அத்தியாயம் – 18
மறுநாள் அதிகாலையிலேயே ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர ஆரம்பித்திருந்தது.
வதனா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்த வருட படிப்பிற்கான மொத்த பணமும் அவள் ஸ்பான்சரின் மூலம் முன்பே செலுத்தப்பட்டிருந்தது.
பிரியன் அவளின் மற்ற தேவைகளை கவனித்துக் கொண்டான். முதலில் ஹாஸ்டலில் இருந்து அவளை தன் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான்.
வதனாவும் ஓரளவிற்கு தனக்கு தெரிந்ததை வீட்டில் சமைக்க ஆரம்பிக்க அவர்கள் வாழ்க்கை மற்றவர்கள் போலவே தங்கள் பயணத்தை இனிதாய் தான் தொடங்கியது.
அவ்வப்போது சிறு சிறு ஊடலும் பூசலும் மெல்ல தலைக்காட்ட ஆரம்பித்தது அவர்களுக்குள். பிரியன் வேலை டென்ஷனை அவளிடத்தில் காட்டுவான்.
அனைத்து வீட்டிலும் நடக்கும் விஷயம் தான் அது என்றாலும் வதனாவிற்கு தான் அதை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இயல்பாய் ஒரு குடும்பத்தில் வளர்ந்து வாழ்ந்திருந்தால் அவளால் இதையெல்லாம் சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடிந்திருக்குமோ!! என்னவோ!!
அவனின் கோபத்தில் அழுது வடிபவள் அன்றைய இரவில் அவளிடம் அவன் தணிந்து போகும் போது மொத்தமாய் உருகிப் போவாள்.
ஏனிப்படி நடந்துக் கொள்கிறான் என்று கேட்காமலும் இருந்ததில்லை. தன் கோப தாபத்தை யாரிடம் கொட்டுவது என்று அவன் விளக்கம் சொல்லும் போது தலையாட்டி கேட்பவள் அடுத்த நிமிடமே அதை மறந்தும் போவாள்.
பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.
ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
அன்று காலையில் அப்படி ஒரு பரபரப்பில் இருவருக்குமாய் தோசை ஊற்றி முடித்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு வந்து அவள் பையில் வைத்தாள்.
இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது அவள் கல்லூரிக்கு கிளம்புவதற்கு. அவள் குளித்து கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும்.
அவள் அறைக்குள் நுழையவும் பிரியன் அவள் முகத்தில் சட்டையை விசிறியடிக்கவும் சரியாக இருந்தது.
பிரியனிடம் ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. அவன் கோபத்தில் எதையும் தூக்கி எறிவது அல்லது எதையாவது போட்டு உடைப்பது.
வதனாவிற்கும் அவனுக்குமான சிறு சிறு பூசல்கள் மட்டுமே என்பதால் இதுவரை அப்படி அவன் நடந்திருந்ததில்லை. இன்று தான் முதன் முறையாய் தன் அதீத கோபத்தை அவளிடத்தில் காட்டுக்கிறான்.
பிரியனுக்கு வீடு எப்போதும் சுத்தமாயிருக்க வேண்டும். அவன் உடைகளும் அப்படியே!! திருமணத்திற்கு முன்பு வரை அவன் உடைகள் அனைத்தும் வெளியில் கொடுத்து இஸ்திரி செய்துக் கொள்வான்.
வதனா வந்ததில் இருந்து இந்த ஒரு மாதமாய் அவள் தான் அதெல்லாம் கவனித்துக் கொள்கிறாள். சனி ஞாயிறுகளில் அவளுக்கு விடுமுறை என்பதால் அப்போது இருவருக்குமான உடைகளை அயர்ன் செய்து வைத்துவிடுவாள்.
அந்த வாரம் அவளுக்கு செமஸ்டர் இருந்ததால் படிப்பின் மீது இருந்த கவனத்தில் உடை அயர்ன் செய்ய மறந்திருந்தாள்.
“இது தான் நீ அயர்ன் பண்ணி வைச்ச லட்சணமா…” என்று அவன் கோபமாய் இறைய அவன் எதற்கு சட்டையை எறிந்தான் என்பது அவளுக்கு அப்போது தான் உரைத்தது.
