கணபதியே அருள்

       வானம் தொடாத மேகம்

அத்தியாயம் ஒன்று :

ஃபிளைட் தரையிறங்க இன்னும் ஒரு அரை மணிநேரம் இருக்க, தங்களின் சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுங்கள் என்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் வர, கூடவே விமானப் பணிப்பெண்ணும் இன் முகத்தோடு அதையே சொல்லி, தேவைப்படுபவர்களுக்கு உதவியும் செய்து கொண்டிருக்க..

 நமது நாயகன் நிகில் வரதராஜன் ஆழ்ந்த உறக்கத்தில், அந்த விமானம் ஏறியதில் இருந்து உறங்குகின்றான். அவனின் உறக்கத்தை பார்த்து விமானப் பணிப்பெண், அவளாக சீட் பெல்ட் அணிவிக்க முற்பட, அந்தக் குறுகுறுப்பில் விழித்தவன், மிக அருகில் தெரிந்த பணிப்பெண்ணின் முகத்தை பார்த்தான்.

அவன் விழித்து தெரியாமல் அவள் கருமமே கண்ணாயிருக்க, “யுவர் ச்சீக்ஸ் ஆர் காலிங் மீ ஃபார் எ டச் வித் மை லிப்ஸ்” என,

அருகில் கேட்ட அவன் குரலில் அதிர்ந்து முகம் நிகிலின் முகம் பார்த்தவள், பின்பு நிலைக்கு வந்தாள். இப்படி எத்தனைப் பேரை பார்த்திருப்பாள், அதிலும் நிகில் ஹேண்ட்சம் மட்டுமல்ல, மிகவும் மரியாதையான தோற்றத்துடன் இருந்தான்.. கூடவே கண்களில் ஒரு ரசிப்புத் தன்மையும், ஒரு குறும்பும் மட்டுமே, தவறான பார்வை இல்லை.  

ஒரு இன்முகத்தோடே, “என்னோட கன்னம் வர வர என்கிட்டே பெர்மிஷன் கேட்கறதே இல்லை, அதை கண்டிச்சு வைக்கிறேன்” என்று சொல்லி விலக,

அந்த பதிலில் ஒரு விரிந்த புன்னகையை முகத்தில் தவள விட்டவன், “நல்ல பதில், ஆனா உன்னோட கன்னத்தை விட உன்னோட இதழ்கள் பெர்மிஷன் கேட்காம இருந்தா ரொம்ப சந்தோஷப் படுவேன்” என்று சற்றும் சிரிக்காமல் ஆனால் கண்களில் மட்டும் குறும்பைக் காட்டி சொல்ல,

“கன்னத்தையாவது நான் கண்டிப்பேன், ஆனா என்னோட இதழ்களை எனக்கு நிச்சயமான மாப்பிள்ளை கண்டிப்பார். அதுதான் யோசிக்கறேன்!” என்று சொல்ல,

இந்த முறை நிகில் வாய் விட்டு சிரித்தான்.

அதையும் புன்னகையோடு ஏற்ற அந்த விமானப் பணிப்பெண், “எனி மோர் ஹெல்ப் சர்” என,

“வேண்டாம்!” என்பது போலத் தலையசைத்தவன், “ஐ அம் நிகில், நைஸ் மீட்டிங் யு, என்னோட வாழ்க்கையில  இருந்த ஒரு பொண்ணு கூட இப்படி தான் நான் எப்படி மடக்கினாலும் திரும்ப பதில் சொல்லுவா, இந்த மாதிரி எவ்வளவு நான் டென்ஷன் குடுத்தாலும், பதில் சொல்லிட்டு ஈசியா போயிட்டே இருப்பா, எங்கயோ நீ அவளை எனக்கு ஞாபகப் படுத்தற!” என்றான்.

“இருந்தா மீன்ஸ்?” என அவள் இழுக்க,

“இப்போ என் ஃலைப்ல இல்லை” என்றான்.

“ஓஹ், இன்னும் உங்க நினைவில் இருக்காங்களா?”

