செழியன்.
“அப்பா நீங்களும் போகாதீங்க. துரை அண்ணா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்னாலயும் தாங்கிக்க முடியாது”
“சரி வா போகலாம்”, என்று அழைத்து சென்றான்.
சந்தோசமாக அவனுடன் சென்றாள் மது. “பாத்து வா”, என்று சொல்லி கொண்டே அவளுக்கு பாதை கட்டிய படி முன்னே சென்றவனுக்கு அவளை பாதுகாப்பாக திருப்பி அழைத்து செல்ல வேண்டும் என்று மனம் முழுவதும் பயமாக இருந்தது. “இன்னைக்கு விறகு வெட்டின மாதிரி தான்”, என்று நினைத்து கொண்டான் செழியன்.
அவளோ அந்த இடத்தையும் அவனுடைய அருகாமையையும் ரசித்த படியே சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் “ஆ அம்மா”, என்று கத்தினாள் மது. திரும்பி பார்த்த செழியன் “என்ன அச்சு மது?”, என்று பதறிய படியே கேட்டான்.
அவள் கண்களோ பயத்துடன் தரையை பார்த்த படி இருந்தது. அவள் பார்வை போன திசையை பார்த்தான். அங்கே சிவப்பு கலரில் பூராணை விட பெரிய அளவில் ஒரு பூச்சி நெளிந்து கொண்டு இருந்தது.
“ஓ இதுவா?”, என்று சொல்லி கொண்டே தன்னுடைய காலால் அதை தள்ளி விட்டவன் “இது சாதாரண புழு வகை தான் மது. நம்ம ரயில் பூச்சின்னு சொல்லுவோம்ல? அதே மாதிரி தான் இதுவும். பாக்க அருவருப்பா இருக்கும். ஆனா ஒண்ணும் செய்யாது”, என்றான்.
“நாம திருப்பி போகலாமா? எனக்கு பயமா இருக்கு”
“இதை தான் முன்னாலே சொன்னேன். உன்னால இந்த இடத்துல எல்லாம் இருக்க முடியாது. வா போகலாம்”
“நீங்க திருப்பி வருவீங்களா?”
“வேற என்ன செய்ய? வந்து தான ஆகணும்”
“எனக்கு பயமாவே இருக்கு”
“ஆமா நான் கேக்கணும்னு நினைச்சேன். உனக்கு ஏன் என் மேல இவ்வளவு பாசம் மது?”
“அது… அது வந்து… ஆன்.. உங்களுக்கும் என் மேல பாசம் இருக்கு தான? இல்லையா?”
“இருக்கே நிறைய?”
“அதுக்கு என்ன அர்த்தம்?”
“ஹ்ம்ம் தெரியலையே”
“அப்ப எனக்கு மட்டும் எப்படி தெரியும்? எனக்கும் தெரியாது. ஆனா உங்க கூட இருக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு”
“ஹ்ம்ம், எனக்கும் உன் கூட இருந்தா ரொம்ப சந்தோசமா இருக்கு. நீ என் கூடவே இருக்கணும் மது”
“ஹ்ம்ம் இருப்பேன்”
“அது எப்படி முடியும் மது? “
“அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். எனக்கு இங்க பயமா இருக்கு. நாம போகலாம் ப்ளீஸ்”, என்று சொல்லி கொண்டே அவன் கைகளை பிடித்து கொண்டாள்.
அவனும் பேசிய படி அவளை அழைத்து சென்றான். பழைய இடத்துக்கு வந்த பிறகு தான் அவள் உடையை பார்த்தான் செழியன்.
அவள் கணுக்கால் பக்கம் உடை கிழிந்திருந்தது. “இது எப்படி மது கிழிஞ்சது? நான் இதுக்கு தான் வர வேண்டாம்ணு சொன்னேன் கேட்டியா?”
“நானே கவனிக்கலை. எதுவோ குத்துன மாதிரி இருந்தது”, என்று சொல்லிய படியே அந்த இடத்தை விரலால் தொட்டாள். அடுத்த நொடி “ஆ”, என்று கத்தினாள்.
“என்ன ஆச்சு மது?”, என்று கேட்டு கொண்டே அருகில் வந்தவனின் கண்ணில் அவள் காலில் இருந்த காயம் பட்டது. அவள் காலில் முள் குத்தி கீறி இருந்தது.
“நான் சொன்னேன் கேட்டியா? பாத்து வந்துருக்கலாம்ல? வா உடனே வீட்டுக்கு போய் மருந்து போடணும்”
“மருந்தா?”
“மருந்துனா மருந்து இல்லை. தேங்காய் எண்ணெய் போடணும்”
“நான் போய் போட்டுக்குறேன்”
“என்னால தான காயம்? எங்க வீட்டுக்கு வறியா மது?”
“உங்க வீட்டுக்கா?”
“ஹ்ம்ம் ஆமா, வாயேன். பக்கத்துல தான்”
“இல்லை, உங்க வீட்டில எதுவும் சொன்னா?”
“எதுவும் சொல்ல மாட்டாங்க. ஒரு வேலை எங்க வீட்டுக்கு எல்லாம் வரணுமான்னு யோசிக்கியா?”
