மலர் – 13
“என்ன டி தங்கோ… இன்னு ஒரு தகவலு வரல… எனக்கென்னவோ பயமா இருக்கு டி.. எங்கம்மா வேற நேரோ போக போக ரொம்ப அழுது பொலம்புது.. நானு எம்புட்டு நேரந்தே எதையு வெளிக்காட்டாம இருக்குறது..” என்று வந்த கண்ணீரை துடைபடி புலம்பும் அன்னமயிலை பாவமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தங்கமலர்.
அவளுக்குமே என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. அக்கம் பக்கத்துக்கு மலை கிராமங்களில் தேடவென்று கரிகாலனும், மற்றும் சிலரும் கிளம்பி சென்று முழுதாய் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் எந்த உருப்படியான தகவலும் வந்து சேரவில்லை.
சோலையூர் மலை பகுதியிலேயே தேட சென்ற மற்றொரு பகுதியினரோ நல்ல செய்தியோடு திரும்பவில்லை.. அன்னமயிலின் தந்தையை பற்றி எந்த தகவலும் கிடைக்காதிருக்க, அவளையும் அவளது அன்னனையும் சமாதானம் செய்வது என்பது பெரும் காரியமாய் இருந்தது அனைவருக்கும்.
“இந்த மனுசே நா கேக்குறப்ப எல்லா சரியாத்தே வட்டிய கட்டுறேன்னு சொல்லி சொல்லியே ஏ வாய அடச்சிடுச்சு மதினி… மூத்தவளுக்கு எப்புடியோ கடன உடன வாங்கி ஒரு பொழப்ப அமச்சு குடுத்த கணக்கா, இவளையு ஒரு எடத்துல கொடுத்துட்டா, வர்ற வருமானத்துல கடன அடச்சு, கடசி காலத்துல கொஞ்சோ நிம்மதியா இருக்கலாம்னு நானு நெனச்சே.. ஆனா இப்புடி எந்தலையில இடிய இருக்கிப்புட்டு போயிட்டாரே….” என்று அழுபவரிடம் என்ன சொல்லி ஆறுதல் படுத்த முடியும்..
ஆனாலும் மரகதம் “இங்கியாரு சரசு, மனச இப்புடி வெசனப்பட வெக்கலாமா ??? என்னத்தே ஆம்பிளைங்க சம்பாரிச்சு வந்தாலு நாமளு என்ன எதுன்னு விசாரிக்கணு. அப்பதே பொழப்பு நல்லாருக்கு… இப்பவு ஒன்னு கேட்டு போகல, ஒம்புருசே யாருகிட்ட கடன வாங்கியிருக்காகன்னு தெரிஞ்சா தங்கோ அய்யன போயி அவங்ககிட்ட பேசி பாத்துட்டு வர சொல்லுவோம். கொஞ்சோ அவசாசோ கேப்போம்…” என்று யோசனை கூறினார்.
“எனக்கென்ன மதினி தெரியு.. மூத்தவ இருக்கவர அவகிட்ட எல்லாத்தையு இந்த மனுசே சொல்லு.. அன்னத்துகிட்ட அம்புட்டு பேசாது.. எங்கிட்ட.. ஹ்ம்ம் நா கேக்குறப்ப எல்லா கட்டுறே கட்டுறேன்னு பதில சொல்லி எவ்வாய அடைக்கு.. நா இப்புடி ஆகும்னு நெனைக்கலியே.. ” என்று மீண்டும் ஒரு பாடு அழ தொடங்கினார்.
“ம்ம்ச் சரசு இப்புடி அழுது பொலம்புனா எல்லா சரியா போகிடுமா என்ன?? மொதல்ல கண்ண தொட.. பாரு ஓ மவள.. அவளுக்கு நீதே தைரியோ சொல்லனு.. அத விட்டுபுட்டு இப்புடி அழுது கரைஞ்சா எப்புடி..” என்று ஆறுதல் கூற மேலும் இப்படியே இவர்களின் பேச்சு தொடர்ந்தது.
