அத்தியாயம் – 7
வதனாவை தேடி வந்தான் ராம். அவள் அறையில் கட்டிலில் அமர்ந்துகொண்டு ஏதோ யோசனையாய் இருந்தது கண்ணில் விழுந்தது அவனுக்கு.
“என்ன மேடம்?? தீவிர சிந்தனையில இருக்க மாதிரி இருக்கு??” என்றான் அவள் எண்ணத்தை கலைக்கும் பொருட்டு.
“நீ ஏன் அப்படி சொன்னே??” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.
“எப்படி??”
“அவன்கிட்ட சொன்னியே அதை தான் கேட்குறேன்” என்றவளுக்கு ராம் சொன்னதை சொல்ல வாய் வரவில்லை.
“என் பொண்டாட்டின்னு சொன்னதா” என்று உடைத்தே சொன்னானவன்.
“ஆமா ஏன் ராம்?? எதுக்கு இப்படி பேசினே??”
“நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே!!”
“ராம்…” என்று கத்தினாள்.
“ஏய் இப்போ எதுக்கு கத்துறே?? கூல் கூல் பேபி… நான் நிஜமாவே அவன் பொண்டாட்டியை சொல்லவே இல்லை. என்னோட பொண்டாட்டியை பத்தி தான் சொன்னேன்”
“ராம் நான் ஒண்ணும் சின்ன குழந்தையில்லை நீ சொல்றது எல்லாம் நம்புறதுக்கு”
“நம்ப மாட்டியா” என்றவன் “சுகுணா” என்றழைத்தான்.
அடுத்த இரண்டே நிமிடத்தில் அவள் அங்கிருந்தாள். “சுகுணா நான் அவன்கிட்ட பொண்டாட்டின்னு சொன்னது உன்னைப்பத்தி தானே!! சொல்லு இவகிட்ட நம்ப மாட்டேங்குறா”
“என்னாச்சு வதனா??”
“இவன் இவன் சொல்றது உண்மையா!!”
“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு. அவர் வந்திருக்கார்ன்னு சொன்னதும் நான் அவரை பார்க்கணும்ன்னு இவர்கிட்ட கேட்டேன்”
“இப்போ பார்க்க வேணாம்ன்னு சொன்னார். நான் அதைக்கேட்காம மாடியில இருந்து எட்டிப்பார்த்தேன். அதே நேரத்துல தான் நீங்களும் பார்த்தீங்க போல”
“என்னைத்தான் உள்ள போடின்னு திட்டினாரு. இப்போ நம்புறீங்களா நீங்க!!”
“ஏன் சுகுணா இவன் என்ன சொன்னாலும் அப்படியே நீங்க நம்புவீங்களா”
“அவன் பொய் சொல்றான்….”
“வதனா உங்களுக்கு பதில் சொன்னது நானு. என்னை நீங்க நம்பலையா!!”
“வேணும்ன்னா இப்படி வைச்சுக்கலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க ட்ரை பண்ணியிருப்பார் இவர். என்னங்க நான் சரியா சொன்னேனா” என்று கணவனை பார்த்து புருவத்தை தூக்கிக் கேட்டாள்.
“யூவர் ஆல்வேஸ் ரைட் மை டியர்” என்றான்.
“புரிஞ்சுதா உனக்கு…” என்றான் இப்போது வதனாவை பார்த்து.
“என்ன விளையாட்டு விளையாடுறேன்னு எனக்கு தெரியலை. ஆனா என்னமோ பிளான் பண்ணிட்டேன்னு எனக்கு புரியுது” என்றாள் வதனா.
“ரொம்ப எல்லாம் யோசிக்காதே. இப்போ நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நான் அவன்கிட்ட என்ன சொன்னா உனக்கென்ன??”
“பாசம்… அப்படியே பொத்துக்கிட்டு வருது போல…”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” மறுத்தாள் அவள்.
“நிச்சயம் அப்படி தான்”
“இல்லை”
“அப்புறம் ஏன் எட்டிப்பார்த்தவ, உள்ள போகாம அப்படியே நின்னே!!”
