அத்தியாயம் பதினாறு:
தேவிகா அதிர்ந்து விழித்தது சில நொடிகளே உடனே சமாளித்துக் கொண்டார்.
“இல்லை, இது சரி வராது”, என்றார்.
“ஏன் ஏங்க்கா சரிவராது……….. நீங்க என்னை வெச்சு ஆகாஷை பார்க்கறீங்களா”,
“அது எப்படி நீ இல்லாம பார்க்க முடியும், உன் தம்பி தானே அவன்”,
“இருக்கலாம், அது மட்டுமே அவன் செஞ்ச தப்பு. வேற நீங்க அவன்கிட்ட எதுவும் குறைக் காண முடியாது. என் தம்பின்ற ஒரே காரணத்துக்காக அவனுக்கு பிடிச்ச வாழ்க்கை மறுக்கப்படனுமா என்ன?”,
தேவிகா மெளனமாக இருக்க………
“ஆமாம் கா! ஆகாஷ்க்கு ராஜியை ரொம்ப பிடிச்சிருக்கு. முதல்ல நாங்க சொன்னதால மனசில்லாம தான் வந்தான்….. இங்க வந்ததுக்கு அப்புறமும் எனக்காக தான்னு சொன்னான்”,
“ஆனா அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவளை……….. இங்க வரும்போது அவனே சொன்னான்…….. உங்களுக்கு ஆகாஷை பிடிக்கலையா”, என்றாள்.
அனிதாவின் தம்பி என்பதை விடுத்து பார்த்தால் உண்மையாக ஆகாஷை தேவிகாவிற்கு பிடித்து தான் இருந்தது. தன்னுடைய அக்காவையே இப்படி பார்த்துக்கொள்பவன்………. தன் அக்காவிற்காக இவ்வளவு செய்பவன்………. தன் மனைவியை இன்னும் எவ்வளவு நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற எண்ணம் தான் அவரினுள் உதித்தது.
ஒரு வேளை தான் சம்மதித்தாலும் இது நடக்காது என்றே தோன்றியது. அவருக்கு ராஜியை நன்றாக தெரியும் இதற்கு அவள் சம்மதிக்கவே மாட்டாள்….. நடக்காத ஒன்றை பற்றி பேசி பிரயோஜனமில்லை என்று நினைத்த அவர், “வேண்டாம் இது சரி வராது”, என்றார் முடிவாக……
“ஏன் உங்களுக்கு ஆகாஷை பிடிக்கலையா”,
“எனக்கு பிடிக்குதா இல்லையான்ற கேள்விக்கே அவசியமில்லை…… ராஜிக்கு கட்டாயம் பிடிக்காது”,
“உங்களுக்கு சம்மதமா முதல்ல அதை சொல்லுங்க……. ராஜியை அப்புறம் சம்மதிக்க வைக்கலாம்”, என்றாள் அனிதா. அவளுக்கு தன் தம்பியின் மேல் அவ்வளவு நம்பிக்கை ஒன்று அவனை எந்த பெண்ணும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாள் என்றெண்ணினாள்……….. மற்றொன்று எந்த பெண்ணையும் அவனால் சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்பினாள்……
அவளுக்கு ராஜியை பற்றி தெரியவில்லை.
ஆனால் ராஜியை பற்றி நன்கு தெரிந்த தேவிகா “இல்லை என் சம்மதம் தேவையேயில்லை, என் பொண்ணு சம்மதம் தான் முக்கியம்”, என்று விட்டார் ஒரே முடிவாக…….. அவருக்கு இதைப்பற்றி பேச்சை வளர்ப்பதில் விருப்பம் இல்லை.
“ரொம்ப ரோஷக்காரி அவ………. நீ எதுவும் இதைபத்தி அவகிட்ட பேசிடாத”, என்றார் தேவிகா.
“இல்லையில்லை நான் இதை பத்தி பேசலை………. முடிஞ்சா நீங்க பேசிப்பாருங்களேன் ஒரு முயற்சி தானே……..”, என்று அனிதா மறுபடியும் தேவிகாவிடம் வற்புறுத்த………..
