அத்தியாயம் – 17
வழியில் காலை உணவை முடித்து அவர்கள் பயணம் மூணாரை நோக்கி ஆரம்பித்தது. ராகவ் அமைதியாகவே வந்தான்.
என்றுமில்லா திருநாளாய் ஜெயக்னா வாய் ஓயாது வளவளத்தாள் அவனிடம். லாட்ஜ் பற்றி ஆரம்பித்து அவன் அன்னை, அக்கா, அக்கா மக்கள் என்று பேச்சு நீண்டு வளர்ந்து பின் தன்னைப் பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வெகு நாட்களுக்கு பின் மனம்விட்டு பேசுகிறாள் என்பதை அவளே உணரவில்லை. ராகவ் எதுவும் கேட்காமலே அவளாய் பேசிக் கொண்டிருந்தாள்.
“நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… நீங்க என்ன உம்முன்னு வர்றீங்க??”
“என்ன சொல்லணும்?? அதான் உம் கொட்டுறேன்ல…”
“உம் கொட்டினா போதுமா??”
“அப்போ என்ன செய்ய சொல்றே?? உம்மா கொடுக்கணுமா…” என்று அவன் சொல்லவும் ‘என்ன இப்படி பேசறான்’ என்று அவள் முகம் சிவந்து வேறு புறம் திருப்பிக்கொண்டாள் பார்வையை.
அவன் சொன்னதை நினைத்து நினைத்து அவ்வப்போது அவள் முகம் சிவந்துக் கொண்டிருந்ததை வண்டி ஒட்டிக் கொண்டு இருந்தாலும் அவளை பார்த்துக் கொண்டு வந்தவன் உணர்ந்தான்.
சிறிது நேரம் வெளியே வேடிக்கை பார்த்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அது முடியவில்லை. “எவ்வளோ நேரம் தான் அமைதியா வருவீங்க??”
“மூணு மணி நேரத்துக்கு மேல ஆகும் நாம ஊர் போய் சேர, ஏதாச்சும் பேசிட்டு வரலாம்ல…” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.
“மூணார்ல இருந்து கிளம்பி வரும் போதும் அதே மூணு மணி நேரம் தான் ஆச்சு… அப்போ நான் மட்டும் வண்டி ஓட்டிட்டு தான் வந்தேன்… என் கூட பேச ஆளேயில்லை…”
“அப்… அப்போ தூங்கிட்டேன் நீங்க எழுப்பியிருக்கணும்…”
“இப்பவும் வேணா தூங்கேன்…”
அவளுக்கு தூக்கம் வருவேனா என்றிருந்தது. உள்ளே இதுவரை அடைத்துக் கொண்டிருந்த எதுவோ அவளைவிட்டு வெளியே வந்திருந்தது.
மனதின் பாரம் முற்றிலும் அகன்றிருந்த நேரத்தில் அவனுடன் பேசும் அந்த தனிமை பொழுதை மனம் மிகவும் விரும்பியது. அதை சொன்னால் வேறு ஏதாவது சொல்லி வாயடைக்க வைக்கிறானே என்றும் இருந்தது அவளுக்கு.
“என்ன அமைதியாகிட்ட??”
“நான் பேசிட்டே வர தயார் தான்… நீங்க தான் வம்பு பண்ணிட்டு இருக்கீங்க…”
“நான் இதுவரைக்கும் எதுவுமே செய்யவே இல்லை… அமைதியா தான் இருக்கேன்…” என்றான் அவளை ஆழ்ந்து நோக்கி.
‘இப்படி தான் பார்த்து, இப்படி தான் பேசி என்னை பேச விடாம பண்ணுறான்’ என்று மனதிற்குள் அவனிடம் சிணுங்கிக் கொண்டாள். புதிதாய் ஒரு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
“எனக்கு இப்படி அமைதியாவும் வரமுடியலை… நான் பேசினா நீங்க வேற ஏதோ பேசி என்னை பேசவிடாம பண்ணுறீங்க…” என்று குறைப்படித்தாள்.
“சரி நீ பேசு நான் கேட்டுக்கறேன்… எப்பவும் அது மட்டும் தானே நடக்குது…” என்று அவன் சொன்ன தொனியில் அவள் முகம் சற்றே வாடியது.
எப்போதும் அவள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதும் அதை அவன் ஆமோதிப்பதும் தானே நடக்கிறது அதை சுட்டிக் காட்டுக்கிறான் என்று புரிந்தது.
அவன் நிச்சயம் அதை குறையாய் சொல்லவில்லை… ஆனால் அவளுக்கு அப்படி தான் தோன்றியது.
