அத்தியாயம் இரண்டு :

சாப்பிட என்ன இருக்கின்றது என்று பார்த்தான், கிச்சனில் “ஃபிரிட்ஜில் பார்” என்று ஒரு நோட் அம்மாவின் கையெழுத்தில் இருக்க, ஒரு சிறு புன்னகையுடன் என்ன இருக்கின்றது என்று பார்த்து இருந்த உணவை எடுத்து ஓவனில் சூடு செய்து உண்டான்.

திரும்ப குளித்து, வேறு உடை அணிந்து, கதவை திறந்து வெளியே வந்தான். காலை எட்டு மணி அப்போது. அவன் வெளியே வரவும், அந்தக் காரிடாரில் அபிமன்யு ஒரு பெண் குழந்தையின் கை பிடித்து நடந்து வந்து கொண்டிருந்தான்,

அந்த குழந்தை பள்ளி சீருடையில் இருந்தது. பார்க்கவே சிறு பொம்மை போல இருந்தது. ஆனால் பார்பி போல ஸ்லிம் பொம்மை அல்ல, கழுக் மொழுக் பொம்மை,

அபிமன்யு இவனை கவனிக்கவில்லை, சுவாரசியமாக அந்தக் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தான். “அம்மாவை இப்படி தான் படுத்துவியா. அம்மாவை ஏன் ட்ரபிள் பண்ணற. சீக்கிரம் ரெடி ஆகணும் தானே. பாரு! இப்போ ஸ்கூல் பஸ் போயிடுச்சு”

“நீங்க கொண்டு போய் விட மாட்டீங்களா, இப்போவே உங்களுக்கு பேஷண்ட்ஸ் வர்றாங்களா என்ன?” என்றாள்.

“கொண்டு போய் விடு சொல்லு, அது என்ன பேஷண்ட்ஸ் வர்றாங்களா கேட்கற?” என்று அவளுக்கு சமமாக நின்று வாயடித்தான்.

அந்த குழந்தை வாய் பொத்தி சிரிக்க, “உங்கம்மா கூட சேர்ந்து நீயும் என்னை கிண்டல் பண்ற, இந்த வீக் சண்டே உன்னோட ஐஸ் கிரீம் கட்” என்றான்.

“இப்போ நீங்க தான் லேட் பண்றீங்க” என்று இடுப்பில் கைவைத்து நிற்க

“எஸ்! கம், கம்!” என்று திரும்பியவன், நிகில் நிற்பதை பார்த்து புன்னகைத்தான். “உங்க வீடு இங்கேயா? உங்க குழந்தையா?” என்பது போல எந்தக் கேள்வியும் நிகில் கேட்கவில்லை.

அபிமன்யுவாக “என்னோட அக்கா குழந்தை. அவ அபார்ட்மென்ட் அது!” என்று காட்டினான். ஒரு சிறு தலையசைப்பு மட்டுமே நிகிலிடம்.

“யார் மாமா இது? உங்க ஃபிரண்டா?” என்று குழந்தை கேட்க..

“ஸ்ம்ரிதி அத்தையோட அண்ணா இவங்க!” என்று அபிமன்யு சொல்ல…

அவனை பார்த்து மலர்ந்து சிரித்த குழந்தை “வணக்கம்” என்று கைகுவித்து சொன்னாள்.

நிகிலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் வணக்கம் சொல்லவும் அதற்கு பழக்கம் இல்லாதவன், எப்படி அதற்கு திரும்ப சொல்வது என்று சில நொடிகள் தடுமாறினான்.

பார்த்து நிற்க, “நீங்க வணக்கம் சொல்ல மாட்டீங்களா?” என குழந்தை அவனை நோக்கி சொல்ல, வேறு வழியில்லாமல் குழந்தையை நோக்கி கை நீட்டினான் நிகில்.

பெரிய மனுஷியாய் கை பற்றி குலுக்கி “நான் ஷ்ரத்தா! நீங்க..”, என கேட்க, நிகிலுக்கு அப்படி ஒன்றும் குழந்தையிடம் பேசும் ஆர்வம் இல்லாததை உணர்ந்த அபிமன்யு,  

“ஹேய், வாயாடி… அரட்டை அடிக்க ஆரம்பிச்சிட்டியா? இட்ஸ் கெட்டிங் லேட்!”

“நாம ஈவ்னிங் மீட் பண்ணலாம்!” என்று நிகிலிடம் சொல்லி குழந்தை நடக்க,

படியிறங்கும் போது அபிமன்யு குழந்தையிடம், “அந்த அங்கிள் ஸ்மிரிதி அத்தை போல இல்லை, நல்லா பேச மாட்டேன்றாங்க, நீயா போய் போய் பேசக் கூடாது. அப்புறம் அம்மாக்கு தெரிஞ்சா உன்னை கோபிப்பா!” என,

“ஓகே!” என்று சமர்த்தாக குழந்தை கேட்டுக் கொண்டது.

