மயிலிறகு – 5

 

முள்ளம்பன்றிகள், தனது முட்களை ஈட்டி போல் எரிந்து தாக்கும் சக்தி உடையது என்று பரவலாக பேசப்பட்டாலும், அது உண்மை கிடையாது…. அது எதிரிகளை நெருங்கி, தாக்கி, அப்போது எதிரிகள் மீது சிக்குண்ட முட்கள் மட்டுமே எதிரின் உடலில் அமிழ்ந்து விடும்.. அப்படி நடந்தால் நிச்சயம் காயப்பட்டவர்கள் உயிரோடு இருக்க இயலாது…..

 

 

இப்போது ஆதவன் கண்முன்னே அப்படி ஒரு சம்பவம் தான் நடக்கவிருக்கின்றது…. ஏனெனில் முள்ளம்பன்றி, இழையினிக்கு வெகு அருகில் தான் இருக்கின்றது….

அந்த பெண்னை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆதவனிடம் மேல்நோக்கி இருக்க, மற்றதை பற்றி சிந்திக்க நேரம் இல்லாது அவளது தோளை சரட்டென்று அவனது வலிய கரம், பற்றி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில், வெடவெடத்திருந்த இழையினி கால்கள் தொயிந்து அவன் புறமாக சரிய,  அவள் அணிந்திருந்த சுடிதாரின் ஜிப்பும் அவன் இழுத்த வேகத்தில் கழண்டு அவளது துணியும் பின்புறமாக கிழிந்துவிட அந்த நிலையில் அவள் ஆதவன் மீது பின்புறமாக சரிய, இருவரும் சுதாரிக்கும் முன் இவை யாவும் நிகழ்ந்து முடிந்திருந்தது….

 

இழையினி விழுந்ததால், தடுமாறிய ஆதவன், அவன் நிலை பெறுவதற்கு முன்,  சற்று சறுக்கலான இடமாக இருந்த காரணத்தால்  இருவரும் ஒருமுறை ஒருவர் மீது ஒருவர் புரளவேண்டி இருந்தது….இப்போது சரியாக இழையினி மேல் ஆதவன் இருக்க, அவனது கை அவள் மேலும் சறுக்கில் சரிந்து விடாமல் இறுக்கமாக பற்றி இருந்தது….

 

அவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில், சுற்றத்தை கவனிக்க தவற, அப்படியே கவனிக்க முனைந்தாலும் முதலில் சுதாரித்து எழ முயன்றவர்கள் அக்கம் பக்கம் பற்றி சிந்திக்கவில்லை… இருளில் மேலும் ஏதேனும் பள்ளத்தில் விழாமல் இருக்க கைகளில் கிடைத்தவற்றை பற்ற தான் அவர்களது மூளை வேலை செய்தது…. ஆதலால் இழையினியும் எதையும் கவனிக்கவில்லை… அவளுக்கு ஏதும் இல்லை என்றும், முள்ளம்பன்றியின் முள் அப்பெண்ணை தீண்டுவதற்கு முன் தப்பித்தோம் என்ற சிந்தனையே ஆதவனுக்கு இருந்தது….

 

இப்பொழுது, பெரிய பெரிய பருத்தி மூட்டைகளை போல பறந்து விரிந்திருந்த அந்த முகில் கூட்டங்கள், நிலவை, முழுமையாக மறைத்திருக்க, இருவரது முகமும் இருவருக்கும் தெரியவில்லை….

 

“இங்க பாருங்க… உங்களுக்கு எதுவும் இல்ல… வி ஆர் சேப்… என்று கூறிக்கொண்டே அவன் விலக, அப்பொழுது தான் அவளை பிடித்திருந்த அவனது கைகள் உணர்ந்தது, அவளது முதுகு பகுதி ஆடை கிழிந்திருந்ததை…..

 

வேகமாக பதறி ஆதவன் விலக, இழையினி கூனிக்குறுகி அருகில் இருந்த மரத்தோடு சாய்ந்தவள் அதிர்ச்சியில் உறைய, நடந்தது விபத்து தான் என்றாலும், ஒரு ஆண் முன் இப்படி நிற்க நேரிட்டதனால் அவள் கண்கள் கண்ணீரை வற்றாத நதியாய் உதிர்க்க தொடங்கியது…. 

 

இவையாவும் இரண்டு மூன்று நிமிடங்களில் நடந்த நிகழ்வு தான்… ஆனால் இருவரது வாழ்க்கையும் புரட்டிபோடும் வல்லமை கொண்ட சம்பவமாக மாற்றிவிட்டது விதி….

