கரை காணா காதலே – 14
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
இளையராஜாவின் இசையில், வாலியின் வரிகளில், ஜேசுதாஸின் மென் குரலில் பாடலை ரசித்தபடியே, இதழ்களில் புன்னகை தவழ காரை ஓட்டிக் கொண்டிருந்தான் வேதாந்த்..
அன்றைய தினம் மஹதி அடித்த லூட்டியை நினைத்து தான் இந்த புன்னகை. அன்றைக்கு கல்லூரியில் சஞ்சீவ் மற்றும் பிரபா இருவரிடமும் வந்திருந்தனர் மஹதியும், நிமிஷாவும்.. தூரத்தில் வந்து கொண்டிருந்த வேதாந்த் இவர்களை கவனிக்கவில்லை…
“சீனியர்ஸ்…” மஹதி தான் மெல்லிய குரலில் கூப்பிட்டாள்..
இதனை முதலில் கவனித்தது சஞ்சீவ் தான். மஹதியை பார்த்ததும் அவன் முகம் பூவாய் மலர்ந்தது…. அதன் பின் தான் பிரபா பார்த்தான் மஹதியையும் , நிமிஷாவையும். என்னவோ அவன் பார்வையை அவள் மேல் இருந்து எடுக்கவே இல்லை. பிரபா நிமிஷாவை பார்த்து கொண்டே தான் இருந்தான்…
ஆனால் நிமிஷாவோ அவன் மீதான கோவத்தை அப்பட்டமாக அவன் மேல் காட்டினாள். அவனை முறைத்து பார்த்து விட்டு பார்வையை வேறு புறம் திருப்பினாள்…
மஹதி லேசாய் சிரித்து விட்டு, பின் “சீனியர் அன்னிக்கு நீங்க வந்து ஹெல்ப் பண்ணலேன்னா என்னாகி இருக்கும்னே தெரியலை… டைமிங்ல வந்து ஹெல்ப் பண்ணுனீங்க… அன்னிக்கு இருந்த பதட்டத்துல எனக்கு என்ன செய்றதுன்னு தெரியாம, ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம ஓடிட்டேன், சாரி சீனியர் அண்ட் தேங்க்ஸ் பார் தி ஹெல்ப்..” என்று முழுதாய் பேசி முடித்தாள்..
சஞ்சீவிற்கு முழுதாய் புரியவில்லை என்றாலும், அன்றைக்கு பேசியது வேதாந்த் தானே அவனுக்கு தானே தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான்..
‘ஒரு வேளை நாமளும் அந்த இடத்தில இருந்தோம்ல அதனால தான் நம்மகிட்டயும் கேட்டுருக்கா போல…’ என்று தவறாய் ஆனால் சரியான நேரமாய் நினைத்து கொண்டான்…
அவனுக்கு தெரியாதே மஹதி இன்னும் வேதாந்தை பார்த்தது இல்லை என்று.. அவள் பேசி முடிக்கவும், அவள் எந்த கிளாஸ், என்ன டிபார்ட்மெண்ட், எங்க இருந்து வருகிறாள் என்ற சில பல கேள்வி பதில்களை பரிமாறிக் கொண்டனர்.. அவர்கள் பேசி முடிக்கும் வரை பிரபா, நிமிஷாவின் கண்ணாமூச்சி தொடர்ந்து கொண்டிருந்தது…
மஹதி சொல்ல சொல்ல பிரபாவும் அதனை உள்வாங்கிக் கொண்டான்.. இவள் கூட வந்திருக்கிறாள் என்றால் அவள் இவளது பிரண்டாக தானே இருக்க வேண்டும், அதனாலேயே இவள் சொல்லும் டீடைல்ஸ் அவளுக்குமானதாக எடுத்துக் கொண்டான்…
(அவனுக்கு தான் பொண்ணுங்க பிடிக்காதே.. அப்பறம் எதுக்கு அவனுக்கு இவ்வளவு டீடைல்ஸ் )
ஒரு வழியாய் அவர்கள் பேசி முடித்து அந்த பக்கம் செல்லவும், வேதாந்த் சரியாய் அங்கே வந்திருந்தான்…
நேராய் நண்பர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவனை, பிரின்சிபல் அழைத்ததாக சொல்லி, பியூன் வந்து சொல்லி விட்டு சென்றான்… அவர் கூப்பிட்டதும் வேதாந்த் ,பிரின்சிபலை பார்க்க சென்று விட்டான். அவன் பிரின்சிபலை சந்தித்து விட்டு வருவதற்குள், இவர்கள் கிளம்பி விட்டனர்…
“டேய் எங்கடா போன??” பிரபா வேதாந்திடம் கேட்டுக் கொண்டிருந்தான்…
“ப்ரின்சி கூப்பிட்டு இருந்தார்டா, அதான் போய் பாத்துட்டு வரேன்… ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா??”
