அத்தியாயம் 2
என் உள்ளத்தில்
இருக்கும் உன்னைப்பற்றிய
நினைவுகளை உன்னிடம்
சொல்லும் தருணத்துக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
அதன் பின்னர் இரண்டு குடும்பமும் ஒன்றாகி போனது. வேதாவை ரிஷி பொறுப்பாக பார்த்து கொண்டான். அவளை விட இரண்டு வயது பெரியவனான அவன் அவளை காப்பது தன்னுடைய பொறுப்பு என்று எண்ணி கொண்டான்.
அதனால் அவளை காலை பள்ளிக்கு எழுப்பி விடுவதில் இருந்து அவனுடைய வேலை ஆரம்பித்து விடும்.
காலையில் அவளுக்கு முன்னதாக எழுந்து அவளுடைய வீட்டின் அழைப்பு மணியை அழுத்துவான் ரிஷி. அவனை பார்த்ததும் அவனை தூக்கி கொள்ளும் சீதாவும், ராமகிருஷ்ணனும் அவனை கொஞ்ச ஆரம்பித்தால் அவர்களிடம் இருந்து நழுவி வேதாவை எழுப்ப சென்று விடுவான்.
சில நாள்களில் அவன் வந்து எழுப்பினால் தான் எழுவேன் என்ற நிலைக்கு வந்தாள் வேதா.
பின்னர் அவளுடன் ஸ்கூல் செல்லும் அவன் அவள் அவளுடைய கிளாசில் அமர்ந்த பின்னர் தான் தன்னுடைய கிளாசுக்கு செல்வான். பின் மதியம் ஒரு முறை வந்து அவளை பார்த்து விட்டு செல்லுவான். சாயங்காலம் பள்ளி முடிந்த பிறகு அவன் அவளுக்காக காத்திருப்பான். அவன் வர தாமதமானால் அவனுக்காக அவள் அங்கே காத்து கொண்டு அமர்ந்திருப்பாள்.
இவர்களுடைய ஒற்றுமையை கண்டு பெரியவர்களுக்கே வியப்பு தான் வரும். மற்ற உறவினர்களின் குழந்தைகள் வந்தால் கூட அவர்களிடம் இருவரும் ஒட்ட மாட்டார்கள்.
இது இருவருக்குமான ஜென்ம ஜென்மமான பந்தம் என்று தெரியாமல் பெரியவர்களும் அவர்களை அவர்கள் போக்கிலே விட்டு விட்டனர்.
இருவரும் சண்டை போட்டாலும் வெகுநேரம் இருவராலும் பேசாமல் இருக்க முடியாது. முக்கியமாக சண்டை வருவது அவன் வேதாவை விட்டுவிட்டு வேற பையன்களுடன் விளையாட செல்வதற்காக தான் இருக்கும்.
அவன் அவளுடனே இருக்க வேண்டும் என்று எண்ணுவாள் வேதா. அதை உணர்ந்தாலும் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி வந்தவுடன் “அவள் என்னையே சார்ந்திருக்க கூடாது. எப்போதும் சுயமாய் இருக்க வேண்டும்”, என்று எண்ணி அவளை தனியே விடுவான் ரிஷி.
உதாரணத்துக்கு அவனை விட்டு டூர் போக மாட்டேன் என்று அவள் அடம் பிடித்தால் “நான் இங்க இருக்க மாட்டேன் வேதா. நானும் ஊருக்கு போயிருவேன். என். எஸ். எஸ் கேம்ப் இருக்கு. நீ டூர் போனா சந்தோசமா இருப்ப. இங்க இருந்தா நானும் இல்லாம உனக்கு போர் அடிக்கும்”, என்று சொல்லி கட்டாய படுத்தி அனுப்பி வைப்பான். அவன் டூர் போகும் போதும் அவனை போக விடாமல் படுத்தி எடுப்பாள். பொறுமையாக அவளை சமாதான படுத்தி விட்டு செல்வான்.
அவனுடைய பொறுப்புணர்ச்சியை நிறைய நேரம் வேதாவின் அப்பா ராமகிருஷ்ணனும், அம்மா சீதாவும் அதிசயித்து புகழுவார்கள்.
“அட நீங்க வேற? அவன் வேதா விசயத்துல மட்டும் தான் இவ்வளவு பொறுப்பா இருப்பான். மித்த விசயத்துல எல்லாம் அவன் அப்படி கிடையாது. அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கும்”, என்று சொல்லுவாள் ரிஷியின் அன்னை சாரு.
