குருபூர்ணிமா – 17
“ஆமாண்ணா.. ஆனா… இட்டுனு போறேன் சொன்னதுக்கு அந்தக்கா மாட்டேன்கீதுண்ணா…” என, “ஓ.. சரி விடு பார்த்துக்கலாம்.. பணம் கொடுத்துட்டியா..” என்று கேட்க,
“ஆ.. அதுவும் வாங்கலை…” என்று பாலகுரு கொடுத்தனுப்பிய பணத்தினை, பாண்டியா திரும்ப கொடுக்க, ‘என்னடா இது…’ என்றானது பாலாவிற்கு..
“சரி கூடவா.. நேர்ல போலாம்…” என்று சொல்லிக்கொண்டே பாலகுரு காரை நோக்கி செல்ல, பாண்டியாவோ தயங்கி நிற்க,
“என்னடா வா…” என்று பாலகுரு திரும்ப சொல்லவும், பாண்டியாவோ “இல்லண்ணா அது கலீஜான ஏரியா.. அங்கல்லாம்…” என்று இழுக்கையிலேயே, பாலகுரு பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டு பாண்டியாவும் காரில் ஏறினான்..
கொஞ்ச நேரம் வரைக்கும் பாண்டியா அமைதியாகவே வர, அவனைப் பார்த்தவனோ “இன்னாடா… வாய்ல எதுன்னா வச்சின்னு வர்றியா..” என்றுகேட்க,
“இல்லண்ணா… அது… அக்கா.. ச்சி.. அண்ணி…” என்று திணற, பாலகுருவிற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து சிரிப்பு வந்துவிட்டது..
வழக்கம் போல் என்னைப் பற்றி கேட்க அழைத்திருப்பாள், இவன் அக்கா என்றதும் அவள் திட்டியிருப்பாள் என்று அவனால் புரிந்துகொள்ள முடியாதா என்ன??
சிரித்துக்கொண்டே காரை ஒட்டியவனுக்கு, ‘லாஸ்ட்ல என்னை தப்புன்னு சொல்லிட்டு, சொல்லாம போனல்ல…’ என்று கோபம் தலைதூக்க, கார் வேகமெடுத்தது..
அங்கே பூர்ணிமா வீட்டிலோ, சந்தியா “எப்போ பூர்ணி கிளம்புற???” என்று கேட்க,
“ஏன்மா??” என்றாள் கொஞ்சம் சத்தமாய்..
“என்னடி.. ரெண்டு நாள்னு சொல்லித்தானே வந்த, இப்போ எத்தனை நாளாச்சு.. பாலாவும் ரொம்ப பிசி போல.. ஒருதடவ வந்ததோட சரி.. அப்படியிருக்கப்போ நீ அங்க போகவேணாமா???” என,
அவளுக்கு என்னவோ அவன் பேசாமல் செல்லக்கூடாது என்று எண்ணம் தோன்றியது.. ஆனால் நம்மின் எண்ணங்கள் எல்லாம் நடந்திடுமா என்ன??
“ம்ம்ச் பூர்ணி.. எல்லாம் பேக் பண்ணு.. நானே கொண்டு போய் விட்டு வர்றேன்..” என்று சந்தியா சொல்ல, உதடு பிதுக்கி முகத்தை உர்ரென்று வைத்துகொண்டு அமர்ந்துகொண்டாள்..
“பூர்ணிமா…!!!!!!”
“ம்ம்ச் போம்மா..” என்றவள் எழுந்து செல்ல போக, மைதிலி அவளுக்கு அழைத்து, “நம்ம சாரு வீட்ல இருந்து எல்லாம் நாளைக்கு வர்றாங்க பூர்ணி…” என்றுசொல்ல,
“சரிங்க சின்னத்தை…” என்றவளுக்கு அங்கே செல்லவேண்டுமே என்று ஆனது..
“நீ.. நீ இன்னிக்கு வந்திடுவியா பூர்ணி..??”
“ம்ம் ஆமா சின்னத்தை.. அங்கத்தான் கிளம்பிட்டு இருக்கேன்.. நான் வந்தும் நாளாச்சுல..” என்றவள், வைத்துவிட, இப்போது சந்தியா அவளை முறைத்தார்..
“நான் சொல்றப்போ மட்டும் கோபம் வரும்.. இதேது மாமியாருங்க சொன்னா அப்படியே தலையை ஆட்டுறது….”
