தோற்றம் – 7
பொன்னிக்கு என்னவோ மனது இன்னமும் ஆறவில்லை.. உள்ளேயே ஒரு கோபம் இருந்துகொண்டே தான் இருந்தது.. செய்வது எல்லாம் செய்துவிட்டு, அன்று சொல்ல சொல்ல கேட்காது அசோக்கை எப்படி அடித்தார்கள், தன்னை பார்க்கும் போதெல்லாம் புகழ் வீட்டு பெண்கள் என்ன பேச்சு பேசினர், இப்போது வந்து மன்னிப்பு என்று நின்றால் உடனே சரியென்று சொல்லி, பேசிட வேண்டுமா என்று..
அங்கே வீட்டில் நிற்க நிற்க அத்தனை கோபம் வந்தது.. வேறு யார் மீதுமில்லை.. புகழின் மீது தான் அத்தனையும். இன்ன காரணம் என்று தெரியவில்லை.. புகழேந்தி அங்கே வீடிற்கு வரவும் அவளுக்கு கோபம் தான் வந்தது. வந்து நின்றதும் அவன் பார்க்கும் பார்வையும்.. அட அட உத்தம சிகாமணி.. மனதினுள் சிலாகிப்பாய் கடிந்துகொண்டாள்..
எங்க வீட்டினில் இருந்தால் தன்னிடம் பேசிடுவானோ என்றிருக்க, வேண்டவே வேண்டாம் என்று அதான் கிளம்பி வந்துவிட்டாள்…
அப்படி வந்தபின்னும் அவளால் மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை. இப்போது மன்னிப்பு கேட்டு ‘நாங்க ரொம்ப நல்லவங்க..’ அப்படின்னு காட்டும் எண்ணமா..??
அவளின் பசுவும், கன்றும் சற்று தள்ளி மேய்ந்து கொண்டு இருக்க, இவளோ அங்கிருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்தாள்.. சிந்தனை எல்லாம் புகழேந்தியின் மீதுதான்.. காரியவாதி.. சரியான காரியவாதி.. என்று நினைத்துக்கொண்டாள்..
பொழுது சாயும் நேரம், வயல் வேலைகள் முடித்து மாலை வேளையில் ஆட்கள் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.. இவள் அமர்ந்திருப்பதை பார்த்து ஓரிருவர் வந்து,
“பொன்னி.. என்ன அசோக்கு வந்திருக்கான் போல..” என்று விசாரிக்க, “ஆமா…” என்றுமட்டும் சொல்ல,
“நல்லது கண்ணு… இனியாவது எல்லா பிரச்சனையும் முடிஞ்சு நல்லது நடந்தா சரி..” என, அவளோ அமைதியாய் இருந்தாள்..
“என்ன கண்ணு அமைதியா இருக்க?? எங்களுக்கு எல்லாம் எம்புட்டு கவலை தெரியுமா நல்ல பையன் அசோக்கு கடைசில அவனுக்கு இப்படியொரு பேரு வந்திருச்சேன்னு…” என்று இன்னொரு பெண்மணி சொல்ல,
இதற்கு அவளால் என்ன பதில் சொல்லிட முடியும்.. அன்றும் சரி இன்றும் சரி இவர்கள் தானே பதில் சொல்லும் நிலையில் இருக்கிறார்கள்.. எத்தனை பேச்சு.. ஊரார் பார்க்கும் பார்வையே ஊசி குத்துவதாய் இருந்ததே.. அசோக் நல்லவன்.. அப்படியெல்லாம் நடந்திருக்கமாட்டான் என்று சொல்லும் ஆட்கள் இருந்தாலும்,
‘ஒண்ணுமேயில்லாமயா இப்படி போட்டு புரட்டி எடுக்குறாங்க..’ என்று பேசினவர்களும் உண்டுதானே..
‘ஹ்ம்ம் வீட்ல ஒரு பொம்பள புள்ள இருக்குன்னு கூட பார்க்காம இப்படி பண்ணிட்டானே..’ என்று மங்கையிடம் கேட்டவர்கள் எத்தனை..
‘உன்னைய கூட நினைக்கலையே…’ என்று இவளிடம் சொன்னவர்கள் எத்தனை பேர்..
