அத்தியாயம் ஒன்பது :

அக்ஷரா ஓரளவிற்கு இதை எதிர்பார்த்திருந்தால். நிகிலுக்கு  தெரிய வரும் வரை எந்த பிரச்சனையுமில்லை, தெரிய வந்துவிட்டால் மிகுந்த கோபம் கொள்வான் எனத் தெரியும். ஆனால் திரும்ப அமெரிக்காவிற்கே கிளம்பிவிடுவான் என்பது அவள் எதிர்பாராதது.

மாலையில் ஷ்ரத்தா சற்று தேறிக் கொள்ள, “ஹாஸ்பிடல் வேண்டாம் பா, வீட்டுக்குப் போறோமே!” என்றவளிடம், “நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றார் ஷங்கர்.

“அது நம்ம வீடு இல்லைப்பா உங்க வீடு”

“ப்ச்! இன்னும் எத்தனை நாள் இதே பேசுவ.. ஒரு கோபத்துல பேசுறது தான். தாத்தா பாட்டி பத்தி உனக்கு தெரியாததா, சந்தோஷை நீ கல்யாணம் பண்ணலைன்றது அவங்களால தாங்க முடியலை. அதுவுமில்லாம நீ பண்ணினதும் தப்பு. எங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணின, ஆனா அந்த வாழ்க்கை கூட தக்க வைக்காம பிடிக்கலை வந்துட்டேன்னு சொல்றது எந்த பெரியவங்களாலையும் ஏத்துக்க முடியாது”

“என்ன தான் தாத்தா டாக்டர்னாலும் பாட்டி ரொம்ப பழமையில ஊறினவங்க. எங்க அத்தனை பேரையும் நல்லா படிக்க வைச்சாங்க, வீட்ல உங்க அம்மா, சித்தி, அத்தைன்னு ஒரு வேலை பார்க்கிறது கிடையாது, பழமையானவங்கன்னாலும் சுதந்திரம் கொடுத்து இருக்காங்க. ஆனா நீ அதை சரியா பயன்படுத்திக்கலை”

“சரி யார்ன்னு சொல்லு, நாங்க சரி பண்ணறோம்னாலும் ஒத்துக்கலை, சந்தோஷ் திரும்ப கல்யாணத்துக்கு கேட்டும் ஒத்துக்கலை, நீ எப்படியோ போன்னு எப்படி விட முடியும்! சந்தோஷை யோசிச்சுப் பார் கொஞ்சம்! எப்படியோ மீண்டு வந்துட்டான்”  

“அதை பேசினா என் வாழ்க்கை என் இஷ்டம்னு வந்துட்ட, நாங்க என்ன செய்ய முடியும். நீ எங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்க மாட்டேங்கறா” என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.      

“நீங்க உங்க அப்பா அம்மாக்கு பையனாவே இருங்க” என ஒற்றை வாக்கியத்தில் முடித்துக் கொண்டாள்.    

“அதுல ஒன்னும் தப்பு இல்லை! ஆனா என் பொண்ணு அப்படி அப்பா அம்மா முக்கியம்னு நினைக்கலைன்றது எனக்கு வருத்தம் தான். இப்போ கூட உடனே எல்லோரும் வந்துட்டாங்க, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பரத், நிர்மலா” என,

“கூடவே ஒருத்தன் வந்தானே, அவனை ஏன் விட்டுட்டீங்க, என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. வருஷக் கணக்கா அதை கடைப்பிடிக்கறேன்.. என்னைக்காவது பொறுமை போச்சு.. அவன் தொலைஞ்சான் அவ்வளவு தான்”

“என்ன பண்ணினான் இப்போ?” என்று ஷங்கர் கோபப்பட்டார், “அச்சோ, இந்த சந்தோஷை என்ன செய்ய?” என்று மனதினில் நினைத்துக் கொண்டே.