“மறக்க நினைச்சாலும் முடியலை!” என்று சொல்ல,

“அப்போ சேர்ந்திடுங்க!”

“ஹ, ஹ, அது முடியாது! கூட இருந்தோம் உயிரை எடுத்துடுவா, அவளை தவிர எந்த ஞாபகமுமே இருக்காது எனக்கு. அதனால தான் பிரிஞ்சிட்டேன், நான் நானா இருக்க…” என்று சொல்லி  ஒரு சோர்ந்த புன்னகையை முகத்தில் தவழ விட்டு மீண்டும் உறங்க எத்தனிக்க,

“இன்னும் அரை மணிநேரம், லேண்ட் ஆகிடுவோம்!”

“இன்னும் அரை மணிநேரம் இருக்கு!” என்று அவன் சொல்லவும், புன்னகையோடு அடுத்த பயணியை கவனிக்க அவள் செல்ல,

கண்களை மூடி உறங்க எத்தனித்தான் நிகில் வரதராஜன். நிகில் அவனின் பெயர், வரதராஜன் அவனின் தந்தை, அவனின் பிறப்பு வளர்ப்பு எல்லாம் அமெரிக்காவில், இந்திய தாய் தந்தைக்கு பிறந்தாலும், அங்கே பிறந்ததினால் அவன் அமெரிக்க பிரஜை, அமெரிக்க பிரஜை மட்டுமல்ல, அந்தக் கலாச்சாரமும்  அவனின் உணர்வுகளில் கலந்து விட்ட ஒன்று கூட.

அதன் தாக்கங்கள் அவனிடம் அதிகம். அதனால் பெற்றோர்கள் நமது கலாச்சாரத்தை அவனிடம் சொல்லி அதன் வழி நடக்க சொல்லும் போது, “என்ன ஹம்பக் இது, இது எப்படி முடியும்? ஐ அம் நாட் திஸ் மேக்!” என்று விலகிவிடுவான்.

எப்போதோ சிறு வயதாக இருந்த போது பெற்றோருடன் இந்தியா பயணப்பட்டு இருக்கின்றான். பதினைந்து வயதிற்கு மேல் இந்தியா அவனை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனால் பெற்றோரும் அவனின் சிறு தங்கையும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்தியா தவறாமல் இதுவரை வந்தாலும், அவன் வந்தது இல்லை. அதுவும் அவனின் அம்மா காவ்யா முடிந்தவரை வருடத்திற்கு ஒரு முறை தன் பயணம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.

இப்போது முப்பத்தி மூன்று வயதை தாண்ட இருக்கும் இளம் மருத்துவன் அவன். அவனை விட ஏழு வயது சிறிய தங்கை ஸ்மிருதிக்கு திருமணம், இந்தியாவில், சென்னையில், அதன் பொருட்டே கிட்ட தட்ட பதினேழு வருடத்திற்கு பின் அவனின் இந்தியப் பயணம்.

“நீ வரவில்லை என்றால் மணமகளாய் நிற்க மாட்டேன்” என்று ஸ்மிருதி பிடிவாதமாய் சொல்லி இருக்க,

“ஹேய், இப்படி எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணக் கூடாது.. வாட் இஸ் திஸ், நீ இங்க வரும் போது நான் பார்த்துக்கறேன், இதுக்காக ஃபிப்டீன் டேஸ் வேஸ்ட் பண்ண முடியுமா, யோசிச்சுப்பார், ஐ ஹேவ் காட் மை பேஷண்ட்ஸ்!”

“இட்ஸ் ஓகே நிக், அது உன் இஷ்டம், பட் தென் ஐ வோன்ட் கெட் மேரீட்!” என்றாள் ஸ்திரமாக. அம்மாவும் அப்பாவும் அப்படி தான் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து இருந்தனர்.

அம்மாவும் அப்பாவும் பார்த்து நிற்க “ஓகே! புக் தி டிக்கெட்ஸ், பட் லாஸ்ட் மினிட் என்ன பண்ணுவேன்னு தெரியாது!” என,

“யு ஆர் கமிங் அண்ட் தட்ஸ் பைனல்!” என்றாள் ஸ்மிருதி.