“பார்க்கலாம்”, என்று விஷயத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார் தேவிகா. அவருக்கு ராஜியிடம் பேசும் எண்ணமெல்லாம் இல்லை.
அனிதாவும் அங்கே நிறைய நேரம் இருக்கும் எண்ணத்துடன் எல்லாம் வரவில்லை. அவளுக்கு தேவிகாவை பார்க்க வேண்டி இருந்தது பார்த்துவிட்டாள்….. பேச வேண்டிய விஷயங்களையும் பேசிவிட்டாள்…… இனி எல்லா முடிவும் எடுக்க வேண்டியது தேவிகாவின் கையில் என்பது அவளுக்கு தெரியும்.
இனி எந்த முடிவென்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் தான் இருந்தாள். திருமணம் நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி அவளுக்கு அவரின் முடிவு எதுவானாலும் சம்மதமே.
ஆனால் ஆகாஷ் ராஜியின் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினாள்……. தனக்காக இவ்வளவு செய்யும் தனது தம்பிக்கு அவன் இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள்.
ஆகாஷிடம் சொல்லி ராஜியிடம் நேரடியாக பேச சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
“அப்போ நாங்க கிளம்பறோம் அக்கா”, என்றாள்.
மணி அப்போதே மதியம் ஒன்று என்று காட்டியது……..
அண்ணாமலை வேறு கீழேயும் இருக்க முடியாமல்………. மேலேயும் வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
தேவிகாவிற்கு அவள் கர்ப்பிணி என்பதே மனதில் நிற்க அவளை சாப்பிடாமல் அனுப்ப அவருக்கு மனமில்லை, “சாப்பிட்டிட்டு கிளம்புங்க”, என்றார்.
அனிதாவும் எதுவும் மறுக்காமல் அமர்ந்து கொண்டாள்.
ராஜியின் கோபம் எல்லை மீறி இருந்தது ரூமிற்குள். அவளுக்கு அவளின் அம்மா சுமுகமாக முகம் கொடுத்து அனிதாவிடம் பேசியது கொஞ்சம் பிடிக்கவில்லை. கோபத்தில் கனன்று கொண்டிருந்தாள்.
அவளின் மனநிலை புரிந்தே தேவிகா, இவர்கள் கிளம்பும் வரை அவளைக் கூப்பிட வேண்டாம் என்று நினைத்தவர் அவரே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டார்.
மதிய உணவு நேரமும் ஆக…… கதவை லேசாக திறந்து ராஜி பார்த்தாள், எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்று………… அங்கு நந்தனும் அண்ணாமலையும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர்.
அனிதாவும் ஆகாஷும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். ஆகாஷின் கண்கள் ராஜியையே தேடிக்கொண்டு இருந்ததால் அவள் கதவை லேசாக திறந்துப் பார்த்ததை அவனும் பார்த்தான்.
ராஜி இதையெல்லாம் காணச் சகியாமல் ரூமிற்குலேயே அடங்கிக்கொண்டாள்……
உள்ளேயும் அவளால் இருக்க முடியவில்லை சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கதவை திறந்து பார்க்க இப்போது அனிதாவும் ஆகாஷும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அதை விரும்பாதவள் மறுபடியும் கதவை அடைத்துக்கொண்டாள்.
இந்த முறையும் அவளின் செய்கையை ஆகாஷ் கவனித்துக் கொண்டுதானிருந்தான். அவனுக்கு அவளை அணுகும் வகை புரியவில்லை.
உண்டு முடித்ததும் மூவரும் கிளம்பினர்…. அனிதா ராஜியை சொல்லிக்கொள்ள காணப் பிரியப்பட, “ எரியற கொள்ளியில எண்ணையை ஊத்தாத நீ, வா……”, என்று அனிதாவை ஆகாஷ் அழைத்துக்கொண்டு கிளம்ப……..
“என்ன மாமா இப்போ சொன்னீங்க?”, என்று நந்தன் ஆகாஷிடம் விளக்கம் கேட்க ஆரம்பித்தான்.
அவனிடம் ஏதோ பேசியவாறே இருந்தாலும் ராஜியின் தரிசனத்திற்கு ஆகாஷின் கண்கள் ஏங்கியது. தரிசனம் தான் கிடைக்கவில்லை. அவளைப் பார்க்காமல் போகவும் மனமில்லை.