“இல்லை செமஸ்டர் இருந்துச்சு அதான் அயர்ன் பண்ண மறந்திட்டேன்…” என்று விழிகளில் வழிந்த நீருடன் சொன்னாள் அவள்.
“அப்போ என்கிட்டே முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல என்னால சட்டை அயர்ன் பண்ண முடியாதுன்னு….”
“படிக்கணும்ன்னு ஞாபகத்துல இருந்துச்சுல… இதையும் ஞாபத்துல வைக்க மாட்டியா!! இப்போ நான் எதை போட்டுட்டு போறது…”
“இந்த வாரம் முழுக்க அப்போ எனக்கு போடுறதுக்கு வேற சட்டையே இல்லையா!! பேண்ட் கதியும் அதே தானா!! போச்சு போச்சு எல்லாரும் என்னை காரி துப்ப போறாங்க இன்னைக்கு”
“இப்போ நான் எதை போடுவேன்… இன்னும் பத்து நிமிஷத்துல நான் கிளம்பியாகணும்… நான் சட்டையை அயர்ன் பண்ணுவேனா கிளம்புவேனா” என்று கத்திக் கொண்டிருக்க ஒன்றும் சொல்லாமல் அவன் சட்டையையும் அங்கு அவன் வைத்திருந்த பேண்ட்டையும் எடுத்துக்கொண்டு சென்றாள் அவள்.
“நீங்க சாப்பிடுங்க…” என்று சொல்லி அவன் கையில் காலை டிபனை கொடுத்துவிட்டு அவள் அவன் உடைகளை அயர்ன் செய்து முடித்தாள்.
பிரியனுக்கு கத்தி முடித்த பிறகே தான் அதிகம் பேசிவிட்டோம் என்று புரிந்தது.
இருந்தாலும் அவன் ஈகோவை விட்டு அவளிடம் சட்டென்று பேசவும் முடியவில்லை அவனுக்கு. அவள் படிக்க வேண்டும் என்று அவனுக்கும் தெரியும்.
ஒரு வார்த்தை முடியவில்லை என்றிருந்தால் என்ன வழியோ அதை அவனே பார்த்திருப்பான் தானே!! அப்படி தான் இருந்தது அவன் எண்ணம்.
அவள் அவன் உடையை அயர்ன் செய்து அங்கிருந்த கட்டிலில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். சாப்பிட்டு வந்த பிரியனின் கண்களில் அயர்ன் செய்திருந்த உடைகள் பட அவன் கோபம் மொத்தமாய் வடிந்திருந்தது.
பத்து நிமிடத்தில் கிளம்ப வேண்டும் என்று சொன்னவன் அவளுக்கும் தாமதமாகிறது என்று எண்ணி அவளை கல்லூரில் விட்டுச் செல்லலாம் என்று காத்திருந்தான் அவளுக்காய்.
குளித்து முடித்து வந்தவள் வேறு உடைக்கு மாறி அவள் கல்லூரி பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
‘நான் இங்க நிக்கறேன், அவ பாட்டுக்கு எனக்கென்னன்னு கிளம்பிப் போறா, எவ்வளவு திண்ணக்கம் அவளுக்கு’ என்று தான் அவன் கோபம் சென்றது.
இவளுக்காக நான் பாவப்பட்டு நிக்கறேன் பாரு என்னை உதைக்கணும் என்று தன்னை திட்டிக்கொண்டு அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றான். ஆயிற்று ஒரு வாரம் ஓடிவிட்டது இருவரும் வாய்விட்டு பேசிக் கொள்ளவில்லை.
அவன் வடக்கில் வந்தால் அவள் தெற்கே போவாள்… கிழக்கே வந்தால் மேற்கே போவாள்… ஒரு நாளும் அவன் மற்ற தேவைகளை அவள் கவனிக்காமல் இருந்ததில்லை.
சண்டை போட்ட அன்று மாலை வீட்டிற்கு வந்த போது பிரியன் எப்போதும் போல் அவளிடத்தில் பேசினான். ஆனால் அவள் தான் எதுவும் பதில் சொல்லவில்லை.
ஓரிரு முறை பார்த்துவிட்டு சரி தான் போடி என்று விட்டுவிட்டான் அவன். அது தான் இப்போது ஒரு வாரத்திற்கும் மேல் சென்றுவிட்டது.