இதெல்லாம் இப்படி இருக்க தங்கமலரின் மனமோ வேறு எண்ணியது. முழுதாய் திருமண வாழ்கையை தொடங்கி அதை நினைத்து பார்த்து மகிழ கூட நேரமில்லாமல் இப்படியொரு நிகழ்வு நடந்தேறி விட்டது.
ஆனாலும் இதில் யாரை குற்றம் சொல்ல முடியும்.. இதுவே தன் குடும்பத்தில் நடந்திருந்தால் ??
ஆனால் தங்கமலரின் கவலை எல்லாம் இப்பொழுது கரிகாலனை பற்றி இருந்தது. அவனை பற்றி அவள் நன்கு அறிந்த ஒரு விஷயம், ஏதாவது ஒரு காரியத்தை கையில் எடுத்துகொண்டான் என்றால் அது முடியும் வரை தன் சுகத்தில் அக்கறை இருக்காது அவனுக்கு. இரண்டென்ன மூன்று நாள் என்றாலும் கூட உண்ணாமல், உறங்காமல் காரியத்தில் கண்ணாய் இருப்பான்.
இப்பொழுது அந்த கவலை தான் அவளுக்கு. அவளும் ஒரு சாதாரண பெண் தானே. என்னதான் சுற்றுவட்டத்தில் நடக்கும் விசயங்களில் அக்கறை இருந்தாலும், மனத்தின் ஓரத்தில் தன் குடும்ப விசயமும் ஓடிக்கொண்டே இருக்கும் தானே.
நேரத்திற்கு உண்டானா ??? என்ன செய்கிறானோ எதோவென்று அவளும் தன் மனதை போட்டு உருட்டிக்கொண்டு இருந்தாள். இருக்கும் சூழ்நிலையில் இதை யாரிடம் கூற முடியும்.. ஒருபக்கம் அன்னமயிலை சமாதானம் செய்தபடி மறுபக்கம் தனக்குள்ளே தவித்துக்கொண்டு இருந்தாள்.
அதே நேரம் “யக்கா… வா காட்டுக்கு போவோ… மாமா ஒனக்கு தொணையா என்னிய போக சொல்லிட்டுத்தே போச்சு…” என்றபடி வந்தான் கணேசன்.
“அது சரித்தே.. என்னிக்கு சொல்லிட்டு போனதுக்கு என்னிக்கு வந்து நிக்கிறவே… ஓடு.. கூலி நேத்தே முடிஞ்சு போச்சு… நீ இன்னிக்கு வரியா டா ஆடி அசஞ்சு… நல்ல ஆள எனக்கு தொணைக்கு வச்சிட்டு போச்சு.. ” என்று அவனை விரட்டியவளுக்கு, அப்பொழுது தான் நியாபகம் வந்தது கரிகாலன் வளர்க்கும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்பது.
அவளே தன் தலையில் குட்டிக்கொண்டு, “அன்னோ இரு டி வந்துடுறே.. செடிக்கு எல்லா தண்ணி ஊத்தவே இல்ல.. ஒங்கண்ணே வந்துச்சு அம்புட்டுத்தே கள வெட்றது போல என்னிய வெட்டிரு…” என்றவள் மரகதத்திடமும் கூறிக்கொண்டு தன் வீடு சென்றாள்.
ரோஜா செடிகளை பார்க்கும் போதே அவளுக்கு இன்னும் கரிகாலனின் நினைவு அதிகரித்தது. நீரின்றி இச்செடிகள் வாடுவது போல அவனும் அலைந்து திறிந்து வாடியிருப்பானோ.
இப்படியெல்லாம் எண்ணமிட்டப்டியே செடிகளுக்கு நீர் பாய்ச்சியவள், தங்கராசு தூரத்தில் நின்று தன்னையே பார்ப்பதை கவனிக்க தவறினாள்.
அவர் மனதிலோ தங்கமலரின் முக வாட்டம் சரியாய் தவறாகவே பட்டது..
