பார்த்துவிடு கொஞ்சம் – 17

முரளி தன் வேலையைத் தொடங்கியிருந்தான். இன்னும் நான்கு நாட்களே இருந்தது. அதற்குள் தன்யாவை இங்கிருந்து கிளப்ப வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தே இத்தனை நாட்களை கடத்தியிருந்தான்.

செய்யவேண்டும்.. செவ்வனே செய்யவேண்டும்.. எல்லாம் செய்து முடிக்கவேண்டும். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது.. யாரும் எதையும் கண்டுவிட கூடாது.. முக்கியமாய் அவனின் அப்பா அம்மா..

அவர்களுக்கு தன்யா பார்த்திபன் விஷயம் எதுவுமே தெரியக்கூடாது என்று நினைத்திருக்க, பார்த்திபன் இரண்டு நாட்களுக்கு முன்னம் தான் அவனின் அப்பாவிற்கு அழைத்து பேசியிருந்தான்.

அது முரளிக்கு தெரியாது.

முரளிக்கு தெரியக்கூடாது எனும்வகையில் பார்த்திபன் பேசியிருந்தான். பேச்சு இவனாக ஆரம்பிக்கவில்லை. சுந்தரம் தான் மகனிடம் கல்யாண விசயம் பேசினார்.

“என்னடா ஊருக்கு வர்றப்போவே எதுவும் பொண்ணு பார்த்து பேசி முடிச்சிடலாமா??” என்று.

பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக இருந்தது பார்த்திபனுக்கு. அவன் நினைத்திருந்தது எல்லாம் ஒன்றுதான். இந்தியா செல்வதற்கு சரியாய் இரண்டு நாட்கள் முன்னம் அப்பா அம்மாவிடம் தன்னைப் பற்றியும் தன்யா பற்றையும் பற்றியும் பேசவேண்டும்,

‘இப்போதைக்கு வெளியில் சொல்லவேண்டாம்.. வீட்டினில் கூட.. நேரில் வந்து மிச்சத்தை பேசிக்கொள்வோம்..’ என்றிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான்.

இரண்டு நாட்கள் தானே என்று அப்போது தான் பெற்றவர்கள் இருவரும் கூட எதுவும் வாய் திறக்காது இருப்பர் என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் சுந்தரம் தானாகவே மகனிடம் திருமண பேச்சை ஆரம்பிக்க, இதற்கு பின் சொல்லாமல் விட்டால் அது நல்லதல்ல என்றே தோன்றியது அவனுக்கு.

“ப்பா நான் ஒரு விஷயம் சொல்வேன்… பட் இப்போதைக்கு நீங்க யார் கிட்டயும் சொல்லிக்க வேண்டாம்.. அம்மாக்கிட்ட கூட நேரம் பார்த்து சொல்றதுன்னா சொல்லுங்க.. இல்லைன்னா நான் வந்து பேசிக்கிறேன்..” என்றுதான் ஆரம்பித்தான்.

சுந்தரமும் மகன் எதுவோ சொல்கிறான் என்று “என்னடா…??” என்று கேட்க,

“நானே பேசணும்னு இருந்தேன் ப்பா.. பட் நீங்களே மேரேஜ் டாப்பிக் எடுக்கவும் அதுக்குமேல நான் ஏதாவது காரணம் சொன்னா பொய் சொன்னதுபோல ஆகிடும்..” என்று பீடிகை போட,

“டேய் பார்த்திபா என்ன சொல்ல வர்ற?? அதை சொல்லு..” என்றார் சுந்தரம்.

“இல்லப்பா… நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்…” என்று சொல்லி முடிக்கும் முன்னே,

“என்னடா இது?? இப்படி சொல்ற?? இதெல்லாம் நமக்கு ஒத்துவருமா டா.. யாரோ என்னவோ… இதெல்லாம் சரி படாது பார்த்திபா..” என்றார் சுந்தரம்.

அவருக்கு இன்னமும் இந்த காதல் திருமணங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இல்லை என்பதனை விட அதைப் பற்றிய சிந்தனைகள் எல்லாம் கிடையாது. அப்படியிருக்கையில் பார்த்திபன் இப்படி சொல்லவும் மனிதர் கொஞ்சம் பதற்றமாகிவிட்டார்.