ஆனால் இன்று புகழேந்தியின் வீட்டு ஆட்கள் நல்லவர்களாய் வந்து மன்னிப்பு கேட்டதும் இதெல்லாம் விடுத்து நாங்களும் இயல்பாய் இருந்திட வேண்டுமா?? அன்றும் மன்னவனும் ஜெயபாலும் வந்த போதே பொன்னிக்கு இந்த எண்ணம் இருந்தது.. ஆனால் இன்று புகழ் வரவும் இன்னமும் கூடிவிட்டது.. மனதை போட்டு அழுத்தும் ஆங்காரம் இன்னமும் மேலேழும்புவதாய் இருக்க,
“சரி கண்ணு பார்த்து வீட்டுக்கு போ..” என்று அந்த பெண்மணிகள் இருவரும் சொல்லிவிட்டு செல்ல,
அவர்கள் ‘கண்ணு..’ என்று சொன்னது அவளுக்கு புகழேந்தியை நினைவு படுத்த, ஏற்கனவே இருந்த கோபத்தில் அதுவும் கொஞ்சம் நெய் விட்டது..
“ம்ம்..” என்றுமட்டும் சொன்னவளுக்கு சற்று தூரத்தில் புகழேந்தி வருவது தெரிய, அவளைத் தேடித்தான் வருகிறான் என்பது அவளுக்குப் புரியாமல் இருக்குமா என்ன,
அவன் தன்னருகே வருவதற்குள், வேகமாய் அவளின் பசுவையும் கன்றையும் அழைத்துக்கொண்டு பொன்னி நடக்கத் தொடங்கவும், புகழேந்தி அவளைவிட பின்னே வந்தான்.
“ஹேய் கண்ணு.. நில்லு..” என்றபடி வர, பொன்னிக்கு காதில் அவனது அழைப்பு விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் நடக்க,
“ஹே.. பொன்னி நில்லு…” என்று கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப் போட்டவன், வேகமாய் அவளருகே வந்து கரங்களை பற்றி நிறுத்தி,
“என்ன கண்ணு கூப்டிட்டே இருக்கேன் போயிட்டே இருக்க…” என்று சொல்ல, அவனை எரிச்சலாய் ஒரு பார்வை பார்த்தவள்,
“என்ன வேணும்னு கேட்டேன்..???” என்றாள் பல்லை கடித்து.
“என்ன கண்ணு இப்படி சொல்ற..” என்று புகழின் முகம் அப்படியே தொங்கிட, அவனது கரம் இன்னமும் அவளது கரங்களில் இருக்க, போவோர் வருவோர் எல்லாம் இவர்களை பார்த்துத்தான் போயினர்.
“இப்போ எதுக்கு இந்த சீன்.. அதான் நீங்க நினைச்சது போல எல்லாம் முடிஞ்சதுல்ல…” என்று பொன்னி எரிந்துவிழ அவளுக்கே முதலில் தெரியவில்லை தான் ஏன் இப்படி எண்ணுகிறோம் என்று..
புகழேந்தி அவளையே கொஞ்ச நேரம் பார்த்தவன், அவளின் மற்றொரு கரத்தில் இருந்த கயிற்றை பிடுங்கி, கொஞ்சம் தள்ளி இருந்த மரத்தினில் பசுவையும் கன்றையும் கட்டிவிட்டு வந்தவன்,
“உனக்கு இப்போ என்ன கோவம்…” என்றான் அவளையே பார்த்து..
“எனக்கென்ன கோவம்.. எதுமில்ல.. என்னை போகவிட்டா நான் போய் என் வேலையை பார்ப்பேன்..”
“ஆமா பெரிய வேலை..” என்று எதுவோ சொல்ல வந்தவன், அவளின் மின்னல் வெட்டும் பார்வை கண்டு, “வீட்டுக்கு வந்தேனே வாங்கன்னு கூட சொல்ல முடியாதா??” என்றான் ஆற்றாமையாய்..
“ம்ம்ம்.. நீங்க வந்தது அசோக்கை பார்க்க தானே…” என்றவள் அவனைக் காணாது, பார்வையை வேறெங்கோ திருப்ப,
“ஓ.. அப்போ உன்னை பார்க்க வரலைன்னு தான் கோபமா???” என்றான் அவன்..