“எம்மவ எங்கிட்ட இருக்கப்போ ராணி மாதிரி இருந்தா.. இந்த வெளங்காத பைய எம்மவ மனச என்ன சொல்லி மாத்துனானோ அவ மொகத்துல ஒரு செழிப்பே இல்லாம கெடக்கு.. அவே வரட்டு.. இந்த பிரச்சன எல்லா முடியவு ரெண்டுல ஒன்னு பாத்துடனு.. இப்புடியே விட்டா அம்புட்டுத்தே எம்மவ வாழ்கையே போயிடு…” என்று அவராய் ஒரு கணக்கு போட்டு கொண்டிருந்தார்.
“இந்தா என்ன?? இங்க நின்னு அங்க பாக்குற, பேசாம அவட்ட போயி ரெண்டு வார்த்த பேசலாம்ல… ” என்றபடி வந்தார் மரகதம்.
அவருக்கோ எப்படியாவது தன் கணவரை மகளிடமாவது பேச வைத்துவிட வேண்டும் என்று.. மகனது உறவு தான் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது என்றால் மகளினது உறவோ எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
“என்னது.. ச்சே ச்சே.. நானா.. அதுவு அங்க போயா ??? இப்புடி எல்லா பேசாதன்னு எத்தனவாட்டி சொல்றது ஒனக்கு.. நீ செய்றது எல்லா எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா.. நா இல்லாத நேரத்துல அவ கூட நீ பேசுறது எல்லா எனக்குந்தெரியு… எம்மானத்த வாங்கிட்டு போனவகிட்ட நீ ஒறவு கொண்டாடுற….” என்று கரிகாலன் மீது அடக்கி வைக்கப்பட்ட கோவத்தை எல்லாம் மரகதம் மீது காட்டினார் தங்கராசு.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்னவென்பது போல பார்க்க, பொட்டியம்மாள் தான் வந்து “அண்ணே… என்னண்ணே.. இப்புடித்தே எல்லார் முன்னாடியு சண்ட போடுறதா??? இங்க என்ன பிரச்சன ஓடிட்டு இருக்கு, அத விட்டு இப்புடி நடந்து முடிஞ்சத பத்தி பேசிட்டு இருக்க??” என்று சமாதானத்திற்கு வர,
“எது முடிஞ்சது ??? இல்ல எது முடிஞ்சது ?? எம்மவ அவே வீட்டுல இருக்கவரைக்கும் இது முடியாது.. ஒனக்கு என்ன புள்ள தெரியு.. எம்மவள அவே ஏச்சுபுட்டான்.. எனக்கு நல்லா தெரியு..” என்று உச்சஸ்தாயில் கத்தினார், வழக்கம் போல தோளில் கிடந்த துண்டை ஒரு உதறு உதறி.
இதையெல்லாம் பார்த்தபடி இருந்த அன்னமயிலோ, தன் தந்தையை பற்றிய, கவலையை சற்றே ஒதுக்கி தள்ளி, “அடியே தங்கோ…. ஏ புள்ள தங்கோ… ” என்றழைத்தபடி வந்தாள்.
ஆனால் தங்கமலருக்கு எங்கே இதெல்லாம் காதில் விழ போகிறது. அவளது நினைப்பு தான் கரிகாலனை சுற்றியே உழன்று கொண்டிருக்கிறதே.
“ஏ.. கிறுக்கி… அங்க என்ன நடந்துட்டு இருக்கு.. நீ இங்கன நின்னு கனா காங்குறவ… ” என்று உலுக்கிய அன்னமயிலை பார்த்து,
“என்.. என்ன டி.. எல்லாரும் வந்துட்டாங்களா ?? ஒங்கண்ணே வந்துடுச்சா ??? ” என்று வேகமாய் கேட்டவள் பட்டென்று தலையில் அடித்துக்கொண்டு “ஒங்கய்யே வந்துட்டாரா ???” என்றால் வேகமாய்.
அவள் கேட்டதை பார்த்து ஒரு நொடி திகைத்த அன்னமயில் பிறகு,
“எங்கய்யே வரது அப்புரோ இருக்கட்டு, அங்கன ஒங்கய்யே சாமி ஆடிட்டு இருக்காரு வந்து என்னான்னு பாரு புள்ள… ” என்றாள்.