 

“இங்க பாருங்க… பயப்படாதீங்க… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க… நான் அந்த  முள்ளம்பன்றிட்ட இருந்து காப்பாற்ற தான் இழுத்தே… இப்படி நடக்கும்னு நானே எதிர்ப்பார்க்கல, எங்க போகணும்னு சொல்லுங்க… உங்கள முதல்ல, உங்க வீட்ல சேர்க்கிறேன்… உங்க பாதுக்காப்பிற்கு நான் பொறுப்பு, ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க…” என்று ஆதவன் தன்னிலை விளக்கமாகவும், அப்பெண்ணின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டும் அவன் பேச, இழையினிக்கு அதிர்ச்சி தான் என்றாலும்,  நடந்ததற்கான விளக்கம் ஆதவன் கொடுத்ததை அவளது மனமும் ஒப்புக் கொள்ள தான் செய்தது….

 

அவன் தன்னை இழுக்காவிட்டால், நிச்சயம் அவள் உடம்பில் முள்ளம்பன்றியின் முள் அமிழ்ந்திருக்கும், அதே சமயம் அவன் இழுக்காவிட்டால் இந்த நிலைமையும் அவளுக்கு வந்திருக்காது… இந்த இரண்டு எண்ணங்களும் அவள் மனதில் ஒருங்கே தோன்றி அவளை நிலை குலைய செய்தது… ஆயினும் அவள் பெண்மனமோ, இந்த நிலையில் ஒருவன் முன் கூனிக்குறுகி நிற்பதை விட முதல் வழியே சாலச்சிறந்தது என்று எண்ண தொடங்கியது…

 

இப்படி ஒரு நிலை அவளுக்கு நேரிடும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் அவள் வந்திருக்கவேமாட்டாள். இப்பொழுது மணி கண்டிப்பாக இரவு எட்டை தாண்டாது… அவளால் அவனின் துணை இல்லாமலே சென்று விட முடியும் என்று எண்ண, அடுத்த நொடியே பின் முதுகின் ஆடை கிழிந்திருப்பது நினைவு வர மீண்டும் மீண்டும் மரத்தோடு ஒன்றி, அந்த மரத்திலே புதைந்துவிடுபவள் போல அம்மரத்தோடு ஒன்றினாள்.

 

நடந்த நிகழ்வுகளின் காலம் இதுவரை மொத்தமும் ஐந்து நிமிடங்கள் தான் ஆகி இருக்கும்…. ஆனால் இழையினிக்கு ஒவ்வொரு நொடியும் நரகமாய் இருந்தது… ஆதவனுக்கும் மனதில் ஏதோ நெருடல், உதவி செய்ய எண்ணி ஒரு பெண்னை இக்கட்டில் நிறுத்திவிட்டோமே…இந்த நிலையில் அவளை எப்படி அவள் வீட்டில் சேர்ப்பது.. என்ற எண்ணங்கள் அவன் உள்ளதே, பௌர்ணமி நாள் கடல் அலைகளை போல மேல் எழுந்தது…

 

ஆனால் அதே சமயம் அவளை யாரும் பார்க்கும் முன், உரிய இடத்தில் அவளை சேர்ப்பது அவனது கடமை என்று தோன்றியது…

 

இவை யாவும் ஒருபுறம் இருக்க, இழையினியை முள்ளம்பன்றியிடம் இருந்து காக்க, ஆதவன் அவளை இழுத்த அதே நேரம், அதே இடத்தில் மறுப்பக்கத்தில் இருந்து வந்த சலசலப்பு நின்றது, அந்த அடர் மரங்களின் பாதையில், சரியாக சலசலப்பு கேட்ட திசையில் இருந்து டார்ச்-யுடன் ஒருவர் வெளிப்பட, இரண்டு புறமும் மனிதனின் நடமாட்டம் இருக்க, மிரண்ட முள்ளம்பன்றியோ பக்கவாட்டு முள்புதரில் கணநேரத்தில் சென்று வேகமாக மறைந்தது…..

