மூன்றாவது கண்
ராஜி அதிர்ந்து போய் உட்கார்ந்தாள் !நாற்காலியின் மேலே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ,மெதுவாய் மின்விசிறி தன்னை மேலே இழுப்பது போலவும் அதன் நான்கு இறக்கைகளும் வீட்டை துளைத்து ஆகாயத்தை நோக்கி அவளை மேலே தூக்கி எறிந்து விட்டது போலவும் எண்ணி ஒரு நிமிடம் அதிர்ந்தாள் , தன்னை ஒரு வழியாக சுயநினைவுக்கு கொண்டு வந்தாள்,இன்னும் கைகள் நடுங்கி கொண்டேதான் இருந்தது .
ஒரு முடிவுக்கு வந்தவளாய் ,அப்படி இருக்க கூடாது!! என எண்ணிக் கொண்டே மீண்டும் எதிரே இருந்த மடி கணிப்பொறியை தன அருகில் எடுத்து வைத்தாள் ……..அதனை திறக்கலாம் என எண்ணும் போதெல்லாம் எதோ மிகப் பெரிய பேய் ,பிசாசு அவள் முன் நின்று கொண்டு வா என்னிடம் ….வந்து விடு…..என்று கூறுவது போலவே தோன்றியது .
உடல் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது !கைகள் நடுங்க அந்த கணிப்பொறியை திறந்து திருமண வரன்கள் தேடும் இணையத்தை
திறந்தாள் ….ஏற்கனவே சற்று முன்பு திறந்து ,கணக்கு வெளியேறாமல் இருந்ததால் அவளை நேரே அந்தப் பக்கத்திற்கே கொண்டு சென்றது,பெயர் -ராஜேஷ் ,வயது-30 ,எல்லாம் சரியாக இருந்தது ,திருமணத்திற்கு பெண் வேண்டும் என நேற்று தேதியில் மாற்றியிருப்பதை மீண்டும் சரி பார்த்துக் கொண்டாள்.
நான் ராஜி …. வயது 29 ஆகிவிட்டது என வீட்டில் அரக்க ,பறக்க மாப்பிளை தேடும் படலம் சென்றுக் கொண்டிருந்தது ,வழக்கம் போல வாரம் ஐந்து பேராவது தொலை பேசியில் அழைப்பார்கள் ,பெண் பெரிய கணிப்பொறி அலுவலகத்தில் வேலையில்
இருக்கிறாள் ,மாதம் 85,000 ஊதியம் என்றால் அதிகம் தானே?
அன்றும் , அம்மா தான் கத்திக் கொண்டிருந்த தொலை பேசியை எடுத்தாள் ,மறுமுனையில் கனிவான ஆணின் குரல் கேட்டது ,அம்மா எல்லாவற்றிற்கும் ஆமாம் போட்டு கொண்டிருந்தாள் !!
ம் …
மிகவும் நல்லது …
இந்த வெள்ளிக்கு கிழமையா?
பாப்பாவிடம் ஒரு வார்த்தைக் கேட்டு சொல்கிறேன்…
என்றவள் என்னிடம் திரும்பி இந்த வெள்ளி கிழமை அஞ்சு மணிக்குள்ள வேலை முடிஞ்சுரும்ல ? ஆறு மணிக்கு வந்திருவியா ? எனக் கேட்க ஆமாம் என நான் தலை அசைப்பது தெரிந்தவுடன் ,வேறு எந்த கேள்வியையும் என்னிடம் எதிர் பார்க்க விரும்பாதவளாய் ,நீங்க கட்டாயம் வாங்க ….மிகவும் மகிழ்ச்சி …பார்க்கலாம் அப்போ !என்றவாறே தொலை பேசியை வைத்தாள் .
நானும் தலையை சீவி பின்னல் போட்டுக் கொண்டே யாராம்?எனக் கேட்டேன்…இருக்கும் ஆர்வத்தை வெளியில் காட்டாமல் ….
பையன் பேசுறான்…பெரிய அலுவலகத்தில் தான் வேலையாம் ..
நல்ல சம்பளமும் கூட …உன்னை விட ஒரு வயது மூத்தவன் …அம்மா,அப்பா
இல்லையாம் …உன் போட்டோவை திருமண இணையதளத்தில் பார்த்துட்டு
பிடிச்சுருச்சு போல ,அதான் பார்க்க வரட்டுமா வெள்ளி கிழமைனு கேட்கிறான் …..நாமளும் எதனை வருசமா மாப்பிளை பார்க்கிறோம் ,
அது இல்லை இது இல்லை ,அப்பா இல்லாத குடும்பம் என எல்லாரும் தட்டி
கழிக்கிறாங்க ,இது தானா வருது ,அடக்கமாய் பேசுது அந்த பிள்ளையும் ….
