அத்தியாயம் நான்கு :
“இப்படி வாசல்லயே நிக்க சொல்லுவியா, இன் கூப்பிட மாட்டியா?” என்று பேச…
“கடவுளே! திரும்ப ஒரு தமிழ் கொலையா! எத்தனை முறை அதை நீ சாகடிப்ப!”
“எத்தனை பேர் சாகடிச்சாலும் அது உயிரோட இருக்கும், ஏன்னா அது உயிர்ப்பானது!” என்று நிகில் சொல்லி,
“நீ சொன்னது தான், நான் மறக்கலை, இப்போ என்ன தப்பு சொன்னேன்!”
“நிற்க வைப்பாயா அதாவது நிக்க வைப்பியா சொல்லணும், நிக்க சொல்வியா இல்லை” என்று திருத்திக் கொண்டே அவனுக்கு உள்ளே வழிவிட,
“ஓகே, தட்ஸ் ஃபைன்!” என்று உள்ளே வந்தவன், “உன்னோட ஹஸ்பண்ட் என்ன பண்றார்?” என்றான் உடனே.
அதை எதிர்பார்த்திருந்ததால் “அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்றாள் கூலாக.
“டோன்ட் ப்ளே, ஐ அம் சீரியஸ், ஐ ஜஸ்ட் வான்ட் டு செக் யுவர் வெல் பீயிங், என்ன பண்றார்?”
“இவ்வளவு நாளா என்னோட வெல் பீயிங் நீ தெரிஞ்சிக்கிட்டயா என்ன? அதுவுமில்லாம என்னோட வெல் பீயிங்க்கு அவர் என்ன பண்ணினா என்ன?”
நிகில் உன்னுடைய பதில் எனக்கு பிடித்தமில்லை என்ற பாவனையைக் காட்ட..
“நிகில், இப்போ தான் உள்ள வந்திருக்க? என்னைப் பத்தி கேட்காம அவரை ஏன் கேட்கற?”
“ஸ்மிரிதி ஃபியான்சி கிட்ட கேட்டேன், அவன் ஹெசிடேட் பண்றான், அதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுச்சு, அதான் இன்சிஸ்ட் பண்ணினேன் வேற ஒன்னும் இல்லை!”
அவனை ஒரு பார்வை பார்த்து நின்றாள். என்ன பார்வை என்று நிகிலால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை..
“என்ன?”
“உனக்கு ஏதாவது என்னைப் பத்தி தெரியணும்னா என்கிட்டே கேள், வேற யார் கிட்டயும் கேட்காத, ஐ டோன்ட் ஹேவ் குட் டெர்ம்ஸ் வித் எனி படி!” என,
அவனுக்கு தெரிந்த அக்ஷரா எல்லோரிடமும் சிநேகிதம் பாராட்டுபவள், அவளுக்கு யாரோடும் சரியாக இல்லையா? ஏன்? என்ற கேள்வி தொக்க, “ஏன்?” என்றான் வெளிப்படையாக..
“நிகில் ப்ளீஸ்! இப்போதைக்கு எந்த கேள்வியும் வேண்டாம், நான் இப்போ தான் வந்தேன்! ரொம்ப டயர்ட், அங்க ரூ பேபி பாத்ரூம்ல எனக்கு வெயிட் பண்றா, அவளை குளிக்க வைக்கணும், சாப்பிடக் கொடுக்கணும், நீ போயிட்டு அப்புறம் வர்றியா!”
“நான் இங்கே வெயிட் பண்றேன்!”
“இல்லை நிகில், யாரையும் நான் அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குள்ள அல்லொவ் பறது இல்லை தனியா இருக்கறதுனால.. அதனால உன் அப்பா அம்மாவைக் கூட ஒரு வார்த்தைக்காக கூட நான் இங்க கூப்பிடலை, ஷ்ரத்தா தான் ஸ்ம்ரிதியை கூட்டிட்டு வந்தா, சோ, நீ போ அப்புறம் வா”
“எல்லோரும் நானும் ஒன்றா?” என்பது போல அவன் பார்த்து நின்றான்.
“மம்மா வாங்க!” என்று ஷ்ரத்தா கத்த,
“போ, முதல்ல உன் பேபியை பார்”
ஷ்ரத்தாவிடம் போய் அவளை குளிக்க வைத்து வேறு உடை அணிவித்து வந்தாள்.