ரிஷி மெடிக்கல் காலேஜ் சேர்ந்து மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருந்தாள் வேதா.
அவனுடன் சென்று படிக்க அவ்வளவு ஆசை. ஆனால் அவளுக்கு மருந்து, மாத்திரை, ரத்தம் இதை எல்லாம் நினைத்தாலே பிடிப்பதில்லை. அவன் கூட தான் இருக்கணும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து வேறு வழி இல்லாமல் இன்ஜினியரிங் சேர்ந்தாள்.
அவள் ஆண்களிடம் அதிகமாக பேசியது இல்லை. அதனால் இது வரை அவளிடம் யாரும் காதலை சொல்லவில்லை. வேலை செய்யும் இடத்தில் அப்படி இருக்க முடியாமல் தான் ஜெகனுடன் நட்பாய் பழகினாள். ஆனால் அவன் வந்து காதலை சொல்லுவான் என்று அவள் எண்ணி பார்க்கவே இல்லை.
இப்போது ரிஷியின் வரவுக்காக தான் காத்திருந்தாள் வேதா. மனதுக்குள் “ரிஷி எனக்கு வேணும் அதை எப்படி அவன் கிட்ட சொல்லுவேன்”, என்ற பய பந்து உருண்டது.
“என் மனதில் நீ தான் இருக்குற. எனக்கு வேற யாரையும் கல்யாணம் செய்ய முடியாது டா ன்னு நான் உன்கிட்ட எப்படி டா சொல்லுவேன்? ஒவ்வொரு நிமிஷமும் உன்னோட அருகாமையில் தான் இருக்கணும்னு எனக்கு மனசு தவிக்குது டா. இதெல்லாம் காதல்ன்னு நான் யோசிச்சதே இல்லையே. இப்ப தான் எனக்கே புரிஞ்சிருக்கு. நீ என் மனசுல இருக்கிறதை கண்டு புடிச்சிட்டேன். ஆனா இதை எப்படி வெளிய சொல்லுவேன்? இத்தனை வருசமா நண்பனா இருக்குற உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா என்னை பத்தி தப்பா நினைப்பியா ரிஷி? இல்லைன்னா நீயும் என்னை மாதிரியே உன்னை விரும்புறேன்னு சொல்லுவியா? அம்மா, அப்பா, அத்தை மாமா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க?”, என்று குழம்பி தவித்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் கூட வந்தது. பக்கத்தில் திண்டு மேலே இருந்த மொபைலை எடுத்து மணி பார்த்தாள். மணி ஏழு என்று காட்டியது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவானே? முகத்தை பார்த்தே பிரச்சனைன்னு வேற கண்டு பிடிச்சிருவான். உண்மையை சொல்லவும் பயமா இருக்கு. சொல்லாம என்ன சொல்லி சமாளிக்கவும் தெரியலையே”, என்று மண்டையை உடைத்து யோசித்தாள் வேதா.
ஹாஸ்ப்பிட்டலில் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு தன்னுடைய கேபின்க்கு வந்த ரிஷி தன்னுடைய கையை வாஷ்பேஷனில் கழுவினான். பின் மாட்டி இருந்த கோர்ட்டை கழட்டி கேங்கரில் போட்டு விட்டு அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.
தன்னுடைய மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தவன் “இந்நேரம் எனக்காக என் செல்லம் காத்துட்டு இருக்குமே? டுயூட்டி டாக்டரை காணுமே”, என்று எண்ணி கொண்டான்.
அவன் அமர்ந்து பத்து நிமிடம் கழித்து “ஹாய் ரிஷி”, என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தாள் டாக்டர் சுஜாதா.
“ஹாய் சுஜி”, என்ற படியே எழுந்து கொண்டான் ரிஷி.
“சாரி, கொஞ்சம் நேரம் ஆகிட்டு”
“பரவால்ல சுஜி. சரி பை. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தவன் தன்னுடைய பைக்கை நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்தான்.
‘வி. ஆர்’, என்று இனிஷியல் போட்டிருந்த தன்னுடைய பைக்கை எடுத்தவன் கெல்மட்டை அணிந்து கொண்டு வண்டியை கிளப்பினான்.