பார்ப்போமே ?அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி …என மூச்சு விடாமல் என் பின்னலேயே வந்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டு …கடைசி வாய் தோசை நான் விழுங்குகையில் என் முகத்தை தூக்கி பார்த்தாள் !!!!
சரிம்மா …நீ சொன்ன நான் என்ன வேணம்னா சொல்ல போறேன் ? பார்ப்போம் என்றவாறே பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் !!!!
வெள்ளிக்கிழமையும் வந்தது ….அலுவலகம் முடிந்து வந்து குளித்து விட்டு நல்ல காட்டன் புடவையாக கட்டி கொண்டு தயாராக இருந்தேன்…மணி ஆறை தொட்டதும் ,வாசலில் இருசக்கர வண்டி வரவும் சரியாக இருந்தது ….
வாங்க வாங்க என்று அம்மாதான் முன்னே சென்று வரவேற்றாள் ….
வெறுங்கையுடன் வந்த மாப்பிளை வீட்டாரை பார்ப்பதும் ,கூட்டமே இல்லாமல் தனி மரமாய் மாப்பிளை பெண் பார்ப்பதும் அம்மாவிற்கும் சரி… எனக்கும் சரி புது அனுபவம் தான் ….
காபி கொடுத்ததும் பேச ஆரம்பித்தான் ராஜேஷ் ,…உங்களை பற்றி தகவல்களெல்லாம் இணைய தளத்தில் பார்த்தேன் …நீங்க எனக்கு சரியா இருப்பிங்கனு தோணிச்சு அதான் வந்திட்டேன் என நேராக காரியத்திற்கு வந்த ராஜேஷை பார்த்து அம்மா வாயை பிளந்தவாறே !!!..நாகரிகமாக ,நீங்க பேசிக்கிட்டு இருங்க இதோ சிற்றூண்டி பண்ணிட்டு வர்றேன்… என அடுப்படிக்குள் நுழைந்தாள் ….
அவனுக்கு எதிரே உள்ள நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன் …பேசுங்க ராஜி என்றவனிடம்….நீங்க எங்க படிச்சீங்க ?எந்த வருடம் கல்லூரி முடிச்சிங்க?
எப்போ வேலைக்கு சேர்ந்தீங்க ? என வரிசையாக நான் கேள்விகளை அடுக்க அவன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே …நீங்க நிறைய நேர்க்காணல் செய்வீங்க போல அலுவலகத்தில்? என கேட்டது அப்போது எனக்கு அருமையான நகைச் சுவையாய் தோன்றியது …என்னை கேள்வி கேட்பதில் இருந்து தடுமாற செய்ய ..அவன் செய்யும் விடயமாக தோன்றாமல் போயிருந்தது…..
அவனே சொன்னான் …அம்மா,அப்பா இல்லை ,மாமா வீட்ல தான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் வளர்ந்தேன் …அவரும் தவறி போனார் …
…நல்ல மார்க் இருந்ததால் சென்னையில் படிக்க இடம் கிடைத்தது …இங்கே ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே படித்து முடித்து வேலைக்கும் போய் விட்டேன் …என்று சொன்னவனின் எந்த ஒரு வார்த்தையிலும் பொய்யின் வாசனையை துளி கூட என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை …
அப்படி ஒரு முட்டாளா நன் ? இல்லை யார் என தெரியாத யாரையோ, நம்பி பேச விட்டு சென்ற அம்மா முட்டாளா? இல்லை என்னுடைய வாழ்க்கை எனும் புத்தகத்தில் நான் கிழிக்க வேண்டிய பக்கங்களை எழுதியே தீர வேண்டும் என எண்ணி , என் முன்னாள் வந்து அமர்ந்திருந்த அவன் புத்திசாலியா? வேதனையில் கண்ணீரைத் தவிர வேறு பதிலுமில்லை , எவரும் துணையுமில்லை இப்போது ….