“சுகும்மா நீ பார்த்தே தானே அவங்களை. என்னா சைட்டு!! என்னா சைட்டு!! காலேஜ்ல தான் ரெண்டும் இப்படி ஓவர் ரவுஸ் விட்டுச்சுன்னா இங்கயுமா”
“நான் ஒண்ணும் சைட் அடிக்கலைடா” என்று பல்லைக்கடித்தாள் அவள்.
“அப்புறம் என்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்ன்னு சொல்லணுமா!! என்ன பார்க்குறே, எங்களுக்கும் கம்பராமாயணம் கொஞ்சம் தெரியும்”
“நீ வந்து பார்க்கறதென்னமோ பதிலுக்கு அவர் ஒரு பார்வை. நீ பார்த்த பிறகு தான் என் சட்டையை பிடிச்சிருந்தவன் விட்டான்”
“இல்லைன்னா எனக்கு செம அடி விழிந்திருக்கும் தெரியுமா”
அவள் அதை உணர்ந்து தான் இருந்தாள். வதனாவை கண்டப்பின்னே தான் அவன் ராமை பிடித்திருந்த பிடியை விட்டான். அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை அவளுக்கு.
வாய் மூடி அமைதியாகிப் போனாள். இப்போ என்ன எதிர்பார்க்கறான் அவன் என்கிட்ட!! என்னைவிட்டு போனான் தானே, திரும்பவும் ஏன் வந்தான்.
இப்போ இவனால என் நிம்மதி போகுது. நான் கொஞ்சம் கொஞ்சமா என் இயல்புல இருந்து மாறிட்டு வர்றேன்.
சென்னையில தான் இவனை பார்த்து நிம்மதி இல்லைன்னு இங்க வந்தா இங்கயும் வந்து என் நிம்மதியை கெடுக்குறானே!! என்று எண்ணியவளுக்கு கண்ணை கரித்தது.
ராம் அவளின் முகபாவங்களை கண்டுக்கொண்டு தானிருந்தான். “ஹேய் என்னாச்சு வதனா” என்று அவன் கேட்டதும் “ராம் ஏன்டா இப்படி எல்லாம் நடக்குது எனக்கு மட்டும்…”
“நான் என்னடா பண்ணேன்” என்ற அவளின் தேய்ந்த குரல் எப்போதும் போல் அவனை அமைதியாக்கியது.
அவள் கெஞ்சி பேசுவது, மிஞ்சி பேசுவது எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்கும் ராமினால் அவளின் உருக்கும் குரலில் ராம் ஏன் இப்படி நடக்குது என்று கேட்டால் போதும் அவனுக்கு தாங்காது.
அவளை அணைத்து ஆறுதல் சொல்ல தோன்றினாலும் செய்யவில்லை அவன். மனைவிக்கு ஜாடை காட்ட அவள் தான் வதனாவை சமாதானம் செய்தாள்.
இந்த பத்து வருடமாக தான் ராமிற்கு வதனாவை நன்றாக தெரியும். அதற்கு முன்பு அவளை பார்த்திருக்கிறான் தான் ஆனால் அவளிடம் பேசியதில்லை.
அவன் இப்புறம் வந்தால் இவள் அப்புறம் செல்வாள். ஏனென்றால் வல்லவனுக்கு இவனைப் பிடிக்காதாம் அதனால் அவளுக்கும் பிடிக்காதாம்.
முதலில் அவள் அப்படி செல்லும் போது கோபமே வந்தது அவனுக்கு. அதுவே பின்னாளில் அவள் மேல் ஒரு ஈர்ப்பை கொடுத்தது அவனுக்கு.
ஒரு காலத்தில் அவளை ஆர்வமாய் கூட பார்த்திருக்கிறான். மனதில் அவள் மேல் துளிக்காதலும் அவனுக்குண்டு. அது அவன் மனைவி மட்டுமே அறிந்த ரகசியம்.
