அத்தியாயம் – 9
மூன்று மாதத்திற்கு பின்…
லண்டனில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்து பின் அங்கிருந்து பெங்களூர் செல்லும் விமானம் பிடித்து வந்திருந்தான் அவன்.
விமான நிலையத்தில் இருந்து அவன் உடைமைகளை செக்அவுட் செய்து வெளியில் வர கரிகாலனும் கண்மணியும் நிற்க அவர்களுக்கு கையசைத்தான் அவன்.
“ஏங்க அங்க வர்றாங்க!!” என்று கணவரின் தோள் தட்டி சொன்னவர் மகனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மகனை வெகு நாட்களுக்கு பின் பார்க்கிறார் அந்த சந்தோசம் அவர் முகத்தில் அப்பட்டமாய்.
அவனும் வேகமாய் வந்திருந்தவன் அன்னையை மெதுவாய் அணைத்துக் கொண்டான்.
“எப்படிம்மா இருக்கீங்க?? அப்பா எப்படி இருக்கீங்க??” என்றவாறே அருகில் வந்தவரையும் சேர்த்து கொண்டான்.
“நல்லாயிருக்கோம்ப்பா… நீ எப்படி இருக்கே?? ஆளே இளைச்சு போன மாதிரி தெரியறே!!” என்றார் அன்னை கவலையாக.
“ஆமாப்பா சரியா சாப்பிடுறது இல்லையா?? ஆனா நல்ல கலர் ஆகிட்டப்பா” என்று தந்தை சொல்ல அவன் சிரித்தான்.
“சும்மா ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஓட்டுறீங்களா!! நான் அப்படியே தான் இருக்கேன்”
“சரி வாப்பா வீட்டில போய் பேசிக்கலாம்… கண்மணி நம்ம புள்ளை இனி இங்க தான் இருக்க போறான். அங்க போய் பார்த்துக்கலாம்” என்று மகனுக்கும் மனைவிக்குமாய் சொன்னவர் அவன் உடைமைகள் ஒன்றிரண்டை தூக்கிக் கொண்டார்.
“அப்பா வைங்கப்பா நான் தூக்கிக்க மாட்டேனா!!” என்றவன் அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு அதை தள்ளிக்கொண்டே வந்தான்.
ஒருவழியாய் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர இரண்டு மணி நேரம் ஆனது. விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு இருக்கும் கிருஷ்ணராஜபுரதிற்கு வருவதற்கு தான் அவ்வளவு நேரமே.
“அம்மா எனக்கு பயங்கரமா தூக்கம் வருதும்மா… ஆனா பசிக்கவும் பசிக்குது. நான் குளிச்சுட்டு வர்றேன் எனக்கு டிபன் மட்டும் எடுத்து வைங்க” என்றுவிட்டு அவன் அறைக்குள் சென்று மறைந்தான்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“விடு கண்மணி அவனா கேட்கட்டும். நீயா எதுவும் ஆரம்பிக்காதே!! இப்போ தான் ஊர்ல இருந்து வந்திருக்கான், பார்ப்போம்” என்றுவிட்டு அவர் அலுவலகம் செல்ல தயாரானார்.
தந்தையும் மகனுமாய் ஒரே நேரத்தில் உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தனர்.
“கண்மணி நீ இன்னைக்கு காலேஜ்க்கு லீவு போட்டிருக்கே தானே!!”
“ஆமாங்க!! இதென்ன கேள்வி!! எவ்வளவு நாள் கழிச்சு இவன் இப்போ தான் வீட்டுக்கு வர்றான். இப்போ போய் நான் காலேஜ் போவேனா என்ன!!”
“ஒரு பேச்சுக்கு தான்ம்மா கேட்டேன். சரி சரி எனக்கு டிபன் வை, நான் ஆபீஸ் கிளம்புறேன்”
“ஏன்பா நீங்க லீவு போட முடியாதா??”
“இல்லைப்பா எனக்கு கொஞ்சம் ஆடிட்டிங் நடக்குது ஆபீஸ்ல. நான் கண்டிப்பா அங்க இருந்தே ஆகணும். அதான் அம்மா உன் கூடவே இருப்பாளே…”
“நான் ஈவினிங் சீக்கிரம் வந்திடறேன் ஓகே வா!!”