“நான் ரொம்ப பேசிட்டனா… என் மேல கோபமா…” என்று தனக்கு வராத அமைதியான குரலில் கேட்டிருந்தாள் அவள்.
“உனக்கு தான் வரலைல எதுக்கு அப்படி பேசிட்டு… நீ எப்பவும் போல அதிரடி ஜெயக்னாவாவே இரு… நான் எதுவும் சொல்ல மாட்டேன்…”
“இல்லை நீங்க கோபமா பேசறீங்க…”
“உனக்கு போரடிச்சா பாட்டு கேளு… எனக்கு இப்போ பேசுற மூட் அவ்வளவா இல்லை… அதுக்காக நான் கோபமா இருக்கேன்னு அர்த்தமில்லை…”
“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்… நெறைய டைம் இருக்கு அதுக்கு…” என்று பேச்சு முடிந்தது என்பது போல் அவன் ஜீப்பை செலுத்துவதில் மும்முரமானான்.
அவன் பேச்சில் மனம் சோர்ந்த போதும் தான் அவனை அதிகம் காயப்படுத்தியிருக்கிறோம் அது தான் அவன் அப்படி இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டாள்.
மூணாரின் பாதையில் ஏற ஆரம்பித்ததுமே குளிர்க்காற்று வீச ஆரம்பித்தது. வானம் லேசாய் இருட்டிக்கொண்டு இதோ பெய்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் மழை சடசடவென்று பெய்ய ஆரம்பித்து சோவென்று கொட்டியது. ராகவினால் வண்டியை செலுத்த முடியவில்லை ஓரமாய் நிறுத்திவிட்டான். இரு சன்னலையும் ஏற்றியிருந்தாலும் உள்ளேயும் ஈரம் உணரப்பட்டது.
புடவையை இழுத்து போர்த்திய போதும் ஜெயக்னாவிற்கு குளிரெடுத்தது லேசாய் ஏதோவொரு இடுக்கின் வழியே ஈரம் உள்ளே வந்துக் கொண்டிருக்க சற்று சாய்ந்து அமர்ந்தாள் அவள்.
அவன் மீது சாய்ந்திருக்கிறோம் என்பதை உணராமலே கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அவனருகே வந்திருந்தாள்.
சில நொடிகளில் மழை நின்று போனது. மழை என்ற ஒன்று பெய்யவே பெய்யாதது போல வானம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கருமைநிற ஆடையை மாற்றி இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
வண்டியை கிளம்பிய ராகவ் தன் மேல் சாய்ந்திருந்தவளை ஒரு பார்வை பார்த்தான், ஒன்றும் சொல்லவில்லை. தன் போக்கில் கைகள் வண்டி ஓட்டுவதில் கவனமாகியது.
அருகில் அமர்ந்திருந்தவள் அவன் மீதே உறங்கியிருந்தாள் இப்போது. இடையில் அவன் லாட்ஜிற்கு அழைத்து இருவருக்கும் உணவு தயார் செய்யச் சொல்லியிருந்தான்.
எப்படியும் அவர்கள் மூணாருக்கு சென்று சேர மதியத்தை தொட்டுவிடும் என்பதறிவான். வீட்டிற்கு சென்று அதற்கு மேல் இருவருக்கும் உணவு தயாரிக்க கால தாமதம் ஆகும் என்பதாலேயே லாட்ஜில் சொல்லிவிட்டான்.
ஜெயக்னா மெதுவாய் கண்விழித்து பார்த்தாள். விழுந்தடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் சுற்று முற்றும் பார்க்க அவள் கட்டிலில் படுத்திருந்தாள்.
‘என்ன இது நான் எப்போ இங்க வந்தேன்…’ என்று கண்களால் அறையை சுற்றி பார்வையை ஓட்ட அது அவர்களின் அறை என்பது புரிய சற்று ஆசுவாசம் தான்.
‘அவன் தான் தூக்கிட்டு வந்தானா… இல்லை கைத் தாங்கலா அழைச்சுட்டு வந்தானா… அந்தளவுக்கா நமக்கு சுரணை இல்லாம போச்சு’ என்று தான் அவளின் யோசனை.
வெளியில் வந்து பார்க்க ராகவ் டிவியில் ஏதோ சேனல் மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னை எழுப்பியிருக்கலாம்ல…”
“எவ்வளவு நாளா சரியா தூங்கலையோ… இன்னைக்கு நிம்மதியான உறக்கம் மாதிரி தெரிஞ்சுது அதான் எழுப்பலை…” என்றான் தொலைக்காட்சியில் இருந்து பார்வையை அகற்றாமலே.