இருவருக்கும் சூழ்நிலையை கையாளத் தெரியவில்லை. இதனால் தான் பக்குவமில்லா மணங்கள் தோல்வியில் முடிகின்றன போலும்.
கூட்டுக்குடும்பமாய் இருந்தால் பக்குவம் இல்லதவர்களோ இல்லை பக்குவபட்டவர்களோ பெரியவர்களின் கண்காணிப்பில் இருப்பதால் தங்கள் பிரச்சனை வெளியே தெரியக் கூடாது என்று தங்களுக்குள் பேசி தீர்ப்பர்.
அப்படியே பெரிதாய் போனாலும் வீட்டு பெரியவர்கள் கவனித்து தீர்ப்பர். குழந்தைக்கு உடல் நலமில்லாமல் போனால் கூட ஆயிரம் கை வயித்தியம் வைத்திருப்பர்.
இப்போது போல் முணுக்கென்றால் மருத்துவரிடம் ஓடும் வழக்கம் அதில் இல்லை தான். கூட்டுக்குடும்பங்கள் இருந்த வரை இருக்கும் வரை கணவன் மனைவி பிரச்சனை என்பது அரிதானதே.
இப்போதுள்ள நாகரீக வளர்ச்சி கொண்டு வந்த மாற்றம் தனிக்குடித்தனங்களும் காதல் மணம் புரிவோரும் அதிகமாகி போயினர்.
நாலு பேர் இருக்கும் இடத்தில் தங்களுக்குள் இருக்கும் பிணக்கை பற்றி கணவன் மனைவி அமைதியாய் பேசுவர். பக்குவமில்லா மணமும் தனிக்குடித்தன வாழ்க்கையுமாக இருக்கும் தம்பதியர் தங்களுக்குள் கத்தி சண்டையிட்டு ஆளுக்கொரு பக்கமாய் முறுக்கேறிக் கொள்வர்.
வதனாவிற்கு, ஒரு குடும்பம் இப்படி தான் இருக்கும் என்று பார்த்து வளர்ந்தவளோ இல்லை அவளுக்கு எடுத்துச் சொல்லவோ அன்னையோ உற்றார் உறவினரோ யாருமில்லை.
குறைந்தபட்சம் பிரியனின் பெற்றோருடன் வசித்திருந்தால் கூட பெரிதாய் இருவருக்குள்ளும் எந்த பிணக்கும் வந்திருக்காது, அப்படியே வந்தாலும் அதுவும் விரைவாய் தீர்ந்து போயிருக்கலாம்.
பிரியனும் அவளும் மட்டுமே அங்கு. இருவருக்குமே போதிய பக்குவமில்லை. படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற சில மாதத்தில் அவனுமாய் படித்துக் கொண்டிருக்கும் போதே அவளுமாய் திருமணம் முடித்துவிட்டனர்.
இருவருக்குள்ளும் தீராத அன்பிருந்தும் அதை சரியாய் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை அவர்கள். அவனை குறித்தான எதிர்பார்ப்பு அவளிடத்தில் மலையளவு.
ஆனால் அதை அவள் அவனிடத்தில் ஒரு போதும் காட்டியதில்லை. அவன் மனதில் அவள் மீதான் நேசம் கடலளவு இருந்தாலும் அவனுக்கும் அதை சரியாய் காட்டத் தெரியவில்லை.
எங்கு விட்டுக் கொடுக்க வேண்டும் எங்கு இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்ற தாம்பத்யத்தின் பாலப்பாடத்தை காலம் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க அதை கற்று தேறும் முன்னமே அவர்களின் பிரிவும் நிகழப் போவதறியாமல் போயினர் இருவரும்.
அந்த வாரம் ஞாயிறு அன்று விடுமுறை தினம் என்பதால் பிரியன் வீட்டிலிருந்தான். வதனாவின் செமஸ்டரும் முடிந்திருந்தது.
எப்போதும் ஞாயிறு என்றால் இருவருமாய் வெளியில் செல்வர். அவள் தேர்வின் காரணமாய் தான் அவர்கள் எங்கும் செல்லாமலிருந்தனர்.