அவளோ பதில் சொல்லாது முகத்தை சுருக்கி வேறுபக்கம் பார்த்து நிற்க, “ம்ம்ச் என்ன பார்த்து பேசு..” என்றவன் “அசோக்கை தான் பார்க்க வந்தோம்.. ஆனா நீ.. நீ ஒருவார்த்தை கூட பேசலை..” என,
“ம்ம்… நான் என்ன பேச.. நீங்க நினைச்சு வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சதுல்ல.. பின்ன என்ன…” என்றாள் திரும்பவும்.
“நான்.. நான் நினைச்சதா?? எங்க என்னைப் பார்த்து நேருக்கு நேரா சொல்லு.. நான் நினைச்சதா நடந்துச்சு இப்போ.. முழுக்க முழுக்க நீ நினைச்சது தான் நடந்துச்சு…” என,
“நான் எதுவும் நினைக்கலை..” என்றாள் வேகமாய்.
“அப்படியா நிஜமா சொல்லு… உண்மையான விசயம் வெளிய வரணும்னு நினைச்சது நீ தான.. அமுதா சரியாகனும்னு நினைச்சது நீதான.. அசோக் திரும்ப ஊருக்கு வரணும்னு நினைச்சது நீதான.. இப்போ அதெல்லாம் நடந்திருக்கு.. ஆனா நீ கோவப்படுற..” என்று அவனும் கொஞ்சம் கோபமாகவே கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் போகணும்..” என்று பொன்னி கிளம்ப, திரும்பவும் அவளை கரங்களைப் பிடித்து நிறுத்தினான் “நான் உன்னை போக விடமாட்டேன்..” என்றபடி..
பொன்னி பிடிவாதம் செய்ய செய்ய புகழேந்திக்கும் ஒரு வீம்பு கூடிக்கொண்டே போனது.. ஆனால் பொன்னிக்கு அவ்வளோதான்.. அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் இப்போது வேலி தாண்டிட,
“என்னதிது.. இல்ல என்னதிது.. அன்னிக்கு அசோக் அமுதா கையை இப்படிதான் பிடிச்சான் ,அதுகூட அவளை காப்பாத்தத்தான்.. ஆனா அதுக்கே உங்க அண்ணனும் மாமாவும் அவனை அப்படி போட்டு அடிச்சு ஊரை விட்டு துரத்தினாங்க.. இப்.. இப்போ நீங்க இப்படி வந்து பிடிக்கிறீங்க?? இது.. இது மட்டும் சரியா?? சொல்லுங்க உங்களை என்ன செய்யலாம்..” என்று பொன்னி உருத்து விழிக்க,
அவள் அப்படி பேசியது புகழேந்திக்கு கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தாலும், அவனும், உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்பதுபோல் பார்த்து, “இப்போ என்ன என்னை நீ அடிக்கனுமா??” என்றவன், இன்னம் கொஞ்சம் அவளை நெருங்கி நின்று “அடிச்சிக்கோ…” என்றான் ஆழ்ந்த குரலில்..
‘என்னது…!!!!’ என்று பொன்னி திடுக்கிட்டு அவனைக் காண,
“எஸ்.. உனக்கு கோபம் தான.. என்ன பண்ணாலும் உன் கோபம் தீராது இல்லையா.. எங்கப்பா மாமா.. நான் இளங்கோ இத்தனை பேர் மன்னிப்பு கேட்டும் உனக்கு கோபம் போகலை இல்லையா.. இன்னுமென்ன எங்க வீட்ல இருக்க லேடீஸ் வந்து மன்னிப்பு கேட்கணுமா??” என,
“ச்சே ச்சே என்ன பேச்சிது.. நான்.. நான் அப்படி சொல்லலை..” என்று பொன்னி சொல்லும் போதே,
“அப்போ என்மேல தான் கோபம் இல்லையா?? என்ன கோபம்னு கூட கேட்கலை.. உன் முன்னாடிதானே நிக்கிறேன்.. அடி.. அடிச்சுக்கோ.. எல்லாரும் பார்க்கட்டும்.. அடி…” என்று புகழ் நிமிர்ந்து நிற்க,
“ம்ம்ச் ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..” என்றவளின் குரல் அப்படியே இறங்கிவிட்டது.
“பின்ன?? பின்ன?? சரி போ போய் அசோக்கை கூட்டிட்டு வா.. நான் இங்கயே நிக்கிறேன்.. உன் கை பிடிச்சிட்டேன்ல அதுக்கு அடியும் வாங்கிட்டே போறேன்..” என்றவன்,
“போ…” என்று அவளை லேசாய் தள்ள, இரண்டடி பின்னே தள்ளி நின்றவள், அவனை ஒருமுறை பார்த்துவிட்டு வேகமாய் ஓடிவிட்டாள்..
