மயிலிறகு – 13

கருமை சூழ்திருந்த அழகிய இரவு திடீர் என்று பகலைப்போல அடித்துக்கொண்டிருந்தது ஆதவனது அறை ஜன்னல் வழி…. திடீர் என்று ஏற்பட்ட வெளிச்சத்திற்கும், கூச்சலுக்கும் காரணம் தெரியாமல், வேகமாக அறையை விட்டு வெளியேறிய ஆதவனும், அவன் பின்னோடு சேர்ந்து அவசரமாக நடைப்போட்ட இழையினியும் பார்த்தது, ஒரு வைக்கோற்போர் தீ ஜுவாலைகளுடன் கொழுந்து விட்டு எரிவதை….

 

நிலைமையை உணர்ந்து வேகமாக ஆதவனும், இழையினியும் அவ்விடம் செல்ல, அதற்குள் பன்ணை ஆட்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துவிட, பாதி எரிந்தும் எரியாமலும் சில வைக்கோல்கள் கருகிய நிலையில் புகைந்து கொண்டு இருந்தன… நெருப்பின் உஷ்ணத்தினால் அருகில் இருந்த கால் நடைகள் மிரட்சியுடன் காணப்பட்டன.

 

அங்கே பன்ணை ஆட்களை தவிர, குடும்பத்தில் இருந்த அனைவரும் கூடிவிட, இழையினி வரவும், இதழா சென்று அவள் அருகில் நின்றுக்கொண்டாள்….

 

நெருப்பு முழுதாக அணைக்கப்பட்டுவிட, ஆதவனின் பார்வை சுற்றி இருந்த பன்ணை ஆட்கள் மீது ஒரு முறை படிந்து மீள, அந்த பார்வையின் அர்த்தம் உணர்ந்தவராய் அனைவரும் களைந்து சென்றனர். கலைகின்ற கும்பலில் ஒருவனான மாறனை அவன் பெயர் சொல்லி ஆதவன் அழைக்க, மாறன் மரியாதையுடன் வந்து நிற்க மற்ற அனைவரும் போகும் வரை காத்திருந்த ஆதவன், “மாறா, இது எப்படி நடந்துச்சு…. யார் முதல்ல பார்த்தது… ” என்ற கேள்வியை எழுப்ப, மாறனோ, “தெரியல சின்ன அய்யா… ஆனா புகையிற வாட வந்து வேகமா இந்த பக்கம் ஓடியாந்து பார்த்தேன்… நெருப்பு பிடிச்சு இருந்துச்சு… அணைக்க போராடிட்டு எல்லாருக்கும் குரல் கொடுத்தேன்… அப்புறம் வெரசா எல்லாரும் சேர்ந்து குடுதாலில இருந்த தண்ணீரையும், பம்ப்பு செட்டு தண்ணீரையும் போட்டு அணைச்சிட்டோம்…. யாராச்சும் கவனமில்லாம பீடி பத்த வச்சுருப்பாங்களோ…. எனக்கு அப்படிதான் தோணுது அய்யா…” என்று கூற, ஆதவன் “சரி… எல்லார்கிட்டயும் இனி கவனமா இருக்க சொல்லு… இன்னும் ஒரு முறை இப்படி நடக்க கூடாது…” என்று ஆளுமையான குரலில் கூற, மாறனும் தலை அசைப்புடன் சென்றான்.

 

ஆனால் அந்த சம்பவத்தின் பிறகு, அந்த குடும்பத்தினர் அனைவர்க்கும் ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவானது… இந்த நல்ல நாளில் இப்படி நெருப்பு பிடித்தது, எதை குறிக்கிறது என்று பெரியவர்கள் கவலை கொள்ள, வேலை ஆட்களும் அரசபுரசலாக பேச, வேதா அம்மாள் மற்றும் சற்று தெளிவாக, நடந்தது தற்செய்யலாக நடந்த விபத்து என்று புரியவைத்து, தனது மாமியாரை சமாதனாம் செய்தவர், இழையினியிடம், “நீ இதற்கெல்லாம் கலங்காத கண்ணு… நீ போய் உறங்கு, அம்மாடி இதழா நீயும் போ மா… காஞ்ச செடி கொடி வைக்கோல்னா சின்ன நெருப்பு பட்டாலும் எறியத்தான் செய்யும், அது அதோட தன்மை, அதையும் இந்த நல்ல நாளையும் சேர்த்து யாரும் மனசப்போட்டு குழப்பிக்காதீங்க… ” என்று இழையினியிடம் ஆறுதலாகவும், மற்றவர்களிடம் பொதுவாகவும் கூறியவர், சமையல் ஆட்களை போகும்மாறு சைகை செய்து, ஆதவனிடம் இழையினியை பார்த்துக்கொள்ளுமாறு கண்களாலே ஜாடை சொன்னார் இழையினியின் மாமியார்……

 

இழையினி இது போல் விஷயங்களை பெரிதாக வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பவள் இல்லை தான்… ஆனால் அந்த வேலையாட்கள் அவர்களுக்குள் பேசியது, ஏனோ தன்னைதான் சொல்கிறார்களோ… நல்லதோ கெட்டதோ எது நிகழந்தாலும் புதிதாக மணமாகி வரும் பெண்களையே அதற்கு பொறுப்பாளி ஆக்குபவர்கள் தான் இந்த சமுதாயத்தில் அதிகம் என்பதால் வந்த கவலை. ஆனால் ஆதவனின் கண் அசைவிற்கும் அவர்கள் ஆடுவதை கண்டவள் தன் கணவன் மீதும், தனக்காக பரிந்து பேசி முற்போக்கு சிந்தனையோடு இருந்த மாமியார் மீதும் ஒரு ஒட்டுதல் ஏற்பட்டது, அவ்வீட்டு பெரியவர்கள் கூட இழையினியை ஏது சொல்லவில்லை…. நல்ல நாளில் இப்படி நடந்திருக்க வேண்டாமே… ‘இரு பிள்ளைகளுக்கும் கடவுள் எந்த பிரச்னையும் தராம நல்லா பார்த்துகிடனும்’ அப்படி என்று தான் ஆதவனது பாட்டி வாய் விட்டு வேண்டினார்கள்.