கையில் வைத்திருந்த நீர் வாளியை ஓரமாய் வைத்துவிட்டு,சேலை முந்தானியில் கைகளை துடைத்தபடியே “என்ன டி சொல்றவ ???” என்றபடி வாசல் பக்கம் வந்தாள் தங்கமலர்.
அங்கே தங்கராசோ, காரிகாலன் ஊரில் இல்லாத தைரியத்தில் மரகதத்திடமும், பொட்டியம்மாளிடமும் காச் மூச்சென்று கத்திகொண்டிருந்தார்.
“என்ன டி எதுக்கு எங்கய்யே இம்புட்டு கோவமா கத்துறாரு… ”
“அதுசரி…. ஒனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு.. அப்புடியே ரெண்டு போட்டேனா.. ஏன் டி ஒங்கய்யே எதுக்கு கத்துவார்னு ஒனக்கு தெரியாதாக்கு.. எல்லா ஒன்னலாத்தே…”
“ஏ… நா என்ன பண்ணே ??? ”
“ஆத்தாடி ஆத்தி… இம்புட்டு அழுத்தோ ஆகாது டி தங்கோ… நீ எதுவு செய்யாமத்தே ஒங்கய்யே இந்த குதி குதிக்கிறாரா ?? ஏன் டி நீ கரியண்ணன கல்லாணம் பண்ணது என்ன ஒங்கய்யனுக்கு பிடிச்சா பண்ண ???”
அன்னமயில் இப்படி கேட்ட பிறகே தங்கமலருக்கு விஷயம் புரிந்தது. தான் செய்த ஒரு காரியம் தன் தந்தையை எத்தனை பாதிர்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது என்பதனை அவள் புரிந்துகொள்ளாமல் இருப்பாளா என்ன ??
ஆனால் இந்த திருமணதிற்கு முழு முதல் காரணம் தங்கராசின் கோவம் தானே. தேவையே இல்லாமல் கரிகாலன் மீது காட்டும் துவேசம் தானே.. வேறு ஒருவனாய் இருந்தால் இவர் செய்ததற்கெல்லாம் சேர்த்துவைத்து தங்கமலரை எத்தனை படுத்த வேண்டுமோ அத்தனை படுத்தியிருப்பான்.
ஆனால் கரிகாலன் அப்படி செய்யவில்லையே, இன்று வரை அவளை தாங்கிக்கொண்டு தானே இருக்கிறான்.. ஒருமுறை கூட திருமணத்திற்கு பிறகு தங்கராசை முன்னிட்டு தங்கமலரை கரிகாலன் மோசமாய் நடத்தவும் இல்லை, பேசவும் இல்லை..
அவ்வளவு ஏன் தங்கரசையே மரியாதையாகத்தானே பேசுகிறான்.. ஆனால் இதெல்லாம் புரியாத அவரோ தாம் தூமென்று குதித்து கொண்டிருக்கிறார்.
வாசல் வரை வெளியே வந்தவளுக்கு தன் தந்தையிடம் செல்ல துணிவு வரவில்லை போல. கைகளை பிசைந்தபடி அப்படியே நின்றிருந்தாள்.
“ஏ தங்கோ.. ஒன்னைய வேடிக்க பாக்கவா கூட்டியாந்தே.. போ புள்ள இப்பயாச்சு போயி பேசு.. அவரு எத்தன நாளிக்குதே இப்புடியே கத்தி தவிப்பாரு.. ஒரு ரெண்டு நா எங்கய்யே இல்லங்க போதுதே புள்ள அவரு அரும தெரியிது…” என்று கூறும் பொழுதே அவளது கண்கள் கலங்கியது.
“இப்புடிலா பேசாத புள்ள.. ஒங்கய்யே வந்துடுவாரு… நா.. என்ன டி போயி பேச… எனக்கு பயமா இருக்கு..”
