முகிழ் – 11
கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், “மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ இப்படி மட்டையாகிட்ட” என்று வழக்கம் போல சீண்ட, அவனிடம் ஒன்றும் பேசாமல் நடப்பிற்கு திரும்பியவள் எழுந்து தன் கூந்தலை சரி செய்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்க முற்பட, சிநேகனும் இறங்க எத்தனித்தான்.
அவன் இறங்கபோவதை உணர்ந்தவள் அவனிடம், “நீ வேண்டாம் சினேகன், இங்கயே இரு ப்ளீஸ்….” என்று கூற அதற்கு மேல் மறுக்க முடியாததால் அவனும் உள்ளே இருக்க சம்மதித்தான்.
ஆனால் அவனிற்கு பொழுது போக வேண்டி அவள் மொபைலில் உள்ள கேண்டி கிருஷ் விளையாட தொலைபேசியின் ரகசிய எண் கேட்க அவளும் குடுத்துவிட்டு கார்யை விட்டு இறங்கினாள் மெதுவாக. தொலைபேசியை அவன் இயக்கிய நொடி ஒரு புதிய தகவல் அவள் தொலைப்பேசிக்கு எழுத்து வாயிலாக வர அதை தற்செயலாக பார்த்தவன், அனுப்புனர் பெயர் “AGC” என்று இருக்கவும் மதியிடம், “மதி ஒரு நிமிஷம் AGC னா என்ன என்று எதார்த்தமாக கேட்க அவள் மூளையோ சட்டென்று தாமதிக்காது Adhithyan Group of Company என்று கூறி தாங்கி தாங்கி நடக்க ஆரம்பித்தாள் அவள் இடது காலின் வீக்கம் இன்னும் குறையாததால்.
அதில் வந்த செய்தியும் கண்ணில் பட சினேகன் முகத்தில் அப்பட்டமாய் குழப்பம் ஏற்பட்டது. அவன் கண்கள் பார்த்த செய்தி இது தான், “மதி கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க, ஏதோ எதார்த்தமா 2 முறை நான் வந்துட்டேன் ஆனால் இனி நீங்க ரொம்பவே கவனமா இருங்க டேக் கேர்“.
இதை வாசித்த சினேகன் இந்த கம்பனிலிருந்து யார் அனுப்பியது என்று யோசிக்க அப்போது மதி சினேகன் என்றழைக்கவும் சரியாக இருந்தது. அவளது இடது கால் ஒரு கல்லில் இடறி இருக்க அவள் வலியால் துடித்தாள். அவளை கை தாங்களாக பிடித்து, கார்க்கு அழைத்து செல்ல நினைத்தவனை தடுத்த மதி அருகில் இருக்கும் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியவளை இப்போது முறைப்பது சினேகனின் முறை ஆகிற்று.
அவனிடம் கெஞ்சும் பார்வையை செலுத்த அவனும் வேறு வழி இல்லாது அவளை அந்த வீட்டின் நுழைவாயிலில் கொண்டு சேர்த்தான். அந்த வீட்டிலிருந்து வந்தவர் புதியவனான சினேகனை கண்டதும் முகமாறவே, அவசரமாக மதி சினேகனை போகுமாறு பார்வையால் கூற சினேகன் முறைத்துக்கொண்டே வாசல் கதவை தாண்டி சென்று கார்அருகில் நின்றுக் கொண்டான்.
இப்போது அவன் மனமுழுக்க, “மதிக்கு ஏதோ ஆபத்து, நேற்று ஏதோ நடந்திருகிறது என்ன என்பதை மறைக்கிறாள். இனி இவளை இவள் அறியாமல் முடிந்த மட்டும் கவனிக்க வேண்டும்” என்று மனதினுள் குறித்துக்கொண்டான்.
30 நிமிடங்கள் அவனை காக்கவைத்த பிறகு வந்த மதியின் முகத்தில் குழப்பங்கள் மண்டி கிடந்தன. சினேகன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை, கேட்டாலும் அவள் கூற போவதில்லை என உணர்ந்தவன், இந்த கேஸ் பற்றி எதுவும் அறிந்து கொள்ள தேவை இல்லை ஆனால் தன் தோழியை முடிந்தமட்டும் பாதுகாக்க முடிவெடுத்தான். அவனின் அமைதி மதியை பாதிக்க, அவளே சிநேகனிடம், “தப்பா எடுக்காத சினேகன், என்னால இப்போ ஏதும் சொல்லமுடியாது, ஆனா எனக்கு எந்த உதவி வேணும்னாலும் என்னோட தோழனா நான் முதல்ல உன்ன தான் கூப்பிடுவேன், ப்ளீஸ் என்ன அதுவர ஏதும் கேட்காத” என்று கூற சினேகன் சரி என்பதாய் தலை அசைத்தான்.
