மலர் 20:
செல்வாவின் திருமணம் நின்றதற்கு வெற்றியே காரணம் என்று முழுதாக நம்பினார் சத்யா.
ஏனோ அன்றிலிருந்து வெற்றியை அவருக்கு பிடிக்காமல் போனது.அதற்கு பின் நடந்த நிகழ்வுகள்….அவரை அப்படி மாற்றியிருந்தது.
நினைவுகளில் இருந்து மீண்டான் வெற்றி.
கிடைக்கவே மாட்டாள் என்று எண்ணிய மலர்…இன்று அவனின் மனைவியாக இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
“நீ எனக்கு முக்கியமில்லை..” என்பதைப் போல் சென்றுவிட்டாள்.
உணர்வுகள் கொந்தளிக்க….கோபமும் கண்ணை மறைக்க…அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான் வெற்றி.
வீட்டிற்கு சென்ற துர்காவிற்கோ மனமே ஆறவில்லை.
“இவன் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே…!கடைசில இப்படி என் தலையில் இடியை போட்டுட்டானே..!” என்று நடு ஹாலில் அமர்ந்து அழத் துவங்கினார்.
“கொஞ்ச நேரம் அமைதியா இரு துர்கா….!வெற்றி காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான்…. அவனே சொல்லுவான்.. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு..!” என்றார் ரத்தினம்.
“ஆமா அத்தை..வெற்றி இப்படி பண்ணிருக்காருன்னா அதுக்கு பின்னாடி விஷயம் இல்லாம இருக்காது. எங்களுக்கு என்னவோ மலரை தான் பிடிச்சிருக்கு…” என்றனர் கலாவும்,தாரணியும்.
“ஹோ..! அண்ணிங்க எல்லாம் அவனுக்கு கூட்டா…?” என்றார் துர்கா கோபமாய்.
“ஐயோ..அத்தை …! இப்படி நடக்கும்ன்னு எங்களுக்கு முன்னமே தெரியாது…ஏதோ எங்க மனசில் பட்டதை சொன்னோம்…” என்றனர் இருவரும்.
“எனக்கும் முதல்ல இருந்தே ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருந்ததும்மா…ஆனா இப்ப இல்லை..” என்றான் கண்ணன்.
“என்ன கண்ணா சொல்ற..?”
“ஆமாம்…கவியோட கண்ணுல திமிர் தெரியுது…மலரோட கண்ணுல அமைதி தான் தெரியுது…குடும்பத்துக்கு அமைதி தான் முக்கியம்ன்னு நான் நினைக்கிறேன்…அதுக்கு மேல் உங்க விருப்பம்..!” என்றபடி நகர்ந்து விட்டான்.
கண்ணனின் வார்த்தைகளைக் கேட்ட ரத்தினமும் ஒரு நிமிடம் யோசனைக்கு தாவினார்.
அங்கே மலரோ….
விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“நீ செஞ்சது தப்பு சத்யா..!” என்றார் திவாகர் கண்டிக்கும் குரலில்.
“நான் என்ன தப்பு பண்ணேன்..!அவனால் தான் என் பையன் கல்யாணம் நின்னது….அதனால் தான் என் பையன்..என் பையன்…இப்ப என்கூட….” என்று மடங்கி அமர்ந்து அழத் துவங்கினார்.
“ஷ்..அழாத சத்யா…இதுவரைக்கும் அழுதது போதும்…இப்ப கூட.. நீ இல்லாத பையனைப் பத்தி தான் யோசிக்கிறியே தவிர….இருக்குற மலரை பத்தி ஏன் யோசிக்கலை…அவளோட வாழ்க்கையை பத்தி ஏன் யோசிக்கலை..?” என்றான்.
“நீங்க என்ன சொல்றிங்க..?”
“போதும் சத்யா…அந்த பையன் செய்தது சரின்னு நான் சொல்ல வரலை…அதுக்காக தப்புன்னும் சொல்ல மாட்டேன்….ஏற்கனவே நாம எடுத்த ஒரு தப்பான முடிவால..நம்ம பையனை இழந்தோம்…இப்போ மலரையும் இழக்கனுமா..?” என்றார்.
“என்னங்க..?” என்று அதிர்ந்தார் சத்யா.
“ஏத்துக்கறது கொஞ்சம் கஷ்ட்டம் தான் சத்யா.ஆனா இது தான் நிதர்சனம்.ஏதோ அந்த கடவுளா பார்த்து.. மலருக்கு இன்னொரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருக்கார்..அதை நாம ஏன் கெடுக்கணும்…அவ நல்லா இருந்தா அதை விட நமக்கு என்ன வேணும் சொல்லு..!” என்றார்.