“அதுசரி… ஏன் டி அம்புட்டுவேறு இருக்கும்போது யாருக்கு தெரியாம போயி கல்லாணம் கட்டிட்டு வர தைரியோ இருந்துச்சு, இப்ப ஒங்கய்யன பேசி சமாதானம் செய்ய தைரியோ இல்லையா ??? ”
“இல்ல புள்ள ஏற்கனவே எங்கய்யே மனசு சங்கடத்துல இருக்காரு.. இதுல வேற எதா பேசி ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா என்ன செய்ய அதே.. ” என்றவள் எட்டி எட்டி பார்த்தபடி நின்றிருந்தாள்.
அதே நேரம் சரியாய் கரிகாலனும் அவனோடு சென்றவர்களும் வந்து சேர, தற்சமயத்திற்கு இவர்கள் பிரச்னையை ஒதுக்கி வைத்து, வந்தவர்களிடம் பேச சென்றனர் அனைவரும்.
நல்லதாய் ஏதாவது செய்தி இருக்குமா என்ற ஆவல், இல்லை வேறு எதுவுமாக இருக்குமா என்ற பரிதவிப்பு இப்படி இருவேறு உணர்வுகள் கலந்து அன்னமயிலும், அவள் அன்னையும் வந்தவர்களை நோக்க,
தங்கமலரோ கரிகாலனை கண்ட மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, அவன் முகத்தில் இருந்த சோகம் அவளுக்குமே என்ன ஆனதோ என்று நெஞ்சை பிசைந்தது.
“எதுவு கெட்ட சேதியா இருக்குமோ…. அய்யனாரே… நீதே காப்பாத்தணு…” என்று அனைவரின் மனமும் ஒருசேர ஒரே வேண்டுதலை கூற,
இவர்கள் ஊர் திரும்பிய சேதி கேட்டு அங்கே இங்கே என்று இருந்தவர்கள் எல்லாம் மீண்டும் ஒன்று கூடினர்.
“இப்புடியே வாய மூடிட்டு இருந்தா என்ன அர்தோ… போன காரியோ என்னாச்சுனு சொன்னாதான தெரியு..” என்று யாரோ கூட்டத்தில் இருந்து குரல் கொடுக்க,
“அதானே என்னப்பா போயி ரெண்டு நாளு ஆச்சு.. ஒரு தகவலு இல்ல… இப்புடியே எல்லா அமைதியா இருந்தா எப்புடி…” என்று ஆளாளுக்கு சலசலக்க,
முனியனோ பாவமாய் கரிகாலன் முகம் பார்க்க, அவனோ கண்களை ஒருநொடி இறுக மூடி ஆழ்ந்த மூச்சுகளை எடுத்துவிட்டு “அன்னத்தோட அப்பா கெடைச்சுட்டாரு.. ஆனா…. ” என்று கூறி நிறுத்தவும், முதலில் அனைவரின் முகம் மலர்ந்தாலும், அவன் கூறியா ‘ஆனாவில்’ மீண்டும் பகீரென்றது.
தங்கராசு, “அடே முனியா… என்னடா இப்புடி கத சொல்ற மாதிரி நிறுத்தி ஆனா ஊனானு சொல்லிட்டு இருந்தா எப்புடி.. என்னாச்சுன்னு சொல்லி தொலைங்க டா… ” என்று எகிறினார்.
“அதில்ல மாமா… அவர ஆசுபத்திரிலத்தே கண்டுபிடிக்க முடிசுச்சு.. அதே…” என்று முனியன் கூறி முடிக்கவில்லை அன்னமயிலும், சரசுவும் சத்தம் போட்டு கத்தி அழ ஆரம்பித்துவிட்டனர்..
முழுதாய் சொல்ல வந்ததை சொல்லி முடிக்குமுன்னே பெண்கள் அழ ஆரம்பித்தது அங்கே சற்றே அனைவரையும் பதற்றமடைய வைத்தது.
“எல்லா கொஞ்சோ சும்மா இருக்கீங்களா… கொஞ்சோ அமைதியா இருங்க.. மொத நாங்க சொல்லவந்தத சொல்ல விடுங்க…” என்று காரிகலன் சத்தம் போடவும் சற்றே அமைதி நிலவ,
தங்கராசு கூட கரிகாலன் போட அரட்டலில் சற்று திகைத்துத்தான் போனார்..