“அது எல்லாம் இல்ல, வா கிளாஸ்க்கு போகலாம்…” என்று மூவரும் கிளம்பினர்…
சஞ்சீவ் மஹதி வந்து சென்றதை சொல்லவில்லை.. ஏனோ அவனுக்கு சொல்ல தோன்றவில்லை.. பிரபவாவது சொல்லி இருக்கலாம், அவனும் சொல்லவில்லை… வேதாந்திடம் மறைக்க கூடாது என்று எண்ணவில்லை… இருவருமே அவரவர் எண்ணங்களில் இருந்தனர்…
கொஞ்சம் சுதாரித்து, மஹதி வந்து சென்றதை சொல்லி இருந்தால் பின்நாளில் எந்த பிரச்சினையும் இருந்திருக்காதோ ????
கல்லூரி நாட்கள் அனைவருக்கும் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது… ஆண்கள் மூவரும் அவரவர் மேற்படிப்புக்காக தங்களை தாயார் படுத்திக் கொண்டிருந்தனர்… மஹதி மற்றும் நிமிஷாவுக்கு அவர்கள் ஆரம்ப கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து கொண்டிருந்தனர்..
கிளாஸ் கட் அடித்துவிட்டு கான்டீன் செல்வது, புதிதாக வந்த எல்லா புதுப்படங்களையும் காலேஜ் கட் அடித்து விட்டு போய் பார்த்து விடுவது, அவர்களிடம் வாலாட்டும் மாணவர்களின் ரெகார்ட் நோட் சப்மிஷன் அன்று எடுத்து ஒளித்து வைத்து விடுவது, ப்ரொபசர்களையும் விடவில்லை இருவரும்.. அவர்களையும் கலாய்த்து விடுவது என்று எல்லா சேட்டைகளையும் செய்து கொண்டிருந்தனர்…
ஆனால் எவ்வளவு சேட்டைகள் செய்ததாலும் படிப்பில் கெட்டியாக இருந்தனர் இருவரும்.. அதனால் ப்ரொபசர்ஸ் எதுவும் சொல்லுவதில்லை..
அன்று காலேஜ் ஸ்போர்ட்ஸ் டே…
அவர்கள் கல்லூரியின் விளையாட்டு அரங்கம் விழாகோலம் பூண்டு இருந்தது… மேலும் வெளி கல்லூரிகளில் இருந்து நிறைய மாணவர்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்…
வேதாந்த் தான் அவர்கள் காலேஜ் புட் பால் டீம் கேப்டன்… அன்று அவர்களுக்கு இறுதி.. போட்டி நடைபெற இருந்தது…. மஹதியும், நிமிஷாவும் அந்த போட்டியை காண வந்திருந்தனர்…
சஞ்சீவ் கொஞ்ச நாட்களாகவே மஹதியை தான் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்… அவள் பார்வையில் படாமல்…
பிரபாவும், வேதாந்தும் இவனை கவனித்தாலும், இத்தனை வருடம் ஒழுங்காக இருந்தவன் கடைசி வருடத்தில் கோட்டை விட்டுவிடுவானா என்ன?? மேலும் அவன் அடிக்கடி ப்ராஜெக்ட், ரிசர்ச் என்று லைப்ரரி செல்வதால் இவன் அங்கு தான் செல்கிறான் என்றே நினைத்தனர்…
கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து இருக்கும்…. அதற்கு முதற்காரணமே அவர்கள் சஞ்சீவ் மேல் வைத்திருந்த நம்பிக்கை தான்….