 

இருட்டில் இருந்து வெளிப்பட்டவர் சற்று முன் மறைந்த முள்ளம்பன்றியை கவனிக்காமல் ஆதவன் இழையினியை கண்டவர் என்ன புரிந்துக்கொண்டாரோ… அவர்களின் நிலையை கண்டு அவர்கள் சுதாரிக்கும் முன்னர் அவரது கேமெரா கொண்டு அவற்றை புகைப்படம் எடுக்க தொடங்கினார்…

 

அவர் அங்கிருந்த முள்ளம்பன்றியை பார்த்திருந்தால் எப்படி நடந்துக்கொண்டு இருப்பாரோ… ஆனால் அவர் பார்ப்பதற்குள் அவ்விடம் விட்டு முள்ளம்பன்றி மறைந்துவிட்டதால் அவரது எண்ணம் இழையினி ஆதவன் மேல் தவறான கோணத்தில் படிந்தது….

 

அவர்கள் சரிந்து உருண்டதை கண்டவர், அந்த நெருக்கத்திற்கு அவரே ஓர் அர்த்தம் கற்பித்துக் கொண்டார்…அவரது கேமெராக் கொண்டு நான்கு ஐந்து புகைப்படங்களை எடுத்தவர், அப்படியே செல்ல மனம் இல்லாது, அவர்களின் இந்த இழிச்செயலுக்கு அவர்களிடம் இரண்டு வார்த்தையாவது பேச முனைந்தார்…

 

முடிவுசெய்து அவர்களை நெருங்க, மரத்தோடு ஒன்றி கண்ணீரில் கரைந்த பெண்ணும், சற்று தள்ளி நின்று ஏதோ சொல்லி கொண்டு இருந்த ஆணும் தான் அவர் கண்களில் பட்டனர்…

 

அப்போது தான், ஆதவன் இழையினியிடம் அவளை, அவளது வீட்டில் சேர்ப்பதாக கூறி அழைத்துக் கொண்டு இருந்தான்…

 

இவை யாவையும் பார்த்துக்கொண்டு இருந்த நபருக்கு கோவம் உச்சத்தை தொட்டது… ஆதவன் அருகினில் சென்றவர் தொண்டையை செறும, கூனிக்குறுகி நின்று இருந்த இழையினி வந்த புதியவரை பார்த்து மேலும் நன்றாக மரத்தோடு சாய்ந்து நின்று அவளது முகுகு பகுதி ஆடை கிழிந்திருந்தை மறைத்தவாறு நின்று இருந்தாள்… ஆதவனோ “இவர் யார்?” என்ற ரீதியில் குழப்பம் நிறைந்த கண்களில் பார்க்க, சட்டென இழையினியின் நிலை நினைவு வந்து அவளை பார்க்க, அவள் ஆடை கிழிந்திருப்பது தெரியாத விதம் அவள் நின்று இருந்ததனால் ஒரு சிறு அமைதி அவன் மனதில் வந்து போனது…..

 

ஆதவன் வந்தவரிடம் ஏதோ கேட்க எத்தனித்த வேலை அவரே பேச்சை தொடங்கி இருந்தார்….

 

“ஏன்பா… பார்த்தாலே தெரியிது, பணக்கார வீட்டு பிள்ளைங்கனு… பணம் கொஞ்சம் கையில இருந்தா.. எதுவேணும்னாலும் செய்வீங்களா… இப்படி தான் உங்கவீட்ல வளர்த்தாங்களா… சீ… இந்த கருமத்த பண்றதுக்குனே இந்த இடம் தேடி வந்துருப்பீங்க போல… இப்படி ஒரு காரியம் பண்ண உடம்பு கூசல, அது எப்படி கூசும்… ?

 

கேட்டா காதல், கீதல்னு ஏதாவது கதை சொல்லுவீங்க… உங்கள போல எத்தனை நபர பார்த்துருப்பேன்…

 

ஏன் மா.. நீயெல்லாம் ஒரு பொம்பள புள்ள.. து…. ” என்று கூறி உமிழ்நீரை உமிழ்ந்து துப்ப இழையினிக்கு முதலில் அதிர்ச்சி தோன்றி, பிறகு அவமானத்தில் வெந்து கொண்டு இருந்தாள்.

 

அந்த இடத்தில் நிற்பதற்கு பதில், பூமி பிளந்து, பாதாளத்திற்கு செல்ல முடியாதா என்று எண்ணி, அதிர்ச்சியில் பேசவும் சக்தி அற்று தேம்பத் தொடங்கினாள்.

 

அவளை இதுவரை யாரும் கடிந்து பேசியதுக் கூட கிடையாது.. ஏன் அவளது அன்னை கூட இதுவரை ஒரு சொல் சொல்லாதவள்… அதற்கு காரணம் ராகவன்…

அப்படி இருக்க, அதுவும் ஒழுக்கம் தான் வாழ்வில் முதன்மை என்று எண்ணியவளை யாரோ ஒருவர் இப்படி பேசியது, அதுவும் அவர் கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சில் அமிலத்தை தெளித்ததை போல இருந்தது இழையினிக்கு…..

