கணபதியே அருள்வாய்
மாயமாய் மந்திரமாய்
அத்தியாயம் ஒன்று:
மாயம் நீ! மந்திரம் நான்!
கோவை ரயில் நிலையித்தில் இருந்து சென்னை நோக்கி ரயில் வேகமெடுத்தது.
ட்ரைன் வேகமெடுக்க ஆரம்பிக்க ஆசுவாசமாய் மூச்சு விட்டாள் மாயா, மூச்சு தான் சீராகியது. மற்றபடி இதயம் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அவ்வளவு பதட்டம், கூட பயம்.
இந்த பயம் சரியாக செய்கிறோமா இல்லை தப்பாக செய்கிறோமா என்ற குழப்பத்தினால் வந்த பயம்.
எதிரில் இருந்தவர்களை பார்க்க, அவளை பார்த்து புன்னகைக்க முயன்றார்கள்.
ஆனாலும் அந்த புன்னகை மாயாவை தொற்றவில்லை. எதிரில் இருந்த நிர்மலை கலவரத்தோடு பார்த்தாள். “நத்திங் டு வொர்ரி, உன்னை பத்திரமா சென்னை கூட்டிட்டுப் போயிடுவேன்” என்றான்.
அதற்குள் அவனின் அலைபேசி அடிக்க, “பேசு” என்று அவளிடம் கொடுத்தான்.
அதில் ஸ்ரீநிதியின் நம்பர் ஒளிர “நிதி” என்று எடுத்தவுடனே அழைக்க, அவளின் குரலின் தழுதழுப்பை நிதி உணர்ந்தாள்.
“ரிலாக்ஸ் மாயா, ஒன்னும் பயமில்லை. நீ சென்னை இங்க வந்துட்டன்னா யாரும் ஒன்னும் பண்ண முடியாது. பயம் வேண்டாம். எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு” என்றாள்.
“ம்ம்” என்ற முனகல் மட்டும் மாயாவிடம்.
அவளின் எதிரில் இருந்த நிர்மல் அவளையே பார்த்திருந்தான். நிர்மலின் அருகில் தடி தடியாய் இரண்டு ஆண்கள்.
நிர்மலை ஸ்ரீநிதியின் வற்புறுத்தல் மட்டுமே இந்த வேலையை செய்ய வைத்திருக்கிறது. மனதிற்கு பயமாக இருந்தது. தாத்தாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் விளைவுகளை யோசிக்கக் கூட முடியாது.
அவனின் மனது மாயாவை விட பக் பக்கென்று அடித்துக் கொண்டு இருந்தது.
பயம் வேண்டாம் என்று மீண்டும் அவளிடம் சொல்லிய ஸ்ரீநிதி – “அவன் கிட்ட கொடு”
நிர்மலிடம் அலைபேசி கொடுக்கப் படவும், “டேய் அண்ணா பத்திரமா அவளை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்துடு” என்றாள்.
அலைபேசி எடுத்துக் கொண்டு அந்தப் பக்கம் நகர்ந்தவன், “அறிவுகெட்டவளே, உன்னால என்ன வேலை பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? நீ என்னை அதட்டுறியா. தாத்தாக்கு தெரிஞ்சது தொலைஞ்சோம்”
“தெரியும் போது பார்த்துக்கலாம். நாய்க்கு மட்டும் தான் நன்றி இருக்குமா மனுஷங்களுக்கு கிடையாதா? இப்போ மாயா தான் எனக்கு முக்கியம். எதுவும் செய்வேன் அவளுக்காக?”
“நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு தான் நானே பார்த்துக்கறேன்னு சொன்னேன். இடியட்” என ஸ்ரீநிதி பொறிய,
“நேர்ல வந்த பிறகு உனக்கு இருக்குடி” என்றான் காட்டமாக.
“வா, வா, ஐ அம் வெயிட்டிங் ப்ரோ” என்றாள் ஸ்ரீநிதி.
எதிரில் தன்னை பார்த்தபடி அமர்ந்திருந்த தடியர்களை சற்று பயத்தோடு பார்த்திருந்தால், அழுகை முட்டியது மாயாவிற்கு. மூன்று மாதங்களில் வாழ்க்கை எப்படி மாறி விட்டது. இப்படி ஒரு நாளை கனவிலும் நினைத்துப் பார்த்திருந்தாளில்லை.