“அப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ் நான் பேசுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..” என்று பார்த்திபன் வேகமாய் சொல்ல,

“நீ என்ன சொன்னாலும் இதுக்கு என்னால சம்மதிக்க முடியாது பார்த்திபா.. அம்மா, முரளி யாருமே சம்மதிக்க மாட்டாங்க.. ஏன் டா இப்படி பண்ற.. பொறுப்பு வந்திடுச்சுன்னு நினைச்சோமே..” என்றார் அவர் இன்னும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்காது..

“அப்பா…!!!!ப்ளீஸ்… நான் சொல்றதை கேட்கறீங்களா இல்லையா இப்போ..” என்று இப்பொது பார்த்திபன் அழுத்தம் திருத்தமாய் சொல்லவும்,

“நீ என்ன சொன்னாலும் என்னால, யாரோ ஒரு பொண்ண எல்லாம் இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது பார்த்திபா..” என்றார் அப்பாவாய்.

“தெரிஞ்ச பொண்ணு.. சொந்தக்கார பொண்ணுன்னா ஏத்துப்பீங்களாப்பா..??” என்றவனின் கேள்வி அவரை யோசிக்க வைத்தது.

அவர் மனதில் அப்போதும் தன்யா தோன்றவில்லை. லேகாவின் நியாபகம் வந்திட,

“டேய் டேய் என்ன சொல்ற நீ.. அந்த லேகா பொண்ணா??” என்றார்..

என்னவோ அவருக்கு அதுவும் அத்தனை ஏற்புடையதாய் இல்லை.. ஹேமாவின் தங்கை தான், இருந்தாலும் அவருக்கு அதை ஏற்க முடியவில்லை. ஆக, கேட்கையிலேயே ஒருவித கசப்பு தெரிந்தது. எங்கே இவன் ஆமாம் என்று சொன்னால், மூத்த மருமகளின் முகத்திற்காகவாது சம்மதிக்கும் சூழல் வந்திடுமோ என்ற எண்ணம் வேறு.

“ஐயோ அப்பா…” என்று சலித்தவன், “லேகா இல்லை தன்யா….” என்றான்.

“என்ன?? என்ன சொன்ன தன்யா வா??!!” என்றவரின் குரலில் அப்பாடி என்ற ஆசுவாசம் இருந்ததுவோ என்னவோ..

“ஆமா ப்பா… தன்யாவே தான்.. அவ யாரோ என்னவோ இல்லையே..” என்று பார்த்திபன் சொன்னாலும் கூட, ‘அவள் யாரோவாக இருந்தாலும் கூட, எனக்கு அவள் தான்…’ என்று சொல்லியது அவனின் குரல்.

“ம்ம்ம்.. ஆனாலும் டா.. இதெல்லாம்…”

“அப்பா.. இதுவரைக்கும் நான் எதுவும் கேட்டதில்லை.. இப்பவும் கூட நீங்க எல்லாரும் சொன்னதுனால தான் நான் இங்க வந்தேன்.. கொஞ்சம் நினைச்சு பாருங்கப்பா.. எனக்குன்னு என்ன இருக்கு.. அந்த வீட்ல கூட எனக்கு எந்த  உரிமையும் இல்லை.. ஏன்ப்பா என் வாழ்க்கை முழுக்க வரப்போற ஒருத்தி எனக்கு பிடிச்சவளா, முக்கியமா என்னை பிடிச்சவளா இருந்தா தப்பா??” என்று இவனும் பேச,

“ம்ம்ம்ம் நீ சொல்றது எல்லாம் சரிதான்டா.. ஆனா…” என்று இழுத்தார் சுந்தரம்..

“அப்பா.. நிதானமா யோசிங்க.. எனக்காக யோசிங்க.. பட் வீட்ல வேற யாருக்கும் தெரியவேண்டாம்.. முக்கியமா முரளிக்கு… தெரியவே வேண்டாம்…”

“டேய் ஏன் டா..”

“ரீசன் கேட்காதீங்கப்பா.. ஆனா தெரிய வேண்டாம்.. எனக்கு உங்களோட அம்மாவோட சம்மதம் போதும்.. நான் ஊருக்கு வந்ததும் மத்தது பேசிக்கலாம்.. ஆனாப்பா கண்டிப்பா முரளிக்குத் தெரிய கூடாது..” என்றுவிட்டே வைத்தான்.