 

இழையினி மனதிடம் உள்ளவள்தான்… ஆனால் காட்டில் முள்ளம்பன்றியிடம் சிக்கி உதவிக்கு யாரும் இல்லை என்று பயத்தில் இருந்தவள், அவளை காக்க எண்ணி ஒருவன் செய்த உதவியால் ஆடை கிழிந்து அவன் முன் நிற்க நேரிட்ட நிலையை எண்ணி அதிர்ச்சியில் இருந்தவள், அதிலிருந்து மீள்வதற்கு முன்பே யாரோ ஒருவரிடம் கேட்ட அசிங்கமான பேச்சில் அவமானத்தின் உச்சத்திற்கு சென்றாள்.

 

ஆனால் அவள் அவமானப்பட்டு ஸ்தம்பித்து நின்றது ஓரிரு வினாடிகளே…

 

யாரோ ஒருவர் பேச்சுக்களை அப்படியே அவளால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…. அதுவும் எந்த தவறையும் இழைக்காத போது… அப்படி அமைதியாக இருந்தால் அவரின் பேச்சின் மூலம் அவமானபடபோவது அவள் மட்டும் அல்ல. அவளது தந்தையின் வளர்ப்பு முறையும் அல்லவா…

 

அழுகையை கட்டுப்படுத்தி அவள் பேச தொடங்க, அவளது முகம் கோவத்தால் சிவந்து இருந்தது… அவளது கோவம் இயற்கைக்கும் புரிந்ததோ எண்ணவோ, காற்றும் அசையாது ஸ்தம்பித்து நின்றது…

 

இழையினியின் நிலை இப்படி இருக்க, ஆதவனோ புதிதாக வந்தவர் மேல்   கொலைவெறிக்கு ஆளானான். ஆனால் அவனது மனதின் கோவத்தை, அவனது அறிவு தடை செய்து, சிந்திக்க வைத்தது… அவன் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால், அவனது பதில் சொல்லும் முறை வேறு… ஆனால் இப்போது ஒரு பெண்ணுடன்… அந்த எண்ணமே அவனை யோசிக்கவைத்தது…

 

அவளது மரியாதையை மிகவும் முக்கியம் என்ற எண்ணம் தோன்ற, பேச தொடங்கு முன் இழையினி பேச தொடங்கி இருந்தாள்.

 

“முதல்ல, மரியாதையா பேசுங்க… நீங்க பார்த்த சம்பவங்கள வச்சு, எல்லாரையும் எடை போடறத நிறுத்துங்க… நான் யாரு, இவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா… ? எங்கள பற்றியோ, அல்லது இங்க நடந்த சம்பவங்கள பற்றியோ ஏதாவது உங்களுக்கு தெரியுமா.. ?” என்று அவளின் மொத்த கோவத்தையும் குரலில் தேக்கி வைத்து கேட்க, அந்த காட்டின் நிசப்தத்தில் அவளது குரலே அவளின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பறைசாற்றியது…

 

ஆனால் அந்த புதியவருக்கு தான் புரியவில்லை… பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் வந்து, பொது இடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகளை அறவே வெறுப்பவரான பார்த்த சாரதிக்கு, இழையினின் கோவம் புதிதாக இருந்தாலும், அவர் கண்ட காட்சியில் இருவரையும் அவர் தவறாகவே சித்தரித்திருந்தார்…

 

அவரிடம் இதுவரை கையும் களவுமாய் அகப்பட்டிருந்த ஜோடிகள் கெஞ்சுவதையே பார்த்திருந்தவருக்கு, அப்பெண்ணின் கோவம் சிறு யோசனையை தந்தது… ஆனால் அவரது ‘நான்’ என்ற அகம்பாவம் அந்தநேரம் தலை தூக்க, தான் கண்டது தான் சரி என்றும், அவள் சாமர்த்தியமாக குரல் உயர்த்தி பொய் புனைய முனைகிறாளோ என்று தோன்றியது…..