மனது சஞ்சலத்தோடு நிர்மல் வந்து அவளின் எதிரில் அமர்ந்தான்.
அவனின் முகத்தினை பார்த்து “ஏதாவது பிரச்சனையாண்ணா” என்று கேட்ட மாயாவிடம் “எதுவும் இல்லை” என்று புன்னகைத்தான்.
“ஒன்றுமில்லை” என்று வாய் வார்த்தை மொழிந்தாலும் அவன் செய்வது தவறு என்று அவனிற்கு தெரியும். பின்னே அப்பா அம்மாவிற்கு தெரியாமல் அவர்களின் மகளை கூட்டிச் செல்கின்றான். பின் அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது தவறில்லாமல் என்ன?
ஆனாலும் அவளின் பெற்றவர்கள் மேல் அப்படிக் கோபம் வந்தது.
“நான் உங்க அப்பாக் கிட்ட பேசட்டுமா?”
“வேண்டாம்” என்பது போல தலையசைத்தாள்.
“ஒரு முயற்சி செய்யலாமே மாயா”
“பிரயோஜனமில்லை” என்று மெல்லிய குரலில் சொன்னவள் பின் கண்களை சோர்வில் மூடிக் கொண்டாள்.
மூன்று மாதத்திற்கு முன் தான் அவளுக்கு உறவுகள் இருப்பதே தெரியும். திடீரென்று இப்படி சிக்கல்கள் முளைக்கும் என்று எண்ணவில்லை. அப்பாவும் அம்மாவும் வாய் திறக்கவில்லை. என்னவென்று கேட்டாலும் சொல்லவில்லை.
நேற்று காலையில் இருந்து மாயா உணவருந்தவில்லை. உண்ணா விரதம் இருக்க, அதனை யாரும் கண்டு கொண்டாரில்லை. அது தான் அவளை சில முடிவுகளை எடுக்க வைத்தது.
“உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, நாங்கள் சொல்வது தான் என அவர்கள் இருக்க, நான் எதற்கு அவர்களை கண்டு கொள்ள வேண்டும்” மனதில் ஒரு இறுமாப்பு எழ, கிளம்பிவிட்டாள்.
“என்னால யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. நான் சென்னை போறேன்” என்று சொல்லி தான் வந்தாள்.
அம்மாவும் அப்பாவும் எவ்வளவு முயன்றபோதும் அவளை நிறுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நீலகண்டன் அமர்ந்து விட, சுகந்தி அவரிடம் என்ன செய்வது என பேசிக் கொண்டிருக்க, அவள் கிளம்பியே விட்டாள்.
இத்தனை வருடம் சீராட்டி பாராட்டி வளர்த்த அப்பா அம்மா இந்த நாட்களில் அந்நியமாகிப் போனார்.
கண்திறந்தவள் “அண்ணா எனக்கு பசிக்குது, ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?”
“இப்போ தானே கேட்டுட்டு போனாங்க, இரு பார்க்கிறேன்” என நிர்மல் எழ,
“இவங்க யாரையாவது அனுப்புங்க, நீங்க இங்கேயே இருங்க. எனக்கு இவங்களை பார்த்தா பயமா இருக்கு” என்றாள் வாய் வார்த்தையாக.
நிர்மலின் முகத்தினில் முறுவல், “உன்னை பாதுகாக்கத் தான் இவங்க” என்றான்.
அவனின் முறுவல் தொற்ற “சென்னை எக்ஸ்பிரஸ்ல வர தடியனுங்க மாதிரி இருக்காங்க” என்றாள் சிறு முறுவலோடு.
“தட்ஸ் த ஸ்பிரிட், இப்படியே சிரிச்ச மாதிரி இரு” என்றவன், “யாராவது வந்தா என்னால எல்லாம் சண்டை போட முடியாது. இவனுங்கன்னா பண்ணுவானுங்க. அதுக்கு தான் இவங்களை விட்டு போறேன்” என்றான் முறுவலோடு.
“யார் அண்ணா வருவாங்க, யாரும் வரமாட்டாங்க. நான் தெளிவா சொல்லிட்டு வந்திருக்கேன்”
“சம்திங் டெல்ஸ் மீ, உங்கப்பா அப்படியே விட மாட்டார்”
“வரட்டும் நான் பார்த்துக்கறேன். எங்கப்பா பிரச்சனையில்லை. என்னோட பயம் எல்லாம் இன்னொருத்தர் தான்” என்றாள்.
