3
விழிகளில் நீர் பெருக, “ஷ்ரவன்!” என்று அவனின் முகத்தை தொட முயன்றாள்.
“மதிம்மா! இனி நான் உன்கூடத்தான் இருப்பேன். நேரம் வரவரைக்கும்” என்று சிரித்தான்.
என்னதான் அவள் எல்லோரையும் போக சொல்லிவிட்டாலும் பெற்றவர்களால் விடமுடியுமா?
‘மகள் விரும்பி மணந்த கணவனை இழந்ததில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாள். அதற்காக அவளை தனியே விடமுடியாது’ என்று மீண்டும் ஓடி வந்தனர் அவளின் பெற்றோர்..
அவர்கள் வருவதை அறிந்தவன் அவள் விழிகளில் இருந்து மாயமானான்.
“ஷ்ரவன் எங்க போன?” என்று நரகத்தில் இருப்பது போல் புலம்பினாள் ஷன்மதி. இது நிறந்தரமில்லை என்பது அப்பொழுது தான் அவளுக்கு உரைத்தது. தன் வாழ்வில் இனி ஷ்ரவன் கானல் நீரா? என்று கேள்வி அவளை அரித்து கொண்டே இருந்தது.
எல்லோரும் மீண்டும் வீட்டினுள் கூடி அவனின் இழப்பை நினைவுபடுத்த, அவனும் அவளுக்கு காட்சியளிகாமல் தவிக்க வைத்து அமைதி காத்தான், என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பெயரை மனதினுள் ஜபம் செய்தபடி, தனதறைக்குள் மீண்டும் முடங்கினாள் ஷன்மதி.
நிமிடங்கள் யுகங்களாக கரைய, மதிக்கோ அவனின் நிஜத்திலிருந்தும் நிழலில் இருந்தும் அவனின் மறைவு உலுக்கி எடுத்தது.
உண்ண மறுத்தாள். உறங்க மறந்தாள்.
அவளின் அப்பா தன் மகள் உண்ணாமல் இருப்பதை கண்டு மனம் வெதும்பி, “குடுடி என் பொண்ணுக்கு நானே ஊட்றேன்” என்று கண்ணீரோடு தட்டை மனைவியிடம் இருந்து வாங்கி வந்தார்.
தரையில் கவிழ்ந்து படுத்துகொண்டு கண்ணாடியையே வெறித்து பார்த்தபடி இருந்த மகளைநோக்கி வந்தார் ஈஸ்வரன்.
“அம்மாடி. எந்திரிடா. சாப்பிடாம இருந்தா எப்படிடா? கொஞ்சமாவாது சாப்பிட்டுகோடா கண்ணம்மா” என்று அவளின் தலைகோதினார்.
கண்ணாடியையே வெறித்தபடி பார்த்துகொண்டிருந்தவள் அவரை திட்ட வாய் எடுக்க, திடிரென்று கண்ணாடியில் அவளின் பார்வை நிலைத்தது.
அங்கே!
“மதிம்மா! அவர் உன் அப்பா. என்னைவிட உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கார். உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கார். இருந்தாலும் உன் முன்னாடி அதை காட்டிக்காம உனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கார். எந்த அப்பாவும் தன் பெண்ணை பார்க்கவிரும்பாத நிலைல அவர் உன்னை பார்க்க வந்திருக்கார்டா. உனக்கு எப்பவும் அடுத்த அப்பாவா இருக்கணும்னு நான் ஆசை பட்டிருக்கேன். அதனால அவரை எதுவும் கோபமா பேசாதடா.
நான் சொன்ன மாதிரி இங்கேயே உன்னை பார்த்துகிட்டு தான் இருக்கேன். உன் ஷ்ரவன்.”
என்று எழுத்துகள் வாக்கியங்களாக வர. ஒருநொடி அவன் இங்கு தான் இருக்கிறான் என்ற திருப்தி ஏற்பட, மறுநொடி அவனின் நிழலே அது எனும் உண்மையும் உணர அவனின் அன்பில் அவள் முழுதாய் கரைந்தாள்.
‘இறந்த ஆத்மா கூட இப்படி ஒருவரை நேசிக்க முடியுமா?’ என்று தனக்குள் யோசித்தாள்.
“என்னம்மா ஏன்டா அங்கேயே பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டபடி கண்ணாடியை பார்க்க ஒன்றும் இல்லாததால் திரும்பி “சாப்பிடுடா” என்று ஊட்டினார்.
“ஒண்ணுமில்லைபா. எனக்கு எதுவும் வேண்டாம் பா” என்றாள் மதி.