 

அவள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே இடை புகுந்த ஆதவன் அவனது கையை இழையினி இருந்த திசை நோக்கி பொறுமையாக இருக்கும்மாறு சமிங்ஞை செய்து, பார்த்தசாரதியிடம், “இத பாருங்க சார்… நீங்க யாரு என்ன எதுவும் எங்களுக்கு தெரியாது… இவுங்க ஒரு ஆபத்துல இருந்தாங்க… அவுங்கள நான் காப்பாற்றினேன்…. உங்ககிட்ட நாங்க எதுவும் கேட்கல, உங்க உதவியும் எங்களுக்கு தேவை இல்லை… நீங்களே வந்து எதற்காக இப்படி தெரியாத இரண்டு பேரோட வாழ்க்கையை இணைத்து பேசுறீங்க… இது உங்க வயசுக்கு மரியாதை இல்லை… கிளம்புங்க சார்…. ” என்று உறுதியுடன், நிதானமாக குரலில் கண்டனம் தொனிக்க கூறினான்.

 

ஆதவனின் வார்த்தையை கேட்ட பார்த்தசாரத்திக்கு அதற்கு மேல் பொறுமையாக பேச முடியாமல் போக, சமுதாயத்தின் மீது இருந்த ஒட்டுமொத்த கோவத்தையும் அவர்கள் இருவரின் மீது இரக்க தொடங்கினார்…

 

“ஒ… நீங்க இப்படி பொது இடத்துல கூத்தடிப்பீங்க… பார்க் பீச்சுன்னு கண்டபடி சுத்துவீங்க… கலாசாரத்துமேல அக்கறை இருக்கவங்க கேள்விக்கேட்டா, கேள்வி கேட்கிறவங்க காதுல பூ சுத்துவீங்க…

 

நீங்கலாம் யாருக்கும் எதுவும் தெரியாது னு, நாய விட கேவலமா இப்படி ரோடு சைடு அசிங்கம் பண்றது மத்தவங்களுக்கு தெரியாம இருக்கலாம்… ஆனா எனக்கு தெரிந்த பிறகு, அதை நான் தெரியப்படுத்திருவேன்…

 

அம்மா, அப்பா, குடும்பம், நண்பர்கள் னு ஒட்டுமொத்தபேரு முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கணும்… அடுத்த முறை இது போல ஒரு தப்ப கனவுல செய்யக் கூட யோசிக்கணும்…

 

உங்களோட விளையாட்டு, இப்ப படமா மாறி இருக்கு… புரியல புகைப்படமா… ஏது ஏது நீ காப்பாற்ற வந்தியா …? யார்க்கிட்ட இருந்து இல்ல எதுக்கிட்ட இருந்து…

 

இந்த இடத்துல எந்த ஆபத்தும் இருக்கிறதா எனக்கு தெரியலையே… அப்படியே ஆபத்து இருந்தாலும் எப்படி நீங்க மட்டும் கட்டி பிடிச்சு காப்பாத்துறீங்க…

 

இந்த ரிப்போர்ட்டர் பார்த்த சாரதி யாருன்னு தெரியாம என்கிட்டையே வாய் துடுக்கா பேசி தப்பிக்கிற திட்டம் போடறீங்களா… ? அவ்வளவு தானா ? இல்ல வேற எதுவும் இருக்கா… இந்த பொண்ணு என் தங்கச்சி, இல்ல யாருனே எனக்கு தெரியாது… இப்படி எதுவேணும்னாலும் சொல்லு… ஆனா நான் நாளைக்கு, இந்த போட்டோ பப்ளிஷ் ஆகி வரும், அப்ப நீயும் அந்த பொண்ணும் யாரு யாருன்னு உலகத்திற்கேதெரியும்… ” என்று கூறினார்…

 

பார்த்த சாரதி என்றவர், இப்படி கூற அவர் ‘புகைப்படம்’ என்றதில் இழயினிக்கு சர்வமும் அடங்கிவிட்டது….

 

அவளது தந்தையோ, தாயோ, தங்கையோ அவளை எந்த நிலையில் பார்த்தாலும், ஒரு போதும் தவறாக நினைக்கமாட்டார்கள்… ஆனால் இவர் சொல்வது போல முட்டாள் தனமாக ஏதேனும் செய்துவிட்டால் ,அதை ஊர் உலகம் எப்படி நம்பமால் இருக்கும்… அது ஒரு விபத்து என்று நிரூபிக்க நேர்ந்தாலும் கூட அதை இந்த சமுதாயத்தில் எத்தனை நபர்கள் ஒப்புக்கொள்வார்கள்….. மேலும் அவனுடன் இருக்கும் புகைப்படம் எந்த கோணத்தில் இருக்கும்… அதை எப்படி இந்த உலகுக்கு சொல்லி புரியவைப்பது. மேலும் இதுவரை தலை தாழாது நடந்த அவளது தந்தை, அவளால் தலை குனியும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணங்கள் மேலோங்க இழையினி அஞ்சி நடுங்கினாள்.