“நீங்கல்லாம் இருக்குறதால தான் நான் சமாளிக்கிறேனாம்.. இல்லைன்னா யாருமில்லாம தனியா நின்னிருப்பேனாம்.. இப்படி எல்லோரும் பேசிப் பேசி தான் நான் தனியா வந்துட்டேன். உங்க யார்கிட்டயும் பைசா வாங்கறது இல்லை”   

“என்னைக்காவது எல்லோர் முன்னாடியும் என் கிட்ட அடி வாங்கப் போறான், உங்க தங்கை பையன்றது கூட அப்புறம், நிர்மலா புருஷனாப் போயிட்டான்னு பார்க்கிறேன்.. அவனை ஏதாவது இன்சல்ட் பண்ணினா இவ கஷ்டப் படுவாளேன்னு தான் சும்மா இருக்கேன்” 

இது என்றைக்கு முடிவுக்கு வருமோ என்று மிகவும் கவலையாகிப் போனது ஷங்கருக்கு.. என்ன செய்வது என்று தெரியவேயில்லை. சந்தோஷ் வீட்டினர் இருக்கும் போது எதுவும் பேசமாட்டான். ஆனால் யாருமில்லா சமையத்தில் அவளை குத்திக் காட்டி விடுவான். எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. அவனை திட்டி மிரட்டி பொறுமையாக சொல்லி பார்த்தாயிற்று.   

தப்பான பார்வையோ, தப்பாக நடந்து கொள்வதோ எல்லாம் கிடையாது. ஆனால் காயப்படுத்த முயலுவான். இவள் இப்படி தனியாக நிற்கின்றாளே என்ற வருத்தம் அவனுக்கும் உண்டு. இன்னொரு பெண்ணின் வாழ்க்கைக்காக எல்லோரும் பொறுத்துப் போயினர். அதுவுமில்லாமல் அக்ஷராவே தான் சொல்லியிருகின்றால் “நீங்க யாரும் பேசாதீங்க, அப்புறம் அது நிர்மலாவை பாதிக்கும். நானே பார்த்துக்கறேன்” என்று. நன்றாக திருப்பியும் கொடுப்பாள், சில சமயம் இந்த மாதிரி கோபப்படுவதும் உண்டு.      

“இதுக்கு தானே ப்பா நான் வீட்டை விட்டு வந்தேன்… உங்க கிட்ட இருந்து தள்ளி நிக்கறேன். ஆனாலும் பார்த்துட்டா பேசிடறான்” என பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.. அவர்கள் எல்லோரின் வீடும் பக்கம் பக்கமே. ஆம்! நிகிலை பற்றி கூட யோசிக்க விடாமல் காலையில் இருந்து இரண்டு மூன்று முறை பேசி சென்று விட்டான்.    

சந்தோஷ் அவரின் தங்கை மகன்.. அக்ஷரா பிறந்ததில் இருந்தே அக்ஷராவிற்கு அவன் தான் கணவன் என சொல்லி சொல்லி வளர்க்கபட்டான்.. அவனுடைய ஏமாற்றம் பெரிய ஏமாற்றம். அதனால் எல்லோரும் அவனுக்கு துணை நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

இதற்கு அக்ஷரா தனக்கு அமெரிக்காவில் திருமணம் முடிந்து விட்டது.. தனக்கும் கணவனுக்கும் இப்போது சரிவரவில்லை, பிடித்தமில்லை என்று சொன்ன போதும், அவள் கர்ப்பம் என்று தெரிந்த போதும்.. “நாம் திருமணம் செய்து கொள்ளலாம்” என நின்றான்.  

அவனிடம் இருந்து தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றானது.. ஷ்ரத்தா பிறந்த பிறகும் அதே தொடர.. மிகுந்த அலட்சியங்கள் அவனை செய்து.. வீட்டினரும் ஒருவாறு அவனை தேற்றி நிர்மலாவை அவனுக்கு திருமணமும் செய்து வைத்தனர்.. சந்தோஷும் டாக்டர் தான் பொது நல மருத்துவன்..

நிர்மலாவை திருமணம் செய்து கொண்டான், அவனுக்கு இரு குழந்தைகள் கூட.. ஐந்து வயதில் ஒன்று இரண்டு வயதில் ஒன்று… ஆனாலும் அக்ஷராவைப் பார்க்கும் போது யாரும் அருகில் இல்லையென்றால் காயப் படுத்தி விடுவான்..

முன்பு எப்படியோ இப்போது அவனுக்கு குடும்பம் குழந்தை என்றாகி விட்டது. என் மகள் இன்னும் தனியாகத் தானே நிற்கின்றாள்.. இன்னும் அவளை ஏன் இப்படி கஷ்டப் படுத்துகின்றான் என்று கோபமாக வந்தது.

