மயிலிறகு – 10
மெல்லிய நூலாக மஞ்சள் நாண் இழையினியின் மார்போடு தவழ, அதோடு பின்னியப்படி பொன் கோர்க்கப்பட்ட மஞ்சள் தாலிக்கொடி படர்ந்து கிடந்தது…..குனிந்த தலையை நிமிர்த்தி, ஆதவனை விழிகளால் தேடியவள், அவனை காணாது சோர்ந்த விழிகளுடன் தந்தையை பார்க்க, அவர் நெஞ்சம் ஆனந்தத்தில் விம்மிக்கொண்டு இருந்தது…..அவர் கண்கள் சந்தோசத்தில் மின்ன, இழையினியை பார்த்த ராகவனது விழி மாப்பிளையை பார்க்குமாறு சமிங்ஞை செய்ய, புரியாது, அவள் கழுத்தில் மாலையிட்டவனை பார்க்க அந்த நேரம் அவளுக்கு வெகு அருகினில் பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் ரோஜா இதழ் மாலை அலங்கரிக்க, கம்பீரமாக அமர்ந்திருந்தான் ஆதவன்.
ஆதவனது விழிகளை சந்திந்த இழையினியின் விழிகள் அவ்விடமே உறைந்திருக்க, ஆதவனது விழியில் ஒரு நொடி கோவம் தென்பட்டதோ என்று இழையினிக்கு தோன்றியது….. அதன் பின் அவன் விழிகள் எதையும் பிரதிபலிக்க மறுக்க, அவளது விழிகளை பிரிக்காமல் அவனை பார்த்திருக்க, அவனது விழிகள் நேற்று நடந்த நிகழ்வுக்கு பயணமாக, மணமக்களை பார்த்திருந்த ராகவனுக்கும் நேற்று நிகழ்ந்தவை வலம் வர தொடங்கின அவரவர் பார்வையில்.
ராகவன் மட்டும் அல்லாது அவர்கள் இருவரையும் திருப்தியுடன் பார்த்தது மகிழனது விழிகள். அவன் அவனின் திருவிளையாடலை நோக்கி நினைவை திருப்பினான்…
ராகவன் நேற்று இரவு, தன் மகளின் வரவேற்பில் அவளது கலங்கிய விழிகளை கண்டவர், அதில் குழப்பமும் வேதனையும் நிறைந்திருக்க யாரோ ஒரு புதியவனை அடிக்கடி அவள் விழி தீண்டி மீள்வதை அறிந்துக்கொண்டார். அவரது உயிர் நாடி இழையினி ஆயிற்றே…. மற்றவர்க்கு அவளின் மாற்றம் தெரிந்ததோ இல்லையோ ராகவனுக்கு தெரிந்தது…. மகளின் பார்வை போன திக்கில் ஆதவனை பார்த்தவர், ஆதவனும் நிமிடத்திற்கு ஒரு முறை மணமேடையை கவனிப்பதை அவர் கவனிக்க தவறவில்லை….
ஆதலால், மகளின் பார்வைக்கு சொந்தமானவனை பற்றி அறிய அந்த நேரத்திலும் அவர் முடிவு செய்தார்…. தனது சொந்தம் இல்லை என்று கண்டுக்கொண்டவர், ஆரியனின் தந்தையிடம் கேட்க, அவரோ ஆதவனிடமே அழைத்துவந்து ராகவனை அறிமுகப்படுத்தினார்…. ராகவனுக்கு அந்த செய்தி மட்டும் போதாது… ஏதோ தன் மகள் தன்னிடம் அன்று திருமணம் பற்றி கூற வந்தாள், ஆனால் அதற்குள் அந்த பாக்கியம் அனைத்தையும் கெடுத்துவிட்டதாக எண்ணிய ராகவன், தனது மகளின் வாழ்க்கை பொறுப்பு தன்னுடையது என்று முடிவு செய்து ஆதவனை, அவன் அறியாமல் அவர் கண்காணித்தார்.
அவர் கண்காணிக்க தொடங்க, அந்த நேரம் ஆதவன், மகிழன் மற்றும் வேதா அம்மாவிடம் கிளம்புவதாக கூற, பின் அவனது அறைக்கு சென்று கிளம்ப எத்தனிக்க, அவனது அவசரத்தின் காரணமும், செல்ல மகளின் கண்ணீரின் காரணமும் அவருக்கு புரியவில்லை.
ஆதவனுக்கு கொடுக்கப்பட்ட அறையின் பக்கவாட்டில் பலகணியோடு இணைக்கப்பட்ட சாளரம் இருக்க, ஆதவன் கிளம்பும் முன் ஆதவனிடம் பேச எண்ணியவர், அவருக்கு நம்பகமான சொக்கனிடம் அவர்கள் அறைக்கு வெளியே காத்திருக்குமாறும், அவர்கள் கிளம்புபோது தன்னை வந்து சந்திக்குமாறும் அனுப்பிவைக்க, சொக்கன் காத்திருக்க நேர்ந்ததது, ஆதவனது வருகைக்காக.
அறைக்குள் ஆதவன் குளியலறைக்குள் நுழைந்தவுடன், மகிழனோ அவனது மைண்ட் வாய்சில், ” விட்டா, இவன் என் மயிலுக்கிட்ட இருந்து என்ன பிரிச்சிருவான்…. இதுக்கு என்ன பண்ணலாம்…? ஐடியா….” என்று வேகமாக அவனது முட்டை விழிகளை உருட்டியவன், பரபரவென்று எதையோ தேட….அவனது கையில் அவன் தேடிய ஆதவனது கார் சாவி கிடைக்க, அதை வேகமாக பலகணியில் வீசியவன், பிறகு அதை எடுத்துக்கொள்ளலாம் என்று திருப்தியாக புன்னகைத்துக் கொண்டான்.
மகிழன் கார் சாவியை ஆதவன் கண்களில் படாதவாறு பதட்டத்துடன் வீச, மகிழனின் எதிர்ப்பார்ப்பு பொய்யாகும் படி, அது பலகணியில் or பால்கனி விழாமல், பலகனியை தாண்டி விழுந்தது. ஆனால் அதை அறியாத மகிழனோ திருப்தியாக புன்னகைத்துக்கொண்டான்….