“இங்கியாரு சித்தி சிதைப்பவ ஆசுபத்திரிலத்தே கண்டுபிடிக்க முடிஞ்சுச்சு.. ஆனா பயப்படுற மாதிரி எதுவு இல்ல. கொஞ்சோ கை கால்ல லேசா அடிபட்டிருக்கு.. இங்கயிருந்து கெளம்பி நேரா டவுனுகுத்தே போயிருக்காரு. கைல காசும் இல்ல போல சாப்படாம கொள்ளாம அலஞ்சிருக்காரு.. ரோடுல மயங்கி கெடந்தவர யாரோ ஆசுபத்திரில சேத்து இருக்காங்க. விழுந்ததுல லேசா அடிபட்டிருக்கு அம்புட்டுதே. நம்ம பழனிச்சாமிய கூட இருக்க வெச்சிட்டு வந்திருக்கோ.. ” என்று நடந்ததை சுருக்கமாய் சொல்லி முடிக்க, அதன் பின்னரே அனைவர்க்கும் ஒரு நிம்மதி பரவியது.
“அய்யா சாமி… அய்யனாரே.. எவ்வீட்டுல வெளக்கேத்திட்ட. அடுத்த பாற பொங்கலுக்கு ஒனக்கு சேவ அருக்குறே.. ” என்று வேண்டிய சரசு,
“அப்ப அடுத்த பஸ்சு வர்றப்ப, நானு அன்னமு கெளம்பி டவுனு ஆசுபத்திரி போறோம்..” என்று வேகமாய் கிளம்ப எத்தனிதவரை தடுத்து நிறுத்தினான் கரிகாலன்.
“சித்தி இப்பதைக்கு போகுறது சரியில்ல.. நாளிக்கு நாங்களே போயி அவரபேசி கூட்டிட்டு வரோம். நீங்க போயி எதையா பேசி மறுபடியு அவர்பாட்டுக்கு கெளம்பி எங்கனயா போயிட போறாரு.. சொல்றத கேளுங்க.. ” என்று அழுத்தமாய் கூறவும் மற்றவருக்கும் அதுவே சரியென பட, அனைவரும் அதையே கூறி அவர்களை ஒருநாள் காத்திருக்க கூறினர்.
மேலும் சிறிது நேரம் அனைவரும் பேசிவிட்டு, அன்னமயிலின் அப்பா ஊர் வந்த சேர்ந்த பிறகு மற்றதை முடிவு செய்து கொள்ளலாம் என்று கலைந்து சென்றனர்.
அன்னமயில் வந்து கரிகாலனுக்கு நன்றி கூறவும், அவன் பதில் எதுவும் கூறாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான். படுத்தால் அப்படியே உறங்கிவிடும் அழுப்பு அவனுள்..
கட்டாந்தரையில் வந்து கிடந்தவனை பார்த்து, “இப்புடி வந்த ஒடனே படுத்தா எப்புடி, சுடு தண்ணி போடுறே குளிச்சுபுட்டு நல்லா சாப்புட்டு தூங்கு.. ” என்றபடி அடுப்பை ஏற்றியவளை சிந்தனை படிந்த முகத்துடனே பார்த்தபடி படுத்திருந்தான் கரிகாலன்.
“என்ன ரோசன எல்லா பயங்கரமா இருக்கு. அதே அன்னோ அப்பா கெடைச்சுட்டார்ல.. பெறவு எந்த கோட்டைய புடிக்க இம்புட்டு ரோசன..??? ” என்றவள் அடுப்பில் நீரை வைத்துவிட்டு அவனருகே வந்தாள்.
ஆனால் கரிகாலனோ பதிலே பேசாமல் படுத்திருந்தான். அவனது பார்வை மட்டும் தங்கமலரையே சூழ்ந்திருந்தது..
“என்னய்யா இப்புடி பாக்குற ??? என்னாச்சு ?? வேற எதுவு பிரச்சனையா ??”
