அத்தியாயம் – 2
அருகில் ரயிலொன்று கிளம்பிச் சென்றுக் கொண்டிருந்தது. அந்த ரயிலின் ஆட்டம் போல் அவள் உள்ளமும் தடதடத்தது.
உடலில் ஒருவித நடுக்கம் பரவ அவனை பயத்துடன் ஏறிட்டாள் அவள். அவனோ அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னேறிச் சென்றுவிட்டான்.
அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது. அப்பாடா அவனுக்கு என்னை அடையாளம் தெரியலை என்று ஆசுவாசமானாள்.
அவர்களின் கோச்சான S9ஐ தேடிச்சென்று அதில் தங்கள் பெயரை பார்த்து உறுதி செய்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அது வாரநாள் என்பதாலேயே அவர்களுக்கு டிக்கெட் சுலபமாய் கிடைத்திருந்தது. இருக்கையில் ஏறி அமர்ந்தவள் இன்னமும் போடாத விளக்கின் சுவிட்சை போட்டுவிட்டாள். அவர்கள் உடைமைகளை சரிப்பார்த்து சீட்டின் அடியில் தள்ளினாள்.
பசி வேறு வயிற்றை கிள்ளியது. “அம்மா சாப்பிடலாமா பசிக்குதும்மா” என்றாள்.
“உனக்கு பசிச்சா நீ சாப்பிடு. நான் அபிக்கு போன் பண்ணி நாம வந்திட்டோம்ன்னு சொல்றேன்” என்றவர் எழுந்து அப்புறம் நகர்ந்தார்.
சிக்னல் வேறு சரியாய் கிடைக்காததில் அவர் தள்ளிச் சென்றார். “நீ சாப்பிடு நான் பேசிட்டு வர்றேன், சிக்னல் கம்மியா இருக்கு”
“அப்படியே ஊருக்கும் போன் பண்ணி வந்திட்டு இருக்கோம்ன்னு சொல்லிடுறேன்” என்றுவிட்டு போனார் அவளிடம்.
அவளும் சரியென்று தலையாட்டி தனக்கான உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க “எக்ஸ்க்யூஸ் மி” என்ற குரலில் கலைந்தவள் வாயில் கவளத்துடன் அப்படியே நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தாள்.
‘அச்சோ தெரியலைன்னு நினைச்சோம். தேடிப்பிடிச்சு வந்துட்டான் போலவே. முல்லை இப்படியா பண்ணுவே, அப்படி என்னடி உனக்கு கோபம் மூக்குக்கு மேல வருது’ என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.
விழியில் லேசாய் அரும்பிவிட்ட நீரோடு அவனை பார்த்து வைத்தாள்.
அவனுக்கு அவள் வாயில் கவளத்துடன் ‘பே’ என்று அவனைப் பார்த்து விழிப்பதை கண்டு சிரிப்பு வந்துவிட்டது. அதை அடக்கிக் கொண்டு ஹலோ என்றான்.
“ஹ்ம்ம்…”
“இந்த சீட் என்னோடது” என்று அவன் சொல்லவும் தான் என்ன உணர்கிறோம் என்றெல்லாம் யோசியாது உடனே எழுந்து எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“சாரி சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று மன்னிப்பு வேறு கோரியவனை போய் அடித்துவிட்டோமே என்றிருந்தது அவளுக்கு.
இருந்தாலும் இவன் என்னைப் பார்த்து அப்படி பாடியிருக்கக் கூடாது தானே என்று எண்ணியவள் அவன் வேண்டுமென்றே அவள் பெயரை தெரிந்து வைத்துக்கொண்டு பாடியதாகவே இப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள். (அவ்வளவு அறிவு!!)
அவனும் கையோடு உணவை வாங்கி வந்திருந்தான் போலும் அதை பிரித்து அவன் சாப்பிட ஆரம்பித்தான்.
இவளோ அவனை இன்னமும் பார்த்துக் கொண்டு தானிருந்தாள்.
‘என்னாச்சு எதுக்கு என்னைய இப்படி பார்க்குறா!!’ என்று எண்ணிக்கொண்டவன் நிமிர்ந்து அவளை பார்த்து புருவம் உயர்த்தினான் என்னவென்று.
“ஒண்ணுமில்லை அது…” என்றவள் அவன் நெற்றியில் இருந்த கட்டை நோக்கி கைக்காட்டினாள்.