“உங்க கூடவே இருக்கணும்னு தான் நான் ஆசை படுறேன். அப்ப எப்படி உங்க வீட்டுக்கு வராம இருப்பேன்? உங்க வீட்டில என்ன சொல்லுவாங்களோன்னு தான் யோசிச்சேன். வாங்க போகலாம்”, என்று சொல்லி கொண்டே சைக்கிளை எடுத்தாள்.
“இதுக்கு என்ன அர்த்தம்?”, என்று யோசித்த படியே அவளை அழைத்து கொண்டு சென்றான்.
வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள் மது.
சாதாரண ஓட்டு வீடு தான். ஆனால் நேர்த்தியாக இருந்தது. அவளுடைய வீட்டில் அது ஒரு பகுதியாக தான் இருந்தது.
சிறிது பயத்துடன் தான் நின்றாள். “ஏய் மது எதுக்கு வெளியவே நின்னுட்ட? உள்ள வா”, என்று அழைத்தான் செழியன்.
தயங்கி தயங்கி அவள் உள்ளே சென்ற போது அவன் கையில் தேங்காய் எண்ணையுடன் வந்தான்.
“இப்படி உக்காரு மது”
“வீட்டில யாருமே இல்லை”, என்று கேட்டு கொண்டே தரையில் அமர்ந்தாள்.
“அம்மா அப்பா காட்டுக்கு போய்ருக்காங்க. ரெண்டு பாப்பாவும் ஸ்கூல்க்கு போய்ருக்காங்க”
“நான் வந்தது தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”
“நீ வந்ததை யாரும் பாக்கலை. அப்படியே பாத்தாலும் யாருன்னு விசாரிப்பாங்க. அவ்வளவு தான். வேற எதுவும் சொல்ல மாட்டாங்க”
“எனக்கு பயமா இருக்கு”
“எதுக்கு பயம்? என்னை நினைச்சு பயமா மது?”
“ஆன்… அது.. இல்லையே”
“நீ தயங்குறதை பாத்தா.. எதுவோ இருக்கு போலவே”
“அப்படி எல்லாம் இல்லை. நாம போவோமா?”
“சரி சரி போகலாம். இந்த எண்ணையை மட்டும் போட்டு விடுறேன். இல்லைன்னா எரியும். எங்களுக்கு இது தான் மருந்து”, என்று சொல்லி கொண்டே அவள் அருகே அமர்த்தவன் “பாவாடையை நகர்த்து”, என்றான்.
சிறு கூச்சத்துடன் நகற்றி காலை காண்பித்தாள். உடையை முட்டு வரை நகர்த்தி எண்ணையை போட ஆரம்பித்தான்.
முதல் முறையாக தடுமாற்றத்துடன் கண்களை இறுக மூடி கொண்டாள். டிவியில் ஏதாவது காதல் காட்சிகளை பார்க்கும் போது மட்டுமே அடிவயிற்றில் எழும் புரியாத உணர்வை முதல் முறையாக அவன் தொடுகையில் உணர்ந்தாள்.
“ரொம்ப வலிக்குதா?”, என்று கேட்ட செழியன் அவளிடம் இருந்து பதில் வராததால் நிமிர்ந்து பார்த்தான்.
அவள் கண்களில் இருந்த மயக்கத்தில் செழியன், தான் ஒரு ஆண் என்பதை உணர்ந்தான். இது தப்பு என்று மூளை அறிவுறுத்த எண்ணையை வேகமாக போட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.
அவன் சென்றதும் தான் சகஜமானாள் மது. அவன் உள்ளே இருந்து வரும் போது மது கிளம்ப தயாராக இருந்தாள்.
“கிளம்பலாமா மது?”, என்று கேட்டான் செழியன்.
“ஹ்ம்ம்”, என்று அவள் சொன்னதும் அவளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றான்.
அதன் பின் வந்த நாட்களில் அவளுடைய நினைவுகளுடன் தான் ராடினான் செழியன். தான் தொட்டதும் அவள் கண்களை மூடி இருந்த அவளின் தோற்றமே அவனுடைய மனக்கண்ணில் மின்னி மின்னி மறைந்தது.
மதுவோ அவன் தொடுகையை அவ்வப்போது நினைத்து சிலிர்த்து போனாள். அவனை அடுத்த நாள் கோயிலுக்கு காண சென்றாள். அவன் வரவில்லை. அவன் வீட்டு பக்கமும் இரண்டு முறை சென்று விட்டாள்.
அவனை பார்த்து இரண்டு நாள் கழிந்த பிறகு பார்க்காமல் இருக்க முடியாமல் அவனை தேடி அவன் வீட்டுக்கு சென்றாள். அப்போது அவனுடைய வீட்டு வாசலை பார்த்து கொண்டே சைக்கிளை ஓட்டி ஒரு கல்லில் இடித்து அப்படியே கீழே விழுந்தாள் மது.
சத்தம் கேட்டு வெளியே வந்த பூங்காவனம் “ஐயா என்ன மா ஆச்சு? பாத்து வரலாம்லா? பாரு காலெல்லாம் சிராய்சிட்டு. ரத்தம் வருது”, என்று சொல்லி கொண்டே அவளை வீட்டுக்குள் அழைத்து சென்றாள்.
அவனை கண்களால் தேடிய படியே அவன் வீட்டுக்குள் சென்றாள் மது.
தாகம் தணியும்……