அபிமன்யு காரில் ஷ்ரத்தாவை அமர்த்தி, அவளுக்கு சீட் பெல்ட் போட்டு, பின் அவன் மறுபக்கம் அமர்ந்து காரை கிளப்பினான். “ஈவ்னிங் பஸ்ல வந்துடணும். லாஸ்ட் டைம் மாதிரி மாமா வருவேன்னு ஸ்கூல்லயே உட்கார்ந்து இருக்கக் கூடாது!” என்றான் ஸ்ட்ரிக்டாக.

“டெய்லி பஸ்ல தானே வர்றேன். ஒரு நாள் நீங்க வந்தா என்ன?” என்று எதிர்கேள்வி கேட்க..

சென்ற முறையே அக்காவிடம் திட்டு வாங்கியிருந்தான் அபிமன்யு, “சும்மா அவளை உனக்கு பழக்கப்படுத்தாத அபி, எல்லா நேரமும் அப்புறம் உன்னை எதிர்பார்ப்பா. என்னால சமாளிக்க முடியாது!” என்று சொல்லி இருந்தாள்.

இப்போது காலையிலும் பள்ளிக்கு ஷ்ரத்தாவை விட அக்கா தான் கிளம்பினாள். “இதுக்குன்னு தனியா வா வந்தேன், நான் விட்டுடறேன்!” என்று வற்புறுத்தி இப்போது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்திருந்தான்.

“மாமாக்கு வேலையிருக்கும் ரூ பேபி”  

ஷ்ரத்தாவின் முகம் சுருங்கிப் போயிற்று, அதைக் காண சகிக்கவும் இல்லை, ஆனால் வருகிறேன் என்று சொல்லவும் முடியவில்லை, திரும்ப இதைக் கூட கட் செய்து விடுவாள் அக்கா என்று தெரியும்.

“ரூ பேபி பெரிய பொண்ணு, சொன்னாப் புரிஞ்சிக்குவா!” என்று வெகுவாக சமாதானம் பேசி வந்த போது பள்ளி வந்திருந்தது.

இறங்கி அவளை ஸ்கூலின் உள் புறம் வரை சென்று விட்டு வந்தான்.

“காலையிலேயே இன்று அவ்வளவு டென்ஷனாக இருந்தாளே அக்ஷரா, நேரத்திற்கு கிளம்பினாளா இல்லையா தெரியவில்லையே?” என்று அபிமன்யுவின் நினைவு அக்ஷராவை சுற்றி தான் ஓடிக் கொண்டிருந்தது. அக்ஷரா அவனின் அக்கா.

அக்ஷரா அவனின் நினைப்பிற்கு தகுந்தவாறு, வண்டியை அந்த ட்ராபிக்கில் விரட்டிக் கொண்டு இருந்தாள். காலையில் எழுவதற்கு நேரமாகி விட்டது அன்று, அபிமன்யு வந்து எழுப்பியிருக்காவிட்டால் இன்னும் நேரமாகி இருக்கும்.

இதில் அவன் வேறு, ஏன் தனியாக சிரமப்படுகின்றாய் வீட்டிற்கு வந்துவிடேன் என்று சொல்ல, அவனோடு நடந்த வாக்குவாதம் வேறு இன்னும் நேரமாக்கிவிட, இப்போது அதையெல்லாம் நினைத்துக் கொண்டே அவளின் வெஸ்பாவை செலுத்திக் கொண்டிருக்க, ஆட்டோ ஒன்று சடன் ப்ரேக் போட, நூலிழையில் மோத இருந்து தவிர்த்து நிறுத்தினாள்.

அது இன்னும் கோபத்தைக் கிளப்ப, வெஸ்பாவை ஆட்டோவிற்கு முன் நிறுத்தியவள், “டேய், இன்னாடா வண்டி ஓட்டற நீ!” என்று அமர்ந்த படியே லோக்கல் சென்னை பாஷையில் ஒரு சப்தம் கொடுக்க, சப்தம் கொடுத்த ஆளை பார்த்தான் ஆட்டோகாரன்.

அவளின் முகம் தெரிந்தால் தானே! ஓபன் ஹெல்மெட் அணிந்திருந்தாள், ஆனாலும் முகத்தை முழுவதும் துப்பட்டாவில் மூடி இருக்க, அதன் மேல் ஒரு கருப்பு கண்ணாடியும் அணிந்திருக்க..

“அது யாரு? பேய் மாதிரி இருக்க.. பேய் மாதிரி கத்துற.. நீ பார்த்து போம்மா!” என ஆட்டோக்காரன் தெனாவெட்டாக பதில் கொடுக்க..  