அன்றைய தினத்தில் அடுத்த சில மணி நேரத்தில் ஈஸ்வரியும் அழைத்துவிட்டார் மகனுக்கு..

“பார்த்தி.. என்னடா அப்பா என்னென்னவோ சொல்றார்…” என்று..

“ம்மா.. இவ்வளோ டென்சன் ஆக இதுல எதுவுமேயில்லை…” என்றவன் “வீட்ல வேற யாருக்கும் தெரியாதே..” என்று கேட்க,

“தெரியாது… ஏன்டா முரளிக்கிட்ட சொல்லவேண்டாம் சொன்னியாம்.. ஏன் அப்படி சொன்ன??” என்று கேட்க,

“இப்பவும் சொல்றேன் ம்மா.. நான் ஊருக்கு வர்ற வரைக்கும் நீயும் அப்பாவும் கொஞ்சம் அமைதியா இருங்க.. எதுன்னாலும் நான் வந்தப்புறம், நான் சொன்னப்புறம் வீட்ல பேசிக்கலாம்…” என்று அம்மாவின் வாயையும் அடைத்தான்.

பேசிவிட்டான் தான் பார்த்திபன். ஆனாலும் மனது அடித்துக்கொண்டே இருந்தது. அப்பா சொல்லமாட்டார் என்று தெரியும். ஆனால் ஈஸ்வரி மனதில் வைத்துக்கொள்ளாமல் ஹேமாவிடம் சொல்லிவிட்டால்?? அனைத்தும் கெட்டுவிடும் தானே..

“ஆண்டவா இந்த அம்மா எதுவும் உளரிடாம இருக்கணும்…” என்று நொடிக்கொரு முறை வேண்டிக்கொண்டு இருந்தான்.

பார்த்திபன் இப்படியொரு டென்சனில் இருந்தாலும் தன்யா தான் மிக மிக சந்தோசமாய் இருந்தாள்.. அதுவும் பார்த்திபன் அவளின் அப்பாவிடம் பேசிய பிறகோ கேட்கவே வேண்டாம்.

“பார்த்தி செம பார்த்தி… கலக்கிட்ட போ…” என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள்..

“ஹலோ ஹலோ… உங்கப்பா நேர்ல பேசிப்போம்னு தான் சொல்லிருக்கார்..” என்று பார்த்திபன் சொல்ல,

“என்கிட்டவும் அதான் சொன்னார்.. பட் என்னவோ ஒண்ணு.. நோ சொல்லலை தானே.. அதுவே போதும்.. ஹப்பாடி நீ எப்போடா இந்தியா வருவன்னு இருக்கு பார்த்தி…” என்று சிலாகிக்க,

“ஓஹோ…. நீ எனக்கு வேணாம்.. உங்க வீட்ல சொல்றதை கேளு… நீ போ அப்படின்னு எல்லாம் சொன்ன.. இப்போ என்னவாம்…” என்று வேண்டுமென்றே சொல்லி பார்த்திபன் சீண்ட,

“அது அப்போ… இது இப்போ…” என்றாள் பதிலுக்கு இவளும்..

இருவருக்குமான அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இப்படியே கழிய, இதோ பார்த்திபன் இந்தியா வர இன்னும் நான்கு நாட்களே என்ற நிலையில், முரளி தன் திட்டத்தை ஆரம்பித்தான். காஞ்சனாவை காணவென்று முரளி இங்கே வீட்டிற்கே வந்துவிட, தன்யாவின் மனதினில் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.

பார்த்திபன் காஞ்சனாவிடமும் சொல்லியிருந்தான் “சித்தி… தன்யா அப்பா அம்மா வந்து பேசி ஒரு முடிவு சொல்ற வரைக்கும் முரளிக்கு, அண்ணிக்கு எல்லாம் தெரியவேணாம்…” என்று.

அவருக்கும் அதுவே சரியெனப்பட்டது. என்ன இருந்தாலும் தன்யா தன் ரத்தம் அல்லவா..

ஆனால் இப்போது முரளி வரவும், தன்யாவிற்கு கொஞ்சம் டென்சனாய் இருந்தது. அவளுக்கு நிச்சயம் தெரியும், இவன் என்னவோ திட்டத்தோடு தான் வந்திருக்கிறான் என்று..

