அத்தியாயம் 10
என்னை சுற்றிலும்
பல மாற்றங்கள்,
எனக்குள்ளே பல தேடல்கள்
அனைத்தும் தந்தவனே
தாகம் தீர்க்க வந்து விடு!!!
காத்திருந்து காத்திருந்து பார்த்து கொண்டிருந்த மது, செழியன் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றாள்.
அறியாத ஊரில், யாரையும் தெரியாத நிலையில் அவனிடம் பேசுவதை விரும்பினாள். அவனை காண வில்லை என்றதும் மனது முழுவதும் சோகமாக இருந்தது.
அதே மன நிலையில் தான் அன்று முழுவதும் இருந்தாள். அடுத்த நாளும் அவனை காண அதே இடத்துக்கு சென்றாள். இப்போது அந்த கோயில் சிலை கூட அவளுக்கு பயத்தை அளிக்க வில்லை.
அவனுக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் அவள் கிளம்பலாம் என்று நினைக்கும் போது “ஓய் மது”, என்ற செழியன் சத்தம் கேட்டு புன்னகையுடன் அவனை பார்த்தாள்.
அவள் மலர்ந்த முகம் அவன் முகத்திலும் புன்னகையை உருவாக்கியது. “நீங்க எதுக்கு நேத்து வரலை? நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன் தெரியுமா?”, என்று கேட்டாள் மது.
“ஓ அப்படியா? அன்னைக்கு மரம் வெட்டும் போது லேசா கையிலே முள்ளு குத்திருச்சு. அதான் நேத்து வரலை. நீ வெயிட் பண்ணியா?”
“ஹ்ம்ம் ஆமா, நீங்க வரலைன்னதும் கிளம்பிட்டேன். சரி உங்க பிரண்ட் எங்க?”
“கொஞ்ச நேரம் கழிச்சு வருவான். என்னைக்கு ஸ்கூல் ஆரம்பிக்குது?”
“அடுத்த வாரம்”
“சைக்கிள்லே போய்ருவியா?”
“ஹ்ம்ம் அதுக்கு தான் வாங்கி தந்தாங்க. அவ்வளவு தூரம் நடந்து போய்ட்டு வரணும்னா நேரம் ஆகுமே”
“ஹ்ம்ம், இடையிலே சைக்கிள் ஏதும் பஞ்சர் ஆச்சுன்னா பஸ்ல வர மாதிரி பஸ் நேரத்தை கணக்கு பண்ணி வா சரியா?”
“சரி, புது ஸ்கூல் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு”
“எல்லாரும் நல்லா பழகுவாங்க. நீ பயப்படாம இரு”
“ஹ்ம்ம் சரி”
“உங்க வீட்ல நீ ஒரு பொண்ணு தானா?”
“ஹ்ம்ம் ஆமா, உங்க வீட்ல?”
“எங்க வீட்ல எனக்கு ரெண்டு தங்கச்சி. மூத்தவ சுடர், ரெண்டாவது வளர் குட்டி. எனக்கு பாப்பா”
“ஜாலியா இருக்கும்ல? எங்க வீட்ல நான் ஒருத்தி தான். தனியா இருக்க செம கடுப்பா இருக்கும். சண்டை போட கூட ஆள் இருக்காது”
“பிரண்ட்ஸ் இருக்காங்களா?”
“ஹ்ம்ம் அங்க இருந்தாங்க. இப்ப இங்க யாரையும் தெரியாது”
“அதெல்லாம் பழகிரும். ஆமா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?”
“அப்பா பாரின் போறாங்க. அதான் இங்க ஆச்சி கூட இருக்க வந்தோம்”
“சரி அதோ துரை வந்துட்டான். நாங்க கிளம்புறோம். நீ வீட்டுக்கு போ”
“நானும் வரவா?”
“அது முள்ளு காடு மா. அங்க வந்தா உன் கால் எல்லாம் முள்ளு குத்திரும்”
“ஹ்ம்ம் சரி, நான் கிளம்புறேன். துரை அண்ணா பை”, என்று சொல்லி விட்டு வீட்டுக்கு சென்றாள்.
அவள் போன பிறகு “என்ன டா சொல்றா என் தங்கச்சி?”, என்று கேட்டான் துரை.
“நேத்து நமக்காக வெயிட் பண்ணிருக்கா போல”, என்று சொல்லி சிரித்தான் செழியன்.
“நமக்காகவா, உனக்காகவா?”
“அடேய் நீ என்ன இப்படி எல்லாம் பேசுற?”
“நீங்க ரெண்டு பேரும் பேசுறத பாத்தா எனக்கு அப்படி தான் தெரியுது”
“உன்கிட்டயும் அவ சிரிச்சு நல்லா தான பேசுறா”
“ஆனா அண்ணன்னு சொல்லி பேசுறாளே? உன்னை அப்படி கூப்பிட்டாளா?”