“யார்” என்பது போல ஒரு பார்வை பார்த்தவனிடம்,
“எனக்கு எங்கப்பா கல்யாணத்துக்கு சொல்ற ஆள். எனக்கு அத்தை இருக்குறதே இப்போ தான் தெரியும் அவங்க பையனாம்”
“ஆமாம் என்ன நடக்குது? எனக்கு ஒன்னும் தெரியலை. ஸ்ரீநிதி என்கிட்டே சொன்னது, அண்ணா நீ போ கோவை ரயில்வே ஸ்டேஷன்ல இரு, மாயா வருவா, அவளை கூட்டிட்டு வான்னு”
“என்னன்னு கேட்டா? அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு அவளுக்கு இஷ்டமில்லை வீட்டை விட்டு வர்றான்னு”
“நீ போகறியா நான் போகட்டுமான்னு நிக்கறா, ஒரே நைட்ல மலேசியாக்கு உனக்கு டிக்கட் போடறா. எனக்கு ஒன்னும் புரியலை. இது உன்னோட கல்யாண வயசு கிடையாது. ஏன் உங்கப்பா இப்படி பண்றார்” என்றான் ஆதங்கமாக.
“சொல்லிட்டேன், உங்க இஷ்டத்துக்கு எல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு தான் வந்தேன். ஆனாலும் பயமா இருக்கு”
பேசும் போதே ஈரோடு சந்திப்பு வர, ரயில் நிற்க, நின்ற ஒரு நிமிடத்திற்குள் இவர்களின் கூபேக்குள் நின்றிருந்தான் அவன்.
இவள் பார்த்ததும் அதிர்ச்சியில் கண்கள் விரிக்க, அவனின் பின் இவளின் அப்பா அம்மா,
“இறங்கு மாயா” என்று கடினக் குரலில் அவளின் அப்பா சொல்ல,
“முடியாது” என்பது போல அவள் அமர்ந்திருந்தாள்.
நிர்மல் அவர்களை பார்த்திருக்க, அவனுடன் வந்த ஆட்கள், “நீங்க யாரு கிளம்புங்க?” என்றனர்.
அவளின் அப்பா நிர்மலை பார்த்து “நீ யாரு?” என்றார் சற்று மிரட்டலாக.
“ஸ்ரீநிதியோட அண்ணா” என்று அதற்கு தான் பதிலளித்தாள் மாயா.
அவளின் அப்பாவின் முகத்தினில் சிறு யோசனை. ஸ்ரீநிதிய நன்கு தெரியும், அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கின்றான் என்றும் தெரியும். ஆனால் அவன் தான் இவனா என்று தெரியாது.
பின்னே அப்படியே மாறியவர் “எங்க வீட்டு பொண்ணை நாங்க கூட்டிட்டு போறோம். ப்ளீஸ் தடுக்காதீங்க” என நிர்மலை பார்த்து தன்மையாகவே உரைத்தார்.
“வந்தா கூட்டிட்டு போங்க. ஆனா கட்டாயப்படுத்தக் கூடாது” என்று நிமிர்வாகவே நிர்மல் சொன்னான்.
பதில் பேச வந்த மாயாவின் அப்பாவை பார்த்து பேச வேண்டாம் என்பது போல சைகை செய்து அதுவரை பேசாமல் இருந்த அவன், நிர்மலை பார்க்காமல் மாயாவை பார்த்து “கிளம்பு” என்றான்.
“முடியாது” என்பது போல மாயா அசையாமல் நின்றாள்.
“கிளம்புன்னு சொன்னேன்” என உறுமினான். அதற்குள் ட்ரைன் நகரத் தொடங்கி இருந்தது.
“எனக்கு உங்களை கல்யாணம் செஞ்சுக்க இஷ்டமில்லை” என்று மாயா சொல்ல,
“உங்க அப்பா அம்மா பொய் சொல்றாங்கலோன்னு தான் பார்க்க வந்தேன். அவங்களே ஒருவேளை உன்னை அனுப்பி வெச்சிட்டாங்கலோன்னு, அப்படி இல்லை போல” என அவளைப் பார்த்து சொன்னவன்,
“உன்னை மாதிரி ஓடிப் போற பொண்ணை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு ஒன்னுமில்லை. உங்க அப்பா பழக்கம் உனக்கும் இருக்கு போல” என நிறுத்தினான்.