“வாங்கண்ணா…” என்றுமட்டும் சொல்லி அமைதியாய் இருக்க,

“என்ன தன்யா எப்படி இருக்க???” என்று இயல்பு போல கேட்டாலும், அவனின் பார்வையில் இருக்கும் ஆராய்ச்சி அவளுக்குத் தெரியாதா என்ன??

“ம்ம் இருக்கேண்ணா…” என்றாள் எதுவும் காட்டிக்கொள்ளாது..

“என்ன முரளி இது.. பக்கத்து வீட்ல இருந்துட்டு எப்படி இருக்கன்னு கேட்டிட்டு இருக்க??” என்று காஞ்சனா சொல்ல,

“இல்ல சித்தி தன்யாவை பார்க்கவே முடியறதில்லை இல்லையா.. முன்ன எல்லாம் வீட்டுக்கு வருவா.. இப்போ என்னவோ வர்றதேயில்லை…” என்று என்னவோ தன்யா அவர்களின் வீட்டிற்குச் செல்லாதது இவனுக்கு மிகுந்த வருத்தம் போல பேச,

“எங்க… வேலை வேலைன்னு வீட்டுக்கு வந்தாலும் உக்காந்துக்கிறா..” என்றார் காஞ்சனா..

“ம்ம்… அப்புறம் சித்தி.. உங்களையும் தன்யாவையும் பார்க்கத்தான் வந்தேன்.. ஒரு விஷயம் உங்கக்கிட்ட கேட்கணும்..” என்றுசொல்லி முரளி இவர்கள் இருவரையும் பார்க்க,

‘கடவுளே….’ என்று இறைவனைத் துணைக்கு அழைத்தாள் தன்யா..

“என்ன முரளி??” என்று காஞ்சனா கேட்க,

“எங்க ஆபிஸ்ல எப்பவும் இயர்லி ஒன்ஸ், நல்லா பெர்பார்ம் பண்றவங்களுக்கு ட்ரிப் அலாட் பண்ணுவாங்க சித்தி.. இந்த வருஷம் எனக்கு அலாட் பண்ணிருக்காங்க…” என்றவன், தன்யாவை ஒரு பார்வை பார்த்தான்..

தன்யாவின் மனதோ சரியாய் கண்டுவிட்டது ‘ஓஹோ…… சார்… என்னை இடத்தை விட்டு நகத்த பாக்குறாரோ…’ என்று.

ஆனால் காஞ்சனாவோ “ஓ..!! ரொம்ப நல்லது முரளி.. வாய்ப்பு கிடைக்கிறப்போ போயிட்டு வந்திடனும்…” என,

“இல்ல சித்தி.. திஸ் டைம் என்னால போக முடியாது.. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் பார்த்தி லேகா எல்லாம் வர்றாங்க…” என்றவனின் கண்கள் இப்போது தன்யாவின் முக பாவனைகளை ஆராய,

அவளோ கொஞ்சம் திணறித்தான் போனாள். என்னவிதமான பாவனைக் காட்டவென்று.

‘நீயா நானா’ போட்டி தான் அங்கே அப்போது..

நீ சிறப்பாய் நடிக்கிறாயா, இல்லை நானா?? என்ற போட்டி..

நொடிப்பொழுதில் தடுமாறினாலும், பின் தன்யா திடுக்கிட்டு இவனைப் பார்ப்பது போல் காண, முரளியின் முகத்தினில் ஒரு திருப்தி தோன்ற,

“ஓ..!! ஆமால்ல… பார்த்தி.. லேகா வர்றபோ எப்படி போறது…. உன் பிரண்ட்ஸ் யாருக்காவது மாத்தி விடேன் முரளி..” என்றார் காஞ்சனா..

“கேட்டு பார்த்துட்டேன் சித்தி.. பட் யாரும் வில்லிங்கா இல்லை.. அப்பா அம்மானாலையும் போக முடியாது.. அதான் நீங்களும் தன்யாவும் போக முடியுமான்னு…” என்று மிக மிக தன்மையாக இழுத்தான்.