வல்லவனும் வதனாவும் விரும்புகிறார்கள் என்று தெரிந்த பின்னும் கூட அவனால் அவள் மேல் இருந்த அந்த எண்ணத்தை அப்போது விலக்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த பத்து வருடமாகத் தான் அவளிடம் பேசியிருக்கிறான், பழகியிருக்கிறான். இப்போது அவள் அவனின் உயிர் தோழி மட்டுமே.
திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி அந்த தோழமையை அவன் எப்போதும் கண்ணியமாய் தான் கட்டி காப்பாற்றி வந்திருக்கிறான்.
மனைவிக்கு தன் தோழமையை புரிய வைத்திருக்க இதோ அவள் அவனை புரிந்த நல்ல மனைவியாய் அவர்கள் நட்பை புரிந்தவளாய் இருக்கிறாள்.
“வதனா நீ மாறிட்டே!! பத்து வருஷம் முன்னாடி உன்னை எப்படி பார்த்தேனோ அப்படியே நீ மாறிட்ட!! உன்னோட அந்த கெத்து குறைஞ்சு போச்சு. திமிர் விட்டு போச்சு”
“மொத்தத்துல நீ நீயா இல்லை!! உன்னை அவன் தான் ஆட்டுவிக்கிறான்” என்று அவளை இயல்பாக்க அவளை தூண்டிவிட்டான்.
அவளோ படபடக்கும் பட்டாசாய் பொரிந்தாள். “நான் எப்பவும் போல தான் இருக்கேன். நீயா கற்பனை பண்ணிட்டு உளறாதே!!”
“இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இங்க வந்தீங்க. போங்க போய் உங்க வேலையை பாருங்க. உங்களுக்கு வேற வேலை இல்லையா”
“ராம் உனக்கு ஆபீஸ் போற எண்ணமில்லையா!! வீட்டுலவே எல்லா கிரானைட்ஸ் கல்லும் ஒட்டிக்கிட்டு இருக்க போறியா” என்று அவள் சொன்ன விதத்தில் லேசாய் சிரிப்பு வந்தது அவனுக்கு.
“சுகுணா இந்த லூசுக்கு போய் ஆறுதல் சொல்ல வந்தியே உன்னைச் சொல்லணும். நீ வா வந்து எனக்கு டிபன் வை நான் ஆபீஸ் கிளம்பறேன்”
“இவ எக்கேடு கேட்டா நமக்கென்ன நீ வா போவோம்” என்றவன் மனைவியை அங்கிருந்து தள்ளிக்கொண்டு நகர்ந்தான்.
“ஏங்க இப்படி அவங்களை அழவிடுறீங்க?? எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் வெளியில் வந்த அவன் மனைவி.
“எல்லாம் சரியாகிடும் விடு… நீ என்னை கவனி…” என்றவன் சாப்பிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.
இரவு வீட்டிற்கு வந்தவன் “மை டியர் ஹனி பேபிஸ் நாளைக்கு நாம அவுட்டிங் போறோம்” என்றான்.
“எங்க போறோம்ங்க??”
“அனந்தகிரி ஹில்ஸ் போகலாம், ஆன் தி வேல ஒஸ்மான் சாகர் டேம் பார்த்திட்டு அங்க போறோம். ஒன் டே ஸ்டே அங்க!! பசங்களுக்கும் நாளைக்கு லீவ் தானே”
“வதனாவும் வந்திருக்கா நாம ஜாலியா போயிட்டு வருவோமே. நீ டிரஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ ஒரு நாளைக்கு” என்று மனைவியிடம் சொன்னான்.
சரணுக்கு எங்கோ வெளியில் போகிறோம் என்றதுமே குஷியாகிவிட்டது. பிரியாவும் உடன் சேர்ந்து கொண்டு அந்த டிரஸ் போடுவேன் இந்த டிரஸ் போடுவேன் என்று குதித்துக் கொண்டிருந்தாள்.
வதனாவோ எனக்கென்ன என்பது போல் அமர்ந்திருந்தாள். “ஹேய் என்ன நீ எதுவும் சொல்லாம இருக்கே??”