பிரியனுக்கு தெரியும் அவள் தேர்வு முடிந்தது என்று. வதனா சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள். இப்படியே இருந்தால் எங்கே அவள் கோபத்தை தணிக்க முடியாதோ என்று எண்ணிய பிரியன் அவளிடம் மீண்டும் பேச முயற்சி செய்தான்.
“வது…”
பதிலில்லை அவளிடத்தில், வேண்டுமென்றே மும்முரமாய் கரண்டியை வைத்து கடாயில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தாள்.
பின்னால் சென்று அவளை அணைத்து அவள் கழுத்தில் முகம் பதித்தான். “இன்னும் என் மேல என்ன கோபம் வது… என்னை பார்த்தா பாவமாயில்லையா”
“என் குணமே அதான் வது… சட்டுன்னு உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டிருவேன்…”
“ஆனா அதெல்லாம் அன்னைக்கே மறந்திடுவேன்… நீ தான் என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிகிட்ட” என்றான் அவள் மேல் குற்றமாய்.
‘என்னை இப்படி ஹக் பண்ணி சமாதானம் செய்ய இத்தனை நாளாச்சா உங்களுக்கு…’ என்பது தான் அவள் மனதின் கேள்வியாய்.
ஆனால் அதை அவனிடத்திலே அப்படியே கேட்க கூச்சம் தடுத்தது அவளை. இப்போது அவளையே அவன் குற்றம் சொல்லவும் பேச வேண்டும் என்று எண்ணியவள் வாயை மூடிக் கொண்டாள் மீண்டும்.
“வது பேச மாட்டியா…”
“ஏதாச்சும் பேசேன்… திட்டவாச்சும் செய்யேன்… ஏன்டி இப்படி கொல்ற??” என்றான் அவளை பதில் பேசாது இருக்கவும் அவளை தன் புறம் திருப்பி.
அவள் கண்ணில் இருந்து ஒரு துளி சிதறி அவன் மேல் தெறித்தது. “ஹேய் வது இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு அழறே?? சாரி தானே கேட்டேன்…”
“என்னை சமாதானம் செய்யணும்ன்னு ஒரு வாரம் கழிச்சு தான் உங்களுக்கு தோணிச்சா…” என்றாள் கண்களில் வழிந்த கண்ணீருடன்.
“நான் என்ன செய்வேன், நீ தானே என்கிட்ட பேசாம இருந்தே??”
“அப்போ நான் பேசாம இருந்தா எப்படியோ போன்னு விட்டிருவீங்களா…”
“அப்படியெல்லாம் இல்லை வது…”
“நீங்க என் மேல கோபப்பட்டது கூட எனக்கு வருத்தமில்லை. என் மேல உரிமையா கோபப்பட எனக்குன்னு நீங்க மட்டும் தான் இருக்கீங்க…”
“அப்புறம் ஏன் நீ என் கூட பேசலை??”
“நான் சொல்றதை முழுசா கேளுங்க…” என்றுவிட்டு தொடர்ந்தாள் அவள்.
“இந்த மாதிரி கோபமெல்லாம் எனக்கு புதுசு… அன்னைக்கு நீங்க அப்படி நடந்துக்கும் போது நிஜமாவே எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு”
“நீங்களே என்னை புரிஞ்சுக்காம இருக்கீங்களேன்னு எனக்கு வருத்தம்… அதனால தான் அப்போ எதுவும் பேசலை…”
“என் மனசும் ஆறலை, அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்து என்கிட்ட பேசினப்போ காலையில ஒண்ணுமே நடக்காத மாதிரி இருந்தீங்க…”
“எனக்கு இதெல்லாம் புதுசா இருந்துச்சு… அதுக்கு அப்புறம் நீங்க என்கிட்ட பேசவே முயற்சி பண்ணலை. நானா வந்து பேசவும் எனக்கு தயக்கம்…”
“மனசு பூரா நீங்க எப்போ பேசுவீங்கன்னே இருக்கும்… நீங்க என்கிட்ட சகஜமா பேசாம எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா…” என்றவளால் மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர் வழிய அவன் மீதே சாய்ந்துக் கொண்டாள்.