“இல்லடா. அப்படி சொல்லாதடா கண்ணம்மா. எங்கம்மா இல்ல? ரெண்டு வாய் சாப்பிட்டுகோடா. இப்போ உன் மனசு என்ன பாடுபடுதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. யார் என்ன ஆறுதல் சொன்னாலும் நடந்ததை மாத்தமுடியாது. நீ தான் அதுலர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர முயற்சி பண்ணனும். ரொம்ப கஷ்டம் தான். ஆனா உன்னால முடியும். மை பேபி கேர்ள் இஸ் வெரி ஸ்ட்ரோங் இல்லையாடா?” என்று அவளின் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கி கொண்டே மெதுவாய் சொல்லி முடித்தார்.
அவரின் கனிவான பேச்சு அவளுக்குள்ளே பொங்கி கொண்டிருந்த சோகத்தை தட்டி எழுப்ப. “அப்பா!…” என்று உடைந்து இரண்டு வயது மகளாய் மாறி அவரின் மடியில் முகம் புதைத்து அழத்துவங்கினாள்.
“அழாதன்னு சொல்லமாட்டேன்டா… அழு.. அழு.. நல்லா அழு… உன் மனசுல இருக்க பாரம் முழுக்க கரையர வரைக்கும் அழு..” என்று அவளின் தலையை கோதினார்.
ஷன்மதியை ஒரு வழியாய் சமாளித்து அவளை சாப்பிட வைத்து வெளியே வந்தார்.
அவர் சென்ற பின் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க. “மதிம்மா…” என்று அவளின் உயிரை குடிக்கும் அந்த குரல் அவளின் வெகு அருகாமையில் கேட்டது.
“ஷ்ரவன்” என்று ஆனந்த மிகுதியில் கத்த, “கத்தாத மதிம்மா” என்று செல்லமாய் அதட்டினான்.
“சாரி! சாரி!” என்று சிறுபிள்ளை போல் உதட்டின் மேல் விரல் வைத்து அமர்ந்தான்.
அவளின் செய்கையை கண்டு சிரித்தவன்.
“வாலு” என்று அவளின் முன் ஜொலிக்கும் ஒளியில் தோன்றினான்.
“ஷ்ரவன் கதவு மூடவே இல்லை” என்றாள் பதட்டமாய்.
“மதிம்மா. நான் என் மதி கண்ணுக்கு மட்டும்தான் தெரிவேன். உனக்கு பயமா இருந்தா நான் கதவை மூடிட்றேன்” என்று அவன் தலையை திருப்பி கதவை பார்க்க. அவன் விழி அசைவில் கதவுகள் இரண்டும் தானாய் மூடிக்கொண்டன.
“இப்போ ஒகேவா? முதல்ல தான் எதுகெடுத்தாலும் பயப்படுவ. இப்போ நான் உன் புருஷன் தான? இப்போ எதுக்குடி பயப்படுற?” என்று கண்சிமிட்டி சிரித்தான்.
“ஹ்ம்ம் போடா” என்றாள் மதி விளையாட்டாய்.
“போகவா?” என்றான் ஷ்ரவன் மெதுவாய்.
“இல்லல்ல சாரி. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சாரி” என்றாள் பயமாய் மதி.
“டென்ஷன் ஆகாத. நான் எங்கயும் போகமாட்டேன். மணி ஆகுது. நீ ரொம்ப கொடுது வச்சவ உனக்கு எவ்ளோ அருமையாய ஒரு அப்பா கிடைச்சிருக்கார். நீ தூங்கு” என்றான் அவளின் அருகில் அமர்ந்து.
“எனக்கு தூக்கம் வரல” என்றாள் மதி ஷரவனை விழிமூடாது பார்த்தபடி.
“ஏன் அப்படி பார்க்கிற?” என்றான் ஷ்ரவன் மதியின் தலைகோதி.
“ஹும்ம் அப்புறம் நீ போய்டேன்னா மறைந்துட்டேன்னா ?” என்றாள் மதி பாவமாய்.
“என் மேல சத்தியமா நான் உன்னை விட்டு இப்போதைக்கு எங்கயும் போகமாட்டேன். போதுமா? இப்போ படு” என்றான் ஷ்ரவன்.
அவள் மெத்தையில் படுத்தவுடன் அருகில் அமர்ந்து அவளின் தலை கோத அவளோ அவனையே பார்த்துகொண்டிருந்தாள்.
“உன்னை தூங்குன்னு சொன்னேன். கண்ணை மூடு” என்றான் ஷ்ரவன் அதட்டலாய்.
“சரி” என்று அவனின் இடையை பிடிக்க முடியாவிட்டாலும் அவனின் இடையை சுற்றி கைகளை வைத்துக்கொண்டு உறங்கத்தொடங்கினாள் மதி.