“ம்ம்ச் ஒன்னுயில்ல புள்ள.. விடு.. நீ சொல்லு ரெண்டு நாளு நா இல்லாதப்ப என்ன நடந்துச்சு…”
“ம்ம்ஹும்… ஒருவார்த எப்புடி இருக்கன்னு கேக்க தோணிச்சா ஒனக்கு.. வந்தது என்ன நடந்துச்சுன்னு கேக்குற.. நாந்தே நீ சாப்டியோ செஞ்சியோன்னு தவிச்சுக்கிட்டு இருந்தே…” என்று நொடித்தாள்..
“இங்கியாரு புள்ள நா ரெண்டு நாளு ஒன்னைய மட்டு தைரியமா விட்டு போனதுக்கு காரணோ ஒங்கய்யே.. எப்புடியு இங்குட்டேதே சுத்தி சுத்தி வந்திருப்பாரு. அதுனால ஒன்னைய பத்தி நா கவல பட வேண்டியதே இல்ல புள்ள…”
“ஓ !!!! அப்போ என்னைய பத்தி ஒனக்கு வேற எந்த கவலையு இல்லையா ???” என்று கேட்டவளின் குரலில் மறைக்க முயன்றாலும் ஏக்கம் எட்டி பார்த்தது.
“அட கிறுக்கு புள்ள… என்ன இப்புடி கேட்டுபுட்ட.. என்ன சோலியா போனாலு ஒ நெனப்பு இல்லாம இருக்குமா டி மலரு… ”
“ம்ம்ம்…. ”
“ம்ம்ச் இப்ப என்னத்துக்கு மொகத்த தூக்குறவ.. நா போன சோலி அப்புடி… அதுக்காக ஒன்னைய நெனைக்காம இருப்பேனா??”
“ம்ம் சரி விடு அதெல்லா கெடக்கட்டு…. நீ என்ன அம்புட்டு ரோசனல இருந்த.. எதுவு பிரச்சனையா ??? ”
“ம்ம்ச் பிரச்சனைன்னு ஒன்னுயில்ல ஆனா கொஞ்சோ பிரச்சனத்தே மலரு..”
“ஏய்யா என்னாச்சு….?? ”
“அன்னதோட அப்பா நெறைய கடே வாங்கிருக்காறு புள்ள.. அதே.. அசலு கட்ட முடியல வட்டியு கட்ட முடியல போல.. அதுக்குத்தே என்ன செய்றதுன்னு தெரியாம பயந்து போயி வீட்ட விட்டு கெளம்பி போயிட்டாரு.. அன்னோ கல்லாணம் முடிஞ்சிருந்தா கூட அந்த நெலத்த கடங்காரனுக்கே குடுத்துபுட்டு மேற்கொண்டு பணத்த வாங்கலாம்… அது இவங்க பொழப்பு ஆகும்.. ஆனா வயசு புள்ள இருக்கும் போது எப்புடி.. அதே ரோசன…. ”
“ஓ !!! இதுல இம்புட்டு இருக்கா…. ”
“ஹ்ம்ம் ஆமா புள்ள.. நல்ல வெள்ளாம பூமி… அடுத்தவனுக்கு விட்டுகுடுக்கவு அவருக்கு மனசு இல்ல.. மனுசே கெடந்து பொலம்பி தவிச்சுட்டாறு..”
“ஹ்ம்ம் இப்ப அதுக்கு என்ன பண்றது.. எந்த பிரச்சனையா இருந்தாலு வீட்ட விட்டு போறது நல்லதா?? ரெண்டு நாளுல எப்புடி தவிச்சு போயிட்டாங்க தெரியுமா ??? ”
இவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருக்க அங்கே உலையில் வைத்த நீரோ கொதித்து தவ்வியது..
“பாரு பாரு ஒங்கூட பேசிகிட்டே இத கவனிக்கல… ” என்றவள் அவசரமாய் அவனுக்கு நீர் விளாவி விட்டு, அவன் குளித்து வருவதற்குள் சமையலை தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் குளித்து வந்தவனுக்கு, அப்பொழுது தான் பசியை உணர முடிந்தது..