“யு ஆர் ஃபோர்சிங் மீ!”

“எஸ்! ஐ அம்!” என்று கத்தி சென்றாள்.

அதன் பிறகு அவனிடம் பேசவில்லை, அதன் பொருட்டே இப்போது இந்த பயணம், கூடவே மனதில் ஒரு ஓரத்தில் ஒரு சின்ன ஆசை எங்கேயாவது அவள் தென்படுவாளா என்று.

இரு வருடங்கள், அவளோடு நகமும் சதையுமாய் இருந்த வருடங்கள் நீங்கா நெஞ்சின் நினைவுகள், அப்படி ஒரு காலம் எப்போதும் வராது, உடலின் ஒவ்வொரு அணுவும் அந்த நாட்களுக்கு ஏங்கியது. ஆனால் இனி முடியாது, யாரோடேனும் திருமணம் ஆகியிருக்க கூடும். அந்த சந்தோஷங்கள், அந்த இரவுகள் மட்டுமல்ல, அந்த பகல்களும், எல்லாம் வேண்டும் என்றது.

“ஹேய் நிக், வாட் ஹேப்பன்ட், ஸ்டே டியூன்ட் வித் யுவர் ப்ரெசென்ட், நீ இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவில் இறங்கப் போகின்றாய். பெண்களை மிகவும் மரியாதையாக பார்க்கும் நாடு என்று உனக்கு சொல்லப்பட்டிருகின்றது. நீயும் அப்படி தான் அவர்களை பார்க்க வேண்டும். அதனால் அவளைப் பார்த்து தேவையில்லாமல் எதுவும் சிக்கலாக்கி விடாதே அவளின் வாழ்க்கையில்”  

“ஹேய், நான் அப்படி தான் பார்ப்பேன், என் பார்வை மாற்றங்கள் அழகிய பெண்களிடம் இருந்தாலும் அவள் முற்றிலும் வேறு, என்னை பார்வை மாற்றத்தோடு பார்த்தவள், அவள் தானே!” என நினைவு ஓட,

“என்னவோ உனக்கு ஆகிவிட்டதடா இன்று!” என இந்திய மண்ணில் கால் பதித்தான்.

நிகில் அவனின் லக்கேஜ்களுக்காக காத்திருந்த சமயம், “ஹல்லோ சர், ஐ அம் அபிமன்யு!” என ஒரு இளைஞன் தேடி வர, “அபிமன்யு எங்கேயே கேட்டிருக்கிறோம், எங்கே?” என்று யோசித்தபடி இருந்தாலும், “ஐ அம் நிக்” என,

“நிக் மீன்ஸ் நிகில், ரைட்!” என்றவன், “வெல்கம் டு சென்னை, உங்க தங்கை தான் வர்ற மாதிரி இருந்தாங்க, அவங்களுக்கு திடீர்னு ப்ரோக்ராம் என்னை அனுப்பினாங்க!”

“அவங்க மீன்ஸ் அவங்களும் என் அண்ணனும், என்னோட கசின் பிரதர் தான் மாப்பிள்ளை, என் அப்பாவோட தம்பி பையன்” என,

திடீரென்று குவிந்த இந்த உறவுகளின் அடையாளங்களில் தடுமாறியவன், “வில் லெர்ன் ஸ்லோலி!” என்று புன்னகைத்தான் நிகில்.

திரும்ப லகேஜ் கலெக்ட் செய்து அவர்கள் வெளியே வர, காருடன் டிரைவர் நிற்க அவர்களின் அபார்ட்மென்ட் நோக்கி கார் விரைந்தது.

ஆம்! திருமணதிற்காக மணமகன் வீட்டினர் அவர்களின் அபார்ட்மென்ட் ஒன்றை இவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்து இருந்தனர். நிகில் வேறு எதுவும் பேச்சுக் கொடுக்காததால் அபிமன்யுவும் அமைதியாக வந்தான்.

