அத்தியாயம் பதினொன்று :
“வெல்கம் டு ஸ்வாதி பாலகிருஷ்ணன் ரெட்டி!” என்ற எழுத்துக்கள் அந்த லையன்ஸ் க்ளப் வளாகத்தில்… வைக்கப்பட்டிருக்க.. அங்கே பெண்களுக்கான ஒரு தன்னம்பிக்கை கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் தலைமைப் பேச்சாளராக ஸ்வாதி அழைக்கபட்டு இருந்தார்.
பாந்தமாய் கரைகள் அற்ற ஒரு பட்டுப் புடவையில், நான்கைந்து வயதில் ஒரு மகனோ மகளோ இருப்பவர் போலத் தான் இருந்தார். கழுத்தில் ஒரு சிறிய அளவு மணிகள் கொண்ட முத்து மணி மாலை.. அதற்கு பொருத்தமாய் காதணிகள், வளவிகள், நமக்கு ஏன் இவ்வளவு மென்மையான சருமம் இல்லை என்று கூட இருப்பவர் நிச்சயம் நினைப்பர்.
அவர் பேச ஆரம்பித்தது, தெளிவான ஆங்கிலத்தில், பிறகு தமிழும் ஆங்கிலமுமாய் பேச்சுக்களை அமைத்துக் கொண்டார்.
“முதலில் நான் என்னைப் பற்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால், பேச்சுக்கள் எவ்வளவு பொருள் வாய்ந்ததாய் இருந்தாலும், பேசுபவரைக் கொண்டு தான் அதற்கு மரியாதை!” என்று அவர் புன்னகை முகமாய் ஆரம்பிக்கவுமே.. அதுவே அனைவரையும் கவர்ந்தது.
“நான் ஸ்வாதி பாலகிருஷ்ணன் ரெட்டி, ஸ்வாதி நான், பாலகிருஷ்ணன் எனது கணவர், ரெட்டி எனது தந்தையைக் கொண்டு.. ஸ்வாதியாக மட்டுமே என்னை அடையாளம் காட்டிக் கொள்ள விருப்பம், இருந்தாலும் பாலகிருஷ்ணன் எனது ஆருயிர் கணவர், இப்பொழுது இந்த உலகத்தில் இல்லை.. அவருடைய நினைவுகள் என்னுடனே பயணிப்பதால், அவருடைய பெயரும் என்னோடு பயணிக்கிறது.. பெற்று எனக்கு அடையாளம் கொடுத்த தந்தையை விட மனதில்லாத காரணத்தால் அவரும் என்னோடு”.
“எனது வாழ்க்கை, ஐம்பது வயதை தொட்டு விட்ட நிலையில் தான், இந்த திசையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்று பெண்கள் சோர்ந்து போகும் வயதில் தான், எனது வாழ்க்கை தனது பயணத்தை இன்னும் உற்சாகமாக ஆரம்பித்து இருக்கிறது. நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் வேலை செய்கிறேன்”
“என் கணவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இறப்பதற்கு முன் கணவன் மகன் என்று சுருங்கியிருந்த வாழ்க்கை, அதன் பிறகு முற்றிலுமாக மாறிவிட்டது. கணவர் இறந்த பிறகு இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று நினைத்து இருந்த பொழுது”
“யாருடைய இழப்போடும் யாருடைய வாழ்க்கையும் முடிந்து விடுவதில்லை!!” இதற்கு மேலும் உனது வாழ்க்கை இருக்கிறது என்று உணர்த்தியவன் என் மகன், வாசுதேவன்!!!”
“அந்த ஒரு உணர்வை தான் நான் இங்கே எனது வயதில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் கொடுக்க முயல இருக்கிறேன்” என்று ஆரம்பித்தவர்.. பின்னர் சரளமாக தன் கருத்துக்களை முன் வைக்க..
நிச்சயம், அங்கிருந்த அனைவருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பலருக்கு அதில் நாமும் ஏதாவது செய்யலாமே என்ற உத்வேகம் தான்.
லயன்ஸ் க்ளப் அதை ஏற்பாடு செய்திருந்தாலும் அதில் கலந்து கொண்டவர்களில், பாதி ஜனம் நடுத்தர வகையைச் சார்ந்தவர்களும் கூட..