“சாரிடா பிபி நிஜமாவே சாரி செல்லம்… நீ இவ்வளவு தனியா பீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியலை… ஏதோ வேலை டென்ஷன்… என் முன்கோபம் அதான் அப்படி எல்லாம்”
“இனிமே அப்படி இருக்க மாட்டேன், அதுக்காக நீயும் நான் எப்போடா பேசுவேன்னு பார்த்திருந்து என்கிட்ட பேசணும்ன்னு அவசியமில்லை…”
“நான் உன்னோட பிபி… இந்த பிரியாவோட பிரியன்… எப்பவும் அவளுக்கு பிரியமானவன்…”
“என்கிட்ட உரிமையா பேசவோ சண்டை போடவோ திட்டவோ அடிக்கவோ கொஞ்சவோ…” என்றவன் கடைசியாய் தன் உதடுகளை தொட்டுக் காட்டி “இங்க முத்தம் கொடுக்கவோ உனக்கு முழு உரிமையும் இருக்கு” என்று முடித்தான்.
“நான் சொல்றது புரியுதா… எனக்கு யார் இருக்கான்னு நினைச்சு நீ எப்பவும் அழக்கூடாது. உனக்கே உனக்கா உனக்கான உறவா நான் எப்பவும் இருப்பேன்…”
“ஹ்ம்ம்…”
“ஹ்ம்ம் எல்லாம் வேணாம்… உம்மா தான் வேணும்…” என்றவன் அவள் முகம் நிமிர்த்தி அவள் இதழில் தன் இதழ் முத்திரையை ஆழப் பதித்தான்.
ராகேஷ் வேறு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் எப்போதாவது அவர்களை காண அவன் வீட்டுக்கு வருவதுண்டு. இந்த ஒரு மாதமாக தான் அவன் வருவதில்லை.
அவன் கசின் ஒருவனின் உதவியால் அவனுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்திருக்க அவன் அங்கு சென்றுவிட்டான்.
பிரியனும், வத்னாவும் வாரம் ஒரு முறை கோவில், பார்க் என்று சென்று வருவார்கள். பிரியனின் அலுவலக நண்பர்கள் எப்போதாவது தங்கள் இணையுடன் வந்து செல்வர் அல்லது இவர்கள் அங்கு செல்வர்.
அவர்களின் நாட்கள் தன் அடியை மெல்ல எடுத்து வைத்து சென்றுக் கொண்டிருந்தது. அவ்வப்போது தோன்றி மறையும் சிறு பிணக்குகள் தவிர்த்து நன்றாகவே சென்றது.
அவர்களின் ஆறு மாத வாழ்க்கைக்கு பின்னே பிரியன் வதனாவை பிரியும் அந்த கொடிய நாளும் விடிந்தது. நல்ல பொழுதாய் விடிந்தது போலத் தானிருந்தது.
ஆனால் அது தனக்குள் நெறைய ரகசியங்களை புதைத்துக் கொண்டு விடிந்ததை யாருமறியர். அது ஒரு அழகிய ஞாயிறு காலைப்பொழுது.
பிரியனும் வதனாவும் காலை உணவிற்கு பின்னர் லாட் பஜாருக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தனர்.
அங்கேயே சுற்றிப் பார்த்துவிட்டு இருவருக்கும் தேவையானதை வாங்கிக்கொண்டு மதிய உணவையும் முடித்து மாலை பார்க் சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதாக திட்டமிட்டனர்.
பதினோரு மணி வாக்கில் பிரியனின் யமஹாவில் இருவரும் கிளம்பினர். ஜாலியாக சென்றுக் கொண்டிருந்த பொழுது தான்.
அவளுக்கான உடைகள் தேர்வு செய்வதில் இருவருக்கும் சாதாரணமாய் ஏற்பட்ட வாக்குவாதம் சற்றே பெரிதாகியது. “வதனா அது வேணாம் வேற எடு… நீ காலேஜ்க்கு போடுறது எல்லாம் ரொம்பவே சிம்பிளா இருக்கு”
“இல்லைங்க காலேஜ்க்கு ரெகுலர் யூஸ்க்கு இதான் சரியா வரும்…”
“நான் சொல்றதை நீ கேக்கவே மாட்டியா… எப்போ பார்த்தாலும் ஏட்டிக்கு போட்டியாவே சொல்லிட்டு இருக்கே…”
“ஏங்க போடுற எனக்கு கம்பர்டபிளா இருக்க வேண்டாமா… என் வசதி தானே இதுல முக்கியம்… இவ்வளவு கிராண்டா அதுவும் கசகசன்னு இருக்கும் போல இந்த டிரஸ் போட்டாலே…”
“இதை போய் அவ்வளவு காசு கொடுத்து எடுக்கலாம்ன்னு சொல்றீங்க… எனக்கு அது வேணாம்…”
ஒரு சின்ன விஷயம் தான் இருவருக்குமான பேச்சுவார்த்தை அங்கு சூடாக ஆரம்பித்தது.