இல்லை என்னும் விதமாய் தலை அசைத்த செழியன் மனதுக்குள்ளும் அதே யோசனை ஓடியது. “இவன் வயசு தான எனக்கும். அப்பறம் ஏன் என்னை அண்ணனு கூப்பிடலை?”, என்று நினைத்து கொண்டு துரை பின்னே நடந்தான்.
இந்த புரியாத உணர்வுக்கு இனக்கவர்ச்சி என்ற அர்த்தம் உண்டு என்று இருவருக்குமே புரிய வில்லை.
அடுத்த நாள் காலை எழுந்த மது குளித்து முடித்து மாடி அறையில் இருந்து கீழே வந்தாள். மல்லிகா கொடுத்த இட்லியை சாப்பிட்டு விட்டு வாசலை கடக்கும் போது அவளை தடுத்து நிறுத்தினாள் பாட்டி.
“என்ன பாட்டி?”, என்று கேட்டாள் மது.
“ஆம்பளை பிள்ளை மாதிரி வெளிய சுத்திகிட்டு இருக்க. ஒழுங்கா உள்ள போ”
“பாட்டி வீணா என்னை கோப படுத்தாத. நானே கொஞ்ச நேரம் தான சைக்கிள் ஓட்டிக்கிட்டு வரேன். வீட்டுக்குள்ளே எப்படி இருக்க?”
“இந்த வயசுலே எதுத்து பேசுற? சொன்ன பேச்சை கேளு. இன்னைக்கு எங்கயும் போக வேண்டாம்”
“அம்மா”, என்று கத்தினாள் மது.
“மது எதுக்கு இப்படி கத்துற?”, என்று கேட்ட படி வந்தாள் மல்லிகா.
“இந்த பாட்டி வெளிய போக கூடாதுன்னு சொல்லுது”
“மது மரியாதை இல்லாம பேச கூடாது. பாட்டி தான் சொல்றாங்கள்ல?”
“நான் போவேன்”
“இந்த வயசுலே எவ்வளவு அடம். என்ன மல்லி இது?”, என்று கேட்டாள் பாட்டி.
“அத்தை… அது வந்து…”
“இன்னைக்கு ஊருக்குள்ள ஒரு சாவு விழுந்துருக்கு. அதான் இவளை வெளிய போக கூடாதுன்னு சொல்றேன் ”
“சாவா? என்ன அத்தை சொல்றீங்க?”
“ஆமா மல்லி. ஒரு இளவட்ட பையன் நேத்து முள்ளு வெட்ட போன இடத்துல பாம்பு கடிச்சு செத்து போய்ட்டான். இன்னைக்கு தான் தூக்குதாங்க. அதான் இவளை வெளிய போக வேண்டாம்ன்னு சொல்றேன்”, என்று பாட்டி சொன்னதும் அந்த இடத்திலே மயங்கி விழுந்தாள் மது .
“மது”,என்ற படி அவளை தாங்கி கொண்ட மல்லிகா தன் மடியில் அவளை கிடத்தி ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்த பாட்டி அவள் முகத்தில் தெளித்தாள்.
மயக்கம் தெளிந்த மது அழுது கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்.
“சாவு பத்தி பேசுனா இந்த பிள்ளை பயப்படும்ன்னு தான் சொல்லாம இருந்தேன். கொஞ்ச நேரத்துல சரியாகிருவா மல்லி. நீ போய் உன் வேலையை பாரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பாட்டி.
அறைக்கு சென்ற மதுவோ ஏங்கி ஏங்கி அழுதாள். இறந்தவன் இருவரில் ஒருவன் தான் என்று புரிந்தது. “அது செழியனா இருக்குமோ?”, என்று எண்ணி அழுது கொண்டே இருந்தாள்.
சின்னதுரையை நினைத்தும் அழுதாள். தன்னிடம் பேசியதே இருவர் தான். மனசாட்சியை தொட்டு சொல்வதென்றால் அவள் அதிகம் அழுதது செழியனை நினைத்து தான்.
அவன் முகம், அவன் பேச்சு அனைத்துமே அவள் மனதில் பதிந்து போனது. இப்போது செழியன் இந்த உலகில் இல்லை என்பதை அவளால் நினைத்து பார்க்கவே முடியவில்லை.
செழியன்… செழியன்… என்று எண்ணும் போது தான் செழியன் தன் மனதில் எப்படி குடியேறி இருக்கிறான் என்று புரிந்து போனது. காதல் என்றால் என்னவென்று முழுதாக தெரியாது தான். ஆனால் செழியன் மீது இருப்பது காதல் தான் என்று நம்பினாள்.
அன்று முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அழுது கொண்டே இருந்தாள். இரண்டு முறை சாப்பிட வற்புறுத்திய மல்லிகா கூட அவளே சரியாகி விடுவாள் என்று எண்ணி விட்டு விட்டாள்.
அழுது அழுது முகம் வீங்கி போய் அவளை அறியாமலே தூங்கி விட்டாள் மது. காலையில் கண் விழித்தவளுக்கு அனைத்தும் நினைவில் வந்து கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
நேற்று காலையில் சாப்பிட்ட வயிறு வேறு உணவு தா என்று கூக்குரல் இட்டது. வேண்டா வெறுப்பாக எழுந்தவள் பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவள் அறைக்குள் வந்த மல்லிகா “மது குட்டி எழுந்துட்டியா டா?”, என்று கேட்டாள்/\
“ஹ்ம்ம்”
“எதுக்கு மா இந்த அழுகை?”