“நீ ஒன்னும் என்னை கொண்டு போய் விட வேணாம்.. நானே போயிப்பேன்..” என்றவள் அவளின் பெட்டியை இழுத்துக்கொண்டு வர,
“நான்தானே கூட்டிட்டு வந்தேன்.. கொண்டு போய் விடுறதும் முறைப்படி தான் செய்யணும்..” என்றவர் ராமலிங்கத்திற்கு அழைத்து சொல்லிவிட்டு பூர்ணியை கொண்டு போய் அங்கே விட்டு வந்தார்..
பூர்ணிமா அங்கே செல்கையில் பாலகுரு இல்லை.. வழக்கம் போல் முத்துராணியும் மைதிலியுமே இருந்தனர். பூர்ணிமாவை பார்த்ததும், பொதுவான பேச்சுக்களும், நாளைக்கு வரப்போகும் விருந்தினர்களுக்கு என்ன செய்வது என்ற பேச்சுமாய் இருக்க பொழுது ஓடியது.. தனபால், பாலச்சந்திரன் கூட வந்துவிட, இவன் எப்போதடா வருவான் என்று பார்த்து பார்த்து இருந்ததுதான் மிச்சம்.. முத்துராணி இதனை கவனித்தவர்,
“நீ வந்து சாப்பிடு பூர்ணி. அவன் இந்த ஒருவாரமாவே லேட்டா தானே வர்றான்..” என, ‘என்னது…!!!!’ என்று கண்ணை விரித்தாள்..
வெளியே கேட்கவும் முடியாது.. ஏன் அப்படியென்று.. நீங்கள் பேசவில்லையா என்ற கேள்வி உடனே வந்து நிற்கும்.. ஆக எதுவும் சொல்லாது சாப்பிட செல்ல, மைதிலி தான்
“நீ அங்க போனதுல இருந்து பாலாக்கு இங்க இருக்கவே முடியல போல பூர்ணி…” என்று கிண்டல் செய்ய, வழிய வந்த சிரிப்போடு சிரித்து வைத்தார்..
பூர்ணிமாவும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாது, உண்டுமுடித்து விட்டு அறைக்கு வர சாருலதா அழைப்பு விடுக்க, அதன் பின் தோழியர் இருவருக்கும் பேசவே நேரம் போனது..
வெகு நாளைக்கு பிறகான பேச்சு என்பதால், நிறைய நிறைய பேச இருந்தது.. முன்னெல்லாம் நினைத்த நேரத்தில் பார்த்து, பேசி, ஊர் சுற்றி என்று இருந்தவர்கள், இப்போது திருமணம் என்றானதும் அப்படி இருக்க முடியாது போக, அதுவும் இன்று பேசுவது கூட ரொம்ப நாள் ஆகிப்போனதாய் இருக்க, பேச்சு நீண்டுகொண்டே போனது.. நேரமும் தான்..
“சரி சாரு நாளைக்கு பார்ப்போம்..” என்றவள் மணிப் பார்க்க, அதுவோ நள்ளிரவு பன்னிரண்டு என்று காட்ட, அப்போதுதான் உரைத்தது இன்னமும் பாலகுரு வரவில்லை என்று..
‘இன்னும் பாஸ் வராம எப்படி என்ன வேலை???’ என்று யோசிக்கும் போதே, அவனி கார் சத்தம் கேட்க, பூர்ணிமாவோ வேகமாய் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டாள்.
பாலகுருவோ பூர்ணிமாவின் கார் இருப்பதை பார்த்தே கண்டுகொண்டான் அவள் வந்திருப்பதை.. தான் அழைக்காது, தான் பேசாது அவளாகவே வந்திருப்பது நெஞ்சில் கொஞ்சம் ஜில்லென்ற உணர்வை கொடுக்க, சந்தோசமாகவே வீட்டினுள் சென்றான்.. இருந்தாலும் அவன் பிடிவாதம் அப்படியேதான் இருந்தது..
‘வரட்டும் வரட்டும்..’ என்று பூர்ணி நினைத்தாலும், பாலகுரு வாசலில் இருந்து அறைக்குள் வரும்வரைக்கும் அவளுக்கு இதயம் திடுக் திடுக் என்றுதான் அடித்துக்கொண்டு இருந்தது..