“நான் சொல்றதுக்காகவாச்சும் அதை எடுக்கலாம்ல… அப்புறம் எனக்கென்ன மரியாதை இருக்கு…” என்றான் அவன் சிடுசிடுப்பாய்.
இருவரும் கடையில் நின்றுக்கொண்டே தான் பேசிக் கொண்டிருந்தனர். உரையாடல் தமிழில் என்பதால் கடைக்காரர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் புரியாமல்.
எதிரில் நின்றவர்களின் முகபாவம் மட்டும் ஏதோ சண்டையிட்டு கொள்கிறார்கள் என்று அவரால் உணர முடிந்தது.
‘இவர்கள் உடை எடுப்பார்களா மாட்டார்களா’ என்ற ரீதியில் இருவரையுமே பார்த்திருந்தார் அவர்.
அவரின் பார்வை உணர்ந்த பிரியனுக்குள் கோபம் கனன்றது. அடுத்தவர் முன்னிலையில் தாங்கள் இப்படி சண்டையிட்டு கொண்டிருப்பது சற்றே அவன் தன்மானத்தை சீண்டியது.
‘எல்லாம் இவளால் தானே’ என்று ஆத்திரம் எழுந்து அவன் கண்ணை மறைத்தது.
அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் கடைசியாய் அவளிடம் கேட்டான். “நான் சொல்றதை எடுக்கப் போறியா இல்லையா” என்று.
அவளோ இது போன்ற சண்டைகள் இருவருக்குள்ளும் எப்போதும் நடக்கும் ஒன்று தானே என்ற நினைவில். தனக்கு பிடித்ததை அவனிடம் உறுதியாய் சொல்ல விரும்பி “எனக்கு பிடிச்சதை எடுத்துக்கறேன்”
“முடியாது…”
“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க… நான் ஒண்ணும் அதிக விலையில கேட்கலையே… குறைஞ்ச விலையில தானே வாங்கிக்கறேன்னு சொன்னேன்… அதுக்கு ஏன் இப்படி முகத்துல அடிச்ச மாதிரி முடியாது சொல்றீங்க”
இப்போது பிரியன் தேவையில்லாத வார்த்தையை விட்டான். அவன் நாக்கில் காகத்தை வாகனமாய் கொண்டவன் வந்தமர்ந்திருந்தான்.
“நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வைச்சாலும், அதோட புத்தி அதைவிட்டு போகாது… அது போல உன்னோட இந்த கஞ்சப்புத்திதனம் உன்னைவிட்டு போகுமா…”
“நல்லா டிரஸ் வாங்கி போட்டு நாகரீகமா மத்தவங்க மாதிரி போனா தானே தெரியும்… சொல் புத்தியும் இல்லை சுயப்புத்தியும் இல்லை” என்று கோபமாய் மொழிந்துவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.
அவள் வருகிறாளா இல்லையா என்றெல்லாம் கூட பார்க்காமல் வெளியேறி இருந்தான் அவன். அவன் வார்த்தைகள் தேளாய் அவளை கொட்டியிருக்க அந்த வலியில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது அவளுக்கு.
அதற்கு மேல் அந்த கடையில் நிற்க அவளுக்கு தெம்பில்லை… அவன் அங்கிருந்து கிளம்பிய சில நொடிகளிலேயே அவளும் வெளியில் வந்திருந்தாள்.
அங்கு தான் எங்கேனும் கோபமாய் அவன் நின்றிருப்பான் என்று அவள் எண்ணியிருக்க அவன் இருந்த அடையாளமே இல்லை.