போயிருப்பான் என்று நினைத்து வர, அங்கேயே அவர்களுக்காக காத்திருந்தான். அதுவரை இல்லாத ஒரு சிநேகம் ஸ்ரத்தாவிடம் முளை விட்டு இருக்க, அவளை பார்த்து சிரித்தான்.
“மம்மா, இந்த அங்கிள் இவங்க அம்மாவை பேபி சொல்றாங்க” என
“டோன்ட் கால் மீ அங்கிள், இப்போ தானே சொன்னேன் நிக் கூப்பிடு பேபி என்னை”
அம்மாவின் முகத்தை ஷ்ரத்தா பார்க்க, “நிக்கே கூப்பிடு!” என்று சம்மதம் சொல்ல..
“உன்னோட கிட்சன் யூஸ் பண்ணிட்டேன், யு லுக் டையர்ட், மேட் சம் காஃபி பார் யு” என்றான். அப்போது தான் டைனிங் டேபிள் மேல் இருந்த காஃபியை பார்த்தாள்.
“நிக், திஸ் இஸ் நாட் யு எஸ். திஸ் இஸ் இன்டியா. இங்க வந்து இப்படி நீ எனக்கு காஃபி எல்லாம் கலக்க கூடாது” என்றாள் பொறுமையாக.
“தட்ஸ் ஓகே, நீ முதல்ல குடி, அப்புறம் பேசு, பேபி நீ என்ன சாப்பிடற”
ஷ்ரத்தா திரும்ப அம்மா முகத்தை பார்க்கவும், “அவளுக்கு நான் செஞ்சு கொடுக்கறேன், நீ முதல் கிளம்பு. என்னோட கெஸ் பரத் அங்க இருப்பான். நீ இங்க இருந்தா எங்க அம்மா வீட்டுக்கு போய் எல்லோர் கிட்டயும் பரப்புவான்” என்றாள்.
“யு ஹேவ் சேஞ்ட் அக்ஷி, ப்ரேக் தி ரூல்ஸ்ன்னு எனக்கு சொன்ன அக்ஷி, இப்போ அது யு எஸ், இது இந்தியான்னு ரூல்ஸ் பேசறா, யாரைப் பத்தியும் கவலைப்படாதவ அங்க இருக்கான், நீ போ சொல்ற!” என
சட்டென்று அக்ஷராவின் மூட் மாறிவிட, “ப்ளீஸ், நம்ம அப்புறம் பேசலாம்” என்றாள் கெஞ்சல் குரலில் மகள் கவனியாதவாறு.
“ஓகே!” என்று அவன் சென்று விட…
“பேபி, அம்மா இந்த காஃபி குடிச்சிட்டு உங்களுக்கு பால் கலக்கட்டுமா?”
“எனக்கும் கொஞ்சம் காஃபிம்மா”
“பால் தான் சாப்பிடணும்” என்று அம்மா மிரட்டுவாள் என்று எதிர்பார்க்க,
“வா!” என்று டைனிங் டேபிள் முன் அவளை அமர்த்திக் காஃபி பார்க்க, அங்கே இரண்டு இருந்தது.
“ஓஹ்! தன்னுடன் சாப்பிடப் பிரியப்பட்டு இருப்பானோ!” என்று தோன்றியது. “மா, ரெண்டு இருக்கு!” என்று ஷ்ரத்தாவும் சொல்ல,
“இட்ஸ் ஓகே பேபி! நம்ம ஆளுக்கு ஒன்னு சாப்பிடலாம்!” என்று அருந்த, அதன் ருசியில் ஏதேதோ நினைவுகள், பெர்ஃபக்ட் காபி மேக்கர் என நினைத்த போது கண்கள் கலங்கியது.
“மம்மா” என்று என்று அவளிடம் எதோ சொல்ல விழைந்த ஷ்ரத்தா அம்மாவின் கண்களில் கண்ணீரை பார்த்து, “என்னமா?” என்று கலக்கமாக கேட்க,
சட்டென்று முகத்தை புன்னகையாக வைத்தவள், “இந்தக் காஃபி நல்லாவே இல்லை!” என்று சொல்ல,
“மம்மா, சூப்பர்ரா இருக்கு, அதை குடுங்க, நீங்க இதை சாப்பிடுங்க!” என்று அக்ஷராவின் புறம் நகர்த்தினாள்.