ஆனால் கோபத்தை காட்ட முடியாது காட்டினால் அடுத்த நிமிடம் அவனின் அம்மாவிடம் சொல்வான்.. பிறகு அவரின் அம்மா, அப்பா, தங்கை, தங்கையின் கணவர் என்று ஒரு கூட்டமே அவரை பேசிப் பேசியே கொல்லும். அதையும் விட அதையெல்லாம் நிர்மலாவிடம் காட்டுவான்.

அக்ஷரா ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டால் எல்லாம் முடிந்து விடும் ஆனால் மாட்டேன் என்கின்றாளே. “இன்னொரு கல்யாணத்தை நீ ஏன் யோசிக்கக் கூடாது அக்ஷி” என்றார் பொறுமையாக. 

அவரின் முகத்தில் வருத்தத்தைப் பார்த்தவள், பேச்சை மாற்றி “விடுங்கப்பா பார்த்துக்கலாம்” என அவரை சமாதானம் செய்தாள்.

திரும்ப வீடு வந்த போது எப்படி நிகிலை எதிர்கொள்வது என்ற கேள்வி மட்டுமே… அனால் அந்தக் கேள்விக்கு அவசியமே இல்லாமல்.. நிகில் கண்ணில் படவேயில்லை.

இவர்கள் வீடு வந்தது தெரிந்ததும் ஸ்மிரிதியும் காவ்யாவும் ஷ்ரத்தாவை பார்க்க வர.. “எங்கே பாட்டி நிக்?” என ஷ்ரத்தா கேட்க..

“ஊருக்கு போயிட்டான்” என்றார் வருத்தமாக காவ்யா.

“என்ன? ஏன்?” என அதிர்ச்சியாகக் அக்ஷரா கேட்க, தோழி என்பதினால் சொல்லாமல் கொள்ளாமல் போனதால் இந்த பாவனை என நினைத்தனர்.

“தெரியலை, ஏதோ எமர்ஜென்சி நான் போகணும்னு மார்னிங் கிளம்பிட்டான், இதுக்கு ஃபிளைட் கூட இல்லை. எங்க போய், எப்படி போவான்னு கூட தெரியலை” என ஸ்மிரிதியும் சொல்ல,

“ஓஹ், போயிட்டானா!” என்று தான் தோன்றியது.. சண்டை போடுவான் என எதிர்பார்த்தால்.. ஆனால் திரும்ப போய்விட்டானா.. பார்க்காதவரை எதுவும் தெரியவில்லை.. இப்போது பார்த்த பிறகு மனது அவன் வேண்டும் வேண்டும் என்றது. “என்னை விடு.. ஷ்ரத்தாவை திரும்பப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையா” மிகுந்த ஏமாற்றமாக உணர்ந்தாள்.

என்னவோ காவ்யா கேட்க.. “ஆங், என்ன கேட்டீங்க” என்று விழித்தாள்.

“ஷ்ரத்தா இஸ் பெர்பெக்ட்லி ஓகே, அவளுக்கு ஒன்னுமில்லை” என காவ்யா அவளை கன்வின்ஸ் செய்தார், ஒரு வேளை குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இப்படி இருக்கின்றாளோ என காவ்யா சொல்ல..

ஒரு சிறு முறுவல் மட்டுமே! எங்கே பதில் சொல்ல வேண்டும் என நினைத்தாலும், தொண்டை அடைத்தது, பேச்சு வரவே இல்லை.

“என்ன சாப்பிடுவீங்க ரெண்டு பேரும், நான் செய்து தரட்டா” என்றும் காவ்யா கேட்க..

“வேண்டாம்” என்ற தலையசைப்பு மட்டுமே, பேசவே முடியவில்லை.. “அபி மாமா, இப்போ வருவாங்க!” என்று ஷ்ரத்தா சொல்ல.. சரி என்றபடி அவர்கள் கிளம்பினர்.

ஷ்ரத்தா முன்னிலையில் அழவும் முடியவில்லை.. அவளை தனியாக விட்டு சிறிது நேரமும் அகலவும் முடியவில்லை.. தவித்துப் போனாள். என்றும் இல்லாமல் தனிமை இன்று பலமாக தாக்கியது.