ஒருவரின் மீதான நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் சம்பாதித்து விட முடியாது… ஆனால் அவர்கள் மீதான நம்பிக்கையை கை விடுவது என்பது சிறு செயலால் கூட முடிந்து விடும்…
காலை வெயில் ஏற தொடங்கிருந்தது… காலேஜில் முக்கால்வாசி மாணவர்கள், ஆசிரியர்கள் என அவனைவரும் அங்கே குழுமி இருந்தனர்… வேதாந்த் ஆட்டத்தை காண…
“ஏன்டி அடிக்கிற வெயில்ல என்னை ஏன்டி இங்க வந்து பாக்க சொல்ற… ஹப்பா என்ன வெயிலு?? விட்ல இருந்திருந்தா என் சாம்பியன் கூடவாவது டைம் ஸ்பென்ட் பண்ணி இருப்பேன்…” என்று மஹதி துப்பட்டாவை விசிறிய படியே நிமிஷாவை வறுத்து கொண்டிருந்தாள்….
ஆனால் அவள் வாயில் ஈ போனால் கூட தெரியாத அளவிற்கு அங்கு நடந்து கொண்டிருந்த ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தாள்…
“ஏய் ஏன்டி நொய் நொய்ன்னு காதுக்குள்ளே கத்திட்டு இருக்க, அங்க நம்ம காலேஜ் ரெப்பிரசன்டேடிவ், ஸ்டுடென்ட்ஸ் சேர்மன் வேதாந்த் தான் அங்க விளையாடிட்டு இருக்காங்க அவரை பாக்க தான் உன்னையும் கூட்டிட்டு வந்தேன்.. ஆனா நீ வந்ததுல இருந்து பொலம்பிட்டே இருக்கடி, இனிமே ஏதாவது பேசி பாரு அப்பறம் இருக்கு உனக்கு ..” என்று அவளை பார்த்து அவள் கழுத்தை நெறிக்க போனாள்..
“ஹைய்யோ…” என்றவாறே தலையில் கை வைத்தாள் மஹதி… அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நிமிஷாவிற்காக பார்த்ததாக வேண்டுமே….
“யாரையோ சொன்னாளே… ஹ்ம்ம் யாரா இருக்கும்” என்று நகத்தை கடித்தபடியே யோசித்தாள்…
“இவ கிட்டே கேட்டா கடிச்சு வச்சாலும், வச்சுருவாளே… சரி மெதுவா கேட்டு பாப்போம்..” என்றவாறே மெதுவாய் அவளை சுரண்டினாள்…
நிமிஷா அதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை… “இவளை” என்று பெருமூச்சு விட்டு, அவள் கையில் பலமாய் கிள்ளினாள்..
அவள் கிள்ளியதில் வெறியானவள் “ஏன் ஏன்டி உனக்கு என்ன தான் வேணும்..” என்று கோபமாய் கேட்டு விட்டு கண்களில் கொலை வெறியுடன் அவளை பார்த்திருந்தாள்…
“ஹி ஹி அது ஒண்ணும் இல்லடி நீ யாரையோ பாக்கிறதுக்கு தான் வந்தேன்னு சொன்னாலே, அதான் யாரு.??”
“அதுக்கு எதுக்கு பல்லை காட்டுற, வாயை மூடு” என்று சூடாய் பதிலளித்தாள்..
“ஹேய் செல்லம்ல சொல்லுடி யாருன்னு… இல்லைனா எனக்கு மண்டை வெடிச்சுரும்…” என்றாள் கெஞ்சுதலாய்…
“ஹ்ம்ம் சொல்றேன் ஆனா நீ சைட் அடிக்க கூடாது..” என்றாள் நிபந்தனையாய்..
இப்போது முறைப்பது இவள் முறையானது…
“ரொம்ப பண்ணாம சொல்லுடி…”
“அதோ அந்த 7 நம்பர் ஜெர்சி போட்டு இருக்காங்கல, அவர் தான்டி…”
எங்கே என அவள் பார்வை வேதாந்தை தேடியது… அங்கே அவனோ, வெற்றி என்ற நோக்கில் பந்தை விரட்டி கொண்டிருந்தான்.. ஒரு வழியாய் அவனை கண்டு பிடித்தவள், அதிர்ந்தாள்….