அவன் என்னிடம் பேசிவிட்டு சென்ற இரண்டு நாட்கள் அம்மாவும் நானும் ,அமைதியாகவே இருந்தோம் !!!!ஊர் பேர் தெரியாத ஆளுக்கு எப்படி திருமணம் செய்து தருவது என அம்மாவும் …உறவுகளே இல்லாமல் அவனை மட்டும் நம்பி எப்படி செல்வது என நானும் குழம்பி போயிருந்தோம் …
அன்று காலை நான் அலுவலகம் கிளம்பும் முன் அம்மா நான் பாத்துக்கிறேன் !!!நான் அவங்க அலுவலகத்தில விசாரிக்கிறேன் அவன் எப்படின்னு …. நீ கவலைய விடு …என அவளுக்கு கூறி விட்டு ,பேருந்திற்கு நடக்கும் வழியில்
என்னுடன் படித்த ராமை தொலைபேசியில் அழைத்தேன் ….
ஹே …ராம் எப்படி இருக்க ? என ஐந்து நிமிடம் பொதுவாக பேசி வைத்தேன்…
இல்லப்பா …வீட்ல மாப்பிளை பார்த்திருக்காங்க ,அவர் உங்க பிரிவுலதான் வேலை பார்க்கிறதா சொல்றார் …..பேர் ராஜேஷ் ….எல்லாவற்றையும் கேட்டு கொண்டு அவன் நான் விசாரிச்சு சொல்றேன் என இணைப்பை துண்டித்து விட்டான் ….
அடுத்த நாள் காலை ராஜேஷ் கூப்பிட்டான் …என் கை பேசியில் கூப்பிட்ட அவன் வீட்டிற்கு கூப்பிட்டதாகவும் …அம்மா என் எண்ணை கொடுத்ததாகவும் கூறினான் …பேசிய பேச்சு அரை மணியயை தாண்டியது …
எனக்கும் பரிதாபம் வர தொடங்கியது …யாருமே இல்லை நாம் மனைவியாக சென்றால் நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என (விபரீதமாக )
முடிவு செய்தேன் …….அப்பாவை வாழ்க்கையில் அதிகம் பார்க்காததால் யாராவது பெற்றோர் இல்லை என சொன்னால் … என்னால் தாங்கி கொள்ள முடியாததாயிருந்தது ………
இரண்டு வாரம் இப்படியே போயிருந்தது …அதற்குள் அம்மா எங்கள் உறவினர்களோடு சென்று அவன் தங்கியிருந்த வீட்டை பார்த்து விட்டு வந்தார்கள்….அம்மாவும் அவனின் பேச்சில் மயங்கினாள் …இருவது பவுன் நகை செய்து வைத்திருப்பதாகவும் ..எல்லாமே எனக்கு என்றும் அம்மாவிடம் கூறினான் …எல்லோரின் மனமும் ஆமாம் எனக் கூறிற்று …
நான் அம்மாவிடம் நாளைக்கு சொல்லிக்கலாம் எனக் கூறி விட்டு ராமிற்கு அழைத்தேன் ..அவனுடைய தோலை பேசி, கூடுமானவரை அவனை அழைத்து விட்டு என்னிடம் தற்போது நீங்கள் அழைக்கும் நபரால் பதில் கூற இயலவில்லை என என்னிடம் மன்னிப்பு கேட்டது…..நானும் ஒருவித குழப்பத்துடன் கைபேசியை அணைத்து பையில் போட்டுக் கொண்டு பேருந்தை பிடிக்க ஓடினேன்…
சிலு சிலுவென குளிர் காற்று தலைக்கு மேலே படுவதும்….வயிற்றில் அம்மா கொடுத்த தக்காளி சாதமும் …..தூக்கத்தை வெற்றிலை பாக்கு வைத்து என்ன ருகில் அழைத்து வந்து விட்டு சென்றது …தூங்கி ஒரு நிமிடம் விழுந்து ஐயோ அலுவலகம்… என சுதாரித்து உட்காருவதற்குள் என் அறையின் அனைத்து கண்களும் என்னையே பார்ப்பதாய் எண்ணிக் கொண்டேன்….கைபேசி என் பையிலிருந்து வெளியே வர முடியாமல் முனகியது ….ராஜேஷ் தான் கூப்பிட்டான் …என்ன பண்றீங்க என வழக்கம் போல கேட்க …அவன் கூறும் கதைகளுக்குள் நான் சிக்கிக் கொண்டு எழ முடியாமல் அல்லது முயலாமல் இருந்தேன்….
மலை கூப்பிடுகிறேன் என அவனுக்கு விடை கூறி விட்டு ,ராமிடம் இருந்து ஏதும் அழைப்பு இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அம்மாவை கூப்பிட்டேன்….அம்மா சரினு சொல்லுடி என்றாள் ..தன் மகள் தலையில் இடி விழப் போகிறது என அறியாமல் அப்பாவியாக !!!