நிகிலின் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது.. அபி வரவும் “கொஞ்சம் நேரம் பார்த்துக்கோ” என ரூமின் உள் சென்று தனியாக அழுது முடித்தாள்.

பின்பு வெளியே வரவும்.. “மம்மா, பேபி நல்லா இருக்கேன்! எனக்கு ஒன்னுமில்லை!” என அம்மாவின் முகம் தடவி சொல்ல.. என்ன முயன்றும் முடியவேயில்லை, கண்களில் இருந்து திரும்ப நீர் இறங்க…

“அக்கா, ஏன் அழற? பேபிக்கு ஒன்னுமில்லை, நல்லா இருக்கா!” என்று அவனும் சொல்ல.. சற்று நேரத்தில் தேறிக் கொண்டாள்.

“நடந்தது எதற்கும் யாரும் பொறுப்பு கிடையாது. நீ! நீ மட்டுமே பொறுப்பு! அழுதால் சரியாகிவிடுமா? இல்லை நடந்தது இல்லை என்றாகிவிடுமா? அமைதி கொள்!!”      

எஸ்! யாரும் பொறுப்பு அல்ல. சிறு வயதில் இருந்தே யாரவது ஏதாவது சொன்னால், அதை மீறினால் என்ன என்று நினைக்க மட்டும் செய்யாமல் மீறவும் செய்வாள்.

வீட்டில் எல்லோரும் மருத்துவர்கள என்பதால் பிள்ளைகளின் பொறுப்பு பாட்டியிடம்… அவருக்கு எப்போதும் கட்டு திட்டங்கள் அதிகம்.. அதிலும் அக்ஷரா மிகவும் துறுதுறுவென்ற குறும்பான குழந்தை… இதை செய்யாதே! அதை செய்யாதே! பெண்கள் இப்படி இருக்க வேண்டும்! அப்படி இருக்க வேண்டும்! என எப்போதும் பாட்டி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்.

அம்மா, சித்தி, இருவரும் டாகடர்கள் என்றாலும் பாட்டியின் கட்டுப்பாட்டிற்குள். அப்பா சித்தப்பா இருவருமே அப்படி தான். அம்மாவின் சொல் மீற மாட்டர். பாட்டி பாட்டு கத்துக்கோ என்றால், இவள் டேன்ஸ் கற்றுக் கொண்டாள். அதிலும் சரி பரதநாட்டியம் கற்றுக் கொள் என்றால் இவள் வெஸ்டர்ன் தான் வேண்டும் என பிடிவாதம்.

சரி, டேன்ஸ் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த போது இவள் டேக் வாண்டோ வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கற்றுக் கொண்டாள். இன்று வரையிலும் இவள் அதில் சேம்பியன். டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்ற போது மனிதர்கள் வேண்டாம் என ரோபோடிக் என்ஜிநியரிங் படித்தாள்.

சந்தோஷை எப்போதும் பிடிக்கவே பிடிக்காது!

“நான் தான் உன்னை கல்யாணம் பண்ணுவேன். நான் தான் உன் புருஷன்!” என்று அவன் சிறு வயதில் இருந்து சொல்வதால் அவனை பிடிக்கவே பிடிக்காது. வளர்ந்த பிறகு அவனின் உயரமும் ஒரு குறையாகிப் போனது. சந்தோஷ் சராசரி உயரம், ஆனால் அக்ஷரா அதிக உயரம் என்பதால் அவனை விட ஒரு அரை இன்ச் உயரமாக இருப்பாள். அதில் ஹீல்ஸ் போட்டால் இன்னும் உயரமாக தெரிவாள்.

அதனால் அவளுக்கு சந்தோஷுடன் எப்போதும் திருமணம் விருப்பமில்லை.  

அமெரிக்கா படிக்க சென்ற போது யாரும் அவளை கட்டுப் படுத்துபவர் கிடையாது. அதற்காக சரி எது, தப்பு எது என்று பகுத்தறியத் தெரியாதவள் அல்ல.. ஆனாலும் நிகில் அவளை அதிகம் ஈர்த்தான்.. எல்லாவற்றையும் மீற வைத்தான்.