பசுவும் கன்றும் ஒருப்பக்கம் அங்கே கட்டப்பட்டு இருக்க, அதெல்லாம் அவளுக்கு அப்போது புத்தியில் பதியவில்லை.. தனக்கு ஏன் இத்தனை கோபம் என்றும் அவளுக்குப் புரியவில்லை.. கோபம் போய் இப்போது அழுகை வந்திட்டது அவளுக்கு..
ஓட்டமும் நடையுமாய் தான் சென்றுவிட்டாள் பொன்னி.. காரணமே இல்லாது அவள் மனம் சலசலத்துக் கொண்டு இருக்க, அதில் புகழேந்தியின் இந்த பேச்சு பெரும் சஞ்சலத்தை உண்டு செய்துவிட்டது… அத்தனை பிரச்சனை நடந்தபோது கூட திடமாய் நின்றவள், இப்போது அனைத்தும் முடியவும் என்னவோ அப்படியொரு உணர்வு குவியல் அவளுள்.. எதிரே யார் வருகிறார்கள் போகிறார்கள் என்றெல்லாம் காணாது அப்படியே ஓடிவிட்டாள். அவள் போவதையே பார்த்து நின்றவன்,
‘கிறுக்கச்சி…’ என்று முணுமுணுக்க,
“டேய் இங்க என்னடா பண்ற???” என்று இளங்கோ வந்தான் அங்கே..
“நீ என்னண்ணா இங்க??” என்று புகழ் திரும்பக் கேட்க, அவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவன்,
“என்கூட தான அசோக் வீட்ல இருந்து கிளம்பின, பாதியில இங்க வந்து நிக்கிற… உன் போன் அடிச்சிட்டே இருந்துச்சாம் அம்மா குடுத்து விட்டுச்சு..” என்று அவனின் அலைபேசியை நீட்ட,
“ஓ… அசோக் வீட்டுக்கு போறதுல போன் வீட்லயே விட்டுட்டு வந்துட்டேன்..” என்றபடி புகழ் வாங்க,
“ஹ்ம்ம் நீ ஒரு மார்கமா தான் இருக்க..” என்று இளங்கோ சொல்ல, “இரு.. ஆபிஸ்ல இருந்துதான் கால் பேசிக்கிறேன்..” என்றவன் அவனின் ஆபிஸிற்கு அழைத்துப் பேச, இரண்டு நிமிடம் பேசியவன்,
“ஓகே ..” என்று சொல்லி பேசிமுடித்து, “நாளைக்கு சென்னை போகணும்..” என்றான் ஒருமாதிரி..
“ஓ.. ஏன்டா லீவ் தானே போட்டிருக்க..” என்று இளங்கோ கேட்க,
“ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன்ல அது சம்பந்தமா போகணும்.. லாஸ்ட் டைம் மீட்டிங் வேற போகலை. சோ நாளைக்கு கண்டிப்பா கிளம்பனும்..” என,
“சரி சரி.. வண்டியில ஏறு….” என்று இளங்கோ அவனது பைக்கை கிளப்ப,
“ம்ம் இல்லண்ணா.. நீ போ.. நான் இவங்களை கொண்டு போய் விடனும்..” என்று அவன் மரத்தில் கட்டிய பொன்னியின் பசுவையும் கன்றையும் காட்ட,
‘கிறுக்காடா நீ..’ என்றுதான் பார்த்தான் இளங்கோ..
“என்னண்ணா… நீ போ நான் வர்றேன்..” என்று புகழ் சொல்ல, “டேய் நீ சரியில்லை.. நீ சரியே இல்லை.. என்னடா உனக்கு ஆச்சு..” என்று திரும்பவும் இளங்கோ பைக்கில் இருந்து இறங்க,
“ஐயோ எனக்கு ஒண்ணுமில்ல நான் நல்லாத்தான் இருக்கேன்.. கண்….. பொன்னி.. பொன்னி இங்கதான் இருந்தா.. அவக்கிட்டயும் சாரி கேட்கனும்னு வந்தேன்.. ஆனா கோபத்துல மாடுங்களை கூட விட்டுப் போயிட்டா…” என,
“அந்த பொண்ணுகிட்ட நீ ஏன் சாரி கேட்கணும்….” என்று இளங்கோ சந்தேகமாய் அவனைக் காண,
“ம்ம்ச் ஏண்ணா இப்படி ஆயிரம் கேள்வி கேட்கிற…” என்று பதில் சொல்லாமல் சலித்தான் புகழேந்தி..