நான் சரி என சொல்லி அடுத்த,அடுத்த நாட்கள் நன்றாகவே நடந்தது …..ஒரு வாரம் கழித்து வீட்டிற்க்கு ராம் கூப்பிட்டான் ….என் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டேன் உன்னிடம் பேச முயற்சி செய்தேன் போன வரம் … நீ எடுக்கவே இல்லை எனக் கூறினான் …அப்போதுதான் உணர்ந்தேன் தெரியாத எண் என நான் எடுக்காமல் விட்ட அழைப்புகள் அவனுடையது என ….விதி வலியது ……அடுத்த நாள் அவனை சந்திப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தேன்…
அன்று மாலையே எளிமையாக தட்டை மாற்றி நிச்சயம் செய்து ..திருமண நாளும் குறிக்க பட்டது…அடுத்த நாள் பட்டு புடவை எடுக்கலாம்,… அடுத்த ஒரு வாரம் எனக்கு பம்பாயில் பயிற்சி முகாம் என ராஜேஷ் சொல்லி இருந்தான்…
இந்த அலைச்சலில் ராமை பார்ப்பதையே நான் மறந்திருந்தேன் ..இரவு தூங்கும் முன் தொலை பேசி அழைப்பை பார்த்து என்னையே நொந்துக்
கொண்டேன்….
காலை 7 மணிக்கே வீட்டின் முன்பு இரு சக்கர வாகனம் வந்தது ..ராம் தான்
வந்திருந்தான் …எங்க போன? வர சொல்லிட்டு ….. என காட்டமாய் கேட்டவன் …அம்மாவை பார்த்ததும் அமைதியாய் பேசினான் ….
விசாரிச்சேன் ராஜேஷ் இங்க மாற்றலாகி வந்து நான்கு மதம் தான் ஆகுது …
அவன் யார் கூடவும் பெருசா பேசுறது இல்ல …தனியாகவே லஞ்ச் போய்டுவானு எல்லாம் சொல்றனுங்க..இதுக்கு முன்னாடி ‘பூனே ‘ ல இருந்தானாம் …எதுக்கும் அங்க கேட்கலாமா ? எனக் கேட்டான் …அதற்குள் அம்மா …அந்த பிள்ளை தங்கம் பா …நாங்க நிச்சயம் பண்ணிட்டோம் …அடுத்த மாசம் கல்யாணம் ..இந்தக் கேட்டதும் ராமிற்கு பதில் ஏதுமில்லை…சரி எனக் கூறி விட்டு சென்று விட்டான் .
திருமணம் முடிந்தது….இரண்டு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு இருவரும்
மலை பிரதேசமெல்லாம் சென்று வந்தாகி விட்டது ….ராஜேஷ் வீட்டிற்கு வந்த எனக்கு முதல் இடி அவன் இன்னும் நண்பர்களை காலி செய்யாமல் அதே வீட்டில் வைத்திருந்தது ….உனக்கு கஷ்டமா இருந்த கொஞ்ச நாள் உங்க வீட்ல இரு, நான் வீடு பார்த்ததும் போய்டலாம்….. என அவன் கூறியதைக் கேட்டு அவனோடு என் வீட்டிற்க்கு வந்தேன் ….ஒரு மதம் கழித்து என் வேலை பம்பாய்க்கு மாற்றலாக போகிறது என்றான்…ஒன்றுமே புரியாமல் விழித்த என்னிடம்…நீயும் மாற்றல் கேட்டு என்னுடனே வந்திடு என்றான் …
அலுவலகத்தில் இதை பற்றி நான் பேசியவுடன் மூன்று மாதத்தில் மாற்றலாகி விடலாம் என மேலதிகாரி எனக்கு சாதகமான பதிலைக் கொடுத்தார்….இதனை ராஜேஷ் எதிர் பார்க்கவில்லை போலும் அவன் இதனைக் கேட்டு நடந்துக்க கொண்ட விதமே சொல்லிற்று…இந்த இரண்டு மாதத்தில் என் பணத்தில் தொண்ணூறு சதவிகிதத்தை அவன் செலவு செய்து விட்டான் !!!அவன் பணம் முழுவது சேமிப்பு எனக் கூறி!!!