தாங்கள் கிளம்பப்போகிறோம் என்றுணர்ந்த நந்தன் வேறு அடம் செய்ய ஆரம்பித்தான். “நாம இப்போ தானே வந்தோம்….. இப்போவே போகணுமா….. நான் அப்பா கூட இருக்கேன்”, என்று சொல்ல ஆரம்பித்தான்.
நந்தன் அண்ணாமலையின் அருகாமையை எப்போதுமே விரும்புவான். அவர்களுக்குள் எப்போதுமே நல்ல புரிதலும் நல்ல பாசமும் உண்டு. உள்ளே இருந்த ராஜிக்கு அது நன்றாக கேட்டது.
இத்தனை நாட்களாக தன்னுடைய அப்பாவாக இருந்தவர் இப்போது தனக்கில்லாமல் போய்விட்டதாகவே மனம் நினைக்க ஆரம்பித்தது. ஏற்கனவே அண்ணாமலையின் செய்கையால் அவரின் மேல் கோபத்தில் இருந்தவள், இப்போது அதைவிடவும் ஒரு வெறுப்பிற்கு ஆளானாள்.
அதற்கு தகுந்தார் போல அண்ணாமலையும் ஆகாஷிடம்…… “காலையில தானே வந்தீங்க, உடனே டிராவல் வேண்டாம்……… நாளைக்கு போங்க”, என்றார்.
ஆகாஷும் ராஜியை பார்க்கும் ஆசையில் யோசிக்க துவங்க….. அனிதா தான் பிடிவாதமாக கிளம்ப வேண்டும் என்றாள். இன்னும் அங்கே தங்கி தேவிகாவிற்கு சங்கடத்தை கொடுக்க அனிதாவிற்கு மனமில்லை.
அவளின் பிடிவாதம் பார்த்த ஆகாஷ், “சரி! நம்ம வேணா சேலம்ல ஸ்டே பண்ணிக்கலாம்……. நாளைக்கு காலையில் கிளம்பலாம்”, என்று அதற்கு தீர்வு கண்டுபிடித்தான்.
பிறகு அவனின் யோசனையே முடிவானது. இருந்தாலும் நந்தன் மிகவும் அழ……. “அவன் வேணும்னா இங்க இருக்கட்டும்…….. காலையில நீங்க கிளம்பும்போது நான் கொண்டு வந்து விடறேன்”, என்றார் அண்ணாமலை.
நந்தனும் மிகவும் பிடிவாதம் பிடிக்க…….. வேறுவழியில்லாமல் அவனை அங்கேயே விட்டு ஆகாஷும் அனிதாவும் கிளம்பினர்.
முழுசா நனைஞ்சாச்சு இனி முக்காடு எதற்கு என்ற மனநிலையில் இருந்த தேவிகாவும் இதையெல்லாம் பார்த்து அமைதியாகி விட்டார். ஆனால் அவருக்கு ராஜியை நினைத்து பயமாக இருந்தது.
அவர்களை அனுப்பி விட்டு மேலே வந்தனர்.
மதிய நேரமாதலால், “கொஞ்ச நேரம் தூங்கு”, என்று அண்ணாமலை நந்தனிடம் சொல்ல………… சோபாவில் அமர்ந்திருந்த அவரின் மடியிலேயே தலை வைத்து உறங்கிவிட்டான்.
அவர்கள் சென்ற பிறகு ராஜியை தேவிகா வெளியே கூப்பிட்டார்……… “அவங்க போயிட்டாங்க பாப்பா”, என்று சொல்லியே அழைத்தார். அதன் பிறகே ராஜி வெளியே வந்தாள்.
வந்தவள் கண்களில் பட்டது அண்ணாமலையின் மடியில் தலை வைத்து உறங்கிக்கொண்டிருக்கும் நந்தன் தான்………
தனது தந்தையின் இன்னொரு வாழ்க்கையை பற்றி கேள்விப்பட்ட போது எழுந்த கோபம் வெறுப்பை விட இந்த காட்சியை பார்த்த பிறகு தன் தந்தையின் மேல் கோபம் இன்னும் அதிகமாக எழுந்தது. அவளால் தன் தந்தையை இன்னொரு சிறுவன் அப்பா என்றழைத்து அவர் மடியில் தலை வைத்து படுத்திருப்பதை எல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை.