“அதுவா அது…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே ராஜம் வந்திருந்தார். “உன் தம்பி எவ்வளவு பொறுப்பு பாரு. படிச்சுக்கிட்டு இருக்கானாம், எப்போம்மா வருவீங்க. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க, நான் வீட்டை பார்த்துக்கறேன்னு சொல்றான்”
“நீயும் இருக்கியே!! ஒரு நாளாச்சும் இப்படி பொறுப்பா பேசியிருப்பியா” என்று மகளைப் பார்த்து நொடித்தவர் எதிரில் இருந்தவனை அப்போது தான் பார்த்தார்.
மகளோ தாயை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளை திரும்பி பார்க்காமலே அவர் அதை உணர்ந்தார்.
எதிரில் இருந்தவனோ அவர்கள் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவன் சிரிப்பதை அவள் கண்டுகொண்டாள்.
“ம்மா… உன் புள்ளை பெருமை பேசினது போதும். கெக்கபிக்கேன்னு சிரிக்காம ஒழுங்கா சாப்பிடு” என்று பொதுவாய் சொல்லி அவனையும் முறைத்தாள்.
ராஜம் அவனை ஒரு சினேகப்பார்வை பார்த்தார். “தம்பி எந்த ஊருக்கு??”
“திருச்சிக்கு போறேன்” என்றான்.
“நாங்களும் அங்க தான் போறோம். கொஞ்சம் நீங்க இறங்கும் போது எங்களை ஜஸ்ட் எழுப்பறீங்களா!! இவ தூங்க ஆரம்பிச்சா பூகம்பமே வந்தாலும் தெரியாது” என்று அவர் மீண்டும் மகள் பிரதாபத்தை எடுத்துவிட “அம்மா கொஞ்சம் வாயை மூடு”
“உனக்கென்ன நான் உன்னை எழுப்பணும் அவ்வளவு தானே!! விடிய விடிய உறங்காம இருந்தாச்சும் நான் உன்னை எழுப்பறேன் போதுமா!!” என்று தேவையில்லாத வாக்குறுதியை அள்ளிவிட்டாள்.
“இப்போ எதுக்குடி குதிக்குற?? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்” என்றுவிட்டு அவரும் உணவை முடித்துக்கொள்ள தாம்பரம் தாண்டியதும் அவரவர் பெர்த்தில் படுத்துக் கொண்டனர்.
விடிய விடிய விழிப்பேன் என்ற ராஜத்தின் சீமந்தபுத்திரி தான் முதலில் உறங்கியிருந்தாள். அவளுக்கு நேர் எதிரில் மிடில் பெர்த்தில் அவன்.
அவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளைப் பற்றி உண்மையை அவள் அம்மா சொன்னதிற்கு இப்படி பாய்க்கிறாள்.
இப்போது போர்த்திக்கொண்டு உறங்குவதை பாரேன் என்று நினைத்துக்கொண்டு அவளையே பார்த்திருந்தான் அவன்.
விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்க மெல்லியதாய் தெரிந்த நீல நிற விளக்கில் அவள் முகம் இன்னும் வடிவாய் தோன்றியது அவனுக்கு.
‘அடேய் என்னடா செய்யறே?? ட்ரைன்ல எதிர் பெர்த்ல இருக்கற பொண்ணை எல்லாம் சைட் அடிக்கற?? கொஞ்சம் அடங்கு மகனே’ என்று மனசாட்சி திட்ட முகத்தை வேறுபுறம் திருப்பி தூங்க முயற்சித்தான்.
சற்று நேரத்தில் உறங்கியும் போனான். நள்ளிரவு இரண்டு மணி அவன் வைத்திருந்த அலாரம் அவன் காதில் மாட்டியிருந்த ஹெட் போனின் வழியாய் மெதுவாய் அடிக்க ஆரம்பித்தது.
உறக்கம் கலைந்து எழுந்தவன் எதிரில் பார்க்க அந்த வீரமங்கை இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
‘பார்ப்போம் இவள் திருச்சி வருவதற்குள்ளாக விழித்து விடுகிறாளா என்று!! வீண் ஜம்பம் வேறு!!’ என்று அவளை திட்டிக்கொண்டான்.
இரவில் ஆங்காங்கே சிக்னலுக்காய் நின்றிருந்ததில் எப்போதையும் விட வண்டி சற்று தாமதமாகவே சென்றது.
இரண்டு நாற்பதுக்கு திருச்சியை சென்றடைந்திருக்க வேண்டிய வண்டி மூன்று மணியாகியும் வந்திருக்கவில்லை.
இன்னும் பத்து நிமிடமாகும் என்பதை அவன் கூகிள் மேப் உதவியுடன் பார்த்திருந்தான். அவன் பெர்த்தில் இருந்து மெதுவாய் இறங்கியவனுக்கு யோசனை அவர்களை எழுப்புவதா வேண்டாமா என்று.
ஏனென்றால் அவள் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள், அவளின் அன்னையும் தான்.