“தெரியல கஷ்டமா இருந்துச்சு”
“ஹ்ம்ம் ஊருல துக்கம் நடந்த நேரத்துல வெளிய போக கூடாதுனு தான் பாட்டி சொன்னாங்க. அவங்க சொன்னா காரணம் இருக்கும்னு நினைச்சு தான் உனக்கு சப்போர்ட் பண்ணலை மது. அம்மா மேல கோபமா?”
“அதெல்லாம் இல்லை”
“ஹ்ம்ம் சரி, போய் குளிச்சிட்டு சாப்பிட வா. நேத்து புல்லா சாப்பிடலை. இன்னைக்கு வேணும்னா வெளிய போய்ட்டு வா சரியா?”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
குளித்து முடித்து வந்த மது சாப்பிட்டு விட்டு சைக்கிள் எடுத்து கொண்டு கிளம்பினாள். மனம் மட்டும் வெறுமையாக இருந்தது.
இன்று யாரை போய் பார்ப்பது? செழியனை பார்ப்பதற்காக தான் அவள் செல்வதே. இப்போது அவனே இல்லை என்று எண்ணி உள்ளம் சுருண்டு போனது. ஆனாலும் அவன் நினைவில் அந்த கோயில் உள்ள இடத்துக்கு சென்றாள்.
அந்த சிலையை பார்த்து கண்களில் நீர் வழிய நின்றவள் சில நிமிடங்கள் கழித்து அங்கு அமர்ந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.
அழுது கொண்டு இருந்தவளின் தோள் மீது ஒரு கரம் விழுந்தது. அதிர்ந்து திரும்பி பார்த்தவள் அங்கு நின்ற செழியனை கண்டு இமைக்க மறந்தாள்.
அடுத்த நொடி அந்த திண்டில் இருந்து இறங்கியவள் “செழியன்”, என்று கதறிய படியே அவன் முகம் முழுவதும் முத்தங்களை பதித்து அவனை இறுக்கி கட்டி கொண்டாள்.
அவளை அமைதியாக அனைத்திருந்தவனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. இருவருக்குள்ளும் மௌனமே ஆட்சி செய்தது.
இந்த உலகத்திலே இல்லை என்று நினைத்தவன் கண் முன் வந்ததும் அவள் மனம் எல்லை இல்லா நிம்மதியை கொண்டது. சிறிது நேரம் கழித்து தான் சுயநினைவுக்கு வந்தவள் அவனிடம் இருந்து விலகி அவன் முகத்தை பார்த்தாள்.
“அப்ப துரை அண்ணா”, என்று கேட்டாள் மது.
ஆம் என்னும் விதமாய் தலை அசைத்தவன் அங்கிருந்த படியில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.
அவள் அழுததில் துடித்து போனவள் அவன் அருகே அமர்ந்து அவன் தோளில் கை வைத்து சமாதான படுத்த முயன்றாள்.
அவள் தோளில் முகம் புதைத்தவன் தன்னுடைய மொத்த சோகமும் கரையும் படி அழுதான்.
“சின்ன வயசுல இருந்து அவன் என்னோட பிரண்ட் மது. என் கூடவே சுத்திக்கிட்டு இருப்பான் தெரியுமா? அவனை போய் கடவுள் இப்படியா கூப்பிடணும்? அன்னைக்கு என் கூட தான் இருந்தான் தெரியுமா? ரெண்டு பேரும் சந்தோசமா தான் மரம் வெட்டிட்டு இருந்தோம். உன்னை பத்தி கூட பேசிட்டு இருந்தோம். அப்ப போல அவனை வந்து கொத்தும்னு கனவா கண்டேன்? அவனுக்கு பதிலா என்னை கொத்தி இருக்கலாம் தெரியுமா? அவன் ரொம்ப பாவம். அடுத்த நிமிஷம் அவனை ஹாஸ்ப்பிட்டலுக்கு தான் தூக்கிட்டு போனேன். ஆனா நீங்க கொண்டு வர நேரம் ஆகிட்டு”
…..
“விஷம் ரத்தத்துல கலந்துட்டுன்னு சொல்லிட்டாங்க. இந்த ஊருலே ஒரு டாக்டர் இருந்திருந்தா என் துரையை காப்பாத்திருப்பேன். அவன் குடும்பம் ரொம்ப பாவம் மது. அவனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். மூணு தங்கச்சி. அவங்க அம்மா ரொம்ப கஷ்ட பட்டவங்க. இவனை தான் முழுசா நம்புனாங்க. நேத்து உயிரே போற மாதிரி அழுறாங்க, என்னால முடியலை மது. மனசு ரொம்ப வலிக்குது”, என்று பேசி கொண்டே அழுதவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியாமல் தடுமாறினாள் மது.