“ஹ்ம்ம் சரிப்பா!!” என்றவன் அமைதியாய் சாப்பிட்டு எழுந்திருந்தான். அவன் எதுவாவது பேசுவான் என்று பெற்றோர் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எங்கே அவன் வாயை திறப்பதாய் காணோம். கண்மணியே பேச்சை ஆரம்பித்தார். “நாம இந்த வாரம் திருச்சிக்கு போயிட்டு வருவோமாப்பா”
“இப்போ எதுக்கும்மா அங்க??”
“போகலைன்னா மரியாதையா இருக்காதுப்பா”
கரிகாலன் அவர்கள் பேச்சின் குறுக்கே வரவேயில்லை. இருவரும் பேசட்டும் என்று அவர் சாப்பிட்டு கிளம்பி தயாராய் வந்தார்.
“நான் ஆபீஸ் கிளம்பறேன் கண்மணி, வர்றேன்ப்பா” என்று இருவருக்கும் தலையசைத்து அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அவனும் சாப்பிட்டவன் அவர் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் எழுந்துவிட்டிருந்தான்.
“அம்மா நான் போய் தூங்கறேன்” என்று அவன் அறைக்குள் சென்று மறைந்தான்.
கண்மணிக்கு தான் என்ன செய்வது என்றே புரியவில்லை.
ஊருக்கு சென்றவன் திரும்பி வந்ததற்கு சந்தோசப்படுவதா இல்லை நடப்பதை நினைத்து வருந்துவதா என்றிருந்தது அவருக்கு.
செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது வருந்தி எந்த பயனும் இல்லை என்று அவர் அறிந்திருந்தாலும் அவரால் கவலைக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
அவன் எழும்போது மாலையாகியிருந்தது. அவனுக்கு பிடித்த இஞ்சி ஏலக்காய் தட்டி போட்ட தேநீரை கொடுத்தார்.
கப்பை நாசிக்கருகே கொண்டு சென்று அதன் மணத்தை உள்ளே நிறைத்தான். மிதமான குளிர் உடலை தீண்ட சூடான தேநீர் இதமாயிருந்தது.
“நைட்க்கு என்னப்பா செய்யட்டும்??”
“நைட் கதையை அப்புறம் பார்க்கலாம். இப்படி வந்து உட்காருங்க…”
அவனருகில் வந்து அமர்ந்தவர் அவனை என்னவென்று பார்க்க அவன் பதிலுக்கு அதே பார்வை பார்த்தான்.
“ஹ்ம்ம் சொல்லுங்கம்மா…” என்று அவனே ஆரம்பித்துவிட்டான்.
“என்னப்பா சொல்ல??”
“என்ன நடந்துச்சுன்னு இப்போ முழுசா சொல்லுங்க?? நான் அங்க இருந்தேன்னு பாதி சொல்லியும் சொல்லாம விட்டது எல்லாம் மறைக்காம இப்போ சொல்லுங்க” என்றிருந்தான் அவன்.
“மகிழ்!!”
“நான் தான்மா கேக்குறேன் சொல்லுங்க” என்றவன் யாழ்வேந்தனுடன் பிறந்த மற்றொருவன் மகிழ்வேந்தன் அவன்.
“என்ன பிரச்சனை?? அவன் எதுக்கு இப்போ ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு டெல்லிக்கு போனான்??”
“போன் பண்ணா பேசுறான். ஆனா எந்த கேள்வி கேட்டாலும் வாயே திறக்க மாட்டேங்குறான் என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன் மனசுலன்னு எனக்கு தெரியலை??”
மகிழும் யாழ்வேந்தனும் இரட்டையர்கள். இருவருமே படிப்பில் படுசுட்டி, படிப்பும் ஒரே படிப்பை தேர்ந்தெடுத்து படித்தனர்.
ஒரே நிறுவனத்தில் இருவருக்கும் வேலை கிடைக்க இருவருமே ஒன்றாய் சென்னையில் தானிருந்தனர்.
அவர்களின் நண்பர்கள் கூட கிண்டல் செய்வர் அவர்களை பார்த்து. “டேய் என்னமோ ஒட்டிப் பிறந்த ரெட்டை போல ஓவரா பண்ணுறீங்களேடா” என்று.