வீட்டருகே இருந்த சூப்பர் மார்க்கெட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவன் சாருவை போனில் அழைத்தான்.
“என்ன டா இன்னும் வரலையா?”, என்று கேட்டாள் சாருலதா.
“இங்க கிட்ட வந்துட்டேன் மா. எதாவது வாங்கணுமான்னு கேக்க தான் போன் பண்ணேன்”
“வேண்டாம் டா. சாயங்காலம் தான் நானும் சீதாவும் எல்லாம் வாங்கிட்டு வந்தோம்”
“சரி மா. வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்தவன் வண்டியை கிளப்பி ஒரு சின்ன பெட்டி கடையில் இருந்து ஒரு டேரி மில்க் சாக்லேட் மட்டும் வாங்கி கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் “காபி குடிக்கிறியா டா?”, என்று கேட்ட சாருவிடம் “வேண்டாம் மா, கொஞ்ச நேரத்துல சாப்பிட்டுக்குறேன்”, என்று சொல்லி தன் அறைக்கு சென்று குளிக்க சென்றான்.
குளித்து முடித்ததும் வெளியே வந்தவனிடம் “இட்லி ஊத்தட்டா டா?”, என்று கேட்டாள் சாரு.
“ஹ்ம்ம் சரி மா. அப்பா இப்ப தான் டுயூட்டி கிளம்புனாங்களா?”
“ஹ்ம்ம் ஆமா ரிஷி”
“சரி மா, நான் வேதாவை பாத்துட்டு வரேன்”
“ம்ம், சரி டா. சாயங்காலம் தினமும் இங்க வருவா. இன்னைக்கு ஆளையே காணும். என்ன ஆச்சு தெரியலை. நீ பாத்துட்டு வா”, என்று சொல்லி தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டாள் சாரு.
“சாயங்காலம் இங்க வரலையா? இன்னைக்கு என்ன ஆச்சோ?”, என்று எண்ணி கொண்டு எதிர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
கதவை திறந்த சீதாவிடம் “சீதா அத்தை, வேதா பாப்பா எங்க?”, என்று கேட்டான் ரிஷி.
“காலேஜ் முடிச்சு வேலை பாக்க ஆரம்பிச்சிட்டா. ஏழு கழுதை வயாசாச்சு. அவ உனக்கு பாப்பாவா ரிஷி? ஆமா உனக்கு
டியூட்டி முடிஞ்சதா?”, என்று கேட்டாள் சீதா.
“இப்ப தான் முடிஞ்சது. வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வந்தேன். அதான் அவ கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன். எங்க
அவ?”
“அவ ஏதோ மூட் அவுட்டாம். ஒண்ணும் பேசாம மாடில போய் நிக்குறா. என்னனு நீயே கேளு”
“சரி அத்தை. நான் பாத்துக்குறேன்”
“சரி ரிஷி. உனக்கும் டின்னர் இங்க தான். சேத்து செய்றேன்”
“சரி அத்தை. ஆனா கொஞ்சம் போதும். அம்மா கையாள சாப்பிடலைன்னா, அடுத்து அவங்களும் மூட் அவுட் ஆகிருவாங்க”
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள்.
மேலே வந்த ரிஷி அங்கு அமர்ந்திருந்த வேதாவின் கண்களை பொத்தினான். அவன் காலடி ஓசையிலே அவனை கண்டு
கொண்டாள் வேதா.
“விளையாடாத ரிஷி”, என்று சொல்லி கொண்டே அவள் கைகளை விலக்கினாள் வேதா.
“என்ன ஆச்சு வேதா குட்டிக்கு? எதுக்கு இந்த சோகம்?”, என்று சொல்லி கொண்டே அவள் அருகில் இருந்த திண்டில் ஏறி
அமர்ந்தான்.
“ப்ச், ஒன்னும் இல்லை”
“நம்புற மாதிரி சொல்லுங்க மேடம்”
“நம்பாட்டி போ. ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான்”
“ஏய், உன்னை பத்தி எனக்கு தெரியாதா? ஒழுங்கா சொல்லுடி”
“எங்க கம்பேனில ஒருத்தன் என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டான் டா. வீட்டுக்கு வந்து பொண்ணு
கேக்கட்டுமான்னு கேட்டுட்டான்”
“யார் வேதா சொன்னது?”