“ஒரு பத்து நிமிஷம் எதாச்சும் சாப்பிட செஞ்சிடறேன்…” என்று குற்றவுணர்வுடன் சமையலறை பக்கம் செல்ல “வேணாம் நான் லாட்ஜ்ல இருந்து கொண்டு வரச்சொல்லிட்டேன்…”
“உனக்காக தான் வைடிங்… நீ போய் முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்…” என்று இருக்கையை விட்டு எழுந்தான்.
‘ரொம்ப பண்றான்டா இவன்…’ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டு முகம் கழுவி வந்து அமர்ந்தாள்.
இருவருமாய் உண்டு முடிக்க “எனக்கு வேலையிருக்கு லாட்ஜ்க்கு போறேன்” என்று கிளம்பியும் விட்டவனை ஓங்கி ஒன்று வைக்கலாமா என்று தோன்றியது அவளுக்கு.
அவனிடம் நிறைய பேச வேண்டும் என்று வண்டியில் வரும் போதே அவள் எண்ணியிருக்க அவன் வேறு ஏதோ பேசி பேச்சை மாற்றியிருந்ததால் சரி வீட்டில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவள் தான் அப்படியே உறங்கிப் போயிருந்தாள் அப்போது.
இப்போது என்னடாவென்றால் இவன் பாட்டுக்கு வேலையிருக்கிறது என்று கிளம்பிச் செல்கிறானே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
அவன் சட்டையை பிடித்து இழுத்து வந்தால் என்ன என்று கூட தோன்றியது. ‘வேணாம் பயந்திடுவான் சின்ன பையன்…’ என்று நினைத்துக் கொண்டாள். (கொழுப்பு தானே)
அவன் கிளம்பிய பின் தனக்குள் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் வந்து போக அதோ இதொவென்று அவளும் பொழுதை நெட்டித் தள்ளப் பார்க்க அதுவோ நகர்வேனா என்று நகர்ந்தது.
மணி ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்று ஒவ்வொரு மணி நேரம் கடக்கும் போதும் இதோ வந்துவிடுவான் அதோ வந்துவிடுவான் என்ற அவளின் எதிர்பார்ப்பு பொய்த்துக் போக அதற்கு மேல் தாங்காது அவனுக்கு அழைத்துவிட்டாள்.
“ஹலோ…”
“எங்க இருக்கீங்க??”
“இதென்ன கேள்வி?? சொல்லிட்டு தானே வந்தேன் லாட்ஜ்க்கு வந்திருக்கேன்…”
“வீட்டுக்கு எப்போ வருவீங்க??”
“இன்னைக்கு இங்க தான் இருக்க மாதிரி இருக்கும்ன்னு நினைக்கிறேன்…” என்று அவன் சொன்னதும் அவள் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.
“டேய் என்னடா கொழுப்பா உனக்கு… மரியாதையா வீட்டுக்கு வந்து சேரு… இல்லைன்னா என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது…”
“என்ன பண்ணுவே??” என்றான் அவன் அசராமல்.
“லாட்ஜ்ன்னு பார்க்க மாட்டேன்… உன் சட்டையை பிடிச்சு இழுத்திட்டு வந்திடுவேன்…”
“வா வந்து இழுத்திட்டு போ…” என்று அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான் அவன்.
ஒன்றும் சொல்லாமல் போனை கட் செய்தவள் “இவனை எல்லாம் போனா போகட்டும்ன்னு விட்டா ஓவரா தான் பண்ணுறான்… நல்ல புள்ளையாச்சே ஒழுங்கா பேசலாம், பழகலாம்ன்னா…”
“என்னைய ரவுடியாக்குறான் இவன்…” என்று சத்தமாக திட்டிக்கொண்டே கையில் அகப்பட்ட அவள் மணிபர்சை எடுத்துக்கொண்டு வெளியில் வர கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்துக் கொண்டிருந்தான் ராகவ்.
அவன் கிளம்பும் போது ஜீப் எடுத்து சென்றிருக்கவில்லை, ஆட்டோவில் தான் சென்றிருந்தான்.
இப்போது யாரோ ஒருவருடன் பைக்கில் வந்து இறங்கியிருந்தவன் தெரு முனையில் இருந்து நடந்து வரும் வேளை தான் ஜெயக்னா அழைத்து அவனிடம் பேசியிருந்தாள்.