 

இதழாவும் ஆறுதலாக, இழையினியின் கையை அழுத்த, இழையினி ஒரு சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தாள்…. ஆனால் அவள் முகத்தில் லேசாக ஒரு சுனக்கம் வந்துவிட்டத்தை ஆதவன் கண்டுக்கொண்டான்.

 

அவர்களது அறையில் லேசான முகவாட்டத்துடன் இருந்த இழையினியை   அவள் கணவன், “இழையா… இங்க வா… ” என்று அழைக்க, ஏதும் பேசாமல் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலை தாழ்ந்துக்கொண்டாள். ஏனோ இழையினிக்கு மனம் மிகவும் பாரமாக தோன்றியது.

 

“இங்க எழுந்து என் பின்னாடி வா-னு சொல்றேன்ல… ” – ஆதவன்

“சொல்லுங்க…” – இழையினி

“போ.. சொம்பு ல கொஞ்சம் தண்ணீர் எடுத்திட்டு வா… வந்து வெளியில நில்லு… நான் ஒரு ரெண்டு நிமிஷத்துல வந்திடுறேன்…. ” – ஆதவன்

 

அவன் கூறியதை கேட்டவள், அந்த அறையில் குடிப்பதற்காக ஒரு செம்பில் இருந்த நீரை எடுத்துகொண்டு அறையை விட்டு வெளியே வந்து அந்த அரைவட்ட பலகணியில் நின்றபடி தூரத்தில் தெரிந்த இருட்டை வெறித்துக்கொண்டு இருக்க, அவள் அருகில் ஆதவன் ஒரு அறிக்கை விளக்குடனும் சிறு தீப்பெட்டியுடனும் வந்து நின்றான்….

 

“என்ன இழையா..அப்படி பார்க்கிற ? அங்க என்ன தெரியிதுன்னு சொல்லு.. நானும் பார்க்கிறேன்” – ஆதவன்

“இல்ல ஒன்னும் இல்ல, சும்மா தான்… சொல்லுங்க, தண்ணி எடுத்துட்டு வந்துட்டேன்…” – இழையினி

“ஹ்ம்ம் இங்க உட்க்காரு… சொல்றேன்… இன்னைக்கு நிலா ரொம்ப அழகா இருக்குதுல…?” என்று ஆதவன் அவளிடம் கூறிக்கொண்டே தண்ணீரை சிறு வட்டமாக தரையில் ஊற்றியவன், அடுத்ததாக அறிக்கை விளக்கின் திரியை எடுத்து, அதன் உட்பகுதி மண்ணெண்ணெய்யால் நனைந்திருக்க, அந்த திரியை வைத்து தரையில் வட்டமாக மண்ணெண்ணெயை யும் தண்ணீருக்கு பக்கத்துலயே இட்டான்.

 

இரண்டும் தரையை நனைத்திருக்க, அவ்விரெண்டுக்கும் நடுவே சிறு இடைவேளை இருந்தது. அவன் செய்வதை பார்த்துக்கொண்டு இருந்த இழையினிக்கு எதுவும் புரியாவிடிலும், அவன் செய்வதை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்தாள்….

 

அவள் கவனிப்பதை உறுதிபடுத்திக்கொண்டு, ஒரு தீ குச்சியை உரசி அவ்விரெண்டுக்கும் நடுவினிலே வைக்க, இருப்பது சிறு இடைவேளை தான் என்பதால் வேகமாக மண்ணெண்ணெய் இருந்த பகுதி நெருப்பு பற்றி அவ்விடம் சூடம் அளவுக்கு எரிய ஆரம்பிக்க, தண்ணீர் இருந்த பகுதி மட்டும் அப்படியே இருந்தது.

 

“இதுல இருந்து என்ன தெரியுது இழையா…?” என்று ஆதவன் இழையினியின் கண்களை ஊடுருவி பார்த்தபடி கேட்க, இழையினியோ அவன் கண்களை சந்திக்க தயங்கியப்படி, “இதுல என்ன இருக்கு… கண்டிப்பா கெரோசின் ல தீ பிடிக்கும், பச்ச தண்ணீர் ல நெறுப்பு பத்தாது… இது எல்லாருக்கும் தெருஞ்சது தானே…” என்று இலகுவாக கூற, அவள் கூற்றை ஆதவன் மறுத்து கூறினான்.

 

“இல்ல இழையா.. தப்பு.. தண்ணீர் க்கு இன்னைக்கு நல்ல நாள், அதுனால தான் நெருப்பு அத சுடல, பட் கெரோசின் க்கு ஏதோ பேட் டே..அது தான் சட்டுன்னு நெருப்பு பிடிச்சிருச்சு… ” என்று ஆதவன் கூற, இழையினி க்கு இப்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்துவிட்டது. அதன் அர்த்தமாய் அவள் ஒரு சின்ன சிரிப்பை உத்திரவிட, ஆதவன் தொடர்ந்தான்.