சிலர் அவர்களை இரட்டைக்கிளவி என்று கூட அழைப்பர். இருவருமே அதற்கெல்லாம் கவலையேப்பட மாட்டார்கள்.
இருவருக்கும் தனித்தனியாய் நண்பர்கள் இருந்தாலும் அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் நட்பாய் தானிருப்பர்.
மகிழை விட யாழ்வேந்தன் இன்னமும் சுறுசுறுப்பாயும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பதிலும் ஆர்வமதிகம் அவனுக்கு.
அதனால் வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவன் அடுத்தடுத்த பதவிக்கு சென்றுக் கொண்டிருந்தான். மகிழ் சற்றே நிதானம் தான், ஆனால் திறம்பட செய்பவன் தான் அவனும்.
ஒரு வருடத்திற்கு முன்னால் தான் அவன் வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு வந்தது. செல்ல மாட்டேன் என்றவனை வம்படியாய் பிடித்து ஊருக்கு அனுப்பி வைத்தவன் வேந்தன் தான்.
மகிழுக்கு அது ஒரு அறிய வாய்ப்பு என்று சொல்லி கற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் நெறைய உள்ளது என்று பேசி பேசி கரைத்து அவனும் ஊருக்கு சென்றான்.
இதோ ஒரு வருடம் கழித்து தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறான். அதற்குள் இங்கு என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது.
நடந்ததை ஓரளவிற்கு அன்னையின் வாயிலாக அறிந்திருந்தாலும் முழுமையாய் அறியாத காரணத்தினால் கேட்டுக் கொண்டிருந்தான்.
கண்மணி ஒன்றுவிடாமல் அவருக்கு தெரிந்த வகையில் அனைத்தும் சொல்லி முடிக்க சற்று நேரம் கனத்த அமைதி அங்கு.
“என்ன மகிழ் எதுவும் பேச மாட்டேங்குறே?? வேந்தன் பண்ணது தப்பு தானே!!”
“தப்பு தான்ம்மா…”
“அவனுக்கு எங்க மேல தான் கோவம். நாங்க புரிஞ்சுக்கலைன்னு. நீயே சொல்லு மகிழ் அது ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி நாம அதுல விளையாட முடியும் சொல்லு”
“பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் ஆகி வர்றேன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இப்போ என்னடான்னா எனக்கென்னன்னு டெல்லில போய் உட்கார்ந்திருக்கான்”
“ஏம்மா நீங்க போய் அவனை டெல்லில பார்த்தீங்களா??”
“ஹ்ம்ம் ஒரு முறை போய் பார்த்தோம்”
“எப்படியிருக்கான்??”
“ஆளே வாடி போயிருக்கான். எது கேட்டாலும் சரியாவே பேசுறதில்லை?? எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை மகிழ்”
“நீ அவன்கிட்ட பேசுப்பா. நீ சொன்னா அவன் கேட்பான். அவனை இங்கவே வரச்சொல்லு”
“எதுக்கும்மா இங்க வரச்சொல்லணும்??” என்றான் நிதானமாய்.
“என்ன மகிழ் இப்படி கேட்குறே??”
“தெரிஞ்சுக்க தான்மா கேட்குறேன். எதுக்கு வரச்சொல்லணும்”
“மகிழ்!!”
“அவன் பண்ணது தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா எல்லாருமா சேர்ந்து அவனை எதுக்கு குத்திக்காட்டறீங்க!!”
“அது தப்பில்லையா?? அவன் எல்லா விஷயத்துலயும் பொறுமையா போறவன் தானே. இதுல மட்டும் ஏன் அவசரப்பட்டான்னு நீங்க ஏன்மா யோசிக்கலை”
“உங்க விஷயத்துல அவன் எப்பவும் அவனா இருக்க மாட்டான் அது உங்களுக்கே தெரியும்”
“உங்களை வேணாம்ன்னு சொன்னவங்க வீட்டுக்கு போகக் கூடாதுன்னு தானே அப்பா ஊருக்கு போகும் போது அவன் எப்பவும் வரமாட்டான். நான் மட்டும் தானே அப்பாவோட போயிருக்கேன்”
“அப்படி இருக்கும் போது எல்லா தப்பையும் அவன் மேலவே திணிச்சா என்னம்மா அர்த்தம்”
“மகிழ் அப்போ எல்லா தப்புக்கும் நான் தான் காரணம்ன்னு சொல்றியா??” என்றவருக்கு கண்ணில் மளமளவென்று கண்ணீர் வழிந்துவிட்டது.