“ இவனா…!!!!”
“நிமி நீ சொல்றது இவனை தானா??” என்று அவனை நோக்கி கையை நீட்டினாள்…
“ ஆமாடி ஆமாம்..”
“அச்சோ இவனா , இவன் அவன்ல” என்று அவளுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தாள்…
“இவன் நம்ம காலேஜாடி, நீ எப்போ இவனை பாத்த???”
“நானா அன்னிக்கு நீ செம் பீஸ் கட்ட ஆபீஸ் ரூம் போய் இருந்தல, அப்போ இவர் நம்ம கிளாஸ் ரூமுக்கு வந்தார்டி, வாவ் என்ன ஸ்பீச் தெரியுமா, அவர் பேசி முடிக்கிற வரை நம்ம கிளாஸ்ல அவ்ளோ அமைதிடி, பசங்க எல்லாம் இவரை ரோல் மாடலா நெனைச்சுட்டாங்கடி..” என்று வாய் ஓயாமால் அவனை பற்றியே சொல்லிக் கொண்டிருந்தாள்..
ஆனால் மஹதியோ இவனை முதலில் சந்தித்ததையே நினைத்து கொண்டிருந்தாள்…
பள்ளிப் படிப்பின் கடைசி வருடத்தில் பரீட்சை முடிந்து விடுமுறையில் இருந்தாள் மஹதி.. அன்று தான் புதிதாய் அவன் வந்திருந்தான் மஹதி வீட்டிற்கு.. அவனை பார்த்ததுமே அக்கா, தங்கை இருவருக்குமே மகிழ்ச்சி தாங்கவே இல்லை…
பின்னே எவ்வளவு நாட்களாக கேட்டு, கேட்டு இன்று தானே வந்திருக்கிறான். அதுவும் அவன் அன்னை மூலமாக…
அவன் வேறு யாரும் அல்ல…. பக் டாக் தான்… (வோடபோன் விளம்பரத்தில் வருமே அந்த நாய் குட்டி தான் )
மஹதி, ப்ரியா இருவருக்குமே பெட் மிகவும் பிடித்தமான ஒன்று… அந்த விளம்பரத்தை பார்த்து அடிக்கடி இந்த குட்டி தான் வேணும் என்று அடம் பிடித்த நாட்கள் எல்லாம் உண்டு…
பள்ளியில் பரீட்சை நேரம் என்பதால் தான் தமிழ் அதை வாங்கி குடுக்கவில்லை… இல்லையென்றால் இருவரும் படிக்காமல் அதனுடேயே விளையாடி கொண்டு இருப்பார்கள் என்று பரீட்சை முடியவும் வாங்கி கொடுத்திருந்தார்..
இதோ அவர் நினைத்த படியே வந்ததிலிருந்து இருவரும் மாற்றி மாற்றி கொஞ்சி விளையாடி கொண்டிரருந்தனர்…
“அக்கா இவனுக்கு பேர் வைக்கணும்ல…”
“ஆமாம்ல பட் என்ன பேர் வைக்கலாம்…” என்று யோசிக்க ஆரம்பித்தனர்..
“ஹ்ம்ம் லாலு ன்னு வைக்கலாமா ???”
“அது எல்லாம் வேணாம் சும்மா கெத்தான நேம் வைக்கணும்…” என்று இருவரும் யோசித்தனர்….
“வாவ் ஐ காட் எ நேம்…” என்றாள் மஹதி…
“என்ன நேம் சொல்லுக்கா..”
“ சாம்பியன்…” எப்படி இருக்கு…
“ வாவ் நம்ம வீட்டு சாம்பியன் இவன் தான்.. சூப்பர்கா “
“சோ இன்னைக்கு இருந்து இவன் நேம் சாம்பியன்…. அம்மாகிட்டேயும், பாட்டிகிட்டேயும் சொல்லிடுடி..”
“ ஹ்ம்ம் ஓகே ஓகே …”
“ அக்கா இவன் வந்ததை நாம செலிபிரேட் பண்ணலாமா..”
“செலிபிரேட் பண்ணனுமா எப்படி..”