ஆதவன் வரவும், மகிழனை கிளம்ப சொல்லி துரிதப்படுத்த, மகிழனோ கிளம்புவதற்கான காரணத்தை வற்புறுத்தி கேட்க, ஆதவனும் அவன் மனதின் நிலையையும், போராட்டத்தையும், காதலையும் ஓரளவு நண்பனுடன் பகிர்ந்துக் கொண்டான்… இழையினியை காப்பற்ற கட்டப்பட மஞ்சள் நாண் என்று கூறினானே தவிர, அது என்ன ஆபத்து என்று உயிர் நண்பனிடம் கூட ஆதவன் பகிரவில்லை.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த சொக்கன் விரைந்து தனது முதலாளியான ராகவனிடம் கூற, ராகவனுக்கு மெல்ல மெல்ல மகளின் மனம் புரிய ஆரம்பித்தது. அவரது மனமோ, “என் பொண்ணு நடந்ததை சொல்லத் தான் வந்து இருக்கா… அதற்குள்ள இந்த அக்கா வந்து நிலைமையை கெடுத்திருச்சு… என் பொண்ணு மனசுல காதல் இல்ல….ஆனா எதிர்பாராவிதமா நடந்த இந்த விஷயமும் அந்த மஞ்சள் கயிறும் அவள் மன நிலையை குழப்புது…
அது வெறும் மஞ்சள் கயிறா இருந்தாலும், அவளோட மனசுல அது தாலினு பதிய, கல்யாணத்துல ஆதவனை பார்த்து அவள் மனசு சங்கடப்படுது…..
என் பொண்ணு ஒரு நொடி கூட கண்கலங்காம பார்த்துகிட்டவன் நான்..
ஆனா என் பொண்ணு இந்த மூன்றே நாட்கள் எவ்ளோ வேதனைகளை சுமந்திருப்பா… இது தான் அந்த ஜோசியர் சொன்ன இரு தாலி விவகாரமா….
என் பொண்ண விட எனக்கு எதுவும் பெருசு இல்ல… என் பொண்ணு கண்ணீர் சிந்தாம இருக்க நான் எதுவேணும்னாலும் செய்வேன்….
ஆனா எப்படி இந்த திருமணத்தை நிறுத்துறது… அப்படியே நிறுத்தி காரணத்தை சொன்னாலும், என்னோட கவுரவம் குறைந்தால் அதை நான் பொருட்படுத்தமாட்டேன்…. ஆனா என் பொண்ணை பற்றி யாரும் ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை கூட தவறா பேசிடக்கூடாது…” என்று இவ்வாறாக எண்ணமிட்டவர், சிறுது நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவாறு யோசித்தவர், சட்டென முடிவேடுத்தவராக ஆரியனை நோக்கி சென்றார்.
அதே நேரம், ஆதவன் மனதை அறிந்த மகிழன், அவனுடன் கிளம்ப எத்தனிக்க, ஆதவனோ கார் சாவியை காணவில்லை என்று கூற, உண்மையை நண்பனிடம் கூற துணிவு இல்லாது, மகிழன் “இரு டா… நான் ஜன்னல் வழியா பால்கனில விழுந்துருக்கானு பார்க்கிறேன்.. நீ உள்ள தேடுடா…” என்று கூறிவிட்டு வேகமாக பலகனியில் நின்று தேட, அங்கு கார் சாவி இல்லாததை பார்த்த மகிழன் குழம்பியதோடு இல்லாமல், அவனது முட்டை விழிகளை மேலும் கீழும் உருட்டி, “செத்தாண்டா சேகரு ” என்று சினிமா பாணியில் சொல்லிக்கொண்டான்.
மறுபுறம் சொக்கனை மீண்டும் ஆதவனை கண்காணிக்க சொல்லிவிட்டு, ராகவன் ஆரியன் இருந்த அறை நோக்கி செல்ல, இரவு பன்னிரண்டு ஆகியும் ஆரியனது அறையில் விளக்கெரிய அவனது அறைக்கதவை தட்டப்போன ராகவன், ஆரியனின் வார்த்தையில் அப்படியே நின்றார் அசையாது.
“விருப்பம் இல்லாது கல்யாணத்தை பண்ணி ரெண்டு பெண்களோட வாழ்க்கையை வீணாக்க போறேன் டா…” என்ற வார்த்தைகள் ஆரியனது குரலில் வெளிப்பட, அவனின் பேச்சை முழுமையாக கவனிக்க ராகவன் முடிவு செய்தார். அவரது நிலைக்கு இப்படி அடுத்தவர் பேச்சை கவனிப்பது அநாகரீகம் என்று தோன்றினாலும், அந்த நேரத்தில் அவர் அப்படி செய்யவேண்டியது ராகவனுக்கு அவசியம் ஆகிற்று தன் மகளின் வாழ்க்கையை முன்னிட்டு.
“டே, இங்க இருந்து எப்படியாவது வெளில போய்டலாம் டா… உன்னையே நம்பி வந்த பொண்ணு உனக்காக காத்துக்கிட்டு இருக்கா… ” – ஏதோ புதியவனின் குரல் ஆரியனிடம் கூறியது.
“நான் மட்டும் மாட்டேன்னா சொல்றேன்… என் உயிரே அவள் தான் டா.. எங்க அப்பா என்னை கேட்காம, ஒரு வார்த்தை கூட சொல்லாம முடிவு பண்ணி அதுவும் லீவுக்கு வந்த என்னை மூணு நாள்ல கல்யாணம்னு ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாரு டா…
நான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னதுக்கே என் அம்மாவை ஓங்கி ஒரு அரை விட்டாரு… நான் பண்ற தப்புக்கும் என் அம்மா தான் பாவம் தண்டனை வாங்குவாங்க…
நான் காதலிக்கிறேன்னு மட்டும் சொல்லி இருந்தால், என்னையும் என் அம்மாவையும் சேர்த்தே புதைச்சிருப்பாரு….அவரு இதெல்லாம் ஒத்துக்கமாட்டாரு… ஒரு வேளை கல்யாணம் முடிஞ்சா நாளிடைவுல மாறலாம்… ஆனா இந்த நிமிடம் நான் என்ன சொன்னாலும் என் அப்பா, அவருடைய நட்பு, கொடுத்த வாக்கு, மானம் மரியாதைனு மட்டும்தான் பேசுவாரு…
எதுவும் வொர்க் அவுட் ஆகாது….. இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயமும் இருக்கு டா… எங்க அப்பா எல்லார் முன்னாடியும் நிற்க வச்சு கொஞ்சம் அதட்டி, நீ லவ் பண்றியானு கேட்டா கூட நான் நிச்சயம் ‘இல்லன்னு’ சொல்லிடுவேன்… அவர் முன்னாடி குரல் உயர்த்தி எதிர்த்து பேசுற தைரியம் எனக்கு இப்ப மட்டும் இல்ல எப்பயுமே வராது…
இதுக்கெலாம் ஒரே வழி, நான் இங்க இருந்து தப்பிக்கிறது தான்…” என்று கூறி முடித்தான் ஆரியன்.இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ராகவனின் மனம் ஓர் நிமிடம் அவருக்குள்ளேயே கேள்விகளை எழுப்பியது….