அவன் வந்துவிடுவான் என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கேயே அவனுக்காய் காத்திருந்தாள். கோபமாய் சென்றவன் திரும்பி வந்தால் அவளை இங்கு தானே தேடுவான் என்று எண்ணியிருக்க ஐந்து, பத்து என்று கடந்த நிமிடம் அரைமணிக்கு மேல் தொடர அவளுக்குள் பதட்டம் தொற்ற ஆரம்பித்தது.
‘என் மேல் உள்ள கோபத்தில் என்னை இங்கயே விட்டுச் சென்றுவிட்டானோ’ என்ற பயம் வேறு. அவனுடன் வந்ததிருந்ததால் கை பை மட்டுமே வைத்திருந்தாள்.
அதில் சில நூறு ரூபாய் தாள்கள் மட்டுமே. இந்த லாட் பஜார் அவளுக்கு புதிய இடம்… இங்கிருந்து வீட்டிற்கு செல்ல அவளுக்கு வழி தெரியாது.
ஒரு ஆட்டோ பிடித்துக் கூட செல்லலாம் தான், ஆனால் வழி மாறி அவன் கூட்டிச் சென்றால் கூட அவளால் கண்டுப்பிடிக்க இயலாது.
கைகால்கள் சில்லிட்டு போனது. அந்த லாட் பஜாரின் இந்த கோடியில் இருந்து அந்த கோடி வரை நடையாய் நடந்தாள்.
இவளை ஓரிடத்தில் இறக்கிவிட்டு அவன் வண்டியை எங்கோ நிறுத்திவிட்டு வந்திருந்ததால் அந்த இடமும் இவளுக்கு தெரியாது.
மொழியும் இன்னமும் சரிவர புரிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் அங்கு சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருத்தியை நிறுத்தி வண்டி நிறுத்துமிடத்தை கேட்டறிந்தாள்.
மெதுவாய் நடந்து அங்கு சென்று பார்க்க அங்கோ நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருந்தும் அவன் வண்டி தென்படுகிறதா என்று கண்களாலேயே துழாவினாள். எதுவும் அவள் கண்களுக்கு புலப்படவேயில்லை.
ஒரு வேளை வெளியில் வேறு எங்கேனும் நிறுத்தியிருந்தால் என்று தோன்ற மீண்டும் ஒரு முறை அந்த பஜாரை அவள் நடந்து கடந்தது தான் மிச்சம்.
கால்கள் தொய்ந்து விடும் போலானது. இதற்கு மேலும் நடக்க முடியாது போக, அதுவரை மரத்து போயிருந்த மூளை தன் வேலை செய்தது.
அவன் மொபைல் எண்ணுக்கு அடித்தால் என்ன என்று தோன்ற டெலிபோன் பூத் தேடி அவன் எண்ணுக்கு முயற்சித்தாள்.
அந்தோ பரிதாபம் அவன் மொபைல் அணைத்து வைக்கப் பட்டிருந்ததாக பதிவு செய்யப்பட்ட குரல் சொல்ல இதயம் அதிவேக ரயிலாய் தடதடத்தது.
வீட்டிற்கு தான் சென்றிருப்பான் என்று அவளாகவே முடிவு செய்து வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி அவள் வீட்டின் முகவரி சொல்ல அவனோ இவள் பேசுவது புரியாது தலையாட்டி இல்லையென்று மறுத்தான்.
உடன் அடுத்து வந்த ஆட்டோவை நிறுத்தி அவள் முகவரியை அவனிடத்தில் சொல்ல அவன் தலையாட்டி எவ்வளவு என்று சொல்ல இவளும் சம்மதித்து அதில் ஏறி அமர்ந்தாள்…
மறுநாளைய விடியல் பொழுதில் அவனறையில் உறங்கிக் கொண்டிருந்த ராமிற்கு அழைப்பு என்று அவன் அம்மா வந்து அவனை எழுப்பினார்.
‘இந்த நேரத்தில் யாராய் இருக்கும்… வேண்டுமானால் என் மொபைலுக்கு கூப்பிட்டிருக்கலாமே…’ என்று எண்ணிக்கொண்டே அவன் டிஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு ஹாலில் இருந்த தொலைபேசியை நோக்கிச் சென்றான் அவன்.