“அம்மா… அம்மா… இங்க பாருங்க உங்களை நான் தப்பு சொல்லலை. நடந்ததுக்கு மொத்தமா அவனையே பலியாக்காதீங்கன்னு தான் சொல்றேன்”
“அந்த பொண்ணு எங்க இப்போ??”
“அவங்க வீட்டில இருக்கா!!”
“எதுக்கும்மா அங்க இருக்கணும்?? இங்க கூட்டிட்டு வர்றது தானே முறை”
“மகிழ் நீ புரிஞ்சு தான் பேசறியா!! அந்த பொண்ணை நாம எப்படிப்பா கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வர முடியும்”
“அதுவும் இல்லாம அவ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் உடன்படுறேன்னு அவகிட்ட சொல்லியிருக்கேன் நானு”
“அப்போ அவளுக்கு இவனை பிடிக்கலைன்னு சொன்னா அப்படியே விட்டிருவீங்களாம்மா நீங்க!!”
“மகிழ்”
“போங்கம்மா எனக்கு பயங்கர கோபம் வருது உங்க மேலயும் அப்பா மேலயும். நீங்க ஊருக்கெல்லாம் பாடம் எடுக்கறீங்க, பெத்த பிள்ளை மனசு புரியாம இருக்கீங்களேம்மா”
“தப்பு செஞ்சா ஓகே. அதை நீங்க கண்டிச்சதும் கூட சரி தான். ஆனா வாத்தியார் நீங்க அடுத்து என்ன பண்ணியிருக்கணும்மா…”
“நான் என்ன பண்ணியிருக்கணும் நீ சொல்றே மகிழ்??”
“தப்பை கரெக்ட் பண்ணியிருக்க வேணாமா நீங்க…”
“மகிழ்…”
“ஆமாமா சரி பண்ணியிருக்கணும் நீங்க…” என்று அழுத்திச் சொன்னான் அவன்.
“என்னப்பா சொல்றே?? அந்த பொண்ணுக்கு என்ன இஷ்டம்ன்னு தெரியாம எப்படி சரி பண்ணுறது” என்று கேள்வியாய் பார்த்தார் மகனை.
“யாழ் அவனுக்கு பிடிக்காம ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டியிருப்பான்னு நினைக்கறீங்களா”
“அந்த பொண்ணுக்கு பிடிக்காம தானே கட்டினான்” வாதம் செய்தார் அன்னை.
“அவனுக்கு பிடிக்காம அதை அவன் செய்யலை. அது உங்களுக்கு ஏன் புரியலைமா!!”
“சரி இப்போ எனக்கு கல்யாணம் பேசியிருக்கிட்டு இருக்கீங்க!! இவனும் உங்க புள்ளை தானே அவனை பத்தி நீங்க என்ன யோசிச்சு வைச்சிருக்கீங்க??” என்று கேள்வியாய் கேட்டு அவரை திணறடித்தான்.
“அப்போ நான் உனக்கு பொண்ணு பார்க்கறது பிடிக்கலைன்னு சொல்றியா”
“அம்மா நான் சொல்ல வர்றதை சரியா புரிஞ்சுக்கோங்க. நீங்க எப்போ இப்படி மாறினீங்கன்னு எனக்கு தெரியலைம்மா. அந்த பொண்ணோட மனசைப்பத்தி யோசிச்சு உங்க புள்ளையோட மனசை தெரிஞ்சுக்காம விட்டுடீங்களேம்மா!!”
“அவங்களுக்கு இப்போ வேற கல்யாணம் பண்ண போறாங்களா அவங்க வீட்டில?? இல்லை அவங்க யாரையாச்சும் லவ் பண்றாங்களா??”
இல்லையென்று தலையசைத்தார் கண்மணி. “அப்புறம் என்னம்மா பிரச்சனை அவங்களை இங்க கூட்டிட்டு வர்றதுக்கு??”