“ஆன்ட்டி” என்று அவன் கொடுத்த ஒரு குரலிலேயே அவர் விழித்துவிட்டார்.
அவர் எழுந்து அமர்ந்ததும் “இன்னும் பத்து நிமிஷத்துல திருச்சி ரீச் பண்ணிடுவோம், அதான் எழுப்பினேன்” என்றான்.
“தேங்க்ஸ்பா” என்றுவிட்டு எழுந்தவர் அவர்களின் உடைமையை எடுத்து வைத்தார்.
பின்னர் மகளை எழுப்பினார். “வசந்தி எழுந்திரு திருச்சி வரப்போகுது” என்று அவர் கூற “அம்மாகிட்ட வரும் போது எழுப்பும்மா கொஞ்சம் நேரம் தூங்குறேன்” என்றாள் அவள் சிணுங்கலாய்.
அவனோ அவள் சொல்லியதில் லேசாய் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
ராஜமோ “ஏன்டி என்னமோ விடிய விடிய உறங்காம இருந்து என்னை எழுப்பறேன்னு சொல்லிட்டு இப்படி தூங்குறே?? ஒழுங்கா எழுந்திரு” என்று சொல்லி அவள் முதுகில் இரண்டு அடி போட்டார்.
“ஹ்ம்ம் நிம்மதியா தூங்க கூட விடமாட்டேங்குறம்மா நீ!!” என்று சலிப்பாய் சொல்லிக்கொண்டே எழுந்தமர்ந்தாள் அவள்.
எழுந்ததும் எதிரில் அவன் முகம். சைடு பெர்த்தில் ஓரமாய் இருந்த இடத்தில் அமர்ந்திருந்தான் போலும்.
அவனை பார்த்ததும் முதல் நாள் காலையிலிருந்து இரவு படுக்கும் முன் வரை நடந்தவைகளை சினிமா படப்பாடல் போல் ஓட்டி முடித்துவிட்டாள்.
மெதுவாய் காலை கீழே இறக்க முயல எதிரில் அவன் இருப்பது கண்டு பின்னுக்கிழுத்துக் கொண்டாள்.
அவளின் செயல் கண்டு முதலில் திகைத்தவன் பின் புரிந்தவனாய் அவன் பையை எடுத்து முதுகில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவளும் கீழே இறங்கி வந்தவள் முகம் கழுவ முன்னில் விரைய அங்கு பையுடன் அவன் நின்றிருந்தான். இப்புறம் அப்புறம் என்று மாற்றி மாற்றி நகர “நீங்க நில்லுங்க” என்றவன் கொஞ்சம் நகர்ந்தான்.
அவள் முகம் கழுவி அவள் போட்டிருந்த சுடிதாரின் துப்பட்டாவிலேயே முகம் துடைத்தாள். அவளின் பொட்டு துப்பட்டாவுடன் போனது.
அவள் அதை கவனிக்காமல் நகர “பொட்டு ஷால்ல” என்று மெதுவாய் குரல் கொடுத்தான்.
சட்டென்று திரும்பிப்பார்த்து அதை தேட அது அகப்படவில்லை அவளுக்கு. பின் தோளைக் குலுக்கிவிட்டு உள்ளே நகர்ந்தாள்.
அதற்குள் ஸ்டேஷன் வந்துவிட ராஜமும் வசந்தமுல்லையும் கூட அவன் இறங்கவும் பின்னே இறங்கினர்.
இப்போது அவள் நெற்றில் பொட்டிருந்தது. பையில் வைத்திருந்திருப்பாள் போலும்.
இறங்கிய உடனே கையில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு “அம்மா காபி வாங்கி கொடும்மா” என்றவளை ராஜம் முறைத்தார்.
“நீ என்ன இன்னும் சின்னப்பிள்ளையாடி, அப்போல இருந்து ஊருக்கு போனா போதும் இப்படி என் உயிரை எடுக்கறே… நாம எங்க போகணும் என்ன சூழ்நிலை இதெல்லாம் யோசிக்க மாட்டியா”
“நானே எப்படி நிலைமையில இருக்கேன்” என்றவர் மகளை முறைக்க சட்டென்று அடங்கினாள்.
“பையை எடு போகலாம்” என்றுவிட்டு அவர் முன்னே நடக்க கீழே இருந்த பையை எடுக்க அவள் குனிந்த நேரத்தில் கையில் மாட்டியிருந்த ஹேண்ட்பேக் கீழே விழுந்தது.
அவள் பின்னால் நின்றிருந்த அவன் அதை எடுத்து நிமிரவும் இவள் திரும்பவும் சரியாய் இருந்தது.