நிகிலுக்கு அபிமன்யுவுடன் பேசுவதை விட வெளியில் பார்க்க நிறைய இருந்தது. நாடு வேறு என்பதை விட மக்களே வேறு அல்லவா! ஆர்வமாய் நிகில் வெளியே பார்த்து வர, அபிமன்யு அதையும் விட ஆர்வமாய் நிகிலை பார்த்து வந்தான். அபிமன்யுவே உயரம் அதையும் விட உயரமாய் இருந்தான் நிகில், அந்த ஒரு நிறம், முகம், இந்தியன் என்று சொன்னாலும், அதையும் மீறி அவன் இந்திய வளர்ப்பு இல்லை என்பதை அவனின் நிறம், முகம், நடை, உடை, பாவனை, ஸ்டைல், எல்லாம் எடுத்துக் காட்டியது.  

நிகிலின் கவனத்தில் அபிமன்யுவின் பார்வை விழவில்லை. அவன் வெளியே வேடிக்கை பார்த்து இருந்தான். “இதுதானடா உன்னுடைய அடையாளம்!” என்பதாக,

அவனுடன் எப்போதும் இருக்கும், ஒரே இந்திய அடையாளம் அவனின் மொழி மட்டுமே. ஆம்! வீட்டில் தமிழ் வழக்கு பேச்சாக இருக்க, அவனிற்கும் தமிழ் வந்தது. அவனின் சிந்தனை மொழியாகவும் ஆகிப் போனது. ஆனாலும் உச்சரிப்பு.. தமிழ் உயிரோட்டமான பொருளானதால் தப்பியது! உயிருள்ள பொருளாகியிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கும்.

அக்ஷராவை நிகில் சந்தித்தும் அப்படி தான், “நீ தமிழ் பிறப்பை கொண்டு இருந்தா, தமிழை உனக்கு கொலை பண்ண அதிகாரம் குடுத்தாங்களா?” என்று தான் பார்த்த நாளே பேசிப் போனாள்.

அவர்கள் பார்த்துக் கொண்டது ஒரு இந்திய மாணவனின் பார்ட்டியில், அப்போதுதான் முதுகலை படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அங்கே வந்து ஒன்றிரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. அது ஒரு காமன் பார்ட்டி கூட… சோ ஃபிரண்ட்ஸ், அவர்களின் பிரண்ட்ஸ், என ஒரு செயின் ஆப் பீபுள் குழுமினர், அவனின் படிப்பிற்க்கும், இவளின் படிப்பிற்க்கும் சம்மந்தம் இல்லை.

ஆம்! இவன் மனிதர்களோடு! அவள் மிஷின்களோடு! இவன் டாக்டர், அவள் ரோபோடிக் இன்ஜினியரிங்!

நண்பர்களும் சம்மந்தம் இல்லை. ஆனாலும் எங்கேயோ ஈர்ப்பு விசை, மாய விசையாய் மாறி, எதிர் எதிர் துருவங்கள் என்பதால், காந்தமாய் இழுத்துக் கொண்டது. எதிர் எதிர் துருவங்கள் என்றாலும் ஒரே அலைவரிசை.     

அவளின் அலட்சியமான பேச்சு, அதுதான் நிகிலை திரும்பி பார்க்க வைத்தது, ஆனால் பின்னாளில் அவளே ஒத்துக் கொண்டு இருக்கின்றாள். “செம ஸ்மார்டா இருந்த, சில பிரண்ட்ஸ் உன்னை அநியாயத்துக்கு சைட் அடிச்சாங்க, அதுதான் உன்னை எப்படி திரும்ப பார்க்க வைக்கன்னு யோசிச்சேன்!”  

மிகவும் புத்திசாலி… சில சமயம் மிகுந்த புத்திசாலிகள் தான் எல்லாவற்றிக்கும் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்டு, அதை மாற்றினால் என்ன என யோசித்து.. இந்த நிலையற்ற வாழ்க்கையில் நிலையாய் சிலதை செய்ய முற்பட்டு..  தடம் புரண்டு.. நான் சென்ற பாதை இதுதான் என்று சொல்லிக் கொள்வர்.  