நான் என் மகளுக்கு ஒரு கோழையையா மணமகனாக தேர்வு செய்தேன்..அவன் இப்போது திருமண மண்டபத்தை விட்டு போனால், நாளை அந்த மணப்பெண்ணின் நிலை பற்றி இவன் சிந்திக்கவில்லையா ?…இவை இரண்டும் ராகவன் உள்ளத்தே எழும்பி பெரும் துயரத்தை பெருக்கிக்கொண்டு இருந்தது…..
அவர் இப்படி சிந்தித்துக்கொண்டு இருந்த போதே மீண்டும் அவர்கள் சம்பாஷணை தொடங்கியது….
“தப்பிக்கிறதுன்னு சொல்ற…. ஆனா எப்படி ? ” – மீண்டும் அதே புதிய குரல்.
“அதுக்கு நான் வழி எல்லாம் பார்த்துட்டேன் டா…. ஆனா அதற்கு சந்தர்ப்பம் தான் இன்னும் அமையல” என்று ஆரியன் கூற, “என்ன வழி டா… ?” என்று அவன் நண்பன் கேட்டான்.
“இந்த ரூமோட சைடுல இருக்க பால்கனில இருந்து பாரேன்… இந்த வீட்டோட என்ட்ரன்ஸ்ல என் அப்பாவோட ஆளுங்க இருக்காங்க…. சோ நான் முன் வாசல் வழியா போகமுடியாது… இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல எனக்குனு தெரிஞ்சு தான்.. நைட் கூட திருச்சிக்கு போகாம இங்கயே தங்க சம்மதிச்சிட்டாரு….
அதுனால, இங்க இருந்து தப்பிக்க எல்லா வழியும் க்ளோஸ் பண்ணிட்டதா நினைக்கிறாரு.. அதுக்கு காரணமும் இருக்கு, இந்த வீட்ல இருந்து மத்தவங்க கண்மறைந்து எங்கயும் போகமுடியாது…
ஆனா அதுலயும் நான் ஒரு வழி கண்டு வச்சுருக்கேன்… பட் அதுக்கு சரியான டைம் அமையணும்…” என்று ஆரியன் கூற, “அது என்னன்னு சொல்லுடா… பார்ப்போம்” என்று அவனது நண்பன் கூற, மீண்டும் ஆரியனே தொடர்ந்தான்.
“பின்னாடி பாரு.. இந்த வீட்டோட ஒரு மூலையோட சுவரு மட்டும் ரொம்ப பெருசா இருக்கு… அந்த பக்கம் தென்னைமரங்கள் இருக்குதுல்ல அந்த ஏரியா… அந்த சுவர் பெருசா இருக்குறதுனால, அதுல அவ்ளோ ஈசியா யாரும் ஏறமுடியாது… அப்படியே ஏறுனாக் கூட, அந்த சுவருல ஏறி குதிச்சா கை கால் அடிபடும், அதோட தப்பி செல்றதும் கஷ்டம்… ஆனா அப்படி இது எல்லாம் செய்திட்டா…!
கண்டிப்பா இங்க இருந்து வெளியே போய்டலாம்… ஆனா அங்க இன்னும் ஒரு பிரச்சினை இருக்கு… ஏறுறதுக்கு ஏதேனும் வழி செய்தாக் கூட எல்லா இடத்துலையும் வாழை குருத்தும் அதோடு சேர்த்து டியுப் லைட்டை ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க… நான் அந்த சுவருல ஏறுனா கண்டிப்பா வெளிச்சத்துல தெரிஞ்சிடும்… அதுனால தான் அந்த பகுதியையே பார்த்துகிட்டு நிற்கிறேன்… ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாலும், இங்க இருந்து நிச்சயம் தப்பிசிடுவேன்….” என்று ஆரியன் கூற, ஆரியனது நண்பனோ, “டே இவ்ளோ காம்ப்ளெக்ஸா இருக்கு… எப்படிடா..?.” என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க, ஒரு வெறுப்பு கலந்த பார்வையை அந்த அறையை நோக்கி செலுத்திவிட்டு ராகவன் அங்கு இருந்து நகர்ந்தார்.
ராகவன் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கொஞ்சம் அமைதியாக சிந்திக்க தொடங்கினார். பதட்டமான சூழலில் எடுக்கும் முடிவுகள் அழிவுக்கு ஆரம்பம் என்பதை நன்கு உணர்ந்த அவர், நிதானமாக ஒவ்வொன்றாக யோசிக்க தொடங்கினார்.
“தனது மகள், அந்த மஞ்சள் கயிற்றை இன்னமும் கழட்டாமல் இருப்பது… ஆதவனது மீது அவள் பார்வை படிவது…. ஆதவனது காதல், இழையினியை ஏதோ சங்கடத்தில் இருந்து மீட்டது… ஆனால் அது என்ன சங்கடம் என்று அவன் சொல்லாதது… அவளைக் காதலித்தும், மற்றொருவருடன் நடக்கவிருக்கும் இழையினியின் திருமணத்திற்காக அவன் விலகிச் செல்ல முடிவெடுத்தது…..” என்று இவ்வாறாக யோசித்தவர், ஆதவன் தான் தனது மருமகன் என்று இப்போது முடிவு செய்துவிட்டார்.
ஆனால் ஆதவனை இப்போது எப்படி மருமகன் ஆக்குவது என்பதை யோசிக்க நேரம் இல்லாது, ஆரியனை எப்படி தவிர்ப்பது என்று யோசிக்க தொடங்கினார். ராகவன் இப்போது மகளது திருமணம் நிற்பதை பற்றி கவலை கொள்ளவில்லை… ஆனால் வேறு ஒரு பெண்ணை நேசிப்பவனும், பிரச்சனையை எதிர்க்கொள்ள பயப்படுகின்ற ஆரியனை நம்பி தனது பெண்ணை கொடுக்க மனம் இல்லை அவருக்கு. அதோடு இழையினியின் மனதை அவளது பார்வையிலிருந்தே கண்டுக்கொண்டார்.