அவளோ அப்போது தான் யோசனையில் இருந்து கலைந்தவள் “என்னடா என்ன சொன்னே??”
“எந்த லோகத்துல இருக்கே நீ??”
“ஹ்ம்ம் ஒண்ணுமில்லைடா…”
“நாளைக்கு அவுட்டிங் போகலாம்ன்னு சொன்னேன். உன் காதுல விழுந்துச்சா இல்லையா”
“அப்படியா”
“என்ன அப்படியான்னு கேட்குறே… போ போய் கிளம்புற வழியை பாரு”
“நீங்க போயிட்டு வாங்க நான் வீட்டில இருக்கேன்”
“நீ தனியா இருக்கறதுக்கு இங்க எதுக்கு வந்தே?? அங்கவே இருக்க வேண்டியது தானே…” என்று முறைத்தான் ராம்.
“அதில்லைடா நான் எதுக்குடா…” என்று சலிப்பாய் சொன்னாள்.
“நீ அங்க வந்து குழந்தைங்க கூட விளையாடு. மைன்ட் ரிலாக்ஸ் பண்ணு சரியா”
“நான் என்ன ஹாப் மைன்ட்டாவா சுத்திட்டு இருக்கேன்”
“மைன்ட்டே இல்லாம சுத்திட்டு இருக்கே” என்றான்.
“ஒழுங்கா கிளம்பி எங்களோட வா… சும்மா வெட்டியா பேசிட்டு இருக்காதே. எனக்கும் சுகுணாக்கும் ஹனிமூன் ட்ரிப் ஆச்சு. நீ வந்து குழந்தைங்களை பார்த்துக்கோ” என்று கடைசியாய் கிண்டலாய் முடித்தான்.
“டேய் உன்னை…” என்று அடிக்க வந்தவளிடம் தப்பித்து அவனறைக்கு சென்றான்.
மறுநாள் கிளம்புவதற்கு தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுகுணா உள்ளே வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்குறே??”
“நீங்க புத்திசாலி தான் ஒத்துக்கறேன், ஆனா அப்பப்போ கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடறீங்க”
“எதுக்கு சுகு அப்படி சொல்றே?? இப்போ என்னடி செல்லம் நான் பண்ணிட்டேன்” என்றவன் மனைவியை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தான்.
“பின்னே வதனாகிட்ட போய் ஹனிமூன் ட்ரிப்ன்னு சொல்றீங்க. அவங்களே பாவம் இப்போ தனியா இருக்காங்க, பீல் பண்ண மாட்டாங்களா!!”
“பண்ணட்டும் அதனாலென்ன!!” என்றான் கூலாக.
“எனக்கு புரியலைங்க… அவங்ககிட்ட நீ போய் பழி வாங்குன்னு சொல்றீங்க. வதனாவோட ஹஸ்பன்ட்கிட்ட என்னமோ பேசி குழப்பறீங்க”
“நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு எனக்கு தெரியலை. கொஞ்சம் பயமாவும் இருக்கு, ஆனா நீங்க தப்பா எதுவும் செய்ய மாட்டீங்கன்னும் புரியுது”
அவன் அவளைப் பார்த்து புன்சிரிப்பு செய்தான். “அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கன்னு சொன்னா உடனே சேர்ந்திடுவாங்கன்னு நினைக்கறியா நீ”
சுகுணாவின் தலையோ இல்லையென்று ஆடியது. “எதுவும் உடனே நடக்காது. நாம இப்போ செய்யறது ஒரு தூண்டுதல் மட்டும் தான்”
“போராட்டம் பெரிசாகும் இனி. தன்னை மீறி வெளிய வருவாங்க ரெண்டு பேரும்… இது நாள் வரை போராடினது எல்லாம் ஒண்ணுமேயில்லைங்கற மாதிரி இனி அவங்க போராட்டம் இருக்கப் போகுது”
“நீ கவலையேப்படாதே நாம எப்பவும் போல அவளுக்கு சப்போர்ட்டா தான் இருப்போம்…”
“ஆமா அதென்ன என்னைவிட இப்போ அவ தான் உனக்கு ரொம்ப பிரண்ட் ஆகிட்டா போல… வரவர என்னை நீ கண்டுக்கவே மாட்டேங்குறே”
“உங்களால தான் எனக்கு அவங்களை தெரியும். அவங்ககிட்ட நீங்க காட்டுற அந்த நட்பு தான் எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்க வைச்சுது, உங்களையும் தான்” என்று சிறு வெட்கத்துடன் சொன்னவளை சேர்த்தணைத்துக் கொண்டான்.