“என்னம்மா இது?”, என்றாள் தன் அம்மாவிடம் அடிக்குரலில்……
“அந்த பையன் உங்க அப்பாவை விட்டு போகமாட்டேன்னு ஒரே அழுகை…. அவங்க ஊருக்கு நாளைக்கு தான் போறாங்களாம் அதான் இங்கயே இருந்துட்டான்”, என்றார்.
அண்ணாமலையை அவள் பார்த்த பார்வையில் அப்படி ஒரு வெறுப்பு. கண்ணுக்குள் பொத்தி வைத்து வளர்த்த செல்ல மகளின் பார்வை அவரை கொல்லாமல் கொன்றது.
ராஜிம்மா என்ற சொல்லை தவிர அவரின் வாயிலிருந்து அவளை அழைக்கவேறு வார்த்தைகள் வந்ததே இல்லை
அவளின் பார்வையின் வெறுப்பை தாங்க முடியாமல்அண்ணாமலை…… “ராஜிம்மா”, என்றழைக்க…………
“இனிமே உங்க வாயிலிருந்து என் பேர் வர்றதை கூட நான் விரும்பலை. உங்களை பொருத்தவரைக்கும் ராஜி செத்து போயிட்டா”, என்றாள் மிகக் கடுமையாக .
“ராஜி என்ன வார்த்தை பேசற?”, என்று அவளின் அன்னையும் தந்தையும் பதறினர்.
தன் அன்னையிடம் கூட சரியாக பேசவில்லை. “நான் அவ்வளவு சொல்லியும் அவளை நடுவீட்ல உட்கார வெச்சு சாப்பாடு போட்டு அனுப்பியிருக்க, உன்னை மாதிரி பொம்பளைங்க இருக்கிற வரைக்கும் இவரை மாதிரி ஆளுங்க தப்பு செஞ்சிட்டு தான் இருப்பாங்க”,
“ஆனா என்னால…… என்னால……… இதெல்லாம் சகிச்சிக்க முடியாது. உன் வாழ்க்கை உன் புருஷன்…….. இனிமே இதுல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை”, என்றாள் ஆவேசமாக அன்னையிடம்
மகளின் ஆவேசம் தேவிகாவை வெகுவாக கலங்க வைத்தது. புருஷனும் இப்படி செய்த நிலையில் பிள்ளையும் இல்லையென்றால் அவரால் தாங்க முடியாது. அவளுக்கு விளக்கம் கொடுக்க……….
“அவ பிள்ளதாச்சி பொண்ணு பாப்பா! அவளை என்ன வெளிலயா நிக்க வெக்க முடியும், அதனால தண்டா அம்மா இப்படி பண்ணினேன்”, என்றார் கண்கள் கலங்க தேவிகா………..
அவரின் கலங்கிய கண்கள் சற்றும் அசைக்கவில்லை ராஜியை…….
“இல்லை நிக்க வெக்காத…….. கூட்டிட்டு வந்து உன்கூடவே கூட வெச்சிக்கோ…… யார் வேண்டாம்னா……… ஆனா இனிமே என்னை மறந்துடு”, என்று கோபமாக சொல்லி சென்று மறுபடியும் ரூமிற்குள்ளேயே புகுந்துக் கொண்டாள்
கோபம்…….. கண் மண் தெரியாத கோபம்…….. என்ன செய்வது என்று புரியாத ஆத்திரம்…….. என்ன செய்வது? என்ன செய்வது? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
தேவிகா தான் வெகுவாக ஓய்ந்து போனார். ராஜி கோபப்படுவாள் என்று தெரியும். ஆனால் அந்த கோபம் தன்னை நோக்கியே திரும்பும் என்றவர் எதிர்பார்க்கவில்லை. செய்வதறியாது திகைத்தார்.
அண்ணாமலைக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ராஜியின் இந்த கோபம் ஆவேசம் அவருக்கு பயத்தை கொடுத்தது, அவள் தவறாக எதுவும் முடிவெடுத்து விடக் கூடாதே என்று.