நடப்பவற்றை நண்பனிடம் கூறலாம் என்று யோசித்த ராகவன் அதை அடுத்த நொடியே கை விட்டார்.. காரணம், ஆரியன் அவன் தந்தை முன்னிலையில், தான் வேறு எந்தப் பெண்ணையும் காதலிக்கவே இல்லை என்று சாதித்துவிட்டால், தனது கூற்று சபையில் பொய்யாகும்… மேலும் ஆதவனை அதன் பின் மணமகனாக்க முயன்றால், இதை செயல்படுத்தவே ஆரியன் மீது பொய் பழி போட்டதாக வதந்திகள் உருவாக கூடும் என்று சிந்தித்தவர் நண்பனிடம் சொல்லும் யோசனையை கைவிட்டார்….
சில நிமிடங்கள் யோசித்தவர், ஆரியன் விருப்பபடி அவன் இந்த இடத்தை விட்டு சென்றுவிட்டால் நிச்சயம் நாளை திருமணம் நின்று விடும், அதன் பின் மெதுவாக ஆதவனை தனது மகளின் துணைவனாக மாற்றும் பணியை செய்யலாம் என்று எண்ணமிட்டார். ஆரியனது முடிவு முழுக்க முழுக்க அவனுடையதே…. அதனால் இதை தன் நண்பனிடமிருந்து மறைப்பதனால் எந்த பழிபாவமும் தன்னை அணுகாது என்று அவர் எண்ணினார்.
அதற்கு காரணம் இருக்க தான் செய்தது…. ராகவன், ஆரியனை பற்றி அவர் நண்பனிடம் கூறினால் அதை ஆரியனே மறுப்பான்… ஓரளவு பக்குவமாக கூறினாலும் தனது நண்பன் நிச்சயம் இதற்கு சம்மதம் சொல்ல போவது இல்லை… ஆனால் ஆரியன் சொல்வது போல, அவன் திருமணம் நிகழ்ந்துவிட்டால் நிச்சயம் அவன் தன் மகனை ஒரே வாரிசு என்ற காரணத்திற்காகவேனும் ஏற்று கொள்வான்… என்று அவர் சிந்தனை ஓடியது….
தன் நண்பனின் குணத்தை நன்கு அறிந்த ராகவன் எந்த பிழையும் இல்லாது சரியாகவே கணக்கிட்டார்… ஏனெனில் ஆரியனின் தந்தையின் குணமும் அது தான்….
ஆரியனின் திட்டங்கள் கோழைத்தனத்தை காட்டினாலும், அதற்கு உதவ முடிவு செய்தார் ராகவன், தன் மகளுக்காக….
“சொக்கா…. அந்த பின் பக்க கிழக்கு சுவரு இருக்குல, அதுல இன்னும் ஒரு லைட் கட்டுப்பா… தென்ன மரத்துல ஏறி கல்யாண நேரத்துல கை காலை ஒடச்சுக்காத…. ஏணி எடுத்துட்டு வெரசா போ..” என்று அவரது பெரிய மீசையை தடவியவரே கூற சொக்கனோ தான் சொன்ன செய்தியின் பிறகும் அவனின் அய்யாவின் செய்கைக்கு காரணம் புரியாமல் குழம்பியவன் குழப்பத்தோடே அவர் சொன்ன பணியை செய்ய சென்றான்…
அவன் சென்றவுடன், “ரங்கா…” என்று உரக்க குரல் கொடுத்தவர், அவன் பணிவுடன் வந்து நிற்கவும், “ரங்கா…. வாசலுக்கு பக்கத்துல இருக்க கொட்டத்துல நிறைய புண்ணாக்கு மூட்டை இருக்கு… அது வாசல் ல இருந்தா நல்ல இல்ல… நீ ரெண்டு ஆளுங்கள கூப்பிட்டு அதை எங்கையாச்சும் மறைவா….ஆங்.. கிழக்கு சுவரு இருக்குல அங்க சுவருக்கு பின்னாடி வச்சுரு வீட்டுக்கு வெளில, ஏன்னா, கண்மறைவா வச்சா களவாண்டுட்டு போய்டுவானுங்க, கல்யாண வீடுல… கிழக்கு சுவரு பின் பக்கம் தான் புழக்கம் கிடையாது, அதுனால அத 3 அடுக்கா அங்க அடுக்கிடு…. ” என்று விரட்டினார்….
ரங்கனும் அப்படியே செய்ய அடுத்த 15 நிமிடங்களில் ரங்கன் பணியை முடித்துவிட்டு வர, சொக்கன் முதலில் ஏணியை கொண்டு சென்று அங்கே வைத்துவிட்டு ஒரு குழல்விளக்கை எடுத்துக்கொண்டு செல்ல எத்தனிக்க, ராகவனோ அவன் பாதி தூரம் செல்லும் போதே அவனை உரக்க அழைத்து “சொக்கா…. காலையில பார்த்துக்கிடலாம்… நீ போய் உறங்கு…” என்று கூற, அவனும் புரியாத பார்வை ராகவனை பார்த்துவிட்டு, மீண்டும் பவ்யமாக வைக்கோல் கொட்டத்தை நோக்கி சற்று உறங்க சென்றான்….
அவன் நான்கு அடி எடுத்து வைத்ததும், ராகவன் , “சொக்கா… பின் கட்டுல தான் இப்ப புழக்கம் இல்லைல… இந்த கரெண்ட்காரவங்கக்கிட்ட சொல்லி பின் பக்கம் மட்டும் அணைக்க சொல்லிடுப்பா… காத்தால 3 மணிக்கு முழிக்கணும்.. இப்பவே ஒண்ணு ஆச்சு…” என்று உரக்க சொல்லிவிட்டு போக, சொக்கனும் அதை செய்தான்.
ராகவன் செல்லவும், ஆங்காங்கே வேலைப்பார்த்துக் கொண்டு இருந்த பன்ணை ஆட்களும் உறங்க செல்ல, கிழக்கு சுவரு விளக்கோடு சேர்த்து இன்னும் ஓரிரு விளக்குகளும் அணைக்கப்பட்டன.