மறுநாள் அதிகாலையிலேயே அவர்கள் கிளம்பிவிட்டனர். முன்னிருக்கையில் ராமும் சுகுணாவும் அமர்ந்துக்கொள்ள பின்னால் குழந்தைகளுடன் வதனா அமர்ந்திருந்தாள்.
அவர்கள் செல்லும் வழி அவள் முன்பே அறிந்த வழி தான். மனம் பின்னோக்கி அவளை இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது.
வண்டி ஒஸ்மான் சாகர் டேம் வந்திருந்தது. அதைக்கூட உணராமல் வல்லவனை பற்றிய நினைவுகளில் முழ்கி இருந்தவளை ராம் தான் உலுக்கினான்.
“வா என்ன யோசனை” என்றான்.
கடல் போன்று பரந்து விரிந்திருந்த நீரை பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாய் விருந்தாய் இருந்தது.
வானம் லேசாய் கருத்தடர்ந்து வர நீரும் அதையே பிரதிபலித்தது.
உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு ஆழத்தை கொண்டிருந்தாலும் வெளியில் அமைதியாய் இருந்த நீர் போல தான் இப்போது அவள் மனமும் இருந்தது.
சில மணி நேரம் அங்கு சுற்றித்திரிந்தவர்கள் அடுத்து சென்றது அனந்தகிரி மலைக்கே. முசி ஆறு உற்பத்தியாகுமிடம் அது.
இயற்கை தன் கொடையை அங்கு செழிப்பாய் கொடுத்திருந்தது. அங்கிருந்த முசி ஆற்றின் மூலமாய் தான் ஒஸ்மான் சாகர் ஏரிக்கும் ஹிமாயத் ஏரிக்கும் தண்ணீர் சென்றுக் கொண்டிருந்தது.
எங்கு காணினும் பசுமையே!! அனந்தகிரி அடர்ந்த காடுகளை கொண்டது. ராம் அவர்களுக்காய் இரண்டு அறைகளை புக் செய்திருந்தான்.
குழந்தைகளும் அவனும் ஓர் அறையிலும் பெண்கள் இருவருக்கும் தனியறையாகவும் பதிவு செய்திருந்தான்.
“எதுக்குடா எங்க ரெண்டு பேருக்கு போட்டிருக்கே… அதெல்லாம் நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்…”
“நீ பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ணு… பசங்களை நான் பார்த்துக்கறேன்” என்றாள் வதனா.
“பார்றா ஏதோ சும்மா சொன்னா நீ நிஜமாவே நினைச்சியா போடி சரி தான்” என்று கிண்டல் செய்தான் ராம்.
“போதும் போதும் அடங்கு மகனே!!” என்றவள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அவள் அறைக்கு வந்தாள்.
மாலை மீண்டும் சுற்றிப்பார்த்துவிட்டு இரவு அறைக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள். மறுநாள் விடியலில் அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத்திற்கு கிளம்பினர்.
காலை உணவை உண்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை வீட்டில் விட்டுவிட்டு அவசர வேலை இருப்பதாக கூறி ராம் வெளியில் கிளம்பிச் சென்றுவிட்டான்.
பிரியன் இரண்டு நாளாய் சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது.
வருவான் அவன் வருவான் நிச்சயம் என்னைத் தேடி வருவான் என்ற உறுதியுடன் இருந்தான் பிரியன்.
அவன் செய்ய நினைத்ததை செய்து முடித்துவிட்டு ராமின் வருகைக்காய் காத்திருந்தான் பிரியன்.