பயந்து போய் நந்தனை அப்படியே நகர்த்தி படுக்க வைத்துவிட்டு வேகமாக போய் அவளின் ரூம் கதவை தட்டினார். அவர் தட்டுவதை பார்த்து பயந்த தேவிகாவும், “பாப்பா! பாப்பா!”, என்று கத்த…………
அவர்கள் விடாமல் தட்டவும் வந்து கதவை திறந்தாள் ராஜி……. அவளை முழுதாக பார்க்கவும் தான் பெற்றவர்கள் சரியாக மூச்சே விட்டனர்.
அவர்களின் மனவோட்டத்தை புரிந்த ராஜேஸ்வரி……… “என்ன செத்து கித்து போயிடுவேன்னு நினைச்சீங்களா…….. கட்டாயம் அந்த மாதிரி முடிவெல்லாம் எடுக்க மாட்டேன்…….. உங்களை தான் கொல்வேன்”, என்றாள் தந்தையை பார்த்து……..
இந்த சத்தங்களை எல்லாம் கேட்டு பயந்து எழுந்த நந்தன்……. ஓடி வந்து அண்ணாமலையை கட்டிக்கொள்ள……… அதை பார்த்தவள் முகத்தில் அறைந்தார் போல கதவை மூடி மறுபடியும் உள்ளே போய் விட்டாள்.
பாதித் தூக்கத்தில் எழுந்து என்னவோ ஏதோவென்று பயந்து அவன் அழுகையில் தேம்ப……….. “ஒண்ணுமில்லை! ஒண்ணுமில்லை!”, என்று அவனை சமாதானப்படுத்தினார் அண்ணாமலை.
“இப்படி! இப்படி அடுத்தவங்க பையனை உங்க பையனை போல பார்க்கற நீங்க…….. உங்க பொண்ணை விட்டுடீங்களே…….. அவ இதை எப்படி எடுத்துக்குவான்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்கலையா நீங்க”,
“நான் என் புருஷனை விட்டுகொடுக்கலாம்……… ஆனா அப்பாவை கூடவா அடுத்தவங்களுக்கு அப்பாவா விட்டுக் கொடுப்பாங்க………. அவளுக்கு கூட பொறந்தவங்க இருந்திருந்தாலாவது தெரியாது……… ஒரே பொண்ணை செல்லமா வளர்த்து……… நீ தான் எல்லாம்னு சொல்லி சொல்லி வளர்த்து…….. இப்போ இப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் கொண்டு வந்தா அவ மனசு தாங்குமான்னு யோசிக்காம விட்டுடீங்களே”,
“நீங்க என் வாழ்க்கையில இருந்து தொலைஞ்சுது இல்லாம, என் பொண்ணையும் என்னிடம் இருந்து தொலைக்க வெச்சிடுவீங்க போல இருக்கே…………”, என்று கட்டுப்படுத்தமுடியாமல் கதற ஆரம்பித்தார் தேவிகா.
அவர் அழுவதை பார்த்த நந்தன் இன்னும் பயந்து அழ……… யாரை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திண்டாடிப் போனார் அண்ணாமலை.
கீழே இருந்த வேலையாட்கள் வேறு என்ன சத்தம் வீட்டினுள் என்பதை தான் கவனித்துக் கொண்டிருந்தனர்.
காலையில் இருந்து நந்தன் அண்ணாமலையை அப்பா என்றழைத்துக்கொண்டு அவருடனே இருந்ததே என்னவோ ஏதோவென்ற பேச்சை கிளப்பி விட்டிருந்தது.
வீட்டில் இப்படி ஒரு சூழல் நிலவ……… நந்தனை கூட வைத்துகொண்டிருப்பது சரியென்று படாததால் அவனை கொண்டு போய் விடலாம் என்று அண்ணாமலை யோசிக்கும் போதே ஆகாஷ் அவர்கள் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் என்று சொல்ல அழைத்தான்.