இதைப் போல நிறையத் தன்னம்பிக்கை பேச்சுக்களை கொடுக்கிறார் ஸ்வாதி, இப்போது சென்னையில் இருக்கும் அவரது அப்பாவின் ஐந்து நட்சத்திர ஹோட்டலை அவர் தான் நிர்வகிக்கிறார்… அப்பாவினது மட்டுமல்ல, அது அவரினதும் கூட, ஆம் இரண்டு வருடங்களுக்கு முன் அவரது அப்பாவின் வீட்டில் சொத்துக்கள் பிரிக்கப்பட.. இவரது பங்கும் அதில் கணிசமாக வந்தது.
கணவர் இறந்து சில நாட்களியே தந்தையின் நிழலுக்கு வந்துவிட்டார். தந்தையும் விடவில்லை, மகனும் விடவில்லை, கணவரின் பெற்றோரும் விடவில்லை.
“நீ செல்! அவருடன் சிறிது நாட்கள் இரு! நீ என்னை வளர்த்தது போலத் தானே அவரும் உன்னைப் பற்றி பல கனவுகள் கண்டு வளர்த்திருப்பார். போ! அவருடன்!” என்று வலுக்கட்டாயமாக வாசுதேவன் ஸ்வாதியின் அப்பா அம்மாவிடம் விட்டான்.
“இடையில் உன் வாழ்வில் இருந்த இருபத்தி இரண்டு கால வாழ்க்கையை இப்போதைக்கு மறந்து விடு! அம்மா! உன் பெற்றோருக்கு மகளாய் மட்டும் இரு”
“உன்னை விட்டுவிட்டு எப்படி இருப்பேன்! நீயும் என்னோடு வா!” என அவர் நிற்க..
“என்னை சிறிது காலம் நானாக இருக்க விடு, நீயும் உன் பெற்றோருக்கு மகளாக மட்டும் இரு!! என்று மீண்டும் அழுத்திச் சொன்னவன், “நான் என்ன செய்வேனோ? என்னுடைய வாழ்க்கை என்னவோ? என்று குழப்பிக் கொள்ளாதே.. உன்னிடமும் எனது அப்பாவிடமும் இருக்கும் புத்திசாலித்தனம் என்னிடம் இல்லாமலா போகும்!! பிறகு சேர்ந்து இருக்கலாம். எனக்கு அங்கே இருக்க முடியாது!!” என்று பலவாறாகப் பேசி அவரை அங்கே விட்டு வந்தான்.
அன்றைய நிலையில் அவனின் மன அழுத்தங்கள் அவனுக்கு.. வாழ்க்கை மீதான ஒரு பற்றற்ற தன்மையில் இருந்தான். மீண்டும் அம்மாவின் நிழலுக்குள் சென்று சுயமாய் நிற்க முடியாமல் போவதில் விருப்பமில்லை. அதுமட்டுமல்லாமல் தானும் அவருடன் இருந்தால் மீண்டும் ஸ்வாதியின் சிந்தனைகள் அவனைக் கொண்டு அவனை ஒட்டி என இப்படித் தான் ஓடும். ஸ்வாதி அவரைப் பற்றி நினைக்க மாட்டார் என்று புரிந்தவனாக விட்டு வந்தான்.
இப்பொழுது வாசுவிற்கு இந்திய நாட்டின் தலைநகரத்தில் வேலை. பாலகிருஷ்ணனின் பெற்றோர்கள் புது தில்லியில் வாசுவுடன் இருந்தனர். வாசுவிற்கு அங்கே தான் வேலை.. அம்மாவை அவரின் பெற்றோரிடம் விட்டாலும் தாத்தாவையும் பாட்டியையும் தன்னுடன் தான் வைத்துக் கொண்டான். அம்மா பார்த்துக் கொள்ளட்டும் என்றோ, தனியாகவோ விடவில்லை.
இந்தியன் ஃபாரின் சர்விசில் தேர்வாகி இருந்தான். மினிஸ்ட்ரி ஆஃப் எக்ஸ்டர்னல் அஃபபையர்ஸ்சில் இருந்தான். பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் முடியப் போகிறது… இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது… இது அவனின் ட்ரைனிங் பீரியட்…
அதன் பிறகு புது தில்லியில் இருந்து மாறுதல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் .. இந்தியாவிலோ இல்லை வெளிநாட்டிலோ எங்காகினும்…
அவன் இளநிலை படிப்பு முடித்ததுமே இதற்காக படித்துக் கொண்டிருந்தான் தான்.. பின்பு முதுகலையில் சேர்ந்தான். அந்த வருடங்களில் ஏதோ ஒரு தேக்கம் வாழ்க்கையில்.. எதையுமே படிக்க தோன்றவில்லை. மனதளவில் ஒரு பெரிய சோர்வு.. அம்மாவிடமும் காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை.. அவரே வாழ்வில் போராடிக் கொண்டிருக்க.. தானும் இதில் என்ன சொல்ல.. பல்கலைக்கழக தேர்விலேயே வெற்றுத் தாளில் பேர் எழுதி கொடுத்து வந்த நாட்கள் அவை.
படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், அதற்கான புத்திசாலித்தனம் இருந்தாலும், எதிலும் பிடிப்பற்று இருந்த நாட்கள்…
அப்போது தான் ஜனனியைப் பார்த்தது.. பார்த்ததுமே கவனிக்க வைத்தாள். கவலைகள் அற்று எப்போதும் சிரிப்பும் உற்சாகமுமாய் இருக்கும் அவளின் புறம் மனம் சென்றது.
ஆனாலும் நிதர்சனமான உண்மை வாசுவைப் பார்த்த பிறகு அதை ஜனனி தொலைத்து நிற்கின்றாள்.
“விளையாட்டுப் பெண்! உனக்கு பொருத்தமில்லை!” என்று அம்மா சொன்ன போது.. “அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று உரக்க கத்தி சொல்ல வேண்டும் என்று தோன்றியது தான். ஆனாலும் சொல்லவில்லை.
திருமணதிற்கு ஜனனி கேட்டு.. அதை வாசுவும் சேர்ந்து முடிவு செய்து, ஜனனி ரெஜிஸ்டர் ஆஃபிசில் நின்றிருந்த காலையில், அவன் வீட்டில் இருந்து வாசு கிளம்பும் சமயம்..
அப்பாவைக் காலையில் சென்று பார்த்த அம்மா, “வாசு! இக்கட ராரா! அப்பா என்னமோ மாதிரி இருக்காங்கடா!” என்று பதட்டமாக சொல்ல…
உறங்குவது போலத் தான் இருந்தார், உடலும் சூடாகத் தான் இருந்தது. ஆனாலும் முடிந்து விட்ட ஒரு தோற்றம். அசைவில்லை.. ஹாஸ்பிடல் விரைந்து கொண்டு செல்ல.. அந்த பதட்டத்தில் வீட்டிலேயே ஃபோனை வைத்து விட்டான்.
தகவல் சொல்ல முடியவில்லை. ஹாஸ்பிடல் சென்றால் அங்கே முடிந்து விட்டது என்றார்கள்.. திரும்ப வீடு வரும் பொழுது பன்னிரண்டு மணிக்கும் மேல்… இமானின் போனில் இருந்து நூறு மிஸ்டு கால்களாவது இருக்கும்..
நரகமான நேரங்கள் அவை.. ஒரு புறம் இழப்பு, மறுபுறம் அந்த நேரத்தில் அவன் மட்டுமே அம்மாவிற்கு துணை நிற்க முடியும்! ஜனனி எதிர்பார்த்து காத்து நின்றிருந்திருப்பாள்!
அப்பாவின் இழப்பை ஜனனிக்கு தகவலும் சொல்ல முடியவில்லை..
உறவுகளுக்கு சொல்ல ஆரம்பித்துக் கொண்டே இமானிற்கும் அழைக்க, எடுத்த உடனேயே அவன் அவ்வளவு கோபமாக பேசினான். அதுவரையுமே அவன் வந்துவிடுவான் என்று ஜனனி இன்னம் ரெஜிஸ்டர் ஆஃபிசில் தான் இருந்தாள். கிட்ட தட்ட சொன்ன நேரத்தை விட ஒரு மூன்று மணி நேரங்கள்.
இமான் பேசப் பேச… “அப்பா இறந்துட்டாங்க!” என்று வாசு சொல்ல.. யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. “ சாரி! நீங்க பாருங்க!” என்று இமான் வைத்து, ஜனனியிடம் சொல்ல..
“ஓஹ்!” என்றவளுக்கு வேறு பேச முடியவில்லை. யாரைச் சொல்வது எதைச் சொல்வது.. ஆனாலும் வாழ்க்கையில் என்னவோ தோற்று விட்ட உணர்வு.. கடவுளே இந்த திருமணம் வேண்டாம் என்று நினைக்கின்றாரோ என்ற உணர்வு.. பிறகு, ஏன் இப்படி ஆக வேண்டும்?