“யாரை பார்க்கச் சொல்ற? உன்னையா… போடாங்…” என்று ஒரு கெட்ட வார்த்தையில் திட்டி,

“ஒழுங்கா வீடு போய் சேருடா! இந்த லட்சணத்துல ஓட்டுனா அடிப்பட்டு சாவ… நீ அடிப்பட்டு செத்தாலும் பரவாயில்லை, அடுத்தவங்களை சாகடிக்காத…” என்று சொல்லி வண்டியை கிளப்பிச் செல்ல,

“அய்யய்யோ இன்னாமா பேசிட்டு போகுது இது! யாரு முகத்துல இன்னைக்கு முழிச்சேனா, இதுதான் போய் அடிபட்டு சாவும்!” என்றவன், “அது எங்க சாவும், எல்லோரையும் கொல்லத் தான் செய்யும், காலங்க கார்த்தாலே என்ன வார்த்தை சொல்லிடுச்சு!” என்று நினைத்தவாறே ஆட்டோவைக் கிளப்பினான்.

அவன் நினைத்து கிளப்புவதற்குள், அருகில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நுழைந்து இருந்தாள் அக்ஷரா.

வண்டியை நிறுத்தும் போதே எதிர்பட்ட மாணவன் ஒருவனிடன் “பார்க் மை வெஹிகிள், ஐ வில் பீ பேக் இன் ஃபைவ் மினிட்ஸ்” என்று சொல்லி, வேகமாக உள் சென்று, பையோ மெட்ரிக்ஸ்ஸில் கை வைத்து நேரம் பார்க்க, “ஷப்பா ஒரு நிமிடம் ஆகியிருந்தாலும், லேட்டில் இருந்து பெர்மிஷனுக்கு நேரம் மாறியிருக்கும்” என நினைத்தவளாக..

“ஊப்ஸ்” என்று பெரு மூச்சு விட்டவள், பிறகே தலையில் இருந்த ஹெல்மெட் கழற்றி, முகம் மூடியிருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தில் போட்டு நடந்து பார்க்கிங்கை அடைந்தாள். காத்திருந்த மாணவனிடம் “தேங்க்ஸ்” என முறுவலித்து அவளின் வண்டி சாவியை வாங்கி நடந்தாள்.

நடக்கும் அக்ஷராவை பார்த்திருந்தான் மாணவன், மிகவும் அழகான பெண் அக்ஷரா, ஆனால் பெண்மையை, நளினத்தை, எங்கும் காட்ட மாட்டாள். நடையில், உடையில், பேச்சில், எப்போதும் ஒரு கம்பீரம் அலட்சியம் மட்டுமே இருக்கும். சொல்லப் போனால் அவனின் வகுப்பு பெண்களை போன்ற தோற்றம் தான். அவளின் உயரம், இன்னும் அவளுக்கு பெரிய ப்ளஸ், சராசரி உயரமுடைய ஆண்கள் அவளின் உயரத்திற்கு கீழே தான்.  

அதனால் பெரும்பாலான ஆண்களை அவள் பார்க்கும் பாவனையே நீ என்னை விட சிறியவன் என்ற எண்ணத்தோடே இருக்கும்.    

இப்போதும் அவளின் ஷோல்டர் பேகை இருபுறமும் மாட்டி வேக எட்டுக்கள் வைத்து அவள் நடந்ததே கம்பீரமாக இருந்தது. முப்பத்து இரண்டு வயது பெண், ஏழு வயது பெண்ணின் அம்மா என்று யாராலும் சொல்ல முடியாது. காலேஜ் முடித்த பெண்ணின் தோற்றம் தான்.  

எதிர்பட்ட ஒரு நான்காம் வருட மாணவன் தன் நண்பனிடம், “நம்ம மேம் சுல்தான்ல வர்ற அனுஷ்கா ஷர்மா மாதிரி இருக்காங்க” என,

“டேய், டைகர்ல வர்ற காதரினா கைஃப் மாதிரின்னு எனக்கு சொன்னதா ஞாபகம்!”

“அது ரெண்டு வருஷம் முன்னாடிடா, இப்போ அனுஷ்கா ஷர்மா, என்ன ஹைட்? என்ன ஸ்டைல்?” என,   

“ரெண்டு பேருமே படத்துல ஸ்டண்ட்ல பின்னி எடுப்பாங்க, அதுவும் அனுஷ்கா ஷர்மா மல்யுத்த வீராங்கனைடா படத்துல, ஆனா அவங்களை விட நம்ம மேம் இன்னும் நல்லா இருக்காங்க!”   