“சரி அதை அவங்க வீட்டுக்கு போனப்போவே கேட்டு இருக்கலாம்ல.. அதுக்கேன் தனியா வரணும்..??” என்றவன் ஒருவித குழப்ப பார்வையே பார்க்க,
“ம்ம்ச்.. ண்ணா.. நீ போ நான் வர்றேன்..” என்றவன் மரத்தில் கட்டியிருந்த கயிற்றினை கழற்றிக்கொண்டு இருக்கும் போதே அசோக் அங்கே வந்துவிட்டான்…
இளங்கோவும் அங்கேதான் நின்றிருக்க, புகழேந்தியோ ‘சொன்னதுபோல அவ அண்ணன அனுப்பிருக்கா.. அடிச்சிருவானோ..’ என்று ஒருநிமிடம் எண்ணாமல் இல்லை.
“சாரி.. பொன்னிதான் சொல்லிவிட்டா..” என்று அசோக் ஆரம்பிக்கையிலேயே,
‘போச்சு அடிக்கத்தான் போறான்.. இளங்கோ வேற இருக்கானே….’ என்றெண்ணிய புகழ், இரு அண்ணன்மார்களையும் மாறி மாறி பார்க்க,
“இப்படியெல்லாம் அவ பீகேவ் பண்ணவே மாட்டா….” என்றபடி அசோக் அவனின் கரங்களை நீட்ட, புகழேந்தி புரியாமல் தான் பார்த்தான்..
“மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போன மாடுங்களை எப்பவும் இப்படி விட்டு வர மாட்டா..” என்று அசோக் சொன்னதும்தான் அவனுக்கு மனதில் சின்னதாய் ஒரு நிம்மதி..
“ம்ம்..” என்று புகழேந்தி கயிற்றை அசோக்கிடம் கொடுக்க, இளங்கோ பைக்கை கிளம்ப, அசோக் ஒருபுறம் மாடுகளை கிளம்பிக்கொண்டு செல்ல, புகழேந்தி வீட்டிற்கு சென்றான்..
வீட்டிற்கு போன அசோக்கோ, “இதெல்லாம் சரியேயில்ல பொன்னி.. இப்படியா விட்டு வருவ???” என்று லேசாய் கடிய,
“ஆமா.. அடுத்த வீட்டு பொண்ணுக்கு எல்லாம் அடி வாங்கி கூட ஹெல்ப் பண்ணுவ.. என்னை மட்டும் திட்டு…” என்று பொன்னி முகத்தை சுருக்க,
“லூசு.. உனக்கு ஒண்ணுன்னா நான் ஹெல்ப் பண்ணமாட்டேனா.. அதுபோலத்தான் அமுதாவும்.. அப்படி நினைச்சுதான் பண்ணேன்..” என்று அசோக் சொல்ல,
‘என்ன சொல்ற நீ…’ என்று புரியாமல் பார்த்தாள் பொன்னி.
“என்ன பொன்னி… நிஜமாதான்.. உனக்கு பண்றமாதிரி நினைச்சுதான் அமுதாக்கு ஹெல்ப் பண்ணேன்….” என்று அசோக் திரும்ப சொல்ல, பொன்னி நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விட்டு அவள் நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள்.
அதை கண்டவனோ, “என்ன பொன்னி…” என,
“இல்ல எங்கடா உனக்கு ஒரு சீன் வந்திடுமோன்னு நினைச்சேன்.. நல்லவேளை அமுதாவை தங்கச்சின்னு சொல்லாம சொல்லிட்ட..” என்று பொன்னி சிரிக்க,
“லூசு பேச்சை பாரு..” என்று அசோக் அவளை ஒரு அடி அடித்துவிட்டு செல்ல, பொன்னியும் அவன் முதுகில் தட்டியபடி வீட்டினுள் சென்றாள்.