அவனை கண்டதும் என்ன உணர்கிறோம் என்று உணரவில்லை ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டிருந்தாள். “என்ன பண்ணுறே??” என்று அவளை விலக்க முயற்சிக்க “என்ன வேணா பண்ணுவேன்…” என்றாள் அவள் விலகாமல்.
இதழில் குறுநகை ஓடிய போதும் இறுக்கமாய் காட்டிக்கொண்டு “டோர் லாக் பண்ணிட்டு வா நான் உள்ளே போறேன்…” என்று அவளை தள்ளி நிறுத்தி உள்ளே சென்றிருந்தான்.
“ரொம்பவும் டூ மச்சா பண்றேடா நீ…” என்று காலை தரையில் லேசாய் உதைத்து பின் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தால் அவன் குளியலறை புகுந்திருந்தான்.
“சாப்பிட்டானா தெரியலையே…” என்று அவள் முணுமுணுக்க “எல்லாம் ஆச்சு…” என்றான் அவன் குளியலறையில் இருந்துக் கொண்டே
“நீ சாப்பிட்டியா??”
“ஹ்ம்ம் சாப்பிட்டேன்…” என்று ஈனஸ்வரத்தில் பதில் சொன்னாள்.
அந்த அறைக்குள்ளேயே அங்குமிங்கும் அவள் நடமாட அவளை சோதித்து அவன் அரைமணி நேரம் கழித்தே குளியலறைவிட்டு வெளியில் வந்தான். உள்ளேயே உடை எடுத்து சென்றிருப்பான் போல வெளியில் வரும் போது இரவு உடையுடன் தான் வந்தான்.
“எவ்வளவு நேரம் தான் குளிப்பீங்க??”
“காலையில இருந்து வண்டி ஓட்டி அலுப்பு… அதான் ஹாட் வாட்டர்ல உடம்பு வலி தீர குளிச்சேன்…” என்றான் விளக்கமாய்.
“எனக்கு உங்ககிட்ட பேசணும்…”
“பேசு…”
“என்னை பாருங்க முதல்ல…”
“ஏன் பார்க்கலைன்னா பேச மாட்டியா??”
“பாருடான்னா ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கே… என்ன நினைச்சுட்டு இருக்கே நீ…” என்று மரியாதை சுத்தமாய்விட்டு கொஞ்சம் சத்தமாய் குரல் கொடுத்தாள்.
அவனோ அவள் இடையோடு வளைத்து அவளருகே நெருங்கி நின்றிருந்தான் இப்போது.
“இதுக்காக தான் காத்திட்டு இருந்தேன் காலையில இருந்து…” என்றவன் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான்.
அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காதவள் முதலில் திகைத்து பின் நிம்மதியாய் அவனை பார்த்தாள்.
‘உனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் செய்யத் தெரியுமா, நாங்கலாம் யாரு’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தாள் இப்போது.
“ஐ லவ் யூ சொன்னா என்ன சொல்லுவீங்க??”
“பதில் சொல்வேன்…”
“என்னன்னு…” என்ற அவள் கேள்விக்கு அவன் அவள் இதழில் இதழ் பதித்து தன் பதிலை சொல்லியிருந்தான் இப்போது.
முன்பு போல அவனை விலக்கி தள்ள முயற்சிக்காதவள் மாறாய் அவன் முத்தத்தில் தன்னை தொலைத்து நின்றிருந்தாள்.
நீண்ட நொடிகளுக்கு பின் அவளை அவன் விடுவிக்க “நீங்க சொல்ல மாட்டீங்களா??”
“சொன்னா நீ என்ன தருவே??”
“என்னை வேணும்னாலும் தருவேன்…”
“என்ன சொன்னே?? திரும்ப சொல்லு…” என்றான் காதில் விழாதவனாக.
“என்னையே எடுத்துக்கோன்னு சொன்னேன்டா மடையா…” என்று அவன் காதில் கிசுகிசுத்தாள்.
“அதெல்லாம் அப்புறம்… இப்போ சொல்லு திடிர்னு ஏன் இந்த மாற்றம் உன்கிட்ட?? என்னன்னு தெரியும் ஆனாலும் உன்னோட மனசை முழுசா புரிஞ்சுக்க தான் கேக்கறேன்…” என்றவன் அவளை அணைத்தவாறே கட்டிலில் அமர்ந்தான் இப்போது.
அவள் ஒன்றும் சொல்லாமல் அன்று காலை அவள் கழுத்தில் அவன் புதிதாய் கட்டியிருந்த திருமாங்கல்யத்தை எடுத்து நெகிழ்ச்சியுடன் அவன் முன் நீட்டினாள்.