ஒருவேளை இதெல்லாம் ஊடலின் சமிக்கைகள் போல.. போர்வைக்குள் கண்கள் விழித்தே இருந்தவள், இவன் இன்னும் அறையினுள் வரவில்லை என்றதும்,
‘என்ன பண்றான் இன்னும்???’ என்றெண்ணியபடியே போர்வையை விளக்க, சரியாய் அதே நேரம் பாலகுரு உள்ளே வந்து அறையின் விளக்கைப் போட,
‘அய்யோ பார்த்துட்டானே..’ என்று அதிர்ந்தவள், பின் எதுவுமே தெரியாதது போல படுத்துக்கொண்டு, ஏதாவது சொல்வானோ என்று காதை தீட்டி பூர்ணிமா காத்திருக்க, அவனோ அப்படியொருவள் அங்கிருக்கிறாள் என்பதே உணராதவன் போல, ரெஸ்ட் ரூம் சொல்ல,
‘பாஸ்…!!!!!!’ என்று பல்லைக் கடித்தாள்..
திரும்பி பாலகுரு வர பத்து நிமிடங்கள் பிடித்தாலும், அவளுக்கு உறக்கம் மட்டும் வரவேயில்லை.. அவன் வந்தபின்னோ கண்களை இறுக மூடிக்கொண்டாலும், லேசாய் கால்களை மட்டும் ஆட்டியபடி படுத்திருந்தாள்.. அவள் உறங்கவில்லை என்பது அவனுக்குத் தெரியவேண்டுமாம்.. சொல்லப்போனால் இப்போது அவன்மீது கோபம் இருக்கிறதா என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை..
அவனாய் பேசவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே..
ஆனால் அவனோ ஒன்றுமே தோன்றாதவன் போல் விளக்கை அணைத்துவிட்டு வந்து படுக்க, இருவரும் அருகருகே படுத்திருந்தாலும், ஒருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.. இருவரும் தூங்கவில்லை என்று இருவருக்குமே தெரியும்.. ஆனாலும் ஒருவர் முகத்தினை கூட ஒருவர் பார்த்துகொள்ளவில்லை.
பாலகுருவோ ‘சொல்லாம போவாளாம்… இவ வந்ததுமே நான் அப்படியே பேசிடனுமாம்…’ என்றெண்ண,
பூர்ணியோ, ‘நான் சொன்னதுல என்ன தப்பு.. இவன் தப்பு தப்பா நினைச்சிட்டு லாஸ்ட்ல என்னை சொல்றான்… இடியட் பாஸ்…’ என்று எண்ணிக்கொள்ள,
எத்தனை நேரம் இருவருக்கும் மெளனமாக இருக்க முடியும் என்ற போட்டி பாஷை பேசிக்கொள்ளாமல் நடந்துகொண்டு இருந்தது.. ஆனால் இருவரின் பிறவி குணம் என்ற ஒன்று உள்ளது தானே.. அது எத்தனைக்கு நேரத்திற்கு சும்மா இருக்கும்..
பாலகுருவிற்கு வேர்ப்பது போலிருக்க, அப்போதுதான் பார்த்தான், ஏசி ஆன் செய்யாதிருப்பதை..
‘மகாராணிக்கு ஏசி கூட போட்டு படுக்க முடியாதோ..’ என்று சத்தமாகவே முணுமுணுத்தவன், அவனையும் அறியாது பழக்க தோஷத்தில் ஏசி ரிமோட்டை கைகளால் துலவ, அவனது கரமோ பூர்ணிமாவின் தோள்களை வருடி சென்றது தான் மிச்சம்..
அடுத்த நொடி “ஓய்.. என்ன பண்ற நீ??!!” என்று வேகமாய் எழுந்தமர்ந்திருந்தாள்..
அவனுக்கே அவன் என்ன செய்தான் என்று உணரவில்லை, ஆனால் அவள் கேட்டபின்னே தான் புரிந்தது.. இருந்தாலும் கெத்து விட முடியுமா??
“என்ன??!!” என்றான் மொட்டையாய்..
“இப்போ நீ என்ன பண்ண???”
“ரிமோட் தேடினேன்..”
“ரிமோட் என்ன என் ஷோல்டர்லயா இருக்கு…” என்றவள் ஒரு சண்டைக்கு தயாராக,
“சாரி தெரியாம பட்டிருச்சு…” என்றவன் புரண்டு படுக்கவும், அவளுக்கு இன்னமும் எரிச்சல் ஆனது..
சரி இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறோமோ பார்த்ததுமே லேசாய் சிரிக்கவாது செய்வான் என்று பார்த்தாள், அதுவுமில்லை, இப்போது கை பட்டதற்கு சாரி வேறு கேட்கவும் அவளுக்கு அப்படியொரு எரிச்சல்.. என்ன நினைத்துகொண்டு இருக்கிறன் என்று..