வீட்டிற்கு சென்றாள், அங்கே அனுராதா, தனது மாமனார் மாமியாருடன் தனது அண்ணனின் இறுதிப் பயணத்திற்கு சென்றிருந்தார். லக்ஷ்மணனனோ, பரதனோ, செல்லமாளோ செல்லவில்லை. செல்வதா? வேண்டாமா? என்ற யோசனையில் இருந்ததினால் வீட்டில் தான் இருந்தனர்.
“என்ன ஜனனி நீ இந்த நேரத்துக்கு வந்திருக்க? ஆபிஸ் லீவ் போட்டுட்டு வந்தியா! ஏன்?” என்ற அம்மாவிடம்..
எதையும் மறைக்கவில்லை! பொய் சொல்ல முயலவில்லை!! வருவது வரட்டும் கூறிவிடலாம்!!! “கல்யாணம் பண்ணிக்கலாம்னு போனேன் மா!” என்றாள்.
“என்ன?” என்று அதிர்ந்து அவர் நிற்க..
“வாசுவோட அப்பா இறந்துடாங்களாமே அதனால அவர் வரலை!” என.. பெரியவர்கள் அத்தனை பேருமே அதிர்ந்து நின்றனர். இன்னும் வாசு தொடர்பில் இருக்கிறானா?
சரியாக அந்த நேரம் பார்த்து அனுராதா அழைத்தவர், “வராம இருக்காதீங்க! வந்துடுங்க! நமக்குள்ள நடந்த ப்ரச்சனை யாருக்கும் தெரியாது, இப்போ நீங்க அதைக் கொண்டு காரியத்துக்கு வராம இருந்தீங்கன்னா, அப்புறம் எங்க அப்பா அம்மா மட்டுமில்லை.. என் பிறந்து வீட்டு சொந்தங்க அத்தனை பேரும் என்னை ஒதுக்கிடுவாங்க.. வாங்க!” என அவரும் மன்றாட..
கல்யாணத்திற்கு போகவில்லை என்றால் கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்! ஆனால் காரியத்திற்கு செல்லவில்லை என்றால் அவ்வளவு தான்.. சண்டை என்ற வார்த்தை முடிந்து பகை என்ற வார்த்தை ஆரம்பித்து விடும் என்று புரிந்தவர் தான் லக்ஷ்மணன்..
பரதனைப் பார்த்து.. “வாடா! போயிட்டு வந்துடுவோம்!” என்றவர்.. கூடவே ஜனனியைப் பார்த்து, இவளையெல்லாம் திருத்த முடியாது .. திருந்தாத ஜென்மம்.. பட்டுக்கூட புத்தி வரலை.. நம்ம மானம் மரியாதையை எல்லாம் குழி தோண்டி புதைச்சிட்டு தான் விடுவா!” என்று வெறுப்போடு சொல்லிப் போக..
லக்ஷ்மணனாவது சொன்னார், பரதன் ஒரு வார்த்தைக் கூட மகளிடம் பேசவில்லை. வெறுப்போடு பார்த்து சென்றவர் தான்.. அதன் பிறகு மகளிடம் பேசவேயில்லை..
இப்படி வளர்த்தும் நம்மைப் பற்றி கொஞ்சமும் நினைக்கவில்லையே என்று ஓய்ந்து போனார். செல்லமாளுமே பேசவில்லை.. தாங்கள் எங்கு தவறினோம்.. எப்படிப் பெற்றவர்களை பற்றி சிறிதும் நினையாமல் மகளால் இப்படி ஒரு முடிவு எடுக்க முடிந்தது. ஒரு வேளை வாசுவின் தந்தை இறக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் வாசுவின் மனைவி, நினைக்கவே பிடிக்கவில்லை.
ஜனனி வாசுவைக் காட்டி இவரைத் தான் பிடித்திருகிறது, திருமணம் செய்து கொள்வேன் என்பது போலச் சொன்ன அன்று ஒரு ஆவேசத்தில் மகளை அடித்தது தான் பரதன்.. அன்று சாடியவர்கள் தான்.. அப்பொழுதே வாசுவின் அம்மா வந்து உன் மகள் என் மகனுக்கு பொருத்தமில்லை என்று சொன்ன பிறகு அவளே புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர்..
திரும்ப அதை பற்றி யாரும் ஒரு வார்த்தை பேசினர் இல்லை..