தன்னுடைய மகளின் அன்பில் நெகிழ்ந்தவள்.. அவளை அணைத்துக் கொள்ள, அம்மாவின் காஃபியை அருந்திய குழந்தை “நல்லா தான்மா இருக்கு!” என்று சொல்லி, “உனக்கு டேஸ்ட் பிடிக்கலையா!” என்று கேட்க,
“ம்ம், ஆமாம்!” என்பது போல தலையசைத்து வைத்தாள்.
அங்கே நிகில் பரத்திடமும் ஸ்ம்ரிதியிடமும், “எஸ், ஐ நோ ஹேர் வெரி வெல், அங்க யு எஸ்ல இருந்த போது என்னோட நல்ல ஃபிரன்ட், பட் ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ணின பிறகு காண்டாக்ட் இல்லை!” என்று சொல்லி முடித்துக் கொண்டான். இவ்வளவு அக்ஷரா தவிர்க்கும் போது தன்னால் எதுவும் சிக்கல் வந்து விட வேண்டாம் என்று மனம் எடுத்துரைக்க மிகவும் கவனமாக வார்த்தைகளை கோர்த்தான்.
ஒரு வேளை இவள் தான் பெரிய உண்மை விளம்பி ஆகிற்றே! இவளே சொல்லி அவளின் கணவனுடன் சிக்கல் ஏற்படுத்திக் கொண்டாளா, எதற்கும் தள்ளியே நிற்போம் என்று முடிவெடுத்து .. கல்யாண ஏற்பாடுகள் பற்றி பேசத் துவங்க, அடுத்த வாரம் நடக்க இருக்கும் திருமணத்தை முன் நிறுத்திப் பேச ஆரம்பித்தான்.
அதனால் மற்றவர்களுக்கு அக்ஷராவிடமிருந்து கவனம் பின் செல்ல, அவனால் பின் கொண்டு செல்ல முடியவில்லை.. மனதை அரிக்க ஆரம்பித்தது.
“வீட்டுக்கு வாங்க!” என்று பரத் நிகிலை கூப்பிட, “இன்னம் நான் ஜெட் லாக்ல தான் இருக்கேன், நாளைக்கு வர்றேன்!” என்று சொல்லிவிட்டான்.
பரத் கிளம்ப, “அத்தை ஃபாமிலி, உங்க மாமா ஃபாமிலி, எல்லாம் மூணு நாள்ல வர்றாங்க. அவங்களுக்கு எல்லாம் தங்க இடம் பார்க்கணும்!” என்று அப்பா சொல்ல,
“இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட சொல்லலையா?”
“வேண்டாம்! நாம விசாரிக்கலாம். நம்மளை எந்த செலவும் செய்ய விடமாடேங்கறாங்க, நம்ம செலவை அவங்க தலை மேல கட்டக் கூடாது!” என்றார் வரதாராஜன்.
பின்பு தனிமை கிடைத்தவுடனே ஸ்ம்ரிதியிடம், “பரத்கிட்ட நான் பேசிட்டு இருக்கும் போது ஏன் பேச்சை மாத்தின” என்றான் நிகில் நேரடியாக.
“செம ஷார்ப் நிக் நீ, அவங்க அக்கா ஹஸ்பன்ட் அவங்க கூட இல்லை சொன்னாங்க.. அதுதான் கேட்கும் போது கஷ்டமா இருக்கும் இல்லையா, பேச்சை மாத்தினேன்!”
“ஏனாம்? என்ன ப்ராபளம்!”
“அதெல்லாம் தெரியாது, சம் இஸ்ஸியு, ஹஸ்பன்ட் கூட இல்லை சொன்னாங்க!”
“என்ன பண்றான் அவன்?”
“தெரியலை! ரொம்ப டீட்டையில் சொல்லலை. அவங்க பொண்ணும் அவங்களும் இங்க தனியா இருக்காங்க அதுதான் தெரியும், நிச்சயத்துக்கும் வரலை, பேரன்ட்ஸ் கூடவும் சண்டை போல, அபிமன்யு மட்டும் இங்க வந்து போறார்”
தனியாக இருக்கின்றாளா மனதிற்கு கஷ்டமாக இருந்தது.. பேசி கணவனுடன் செல்ல வைக்க வேண்டும் என்று தோன்றியது.
“ஏன் நிக் நீ இவ்வளவு கேட்கற?”
“எனக்கு அவளை நல்லா தெரியும்.. அதுதான் ஜஸ்ட் கேட்டேன்” என்று சொல்லி ரூமிற்குள் அடைந்து கொண்டான். தனிமை தேவையாய் இருந்தது.. அவளோடு கழித்த நாட்களை அசை போட..