 

“எரியிற தன்மை கொண்ட பொருள் எப்ப வேணும்னாலும் எரியும்… அதற்கு நல்ல நாள் கெட்ட நாள் அப்படின்னு எதுவும் கிடையாது… அது என் பொண்டாட்டிக்கு நல்லா தெரிஞ்சும் கூட, முகத்துல ஏன் இத்தனை வாட்டம் ? …. ” என்று ஆதவன் கேட்டுக்கொண்டே, அவளை எழுப்பி, அவள் தோளில் லெகுவாக கைப்போட்டபடி அவளுடன் நடக்க, இழையினிக்கு ஆதவனுடனான உறவு இன்று ஏற்பட்டது போல் தோன்றாமல், வெகுநாள் பழக்கம் போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

 

அந்த உணர்வு அவளுக்கு நிம்மதி தந்தாலும், அவன் அருகாமையும் அவனின் வலிய கரம் அவள் தோள்களை வளைத்திருந்ததாலும் அவளுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பும், இதுவரை உணராத உணர்வும் ஏற்பட, அவனுடன் கூச்சத்தால் சற்று நெளிந்துக்கொண்டே அவனை விட்டு தள்ளி நடக்க முனைந்தாள். அவளின் கூச்சத்தை பார்த்த ஆதவன், ஒரு சின்ன சிரிப்புடன் அவளிடம், “இழையா… நீ தூங்கு… எதை நினைச்சும் மனச குழப்பிக்காத…ஹ்ம்ம் ?” என்று கேட்டுவிட்டு, அவள் கட்டிலில் படுக்கவும், மறுப்புறம் சென்று ஆதவனும் படுத்துக்கொண்டான்.

 

தன் கணவன், தனக்காக வேண்டி ஒரு சிறு குழந்தைக்கு கதை சொல்வது போல சமாதனம் கூரியவிதத்தை எண்ணி மன நிம்மதியுடன் அவள் கண் அயற, ஆதவனோ லேசாக வெளிப்பட்ட அவள் பாதங்களில் பார்வையை பதித்தபடி, முன்பு நிகழ்ந்தவைகளை மனதினுள் ஒருமுறை ஓட்டி பார்த்து புன்னகைத்துக்கொண்டான்.

 

சகியே!!!

 

எனக்கு மட்டும்

சக்தி இருந்திருந்தால்

என்னை கட்டி போடும்

உந்தன் கணுக்கால் மச்சதிற்குள்

ஊடுருவி ஒருமுறையேனும் பார்த்திருப்பேன்  

என்னை,

உன்னை நோக்கி

நித்தம் இழுக்கின்ற

காந்தம் எதுவென்று

 

                   — ராசி

அவள் தூங்கிய பிறகு, எழுந்து அமர்ந்தவன்,  அவனை, அவனே முதன் முதலில் தொலைத்த, கணுக்கால் மச்சத்தை லேசாக வருடியப்படி, அவன் மனதில் காதலாக கால் பதித்த பாதத்தை லேசாக வருடுவிட்டு படுக்கையில் விழுந்தான், அவளின் நினைவுகளை தாங்கியப்படி.

 

விடிவதற்கு முன்னே எழுந்தவள் வேகமாக குளித்து, ஆதவன் கண் விழிப்பதற்குள் நேர்த்தியாக புடவை உடுத்தி, மிதமான ஒப்பனையோடு காலை ஆறு மணிக்கே அடுக்களைக்குள் போக, பணியாட்கள் அவளின் மீது  மரியாதை கலந்த பார்வையை செலுத்திய படி என்ன வேண்டும் என்று கேட்க, அவளோ யார் யார் அந்த வீட்டில் என்ன எப்போது காலை உட்கொள்வார்கள் என்று விவரம் கேட்டுக்கொண்டு தனது மாமனார், மாமியாரு க்கு காபியும், ஆதவனுக்கு கஞ்சியும், பாட்டி, தாத்தாவிற்கு பாலும், தனது தங்கைக்கு இதழாவின் சுவைக்கு ஏற்ப அதிக டிக்காஷனுடன் காபியும் எடுத்து சென்றாள்.

 

அவளின் இந்த சிறு செய்கையிலே ஆதவனின் தாத்தா பாட்டிக்கு அவளை பிடித்து போக, பேத்தி பேத்தி என்று அன்று ஓர் நாளிலே அவளது புகழ் பாட தொடங்கினர். வேதா அம்மாளும் அவளின் செய்கைகளை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருக்க, காலை பலகாரம் வழக்கமான உற்சாகத்துடன் அனைவரும் சேர்ந்து உண்டு முடித்தனர்.

 

அவர்கள் உண்டு முடிக்கவும் மகிழன் வரவும் நேரம் சரியாக இருந்தது…

 

“அடே மகிழா…என்னடா நேரமா வந்துருக்கலாம்ல… அப்பத்தா உனக்கு நம்ம ஆதவனுக்கு போல கஞ்சி தர சொல்லிருப்பேன்…” – பார்வதி அம்மாள்.

“அட கெளவி , அதுக்காக தான் நான் லேட்டாவே வந்தேன்…” – மகிழன் மனதினுள்.