அங்கே புகழோ வீட்டிற்கு சென்றவன் மனம் ஒருநிலையில் இல்லாது போனாலும், மறுநாள் சென்னைக்கு கிளம்பும் ஏற்பாடுகளை பார்த்தான்.. இளங்கோவோ அவனை அப்போதும் வித்தியாசமாய் பார்த்தபடி இருக்க,
“என்னண்ணா..” என்று கேட்டவன், “சரி உனக்கு எதும் வாங்கிட்டு வரணுமா அங்கிருந்து..” என்று கேட்க,
“ஹ்ம்ம் நீ பாயசம் ஊத்துனது எல்லாம் போதும்.. ஊருக்கு போயிட்டு வா பேசிக்கலாம்..” என்று எழுந்து சென்றுவிட்டான் இளங்கோ..
‘இவன் ஏன் இப்படி பேசிட்டு போறான்..’ என்று பார்த்தவன், பொன்னியைப் பற்றிய சிந்தனைகளோடே சென்னை கிளம்பி சென்றான் மறுநாள்..
போனதும் வந்திடலாம் என்று நினைத்தால், அது முடியவில்லை.. மூன்று நாட்கள் ஆகிவிட்டது போன வேலை முடிய.. ட்ரான்ஸ்பர் கேட்டதால், அவன் கொடுக்கவேண்டிய ரிப்போர்ட் வேலைகள் இருந்ததை முழுதாய் முடித்துக்கொடுக்கும் நிலை..
இதற்கடுத்து ஒருமுறை மும்பை சென்றுவர வேண்டும்.. அவ்வளவு தான். அதன்பின் திருவள்ளூரிளோ இல்லை சென்னையிலோ எந்த இடத்தில் கொடுத்தாலும் சரி என்ற எண்ணம் அவனுக்கு..
மனதில் ஓரளவு நிம்மதியோடு தான் திரும்பவும் வீடு வந்தான்… ஸ்வேதாவும், முகேஷும் அவனின் இருபுறமும் படுத்து அவன் மீது கால் கைகளை போட்டு படுத்திருக்க, புகழேந்திக்கு இருவரையும் பார்த்து இதழில் ஒரு சிரிப்பு..
‘இதுங்க எல்லாம் பால்வாடிக்கு போயி..’ என்று நினைக்கும் போதே அன்று பால்வாடியில் பொன்னியின் கரங்களை இருவரும் பிடித்து நின்றிருந்தது மனக்கண்ணில் வந்து போனது..
‘என்ன பண்றாளோ.. இன்னும் என்மேல கோபமா இருப்பாளோ???’ என்று யோசிக்கும் போதே,
மகராசி வந்தார் “கண்ணு…” என்று அழைத்துக்கொண்டு.
அவரின் அழைப்பு அவனுக்கு மேலும் புன்னகையை விரிய செய்ய, மகராசியை கண்டவனோ “தாயே மகராசி.. இப்படி மங்களகரமா எங்க கிளம்பி நிக்கிற??” என்று கேட்க,
“ஹா ஹா பேச்சை பாரு..” என்று சிரித்தவர், “கோவிலுக்கு கண்ணு.. என்னைய கொண்டு போய் விட்டு வர்றியா?? பிள்ளைகளா அன்புக்கிட்ட கொடுத்துட்டு போவோம்..” என,
“ம்மா.. நான் குளிக்க கூட இல்லை.. கோவிலுக்கு எல்லாம் அப்புறமா போகலாம்..” என்றான் எழாமல்..
“டேய் கண்ணு.. நீ உள்ள வரவேணாம்.. என்னைய வெளிய விட்டு வா.. அப்புறம் நானே அப்பாக்கூட வந்துப்பேன்..”
“அப்பாகூடவே போயிருக்க வேண்டியது தானே…” என்றவன், பிள்ளைகள் இருவரின் உறக்கம் கலையாமல் அவர்களை விளக்கிப் படுக்க வைத்துவிட்டு எழுந்து அமர,
“அப்பா கோவில் ஆளுங்கக்கூட போயிட்டாரு கண்ணு…” என, “ம்ம்.. ஆமா என்ன விசேசம் கோவில்ல..” என்று கேட்டபடி புகழேந்தி சட்டையை மாட்ட,
“அதுவா.. உனக்கு தெரியாதா???!! அந்த பொண்ணு பொன்னிக்கு இன்னிக்கு பரிசம் போட வர்றாங்க…” என்று மகராசி அசால்ட்டாய் அவன் தலையில் இடியை இறக்கினார்..