அன்று அவளை வீட்டில் விட்டவன், மதியின் அன்னையிடம், “மதிக்கு நான் 3 நாட்கள் விடுமுறை சொல்லிடறேன் அம்மா, அவள எந்த காரணம் கொண்டும் கால் சரி ஆகாம வெளியில் அனுப்ப வேண்டாம்” என்று கூறிவிட்டு மதியின் முறைப்பை பொருட்படுத்தாமல் அங்கு இருந்து சென்றான். அவனது அக்கறையை கண்ட மதியின் அன்னைக்கு தனக்கு ஒரு ஆண் பிள்ளை இல்லையே என்ற குறை மெல்ல குறைவதாய் தோன்றியது.
முடிந்துவிட்டது இன்றோடு 1 வாரகாலம் முடிந்துவிட்டது. எப்பொழுது எல்லாம் முடியுமோ அப்பொழுது எல்லாம் சினேகன் தொலைபேசி வாயிலாக மதியிடம் எந்த ஏரியாவில் இருக்கிறாள் எப்போது எங்கே செல்கிறாள் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டான். ஓரிரு சமயம் அது முடியாமலும் போனது. இருப்பினும் ஓரளவேனும் அவளுக்கு நிழலாக இருந்தான் அவளின் நண்பன்.
அந்த கேஸ் விஷயமாக அலைந்து விட்டு துப்பு ஏதும் கிடைக்காத மதிக்கு அன்று தலை வலி வின் வின் என்று தெறிக்க அருகில் ஏதும் காபி ஷாப் தென்படுகிறதா என்று பார்வையால் அலசிக்கொண்டே வந்தாள்.
அவள் பார்வையில் ஒரு காபி ஷாப் தென்பட, அங்கே தனது வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய அதே சமயம் அங்கே ஹர்சினி (ஆதித்யன் குரூப் ஆப் கம்பனில், இனியனின் பி.ஏ என்று அன்று அறிமுகம் செய்துக் கொண்ட பெண்) இனியனோடு ஏதோ பேசிவிட்டு கண்கலங்கிய படி மதியை தாண்டி சென்றாள். மதியை அவள் கவனித்ததாக தெரியவில்லை.
ஆனால் மதியை கண்டுவிட்ட இனியன் அவளை இங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் திகைத்த பார்வையே மதிக்கு உணர்த்த, மேலும் அவனை சங்கட படுத்த வேண்டாமென எண்ணி அவள் நகர, இனியனோ மதியை அழைத்தான். எப்பொழுதும் போல் இப்பொழுதும் சிரிப்பு மாறாமல் அவளை அழைத்து, “என்ன மதி இந்த பக்கம் என கேட்க, மதியோ காபி சாப்பிட தான், வேற ஒண்ணுமில்லை என்று கூறிக்கொண்டே ஹர்ஷினி சென்ற திசையை நோக்க இனியன் மதியின் மறைமுக கேள்வியை உணர்ந்து கொண்டான்.
இனியன் முதலில் தயங்கினாலும் பிறகு மிகவும் சரளமாக, “மதி என்னோட பி. ஏ. ஹர்ஷினி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன், ரொம்பவே நல்ல பொண்ணு. எனக்கு அந்த பொண்ணு மேல நல்ல அபிப்ராயம் இருக்கு ஆனா அந்த பொண்ணுக்கு என் மேல காதல் இருக்கு. எங்க 2 பேருக்கும் ஒத்துவராது அது எனக்கு நல்லா தெரியும். அத அந்த பொண்ணுகிட்ட புரியிற மாதி சொன்னேன். உடனே சொன்னதுனால காயப் பட்டுடா போல ஆனா இந்த காயம் ஆறிடும். மன பொருத்தம் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டா காலம் முழுக்க வேதனை மட்டும் தான். அதுனால மறுத்துட்டேன். இப்போ அழுதுட்டே போனா கூட சீக்கிரமே நிதர்சனத்த புருஞ்சுக்குற பொண்ணு தான் ஹர்ஷினி. ஐ ஹவ் எ டிரஸ்ட் ஆன் ஹெர்” என்று இலகுவாக கூறிய இனியனிடம் ஏதோ கூற வாய் எடுத்த மதியை ஒரு நிமிடம் என்று கூறி இனியனே மேலும் தொடர்ந்தான், “ஏன் நான் அந்த பொண்ணோட காதலா நிராகரிச்சேன் அப்படின்னு மட்டும் என்னை கேட்க வேண்டாம் மதி” என்று கூறி விட்டு இனியன் கிளம்புவதாக மதியிடம் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.