தன்யாவோ காஞ்சனா முகம் பார்க்க, காஞ்சனாவும் தன்யா முகம் தான் பார்த்தார். முரளியோ “எல்லாமே கம்பனி செலவு தான் சித்தி.. நம்ம எதுவுமே செலவு செய்ய வேண்டியது இல்லை.. சேப்டியாவும் இருக்கும்.. ஆஃபர் வேஸ்ட் செய்ய வேண்டாமேன்னு தான் கேட்கிறேன்..” என,

“நீ கேட்டது சந்தோசம் தான் முரளி.. பட்.. இப்ப எங்கனாலயும் எதுவும் எங்கயும் போக முடியாதே..” என்றார் காஞ்சனா..

“ஏன் ஏன் சித்தி??” என்றவனுக்கு கொஞ்சம் டென்சன் ஆனது.

“தன்யா அப்பா அம்மா எல்லாம் வர்றாங்க முரளி.. நெக்ஸ்ட் வீக் போல…” என்று காஞ்சனா சாதரணமாய் தான் சொன்னார், ஆனால் முரளிக்கோ அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்படியொரு அதிர்ச்சியை கொடுத்தது..

“என்னது??!!!” என்று அவனையும் மீறி அதிர்ந்து தான் கேட்டான்.

தன்யாவிற்கு முரளியின் இவ்வித முக பாவனைகளை பார்க்க சந்தோசமாய் இருந்தது. தன் பேச்சினாலும், செயலினாலும் எத்தனை பேரை காயப்படுத்தி இருப்பான். இப்போது என்னவென்றால் இந்த ஒரு சிறு விசயதிற்குக் கூட அவனின் முகத்தினில் தோன்றும் பதற்றம், அதிர்ச்சி எல்லாம் தன்யாவிற்கு பார்க்க பார்க்க சந்தோசமாய் இருந்தது.

மனதிற்குள்ளே அப்படியொரு சந்தோஷத்தில், ஆனாலும் முகத்தினில் எதையும் காட்டாது முரளியும் காஞ்சனாவும் பேசுவதை பார்த்துகொண்டு இருந்தாள்.

“அட இதுக்கேன் முரளி இவ்வளோ ஷாக்…” என்று காஞ்சனா கேட்க, சட்டென்று சுதாரித்தவன்,

“ஷாக்… ஷாக் எல்லாம் இல்லை சித்தி.. இத்தனை நாள் வராதவங்க திடீர்னு இப்போ வர்றாங்க இல்லையா.. சோ.. அதான்..” என்று வார்த்தைகளை தேடினான்..

“பின்ன வந்துதானே ஆகணும்.. இவளுக்கு வயசு கூடிட்டே போகுது இல்லையா.. அதான் வர்றாங்க…” என,

“அப்.. அப்போ.. தன்யாக்கு கல்யாணம் பேச போறீங்களா??” என்றான் ஆர்வம் தாங்காது.

பார்த்திபன் இங்கே வரும் வேளையில், தன்யாவிற்கு யாரோ ஒருவரோடு திருமணம் பேசி முடித்தால் எப்படி இருக்கும்?? தன் திட்டம் வெகு சுளுவாய் நடந்திடும் என்ற சந்தோசம் அவனுக்கு.

“கல்யாணம் பத்தி பேச போறோம் முரளி.. ஆனா எல்லாம் கூடி சரியா வரணுமே..” என்று காஞ்சனா சொல்ல,

முரளிக்கு அப்போது இருந்த மனநிலையில் வேறெதையும் சிந்திக்காது, “ஓ.. நல்லது சித்தி.. எல்லாமே நல்லதா நடக்கும்.. நான் கூட, பார்த்தி, லேகா கல்யாணம் எல்லாம் பேசணும்னு இருக்கேன் வீட்ல.. எல்லாருக்குமே ஒரேதா முடிஞ்சா இன்னும் சந்தோசமா இருக்கும் இல்லையா..” என்று முரளி சொல்ல,

காஞ்சனாவோ ‘என்னதிது…’ என்று தன்யாவை பார்த்தார்.

அவளோ ‘எதுவும் சொல்லாதீங்க…’ என்பதுபோல் மறுப்பாய் தலையை ஆட்டினாள்.

காஞ்சனா என்ன நினைத்தாரோ, முரளியிடம் எதுவும் கேட்காமல் “ஆமா முரளி எல்லாம் நல்லதா நடந்தா சந்தோசம் தான்..” என்று மட்டும் பேச்சினை முடிக்க, முரளிக்கு மனதில் அப்படியொரு சந்தோசம்.