அவனிடம் தான் நந்தனை அழைத்துக்கொண்டு தான் அங்கே வருவதாக கூறி…… தேவிகாவிடம் சொல்லிக்கொண்டு அண்ணாமலை கிளம்பினார். தான் இல்லாவிட்டாலாவது தன் அம்மாவிடம் அவள் பேசுவாளா என்று விட்டுவிட்டு கிளம்பினார்.
அவர் சேலம் சென்று நந்தனை அனிதாவிடம் விட்டு உடனே கிளம்பினார். அவர் வந்த வேகமும் அவர் திரும்ப செல்ல முயன்ற வேகமும் வீட்டில் ஏதோ சரியில்லை என்று ஆகாஷிற்கும் அனிதாவிற்கும் உணர்த்த…….. “என்ன? என்ன?”, என்றவர்களிடம்……….
“அம்மாவுக்கும் பொண்ணுக்கும் கூட பிரச்சனை”, என்றார் சுருக்கமாக.
“எங்களாலயா”, என்று அனிதா கேட்க…..
“என்னால”, என்று மட்டும் சொல்லி உடனே திரும்பி விட்டார் அண்ணாமலை.
என்னவோ பயம் ஒன்று அவரின் நெஞ்சை உலுக்க ஆரம்பித்தது. அனிதாவை பற்றி முதன் முதலில் கேள்விப்பட்ட போது கூட ராஜி இப்படி ஒரு முகத்தை கட்டவில்லை.
இன்று, “உங்களை பொருத்தவரை நான் செத்து போயிட்டேன்”, என்று ராஜி சொன்ன வார்த்தை வெகுவாக அவரை அசைத்திருந்தது….. அவள் ஏதாவது தப்பு முடிவு எடுத்து விடுவாளோ என்ற பயத்தை கொடுத்தது.
அனிதாவின் வாழ்க்கையில் தான் நுழையாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவரால் தேவிகாவையும் விடமுடியவில்லை…… ராஜியையும் விடமுடியவில்லை…… அனிதாவையும் விடமுடியவில்லை…….. அப்பா அப்பா என்றவரை சுற்றிவரும் நந்தன்……….. அவனையும் விடமுடியவில்லை……… அனிதாவின் வயிற்றில் இருக்கும் அவரின் குழந்தை…….. அதையும் விடமுடியவில்லை.
தப்பென்று தெரிந்தே செய்த தப்பு அனுபவித்து தானே ஆகவேண்டும்……..
வீடு வந்த சேர்ந்த போது அவர் எப்படி விட்டு சென்றாரோ வீடு அப்படியே இருந்தது. அன்று அனிதாவை பற்றி தெரிந்த போது கூட அவரவர் அவரவர் வேலையை செய்தனர்………. உண்டனர்………. உறங்கினர்.
இன்று தேவிகாவோ ராஜியோ யாரும் உணவை தொடவில்லை. நேரம் மாலை ஆறு மணி என்று காட்டியது. எப்படி அவர்களை உண்ண வைப்பது என்று அவருக்கு தெரியவில்லை.
தேவிகாவிடம் வந்தவர்………. “நீ இன்னும் சாப்பிடலை தேவி! உன் உடம்பு இருக்கிற நிலைமைக்கு சாப்பிடாம இருக்க கூடாது! சாப்பிடு! ராஜியும் பசி தாங்க மாட்டா, அவளையும் கூப்பிட்டு சாப்பிட வை”, என்றார்.
ராஜியை பற்றி சொன்னவுடன் மகள் பசி தாங்க மாட்டாள் என்பது உறைக்க அவளை அழைக்கப் போனார் தேவிகா.
வெகு நேரம் அழைத்த பிறகே வந்தாள் ராஜி……….
“சாப்பிடு பாப்பா”, என்று தேவிகா சொல்ல………. அவளுக்கும் பயங்கர பசி மறுத்து பேசாமல் உண்டாள்.
அதன் பிறகு தேவிகாவும் உண்டார். பிறகு ராஜியை சமாதானப்படுத்தும் பொருட்டு ஏதோ பேசப்போக அவள் அதை காதில் வாங்கும் எண்ணத்திலேயே இல்லை.
அவள் பாட்டிற்கு சென்று ரூமினுள் அடைந்து கொண்டாள்.