மதிக்கு இன்னும் அதிகமாக தலை வலிக்க ஆரம்பித்தது. காபி கூட குடிக்காமல் கிளம்பிவள் மனதில் ஓடியது நாகரீகமாக காதலை மறுத்த இனியனின் வார்த்தைகள். இதே போல் ஒரு சூழ்நிலை முன்பு பார்த்தவளுக்கு, இவன் இப்படி காதலை மறுத்தது ஆச்சர்யத்தை அளித்தது.
அவள் வண்டியில் பயணிக்க, அவள் மனமோ அடுக்கம் காட்டையும், ஆதியையும், அவன் மீது காதல் கொண்ட மனதையும் நாடி பயணிக்க சென்றது. மதியின் மனதில் ஓயாத மழை அடிக்க, அவளை சமன் செய்துக்கொள்ள அவளுக்கு ஒரு அமைதியான இடம் தேவைப்பட்டதாய் இருந்தது.
ஈஞ்சம்பாக்கம் சாலையில் சென்றவள் நேராக கடற்கரை நோக்கி பயணித்தாள். அன்று முழுமதி என்பதால் கடலில் அலைகள் பேர் இரைச்சலை கிளப்ப அமைதியே வடிவாய் அமர்ந்திருந்த மதியின் மனமும் அக்கடலுக்கு சமமாக கொந்தளித்து கொண்டு இருந்தது. அலைகள் முன்னோக்கி வந்து மறுபடியும் உள்வாங்கி பின்னோக்கி செல்வது போல மதியின் மனமும் பின்னோக்கி கடந்த காலத்திற்கு சென்றது.
‘மறுநாள் காலையில் க்ரிஷ்ணவிடம் காதலை சொல்ல காத்திருந்த மதிக்கு அதிகாலையிலே விழிப்பு தட்டிவிட கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள், அது அதிகாலை 5 என காட்டவும் மதி மானசீகமாக மனதிற்குள் அவளுக்கு ஒரு கொட்டு வைத்துக் கொண்டாள். “அவனை பார்க்க இத்தனை சீக்கிரம் எழுவதா?, அதுவும் மலை பகுதியில், வெளியே கும்மிருட்டை தவிர வேறு எதவும் புலப்படாத பொழுதில், இப்பொழுது என்ன செய்வது” என்று யோசனையில் ஆழ்ந்தவள் மறுபடியும் உறக்கம் பிடிக்க மறுக்க எழுந்து பக்கத்து அறைக்கு சென்று அங்கிருந்த அலமாரியை ஆய்வு செய்ய தொடங்கியவள் கைகளில் அந்த வருடத்திற்கான டைரி ஒன்று அகப்பட அதை புரட்டியவள் அது வெறும் வெள்ளை காகிதங்களை மட்டும் கொண்டிருந்ததால் அதில் தன் மனதை பதிக்க எண்ணி ஒரு பேனாவுடனும் அந்த டைரியுடனும் அமர்ந்தாள்.
முதலில் யாருடையதாக இருக்கும் என யோசித்தவள் பின்பு யாரேனும் விட்டு சென்றிருக்க கூடுமென கருதி அதன் முதல் பக்கத்தில் தன் நெஞ்சத்தின் நாயகனின் பெயரை எழுதினாள்.
“க்ரிஷ்ணவ்……”
ஒருவரின் பெயரை எழுதுவதில் இத்தனை சந்தோசம் கிடைக்குமா என்று வியந்தவள் மீண்டும் மீண்டும் அந்த எழுத்துகள் மீதே எழுதினாள். அவன், அவள் மனதில் அழுந்த பதிந்தது போல் அந்த காகிதத்திலும் அவன் பெயர் அழுந்த பதிந்தது.
அவனை சந்தித்தது முதல் இந்த நொடி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுகளாக மாற்ற எண்ணி அதை அப்படியே எழுத ஆரம்பித்தாள். சிறு சிறு கவிதைகளாக. அக்கவிதைகள் தன் வாழ்கையை மாற்றப்போவதை அறியாமல் அவள் எழுத தொடங்கி இருந்தாள்.