அந்த மாளிகையிலிருந்து ஆரியன் தப்பிச்செல்ல வாசலை தவிர வழி கிடையாது . காரணம், அனைத்தும் பெரிய சுவர் என்று நம்பி, முன்கட்டில் மட்டும் ஆட்களை ஆரியனின் தந்தை நிறுத்தி வைக்க, பின் கட்டில் குறிப்பாக கிழக்கு சுவற்று பகுதி ஆளரவமற்ற இடமாக இருந்தது…..
திடீர் என்று அணைக்கப்பட்ட விளக்குகள் ஆரியனது கண்களுக்கு தப்பவில்லை. இது தான் சமயம் என்று விரைந்து செல்ல, ராகவன் அவரது அறையில் இருந்து அதை கவனிக்க தவறவில்லை. அவ்விடம் சென்றதும் ஆரியனுக்கு மகிழ்ச்சி…. அவன் தடைகளாய் கூறிய அனைத்துமே அவனுக்கு சாதகமாக இருக்க, கடவளிடம் நன்றி கூறி விரைந்து வெளியேறினான். அவனை தொடர்ந்து அவனது சென்னை நண்பனும்.
அவன் தப்பி சென்ற அதே நேரம், ஆதவன் அவனது அறையில் கார் சாவி எங்கே சென்று இருக்கும்… எப்படி விடிவதற்குள் கிளம்புவது என்று அமர்ந்திருக்க மகிழனோ மனதினுள், “எரிமல டீப்பா திங்க் பண்றத பார்த்தா நம்ம மாட்டிக்கிட்டு பொசிங்கிடுவோம் போலவே…. தூக்கிப்போட்ட சாவியை இப்படி எவனோ தூக்கிட்டு போவான்னு நான் என்ன கனவா கண்டேன்…” என்று புலம்பிக்கொண்டு இருந்தான்.
ஆதவனோ அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் முதல் பேருந்திலாவது கிளம்பிவிடவேண்டும், பிறகு வந்து வண்டியை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்க, அதையே செய்வதாக முடிவெடுத்து உட்கார்ந்தவாறே இமைகளை மூட, மூடிய விழிகளிலும் இழையினியே வந்து நின்றாள்.
ராகவன் கூறியது போலவே, கல்யாண வேலைகளிலும், உறவுக்காரர்களுக்கும் மூன்று மணிக்கே பரபரப்பு தொற்றிக்கொண்டது… அதே நேரம் அவர்களுக்கு மட்டும் அல்லாது ஆரியனின் தந்தைக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால் அந்த பரபரப்பு நிச்சயமாக கல்யாண பரபரப்பு இல்லை அவருக்கு… ஆரியனை காணவில்லை… இதை அவர் அறிந்துக்கொண்டது பின் இரவு 2.30 மணிக்கு தான்…. நண்பனுக்கு என்ன பதிலை சொல்வது என்று ராகவனை பற்றி சிந்தித்தவர், அவரது ஆட்களை முடுக்கிவிட்டு தீவரமாக தேடும் பணியில் இறக்கிவிட்டார்…. ஆனால் சம்மந்தப்பட்டவனோ மதுரையை நெருங்கிக்கொண்டு இருந்தான்.
4.00 மணி அளவில் வேதா அம்மாவிடமும், ராகவனிடமும் சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமாக, ஆதவன் அவர்கள் இருக்கும் அறைக்கு வர, ஆதவனின் சித்தப்பா கையை பிசைந்தபடி நின்று கொண்டு இருந்தார்….
ஆதவனின் பின்னோடு வந்த மகிழன், அந்த அறைக்குள் ஆளுக்கு ஒரு மூலையாக நிற்பதை கண்டு, “என்ன இவைங்க… இப்பதான் சமஞ்ச பொண்ணு மாதிரி அங்க அங்க நின்னுக்கிட்டு இருக்காங்க…” என்று எண்ணமிட்டபடி ஆதவனை பார்க்க, ஆதவனும் தனது சித்தப்பாவிடம் விவரம் கேட்க அவர் சுருக்கமாக கூற அவர் குரல் உடைந்தது….
“ஒரு புள்ள, மெட்ராசு பக்கம் போறான்னு கொஞ்சம் கண்டிப்பா இருந்தேன்… நம்ம குடும்பத்துக்கு ஆகாத காரியம் எதையும் செய்யக்கூடாதுன்னு… அதனாலையே அவன் சொல்றத கூட காதுக்கொடுத்து கேட்காம, அவன் கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னதும் இவள போட்டு அடிச்சேன்” என்று கூறிக்கொண்டே அவரது மனையாளை காட்டிவிட்டு மேலும் தொடர்ந்தார்.
“ஏதோ விவரம் இல்லாம பேசுறான்… கல்யாணம் பண்ணிவச்சா சரியாகிடும்னு கட்டாயப்படுத்தி கூட்டி வந்தேன்… ஆளுங்களையும் நிற்கவச்சேன் அவனை கண்காணிக்க… ஆனா களவாணிப் பையன் இப்படி நடு ராத்திரில ஓடி போய் என் மூஞ்சில கரிய பூசிட்டானேய்யா….” என்று உதடு துடிக்க கூறியவர் மேலும் தொடர்ந்து, “இப்ப என் நண்பனுக்கு என்ன பதில் சொல்லுவேன்….அவனை சபையில நிற்க வச்சு கழுத்தறுத்துட்டேனே…. பொண்ணுக்கு ஜாதகப்படி இந்த வாரத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு அவன் கலங்குனதைப் பார்த்து, இந்த சம்மந்தத்தைப் பேசி அவனோட கஷ்டத்தை இப்ப நானே அதிகப்படுத்திட்டேனே… நான் எப்படி போய் அவன்கிட்ட சொல்லுவேன்.. இன்னும் இரண்டு மணி நேரத்துல கல்யாணம் இருக்கே…” என்று கூறி புலம்பிக்கொண்டு இருந்தார்.
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்க, ஆதவனுக்கு அவனது சிந்தையில் ஒரு யுக்தி உருவாக தொடங்கியது… அதை சட்டென்று செயல்படுத்தவும் தொடங்கினான் .