தேவிகாவும் அவளை சமாதானப்படுத்தும் வகை தெரியாமல் மனதளவில் மிகவும் ஓய்ந்து போனவராக அவரும் சென்று படுத்துக்கொண்டார்.
என்றுமில்லாத அமைதி வீட்டினுள் இருந்தது.
அண்ணாமலை, என்ன செய்வது? எப்படி ராஜியை சமாளிப்பது என்ற யோசனையிலேயே இருந்தார்.
அந்த அமைதி இரவு முழுவதும் தொடர்ந்தது……….
காலையில் எழுந்த தேவிகா வெளியே வந்து பார்க்க……… வெளி வாசல் கதவு தாளிடாமல் இருந்தது. அதுக்குள்ள ராஜி எழுந்து வாசல் தெளிக்கப் போயிட்டாளா என்ற எண்ணத்துடன் அவர் கீழே வந்து பார்க்க அங்கே யாரும் இல்லை வாசலும் தெளிக்கப்படவில்லை.
யாரு கதவை திறந்தா தெரியலையே என்று யோசித்தவாறே மறுபடியும் மேலே வந்து ராஜியின் ரூமின் கதவை தட்டப் போக……. அதற்கு அவசியமேயில்லாமல் அது கை வைத்தவுடன் திறந்து கொண்டது.
அவருக்கு ஏதோ சரியில்லை என்று பயம் பிடித்துக் கொண்டது. “ராஜி! ராஜி!”, என்றழைத்துக்கொண்டே அவளை அங்கே தேட ரூம் காலியாக இருந்தது. மேலே முழுவதும் தேடியவர்………. மறுபடியும் கீழே அவசரமாக இறங்கி அவளின் செருப்பு இருக்கிறதா என்று பார்த்தார்.
அது அங்கே இல்லை.
“ஐயோ! எங்கே போயிட்டா தெரியலையே!”, என்று மீண்டும் தன் கனமான உடம்பை தூக்கிக்கொண்டு ஏறக்குறைய மேலே ஓடினார்.
ஓடி அண்ணாமலையை எழுப்ப…. இவரின் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்ற தோற்றம் அண்ணாமலையை பதறச் செய்ய…….
“என்ன? என்ன ஆச்சு?”, என்றார் அவரும் பதட்டமாக……….
“ராஜியை காணோம்”, என்றார்……..
வேகமாக சென்ற அண்ணாமலையும் ஒரு முறை வீடு முழுவதும் தேடியவர்……. அவளின் ரூமை பார்வையிட……….
“என்னைத் தேடவேண்டாம்………
நான் செல்கிறேன்………”,
என்ற இரண்டு வரிகள் நிரம்பிய காகிதம் கண்ணில் பட்டது.
அவர் அதை படித்துக்கொண்டிருக்கும்போதே வந்து பிடிங்கிய தேவிகா அதை படிக்க……. படித்தவர் வேரறுந்த மரமாய் அண்ணாமலை பிடிக்க முயன்றும் பிடிக்க முடியாமல் மயங்கி கீழேச் சரிந்தார்.
வேகமாக ஓடிய அண்ணாமலை தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தார். அப்போதும் தேவிகாவின் மயக்கம் கலையவில்லை.
பக்கத்தில் இருந்த டாக்டரை அவரே போய் அழைத்து வந்தார்.
வந்து பார்த்தவர் ஏதோ இன்ஜெச்சன் செய்ய அப்போதும் தேவிகா விழிக்கவில்லை.
“நீங்க இவங்களை சேலம் ஹாஸ்பிடல் கொண்டு போயிடுங்க….. ஏற்கனவே இவங்களுக்கு நிறைய தொந்தரவு அங்க கொண்டு போறது பரவாயில்லை”, என்றார்.
அருகில் இருந்த உறவினர் ஒருவரின் உதவியுடன் தேவிகாவை வண்டியில் ஏற்றிய அண்ணாமலை……… அவர் கூட வரவேண்டுமா என்று கேட்டதற்கு, “இல்லை! தேவையில்லை! நான் பார்த்துக்கறேன்!”, என்று வண்டியை கிளப்பினார்.