இப்படி தாங்கள் இருக்க, மகள் திரும்பவும் இப்படி ஒரு வேலை செய்தது பொறுக்வே முடியவில்லை.
“அப்படி என்ன அவன்கிட்ட இருக்குன்னு நீ அவன் பின்னாடி போகற .. கொஞ்சம் கூட மான ரோஷமே இல்லையா உனக்கு? அந்தம்மா பெரிய இவ மாதிரி வந்து என் பையனுக்கு உன் மக பொருத்தமில்லைன்னு சொல்லிட்டு போகுது!”
“இதுக்கு அது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிச்சு… பைத்தியமா இருந்த புருஷனை அத்தனை சொத்து சுகத்தையும் விட்டுட்டு இத்தனை வருஷமா கண்ணுக்குள்ள வெச்சி பார்த்துக்கிச்சு…”
“ஆனா உன்னோட காதலை அந்தம்மா கூட மதிக்கலை தானே! அவ்வளவு கேவலமாவாடி போயிட்ட நீ.. நீ அவ பையனோட கல்யாணம் பண்ணிக்க போய் நின்னிருக்க, வாழ்க்கையைக் கொஞ்சம் கூட நீ சீரியஸா எடுக்க மாட்டியா! இதெல்லாம் உனக்கு விளையாட்டா?” என்று செல்லமாள் வார்த்தைகளை கடித்து துப்ப..
கூனிக் குறுகி விட்டாள்! அதன் பிறகு தானும் கடினமாகி தன்னுடைய வாழ்க்கையையும் கடினமாக்கி கொண்டாள். வாசுவை காதலிக்க வைத்த அவளின் குறும்புத்தனம் விளையாட்டுத்தனம் எல்லாம் எங்கோ அவளிடம் மறைந்து விட்டது.
யாராலும் அதைத் தேடி எடுக்க முடியவில்லை. தேடி எடுக்க முடிபவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை…
தந்தையின் காரியங்கள் முடிந்து, அவளைக் காண ஓடி வந்தவனிடம், “வேண்டாம் வாசு! யாருக்கும் நம்ம சேர்றது பிடிக்கலை! யாருக்கும் நம்ம கல்யாணமும் பிடிக்கலை! கடவுளுக்கும் பிடிக்கலைப் போல, தடுத்துட்டார்!”
“நாம கல்யாணம் பண்ணி என்ன செய்யப் போறோம்!”
“ஜனனி!” என்று வாசு பார்த்தது பார்த்தபடி நின்றான். விரக்தியில் பேசுகிறாளோ என்று நினைக்க.. தெளிவாக பேசினாள்.
உன் அம்மா ஏன் அப்படி பேசினார்கள் என்று கேட்கவில்லை, தன்னுடைய அம்மாவைப் பற்றியும் குறை சொல்லவில்லை.. யாரைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லை.
“இத்தனைப் பேரை கஷ்டப்படுத்தி கல்யாணம் பண்ணி, சேர்ந்து வாழ்ந்து, குழந்தைங்களை பெத்துகிட்டு, என்ன பண்ண போறோம்.. அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வேண்டாம்!”
“நம்ம பிரிஞ்சிடலாம்!” என்று ஜனனி சொல்ல..
வாசுவால் எதுவுமே பேசவும் முடியவில்லை, செய்ய முடியவில்லை.. ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
சிறிது சமன்பட்டு வாசு என்ன பேசியும், “ப்ளீஸ் வாசு! வேண்டாம்! பிரிஞ்சிடலாம்! என்று பிடிவாதமாக நின்று விட்டாள்.
அப்போதைக்கு ஜனனியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாசுதேவன் “சரி!” என்பது போலத் தலையாட்டிவிட…
பிரிந்து விட்டனர்.. இந்த ஐந்து வருடங்களாக எந்த தொடர்பும் இல்லை. காலங்கள் செல்ல, வாசுவிற்கு ஜனனியின் நினைவுகள் அதிகமாக, சில முறை பார்க்க, தொடர்பு கொள்ள முயல, எதற்கும் அனுமதிக்கவில்லை.
பிரிந்தது எல்லாவகையிலும் பிரிந்ததாகவே இருந்தது!!
பிரிந்து தான் விட்டனரே தவிர.. யாராலும் யாரையும் மறக்க முடிவில்லை. இதயங்களின் துடிப்பே அடுத்தவரைக் கொண்டு தான்!!!