ஒரு பார்ட்டியில் சந்தித்த போது, உடன் இருந்த தோழிகள் நிகிலை அப்படி விடாமல் பார்க்க, அவனை தன்னை பார்க்க வைக்க வேண்டும் என்ற உந்துதல் பார்க்கவும் வைத்தாள். அன்றே அவனோடு ஒரு நடனமும் கூட..

ஆனால் அதன் பிறகு அப்படி ஒன்றும் அவனையே நினைத்திருக்க வில்லை, மாறாக நிகில் அதன் பிறகு அவளையே தான் நினைத்து இருந்தான். இருக்கும் இடங்களும் அருகில் இருக்க, தினமும் காலை மாலை விடாமல் அவளின் பின் வருவான்.

நிகில் மிகவும் ஹேன்சம், அதனையும் விட அவனின் நடை உடை பாவனை மிகுந்த மரியாதையாக இருக்கும். அசட்டுத்தனங்கள் இருக்காது. அனேகம் பெண்களால் விரும்பி பார்க்கப் படும் ஒருவன், தன்னை விரும்பி பார்த்து தன் பின்னால் வருவது அக்ஷராவிற்கு அப்படி ஒரு கர்வத்தைக் கொடுத்தது.     

பின்னர் சிநேகிதம் ஏற்பட, கிட்ட தட்ட ஒரு வருடம் நட்பு மட்டுமே.. அவளின் பின் சுற்றுவது மட்டுமே படிப்பை தவிர அவனின் தலையாய வேலை.

ஒரு முறை அக்ஷராவிற்கு உடம்பு சரியில்லாமல் போக, “வா என்னோட வந்து இரு, சரியாகும் வரை!” என்று அவளை அழைத்து சென்றான். ஒரு வாரம் அங்கே இருந்தவளை அவனும் விடுமுறை எடுத்து நன்றாக கவனித்துக் கொள்ள.. நட்பு என்ற ஒன்றை கடந்து மனது இன்னும் நெருக்கமாக நிகிலை உணரத் துவங்கியது.

“இங்கேயே இருக்கின்றாயா?” என்று நிகில் கண்களில் ஆர்வமும் ஆசையும் மின்ன கேட்ட போது, மறுக்கத் தோன்றவில்லை. ஏன் இருந்தால் என்ன என்று தோன்றியது. “இருக்கின்றேன்” என்று தலையாட்டவும் வைத்தது.                    

“பிரேக் தி ரூல்ஸ்” என்பது எப்போதும் அவளுக்கு பிடித்தமான வார்த்தை. அதைக் கொண்டு ஒரு ஆணோடு திருமணம் என்ற பந்தம் அல்லாது தனியாக இருக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நாட்டில் இருந்து வந்தவளுக்கு, அதை உடைக்கத் தோன்றியது.

“இது என் வாழ்க்கை! என் இஷ்டம்! எனக்கு பிடித்ததை செய்வேன்! என் இஷ்டப்படி தான் இருப்பேன்!” என நினைத்தவள், “ஓஹ் இருக்கேனே” என்று சம்மதம் சொன்னாள்.

அதை கொண்டாடும் விதமாக நிகில் பட்டும் படாத இதழ் முத்தம் பதிக்க.. அக்ஷ்ராவிற்கு முதல் முத்தம். உடலில் சில ரசாயன மாற்றங்கள்.. அதையும் விட அது பெரிய தப்பான செய்கையாக தோன்றவில்லை. அவன் வளர்ந்த நாட்டினில் இது தப்பு இல்லை. ஆனால் அவளின் நாட்டில் அது பெரிய தப்பு தானே. அது அவளுக்கும் தெரியும் தானே! ஆனாலும் மீறினாள்.    

பெட்டியைக் கட்டிக் கொண்டு நிகிலின் இருப்பிடத்திற்கும் வந்து விட்டாள். என் வாழ்க்கை என் இஷ்டம் என்று தைரியமாக அதை செய்தவளால், அதைப் பெற்றோரிடம் சொல்ல முடியவில்லை. அவளின் பெற்றோர்களுக்கும் மற்ற நண்பர்களை, அது ஆணோ, பெண்ணோ, தெரிந்தவர்களுக்கு நிகிலை பற்றி தெரியவில்லை, அக்ஷராவும் சொல்லவும் இல்லை. நிகிலிடமும் அவளின் குடும்பத்தை பற்றி அதிகம் சொன்னதில்லை. ஆனால் அவனின் குடும்பம் பற்றி எல்லாம் அவளுக்குத் தெரியும்.  