முகத்தில் சொல்லொணாத சந்தோசமும், புதுப்பொலிவும் அவளுக்கு. அவளையே கனிவாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் மனநிலை புரிந்தது. இருந்தாலும் அவளே சொல்லட்டும் என்று பார்த்திருந்தான்.
“எப்படி சொல்றதுன்னே எனக்கு தெரியலை?? இந்த நிமிஷம் நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா…”
“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்… எங்கப்பா சொன்னாரு நீங்க ரொம்ப நல்லவருன்னு… சத்தியமா அப்போ எனக்கு அது புரியலை…”
“ஏன்னா அப்போ என் கண்ணை ஈகோ மறைச்சுட்டு இருந்துச்சு… நீங்க வேற அன்னைக்கு அப்படி பேசினீங்களா அந்த கோபம் வேற…”
“நீங்க பெண் அடிமையை விரும்பற ஒரு ஆளுன்னு மனசுல ஒரு எண்ணம் விழுந்துச்சு… அக்காவுக்கு உங்களை பேசினப்போ நான் தான் நிறைய தடுத்தேன்…”
“உங்க படிப்பு சரியில்லைன்னு முதல்லவே தடுத்தேன்… நீங்க யாருன்னு தெரிஞ்ச பிறகு அதையும் வீட்டில சொல்லி வேணாம்ன்னு சொன்னேன்… இப்படி எல்லா கிறுக்குத்தனமும் செஞ்சேன்…”
“மேகா அன்னைக்கு சொன்னா… நான் சொன்னதுனால தான் அவ உங்களைவிட்டு போனதா…”
“ஹ்ம்ம் தெரியும்…”
“தெரியுமா?? எப்படி??”
“அப்புறம் சொல்றேன், முதல்ல நீ சொல்லி முடி…”
“அன்னைக்கு அவ அப்படி சொன்னப்போ எனக்கு கோபம் வந்துச்சு. அவளை நல்லா திட்டிவிட்டேன், எங்கப்பா மேல எனக்கு ஆயிரம் கோபம் இருக்கலாம்…”
“ஆனா ஒரு விஷயத்தை அவர் பத்து முறை ஆராயாம எதையும் செய்ய மாட்டார்ன்னு எனக்கு தெரியும்… நான் தனியா ஒரு கம்பெனி ஆரம்பிக்க போறேன்னு சொன்னப்போ உடனே எனக்கு சரின்னு சொல்லவே இல்லை…”
“அதை பத்தி பல பேர்கிட்ட விசாரிச்சு அதுல எந்த பிரச்சனையும் எனக்கு வராதுன்னு தெரிஞ்ச பிறகு, சத்யன் அண்ணாவை எனக்கு துணைக்கு வைச்சு அப்புறம் தான் என்னை என் போக்குல விட்டார்…”
“நான் முதல்ல உங்களை வேண்டாம்ன்னு சொல்லியிருந்தாலும் நாளாக ஆக அப்பா சரியா தான் செஞ்சிருப்பார்ன்னு தோணிச்சு…”
“ஆனாலும் உங்களை அடிச்சுட்டு உங்களை எப்படி அத்தான், மாமான்னு கூப்பிடன்னு எனக்கு ஒரே சங்கடம்… எங்க வீட்டில நம்மோட முதல் சந்திப்பை பத்தி சொன்ன நானு உங்களை அடிச்சதை மட்டும் சொல்லவேயில்லை…”
“எங்கப்பா என்னை உண்டுயில்லைன்னு ஆக்கிருவாருன்னு ஒரு பக்கம் பயம்… மறுப்பக்கம் வீட்டு மாப்பிள்ளையை அடிச்சது தப்புன்னு என்னை உங்ககிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுவாங்கன்னு தோணிச்சு…”
“எனக்கு தான் வீம்பு அதிகமாச்சே… உங்ககிட்ட வந்து மன்னிப்பு கேட்க எல்லாம் எனக்கு மனசில்லை… சோ வீட்டில சொல்லலை…”
“அப்புறம் அக்கா ஓடிப்போய் அப்பா ஏதேதோ பேசி ஒரு இக்கட்டுல உங்ககிட்ட வந்து நின்னேன்…”
“அந்த நிமிஷம் ரொம்பவும் அவமானமா இருந்துச்சு… என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரு பொண்ணே வந்து கேட்கறது எவ்வளவு பெரிய சங்கடம் தெரியுமா…” என்று வலியுடன் சொன்னவளை அணைத்துக் கொண்டான்.