மும்பைக்கு அவன் போனதிலிருந்து பேசுவதில்லை வாரத்திற்கு 7 முறை நானே கூப்பிட்டு அலுத்து போய் ,நாலு முறை,இரண்டு என எண்ணிக்கையை குறைத்துக் கொண்டேன்… புது வேலை கடினம் என அவன் சொல்லியதற்காக….மூன்று மதத்திற்கு பிறகு இன்றைக்கு தான் மும்பை வந்தேன் என்னை வீட்டில் இறக்கி விட்டு உணவு வாங்க சென்றிருந்தான்….
அந்த இடைவெளியில் தான் அவன் கட்டிலின் அடியில் என்னை எடு என மினுக்கி கொண்டிருந்த மடிக் கணிப்பொறியை எடுத்து திறந்தேன்….பிறகுதான் உங்கள் எல்லோருக்கும் தெரியும் கிணறு வெட்ட பூதம் வந்தக் கதை……
என்னையே நானே சமாளித்துக் கொண்டு எழுந்தேன் …வீட்டை சுற்றி பார்த்தேன் …ஒரு குடும்பம் நடத்த தேவையான எதுவும் அங்கே வாங்கி வைக்கப்படவில்லை…வெளியில் யாரோ அழைப்பு மணியை அழுத்த அவசரமாய் கணிப் பொறியை மூடி அதன் இடத்திலேயே வைத்து விட்டு,கதவைத் திறந்தேன் தோசை பொட்டலத்துடன் என் முன்னாள் நின்றுக் கொண்டிருந்தான்…
கடிகார முள்ளின் சத்தமும்…அவன் தோசையை இங்கிதமே இல்லாமல் சவுக்கு… சவுக்கு என சாப்பிடுவதும் மட்டுமே அறையில் கேட்டது….
என்னால் இரண்டு வாய் கூட சாப்பிட முடியவில்லை ….
அவன்தான் ஆரம்பித்தான்….எப்போ சேர போற ?
எங்கே? என்றேன் …
புது அலுவலகத்தில் ….என்றான் .
இல்லை நான் வேலைய விட்டுட்டேன் என்று பொய் சொல்லி அவன் முகத்தை பார்த்தேன்….
அவன் முகத்தில் உள்ள அதனை ரத்த நாளங்களும் வேகமாய் இரத்தத்தை பாய்ச்சுவது போல முகம் சிவந்து கோபமாய் என்னை பார்த்தான்…
ஏன் ? என்றான்….
பிடிக்கலை ….என்றேன் சத்தமாக …
அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து போய் விட்டான்…
மூன்று மதத்திற்கு பிறகு பார்த்த கணவனிடம் எதிர்பார்க்காததெல்லாம் கிடைத்த துக்கத்தில் எனது பேச்சே எனக்கு மறந்து போனது போலாகி விட்டது….இரவு வீட்டில் பின் வாசலைத் திறந்து நின்று கொண்டிருந்தான் …
மெதுவாய் பேச ஆரம்பித்தேன்…
ஏன் பேசலை இதனை மாதத்தில் சரியாவே ?இது நான் …
நேரம் இல்லை ….அவன்
பிரௌஸ் பண்ணலாம் நேரம் இருந்துச்சி? என்ற என்னை முறைத்து பார்த்தான்….
ஏன் திருமண இணையத்தளத்தில் மீண்டும் பதிவு என போட்டிருக்கு …தவறுதலாதனே என்றேன் கடைசியாய் ஒரு நம்பிக்கையயை வரவழைத்துக் கொண்டு….
இல்லை?….என்றான் வெறுமையாக….
இல்லைனா? என்றேன்….
இல்லைனா இல்லை….
ஏன் என்றேன்?
உன்னை பிடிக்கலை …..சொல்லி சென்று விட்டான் …
கடலின் அத்தனை அலைகளும் கடல் மணலை என் காலடியிலிருந்து பிடுங்கி கொண்டு ..நன்றாய் விழு என என என்னைக் கீழே தள்ளி சிரித்துக் கொண்டே திரும்ப போவது போல் உணர்ந்தேன் ….
ஒருவன் என்னையும்…என் குடும்பத்தையும் ஏமாற்றி விட்டான் …..
நான் ஏமாந்து விட்டேன்….
என் வாழ்க்கையில் வந்த சூரியன் அஸ்தமனமாகி விட்டது ….
இது என்ன? என்ன ?….உலகமே என்னை சுற்றி சுழல்வது போல இருந்தது …..
என்னையே சுருட்டி கொண்டு அனைத்து குப்பைகளும் இரைந்து கிடக்கும் நடு அறையின் ஓரமாய் படுத்து உறங்கி போனேன்…..