“சும்மா ரூல்ஸ் பேசுவாங்க! தெரிஞ்சா ஊருக்கு வா சொல்லுவாங்க!” என அவளுக்கு அவளே நினைத்து மறைத்தாள் என்பதையும் விட, இந்த விஷயத்தில் அவள் வேறு எதையுமே யோசிக்க விரும்பவில்லை. கள்ளத்தனம் வந்து மறைத்ததோ? அவளே அறியாள்!  

சில நாட்களில் நிகில் அவளுக்கு மிகவும் இன்றியமையாதவன் ஆகிப் போனான். அவனை நன்றாகத் தெரியும்! திருமணம் அவன் செய்து கொள்ள மாட்டான் என்று தெரியும். அதில் நிகிலுக்கு விருப்பமில்லை என்று தெரியும். ஆனாலும் தன்னோடானா ஒரு உறவை மிகவும் விரும்புகின்றான் எனத் தெரியும். இது நிலையற்ற உறவு என்றும் தெரியும்.

விருப்பத்தை கண்களில் செயல்களில் எனக் காட்டுவான்.. ஆனால் கட்டாயப்படுத்த மாட்டான்.. அந்த கண்கள் செயல்கள் எல்லாம் அக்ஷராவையும் மிகவும் ஈர்த்தது. ஏன் அடுத்த கட்டத்திற்கு சென்றால் என்ன எனத் தோன்றியது. சம்மதம் சொன்னால் என்ன எனத் தோன்றியது.

சம்மதமும் சொல்ல வைத்தது.. வாழ்க்கையில் இன்னொரு புதிய பரிமாணமும் அறிமுகமாகியது.

நிகிலிற்குமே அது புதியது தான்.. மற்ற பெண்களோடு முத்தம், சில வரை முறை மீறல்கள் இருந்தாலும், அதை தாண்டியது இல்லை, தாண்டக் கூடாது என்பதெல்லாம் இல்லை ஆனால் தாண்டத் தோன்றியது இல்லை, மிக அருகில் யாரும் வந்தாலும், அவனே வர விட்டாலும், சில நிமிடங்களில் ஒரு ஒவ்வாமை அவனுக்கு வந்து விடும். யாரையும் அவனால் சகிக்க முடியாது. சிரித்துக் கொண்டே நழுவிடுவான்.

அப்படி எந்த உணர்வும் தோன்றாதது அக்ஷராவிடம் தான். அவளோடன உறவை முழுமையாக அனுபவித்தான், அவளையும் அனுபவிக்க வைத்தான்.

அக்ஷராவிற்கும் உலகம் மறந்து போனது.. சில நிமிடங்கள் அல்ல, சில நாட்கள் அல்ல, சில மாதங்கள் அல்ல, பல மாதங்கள். வருடம் கடந்தது. இதன் பின் விளைவுகள் என்ன என்று யோசிக்கத் தோன்றினாலும்.. மனதிற்குள் ஒரு பெரிய போராட்டம் தோன்றினாலும்.. வளர்ந்த முறை இது தவறு என்று மனதின் ஒரு புறம் ஓங்கி சொல்லிக் கொண்டு இருந்தாலும், எல்லாவற்றையும் மீறி நிகிலின் அருகாமை வேண்டும் என்றது மனது. எதுவாகினும் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றது.

உள்ளிருந்த ஒரு அசட்டு தைரியம் வேறு எதையும் நினைக்க விடவில்லை, நிகிலும் நினைக்க விடவில்லை. அது நிலையில்லா உறவு என்று தெரிந்தும் வேண்டும் வேண்டும் என்ற மனதை மீற முடியவில்லை.   

ஒரு உரிமை உணர்வு நிகிலின் மீது ஏகமாகத் தோன்றியது. அதுவே அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணமும் ஆகியது.