சத்யாவின் முகம் யோசனைக்கு தாவ…
“ஏற்கனவே அந்த பையன் வந்து கேட்டான்…மலரை மணம் முடிக்க..நீதான் மறுத்துட்ட…அதான் அவன் கிடச்ச வாய்ப்பை விடாம பிடிச்சுகிட்டான்…” என்றார் திவாகர்.
உள்ளிருந்து…. இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மலருக்கு இது புது செய்தி.வெற்றி தன்னை மனம் முடிக்க கேட்டு இருப்பான் என்று அவளுக்கு தெரியாது…அதை அவளால் நம்பவும் முடியவில்லை. கேட்ட செய்தியின் தாக்கம் அவளை மேலும் நிலை குலைய வைக்க..கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
“இப்ப என்னை என்ன செய்ய சொல்றிங்க..?” என்றார் சத்யா இயலாமையுடன்.
“மலர் அவ கணவன் கூட சேர்ந்து வாழ்றது தான் முறை..ஏதோ கோபத்துல கிளம்பி வந்திருக்கலாம்… ஆனா அவளுக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கு…எத்தனை நாளைக்கு நாம அவளுக்கு துணையா இருப்போம்…நாம வாழ்க்கையை வாழ்ந்து முடுசுட்டோம்…மலர் வாழ வேண்டிய வயசு…இனி என்ன செய்யனும்ன்னு நீதான் யோசிக்கணும்..!” என்றார்.
“அதுக்காக அந்த வெற்றியை மன்னிக்க சொல்றிங்களா..?” என்றார் சத்யா.
“மன்னிக்கிற அளவுக்கு அந்த பையன் எந்த தப்பும் பண்ணலை.எல்லா தப்பும் நம்ம செஞ்சது தான்…இடையில் பலியாடு மாதிரி அவனை வைத்து ஆடியிருக்கோம்…அவ்வளவு தான்…” என்றார் திவாகர்.
“இப்ப என்ன பண்ணனும்….?” என்றார் சத்யா.
“மலரை நாம தான் அவங்க வீட்டில் கொண்டு போய் விடனும்…அது நம்போட கடமையும் கூட…வளர்த்தோம்..வளர்த்தோம்ன்னு சொல்லி..இனியும் அவ வாழ்க்கையை பாலாக்க நான் விரும்பல…” என்றார்.
“உங்களுக்கு எப்படி தோணுதோ..அப்படியே செய்யலாம்..” என்ற சத்யா தளர்வாக சோபாவில் சாய்ந்து கண் மூட…
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மலருக்கு…. ஏதோ வாழ்க்கையே பிடிமானம் அற்று…தொங்குவதைப் போன்று தோன்றியது.
தனக்கு மட்டும் திருமணம் நல்ல முறையில் நடக்க கூடாது என்று அந்த கடவுள் நிர்ணயித்து விட்டாரோ…? என்று எண்ணினாள்.
அன்று செல்வாவுடன் முடிந்த திருமண நாளை எண்ணிப் பார்த்தாள்.
வேறு வழியின்றி…தாலி கட்டிய செல்வா…. வளர்த்தவர்களின் வாக்குக்காக தாலியை ஏற்றுக் கொண்ட மலர்…இது தான் அன்றைய நிதர்சனம்.
தாலி கட்டிய நிமிடம் முதல்…மலரை நிமிர்ந்து பார்க்கவே செல்வா விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும்…..அவர்களின் வீடு இருளை மட்டுமே பூசி இருந்தது.
செல்வா தனிமையைத் துணை கொண்டு…மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருந்தான்.
மலருக்கோ…அவனின் அருகில் சென்று பேச கூட பயமாக இருக்க…தன் அறைக்குள் முடங்கினாள்.
கொஞ்ச நாளில் சரியாய் போய்விடும் என்று சத்யா என்ன…..
”தவறு செய்து விட்டோமோ..?” என்று முதன் முறையாக திவாகர் வருந்தினார்.
தங்களுடைய விருப்பத்தை திணித்தது தவறோ என்று என்ன ஆரம்பித்தார்.அவர்களின் பார்வையில் நடந்த எதுவும் அவர்களுக்கு தப்பாக தோன்றவில்லை அந்த நிமிடம்.சிறு வயது முதலே… இருவருக்குமான முடிச்சினை தான் போட்டு வைத்திருந்தனர்.அதுவே நிஜமாகிப் போனதில் அந்த சமயம் வருத்தம் ஏற்படவில்லை.
ஆனால் வீட்டில் இருக்கும் செல்வாவின் நிலை கண்டு அந்த நிமிடம் பயந்தார் திவாகர்.