நீலகண்டன் ஒன்றும் செய்ய முடியாதவராக அதனை சகித்து நிற்க. அவளின் அம்மாவின் முகம் கசங்கியது.
“ஓடிப் போறனா? எங்க ஓடி போறேன்? எங்க ஊருக்கு எங்க வீட்டுக்கு போறேன்” என்று ஆவேசமாக மாயா பதில் பேசினாள்.
நிர்மலை ஒரு பார்வை பார்த்தான் “அப்போ இவன் யார் என்பது போல”
அதனை மாயா உணர்ந்தாலும் அதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை, “நான் வரமாட்டேன்” என ஸ்திரமாக சொல்ல,
“உன்னை தான் கல்யாணம் பண்ணனும்னு எனக்கு எதுவும் கிடையாது. உங்கப்பாவோட பொண்ணை கல்யாணம் பண்ணனும், அவ்வளவு தான்! நீயில்லைன்னா உன் தங்கை இருக்காங்கல்ல, ஒருத்திக்கு ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களை பண்ணிக்கறேன்” என்று திரும்ப எத்தனிக்க,
“ஏய் என்ன பேசற?” என்று அவசரமாக மாயா பதில் பேச,
“ஏய் கீய்ன, பல்லை பேத்துருவேன். உங்களுக்கெல்லாம் மனுஷங்களையும் தெரியாது, மரியாதையும் தெரியாது” என்று சொல்லிக் கொண்டு, அவளை நோக்கி எட்டு வைத்த விதத்தில் பயந்து பின் வாங்கினாள்.
நிர்மல் இப்போது அவனை பார்த்து “என்ன கலாட்டா இது? அவங்க சின்ன பொண்ணுங்க, ஒருத்தி பதினொன்னாவது ஒருத்தி ஒன்பதாவது” என்றான்.
“நீ யாருடா?” என்று நிர்மலை பார்த்து கேட்க,
“என்ன டா போட்டு பேசற?” என அத்தனை நேரம் அமைதியாய் நிர்மலின் கண் அசைவிற்காக காத்திருந்த அடியாட்கள் அவனை நெருங்க,
கட்டியிருந்த வேஷ்டியை மடித்துக் கட்டினான் சற்றும் அசராமல்.
“நீ யார் கிட்ட பேசற தெரியுமா?” என்று அதில் ஒருவன் சவுன்ட் விட,
“எவனா இருந்தா எனக்கென்ன இல்லை எமனா இருந்தாதான் எனக்கென்ன?” என்று கண்களில் பாவனையில் அத்தனையிலும் அலட்சியத்தை தேக்கி கேட்டான்.
நிர்மல் அவனின் பாவனையில் அசந்து தான் நின்றான்.
எங்கே அடி தடி ஆகிவிடுமோ என்று மாயா தான் அவசரமாக “அவர் சி எம் பேரன்” என்றாள்.
“இருக்கட்டும், அதுக்கு?” என்று அப்போதும் தெனாவெட்டாக கேட்டான்.
அவனுக்கு புரியவில்லையோ என நினைத்து, “முதலமைச்சர் பேரன்” என்றாள் மீண்டும்.
“அப்படியா” என்று போலி ஆச்சர்ய பாவனை காட்டியவன், அந்த அடியாட்களிடம் “டேய் பத்திரமா பார்த்து கூட்டிட்டு போங்கடா” என அலட்சியம் குறையாமல் சொன்னான்.
அதுவரை நிதானம் இழக்காமல் இருந்த நிர்மல், “என்ன ஓவரா பேசற” என சற்று கோபமாகக் கேட்க,
“அப்படி தான் பேசுவேன், என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ போடா” என்றவன்,
“எனக்கு இப்போ சண்டை போட நேரமில்லை. நிறைய வேலை இருக்கு. என் வீடு இங்க இருக்குற இவ அப்பா அம்மாக்கு தெரியும். எப்போ வேணா வீட்டுக்கு வா, சரியா” என்று சொல்லி, ட்ரைனி கதவு அருகில் சென்றான்.