மற்றொரு காரணம் நிகிலால் அக்ஷ்ராவிடம் இருந்து வெளியில் வர முடியவில்லை. எப்போதும் அவளின் நினைவுகள், அவளின் அருகாமைக்கு ஏங்கும் மனம்.

அக்ஷராவின் வார்த்தைகளைக் கூட எப்போதும் அவனால் மீற முடியாது. என்ன சொன்னாலும் தலையாட்டா தான் தோன்றும். என்னுடைய சுயத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றேனோ என்ற எண்ணம் ஓட ஆரம்பித்தது. இப்படி இருக்க வேண்டாம் என நினைத்தாலும் முடியவில்லை.

இதில் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அக்ஷரா என்றும் சொன்னது இல்லை. விரும்பியதும் இல்லை. ஆனாலும் நிகில் அக்ஷராவிடம் அப்படித்தான். இந்த அவனின் பித்தை அவனே வெறுத்தான். எப்படி ஒருவர் என்னை இப்படி அடிமை கொள்ளலாம் எனவும் நினைத்தான்.      

நான் ஏன் இப்படி இருக்கின்றேன், இப்படி எப்படி வாழ்நாள் முழுவதும் இருக்க முடியும்.. என்ன ஆவது என்னுடைய எதிர்காலம்.. நான் ஒரு சிறந்த மருத்துவனாக வர முடியாதோ என்ற குழப்பம். ஆம் எதிலும் முதன்மையானவனாக இருந்தவனுக்கு சில சறுக்கல்கள், அதை நிகிலால் தாள முடியவில்லை.

அதுவும் ஒரு பெரிய காரணம் ஆகிற்று. அதையும் விட அவளின் மீது இருந்த அளவுகோல் இல்லாத விருப்பமே அவனை பிரியத் தூண்டியது. உண்மையில் பயந்து பிரிந்தான்!  அதனால் திரும்ப எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள முயலவில்லை. அதனால் அவளின் நிலை தெரியாமலே போயிற்று.

சொல்லியிருந்தால் நிலைமைகள் மாறி இருக்கக் கூடுமோ என்னவோ ?

சண்டையிட்டு பிரியவில்லை காரணங்கள் விளக்கப்பட்டு தான் பிரிவு. ஆனால் எல்லாம் அவனுடைய காரணங்கள் மட்டுமே! நிகில் சொல்லும் பொது அவளால் மறுக்க முடியவில்லை. எப்படி சேர்ந்து வாழலாம் என்று கேட்ட போது மறுக்க முடியவில்லையோ. அது போல பிரிவதற்கு காரணங்கள் சொன்ன போதும் மறுக்க முடியவில்லை. நிகிலின் உணர்வுகளை மதித்தாள், அவனின் வீழ்ச்சியை அக்ஷராவாலும் பார்க்க முடியாது.    

அக்ஷரா நிகிலை போல தன் உணர்வுகளை அவனிடம் பகிர்ந்து கொண்டது இல்லை. அதனால் தன்னுடைய பிரிவு அவளை எந்த வகையிலாவது பாதிக்குமா என நிகில் யோசித்தது இல்லை யோசிக்கும் அவசியத்தை அக்ஷரா கொடுக்கவும் இல்லை. என் வாழ்க்கை நான் பார்த்துக் கொள்வேன் என்ற தெனாவெட்டு எப்போதும் அகஷ்ராவிடம் இருக்கும். எப்போதும் எதையும் யாரிடமும் சொன்னது இல்லை சொல்லவும் மாட்டாள்! அந்த திமிர் தானே இப்படி நிகிலோடு ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள வைத்தது. அதிலிருந்து வெளியே வரவும் வைத்தது.

இதன் பாதிப்புகள் இப்போது அவளுக்கு மட்டுமே அவளோடு சேர்ந்து ஷ்ரத்தாவிற்கும். அதுதான்  இப்போது அக்ஷராவின் வருத்தம்.

“என்னால் என் பெண் தகப்பன் இல்லாமல் போவதா! இப்படி தான் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டாமோ” என்று மனதில் சில மாதங்களாக எப்போதும் ஓட ஆரம்பித்து இருந்தது. இதுநாள் வரையில் தன்னுடைய வாழ்க்கை முறை தவறென்று உணர்ந்தது இல்லை. இப்போது தவறாகத் தோன்றியது!