“என்ன மகிழ், அதுக்குள்ள ஆதவன காளான் பாக்டரி கூப்பிட்டு போக வந்திட்டியா…” – ருத்ரன்

“அட நான் எப்ப அப்படி சொன்னேன்… நான் என் மயில பார்க்கவந்தா, விடமாற்றாங்களே… ” – மகிழன் மனதினுள்

“என்ன மகிழ், அத்தையும் அவுகளும் கேட்குறாங்கள…இப்படி மௌனமா நிக்கிற?” – வேதா அம்மாள்

 

“வேதா அம்மா, மகிழன் மௌனமா நிற்கல, மைண்ட் வாய்ஸ் ல…” என்று மகிழனை சரியாக புரிந்துக் கொண்ட ஆதவன் தொடங்க, வேகமாக இடைபுகுந்த மகிழன், “ஆதவா கொஞ்சம் இரேன் ப்ளீஸ்… நானே சொல்றேன்… அப்பத்தா… அம்மா எல்லாரும் என்ன கேள்விகேட்குறத விட்டுட்டு, நம்ம தோப்பு தொறவு எல்லாம் ஆதவன் மனைவிக்கு ஆதவன் போய் சுத்தி காட்டலாம்ல….

 

எப்படியும் ரெண்டு நாள் வயலு, தோட்டம் மேற்ப்பார்வை தான் பார்ப்பான் ஆதவா, அதான் தங்கச்சியையும் இன்னைக்கு கூப்பிட்டு போகலாம்னு சொல்ல தான் இங்க வந்தேன்….  நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு சகஜமா பழகும்ல, அதுக்கு இப்படி காலாற போயிட்டு வந்தால் கொஞ்சம் தயக்கம் போகும்ல. புது இடம் அதான்.. இந்த யோசனை ” என்று எதார்த்தமாக கூறுபவன் போல, கூறிக்கொண்டு இருக்க அவ்வபொழுது இதழாவின் மீது மகிழனின் பார்வை படிந்து படிந்து மீண்டது….

 

எப்படியும் இழையினி கிளம்பினால், இதாழவையும் அனுப்புவார்கள், ஆதவன், இழையினிக்கு தனிமை கொடுப்பதாய் கூறி இதழாவிடம் சிறுது நேரம் பேசலாம் என்று எண்ணினான். இது அவனது மூளையை கசக்கி பிழிந்து உருவாக்கிய திட்டம்.

அவன் கூறியதும், முதலில் அதற்கு சம்மதம் தெரிவித்தது வேதா அம்மாள் தான். தனது அக்காக்காக ஒவ்வென்றாய் பார்த்து பார்த்து செய்யும் வேதா அம்மாள் மீது இதழாவிற்கு ஒரு ஈடுப்பாடு வந்தது… அவள் மனமோ, “இது போல ஒரு மாமியார் கிடைத்த…நிச்சயம் எல்லா பொண்ணுங்களும் லக்கி தான்….” என்று எண்ணமிட்டது.

 

வீட்டின் பின்கட்டின் வழியாகவே, அவர்களது வயல், தோட்டம் என்று அனைத்துக்கும் சென்று விட்டு வர பாதை இருந்ததால், ஊரின் வழி போகவேண்டிய அவசியம் இல்லாது போகவே, கால் நடையாகவே நால்வரும் பெரியவர்களிடம் கூறிக்கொண்டு கிளம்பினர்.

 

அவர்களது வீட்டில் இருந்து சற்று தூரம் சென்றதும், அவர்கள் இருந்த நிலப்பரப்பின் உயரத்தை விட, சற்று தாழ்வாக அந்த வயக்காடு தொடங்கியது. வயக்காட்டில் இறங்கி, முதலில் ஆதவன், இழையினி, இதழா, மகிழன் என்று வரப்பில் ஒவ்வொருவராக நடக்க, இழையினிக்கு மனதினுள் ஆதவனின் கை பிடித்து நடக்கும் ஆசை லேசாக துளிர்த்தது.

 

அந்த ஆசை துளிர்த்த அடுத்த நொடி, அவள் மனது தூக்கி வாரிப்போட்டது. அவள் எண்ணங்களோ, “எப்படி எனக்கு தோணுச்சு… ஒரே நாள் ல அவரோட அருகாமைய நான் தேடுறேனா? … இது எப்படி சாத்தியம்?” என்று ஒரு மனது அவளை கேள்வி கேட்க, மறு மனமோ, ” இல்ல… இந்த பிடிப்பு இன்னைக்கு தோணினது இல்லை… எனக்காக என்கூட நின்ற அந்த நொடியே தோன்றி இருக்கணும்…அதுனால தானோ என்னால அவரு கட்டின கயிற்ற கழட்ட முடியல….? அதுனால தானோ ஆரியன் கூட மணமேடைல நின்றபொழுது என் நெஞ்சுல அத்தனை தவிப்பு…? இதுவா, அதுவா… எனக்கு தெரியல… ஆனா ஏதோ ஒன்னு நிச்சயம் இருக்கு… அவருக்கு காதலி இருக்கிறது தெரிந்து வந்த ஏமாற்றம் , இல்ல காதல பற்றி இனி பேசவேணாம்னு ஆதவன் சொன்னதும் வந்த நிம்மதி  இது எல்லாம் என்ன சொல்லுது…. ” என்றெல்லாம் அவள் எண்ணியவாரே நடந்துக்கொண்டு வர, ஆதவன் உழவு வேலைப்பார்ப்பவர்களிடம் பேசிக்கொண்டே, மேற்பார்வை பார்த்துக்கொண்டே வந்தான். மறுப்புறம் மகிழனோ மெல்ல பேச்சுக் கொடுக்க முயன்றான் இதழாவிடம்.