ஒன்றொன்றாய ஞாபகம் வர, திரும்ப எதுவும் ஞாபகம் வர வேண்டாம் என்று நினைத்து வெளியில் வந்து அமர்ந்தான்.
அக்ஷராவிற்கும் மனது அலை பாய்ந்தது, இந்தியா வந்த நாளாக சந்தித்த பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகம் வர.. “பேபி, நம்ம டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்போமா!” என்று ஷ்ரத்தாவை அருகில் அமர்த்திக் கொண்டு டி வீ ஆன் செய்யவும்,
“மம்மா, ஹோம் வொர்க் பண்ண வேண்டாமா” என்றாள் மகள் பொறுப்பாய்.
“அப்புறம் பண்ணலாம்!” என்றவள் மகளோடு டாம் அண்ட் ஜெர்ரி பார்த்தாள், பிறகு மகளுக்கு பிடித்தது சமைத்தாள், பிறகு உண்டாள், பிறகு உறங்கினாள்.
“நான் பார்த்த அக்ஷ்ராவா இது?” என்ற நிகிலின் குரல் காதுகளில் ஒலிக்க, “இல்லை! இது நீ பார்த்த அக்ஷரா இல்லை! இது ஷ்ரத்தாவின் அம்மா, ரூ பேபியின் அம்மாவை யாரும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாது, அது என்னுடைய பேபியை பாதிக்கும்!” என்று தோன்ற, ஷ்ரத்தாவை இருக்கமாக அணைத்துக் கொள்ள, அதுவும் கையை கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டது.
அந்த அணைப்பில் எதுவாகினும் பார்த்துக் கொள்ளலாம், யாரும் எனக்குத் தேவையில்லை என்ற இறுமாப்பு தோன்ற, அதன் பிறகே உறக்கம் தழுவியது.
தாய்மை எல்லாவற்றையும் மாற்றி விடுகின்றது, கொள்கைகளை, கோட்பாடுகளை எல்லாவற்றையும்!
அக்ஷராவிற்கு உறக்கம் தழுவி விட்டது, ஆனால் நிகிலுக்கு தழுவவில்லை, இந்தியா வந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.
அக்ஷராவை இப்படிப் பார்த்த பிறகு மனதிற்கு ஏனோ சரியாக படவில்லை. இந்த எட்டு வருடங்களாக எந்தப் பெண்ணை பார்த்து ரசிக்க முற்பட்டாலும், அவளின் ஞாபகம் எழாமலில்லை. அவளோடு ஒரு ஒப்புமை தோன்றாமல் இருந்தது இல்லை.
கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் சேர்ந்து இருந்திருகின்றனர்.. சொல்லப் போனால் அதன் பிறகு அக்ஷராவைப் போல யாரும் ஈர்த்ததும் இல்லை.
ஆனால் அதன் பிறகு எந்தத் தொடர்ப்புமில்லை. தொடர்ப்பு ஏற்படுத்திக் கொள்ள அவன் தான் விரும்பவில்லை. இப்போது தனக்கென வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள் குழந்தை இருக்கின்றது. இப்போது நான் அவளை நினைப்பது சரியா? அவளின் பெர்சனல் வாழ்க்கையில் தலையிடுவது போல ஆகாதா?
மிகவும் குழம்பிப் போனான்.. நான் இந்தியா வந்திருக்க வேண்டாம், பார்க்காமல் இருந்தால் எதுவும் இல்லை. ஆனால் பார்த்த பிறகு என்ன என்ன என்று அவளைப் பற்றி தெரிய ஆர்வம் அதிகமாய் இருக்கின்றது. இது தவறும் அல்லவா? வெகு நேரம் கழித்தே உறங்கினான்.
காலையில் விரைவில் விழிப்பு வந்துவிட.. நேரம் பார்த்தான் ஆறு என்றது.. இன்னும் அம்மாவும் அப்பாவும் ஸ்ம்ரிதியும் விழிக்கவில்லை.
கதவை மூடி வெளியே வந்து.. அக்ஷராவின் அப்பார்ட்மென்ட் சென்றான்.. அப்போதுதான் அக்ஷரா எழுந்து இருந்தாள். கீழே செக்யுரிட்டியிடம் இருக்கும் பால் பேக்ட் வாங்க சென்றிருந்தாள்.