“வேற என்ன நம்ம ஸ்கூட்டில ஒரு டிரைவ் போலாம்கா இவனையும் கூட்டிட்டு..” என்றாள் ஒரு பக்க புருவத்தை உயர்த்தி…
“ஹே அம்மா இருக்காங்க, பாட்டியும் விட மாட்டங்கடி..சும்மா இரு..”
“லூசு அக்கா அவங்க இருக்கும் போதா போக சொல்றேன் எப்பவும் போல தெரியாம தான் போகணும்…”
இது இவர்கள் இருவரும் வழமையாய் செய்யும் ஒன்று தான்… எங்கேயாவது தனியாக இருவரும் செல்ல வேண்டும் என்றால், இல்லை சும்மா போரடித்தால் மஹதி அப்பாவின் ஸ்கூட்டியை எடுத்து செல்வது தான்… தமிழ், கமலாவதிக்கு தெரிந்தால் விட மாட்டார்கள்.. அதனால் அவர்களுக்கு தெரியாமல் தான் எடுத்து போவார்கள்…
“இப்போ அம்மாவும், பாட்டியும் எப்படியும் தூங்க போய்டுவாங்ககா, நாம அந்த கேப்ல எஸ் ஆகிடுவோம்கா… எப்படி என் ஐடியா..” என்று சட்டை இல்லாத காலரை தூக்கி விட்டாள்..
“ஹ்ம்ம் சரி வா போவோம்… இரு இரு அவங்க தூங்கிட்டங்களான்னு பாத்துட்டு வா..”
தமிழும், கமலாவதியும் உறங்குவதை உறுதி செய்த பின் இருவரும் அவர்களது ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர்.. உடன் சாம்பியனும்… பின்னே வீட்டிலேயே ஸ்டார்ட் செய்தால் சத்தம் கேட்டு விடுமே…
அம்புட்டு அறிவு பிள்ளைங்க!!!!!!!
வெளியே வந்ததும் மஹதி வண்டியை ஸ்டார்ட் செய்தாள், பின்னால் ப்ரியா அமர்ந்தாள், முன்னாடி மஹதியின் கால்களுக்கு இடையில் சாம்பியன் நின்று கொண்டான். மஹதி மட்டும் ஸ்டோல் போட்டு முகத்தை மறைத்து இருந்தாள்.. கண்கள் மட்டும் தெரியுமாறு ஸ்கூட்டி ஓட்டுவதற்கு ஏதுவாக மறைத்திருந்தாள்.
சிறிது தூரம் மகிழ்ச்சியாய் மூவருமே சென்று கொண்டிருந்தனர்…. முந்தின நாள் பெய்த மழையில் அங்காங்கே நீர் தேங்கி இருந்தது…
மஹதி ஒரு வளைவில் வேகமாக திருப்ப முயல, எதிரில் ஒரு வண்டியும் வர அங்கு தேங்கி இருந்த நீர் தெறித்து சாம்பியன் மேல் விழுந்தது…
பிறந்து இரண்டு வாரங்களே ஆனா குட்டி, திடீரென நீர் தெறித்ததும், தலையை உலுக்கி கொண்டு தடுமாறி விழுந்தது…. மஹதியின் கால்களை உரசிக் கொண்டே…
“டேய் சாம் என்ன பண்ற.. டான்ஸ் ஆடாதேடா…” என்று வண்டியை சமாளித்து ஓட்டிக்கொண்டு அவனுடன் பேசினாள்..
ஆனால் சாம்பியனால் சமாளிக்க முடியவில்லை, அது வண்டியில் இருந்து குதித்து விட்டது..
அது குதித்ததும் மஹதியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை, கீழே விழுந்த சாம்பியனை வேறு பார்க்க வேண்டுமே என்ற பதட்டத்தில் எதிரே வந்த காரை கவனிக்கவில்லை…
அந்த காரில் வந்தவனோ இவர்கள் தடுமாறுகிறார்கள் என்று அறிந்ததும் அவசரமாக சைடாக வளைத்தான்.. ஆனாலும் மஹதி அவன் கார் மீது மோதி டூம் லைட் உடைத்து விட்டே நிறுத்தினாள்..