தன்னோடு இருந்தவள் என்பதாலா? அவள் சென்னை பெண் என்பதாலா? சென்னை நெருங்கும் சமயம் அவளின் நினைவுகள் ஆரம்பித்து, விமானத்தில் இருந்து அவன் தரையிறங்கி விட்டாலும் அவனின் நினைவுகள் தரை இறங்கவில்லை.  

நீண்ட பயணம் தான் விமான நிலையதில் இருந்து, கிட்ட தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேல் பயணம்.

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்!” என்றான் அபிமன்யுவை பார்த்து.

“இன்னும் ஒரு பத்து நிமிஷம்!”

“என்ன பண்ற நீ?”

“நான் இப்போ தான் எம் சி ஹெச், கார்டியாலஜி முடிச்சேன்!” என்று அவன் சொல்ல,

“நீயும் டாக்டரா, நைஸ் டு நோ திஸ்!”  

“என் அப்பா அம்மாவும் கூட டாக்டர்ஸ், அண்ட் குடும்பத்துல நிறைய பேர் இருக்காங்க!” என்றான்.

அவர்களின் இடம் வந்துவிட, நிகில் வீட்டினர் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் அழைத்து சென்றான். அது ஒரு டூ பெட் ரூம் அபார்ட்மென்ட், “சின்ன ஸ்பேஸ் , எப்படி பதினைந்து நாட்கள் இருக்க முடியும்” என்பது தான் அவனின் யோசனை.

“இந்த டாட் என்ன பண்றார், இந்த மாம் கூட..” என்று யோசித்தான், அவன் பெற்றவர்களின் நிழலை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

அக்ஷராவோடு சேர்ந்து வசிக்க ஆரம்பித்த போது வெளியே வந்தவன் தான், அதன் பிறகு இதுவரை தனியே தான். வீடு செல்லவில்லை. மிகச் சிறிது தூரமே! ஆனாலும் அவனின் ஜாகை தனியே தான்.

நிகிலுக்கு தன்னுடன் பேச அதிகம் ஆர்வம் இல்லாததை புரிந்த அபிமன்யு, “ஓகே, நான் கிளம்பட்டுமா, எனக்கு வேலை இருக்கு, ஐ நீட் டு மூவ்!” என்று சொல்ல,

“ஓஹ், பைன்! யு கேரி ஆன்!” என்று சம்ப்ரதாயமாக சொல்லி, “எனி ஐடியா எங்க போயிருக்காங்க, மை மாம் அண்ட் டாட்”  

“அவங்க திருப்பதி போயிருக்காங்க திருக்கல்யாண உற்சவம்க்கு, அண்ணி போகற மாதிரி இல்லை, இப்போ திடீர்ன்னு அண்ணியும் அண்ணாவும் கிளம்பிப் போயிருக்காங்க!”

“யார் அண்ணி?” என்றான்.

“உங்க சிஸ்டர், ஸ்மிருதி”  

“ஓஹ் தட்ஸ் ரைட்” என்றான்.   

“நீங்க போக இஷ்டப்பட்டா அர்ரேஞ் பண்றேன்!” என்றவனிடம்,

“நோ, ஐ அம் நாட் இன்ட்ரஸ்டட்!” என்றான்.

“ஃபார் எனி ஹெல்ப், திஸ் இஸ் மை நம்பர், கூப்பிடுங்க!” என்று சொல்லி, அவன் தொலைபேசி எண் இருந்த அவனின் கார்ட் கொடுக்க,

வாங்கிக் கொண்டவன் அவன் அந்தப் புறம் சென்றதும், “எனக்கு என்ன ஹெல்ப் தேவை!” என்று அந்த கார்டை அங்கே இருந்த டேபிள் மேல் எரிந்து, வீட்டை சுற்றி பார்வை ஓட்டினான்.

எப்படி நான் இங்கே இன்னும் பதினைந்து நாள் இருப்பேன் என்று அவ்வளவு கவலையாக இருந்தது.