“என்னது?? என்ன சொன்ன???” என்றவள் அவனை வம்படியாய் திருப்ப,
“ஏய்.. என்ன டி.. வம்பு செய்யனும்னு வந்திருக்கியா???” என்றான் பிடிவாதமாய் கோபமாய் பேசுவதுபோல்..
உள்ளே அவனுக்குமே கொஞ்சம் இயல்புநிலை திரும்பியதுதான்.. ஆனாலும் உடனே ஒத்துக்கொண்டுவிட்டால் என்னாவது…
“இப்போ எதுக்கு நீ சாரி கேட்ட பாஸ்.??!!”
“தெரியாம கை பட்டிருச்சு.. அது என்னவோ கொலை குத்தம் போல நீதான் என்னன்னு கேட்ட.. சரின்னு நானும் ஒரு சாரி கேட்டேன்..” என்றவன், அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு,
“வேணும்னா நீயும் என் ஷோல்டர்ல கை வச்சிட்டு சாரி கேட்டுக்கோ.. சாரிக்கு சாரி சரியா போகும்..” என,
“பாஸ்…!!!!!!!” என்று பல்லைக் கடித்தவள், அங்கிருந்த தலையணை கொண்டு அடிக்க,
“ஏய் ஏய்.. விடு டி.. அடிக்கத்தான் வந்தியா??” என்று தடுத்தவனுக்கு, அவளின் பாஸ் என்ற அழைப்பு பல நாளுக்கு பிறகு கேட்பதினால் உற்சாகமாய் இருந்தது..
மேலும் மேலும் பூர்ணியை சீண்டும் எண்ணமும் வர, “ஆமா பெரிய இவளாட்டம் போன, இப்போ என்னவாம்.. நான் இல்லாம இருக்க முடியலைதானே…” என்று கேட்டவனின் கரங்கள் அவளை வளைத்துப் பிடித்திருக்க,
அவன் கேட்ட தொனியும், அவன் பார்வையும் அவளை சரியாய் ரோசம்கொள்ள வைத்து,
“தோடா..!!! பாஸ்.. இப்படியொரு நினைப்பா.. வெரி சாரி.. நாளைக்கு சாரு வீட்ல இருந்து எல்லாம் வர்றாங்கன்னு சின்னத்தை சொன்னாங்க.. அதான் வந்தேன்..” என்றதுமே அவளின் பிடியை விட்டவன்,
“அப்போ சாரு வர்றதுனால வந்த அப்படித்தானே..??” என்றவனுக்கு திரும்பவும் பழைய பிடிவாதமும் கோபமும் தலைதூக்க அவளை நேருக்கு நேராய் பார்த்து முறைத்தான்.
இத்தனை நேரம் பதிலுக்கு பதில் பேசியவன், இப்போது முறைக்கவும்தான் பூர்ணிமாவிற்கு தான் சொன்னதன் அர்த்தம் புரிய,
‘சோ….. சொரிஞ்சு விட்டுட்டமோ…’ என்று நொந்தவள், அவளும் வீராப்பாகவே,
“ரொம்ப முறைக்காத பாஸ்.. சாரு வரலைன்னா நாளைக்கு வந்திருப்பேன்.. சின்னத்தை போன் பண்ணதுனால அம்மா கொண்டுவந்து இன்னிக்கு விட்டுப் போனாங்க..” என்றாள்..
“ஓஹோ… அப்போ கூட நீ எனக்காக வரலை…”
“ம்ம்ச் நீயா எதையாவது பேசாத பாஸ்…” என்றவள் முகத்தை சுளித்தபடி படுக்க,
“நீ ரொம்ப பண்ற பூர்ணி..” என்றான் இறுகிய குரலில்..
“என்னது நானா???!!!”
“ஆமா நீதான்… என்னை அவ்வளோ மட்டமா நினைச்சிட்ட.. அந்த நிர்மலா சொல்றான்னா அதை நீயும் சரின்னு சொல்ற.. என்கிட்டே சொல்லாம கூட போன.. இப்போ எனக்காக வரலைன்னு சொல்ற..” என்று திரும்ப முதலில் இருந்து பாலகுரு ஆரம்பிக்க,
“நீ எத்தனை தடவ சொன்னாலும், நான் அப்படித்தான் சொல்வேன் பாஸ்… நிர்மலா சொன்னது சரிதான்..” என்றாள் நேருக்கு நேராய் அவனைப் பார்த்து..