“சித்தப்பா… கோவத்துல எதுவும் பேசவும் கூடாது, முடிவு எடுக்கவும் கூடாது… ஏன்னா நம்ம என்ன பண்றோம்னு நமக்கே தெரியாது… பாருங்க, நீங்க இப்ப கூட உங்க மகனை திட்றதா நினைச்சு, உங்களை நீங்களே திட்டிக்கறீங்க… ‘களவாணிப் பையன்’… நான் சொல்றது புரியுதா..? ” என்று ஆதவன் கூற, அவன் பேசுவதை கேட்ட அனைவரும் அவனை பார்க்க ஆரியனின் தந்தையோ, “ஆதவா, நீ சொல்றது சரி தான்… ஆனா அதுக்கு இதுவா நேரம்? இனி பதட்டபடாம நிதானமா இருந்தா மட்டும், நிண்ட கல்யாணம் நடக்கவா போகுது..?” என்று கசப்பு நிறைந்த குரலில் கூறினார்.
“நிண்ட கல்யாணமா ? ” – ஆதவன் கேட்க
” ஆமாம்பா… கல்யாணம் நிற்க போகுது தானே…? ” – ஆரியனின் தந்தை பதிலளித்தார்.
“நின்றுவிட்டதா? இல்லை இனி தான் நிற்க போகிறதா… சரியா சொல்லுங்க ” – ஆதவன் கேள்வியெழுப்ப
“இவன் ஏன் இதுலையே நிற்கிறான்… பயபுள்ள ஏதோ பிளான் பண்ணிட்டான்” – மகிழன் மனதினுள்
“இல்ல … அது வந்து… ” – ஆரியனின் தந்தை தடுமாறினார்.
“சித்தப்பா… நீங்க முதல் வாக்கியத்தை சொல்லிட்டு, அடுத்த வாக்கியத்தை ‘இல்லை’ அப்படின்னு ஆரம்பித்தாலே , முதல்ல சொன்ன வார்த்தை பொய் ஆகிடும்….
நீங்க ‘இல்ல’ னு சொல்லியே முதலில் சொன்ன விஷயங்கள் பொய் னு சொல்லிட்டீங்க… ” – ஆதவன் சொல்லவும்
“ஆதவா, நீ என்னப்பா… சொல்ற ? அப்போ இந்த கல்யாணம் நடக்க வழி இருக்கா…?” – வேதா கேட்டார்
“அதுக்கு தானே பிளான் பண்ணி இருக்கான் உங்க உத்தம புத்திரன் ” – மகிழன் மனதினுள்
“நான் சொன்னதுக்கு அப்படி தான் அர்த்தம்…” – ஆதவன் விளக்கினான்.
“அது எப்படி பா… அவன் தான் ஒடிட்டானே.. இப்ப பொண்ணு வீட்ல, ராகவன் கிட்ட எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு சொல்லுவேன்…. இவன் முகத்தை கூட பார்க்காம அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுச்சே, இவன் இப்படி என் தலைல மண்ணை அள்ளி போட்டுட்டு போயிட்டானே” – ஆரியனின் தந்தை புலம்ப, ஆதவனோ மனதினுள், “ஒ முகத்தை கூட பார்க்காம நீ சம்மதம் சொல்லி இருக்க… சம்மதம் சொல்றதுக்கு முன்னாடி ஒரு நொடிக்கூட நான் கட்டின தாலிய நீ நினைத்து பார்க்கலைல்ல… ” என்று எண்ணி கோவம் துளிர்விட்டது.
“நடக்கும் சித்தப்பா… பொண்ணு, மாப்பிள்ளையை பார்க்கவே இல்லாம நேற்று தான் பார்த்திருக்கான்னா, அவளோட மனசுல ஆரியனுக்கு எந்த இடமும் இருக்காது” என்று கூறிய ஆதவன், மனதினுள் “அவளை காப்பாற்றி, அவள் கழுத்துல தாலி கட்டின என்னையே அவள் நினைக்கல..” என்று எண்ணமிட, மறு மனதோ, “அவள் கழுத்துல இருந்தத நீ தானே அறுத்து எறிந்தாய்… ” என்று எதிர் குரல் கொடுத்தது.
“அதுனால, பொண்ணு வருத்தப்படாது… நீங்க ராகவன் அங்கிளை சமாளிக்கிறது எப்படின்னு மட்டும் பார்த்தா போதும்” – ஆதவன் சொல்ல
“என்னப்பா ஆதவா… கல்யாணம் நடக்கும்னு சொன்ன? இப்ப ராகவனை சமாளிக்கிறதைப் பத்தி சொல்ற… ? கொஞ்சம் புரியும் படி சொல்லுப்பா…” என்று ருத்ரன், ஆதவனது தந்தை கேட்க, ஆதவனோ பேச தொடங்கினான்.
“ராகவன் அங்கிள் எதிர்ப்பார்த்தது, உங்களை போல ஒரு நல்ல குடும்பம், ஒழுக்கமான மாப்பிள்ளை… மற்றபடி இந்த குறிப்பிட்ட மாப்பிள்ளை தான் அப்படிங்கிறது இல்லை…. நீங்க, உங்கள் பையனை சம்மந்தம் பேசாம, உங்களுக்கு தெரிந்த அல்லது உறவு பையன் சம்மந்தம் கொண்டு வந்து இருந்தாலும், அதை நிச்சயம் ராகவன் அங்கிள் அக்செப்ட் பண்ணி இருப்பார்…. நான் சொல்றது புரியுதா…?” – ஆதவன் கேட்க
“அது புரியுது, ஆனா கடைசிநேரத்துல எங்க போய் நான் வேற மாப்பிள்ளையைத் தேடுறது… அதுக்கு ராகவன் இப்ப எப்படி சம்மதிப்பார்… முன்னாடின்னா வேற.. ஆனா இப்ப மணவறை வரை வந்த பிறகு…?” – ஆரியனின் தந்தை கேள்வியெழுப்ப
” ஒரு கல்யாணத்தை நிறுத்துறதை விட, நடத்துறது பெருசு இல்லையா…? உண்மையான காரணத்தை சொல்லி நிறுத்துறதை விட, புதுசா ஒரு காரணத்தை கண்டுபிடிச்சு நிற்கக்கூடிய கல்யாணத்தை நடத்திடுறது புத்திசாலித்தனம் இல்லையா…?” – ஆதவன் எடுத்துச் சொன்னான் .
“ஆனா, நம்மளோட சம்மந்தப்பட்டதுனால ராகவனுக்கு இவ்ளோ பெரிய கஷ்டத்தைக் கொடுத்திட்டு, அதை மேலும் தொடராம, நடந்ததுக்கு, ராகவன் கிட்ட நாம மன்னிப்பு கேட்டு ஒதுங்குறது மேல் இல்லையா…? ஏன் மறுபடியும் வேறு மாப்பிள்ளையை நாமளே தேடணும் ?” – ஆரியனின் தந்தை கூனிக்குறுகி கேட்டார் .