 

அதே நேரம், ஆதவன் நெஞ்சில், பார்த்த சாரதி கூறிய வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டு இருந்தது…. இதுவரை ஒரு சிறு மாசுக் கூட அண்டாமல் வாழ்ந்தவன், இப்பொழுது இப்படி ஒரு அவ பெயரை சுமப்பதா… அதே சமயம் அந்த பெண்ணின் நிலை…

ஏனோ தன்னை விட அந்த பெண்தான் இதில் அதிகம் பாதிக்க படுவாள் என்று தோன்றியது…. அப்படி அவள் பெயர் பாதிக்கப்பட கூடாது என்று தோன்றவே, அவனது முன்கோபத்தை ஒதிக்கி ஒரு சில நிமிடங்கள் யோசித்தான்…..

 

இவர்களின் அமைதியில், பார்த்த சாரதிக்கு அவர் கண்ட காட்சிகளே உண்மை என்று நம்பும் எண்ணம் எழும்ப, மீண்டும் நரம்பு இல்லாத நாக்கை கொண்டு வார்த்தைகளை சாட்டையாக சுழட்ட தொடங்கினார்…..

 

“என்ன ரெண்டு பேரும் கப் சுப் -னு ஆகிட்டீங்க…. ? ஆதாரம் இல்லாம தானே பேசுறான்… ஏதாவது பொய் சொல்லி தப்பிக்கலாம்னு நினைத்திருப்பீங்க…. ஆனா என்கிட்ட எதுவும் நடக்காது…. இப்படி கேவலமான பிள்ளைகள வளர்த்ததற்கு நாளைக்கு உங்க குடும்பமும் தலை குனியனும்…. அப்படி நடத்திக்காட்டாம விடமாட்டேன்… அப்போ தான், தப்பு செய்ற எல்லாரும் திருந்த ஒரு பாடமா இருக்கும்….

 

என்ன ஏதோ சொல்ல வருகிறது போல இருக்கு… என்னமா… நாங்க சொந்தக்காரவங்க, எனக்கு அண்ணன் முறை, தவறி விழுந்தேன்… தாங்கி பிடித்தாருனு சொல்ல போறியா… ?” என்று நக்கல் இழையோட,ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து பேச, இழையினி துடித்து போனாள்.

 

அவளை பற்றி மட்டும் பேசி இருந்தால் அவள் கோவத்துடன் எதிர்க் கொண்டிருப்பாள். ஆனால் அவர் கை வைத்ததோ, அவளின் ஆணி வேறான அவளது தந்தையின் கௌரவம்…. மனதிடம் கொண்ட இழையினி, அடுத்து என்ன? எப்படி இதில் மீள்வது? என்று யோசிக்க கூட ஜீவன் இல்லாது நிலைகுலைந்தாள்.

 

அதிலும் இங்கு இருந்து இப்போது செல்லக் கூட முடியாத நிலையில் அவள் ஆடை கிழிந்திருக்க, தங்கையை அழைக்கலாமா? இங்கு வர அரை மணி நேரம் ஆகுமே என்ற எண்ணம் தோன்றினாலும், அதையும் செயல்படுத்த முடியாதபடி அவள் கிழ் விழுந்து உருண்டத்தில் அவளது கைபேசியை தவற விட்டிருந்தாள்….

 

இவை அனைத்தையும் மின்னலின் வேகத்தில் அவளது மனது ஓட்டிப்பார்த்து வேதனை கொள்ள, ஆதவன் இப்போது பேச தொடங்கி இருந்தான்….

 

“நிறுத்துங்க…. யார்க்கிட்ட என்ன பேசுறீங்க… இங்க தவறா எதுவும் நடக்கல, இதற்கு மேல உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு எதுவும் இல்ல.. தாராளமா போடுங்க போட்டோவ…. ஆனா உங்கமீது நான் மானநஷ்ட வழக்கு பதிவேன்… ஏன்னா, இவள நான் ஒழித்து மறைத்து திருட்டுத்தனமா கூப்பிட்டு வரல…

 

நாங்க இரண்டு பேரும் கணவன் மனைவி…. சுற்றுலா தளத்திற்கு வந்தவங்க நாங்க… என் மனைவிக்கு ஆபத்து… நான் காப்பாற்றினேன்… அப்போ ஏதோ புகைப்படம் எடுத்திட்டு, இத நீங்க பத்திரிக்கையில் போட்டா, கணவன் மனைவி அந்தரங்கத்தை எடுத்து போட்டதா உங்கள் மீது நிச்சயம் வழக்கு போடுவேன்… எது செய்றதுனாலும், பேசுறதுனாலும் யோசித்து பேசணும்… ஜாக்கிரதை…. ” என்று ஆதவன் சரளமாக பொய் கூறி இறுதியில் அவரை மிரட்ட, இழையினிக்கு ஆதவன் போக்கு புரியாவிட்டாலும், அந்த புதியவரின் அமைதி, ஒரு சிறு நிம்மதியை அளித்தது இழையினிக்கு.