மாலையில் குழந்தைகளை பார்க்கிற்கு அழைத்துச் சென்றிருந்த சுகுணா பதட்டத்துடன் ராமிற்கு அழைத்தாள்.
வேலையில் இருந்தவன் “சொல்லும்மா” என்றவாறே போனை காதில் வைத்திருந்தான்.
“என்னங்க பிரியாவை காணோங்க!! சஞ்சீவையா பார்க் வந்திருந்தோம். பசங்க ரெண்டு பேரையும் விளையாடவிட்டு நான் பக்கத்துல தான் உட்கார்ந்திருந்தேன்”
“பிரியா ஸ்நேக்ஸ் கேட்டாளேன்னு பக்கத்துல வாங்க போனேன். திரும்பி வந்தா சரண் மட்டும் தாங்க இருந்தான்”
“முட்டாள் அறிவிருக்கா உனக்கு. குழந்தைகளை விட்டுட்டு தான் கடைக்கு போவாங்களா!!” என்று எதிர்முனையில் கத்தியிருந்தான் ராம்.
இதுவரை மனைவியை ஒரு சொல் கடிந்து சொன்னதில்லை அவன். முதல் முறையாய் அவளிடம் கோபப்படுகிறான்.
சுகுணாவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அடக்கமாட்டாமல் அழுகை வந்தது. “இல்லைங்க ரொம்ப தூரம் எல்லாம் போகலை. ஒரு பத்தடி கூட இருக்காது…”
“தூரமோ பக்கமோ பார்க்க மாட்டியா நீ… போனை வை நான் வர்றேன்” என்று கத்திவிட்டு போனை வைத்தான்.
சுகுணா சிறிது நேரம் அழுதவள் பின் ஏதோ தோன்றியவளாய் சரணை தூக்கிக்கொண்டு பார்க்கின் மெயின் என்ட்ரன்ஸ் வந்திருந்தாள்.
அங்கிருந்த செக்யூரிட்டியிடம் குழந்தை தொலைந்த விபரத்தை சொல்லி பார்க்கின் உள்ளே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள்.
முதலில் அவர்கள் மறுக்க மீண்டும் ஒரு முறை பேசிப் பார்த்தாள். அவர்கள் அப்போதும் ஒத்துக்கொள்ளாமல் போக “சரி நான் போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணுறேன், அவங்க வந்து விசாரிப்பாங்க” என்றவள் போனை கையில் எடுத்துக்கொண்டு சற்று தள்ளிச் சென்றாள்.
அதற்குள் வாயிலில் ராமின் கார் வந்து நின்றது. வேகமாய் அவனருகில் சென்றிருந்தாள் அவள் இப்போது.
“எங்க தொலைச்சே குழந்தையை??”
அவள் வேண்டுமென்றே குழந்தையை தொலைத்தது போல் கேட்டு வைத்தான்.
“உள்ளே அங்க…” என்று கைக்காட்டினாள்.
“வா…”
“இல்லை நான் புல்லா பார்த்திட்டேன். ஒரு மணி நேரமா இங்க சுத்தி சுத்தி எல்லா இடமும் பார்த்திட்டேன்”
“இங்க சிசிடிவி ப்ரொடக்ஷன் உண்டு. அதான் செக்யூரிட்டிகிட்ட பேசிட்டு இருந்தேன்” என்றவளை ஒரு கணம் வியப்பாய் பார்த்தான்.
அதிகமாய் தான் திட்டிவிட்டோமோ என்று தோன்றியது. அதற்கு மேல் யோசிக்க அவனுக்கு அவகாசம் இல்லை, செக்யூரிட்டியிடம் சென்று பேசினான்.
அவர்களை உருட்டி மிரட்டி அந்த பதிவுகளில் பார்வையை ஓட்டினான். நல்லவேளையாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அந்த இடத்தில் ஒரு கேமரா நேராக இருந்தது.