“ஏன்னா அவரு உங்களோட நண்பர்…” – ஆதவன் பதிலளிக்க
“என்னோட மன நிலைல, இப்போ என்னால எதையுமே யோசிக்க கூட முடியல, இப்போ ராகவனுக்கு ஏத்தமாதிரியான மாப்பிள்ளை .. நம்ம சொந்தத்துல கல்யாண வயசுல யாரு இருக்காங்க…?” – ஆரியனின் தந்தை பதட்டத்துடன் கேட்க
“அட லூசு அங்கிள், இந்த எரிமல தான் எதிர்ல இருக்குதே …” – மகிழன் மனதில்
“ராகவன் அங்கிளோட வசதிக்கு தகுந்த மாதிரி , அவரு கௌரவுத்துக்கு குறையாம இருக்கற இடங்களை முதல்ல தேர்வு செய்யுங்க… அதுல அவரு மனசை தொடுறது போல ஏதாச்சும் விஷயம் நீங்க தேர்வு பண்ணி இருக்கற பையன்களில் இருந்தால், அவரை நிச்சயம் இதற்கு சம்மதிக்க வைக்கலாம்..” – ஆதவன் எடுத்துக் கொடுத்தான்.
“டே இதுக்கு நீ நேரடியாவே உன் பெயரை சொல்லி இருக்கலாம் டா…” – மகிழன் மனதில்.
“ஆனா அந்த பையன் ஒத்துக்கணுமேப்பா…? இப்படி திடுதிப்புன்னு சொன்னா… யாரு கேட்பா… ? நான் பெத்த புள்ளையே என்னை ஏமாத்திருச்சு….” ஆரியனின் தந்தை விசனப்பட்டார்.
“ஐயோ சொட்ட அங்கிள், இவன் கேட்பான்..இவன்கிட்ட மட்டும் சொல்லி பாருங்களேன்” – மகிழன் மனதில்
“அதுக்கு நீங்க, அந்த பையன் யாரு சொன்னா கேட்பானோ அப்படி ஒரு நபர்ட்ட முதல்ல பேசணும்…. அவுங்களோட சொல்ல தட்டாத பையன் கிட்ட ,அவங்களையே பேச வச்சு நீங்க சம்மதம் வாங்கணும்… கொஞ்சம் கஷ்டம் தான்… ஆனா முடியாதது இல்ல…இப்படி செஞ்சா… ஒரு பொண்ணோட சாபம் உங்க குடும்பத்துக்கு வராது… உங்க நட்பும் கெடாது….” – ஆதவன்
இதைக் கூறிய ஆதவன் அனைவரிடமும் பொதுவாக, “சரி அங்கிள் நீங்க பாருங்க… எனக்கு முக்கியமான அக்ரோ பிசினஸ் மீட் இருக்கு… வேதா அம்மா… இதுக்கு மேல என்ன இருக்க சொல்லாதீங்க… நீங்க சொன்னதுனால தான் நான் நேத்து நைட் இங்கே தங்க சம்மதம் சொன்னேன்…. நீங்க வருத்தப்பட கூடாதுன்னு… அதுனால ப்ளீஸ் அம்மா…நாங்க கிளம்புறோம், அப்பா நான் ஊருக்குப் போய்ட்டு வண்டியை அனுப்புறேன்.. சாயங்காலமா நீங்களும் அம்மாவும் வந்திடுங்க, வரேன் சித்தப்பா.. ஆரியன் சீக்கிரமே வந்துருவான்..கவலைப்படாதீங்க ” என்று கூறி ஆதவன் வாசலை நோக்கி நடக்க, வேதா அம்மாவின் மனதில், ‘கல்யாண மேடை வரை வந்து நின்று போன திருமணப் பெண்ணின் நிலைமை மேற்கொண்டு என்னவாகும் ’ என்று எண்ணம் வர இழையினியின் முகம் கண் முன் வந்து போனது.
ஆதவன் வெளித்தாழ்வாரத்தை தாண்டி போக, அதே நேரம் ராகவன் தனது நண்பனின் வருகைக்காக வெளித் தாழ்வாரத்தில் நடந்துக்கொண்டு இருந்தார். ஒரு புறம், மணமகன் காணாமற் போன செய்தி அறியாமல் கல்யாண வேலைகள் வெகு சிறப்பாக நிகழ்ந்துக்கொண்டு இருந்தன….
நிகழ்ந்தவைகளை பார்த்த ஆரியனின் தந்தைக்கு, அவரது மனதில் சட்டென்று சில எண்ணங்கள் உதிக்க, “அண்ணி… உங்களை நான், கூடப்பிறந்த பிறப்பா நினைச்சு கேட்குறேன்…. எங்க அண்ணன் குடும்பத்துல நீங்க சொல்றது தான், அதாவது, வேதா அண்ணியோட வாக்கு தான் வேத வாக்குன்னு எனக்கு தெரியும்… யாருக்கும் அசைந்துக்கொடுக்காத ஆதவன் தம்பியே உங்க ஒருத்தர் சொல்லுக்கு மட்டும் தான் கட்டுப்படும்… இந்த இக்கட்டான சமயத்துல, என் நண்பன் ராகவனுக்கு ஏத்தமாதிரியான மாப்பிள்ளை ஆதவன் தம்பியைத் தவிர வேற யாருமே இருக்க முடியாது .அதனால,பெரிய மனசு பண்ணி, ஆதவன் தம்பியையே மாப்பிள்ளையாய் மணவறைல அமர சொல்லுங்களேன்…. நீங்க மனசு வச்சா நிச்சயம் நடக்கும் அண்ணி…” என்று அவர் யாசிக்க, ஆதவன் தனது சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவான் என்ற சொல் அவரை பூரிக்க செய்தது.
ஆரியனின் தந்தை வேதா அம்மாவிடம் கூறியது, அவர் மனதினுள் ஓட, அவரது மறு மனதில், “திருமணம் வரை வந்து நின்று போன பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானது… நிச்சயம் இதுக்காகவேணும் ஏதாவது செய்யணும்” என்று எண்ணி தீர்மானம் எடுத்துக் கொண்டார்.