 

“ஏங்க… உங்க வீட்ல ட்யூப் லைட் தேவைப்படாது தானே…? ” – மகிழன்

“ஏன் இப்படி சொல்றீங்க… எனக்கு புரியல” – இதழா

‘அது தான் சொல்லிட்டேனே…ட்யூப் லைட் ட்யூப் லைட்’ – மகிழன் மனதினுள்.

 

“இல்லைங்க இதழா, உங்க அக்கா… மாமா கூட நல்லா பேசணும் பழகனும், அவுங்களுக்குள்ள ஒருத்தர ஒருத்தர் புருஞ்சுக்க நேரம் ஒதிக்கி  பேச கூப்பிட்டு வந்தால்… நம்மளும் கூடவே இருந்தா அவுங்க எப்படி தான் பேசுவாங்க….” என்று மகிழன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பேச, இதழாவோ மனதில், “அட இவனுக்கு தெருஞ்சதுக்கூட நம்ம யோசிக்கவில்லையே…” என்று எண்ணினாள்.

 

அவள் எண்ணமிடும் போதே, அவன் தன்னை ட்யூப் லைட் என்று கூறியதும் நினைவு வர, அவனிடம் கோவமான பார்வையை செலுத்தியபடி, ” எனக்கும் இங்கிதம் தெரியும்… என்கிட்ட இப்படி பேசுற வேலை எல்லாம் வேணாம்… நான் வீட்டிற்கு கிளம்புறேன்” என்று இதழா கூற, மகிழனோ மனதினுள், “டே காரியத்தை கெடுத்திடுவா போலையே…” என்று எண்ணமிட்டபடி வேகமாக அவளை தடுக்க முனைந்தான்.

 

“இப்ப நான் சொன்னது சரி தான்… நீங்க ட்யூப்.. இல்ல அதான் அது தான்.. ஏன்னா, நீங்க இப்ப அப்படியே போய்ட்டா உங்க அக்காவும் உங்க கூட வந்திட மாட்டாங்கள? ” – மகிழன்

 

“ஹ்ம்ம் ஆமாம் ல… சரி என்ன பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க… ” – இதழா

 

“நான் ஆதவன் கிட்ட, உங்கள்ளுக்கு மாந்தோப்பு சுத்திகாட்டிறதா சொல்லிடறேன்….ஏன்னா, ஆதவன் அடுத்து பார்வையிட போறது தென்னந்தோப்பு… மா, தென்ன ரெண்டும் ஒரு இடத்துல சந்திக்கும்… அங்க போய் அவங்களுக்காக நம்ம காத்திருக்கலாம்… சரியா… ? , பட் உங்க அக்கா நம்ம கூட வராம, உங்க மாமா கூட போகிறது போல நீங்க தான் பார்த்துக்கணும்” என்று மகிழன் கூற, இதழாவும் சம்மதமாய் தலை அசைக்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் மகிழன் சொன்னது போலவே வெவ்வேறு பாதை எடுத்தனர்.

 

தென்னந்தோப்பிற்குள் பிரவேசித்ததும், வரப்பை போல் ஒற்றை அடி பாதை இல்லாததால், ஆதவனுடன் சேர்ந்து நடந்தாள் இழையினி… சற்று தூரம் வரை வேலையாட்கள், காய்களை இறக்கி கொண்டு இருக்க, சிலர் இளநீர், தேங்காய், கொப்பரை என பிரித்துக்கொண்டு இருக்க, இழையினி இதை பார்த்ததும் அவர்களது தோப்பும், பிறந்த வீடும், ராகவனும் நினைவில் வலம் வர தொடங்கினர்.

 

தந்தையின் நினைப்பு அதிகமாக, இழையினி முகத்தில் ஏக்கம் படர தொடங்கியது… அதை கவனித்துவிட்ட, ஆதவன் மெல்ல காரணத்தை கேட்க, ஒன்றும் இல்லை என்று மழுப்பலாக சிரித்த முகத்துடன் வெகு சிரமப்பட்டு இழையினி கூற, பொதுவாக பேசிக்கொண்டே ஓரிரு வார்த்தைகள் பட்டும் படாமலும் பேசிக்கொண்டே வர, அதற்குள் தோப்பின் அடர் உட்பகுதியை அவர்கள் அடைந்திருந்தார்கள்.

 

அங்கே பணியாட்கள் இல்லாமல், தென்னந்தோப்பு நிசப்த்தமாகவும், அந்த நிசப்தத்தில் கூட ஒரு ரம்யமும் சூழ்திருந்தது…. ஒரு சிறு தென்னை ஓலை குடிசையும், வெளியே ஒரு கயிற்றுகட்டிலும் கிடக்க, அதை ஓட்டினார் போன்று ஒரு வெள்ளி ஓடை ஓடிக்கொண்டு இருந்தது. அதை பார்த்த இழையினிக்கு மிகவும் பிடித்துவிட, அவளது கவனத்தை மெல்ல திசை திருப்பினாள் இயற்கையின் பக்கம்.

 

“இழையா… இந்த இடம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்… கண்டிப்பா இங்க ஒரு அரை மணி நேரமாவது இருந்திட்டு தான் போவேன்… அப்படி இருக்கும் போது, மனசுக்கு சந்தோசமா இருக்கிற நேரம் கண்டிப்பா இந்த ஓடை ல ஒரு குளியலையும் போட்டுட்டு தான் போறது வழக்கம்…” – ஆதவன்

“அப்படியா… இந்த இடம் நிஜமாவே ரொம்ப அழகு தான்… ” – இழையா..