“அவங்க படத்துல தான் பின்னி எடுப்பாங்க, நம்ம மேடம் ரியல்லா டேக் வாண்டோ சாம்பியன் தெரியும்ல. இப்போ கூட மலேசியா போய் சேம்பியன்ஷிப் வின் பண்ணினாங்க!” என்று பேசியபடி நடந்து செல்ல…

இதை அறியாத அக்ஷரா “மார்னிங் மேம்” என்று எதிர்பட்ட மாணவர்கள் ஒரு வணக்கம் வைத்து செல்ல, புன்னகையுடன் எல்லோருக்கும் தலையசைத்து ஸ்டாஃப் ரூம் சென்ற போது,  “ஷப்பா” ஹெச் சோ டீ இல்லை என்று திரும்பவும் ஆசுவாசப் பட்டாள்.

அவளின் துறை ரோபோடிக் என்ஜினீயரிங்.. தன்னுடைய சேரில் அமர்ந்த நேரம் தான் பசியே தெரிந்தது. அட்டண்டரை அழைத்து சாப்பிட வாங்கி வர சொன்ன போது, “டெய்லி இப்படி கடையில் சாப்பிடக் கூடாது, சமைக்கணும்!” என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

காலையில் ஷ்ரத்தாவிற்கு ப்ரெட் ஆம்லேட் சாப்பிடக் கொடுத்தவள், அதைக் கூட தனக்கு செய்ய நேரமில்லாமல் கிளம்பி வந்திருந்தாள்.

மதியம் குழந்தைக்கு லஞ்சும் அதுவே, மாலையில் அவளிடம் என்ன திட்டு வாங்கப் போகிறேனோ என்ற எண்ணம் ஓடிய போதும், மகளை நினைத்து முகத்தில் தானாக ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டது.

கூடவே புதிதாய் முளைத்து இருக்கும் ஒரு கவலையும். ஆம் இந்த பதினைந்து நாட்களை எப்படி ஓட்டப் போகின்றேன் என,

அவனுக்கு நான் இங்கே இருக்கின்றேன் என்று தெரியுமா என்ற யோசனையும் கூட, எப்படி தெரியும்? கண்டிப்பாக இருக்காது! உனக்கே இப்போது ஸ்மிரிதியையும் அவளின் பெற்றோர்களையும் பார்த்து தானே தெரியும்.

ஆனால் அவர்களுக்கு உன்னை தெரியாதே! தெரிய வரவும் கூடாது! கடவுளிடம் மனது அவசரமாக வேண்டுதல் வைத்தது. “கடவுளே! எனக்கும் நிகிலிற்கும் இருந்த உறவு யாருக்கு தெரிய வரக் கூடாது”

“என் மகளை, என்னுடைய வாழ்க்கையின் கடந்த காலங்கள் தாக்கவே கூடாது. அவள் எனது தேவதை, எனது பொக்கிஷம், அதன் மேல் சிறு கரையும் படியக் கூடாது. இந்த நாட்கள் சிறு சலசலப்பும் இல்லாமல் கடந்து போய் விட வேண்டும்!”       

“எல்லோரும் சொல்வது போல உலகம் மிகவும் சிறியது. எங்கே இருந்து எங்கே கனக்ட் ஆகின்றது, எங்கோ இருந்தவனின் தங்கை, எப்படி என்னுடைய சித்தப்பா மகனிற்கு மணமகளாக வேண்டும்!”

எந்த காலத்திலும் நிகிலை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு வராது என்றே நினைத்தாள். ஆம்! அவன் இந்தியா வர மாட்டான் என்று தெரியும். தானும் மீண்டும் அமெரிக்கா போகப் போவது இல்லை. அதனால் வாய்ப்பு இல்லை என நினைத்திருக்க, இப்போது திடீரென்று இது முளைத்து நின்றது. 

இந்த நிகில் இப்போது எப்படி இருப்பான், என்னை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்வான், என்னை எப்படி எதிர்கொள்வான். எட்டு நீண்ட வருடங்கள்.

யாருக்கும் எதுவும் தெரிய வருமோ என்ற பயமெல்லாம் இல்லை, ஏனென்றால் நிகில் யாரிடமும் எதையும் பகிர மாட்டான் என்பது எப்போதும் அவளுக்கு மிகவும் திண்ணம்.

எதுவாகினும் இந்த பதினைந்து நாட்கள் கடந்த பிறகு தான் மனதிற்கு அமைதி திரும்பும் என்பதும் அவளுக்கு திண்ணம்.

தன்னுடைய தாலியை தொட்டுப் பார்த்துக் கொண்டாள், நெற்றி வகிட்டில் இருக்கும் குங்குமத்தையும்..  

“மேம், ஹெச் ஓ டி கூப்பிடறாங்க!” என்ற அட்டென்டரின் குரலில் கலைந்தவள், எழுந்து அவரை காண சென்றாள்.