முல்லையின் கை அவன் அடிப்பட்ட இடத்தில் பட்டுவிட ஒரு நிமிடம் உயிரே போனது போல் வலித்தது அவனுக்கு. வலியில் ஆவென்றிருந்தான்.
“அச்சோ சாரி சாரி… ப்ளீஸ் என்னால தான்… தெரியாம பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க” என்றவளுக்கு தான் முதல் நாள் செய்த பிழை ஞாபகத்தில் வர அவன் வலியை கண்டதும் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.
“ஒண்ணுமில்லைங்க ஐ யம் ஓகே… நீங்க ஒண்ணும் வேணுமின்னே இடிக்கலையே!!” என்று சொல்லவும் அவளை குற்றவுணர்ச்சி பிடிங்கித் தின்றது ‘எல்லாம் உன்னால் தானே’ என்று.
“வசந்தி” என்று முன்னால் சென்ற அவள் அன்னை அழைக்க அவனிடம் மீண்டுமொருமுறை மன்னிப்பை வேண்டி வேகமாய் ஓடினாள்.
ஸ்டேஷன் விட்டு வெளியில் வரவும் இன்னும் புலர்ந்தும் புலராத அந்த காலைப் பொழுது ராஜத்தை சற்று பயம் கொள்ள வைத்தது.
உடன் வேறு வயது பெண்ணை வைத்திருக்கிறோம் எப்படி அவளைக் கூட்டிக்கொண்டு தனியே செல்வது என்ற எண்ணம்.
சென்னையில் இருந்து திருச்சி வந்துவிட்டார் தான். ஆனால் அங்கிருந்து வீட்டிற்கு தனியே ஆட்டோவில் தானே செல்ல வேண்டும் என்ற கவலை அவருக்கு.
அவர் யோசித்து நின்ற வேளை பின்னால் வந்திருந்தவன் அங்கிருந்த ஆட்டோவை அழைக்க ராஜம் தன் பயத்தைவிட்டு “தம்பி” என்றழைத்திருந்தார் அவனை பார்த்து.
“சொல்லுங்க” என்றான்.
“எங்களை ஆட்டோல ஏத்திவிட முடியுமா… தனியா எப்படி போகன்னு இருக்கு… வீட்டில இருந்து இப்போ யாரும் வரமுடியாத நிலைமை அதான்”
“நீங்க எங்க போகணும்??”
“தில்லை நகர்”
மோவாயை தட்டி யோசித்தவன் “நானும் அங்க தான் போறேன். உங்களைவிட்டுட்டு நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்றவன் அவன் முன் வந்து நின்ற ஆட்டோ ஓட்டுனரிடம் பேச அவர்கள் ஆட்டோவில் ஏறினர்.
வசந்தமுல்லை முதலில் ஏறியிருக்க பின்னால் ராஜமும் அவரை தொடர்ந்து அவனும் அமர்ந்தனர். அவள் பின்னால் சாய்ந்துகொண்டு அவன் முகத்தை பார்ப்பதும் வருந்துவதுமாய் இருந்தாள்.
‘அடடா இவ என்ன என்னை ஏதோ பரிதாபமா பார்த்து வைக்குறா’ என்று சலித்தான் அவன்.
ஒரு வழியாய் அவர்கள் தில்லை நகருக்குள் நுழைய ராஜத்திடம் வழி கேட்க அவர் சொன்னதை கேட்டு திகைத்தவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் அதன் வழியை ஓட்டுனருக்கு செல்ல இதோ வீடு வந்திருந்தது.
முதலில் இறங்கியவன் ஆட்டோவிற்கு பணம் கொடுத்திருக்க “நாங்க கொடுக்கறோம்” என்று ராஜம் பர்சை துழாவினார்.
“இருக்கட்டும்” என்றிருந்தான்.
“உங்க பேரு??”
“வேந்தன்… யாழ் வேந்தன்…”
அவன் பெயர் கேட்டு ராஜம் அவனை இப்போது திகைப்பாய் ஏறிட்டார்.
அதற்குள் அப்போது தான் ஒரு மூச்சு அழுது முடித்திருந்த கூட்டம் அடுத்த ரவுண்டு அழுகைக்கு தயாராகி இருந்தது.
ராஜத்தின் தங்கை புஷ்பா ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டு அழுகையை ஆரம்பித்தாள்.
வசந்தமுல்லையும் அவர்களுடனே உள்ளே சென்றாள். தனித்திருந்த வேந்தனை யாரோ அழைத்தனர்.
“நீங்க ஒண்ணா தான் வந்தீங்களா?? உனக்கு உங்க அத்தையை முதல்லயே தெரியுமா??” என்று கேட்டார் அவர்…