“அது… அது எப்படி மகிழ் நான் கேட்க முடியும். நம்மகிட்ட தப்பை வைச்சுக்கிட்டு அப்படி உரிமையா எதுவுமே நடக்காத போல பேச முடியுமாப்பா??”
“அப்போ யாருமே அவங்களை பத்தி பேசவேயில்லையா??”
“இல்லை”
“இதுக்கு மேல உங்ககிட்ட பேசுறது வேஸ்ட்!! இனி என்ன பண்ணுறதுன்னு நான் யாழ்கிட்டவே பேசிக்கறேன” என்றவன் எழுந்துவிட்டான்.
“மகிழ்!! நான் என்ன பண்ணணும்ன்னு சொல்லுப்பா!!”
“நீங்க செய்ய மாட்டீங்கம்மா நான் பார்த்துக்கறேன்”
“மகிழ் ஏன்டா இப்படி பண்ணுறே??” என்று அவர் அழ ஆரம்பிக்கவும் “அம்மா அப்போ நீங்க போய் அத்தைகிட்ட பேசுங்க”
“அடுத்து என்னன்னு நாம பார்க்க வேணாமா?? அவங்களோட ஐடியா என்னன்னு தெரிஞ்சா தான் அடுத்து என்னன்னு யோசிக்க முடியும்”
“மூணு மாசம் ஆகிப்போச்சு எந்த ஸ்டெப்பும் எடுக்காம இருந்தா என்னம்மா அர்த்தம்”
“இப்போவே ரொம்ப லேட், என் கல்யாணத்துக்குள்ள அவங்க ஒண்ணாயிருக்கணும்மா அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“அவங்களும் பேசலை நீங்களும் பேசலைன்னா இதுக்கு என்ன தான் முடிவு”
“சரிப்பா நானும் அப்பாவும் ஊருக்கு போறோம். அவங்ககிட்ட நேர்ல போய் பார்த்து பேசுறோம்…” என்றார் கண்மணி.
கண்மணிக்கும் ஆசை தான் முல்லையை அழைத்து வர ஆனால் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமே அவருக்கு.
இவ்வளவு நாளாய் அதை யோசித்து தான் பேசாமலிருந்தார். மகிழ் சொல்வது போல் இனி அப்படியே இருந்தால் சரிவராது என்று புரிந்தது.
வேந்தன் திருச்சியில் இருந்து கிளம்பிய அன்று பேசியதும் மகிழ் அவனை பற்றி சொன்னதும் அவர் மனதில் தோன்றியிருந்த சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகிப் போனது அவருக்கு.
வேந்தன் முல்லையை விரும்பியே திருமணம் செய்திருக்கிறான் என்பது அவருக்கு கொஞ்சம் மகிழ்ச்சி தான், உடன் வருத்தமுமே.
முல்லைக்கு அவனை பிடிக்கவேண்டுமே!! இருவரும் ஒன்று சேர வேண்டுமே!! என்ற கவலை பிடித்துக் கொண்டது அவரை.
மகிழ் அவர் நினைவை கலைக்கும் விதமாய் “அம்மா நானும் யாழை பார்க்க ஊருக்கு போறேன்ம்மா… அவன்கிட்ட பேசறேன்மா!!” என்றிருந்தான்.
“ஹ்ம்ம் சரிப்பா போயிட்டு வா!! எப்போ போகப் போறே??”
“நான் பிளைட் டிக்கெட் புக் பண்ணுறேன் இப்போ… நாளைக்கே கிளம்புறேன்”
மகன் பிளைட்டில் கிளம்புகிறேன் என்றதும் கண்மணிக்கு வேந்தனிடம் அவர் செய்த வாதமே ஞாபகத்திற்கு வந்து மனதை வருத்தியது இப்போது.
வேந்தனை அதிகம் காயப்படுத்தி விட்டோமோ!! என்று எண்ணியவர் அவனுக்கு போன் செய்து பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
மகிழ் மறுநாள் மாலை பிளைட்டில் கிளம்பியிருந்தான். இதோ டெல்லிக்கு வந்து சேர்ந்துவிட்டான். வேந்தனுக்கு அழைக்க அவன் கைபேசி அடித்துக் கொண்டேயிருந்தது….