டைரியின் முதல் பக்கம் 1
அழகிய மலைமீது
ஓர் மழை நாளில்
நின் குரல் கேட்டேன்
உருவம் தெரியா
உயிர் தீண்டும்
நின் குரல் மட்டும் கேட்டேன்
சிறு மழலையோடு
நீ உறவாட உன்முகமறியாமல்
நின்றன் குரல் மட்டும் கேட்டேன்
டைரியின் இரண்டாம் பக்கம் 2
அன்றும் உன் குரல் வந்த திசையில்
என் கால்கள் நடக்க
நின் குரல் மட்டும் கேட்டேன்
உன் வார்த்தை
எனக்கு வேதமாகியது
மற்றவரின் முன்மாதிரி
ஆக விளையும்
உன் தோரணை
அன்றே உன்னை எனக்கு
முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டது
என் மனது என் சம்மந்தம் இன்றியே
டைரியின் மூன்றாம் பக்கம் 3
அதிகாலை குளிரில்
மெதுவாக நகரும் பணியில்
கறுப்பு ஆடைக்குள்
அசத்தும் கம்பீரத்துடன்
அளவான சிரிப்புடன்
வில்போன்று ஏறி இறங்கும் புருவத்துடனும்
பூக்கள் விரும்பும் பெண்கள்
பூக்களை பரிக்கமாடார்
என நீ சொல்ல
முதன் முதலில் நான் பார்த்தேன்
நின்னை
டைரியின் நான்காம் பக்கம் 4
குறுஞ்சிக்கு வந்தவள்
குறுஞ்சி ஆண்டவரை
தரிசிக்கும் சாக்கில்
உனக்காக தவமிருக்க அங்கு நீ
ஒரு பெண்ணின் துயர் தொடைக்க
என் கண்ணிற்கு ஆனாய் அந்த
கார் மேக கண்ணனாய்
டைரியின் அயிந்தாம் பக்கம் 5
உன்னை நிழலாக தொடர்ந்த நாட்கள்
என் வாழ்வின் வானவில் காலம்
உன் அசைவுகளோடு நான் வாழ
என் வாழ்வுமானது பொற்காலமாய்
காதல் என்று அறியாமலே
காடு மேடு எல்லாம் அலைந்தேன் உனக்காகவே
டைரியின் ஆறாம் பக்கம் 6
உன்னை பார்க்க துடிக்கும் கண்கள்
பேச துடிக்கும் இதழ்கள்
உன் பாதையில் நித்தம் நடக்கும் கால்கள்
இவை அனைத்தையும் கட்டி போட
துணிவின்றி ஒருமுறை உன்னை சந்திக்கவந்த
தருணம் நீ மரண படுக்கையிலே
டைரியின் ஏழாம் பக்கம் 7
சுவாசமற்ற நீ
என் மடியில் இருக்க
என் சுவாசம் கொடுக்க
துடித்த என் மனது
உனக்கு உயிர் காற்று
தந்த என் இதழ்
உனக்காக கண்ணீர்
உதிர்த்த என் கண்கள்
அனைத்தும் பறைசாற்றியது
உன் மீது நான் கொண்ட
அழிவில்லா அளவில்லா காதலை
டைரியின் எட்டாம் பக்கம் 8
உன்னை முத்தமிட்டு
நொடி என் மனது
மொட்டவிழ்ந்து மலர்ந்தது
உன் காதலை யாசித்து
சொல்லாத காதல்
வாழ்வதில்லை
காதலை உன்னிடம் சொல்லாமல் போனால்
என் வாழ்வுமில்லை
உன்னை பார்க்க
உன்னை தேடி
வரபோகிறேன் இன்று
என் காதல் நெஞ்சோடு
இவ்வாறு அவனை சந்தித்த நொடி முதல் அவனை இன்று சந்தித்து அவள் காதல் சொல்ல போகும் தருணம் வரை கவிதையாக வரைந்தவள் விரைந்து சென்று குளித்து தயாராகி இளம் நீல நிறத்தில் சல்வார் அணிந்து புறப்பட்டாள்.
செல்லும் வழி அனைத்தும் அழகாக தோன்ற, கண்களில் மையலுடன் சென்றவளின் கண்களில் பட்டது க்ரிஷ்ணவும், அவளின் கல்லூரியில் வேறு பிரிவில் படிக்கும் மாணவியும். தூரத்தில் இதை கண்டவள் சற்று தயங்கி நின்றிருக்க ஏதோ அப்பெண் அழுகையில் கரைய க்ரிஷ்ணவ் அவளை சட்டை செய்யாது பாவனையில் நின்றான்.