இவள் ஸ்கூட்டியை ஸ்டான்ட் போட்டு நநிறுத்துவதற்கும், அவன் காரை விட்டு இறங்கி வருவதற்கும் சரியாய் இருந்தது…
நேராய் அவர்கள் அருகில் வந்தவன் கண்மண் தெரியாமால் திட்ட ஆரம்பித்திருந்தான்…
“ஹே ஆர் யூ இடியட்ஸ்… கண்ணு தெரியலை… ஹாரன் அடிச்சுட்டே வர்றேனே, அப்பறமும் பின்னாடி திரும்பி திரும்பி பாத்துட்டே வர்ற…. கண்ணு முன்னாடி இருக்கு ஆனா பார்வை எல்லாம் பின்னாடி இருக்கு…” என்றபடியே அவளை ஆராய்ந்தவன் அவள் கண்களின் விழியசைப்பில் ஒரு நொடி அசந்து வவிட்டான்..
“யப்பா என்ன கண்ணுடா சாமி…” என்றவன்… அவளிடம் இன்னும் ஆராய தொடங்கினான்….
வீட்டில் இருப்பதால் எப்போதும் போல நைட் ட்ரெஸ் மாதிரியான பேண்ட் ஷர்ட் காட்டனில் போட்டு இருந்தாள், இரட்டை ஜடை பின்னல்களை முன்னால் விட்டிருந்தாள்.. அது அவளது இடையை தாண்டி வளர்ந்திருந்தது… மற்றபடி முகத்தில் கண்கள் மட்டுமே தெரிந்தது…
கண்களில் மேல் இமைகளில் ஐலைனெர் எனப்படும் கண்மையும், கீழே காஜால் போட்டு இருந்தாள்… அது அவளது பெரிய கண்களை இன்னும் பெரிதாக நல்ல கோழி முட்டை சைஸ் கண் போல காட்டியது…
“இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது…
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி..” என்று பாட தோன்றியது அவனுக்கு…
அவன் காரில் இருந்து இறங்கும் போதே முடிவு செய்திருந்தான் தான், எதோ சின்ன பிள்ளைகள் போல, டிரைவிங் கற்று கொள்கிறார்கள் போல… சும்மா வார்ன் பண்ணி மட்டும் விட்டு விடவும் என்றே நினைத்திருந்தான்…
ஆனால் இங்கே இவளை பார்த்ததும் எல்லாம் மறந்து விட்டது…
ஏனோ அவளிடம் வம்பளக்க தோன்றியது…
“என் கார் டூம் லைட்ஸ் எல்லாம் போச்சு…” இதுக்கு எல்லாம் யார் செலவழிப்பா??? கொஞ்சம் கூட கவனமே இல்ல, நல்லா ஓட்ட கத்துக்கிட்டு அப்பறமா இந்த மாதிரி ரோடுல டிரைவ் பண்ண ஆசைப்படுங்க.. ஓகே ..” என்று பொய்யான கோபத்துடன் பேசினான்…
இவனது கோபத்தை உண்மையென நம்பியவள் கண்களில் மெலிதாய் நீர் தேங்கிக் கொண்டிருந்தது.
அவள் பேச ஆரம்பிக்கலாம் என்றெண்ணி அவளின் முகத்தில் கட்டியிருந்த ஸ்டோலை கழட்ட, அவளுக்கு முன் முந்திக் கொண்டாள் ப்ரியா..
“ஹலோ என்ன ஓவரா பேசிட்டே போறீங்க… எங்க அக்கா நல்லாவே டிரைவ் பண்ணுவா… எதோ எங்க சாம்பியன் கீழே விழ போற பதட்டத்திலே தான் உங்க கார்ல மோதிட்டா… அதுவும் தெரியாம… சோ மைன்ட் யுவர் வோர்ட்ஸ்.. க்க்ஹும்.” என்று முகத்தை திருப்பினாள் ப்ரியா….
“இவ தான் அமைதிபோல… இது கொஞ்சம் வாயடி போலையே ஹ்ம்ம்..”
