அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ இருக்கிறாய், பாதாளம் விழுங்குதடி பதுமையே, பார்வையில் புதிர் போட்டாய், பழங்கதை விடை என்றாய்…
முழுதும் தொலைத்தவன் புதிதாய் பிறக்கிறேன், இன்னுமோர் வரம் பெற்றேன்… மீண்டும் புதிதாய் காதல் கொள்ள…
“சிஸ்டர் பல்ஸ் பாருங்க”
“இப்பவும் நார்மலா தான் இருக்கு டாக்டர்”
“பிபி செக் பண்ணீங்களா”
“எல்லாமே நார்மல் தான் டாக்டர்”
“தென் வாட் இஸ் தி ப்ராப்ளம்…. இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்… ”
டாக்டரே பொறுமையை இழந்துட்டார் போல, ஒரு உயிரை காப்பாத்தீரணும் அப்படீங்கிற அவருடைய கடமை உணர்ச்சியுடைய வெளிப்பாடு இது, இப்படி சொல்றதை விட கண்ணுமுன்னாடி எல்லாம் சரியா இருந்து பிழைக்காத உயிரா என்னைப்பாக்குறார் அந்த டாக்டர், அப்படி சொல்லலாமா…
எப்படி சொன்னாலும் உண்மை என்னவோ நான் இன்னும் கண் திறக்கல, இந்த உலகத்தோட இயக்கத்துக்கு மாறாக இந்த மாறன் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமேன்னு படுத்திருக்கிற காலை நேரத்து தூக்கமா தான் இந்த நேரத்தை பாக்குறேன்….
எப்ப தான் மாறா கண்ணை திறக்க போற… மூளை கேக்குது… அதுக்கு மனசு சொல்லுது…
நான் தேடுற கண்கள்ல நான் தெரியனும், நான் கண்கள் திறக்கும் போது அவ முகம் மலரணும்… நான் அடைஞ்சி கிடக்க அவ நெஞ்சாங்கூடு வேணும், என் தலை கோத அவ விரல் வேணும்,…. இன்னும் நெறைய இருக்கு… மொத்தத்துல என் சக்தி இருக்கணும்…
அவளுக்கு எப்படி தெரியும் யார் சொல்லுவாங்க, எப்போ இங்க வருவா எனக்கு தெரியாது…. அவ வருவா அது மட்டும் தெரியும்….
ஹிப்னாட்டிசமா, இல்ல கொறளிவித்தைய்யா… அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் இல்லை, உண்மையான அன்புக்கும் காதலுக்கும் உள்ள பவர் அது… வேலை தேடிப்போன பையன் சாப்பிட்டானோ இல்லையோன்னு அம்மா நெனக்கும் போது ஊட்டிவிடும்மான்னு பையன் வந்து நிப்பானே அந்த மாதிரியான ஒரு அன்பு…
”ஒரு புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்படுகையில், வாழ்க்கையின் பக்கங்கள் அர்த்தமுள்ளதாக ஆகும், அது உன்னையும் சில நேரங்களில் புரட்டிப்போடும்” இப்படி எதாவது ஒரு அறிஞர் சொல்லியிருக்காரான்னு தெரியலை ஆனா நான் இதைத் தான் சொல்றேன்…
அந்த டைரியோடு பக்கங்களைக் கடக்கும் போது, என் வாழ்க்கையோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கேன்னு புரிஞ்சுது. நாம் வேணும்னு நெனக்கிற எல்லாமே வாழ்க்கையா அமையுறது இல்லையே….
இரண்டு பக்கத்திலேயே நான்னு யோசிச்சுகிட்டு இருந்தவன் நாங்கன்னு யோசிக்க ஆரம்பிச்சேன், இளமாறன் மட்டுமில்ல எழில் மாறனும் இருந்திருக்கான், என்னோட பிறந்திருக்கான், நாங்க ஒண்ணா வளர்ந்திருக்கோம், இப்ப அவன் எங்க, அது தான் என்னோட தேடலா இருந்துச்சு, அதோட சக்திய பத்தின என்னோட அபிப்ராயமும் மாற ஆரம்பிச்சுது…. மாறன்னு பேர் வச்சது ஒரு குத்தமாய்யா… மாறாதது எதுவுமே இல்லையா…
அடுத்தடுத்த பக்கங்களில நான் அதைத்தான் தேடிகிட்டு இருந்தேன்…
அந்த பக்கங்கள் எல்லாமே துளி துளியா கண்ணீர் பட்டு அலைஞ்சிருந்துது… அவளோட அந்த கண்ணீர் இப்ப நான் தொடும் போது ஈரமாவே இருக்கு…
இளா இளான்னு அவ கூப்புட சத்தம் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு…அழுகாத சக்தி இங்க பாரு நான் உன் இளா உன் முன்னாடி இருக்கேன் பாரு… நான் அழுகலை இங்க பாருன்னு அவகிட்ட சொல்லணும்னு துடிக்கிறேன்….
கையால அந்த இறுக்கத்தை தளர்த்தலாம்னு கையை அசைக்க பாக்குறேன்… சுரீர்னு வலி,… நரம்பெலாம் ஊசி மாதிரி குத்துது… கையெல்லாம் வெயிட்டா இருக்குது… அசைக்கவே முடியல…
இளா இளா இளா இளா விடாம என் காதுல கேட்டுகிட்டே இருக்கு… என்னோட வலிகளையெல்லாம் விட அதிகமான அழுத்தம் அந்த குரல்ல… நான் கண்ணை முழிச்சே ஆகணும் டைரியில விழுந்த கண்ணீர் துளிகள் என் மேலயே விழுகுற மாதிரி இருந்துச்சு…
அப்ப தான் துடைக்க முடியல் இப்ப நான் அதை தடுத்தே ஆகணும்… போதும் இளா எழுந்திரி எழுந்திரி… உள்ள இருந்து அந்த குரல் என்னைய விடவே இல்லை….
நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன் சக்தி… உன் இளா வந்துட்டேன்… சக்த்த்த்த்த்தீ………….
கொஞ்சம் கொஞ்சமா என்னோட வலிகளை தாண்டி என் கை மேல வந்து என் முகத்தில இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்க கழட்டுனேன்… கையெல்லாம் ஒரே ஈரம்…
காலெல்லாம் சுறு சுறுன்னு கொஞ்சம் கொஞ்சமா அசைக்குறேன்… என்னால முடியுது… கண்ணை மட்டும் திறக்க முடியல… நாக்குல வரட்சி இன்னும் அதிகமாகுது…
உள்ள ஏதோ பண்ணுது… அடிவயித்துல இருந்து என்னமோ ஒரு வலி… கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி நெஞ்சு வரைக்கும் வந்து்ச்சு…
இன்னும் கொஞ்சம் தான் அவ்வளவு தான் முழிச்சுடு முழிச்சிடு இளா … ஓயாத அலறல்… என் கண்ணுல தண்ணியா வழிய ஆரம்பிச்சுது…
நெஞ்சுல வந்த வலி ஒரு பெரிய விக்கல் மாதிரி தொண்டை வழியா இழுக்க ஆரம்பிச்சுது…. என் உடம்பே மேல போயி அந்த மூச்சை வாங்குனுச்சு…
அந்த மூச்சோட இளா….. இளாங்குற அந்த சத்தமும் எனக்குள்ள போயிடுச்சு….