ஒரு இடத்தினில் அது வேகம் குறையவும் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி விட்டான்.
ஆ என்று எல்லோரும் பார்த்திருக்க, “அச்சோ பொண்ணுங்க அங்க இருக்காங்க” என்று சுகந்தி அலற,
ரயிலை நிறுத்த நீல கண்டன் பார்க்க,
அதற்குள் அந்த அபாய சங்கிலியை மாயா இழுக்க முயல, நிர்மலின் கண்ணசைவில் அவனின் அடியாட்களில் ஒருவன் இழுத்து நிறுத்தினான்.
இன்னம் ஈரோடு ஊர் தாண்டவில்லை, நீலகண்டனும் சுகந்தியும் இறங்க, கூடவே மாயாவும் இறங்கினாள். அவளை தொடர்ந்து நிர்மலும் இறங்கினான்.
“நீங்க செக்ரட்ரியேட்ல இருக்கீங்க எனக்கு தெரியும். ஹை போஸ்ட்ல இருக்கீங்க, யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எதுக்கு உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு கல்யாணம்” என நிர்மல் கேட்க,
பதில் சொல்லப் பிரியப் படாதவராக, “எங்க தலையெழுத்து என்னவோ நடக்கட்டும், இவளை கூட்டிட்டு போயிடுங்க” என்றார்.
மாயா அவர்களை முறைத்து நின்றாள்.
“என்ன பிரச்சனை சொல்லுங்க? சரி பண்ணிக்கலாம்! அப்படி எல்லாம் உங்க பொண்ணுங்களை யாரும் எதுவும் பண்ண முடியாது. நான் இருக்கேன். நான் பார்த்துக்கறேன்” என நிர்மல் தைரியம் கொடுக்க,
“போகலாம்” என்று சுகந்தி அவசரப்பட, அங்கிருந்து எப்படி உடனே ஊருக்கு போவது என்று தெரியாமல் நீலகண்டன் தடுமாறினார்.
“அண்ணா எங்களுக்கு ஒரு டேக்சி அரேஞ் பண்ணிக் கொடுங்க, நாங்க போறோம்!” என்று மாயா சொல்ல,
“என்ன அண்ணனா” என்று அம்மாவும் அப்பாவும் பார்த்தனர்.
அந்த பார்வையை அலட்சியப் படுத்தியவள், “குடுங்க” என நிர்மலை பார்த்து சொல்ல,
“நிதி திட்டுவாளே”என்றான்.
“நானே போயிட்டேன், நான் மந்திரனை பார்த்து இம்ப்ரெஸ் ஆகிட்டேன்னு சொல்லிடுங்க”
“பேர் என்ன?” என்று நிர்மல் கேட்க,
“எல்லோரும் மந்திரன் தான் கூப்பிடுவாங்க, நான் கவனிச்சு இருக்கேன்”
“பேர் திரு மந்திரன். என்னோட அக்கா பையன்” என்றார் நீலகண்டன்.
“நான் சொன்னாலும் நிதி நம்ப மாட்டா” என்றவன்,
“எதுக்கு பயம்?” என்றான் அவளின் அம்மாவை பார்த்து, “நான் பார்த்துக்கறேன் வாங்க” என ஒரு கார் அழைத்தான்.
“இல்லை வேண்டாம், இது எங்க குடும்ப விஷயம். நாங்க பார்த்துக்கறோம்” என்றார் நீலகண்டன்.
“அப்பா பயம் வேண்டாம், யாரும் நம்மை கட்டாயப் படுத்த முடியாது” என்றாள் மாயா எப்படியாவது அவர்களின் மனதினை மாற்றும் பொருட்டு.
“யாரும் கட்டாயப் படுத்தலை. இது என்னோட முடிவு தான். மந்திரன் சொன்ன மாதிரி நீ இல்லைன்னா உன்னோட தங்கையை தான் கொடுப்பேன்” என்றார் ஸ்திரமாக.
“என்ன நீங்க புரிஞ்சு தான் பேசறீங்களா? இவளுக்கே இன்னும் கல்யாணம் செய்யும் வயசாகலை இப்போ தான் காலேஜ் முதல் வருஷம் படிக்கறா, உங்க இன்னொரு பொண்ணை கொடுப்பீங்களா?” என்று நிர்மல் எகிற,
“வா சுகந்தி போகலாம்” என்று அவர் நடக்க ஆரம்பித்தார்.