“சரி நடந்தது எல்லாம் நடந்து போச்சு இனிமே என்ன செய்றதுன்னு மட்டும் யோசிங்க…. என் டூம் லைட்ஸ் எல்லாம் மாத்தி குடுங்க… இல்லன்னா உங்க வீட்ல பெரியவங்க கிட்டே சொல்லி மாத்தி குடுக்க சொல்லுங்க..”
அதிராமல் ஒரு குண்டை தூக்கி போட்டான்… அக்கா, தங்கை இருவருமே அதிர்ந்து நின்றனர்…. வேறு வினையே வேண்டாம் அவ்வளவு தான் அடி தீர்த்து விடுவார் தமிழ்…
இந்த மாதிரி எதாவது நடந்து விடுமோ என்ற பயத்தில் தான் அவர் இவர்களை ஸ்கூட்டியை தொட அனுமதிப்பது இல்லை… இப்போது கூட தெரியாமல் எடுத்து வந்திருப்பது தெரிந்தாலே அவ்வளவு தான்… இதில் இந்த பிரச்சனையை வேறு சொன்னோம் கதை முடிந்தது…
மஹதி யோசித்து பார்த்தவள், அவனிடம் சாரி கேட்டு பார்ப்போம் என்று “சார் ப்ளீஸ் சாரி….தெரியாம பண்ணிட்டோம்…” என்றாள்…
“சீ உங்க சாரி எல்லாம் எனக்கு வேணாம்… எனக்கு என் கார் டூம்ஸ் சரி பண்ணி மட்டும் குடுத்துடுங்க…தட்ஸ் ஆல் …” என்றான் கூலாக….
“பாவி இவன் வேற…” என்று முனங்கியவள், “அச்சோ இப்போ என்னடி செய்ய…” என்று தங்கையிடம் கேட்க,
“அக்கா இப்போதைக்கு நம்ம எதுவுமே செய்ய முடியாது சோ அவர்கிட்டே அவங்க அட்ரஸ் மட்டும் வாங்கிப்போம், அண்ட் நாளைக்கு போய் அவங்க கார் டூம் சரி பண்ணி குடுத்துட்டு வந்திடுவோம்… இல்லேன்னா இவர் வீட்டுக்கு வந்தாலும் வந்திடுவார்…” என்று ஐடியா ராணி ஐடியா கொடுத்தாள்..
“அப்படி சொல்றியா நீ.. சரி அப்படியே கேட்டு பாக்கிறேன்…”
“சார் இப்போ எங்களுக்கு அவசரமா வீட்டிக்கு போகணும் சோ உங்க அட்ரஸ் குடுங்க, நான் நாளைக்கு வந்து கண்டிப்பா இதை சரி பண்ணி குடுத்துட்டு போறோம்..” என்று கேட்டாள்..
அவனும் சட்டென யோசிக்காமல் தனது பர்ஸில் இருந்த தன் விசிடிங் கார்டு எடுத்து கொடுத்தான்…. பின்னே நாளைக்கு அவளே சந்திக்க சந்தர்ப்பம் தருகிறாள்… வேணாம் என்று சொல்ல அவன் என்ன முட்டாளா….????
“இந்தாங்க இது என் கார்டு… நாளைக்கு வந்து சரி பண்ணி குடுங்க… ஐ வில் பீ வைடிங்..” என்றவாறே அவன் அவர்களிடம் விடை பெற்றான்.
அவன் கார் அங்கிருந்து கிளம்பிய பின் தான் மஹதி அந்த விசிடிங் கார்டை பார்த்தாள்..
“வேதாந்த், எக்ஸ்சிகியுட்டீவ் மேனேஜிங் டைரக்டர்.. வேதாந்த் மோட்டோர்ஸ் ப்ரைவேட் லிமிடட்.. என்று இருந்தது…”
ஆம், அப்போதே அவனது கம்பெனி பொறுப்பை அவன் அப்பாவுடன் சேர்ந்து கவனிக்க தொடக்கி இருந்தான்…
“ஹேய் இவனே பெரிய ஆள் போ ப்ரியா.. இப்போ எப்படி சரி பண்ணி குடுக்க…”
“ஹா ஹா யார் சரி பண்ணி குடுக்க போறா???”