“எங்கே தன் மகன் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவானோ..?” என்று அஞ்சினார்.
அதற்கு ஏற்றார் போல் தான் இருந்தது செல்வாவின் நடவடிக்கைகளும். அவன் யாரையும் தன்னிடம் அண்டவிட வில்லை.
பத்து நாட்கள் ஆன நிலையில்…
செல்வாவின் அறையில் சத்தம் கேட்க…என்னமோ..?ஏதோ என்று ஓடி சென்று பார்த்தனர் சத்யாவும்,திவாகரும்.
அங்கு செல்வாவோ……கண்கள் நிலை குத்திய நிலையில்…கை கால்கள் மரத்து போய்…மயங்கி இருந்தான்.
அவனின் நிலை பார்த்து சத்யா கத்திய கத்தலில்…..மலர் அரக்க பறக்க ஓடி வந்தவள்….செல்வாவின் நிலை கண்டு தவித்தாள்.
“செல்வா..செல்வா..!” என்று அவனைத் தட்ட…அவனிடம் எந்த பதிலும் இல்லாமல் போனது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான் செல்வா.குடும்பமே வெளியில் அவனுக்காய் தவம் இருக்க…..வெளியே வந்த டாக்டர் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்தனர் மூவரும்.
“என்ன சொல்றிங்க டாக்டர்…?” என்றாள் மலர் அழுகையுடன்.
“எஸ்…அவருக்கு பிபி…தாறுமாறா கூடியிருக்கு….இப்படி கூடினா…கொஞ்சம் இனிப்பை போட்டுட்டு….டாக்டரை பார்க்க போயிடனும்.ஆனா அவர் அதை செய்யலை.தீவிர மன அழுத்தத்தில் இருந்திருக்கார். அளவுக்கு அதிகமான மன அழுத்தம்,அளவுக்கு அதிகமான பிபி…அவர் மூளை வரை தாக்கியிருக்கு…. மூளை நரம்பு வெடிக்கிற அளவுக்கு…” என்று மருத்துவர் நிறுத்த…
“என்ன சொல்றிங்க டாக்டர்..?” என்றபடி நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்து விட்டார் சத்யா.
“எஸ்….அவருக்கு மூளை நரம்புகள் வெடிச்சு…அபாய கட்டத்தில் இருக்கார்…ஒன்னு உயிருக்கு உத்திரவாதம் இல்லை…இல்லைன்னா அவர் கோமாவுக்கு போக வாய்ப்பிருக்கு…எதுன்னாலும் இரண்டு மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும்…” என்றபடி டாக்டர் நகர….
மலரின் விழிகளோ…நிலை குத்தி நின்றது.கழுத்தில் ஏறிய மாங்கல்யம்….இப்பவோ..அப்பவோ…என்று ஊசல் ஆடுவதைப் போன்ற பிரம்மை அவளுள்.
கணவன் என்று பாராவிட்டாலும்….செல்வா அவள் உடன் வளர்ந்தவன்..அவளை இமை போல் காத்தவன்.. அவளுக்காக அழுது,அவளுக்காக சிரித்தவன்… தோழனாய்,தமையனாய்,மாமனாய் நின்று அனைத்தையும் செய்தவன்…..அவன் இன்று ….இப்படி…யார் காரணம்….? என்று எண்ணியவளுக்கு துக்கம் தொண்டை அடைக்க…
“இங்க மலர் யாரு..?” என்றபடி வந்தார் நர்ஸ்.
“நான் தான்…” என்றாள் முன் வந்து.
“பேஷன்ட் உங்களைப் பார்க்க விருப்பபடுறார்…கொஞ்சம் சீக்கிரம் வாங்க…!அவருக்கு நினைவு எவ்வளவு நிமிஷம் இருக்குன்னு தெரியலை..!” என்றபடி அழைக்க…
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள்.
பத்து நாட்களுக்கு முன்பு மணக்கோலத்தில் பார்த்தவனை..இப்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்க்க அவளால் முடியவில்லை.
“மலர்..!” என்று அவன் மெதுவாய் அழைக்க…
“செல்வா….!உனக்கு ஒன்னும் இல்லை செல்வா..உனக்கு ஒன்னும் ஆகாது செல்வா…!” என்று பேசிக் கொண்டே சென்றவளை நிறுத்தியது அவன் குரல்.
“நான் சொல்றதை கேள்..! இந்த தாலியைக் கழட்டிடு…இதுக்கு எந்த அர்த்தமும் இல்லை….நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ…நீ சந்தோஷமா இருக்கணும்…அம்மா,அப்பா உன் பொறுப்பு….ஒரு வேளை நான் பிளைக்கலைன்னா…என் உடல் உறுப்புக்களை தானம் பண்ணிடு…” என்று பேசிக் கொண்டே சென்றவன்…மீண்டும் நினைவிழந்து போனான்.