“தம்பி பேசிட்டு இருக்காரில்லை” என்று நிர்மலின் ஆட்கள் அவர் நடக்க விடாமல் குறுக்கில் நின்றனர்.
“அண்ணா ப்ளீஸ், இவங்க மாற மாட்டாங்க. இவங்களுக்கு பிறந்த பாவத்துக்கு என்ன அனுபவிக்கணுமோ அனுபவிக்கறேன். இவருக்கு பொண்ணுங்க மேல அக்கறை இல்லாம இருக்கலாம். எனக்கு என் தங்கைங்க மேல இருக்கு, என்னாலயே இந்த விஷயத்தை டைஜெஸ்ட் பண்ண முடியலையே அவங்க எப்படி பண்ணுவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப சென்சிடிவ் கூட, எந்த ப்ராப்ளம்னாலும் இருந்து ஃபேஸ் பண்றேன்” என்றவள்,
அருகில் இருந்த காரில் ஏறி “ஏறுங்க” என்றாள் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து.
நிர்மல் மாயாவை கவலையாகப் பார்த்திருந்தான், அந்த மந்திரன் இவளுக்கு சற்றும் பொருத்தமில்லை. மாயா சென்னையின் நவநாகரீக மங்கை, மந்திரனை பார்த்தால் அப்படி ஒரு தோற்றமில்லை.
ஒரு பக்கா கிராமத்து ஆளின் தோற்றம். இன்றைய காலகட்டத்தில் யார் வேஷ்டியில் இருக்கின்றனர். அவன் இருந்தான். படித்திருக்கிறானா இல்லையா தெரியவில்லை.
சீ எம் மின் பேரன் என்று சொல்கின்றேன் அப்படி பேசி செல்கின்றான். நாட்டு நடப்பு தெரிந்தவனா? எப்படி இப்படி ஒரு அசட்டு துணிச்சல்? வீடு வா என்று சொல்லிச் செல்கின்றான்.
நிர்மல் யோசிக்கும் போதே நிதி அழைக்க, எடுத்தவுடனே “மாயா கிட்ட கொடு” என்றாள்.
“ஊருக்கு திரும்ப போறா அவ அப்பா அம்மாவோட”
“ஏன் ஏன்” என்று நிதி பதட்டப்பட,
“நத்திங் டு வொர்ரி, இது அவ டெசிஷன் தான். அவ மந்திரன் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிட்டாலாம். சொல்ல சொன்னா”
“மந்திரனா எவன் அவன்? என்ன பேர் இது?” என்று நிதி கேட்க,
அவள் கேட்ட மந்திரன், அதற்குள் ரயில் நிலையம் சென்று அவர்கள் வந்திருந்த காரை எடுத்துக் கொண்டு கோவை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.
நிச்சயம் அவனுக்கு யாரையும் மணந்து கொள்ளும் எண்ணம் இல்லை. இது ஒரு கட்டாயம் மட்டுமே அவனிற்கு. இந்த மாயா திரும்ப வந்து விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது. இல்லை இவர்கள் அனைவரும் கண்காணாமல் சென்று விட்டால் கூட பரவாயில்லை என்று தோன்றியது.
அவளின் தங்கைகள் சிறுமிகள். அவர்களை வாய் வார்த்தையாக திருமணம் செய்வேன் என்று சொல்வது கூட அவனிற்கு பாவமாகத் தோன்றியது. உண்மையில் அவன் விரைவது அவர்களின் பாதுக்காப்பிற்கு தான்.
இந்த திருமணப் பேச்சு வார்த்தையை நினைக்கக் கூட பிடிக்கவில்லை. என்ன செய்வது என்றே அவனிற்கு தெரியவில்லை.
வாழ்க்கையின் மீது அப்படி ஒரு கோபம் வந்தது.
இன்னும் எத்துனை நாட்கள் என்னை ஓட ஓட விரட்டுவாய். இளைப்பாற விடுவாயா? மாட்டாயா? அதனோடு சண்டையிட ஆரம்பித்தான்.
அவன் இளைப்பாற தான் வாழ்க்கை அவனை விரட்டுகின்றது என்று புரியாமல்.
மாயை நான்!
மந்திரம் நீ!