“ஹேய் என்னடி சொல்ற “ என்று அதிர்ந்தாள் மஹதி
“அக்கா அவன் அட்ரஸ் தான் குடுத்துட்டு போய் இருக்கான்… நம்ம அட்ரஸ் குடுக்கலையே… அப்பறம் எப்படி நம்மளை கண்டு பிடிக்க முடியும்.. நான் அவனை சமாளிக்க அப்போ அப்படி சொன்னேன்… இப்போ இதை ப்ரீயா விடுக்கா…” என்று சொல்பவளை பார்த்து அசந்து நின்றாள் மஹதி…
“சரியான கேடிடி நீ…” என்றவள் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்…
அதற்குள் அவர்களது சாம்பியனும் அங்கே வந்திருந்தது… மெதுவாக தத்தி தத்தி…
“ஹேய் இங்கே பாரேன் நம்மளை தேடி ஆவனே இவ்வளவு தூரம் வந்துட்டான்…” என்றபடியே அதை தூக்கியவள் “எல்லா பிரச்னையும் உன்னால தான் ..” என்று அதன் காதை மெதுவாக திருகினாள்…
பின் மூவரும் வீடு திரும்பினர்… அதற்க்கு பின் அவள் அவனை நினைத்து கூட பார்க்கவில்லை…
காரில் போய்க்கொண்டிருந்த வேதாந்தோ அவள் நினைவிலேயே போய் கொண்டிருந்தான்…
“ஹௌ ப்ரெட்டிஷீ இஸ்..???
“நீட் எ வொய்ப் லைக் தட் கேர்ள்…”
தன் எண்ண போக்கை கண்டு அவனே அதிர்ந்தான்…. அப்போ நான் அவளை விரும்ப ஆரம்பிச்சுட்டேனா…
முதல் பார்வையிலேயேவா..??
“வாவ் சூப்பர்..” என்று அவனே ஆர்பாரித்துக்கொண்டான்… “சிட் அவ அட்ரஸ் வாங்கலையே…??” என்று யோசிக்க,
“நாளைக்கு வருவாளே அப்போ வாங்கிட்டா போச்சு..” என்று மனசாட்சி வரிந்து கட்டி வந்தது…
அவள் நாளை வருவாள் என்று நம்பிக்கையுடனேயே அவன் சென்றான்… ஆனால் அவள் தான் அந்த கணமே மறந்து விட்டாளே பின் அந்த பக்கமும் செல்ல வில்லை.. அவனையும் நினைவு படுத்தி பார்க்கவில்லை…
வேதாந்த் தான் அவளை தேடி தினமும் அந்த வழியில் வந்தான்… அவளை காணும் ஆசையுடன்… அவளோ வரவே இல்லை…. இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது…
“வேதாந்த் வேதாந்த்…” என்ற கூச்சலில் தான் தன் சுயநினைவிற்கு வந்தாள் மஹதி…
அவன் அணி வெற்றி பெற்றதாலேயே இந்த சந்தோஷ கூச்சல்…
“இவள் கண்களும் அவனை தேடியது… ஆனால் அவனோ இவளை மட்டுமே மைதானத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தான்.. வெகு நேரமாக….
“அச்சச்சோ..” என்று அவள் தன் முகத்தை மறைத்தாள்…
அவனோ இவளை இதழ் ஓரத்தில் சிறிய புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்தான்….
பரிசு வழங்கும் விழா முடிந்ததும், எங்கே அவன் கண்களில் பட்டு விடுவோமோ என்று அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினாள்… அவள் தன்னை பார்த்து தான் இப்படி அவசரமாக கிளம்புகிறாள் என்று அவளையே பார்த்து கொண்டிருந்த வேதாந்திற்கு முகம் கொள்ளா புன்னகை தான்…
அந்த புன்னைகையோடு காரில் வந்தவன் எதிரில் வந்து கொண்டிருந்த அந்த லாரியை கவனிக்க தவறினான்…. அந்த லாரி ஹாரன் அடிக்கவும் தன் சுயநினைவுக்கு திரும்பியவன், நடக்கவிருக்கும் விபத்தை தடுக்கவே எண்ணினான்… ஆனால் அவனையும் மீறி அந்த லாரி அவனின் கார் மீது மோதியது…
அவனது கார் அப்பளமாய் நொறுங்கியது……