 

“என்ன நீங்க கணவன், மனைவியா ?” என்று ஒரு நிமிடம் பார்த்த சாரதி தயங்க, இப்போது ஆதவன் சுதாரித்தவனாக இழையினிடம் முன்னேறி அவனது ஜர்க்கீனை கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, பார்த்த சாரதியை நோக்கி முன்னேறி, “ஆமாம், கணவன் மனைவி தான்… நீங்க எடுத்த போட்டோ எல்லாத்தையும் மரியாதையா கொடுங்க… என் மனைவி பெயர் வெளியில வந்தா, அதுக்கு பிறகு என்ன நடக்கும்னே எனக்கு தெரியாது…” எற்று மிரட்டலாக கூற, ஒரு சில நிமிடங்கள் தடுமாறி இருந்த பார்த்த சாரதியோ, தன்னை ஒருவன் மிரட்டுவதா … எத்தனை பெயரை கேள்விக்கேட்டு, பத்திரிக்கையில் எழுதி ஓட ஓட விரட்டி அடித்த பார்தசாரதியிடமா ஒருவன் இப்படி பேசுவது… என்ற எண்ணம் தோன்ற, தடுமாறிய நிமிடங்கள் மாறி மீண்டும் அவரது பேச்சை தொடர்ந்தார்…

 

 

“சரி நீங்க கணவன் மனைவியா இருந்தா, நிச்சயம் நான், நீங்க சொல்ற ஆபத்து கதையையும் நம்புறேன்… நல்லா கவனி, உண்மையாக இருந்தால் மட்டும். என்னோட போன் ல இருக்குற போடோஸ் கூட அழிச்சிடுறேன்… அவ்வளவு ஏன் நான் உங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடி என்னுடைய வீட்டுக்கு இந்த போட்டோவோட காபி அனுப்பியதை  கூட கண்டிப்பா டெலிட் பண்ணிடறேன்…. நான் வார்த்தை மாறமாட்டேன்….

 

ஏன்னா… நீங்க என்னுடைய எதிரி இல்லை… கலாச்சாரத்தை சீரழிக்கிறது போல நடந்திகிற, கல்யாணம் ஆகாம எல்லை மீறுற காதல் ஜோடிகள் மீது தான்…. என் கோவம்

 

இதே காரணத்தை, நீ இப்ப ‘நாங்க காதலர்கள், இல்லை வழிப்போக்கர்கள் இவளை ஆபத்திலிருந்து காப்பாற்றினதா சொல்லி இருந்தா, நான் நிச்சயம் நம்பி இருக்கமாட்டேன்…. ஆனால் நீ அந்த பொண்ண மனைவினு சொல்ற…

 

ஆனா நீங்க கணவன் மனைவின்னு சொல்றதுக்கு ஆதாரம்? வேற எதுவும் வேண்டாம் உங்க மனைவி கழுத்து-ல மாங்கல்யம் இருக்குமே… அதை காண்பிங்க போதும்…. நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டு இங்க இருந்து கிளம்புறேன்… போட்டோஸ் கூட முழுமையா அழிச்சிட்டு…” என்று கூறி ஆதவனை பார்க்க, இதை கேட்டுக் கொண்டு இருந்த இழையினி-யின் முகம் இருண்டது….

 

ஆதவனுக்கு தெரியும்…. இவரை திருமணம் என்று சொன்னால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று. சுடலை முன்பே சொன்னதை வைத்தே, அவரை கணித்திருந்தவன், இன்று அவர் பேச ஆரம்பித்த சிறுது நேரத்திலே என்ன கூறினால், இதை சமாளிக்க முடியும் என்று சிந்தித்துதான் இதை கூறினான்.

 

கணவன் மனைவி என்ற வார்த்தை மந்திரம் போல் அவரிடம் வேலை செய்தது, ஆதவன் எதிர்ப்பார்த்தபடியே… ஆனால் அவன் எதிர்ப்பார்க்காதது  அவர் மங்கல்யத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வது…..