காலையில் கண் விழித்த போது யாருமே இல்லை வீட்டில்….அழுகை முட்டிக் கொண்டு வந்தது …
நாள் முழுவதும் அவன் வரவில்லை ….அடுத்த நாளும் வரவில்லை …
எதோ ஒரு சகதியில் விழுந்து விட்டோம் என புரிந்தவளாய் ஊருக்கு கிளம்பினேன்….எங்கே சென்று யாரிடம் அவனை பற்றி கேட்பது எனப் புரியாதவளாய்….
உயிர் மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த என்னைக் கண்டு அம்மா அரண்டு போய் விட்டாள் ….எல்லாம் முடிந்து விட்டது அவன் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டான் …மின்னஞ்சல்களுக்கு பதில் இல்லை….
ஒரு வர காலம் கழிந்தது ….வாசலில் ராமின் வண்டி வந்து நின்றது …உயிரோட்டம் இல்லாத என்னை பார்த்து அவன் புரிந்து கொண்டுவிட்டான் ,
அவன் புனே நண்பன் மூலம் சேகரித்த உண்மை எல்லாம் எனக்கு தெரிந்து விட்டது என…நான் எத்தனையாவது பெண் என கேட்டுக் கொள்ள விரும்பவில்லை அவனிடம் …..
அவன் எங்க இருக்கானு எனக்கு தெரியும் என்றான்?
எழவே பிடிக்காத எனக்கு… புது தெம்பு வந்தது …விருட்டென்று எழுந்தேன் …எங்க ???என்றேன் ..
அவன் மும்பைக்கு ப்ராஜெக்ட் வேலையா போயிருக்கான் ….முடிஞ்சதும் இங்க வந்திட்டான் ….மும்பைக்கே மாற்றம் வேணும்னு கேட்டிருக்கான் …. மேலதிகாரி முடியாதுனு சொல்லிட்டார் .
சரி கிளம்பு என்றேன்….
எங்கே என்றான்…
போலீஸ் ஸ்டேஷனுக்கு …
பதிலே சொல்லாமல் அம்மாவும்,அவனும் என்னுடன் வந்தார்கள் ….
புகார் கொடுத்து ஒரு மணி நேரத்தில் என் முன் அவனை போலீசார் கொண்டு வந்து நிறுத்தினர் …
ஆறு மதத்திற்கு முன்பு ‘புனே’ யில் இவன் மேல் ஒரு வழக்கு இருக்கும்மா …
படிச்சவங்களா இருக்கீங்க இப்படி ஏமாறலாமா ?என்றார் இன்ஸ்பெக்டர் ….
அவன் திமிராய் பேசினான்…மாப்பிளை கிடைக்காமத்தானே கட்டிக்கிட்டா ?
இப்போ வந்து ஐயோ …அம்மானு சொல்ற….. என்றான்…
என் இரு கண் போதவில்லை அந்த மிருகத்தை பார்க்க என் மூன்றாவது கண் சுட்டெரிப்பது பொறுக்காமல் தலையை வேறு பக்கம் திருப்பி கொண்டது அந்த மிருகம்….
என்னென்னமா ஏமாத்தினான்? என்றார் அதிகாரி…
நகை,பணம் என சொல்ல வந்த அம்மாவை நிறுத்தினேன் …
அவன் முகத்தில் தூக்கி எறிந்தேன் அவன் அர்த்தமே இல்லாமல் கட்டிய தாலியை …திரும்பி பார்க்காமல் நடந்தேன் …. என் முதுகை அந்த மிருகத்தின்
பார்வை சுட்டெரித்தது…
அதிகாரி அவனை அடித்து நொறுக்கி விட்டார் ,அவன் அலுவலகத்தில் சொல்லி வேலை போய் விட்டது என்பதெல்லாம் செவி வழியாக கேட்டது….
இப்போது என் வாழ்கை புத்தகத்தின் அந்த கருப்பு அத்தியாயத்தை கிழித்து விட்டேன்….உறங்க போகிறேன்….நாளை காலை எனக்கானது…. எனக்கு மட்டுமே …..அதில் யாருக்கும் இடமில்லை… என் நிழலை தவிர!!!
( இந்தக் கதையின் கரு எனக்கு செவி வழி வந்த செய்தி…அதனுடன் என் கற்பனையும் சேர்த்து எழுதி உள்ளேன் ! இதனை எழுதுவது மூலம் பல பேர் விழிப்புணர்வடைய வேண்டும் என்பதே என் நோக்கம் …….)