மலரால் அவன் அருகில் அமர்ந்து அழ மட்டுமே முடிந்தது.இப்படி நிலைமையிலும் என்னை பத்தி தான் யோசிக்கிறியா செல்வா..? என்று எண்ணி எண்ணி மனம் குமைந்தாள்.
இரண்டு நாட்கள் அப்படியே செல்ல….
சொல்லப்படாத உணர்வுகள்…..வெளியில் காட்டாத கோபம்.. அடக்கப்பட்ட ஆத்திரம்….விரும்பியது கிடைக்காத இயலாமை… அனைத்தும் சேர்ந்து செல்வாவை இந்த உலகில் இருந்து பிரித்துக் கொண்டது.
மன அழுத்தமே ஒருவனின் உயிரை வாங்கிவிடும் என்பது செல்வாவின் விஷயத்தில் உண்மையாகிப் போனது.
புதுத் தாலியின் மஞ்சள் கூட காயாமல்…அது மலரின் கழுத்தில் இருந்து இறங்கி இருந்தது.
தன்னால் தான் தன் மகன் இறந்தான்…மலர் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டால்…என்று எண்ணிய.. சத்யாவும்,திவாகரும்… அறைக்குள்ளேயே முடங்கினர்.மகனின் இழப்பு அவர்களுக்கு… வாழ்க்கையையே பிடிப்பற்றதாக மாற்றியது.
மலருக்கோ…எங்கு திரும்பினாலும்…செல்வா இருப்பது போன்ற பிரம்மை..சாப்பிடும் போதும்…தூங்கும் போது..நடக்கும் போது….இப்படி எல்லா செயலிலும் செல்வா நின்று சிரித்துக் கொண்டிருப்பதைப் போன்று தோன…..
மெல்ல தன் துக்கத்தில் இருந்து வெளி வரத் துவங்கினாள் மலர்.தானும் முடங்கினாள்….சத்யா-திவாகரும் மனம் ஒடிந்து போவார்கள் என்று எண்ணியவள்……நடைமுறையை ஏற்றுக் கொண்டு வாழப் பழகினாள்.
ஆண்டுகள் சென்றது….மலர் தன் படிப்பை முடித்தாள்.கடின உழைப்பின் காரணமாக அவள் எழுதிய முதல் பேங்க் தேர்விலேயே வெற்றி பெற்று…வேலைக்கு சென்று வர ஆரம்பித்தாள்.
சத்யா கூட நடந்தை மறந்தாலும்..திவாகருக்கு மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது.மலருக்கு நல்லது செய்யவில்லையோ என்று…?
அதன் வெளிப்பாடு தான் இன்று சத்யாவிடம் அப்படி பேசியது.
செல்வாவின் நினைவிலிருந்து வெளிவந்தாள் மலர்.அவள் முன்னால் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான் செல்வா.
“என் நிலமைய பார்த்தியா செல்வா…?” என்று மனதிற்கு வெதும்பியவள்…அவன் கண் முன் இருப்பதாய் நினைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
“நீ இருந்திருந்தா..எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா செல்வா…? என் கழுத்தில் தாலியை கட்டிவிட்டோம்…என்ற குற்ற உணர்விலேயே.. எங்களை விட்டு போயிட்டியா செல்வா…?” என்று அவள் தேம்பித் தேம்பி அழ…
அவளின் அழு குரல் கேட்டு உள்ளே வந்த திவாகரின் கண்களும் கலங்கியது அவள் நிலை கண்டு.
“மலர்..” என்று அவர் அழைக்க…
“அப்பா..” என்று அவர் மடி சாய்ந்தாள்.
“அழாதம்மா…இவ்வளவு நாள் எங்களுக்கு தைரியம் சொல்லிட்டு …இன்னைக்கு நீயே இப்படி அழுதா எப்படி…?” என்று அவர் ஆறுதல்..சொல்ல…அவரின் வார்த்தைகளில் மெல்ல அடங்கினாள் மலர்.
“வெற்றி தான் உனக்கு கணவன்…இதை உன் மனசில் பதிய வை மலர்.இனி அது தான் உன் வீடு…இனி நீ அங்க தான் இருக்கணும்… எங்களுக்காக நீ பார்க்க வேண்டாம் மலர்…நாங்க அடிக்கடி வந்து உன்னைப் பார்க்குறோம்..!” என்று அவர் ஆறுதல் சொல்ல…
மலருக்கோ..என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் கலங்கிய விழிகளுடன் இருந்தாள்.