“சரி, உனக்கு நீச்சல் தெரியுமா…? ” – ஆதவன்

“ஹான்ங் .. அது வந்து தெரியாது…” என்று இட வலமாக அவளது தொங்கட்டான்கள் ஆட இழையினி பதில் சொன்ன விதத்தில், ஆதவன் மனதும், அவள் ஜிமிக்கியோடு சேர்ந்து ஆடியது.

 

அந்த நொடியே, அவளை தனது கை வளைவினுள் கொண்டு வர துடித்த ஆதவன்… தனது காதல் மனைவியின் மீது காதல் ததும்பும் பார்வையை வீசினான். அந்த தனிமையில், அவன் காதலித்த பெண், அவனது மனைவி என்ற உரிமையில் எழுந்த ஆசை அது. ஆனால் அவன் மறுமனமோ, அவன் வேகத்திற்கு தடையாய் இருந்தது…. தன் மனைவியின் மனதில் தன் மீது காதல் வந்த பிறகே, அதை அவள் உணர்ந்த பிறகே அவளை ஆளுவது என்று உபதேசம் கூறியது… அவள் மனது அவனை நேசிக்கவும், அவள் அவனை நேசிப்பதை உணர்ந்துக்கொள்ளவும் அவகாசம் தேவை படும் என்றும், அந்த அவகாசத்தை அவன் கொடுப்பது என்றும் ஆதவன் முடிவு செய்தான்.

 

ஆதலால், அவனது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு, அவன் அணிந்துவந்திருந்த வெள்ளை சட்டையை கலட்டி, கயிற்று கட்டிலின் மீது வைத்தவன், கை இல்லா பனியனுடனும், வேட்டியுடனும் ஓடையில் இறங்கினான். அவன் நீந்துவதை பார்த்துக்கொண்டும், அவன் நீந்தியப்படி பேசிக்கொண்டு இருந்த பேச்சுக்கும் பதில் தந்தபடி உட்க்காருவதற்கு ஏதுவான இடத்தை தேடிக்கொண்டு இருந்தாள். கயிற்று கட்டிலில் அமர்ந்தால், அவள் கணவனின் முகம் பார்க்க இயலாது என்று எண்ணி தான் இந்த தேடல்.

 

ஆனால் அவன் முகம் பார்க்க ஏன் தன் மனம் விழைகிறது என்று அவள் எண்ணவில்லை. ஓடையின் கரை அருகே, ஒரு தென்னை மட்டும் வளைந்து வளர்ந்திருந்தது…

 

அந்த தென்னை-யின் மீது அமர்ந்தவள், கால்களை தொங்கவிட்டப்படி அமர்ந்து கணவன் நீந்துவதை பார்த்தவள், அவளே அறியாமல் கணவன் முகத்தையே சில நொடிகள் பார்த்திருக்க, அதை கண்டுக்கொண்ட ஆதவன் மெல்ல சிரித்துக்கொண்டான்.

 

“என்ன இழையா அப்படி பார்க்கிற..பிடிச்சிருக்கா…” – ஆதவன்

“ஹஹா…என் என்ன என்ன கேட்டீங்க… யார பிடிச்சிருக்கா? ” – சிறு தடுமாற்றத்துடன் ஒலித்தது இழையினியின் குரல் நாணம் கலந்து.

 

“இந்த இடம் பிடித்திருக்கானு கேட்டே… நீ ஏன் தடுமாருற… ? யார னு வேற கேட்குற… ? அப்போ உனக்கு யாரோ பிடிச்சுருக்கு தானே…” என்று கூறிக்கொண்டே அவள் அமர்ந்து இருந்த இடத்திற்கு நேர் கீழே அவன் வந்து நீந்த தொடங்கி இருந்தான்…. அவன் கேட்ட கேள்வியில், இழையினிக்கு தடுமாற்றம் வர, அதை சமாளிக்கும் பொருட்டு வேகமாக அங்கிருந்து சென்று சற்று அப்பால் நின்றுக்கொள்ளலாம் என்று எண்ணி அவள் லேசாக எழுந்து அந்த மரத்தின் மீதே கால் வைத்து நடந்து போக எண்ணி காலை ஊண்ட, பாதத்தில் தண்ணீர் தெறித்து நனைந்திருந்ததால், மரத்தில், பாதத்தை ஊன்றியதும் வழுக்கி எதிர்ப்பார்க்கா நொடியில் நீருக்குள் விழுந்தால் இழையினி.

 

அந்த இடத்தில் தான் ஆதவனும் நீந்திக்கொண்டு இருந்ததனால், அவள் கீழ் விழுந்து, ஒரு முறை நீரில் முங்கி எழ, அடுத்த நொடி இழையினி, ஆதவன் கைகளில் தவழ்ந்தாள். அது ஓடை என்பதால் ஆழம் மார்பு அளவுக்கே இருந்தது இழையினிக்கு….நீச்சல் தெரியாதவரும் ஓரளவு காலை நன்றாக ஊண்டி வெளிவர இயலும், ஆனால் திடீர் என்று விழுந்த காரணத்தால் இழையினி தடுமாறி, அந்த அதிர்ச்சியில் கால்கள் தொயிந்து போக, காலை  நீருக்குள் ஊன்றாமல், ஆதவன் அவளை தன் கைகளில் தாங்கி இருக்க, அவன் அணிந்திருந்த கை இல்லா பனியனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கண்களை பயத்தில் திறவாமல் அவன் மார்போடு ஒன்றினாள்….