“இப்படி அழும் ஒரு பெண் முன் இத்தனை அலட்சியமா?” என்று அவன் மீது தீரா காதல் கொண்ட அவள் நெஞ்சே, எண்ணும் அளவு க்ரிஷ்ணவ் அசட்டை காட்டினான். சிறிது நேரத்தில் கோவமாக பேசியவள் திடீர் என்று அவன் காலில் விழுந்து மன்றாட மதி குழம்பி போனாள்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய முற்பட்ட மதி, சிறிது முன்னேற, இறுதியாக க்ரிஷ்ணவ் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் தெளிவாக விழுந்தது, “இன்னும் 24 மணி நேரம் உனக்கு தருகிறேன் தீர யோசித்து ஒரு முடிவு எடு” என்று கூறிவிட்டு விறு விறு என அவன் ரிசார்ட் கட்டும் பகுதிக்கு சென்றுவிட்டான்.
அப்பெண் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர எதிரில் மதியை பார்த்து சற்று திகைத்து போனாள். மதி அவளிடம்,”காவ்யா என்ன ஆச்சு, ஏன் இப்படி அழுத, என்ன நடந்ததுன்னு சொல்லு” என்று கேட்டுக் கொண்டே அவள் பார்த்ததை அப்பெண்ணிடம் கூறவும் செய்தாள். எதற்காக அவர் காலில் விழுந்தாய் என்று கேட்க, அப்பெண்ணோ சிறிது தடுமாறி ஒன்றுமில்லை என சமாளிக்க முயன்றாள்.
ஆனால் மதி வற்புறுத்தவே வேறு வழி இல்லாது சுற்றம் பார்த்து மெல்ல சொல்ல தொடங்கினாள், “மதி என்ன தப்பா எடுத்துக்காத, இத எப்பையும் யார்கிட்டயும் சொல்லிடாத” என்று கண்ணீர் மல்க கூறியவள், க்ரிஷ்ணவ் மீது அவளுக்கு உண்டான காதலை பற்றியும் அவனிடம் இதை அவள் சொல்ல சென்ற நேரத்தில் க்ரிஷ்ணவ் அவளிடம் முறை தவறி பேசியதாகவும் கூறி கண்ணீரில் கரைய மதிக்கு தலையில் இடி இறங்கியது.
மதியின் மனது இதை முதலில் நம்ப மறுக்க, அதை அப்படியே காவியவிடமும் கூற அவளோ க்ரிஷ்ணவ் கூறிய வார்த்தைகளை அப்படியே கூற ஆரம்பித்தாள் மதியிடம். “இத பாரு உன் பேர் என்ன சொன்ன? காவ்யா ஆம் ஐ ரைட்? ச்வீட் நேம்… சி காவ்யா எனக்கு இந்த கல்யாணம்ல நம்பிக்கை கிடையாது. ஆனா காதல் ல நிறையா உண்டு, அதாவது எனக்கு காதலிகளும் நிறையா உண்டு… நீயும் பார்க்க…ஹ்ம்ம்ம்ம் சுமாரா இருக்க, நீ என்கூட பழகு எல்லா விதமாகவும், என் ஆசைக்கும், நம் தேவைக்கும்… டைம்?… நான் இந்த ப்ராஜெக்ட் பண்ற வரை மட்டும் என் காதலியாய்” என்று கூறி க்ரிஷ்ணவ் நகைத்ததாக கூறிய காவிய அழுந்து கரைந்தாள்.
இறுதியாக காவ்யா அவன் காலில் விழுந்து கெஞ்ச அதை சட்டை செய்யாமல் அலட்சிய படுத்தியவன், அவன் சொல்லும் இடத்திற்கு வரவில்லை என்றால், அவன் பணத்திற்காக காவ்யா அவன் பின்னால் சுற்றுவதாக அனைவரிடமும் சொல்லிவிடுவதாக மிரட்டி 24 மணி நேரம் கெடு குடுத்ததாக கூறி கதறியவளை, வேதனையோடு அதிர்ச்சியோடு வாழ்கையையே வெறுத்த உணர்வோடு உருத்து பார்த்துக் கொண்டிருந்தாள் மதி. அப்பெண் அவ்விடம் விட்டு அகன்று விட்டாள். மதியோ அதே இடத்தில் சிலையென உறைந்தாள்.