குழந்தையை தூக்கிச் சென்றவனின் முகம் தெளிவானதில் ராம் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
மனைவியை நீ வீட்டிற்கு போ என்றுவிட்டு சென்றுவிட்டான்.
பிரியன் தான் பிரியாவை தூக்கி வந்திருந்தான். முதலில் சரணை தான் தூக்கி வரலாம் என்பது அவன் எண்ணமாயிருந்தது.
சிறு குழந்தை சட்டென்று அழுதுவிட்டால் என்ன செய்வது. அதுவுமில்லாமல் அவன் ஒரு மணி நேரத்திற்குள் அம்மா வேண்டுமென்று அழுதால் என்ன செய்து சமாளிப்பது என்ற எண்ணம் வேறு.
அதனாலேயே பிரியாவை அழைத்து வந்திருந்தான். அவளிடம் விளையாட்டு காட்டி தான் அவளை கூட்டி வந்திருந்தான்.
அவளும் தந்தைக்கு தெரிந்தவர் வீட்டிற்கு கூட வந்திருந்தாரே என்று நம்பித்தான் அவனுடன் சென்றாள்.
சுகுணா அங்கு குழந்தையை தேடுவதை கண்டதும் ஒரு கணம் மனம் துடித்து போனது அவனுக்கு. பாவம் தேடுகிறார்களே இதெல்லாம் தேவையா என்று ஒரு கணம் தோன்றியது.
‘தானா இது போல செய்கிறோம்’ என்று மனசாட்சி வேறு குத்தியது அவனுக்கு.
மறுகணமே ராம் பேசியது மட்டுமே நினைவில் எழ எண்ணத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
“அங்கிள் எனக்கு பசிக்குது” என்று போனில் விளையாடிக் கொண்டிருந்த பிரியா எழுந்து வந்து கேட்கவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
“ஒரு நிமிஷம்டா நான் வாங்கிட்டு வர்றேன்”
“அங்கிள் எனக்கு கேக் வாங்கி தருவீங்களா!!”
“இதோ உடனே வாங்கிட்டு வர்றேன் செல்லம். நீங்க விளையாடிட்டு இருக்கீங்களா நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடறேன்” என்று சொல்ல அவளும் சமத்தாய் தலையாட்டினாள்.
ஏனோ அச்சிறுமியை அவனுக்கு பிடித்து போனது. அறைக்கதவை பூட்டிவிட்டு அவளுக்காய் சாப்பிட ஸ்நேக்ஸ் வாங்குவதற்கு ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான்.
சொன்னது போலவே அவளுக்கு பிடித்ததை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைய “அங்கிள் வெளிய பூட்டிட்டு போயிட்டீங்களா எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு”
“யாரோ வந்து கதவை வேற தட்டினாங்க” என்று குழந்தை சொல்லவும் சற்று உஷாரானான். வந்துவிட்டானா அவன், வரட்டும் பேசிக்கொள்கிறேன்.
குழந்தையிடம் வாங்கி வந்திருந்த கேக்கை கொடுக்க அவள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்திருந்தான் ராம்.
ராமை தள்ளிக்கொண்டு பின்னிருந்து சூறாவளி ஒன்று அவன் முன் வந்து நின்றது.
“என் குழந்தையை எதுக்குடா கடத்தினே?? என்கிட்டே இருந்து அவளை பிரிக்க பார்க்கறியா?? எதுக்குடா வந்தே இப்போ??”
“எதுக்கு எங்களுக்கு இடையில நீ வர்றே??” என்று காளியின் உக்கிரத்துடன் அவளை பார்த்து கேட்டது அவனின் மனைவி வதனா என்ற பிரியம்வதனாவே தான்…
அவள் தன் குழந்தை என்று சொன்னதில் இப்போது திகைத்து விழித்தவன் பின்னாலிருந்த ராமை நோக்க அவன் எப்போதும் போல் அமைதியையே பதிலாக்கி நின்றிருந்தான்….
விதியாடும்
சொக்கட்டான்
விளையாட்டில் – அவன்
வென்றானா??
வீழ்ந்தானா??
காலம் சொல்லும்
வழியில்…