“ஜெகன் தான்”
“அதுக்கு எதுக்கு சோகமா இருக்க? நல்ல விசயம் தான? வர சொல்ல வேண்டியது தான?”
அவன் மண்டையில் கொட்டியவள், “நான் எப்படி டா அவனை கல்யாணம் செஞ்சிக்க முடியும்?”, என்று கேட்டாள்.
“சரி வேற யாரை கல்யாணம் செஞ்சிக்க போற?”
“உனக்கு உண்மையிலே புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா ரிஷி?”, என்று கேட்டவளுக்கு கண்களில்
நீர் கோர்த்தது. சொல்ல அவளுக்கு வார்த்தை வரவில்லை.
“நான் என்ன செஞ்சேன்?”
“எனக்கு தான் உன்னை பிடிக்கும்னு தெரியும்ல? அப்பறம் வேற ஒருத்தனை எப்படி டா கல்யாணம் செய்ய முடியும்?”,
என்று சொல்லி விட்டு தலை குனிந்தாள் வேதா.
“ஐயோ! அப்ப நீ என்னை லவ் பன்றியா?”, என்று அதிர்ச்சியாய் கேட்டான் ரிஷி.
“ம்ம்”, என்று முணங்கினாள்.
“எப்பத்துல இருந்து நடந்தது இந்த விபரீதம்?”
“தெரியலை. ஆனா நானே இப்ப தான் அதை யோசிச்சிட்டு இருக்கேன்”
“எதுக்கு என்கிட்ட சொல்லலை?”
“எனக்கே தெரியலைனு சொல்றேன்ல டா?”
“லவ் வந்தா தான டி சொல்ல முடியும்? தேவை இல்லாம எதையும் யோசிக்காத. எனக்கு அம்மா, அப்பா வேற பொண்ணு
பாத்துட்டாங்க. உன்கிட்ட அத்தை சொல்லலையா?”, என்று அவள் தலையில் குண்டை போட்டான் ரிஷி.
அதிர்ச்சியாக அவனை பார்த்தவள், “விளையாடாத ரிஷி. என்னை தவற வேற பொண்ணு உன்னை நெருங்க முடியாது”,
என்று சற்று காட்டமாகவே சொன்னாள்.
“நீயா அப்படி நினைச்சா நான் என்ன செய்ய வேதா?”
“என்னை வெறுப்பேத்தாத டா. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”
“என்ன செய்வ? ஊன்னு அழுவ. அதுவும் பாப்பா மாதிரி”
“கிண்டல் பண்ணாத. நானே சரி கடுப்புல இருக்கேன் டா”
“என்ன டி செய்வ? அப்படி தான் கிண்டல் பண்ணுவேன். என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ. அடிப்பியா அடிச்சிக்கோ. கடிப்பியா கடிச்சிக்கோ.
எப்படி ரைமிங்கா சொல்றேன் பாரேன்”
“அதெல்லாம் செய்ய மாட்டேன். புடிச்சு வச்சு கிஸ் பண்ணிருவேன் பாத்துக்கோ?”
“யாரு…. நீ என்னை கிஸ் பண்ண போறியா? எங்க எங்க தைரியம் இருந்தா கொடு டி பாக்கலாம்”, என்று சிரித்து கொண்டே
சொன்னான். அது மட்டும் இல்லாமல் மொத்த காதலையும் அவன் கண்களில் தாங்கி அவளை ஒரு பார்வை பார்த்தான் ரிஷி.
அவனுடைய சிரிப்பையும், அவன் முகத்தில் இருந்த காதலையும் பார்த்தவள் அடுத்த நொடி “ரிஷி”, என்று அழைத்து
கொண்டே அவன் மேல் சாய்ந்து அவன் நெஞ்சில் குத்தினாள்.
அவள் கைகளை பிடித்தவன், “அம்மா, அப்பா கிட்ட முன்னாடியே பேசிட்டேன். அவங்க அத்தை, மாமா கிட்ட
பொண்ணும் கேட்டாச்சு. உன்னோட பதிலுக்காக தான் எல்லாரும் வெயிட்டிங். முன்னாடியே உன்கிட்ட கேக்குறேன்னு
சொன்னாங்க. நான் நீயா உணரட்டும்னு சொல்லி எதையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த ஜெகன் வந்து
தான் உன்னை யோசிக்க வச்சிருக்கான். நீ ரொம்ப ஸ்லோ டி வேதா “, என்று சிரித்தான்.