“ஹலோ எவரதி…”
“ராம்… பவள்… பவளப்பிரியன் பேசறேன்… பிரியன்…” என்றது எதிர்முனை.
தூக்கக்கலக்கத்தில் இருந்த ராமிற்கு நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை. “எவரு நுவு?? நாக்கு தெல்லேது…”
“ராம் இட்ஸ் மீ பிரியன்… யூவர் கிளாஸ்மேட் பிரியன் ராகேஷ் பிரண்ட்” என்று தன்னை பலவிதமாய் புரிய வைக்க முயன்றவன் ஏதோ அவசரகதியாய் பேசுவது அப்போது தான் உணர்ந்தான் அவன்.
‘இவன் எதுக்கு எனக்கு போன் பண்ணுறான்… அதுவும் இந்த நேரத்துல…’ என்று புரியாமல் விழித்தான் ராம்.
இருவருக்குமான ஆங்கில உரையாடலை தமிழில் பார்ப்போம்… “என்ன விஷயம் நீ எதுக்கு எனக்கு கால் பண்ணுறே??”
“ராம் எனக்கு உன்னோட உதவி வேணும்…” என்ற பிரியன் குரலை கேட்டவனுக்கு அதை நம்புவது கடினமாயிருந்தது.
தான் கேட்டது பிரியனின் குரல் தானா என்று. அது அவன் குரலே என்பதை இப்போது அடையாளம் கண்டுவிட்டிருந்தான் தான் ஆனாலும் அவனுக்கு தான் உதவ வேண்டுமா எதற்காய்?? என்ற யோசனை குமிழ்கள் அவனிடத்தில்.
“எனக்கு புரியலை…”
“ஐ நீட் யூவர் ஹெல்ப் பேட்லி ராம்… என்னால வேற யார்க்கிட்டயும் கேட்க முடியாது… எனக்கு தெரியும் உனக்கு என்னை பிடிக்காதுன்னு… எனக்கும் அப்படி தான்”
‘உண்மையை ஒத்துக்கொண்டானே’ என்று எண்ணிக்கொண்டே அவன் பேசுவதை கேட்டானவன்.
“ஆனா எனக்கு வேற வழியில்லை… நான் மத்தவங்களை விட உன்னை நம்புறேன் ராம்… நான் எங்க இருக்கேன்னு எனக்கு தெரியலை”
“எனக்கு நீ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான் ராம்… வது… என்னோட வது… வதனாவை பார்த்துக்கோ ராம்…”
“இன்னும் எவ்வளவு நேரம் என்னால இங்க இருந்து பேச முடியும் தெரியலை எனக்கு. நேத்து லாட் பஜார்ல அவளை தனியா விட்டு வந்துட்டேன்…”
“இந்நேரம் அவ வீட்டுக்கு தான் போயிருப்பா… என் வீட்டு அட்ரஸ்…” என்று அவன் கேட்கிறானோ இல்லையா என்று கூட உணராமல் சொல்லி முடித்தான் அவன்.
“அவளை பார்த்துக்கோ ராம், அவளுக்குன்னு யாருமில்லை இப்போ… நான் வர்ற வரைக்கும் அவளை பார்த்துக்கோ… நான் எப்போ…..” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே கரகரவென்ற சத்தம் கேட்டது.
ஏதேதோ கசகசவென்ற பேச்சுகள் பின் அதீத இரைச்சல் என்று கேட்டு சட்டென்று அழைப்பு நின்று போய் பீப் ஒலி மட்டுமே கேட்டது.
அவன் வீட்டில் இருந்தது காலர் ஐடி போன் என்பதால் அதில் வந்திருந்த எண்ணை பார்த்து உடனே ராம் அந்த எண்ணிற்கு அழைக்க “திஸ் நம்பர் இஸ் டெம்ரவரிலி அவுட் ஆப் சர்வீஸ்” என்று வந்தது…
சடையோன் பெயர்
கொண்டவன்
விதி செய்த சதியொன்றில்
சிக்கிக்கொள்ள
தன் சதி காக்கும்
பொருட்டு பதியவன்
அனுமன் ஜெபிக்கும்
நாமம் சொல்ல
ராமனவன் என் செய்வான்
அவனின் பிரியமானவளை
காப்பானோ??
காப்போனாய் ஆவானோ??