“ஆகா என்ன வாசன தூக்குது.. என்ன புள்ள சமைக்கிறவ..” என்றபடி வந்து அவளை உரசி நின்றான்..
லேசாய் திடுக்கிட்டாலும், அவனது உரசலில் உள்ளமும் உடலும் சிலிர்த்துத்தான் போனது மலருக்கு.. ஆனாலும் வெளிக்காட்டி கொல்லாமல்,
“வந்த ஒடனே போயி படுத்த, இப்ப என்ன ??? போ போ தட்டு வைக்கவு சாப்புட வா… ” என்று தள்ளி நின்றாள்..
“ஹ்ம்ம் ஒனக்கெல்லா குசும்பு கூடுதல் டி… ” என்றவன் பிடிவாதமாகவே அவளை மேலும் நெருங்கி நின்றான்..
உள்ளுக்குள்ளே ரசித்துக்கொண்டாலும், “ம்ம்ச் என்னைய சமைக்க விடு.. ” என்று சலிப்புக்காட்டியவளை முறைத்துவிட்டு போய் அமர்ந்துகொண்டான்.
“என்ன மொறைப்பு எல்லா பயங்கராமா இருக்கு… ஒனக்கு புடிக்குன்னு உப்புகண்டோ தொக்கு பண்ணிருக்கே.. மொறைச்சா வேறு ரசத்தத்தே ஊத்துவே…” என்று தன் பங்கு வீராப்பு காட்டினாள்..
“போ டி போ… எனக்கு தெரியாத சமையலா ??? கல்லாணத்துக்கு முன்னாடி வரைக்கு நாந்தான சமைச்சேன்…”
“ம்ம்ஹும்… நீ சமச்சு திண்ண லட்சனோ எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா ??? சரி சரி சூடு போறதுக்குள்ள சாப்புடு… ” என்றவளும் அவனோடு சேர்ந்தே உண்டாள்..
வெளியே அன்று போல இடியும் மின்னலும் கலந்து கட்டி கலக்கிகொண்டிருக்க, மழை பொழிய தொடங்கியது..
மழை பொழியவுமே இருவருக்கும் தங்கள் கூடல் நினைவு வர, தங்கமலர் அடுத்து தலை நிமிரவே இல்லை… கரிகாலனது பார்வையோ அவளை விட்டு நகரவில்லை.
ஆனால் இவர்கள் மோன நிலையை தகரத்தில் விழும் பனி கட்டிகள் தொல்லை செய்து தகர்த்தன.. ஆலங்கட்டி மழை போல, தகரத்தில் விழும் சத்தம் கேட்டு வேகமாய் கரிகாலன் கதவை திறந்து பார்த்தான்..
காற்றில் ஈரப்பதம் நிறைந்திருக்க, மழையோ நான் இப்போதைக்கு நிற்க மாட்டேன் என்பது போல பொழிந்து கொண்டிருந்தது.. இடை இடையே பனி கட்டிகளும் விழ கரிகாலன் முகத்தில் கவலை படிந்தது..
“கல் மாரி விழுது புள்ள… ” என்றவன் வருத்தமாய் வந்து படுத்தான்..
“இது எப்பவு நடக்குற சங்கதி தான… ”
“ஹ்ம்ம் இந்த நேரத்துல விழுந்த அரும்பு விட்டது எல்லா கருகிடு.. இலை எல்லா ஓட்டை ஆகிடு புள்ள.. வெள்ளாம பாதிக்கு.. மழ ரொம்ப நல்லதுத்தே.. ஆனா அதுவுமே பருவத்துல பேஞ்சாத்தே நல்லது..” என்றவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டு, மீண்டும் யோசனை படிந்த முகத்தோடு படுத்தான்..
“ம்ம்ச் எனத்த போட்டு அப்புடி ரோசன செய்யுற… ” என்று எரிச்சலுடனே வந்து படுத்தாள் தங்கமலர்..
“ஏ புள்ள மலரு, அன்னோ அய்யாகிட்ட இருந்து அந்த நெலத்த நம்ம வெலைக்கு வாங்கலாமா ??? ” என்று கேட்டவுடன் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் தங்கமலர்.