 

ஆதவனுக்கு அந்த நீரோற்றம், இடையை தாண்டி மட்டுமே இருந்தது… குறிப்பாக அவன் அப்பொழுது நின்ற இடத்தில். அவன் நின்றபடி இருக்க, கைகளில் இழையினியை தாங்கி இருக்க, அவனது வலிய கரம் ஒன்று இழையினியின் வெற்றிடுப்பை அழுத்தமாக பிடித்திருந்தது… அவளின் உதடு லேசாக பயத்தில் துடிக்க, மூடிய இமைகளுக்குள் கருவிழி அங்கும் இங்கும் அழைப்பாயிந்தது…. அவளை கைகளில் ஏந்தி இருந்த ஆதவன் நிலை அவன் மனைவியிடம் மேலும் முன்னேற தூண்டியது….

 

அவன் மனமோ வேகமாக ஒரு அவசர கவிதை எழுத தொடங்கியது….

 

ஓடையின் ஓரத்தில்

ஓங்கி வளர்ந்திருக்கும் மரக்கூட்டங்கள்

ஓடை நீரில் பூச்சொறிவதை

கண்டுவந்தேன் இந்நாள் வரை

 

இன்று தான் கண்டுக்கொண்டேன்

பூக்குவியலாய் தென்னை

சொரிந்தது பூக்களை அல்ல

பூவினும் மென்மையான உன்னை என்று….

 

                                                                     — ராசி

 

ஒரு சில நொடிகளில் அவளது நடுக்கம் மறைந்து கண் விழித்து இழையினி பார்க்க, மிக அருகில் கண்ட அவளின் கணவனின் முகமும் கண்களும் இழையினிக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை நிகழ்த்தியது…. அவள் இடை குறுகுறுக்க, அதை உணர்ந்தவளாக தனது இடையை பார்க்க, அவளது சேலை விலகி, அவளது வெற்றிடுப்பை பளிரென்று காட்ட, அதில் தேக்கு மரத்தை ஒத்த வலிமை கொண்ட தனது கணவனின் கரம் பதிந்திருந்ததை எண்ணி, நாணி, கன்னி அவள் கன்னம் சிவந்தாள்.

 

அவனிடம் இருந்து மெல்லவிடுப்பட எண்ணிய இழையினி….

 

“என்னங்க…… நான் நா.. பயந்துட்டேன் ஹ்ம்ம் தேங்க்ஸ் இது ரொம்ப ஆழம் இல்லையா… நீங்க நீங்க நிக்குறீங்க…? ” – முணுமுணுப்பான குரலில் இழையினி.

 

” ஆமாம் ஆழம் கிடையாது… உள்ளூர் காரணுக்கு பேய கண்டா பயம்… வெளியூர் காரணுக்கு ஆற்ற கண்டா பயம்….. இதை நீ சரியா ப்ரூப் பண்ணிட்ட… சரி அத விடு, அது என்ன நேத்து இருந்து என்கிட்டே தேங்க்ஸ் மட்டும் தான் சொல்லிட்டு இருக்க… ஆனா எனக்கு தேங்க்ஸ் மட்டும் போதாதே….” – ஆதவனது குரலும் மாறி இருந்தது… இழையினி இதுவரை கேட்டிராத ஒரு ஆழ்ந்த குரல்.

 

அவனது பிடி லேசாக தளர, மெல்ல ஓடையின் அடிவார மணலில் கால் பதித்தவள், நீரோட்டத்தின் காரணமாகவோ, அல்லது அவளின் மன ஓட்டத்தின் காரணமாகவோ நீரில் மறுபடியும் விழாமல் இருக்க, கணவனின் தோள்களை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

 

“ஹாங்… தேங்க்ஸ் போதாதா… வேற வேற என்ன வேணும்… ” – இழையினியின் குரல் நடுங்கவே தொடங்கிற்று. அவளின் நடுக்கத்திற்கு காரணம், ஆதவனின் குரல் மாற்றமும், அவனது இரு கைகளும் இப்போது நீருக்குள் அவள் இடையை முழுதாக தழுவி நின்றதே…உடும்பு பிடி என்று இழையினி கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் இப்போது தான் அதை உணருகிறாள். நீருக்குள்ளும் அவன் பிடியின் அழுத்தத்தின் காரணமாய், வலியோடு சேர்ந்து ஒரு இனம் புரியா சந்தோசத்தையும் உணர்ந்தாள் இழையினி.

 

அவளால் அப்பிடியில் இருந்து நிஜமாகவே நழுவத்தான் முடியவில்லையோ அல்லது அவள் மனம் விலக விழையவில்லையோ… அப்பேதை அந்த நொடியில் அறியவில்லை.

 

ஆதவன் அந்த நெருக்கத்திலும், இன்னும் சற்று அதிகமாக நெருங்கி, அவள் காதில் கிசுகிசுப்பாய், “தேங்க்ஸ் மட்டும் போதாது… வேற ஒன்னும் வேணும்…. ” என்று கூற, இழையினியின் காது மடல் சிவந்தது. “அது வந்து… நீ… நீ… நீச்சல் கத்துக்கணும் சீக்கிரமா… சரியா… ? ” என்று மீண்டும் அதே கிசுகிசுப்பான குரலில் கூற, இழையினிக்கு சற்று நிம்மதியாகவும், அதே சமயம் சிறு ஏமாற்றமாகவும் இருந்தது.

 

“ஹ்ம்ம்ம்ம் ஆனா… ” என்று ஏதோ இழையினி சொல்ல வாயெடுக்க, அவள் இதழில் அவனது ஒற்றை விரல் வைத்து தடுத்து, “நீ எதுவும் சொல்ல வேண்டாம்…. உனக்கு நான் நீச்சல் சொல்லி தரேன்…. நம்ம மறுவீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு….” என்று கூற, இழையினியும் சம்மதமாய் வெக்கம் கலந்து தலை அசைத்தாள்.