அதனால் கதவை வெளியில் வெறுமனே மூடி சென்றிருந்தாள்.. அவள் படிகளில் இறங்கவும் நிகில் கதவை திறந்து வரவும் சரியாக இருந்தது.
அவள் போவதைப் பார்த்தவன், திறந்திருந்த வீட்டிற்குள் போய் அமர்ந்து கொண்டான். உள்ளே பெட்ரூம் கதவும் திறந்திருக்க, அங்கே ஷ்ரத்தா உறங்குவது தெரிந்தது. அதனால் அமர்ந்து கொண்டான்.
திரும்ப கதவை திறந்து உள்ளே வந்ததும், இவனை எதிர்பாராதவள் அதிர்ந்து நின்று விட்டாள். பின்னர் “ஊப்ஸ்” என்று மூச்சு விட்டவள், “கதவு திறந்து இருந்தா உள்ள வந்து உட்கார்ந்துக்குவியா, நான் பயந்துட்டேன்!” என்று கத்த,
“ரொம்ப நாள் ஆச்சு, இந்த மாதிரி யாராவது என்கிட்டே சத்தமா பேசி!” என்றான் சிரிப்புடன்.
“ஹேய், ஐ அம் சீரியஸ், உன்னை யாரு இப்போ இங்க வர சொன்னா, சும்மா சும்மா வராத, உன் பேரன்ட்ஸ் என்ன நினைப்பாங்க?”
“ஓகே! அப்போ அவங்களுக்கு தெரியாம பால்கனி வழியா வரட்டுமா?” என்றான் சீரியசாக.
“ஓஹ் வாயேன், வந்து என்னோட பெட்ரூம்ல இருக்குற பெட்க்கு கீழ வந்து ஒளிஞ்சுக்கோயேன்!” என கிண்டலாக சொல்ல,
அவனின் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை.
ஏதோ மனதில் நினைக்கின்றான் என்று புரிய, “என்ன நினைச்ச?” என்றாள் தீவிரமாக.
“உனக்கு தெரிய வேண்டாம்!” என்றான் இன்னும் விஷமமாக.
“ஒழுங்கா சொல்லு!” என்று அக்ஷரா மிரட்டவும்,
“வேண்டாம் சொல்றேன் தானே! அதுவும் உனக்கு கல்யாணமாகிடுச்சு, உன்கிட்ட அப்படி பேசக் கூடாது!” என்று வேறு சொல்ல,
“ஒழுங்கு மரியாதையா சொல்லு!” என்றாள் மீண்டும், முகத்தில் கோபமும் தோன்ற ஆரம்பிக்க..
“ஓகே! ஒரு ப்ராமிஸ் பண்ணு, சொல்றேன்! என்னை வீட்டை விட்டு போக சொல்லக் கூடாது, அப்புறம் அடிச்சிடக் கூடாது, நீ கேட்கறதால மட்டும் தான் சொல்றேன்” என்று பெரிதாக பில்ட் அப் கொடுத்து, அவளின் பொறுமையா பறக்க வைத்து சொன்னான்.
“ஆமாம், உன்கிட்ட நான் பார்க்காதது என்ன இருக்கு? நான் ஒளிஞ்சு பார்க்கற மாதிரி!” என்று சொல்ல,
அக்ஷரா பார்த்த பார்வையில் பற்றி பொசுங்கி தான் இருப்பான்.. வேகமாக சமையல் அறைக்குள் சென்று நின்று கொண்டாள். கண்களிலும் நீர் வந்து விட்டது.
பின்னோடு வந்தவன், “சாரி! நீ தானே சொல்ல கட்டாயப் படுத்தின!” என,
பதிலே பேசவில்லை அக்ஷரா.. அவள் பாட்டிற்கு பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.
“அதான் சாரி சொல்றேனில்லை!” என்றான் மீண்டும்.
அவனை திரும்ப நின்று பார்த்தவள் கைகளை கட்டி, “பாரு நிகில்! இப்போ இருக்கிறது அக்ஷரா இல்லை, ஷ்ரத்தாவோட அம்மா, ஷ்ரத்தாவோட அம்மா கிட்ட நீ மரியாதையா தான் பேசணும்! மரியாதையா தான் பார்க்கணும்! இப்படி நீ பேசறதை நான் டாலரேட் பண்ண மாட்டேன்! இஸ் தட் கிளியர்!” என்று சொல்ல,
அவளையே பார்த்து நின்றான்.