வேதா அம்மாவிடம் கூறியவர், அவரது அண்ணனிடமும் யாசிக்க, ருத்ரனோ தம்பியின் கண்ணீருக்காக சம்மதம் சொல்ல, வேதா அம்மா, அவர் மனதில் இழையினி பற்றி உதித்த எண்ணத்திற்காக சம்மதம் சொன்னார்….
வாசலுக்கு சென்ற ஆதவனை பார்த்து புருவம் உயர்த்திய ராகவன், அவனிடம் நெருங்கும் முன்னரே, ஆரியனின் தந்தை ஆதவனை வெகுவேகமாக அவர்கள் இருந்த உள்ளறைக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
உடனே ஆதவன் அவர் பின்னே செல்ல, ஆதவனிடம் அவரது வேண்டுக்கோளை வைக்க, ஆனால் அவனோ, தான் மணமகனாகும் வாய்ப்பை நிராகரிக்க மகிழனோ மனதினுள், “டே என்ன தான் டா நடக்குது இங்க…” என்று எண்ணிக்கொண்டான்.
அதன் பின் இறுதியாக ஆதவன் வேதா அம்மாவின் கட்டளைக்கு பணிவதை போல பெரியவர்களின் சம்மதத்தை பெற, அவனது காதல் தேவதையை கரம் பிடிக்க தயாரானான்…. ராகவனை அழைத்து தயங்கி தயங்கி விஷயத்தை கூறி….ஆதவன் கூறியதையும் கூறி, ஆதவன் அனைத்து வகையிலும் ஆரியனை விட சிறந்தவன் என்று ஆரியனின் தந்தையே ஆதவனை புகழ, ஒரு வழியாக ராகவனை, அவரது மகளை ஆதவனுக்கு மணமுடிக்க சம்மதிக்க வைத்தனர்.
ராகவனுக்கு உள்ளூர மகிழ்ச்சியே… ஆனால் அதை சட்டென்று வெளிக்காட்டாமல் ஒரு சில நிமிடங்கள் சென்ற பிறகு ஆதவனை ‘மாப்பிள்ளை’ என்று தழுவி கொண்டார். அவரது மனமோ, “நம்ம கோடு போட்டா…மருமகன் ரோடே போட்ருவாரு போலயே….” என்று எண்ணமிட, அவரது உதட்டோடு சேர்த்து அவருடைய பெரிய மீசையும் சிரித்தது…
ஓரளவு மேலோட்டமாக, ஆரியனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.. ஆதலால் ஆதவன் தான் மாப்பிள்ளை என்று அனைவருக்கும் அறிவிக்கப்பட, ஆரியனை விட, ஆதவன் பெரிய இடம் என்பதால் ஒரு சிலர் வம்பு வளர்க்காமல் ஒதுங்கி கொள்ள, ஒரு சில நல்ல உள்ளங்கள் புரிந்துக்கொள்ள, ஒரு சில புரணி கும்பல்கள் மட்டும் வஞ்சனை இல்லாது வதந்திகளை கிளப்பிக்கொண்டு இருந்தன…..
இழையினியிடம் மட்டும் யாரும் எதுவும் கூற வேண்டாம் என்று ராகவன் கண்டிப்பாக கூற, ராகவனின் பேச்சை மீறி யாரும் எதுவும் கூறவில்லை. இழையினியும் இது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. ராகவனுக்கு தேவை, இழையினியின் மகிழ்ச்சி மட்டுமே… ஆதவன் தான் மாப்பிள்ளை என்று அவள் அறியும் நொடி அவள் கண்களில் தெரியும் நிம்மதியை மட்டுமே அவர் காண விழைந்தார். அதற்காகவே அவளிடம் மறைத்தார்….
இப்போது, திருமணம் முடிந்து, தந்தை செய்த சமிங்ஞையில் ஆதவனை விழிவிரித்து பார்த்தவள், ஒரு சில நொடிகளில் தனது பார்வையை அவனிடம் இருந்து விலக்கிவிட்டு தனது தந்தையை காண, அந்த நொடி ராகவன் அவளிடமிருந்து எதிர்ப்பார்த்த நிம்மதி, அவளது கண்ணில் படர்ந்திருந்து, அவளது அதரமும் பிரிந்து பிரியாமலும் மெலிதாக விரிந்தது…..
அவள் இதழ்கள் நிம்மதியில் விரிய… அதே நேரம் ஆதவனது தாடை கோபத்தால் இறுகியது…..
அடுத்ததாக அக்னியை சுற்றி இருவரும் வலம் வர, மேள தாளங்களும் நாதசுர ஓசைகளும் மங்களமாக நாலாப்புறமும் ஒலிக்க, மன்னவன், மயிலவளின் கால் விரல் பிடித்து மெட்டியிட, அழகிய ஓவியமாக அந்த திருமணம் பார்ப்பவரை நெஞ்சை கவர்ந்தது….
மெட்டியிட அவள் பாதம் தொட்ட ஆதவனது கை, அவ்விடத்திலேயே சில நொடிகள் நிலைக்க, முதன் முதலில் எந்த பாதத்தை கண்டு மதி மயங்கினானோ, அந்த பாதத்தை அவனின் ஒரு கை வருட, மற்றொரு கை உரிமையாக அவள் பாதத்தில் மெட்டி அணிவித்தது… அந்த நொடி அவனது இறுகிய தாடை கூட லேசாக தளர்ந்து, அவனது உதடுகள் ஒரு மெல்லிய நிம்மதி புன்முறுவலை தவழவிட்டது…
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க, ராகவனிடம் வந்த இழையினியின் கண்களில் நீர் முத்துகள் ஜொலிக்க, தனது தந்தையின் தோளில் சாய்ந்தவள், மனதிலோ, “நான் கேட்காமலே என் தேவை அறிந்து இதுவரை எனக்கு எல்லாம் செய்த நீங்க, எனக்கு விருப்பமான மாப்பிளையையே , நான் ஒரு வார்த்தை கூட சொல்லாமலே எப்படிப்பா உங்களால தேர்வு செய்ய முடிந்தது…? நீங்கதான் என் அப்பா….” என்று பெருமையாக ‘அப்பா’வில் அழுத்தம் கொடுத்து நினைத்துக் கொண்டாள்.
அடுத்ததாக மற்ற சடங்குகளை பற்றி சுற்றி இருந்தோர் பேச, அப்போது ஆதவன் கூறிய வார்த்தைகள், ராகவனையும், இழையினியையும் கலங்க வைத்தது….