பார்த்திபனுக்கு தான் வருகையில் தன்யா இங்கே இல்லை என்ற அதிர்ச்சியை விட, அவளுக்கு திருமணம் பேசுகிறார்கள் என்ற அதிர்ச்சி பெரியதாய் இருக்கும் என்றெண்ணினான்.

‘இந்த ஹேமா மட்டும், நம்ம சொல்றபடி பேசி லேகாவை கன்வின்ஸ் பண்ணிட்டா போதும்.. எல்லாமே நம்ம நினைச்சது போல முடிஞ்சிடும்…’ என்று முரளியின் மனது கணக்கிட, அடுத்து வந்த நான்கு நாட்களும் நொடியில் நகர்ந்தது போல் இருந்தது.  

பார்த்திபனோ, தன்யாவிற்கு கொடுக்கவென பரிசுகள் வாங்கி குவித்திருந்தான். எல்லாம் லேகாவின் உதவியோடு..

“ப்பா,… இவ்வளோ லவ்ஸா உனக்கு??” என்று லேகா வியக்க,

“தோடா… இவ்வளோ வாங்கினா ஜாஸ்தி லவ், எதுவுமே வாங்கலைன்னா லவ்வே இல்லைன்னு அர்த்தமா???!!” என்று பார்த்திபன் சிரிக்க,

“அடடா பார்த்தி.. ஊருக்கு போறோம்னதும் தான் உன் முகத்துல சிரிப்பே வருது போ…” என்று அதற்கும் கிண்டலடித்தாள் லேகா..

“ம்ம் ஊருக்கு போனா சிரிக்க முடியுமா தெரியலை.. முரளின்னு ஒருத்தன் இருக்கானே..”

“ஷ்..!!! பார்த்தி.. லீவ் இட்.. பார்த்துக்கலாம்.. முரளி மாமாக்கிட்ட பேசுவோம்.. ரொம்ப ஓவரா போனா, நம்ம நம்மளோட முடிவு படி போவோம் அவ்வளோதான்.. என்ன அக்கா தான் பாவம்.. ரொம்ப பீல் பண்ணுவா.. பட்.. பார்த்துக்கலாம் விடு..” என்று லேகா ஆறுதல் சொல்ல, இதோ ஊருக்கு கிளம்பும் நாளும் வாங்கிற்று.

அக்கியோ நேரிலேயே வந்திருந்தான். அவன் தான் இருவரையும் விமான நிலையம் அழைத்து வந்தது வேறு. இன்னமும் கூட பார்த்திபன், அக்கியோ இருவருக்கும் சுமுகமான பேச்சுக்கள் இல்லை. பார்த்ததுமே ஒரு ‘ஹாய்…’ அவ்வளோதான்.

லேகாவும் ஒன்றும் இருவரையும் ஒட்டவைக்க முயலவில்லை..  அவரவர் விருப்பம் என்று விட்டுவிட்டாள்.

விமான நிலையம் வந்தும் அரைமணி நேரம் ஆகிற்று, இன்னமும் இந்த அக்கியோவும் லேகாவும் பேசி தீர்க்கவில்லை. பார்த்திபனோ கடுப்பில் காத்திருந்தான்.

‘என்னத்த பேசுதுங்க கொயமுயன்னு.. இருபது நாள்ல திரும்ப வரப்போறோம்.. இதுக்கு இவ்வளோ பில்டப்பா…’ என்றுதான் பார்த்துகொண்டு இருந்தான்.

என்னவோ அக்கியோ மீது முழுதாய் ஒரு அபிப்ராயம் பார்த்திபனுக்கு ஏற்படவேயில்லை. ஒருவேளை வேற்று நாட்டவன் என்பதானால இல்லை, லேகாவிற்கு கட்டாயம் செய்து ட்ரக் கொடுத்தான் என்பதாலா தெரியலவில்லை. முகத்தை எரிச்சலுடன் வைத்து அமர்ந்திருக்க,

லேகா திரும்பிப் பார்த்தவள், “டூ மினிட்ஸ்…” என்று சைகை காட்ட,

இவனோ “லேட்டாகுது…” என்றான் பல்லைக் கடித்து..

ஒருவழியாய் லேகா, அக்கியோவிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வர, அனைத்து பார்மாலிட்டீஸ் முடித்து இருவரும் விமானம் ஏறினர்.