“ராஜி எங்கே”, என்ற அவரின் கேள்விக்கு……. “ஒரு வாரம் காலேஜ் டூர் போயிருக்கா……”, என்று பதில் சொல்லியபடியே சேலத்தை நோக்கி விரைந்தார்.
அந்த நேரத்திலும் ராஜி எங்கே போயிருப்பாள் என்று யோசித்துக்கொண்டே வந்தவர் ஒரு வேளை செந்திலிடம் போயிருப்பாளோ என்றெண்ணி ஆகாஷை அழைத்து தகவல் சொன்னவர்…….. செந்தில் இருக்கும் ஹாஸ்பிடல் சென்று உடனே பார்க்கும் படி சொன்னார்.
அவனும் அங்கே விரைந்து சென்று பார்க்க அங்கேயெல்லாம் ராஜி இல்லை.
செந்திலிடம், “ராஜி இங்கே வந்தாளா”, என்று ஆகாஷ் கேட்க…….. ஏதோ சரியில்லை என்று புரிந்த செந்தில்…….. “இல்லை! இங்க வரலை அவ!”, என்றான்.
“நீ எதுவும் அவளை மறைச்சு வெச்சிட்டு பொய் சொல்லலையே”, என்றான் ஆகாஷ் பதட்டத்துடன் மறுபடியும்.
“இல்லையில்லை! எங்கே அவ?”, என்றான் ஆகாஷிற்கு சற்றும் குறையாத பதட்டத்துடன் செந்தில்.
அங்கே செந்திலுடன் இருந்த சீனியப்பனும் பதறினார்…… “என்ன பாப்பாவை காணோமா”, என்று.
உடனே அண்ணாமலைக்கு போன் செய்த ஆகாஷ், “இங்கெல்லாம் வரலை”, என்றான்.
“நான் சேலம் நெருங்கிட்டேன், அங்க அந்த ஹாஸ்பிடல் தான் வந்துட்டு இருக்கேன். வந்து பேசிக்கலாம்”, என்றார் அண்ணாமலை.
சிறிது நேரத்தில் வந்தவர்…… முதலில் தேவிகாவை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு போக……. அவர்கள் இருக்கும் மருத்துவ உபகரணங்களை எல்லாம் மாட்டி அவரை தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர்.
ராஜியை காணாததால் உறவினர்கள் யாரையும் துணைக்கு அழைக்க தயங்கி அனிதாவை அழைத்து தேவிகாவின் அருகில் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு ராஜியை தேடிக் கிளம்பினார் அண்ணாமலை ஆகாஷுடன்.
மிகுந்த பதட்டத்தில் இருந்தான் செந்தில் ராஜியை காணோம் என்ற செய்தி கேள்விப்பட்டதில் இருந்து. எங்கே போயிருப்பாள் தன் துணை நாடி வந்தவளை தானும் அது இது என்று பேசி அனுப்பி விட்டோம். ஏதாவது தப்பு முடிவு எடுத்துவிடுவாளா? எங்கே போய் தேடுவது அவளை…… ?அவளை பற்றிய கவலையில் கண்களில் நீர் தளும்பியது அவனுக்கு.
அண்ணாமலை முதலில் சென்ற இடம் செந்திலிடம் தான்….. “எங்கே? எங்கே என் பொண்ணு?”, என்றார் கோபமாக……
“எங்க அவ? என்ன செஞ்சீங்க நீங்கல்லாம் அவ காணாம போற அளவுக்கு?”, என்று பதிலுக்கு அவரிடம் ஆத்திரப்பட்டான் செந்தில்.
“டேய்! அவளை மறைச்சு வெச்சிட்டு நீ எதுவும் வேலை செய்யலையே”, என்று அண்ணாமலை மறுபடியும் எகிற…….
“அவ மட்டும் கிடைக்காம போயி அவளுக்கு எதாவது ஆச்சுன்னு வெச்சிக்கோ…… நீ செத்தடா!”, என்று ஆவேசமாக ஒரு கை கட்டு போட்டிருக்கும் நிலையிலும் மறு கையால் அண்ணாமலையின் சட்டையை செந்தில் பிடிக்க போக………. பாய்ந்து வந்த சீனியப்பன் அவனை தடுத்துப் பிடித்தார்.