“எருமை அப்புறம் எதுக்கு டா வெறுப்பேத்துற?”
“வெறுப்பேத்துனா என்ன பண்றன்னு பாப்போம்னு நினைச்சு விளையாடுனேன். ஆனா நீ முத்தம் தருவேன்னு சொல்லிட்ட.
எங்க கொடு பாப்போம்”
மனம் முழுவதும் சந்தோசத்துடன், சிறு கூச்சத்துடன் மெதுவாக அவன் முகத்தருகே சென்றவள், தன்னுடைய உதடுகளை
அவன் உதட்டில் பொருத்தி விட்டு உடனே விலகினாள்.
“என்னது இது? கிஸ்ஸா? முத்தம்ன்னா எப்படி கொண்டுக்கணும் தெரியுமா?”, என்று கேட்டவன், அவளை இடையோடு
வளைத்து அணைத்து வன்மையாக அவள் உதடுகளை சுவைத்தான். அவனுடைய ஆழ்ந்த முத்தத்தில் மெய் மறந்த
வேதா அவன் முதுகில் கைகளை படர விட்டாள்.
அவளை விட்டு விலகி “முத்தம்ன்னா இப்படி கொடுக்கணும்”, என்றவன் மறுபடியும் அவள் இதழ்களை சிறை செய்தான்.
அவன் கழுத்தில் கை வைத்த வேதாவின் கைகள் உணர்ச்சி வேகத்தில் அவன் தலை முடியை இறுக்கி பிடித்தது.
சிறிது நேரம் கழித்து விலகியவன் தன்னுடைய சட்டை பையில் இருந்த சாக்லெட்டை அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கி கொண்டே “சின்ன சாக்லேட் வாங்கியிருக்கலாம்ல டா?”, என்று சொன்னாள் வேதா.
“உனக்கு இதான பிடிக்கும் டி?”
“இப்ப பிடிக்கலை”
“ஏன்?”
“சின்ன சாக்லேட்ன்னா நீ பாதி சாப்டுட்டு இருக்கும் போது அதை பிடுங்கி சாப்பிடலாம்ல?”, என்று வெக்கத்துடன்
சொன்னாள் வேதா.
“ச்செ செம ஐடியா. இது எனக்கு தோணாம போயிட்டே. இப்பவே போய் ஒரு பெரிய பாக்கெட் வாங்கிட்டு வரேன்”
“நாளைக்கு அதை வாங்கிட்டு வா. இன்னைக்கு இதை சாப்பிடலாம்”, என்று சொல்லி கொண்டே வெக்கத்துடன் அவன்
நெஞ்சில் சாய்ந்தாள் வேதா.
“ஐ லவ் யு வேதா”, என்று சொல்லி கொண்டே அவளை அணைத்து கொண்டான் ரிஷி.
“ஐ லவ் யு ரிஷி”, என்று சொல்லி கொண்டே சாக்லெட்டை பிரித்து ஒரு துண்டை அவன் வாயில் வைத்தாள் வேதா.
“எனக்கு வேண்டாம். நீ சாப்பிடு”, என்று சொல்லி அதை அவள் வாயில் போட்டவன் சில நொடிகள் கழித்து அவளுடைய
வாயில் இருந்தே அதை எடுத்து கொண்டான்.
அவன் இப்படி செய்வான் என்று தெரியாமல் அதிர்ச்சியாக அவனை பார்த்தவள் அவன் நெஞ்சிலே முகம் புதைத்து
கொண்டாள்.
“இப்பவே போய் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிறட்டுமா வேதா?”, என்று கேட்டான் ரிஷி.
“கொஞ்ச நாள் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்குவோமா ரிஷி?”
“ஐயோ, அதெல்லாம் வேண்டாம். இத்தனை நாள் எப்படியோ? இப்ப முத்தம் எல்லாம் கொடுத்த பிறகு உன்னை
பாத்துட்டு மட்டும் என்னால இருக்க முடியாது பா. சீக்கிரம் எனக்கு நீ வேணும். அதுவும் மொத்தமா”, என்று சொல்லி
கண்களை சிமிட்டினான் ரிஷி.
“ச்சி, போடா”, என்று சொல்லி அவனை குத்தினாள் வேதா.
காதல் உயிர்த்தெழும்…..