 

இழயினியை பருகுவது போல பார்த்துக்கொண்டு இருந்த அவளது கணவனுக்கு, நனைந்த ஆடையில் வெளிப்பட்ட அழகுகள் அவனை இம்சிக்க, அவனை, அவன் நிதானத்திற்கு கொண்டு வர பெரும்பாடு பட்டான். மனதிற்கு கடிவாளம் இட்டாலும், அவனது இருக்கரங்கள் மட்டும் கைக்கு விலங்கு இடாததால் அவள் வெற்றிடையிலே நீருக்குள் விளையாடிக்கொண்டு இருந்தன..

 

கூச்சத்தால் நெளிந்தபடி நின்ற இழையினியும், காதல் ஒவ்வொரு நொடியும் ஆற்றுவெள்ளம் அதிகரிப்பது போல அதிகரித்துக்கொண்டு இருந்த ஆதவனும், வெளியே செல்ல நினைத்தாலும், அந்த ஓடையிலே மீன்களாக வாழ்ந்திடமாட்டோமா என்று அவரவர் நினைவில் நினைக்கதான் செய்தனர்.

 

அவர்களை நடப்பிற்கு கொண்டு வந்தது…. தென்னை மரத்தில் இருந்து காயிந்த சருகு ஓலைகளை கொண்ட ஓர் தென்னமட்டை….அந்த தென்னமட்டை கீழ் விழுந்ததால் ஏற்பட்ட சப்தத்தில் இருவரும் சுயஉணர்வை பெற்று… ஆற்றங்கரைக்கு வர, இருவரும் சிறு தடுமாற்றத்துடன், விலகி, ஒரு இதமான மௌனத்துடன் இருவரும் நடக்க தொடங்கினர்.

 

ஆதவன் கண்களுக்கு இழையினியின் வெக்கம், பார்வை, நடுக்கம் என அனைத்தும் அவளின் எண்ணோட்டத்தை தெளிவாக காட்டியது. ஒரு பெண்ணின் மனதில் அந்த ஆடவனுக்கு இடம் இல்லை என்றால், அவன் மன்மதனே ஆனாலும் அப்பெண் மதிக்க மாட்டாள் என்பதை அறிந்திருந்த ஆதவன், தன் மனைவியின் மனதில் தான் இருப்பதை தெளிவாக உணர்ந்துக்கொண்டான்…. ஆனால் அவள் காதலை அவளும், அவள் மீது அவன் கொண்டுள்ள காதலை அவனும்.. அவள் கணுக்கால் மச்சத்தில் அவன் தொலைந்த கதையும்… இவை அனைத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட பிறகே அவர்களின் இல்லறம் தொடங்க வேண்டும் என்று அவன் மனம் தீர்கமாக முடிவெடுத்தது.

 

அதே நேரம் இழையினியோ, ” ஆச்சர்யமா இருக்கு… நான் இவ்வளோ சீக்கிரமா அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டேனா , இதுவரை இப்படியெல்லாம் நான் நெருக்கமா இருப்பேன்னு நினைச்சே பார்த்ததில்ல . ஒருவேளை கல்யாணம் ஆனா எல்லா பெண்களும் இதே போல தங்களோட கணவரை சீக்கிரமாவே நெருக்கமா நினைக்க ஆரம்பிச்சுடுவாங்களோ அப்ப அவர நான் நேசிக்க தொடங்கிட்டேனா? ஆனா எப்போ இருந்து…” என்று அவள் சிந்தனைகொண்டாள்….

 

இழையினி மீண்டும் மனதினுள், “இது தான் காதலா? இப்படி தான் இருக்கும்மா இந்த உணர்வு…. அவர பற்றி தெரிந்த விஷயம் கொஞ்சம் தான்.. ஆனா அதுல நான் என்ன மொத்தமா தொலைத்திட்டேனா?” என்று எண்ணமிட்டாள்.

 

அவர்களின் அந்த சிறு ஜல கூடலின் பிறகு, இருவரும் ஒருவரை பற்றி மற்றொருவர் சிந்தனைவயப்பட்டதால், அதிகமாக அவர்களுக்கு இடையே பேச்சு இல்லாது, மௌனமே ஆச்சி புரிய, இருவரது எண்ணங்கள் மட்டும் காற்றை போல உலகத்தையே வலம் வந்து கொண்டு இருந்தன.

 

சிலிர்க்க வைக்கும் தென்னை கூட்ட காற்றில், இருவரது ஆடையும் முக்கால் வாசி காயிந்துவிட, இப்போது இழையினி தோளை சுற்றி மட்டும் அந்த கம்பிளியை போட்டுக்கொண்டு, இருவரும் தோளோடு தோள் உரச சிறு தீண்டளுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்….. மா தென்னை தோப்பின் சந்திப்பிற்கு.

 

அவர்களின் மனநிலையை நிகழ் உலகத்திற்கு இழுக்கும் அளவு இருந்தது அந்த மாமரத்தின் கீழே நின்றுக்கொண்டு இருந்த  இதழா, மற்றும் மகிழன் இருந்த நிலை…… அவர்களின் நிலையை கண்ட ஆதவன் இழையினி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் திகைத்த மற்றும் குழப்பம் படிந்த பார்வையுடன் பார்த்துக்கொண்டனர்.