 

இதற்குள் இழையினி,  ஆடையை சரி செய்து, அவனது ஆடையை அணிந்து அவனருகில் மெதுவாக வர, நிலவும் இவர்கள் உரையாடலின் மீது நாட்டம் கொண்டு முகில் திரையை கிழித்துக் கொண்டு வெளி வந்தது…..

 

நிலவு வெளிவந்ததும், இதுவரை கவ்வி இருந்த இருள் விளகி, பூரணமாக வெளிச்சம் பரவ தொடங்கியது அவ்விடத்தை….

 

ஆனால் இதை எதையும் கவனிக்கும் நிலையில் அம்மூவரும் இல்லை…. இவர்கள் கூறுவது உண்மையா… இல்லை தன்னை முட்டாளாக்க பார்க்கும் அறிவாளி காதலர்களா இவர்கள் என்ற சிந்தனையில் பார்த்தசாரதி இருக்க, பார்த்தசாரதி கேட்ட மாங்கல்யத்திற்கு என்ன சொல்ல என்ற ஆதவன் சிந்தனையில் இருக்க, இழையினியோ மனதினுள் , “இவர் இப்படி சொல்லலனா, இத்தனை பொறுமையா… இந்த ஆளு பேசி இருக்க மாட்டாரு… ஆனா இப்படி சொன்னதை வச்சு மாங்கல்யத்தை கேட்டா எங்க போறது… இவர் எனக்கு உதவி செய்தா மட்டும் அது ஏன் எனக்கு இன்னும் ஒரு பிரச்னையை உருவாக்குது… ” என்று வேதனை அடைந்தாள்.

 

ஆனால் அந்த நிலையிலும் மனம்தளராமல் அவளும் ஏதேனும் முயன்று இதில் இருந்து அவள் வெளிவரவேண்டும். காரணம் அவளது தந்தையின் மரியாதை………….

 

வேகமாக யோசித்து, அவள் பேச தொடங்கினாள்.

 

“இல்ல… அது அது அந்து விழுந்ததுல என்னோட மொபைல், அப்புறம் இந்த சறுக்குல உருண்டதுனால தாலி அதுவும் விழுந்திடுச்சு….

 

இன்னும் சொல்லனும்னா… என்னோட துணிக் கூட.. சார் அது இந்த இருட்டுல விழுந்திருச்சு…. ” என்று சிறு தடுமாற்றத்தோடு அவள் கூற, இத்தனை நேரம் பேசாமல் இருந்தவள், இப்போது பேச ஆதவன் திரும்பி பார்க்க, இப்பொழுது அவளது முகம், பூரணமான நிலவொளியில் தெரிய, ஒரு நொடி அவனையும் அறியாமல் அவள் விழிகளையே பார்த்திருந்தான் ஆதவன்…..

 

இழையினியின் பதிலை கேட்ட பார்த்த சாரதி ஒரு நம்பாத சிரிப்பை உதிரவிட்டப்படி… “ஹ்ம்ம் பரவா இல்லையே…. ரொம்ப நல்லா நடிகிறீங்க… அப்ப நான் சதேகப்பட்டது தான் சரி… ” என்று கூறி நான்கு எட்டுகள் பின் நோக்கி நகர, வேகமாக சிந்திந்த ஆதவன், நிச்சயம் அவர் அந்த புகைப்படங்களை வெளிவிட்டிடுவார் என்று எண்ணி இத்தனை நேரம் யோசித்து செயல்பட்டவன், இப்போது யோசனைக்கு நேரம் இல்லாது போகவே நெருக்கடியின் காரணமாய், அவனது கழுத்தில் இருந்த சங்கலியை கழற்றி, பார்த்தசாரதியை நோக்கி “ஒரு நிமிடம், இவள் என் மனைவி தான்… அதுக்கு இப்ப என்கிட்டே இருக்க, என்னால பண்ண முடிந்த காரியம் இது தான்…” என்று கூறி, அவளது கழுத்தில், அவள் எதிர்ப்பார்க்கா நேரம், இழையினியிடம்,  மனதினுள்…”நீங்க யாருன்னு எனக்கு தெரியாது… முதல் முறை உங்கள இப்பதான் பார்கிறேன்… ஆனா எனக்கு இதை தவிர வேறு வழி இல்ல.. இது சாதாரண செயின் தான், நிச்சயம் தாலி இல்ல…” என்று எண்ணமிட்டப்படியே அவளுக்கு அணிவித்தான்….