அத்தியாயம் இருபத்தி ஐந்து:
இன்றைய நிகழ்வுகள்
ராஜேஸ்வரி வந்ததும், அவரிடம் இரண்டு வார்த்தை பேசி மேலே சென்றான் ரமணன்.
அத்தை கட்டிலில் படுத்து கொண்டிருக்க……….. அவள் மேல் ஏறி ஸ்ருதி படுத்திருக்க………… ரோஹித் அருகில் அமர்ந்து, அவன் ஸ்கூல் கதைகளை சொல்லி கொண்டிருந்தான்.
“வரா………! என்ன இது? இப்படி நீ திடீர்ன்னு செஞ்சா கல்பனா ஏதோ அவ சொல்லிடான்னு வருதப்படறா! இப்படி தான் பேசிட்டு இருக்கும் போது நடுவில எழுந்து வர்றதா கெட்ட பழக்கம்”, என்றான்.
பதிலே சொல்லவில்லை வரா. “நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள். எனக்கொன்றுமில்லை இல்லை, நான் இப்படித்தான்”, என்ற மனப்பான்மையுடன் ஒரு பார்வை பார்த்தாள்.
“ரோஹித் நம்ம வெளில போகலாமா!”, என்று ரமணன் ரோஹிதிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே…………. வரா “வேண்டாம்! இப்போவே ஏழு மணி. நாளைக்கு அவனுக்கு ஸ்கூல் இருக்கு”, என்றாள்.
அவன் ப்ரெஷ் ஆகி வந்த பொழுது, குழந்தைகளும் இல்லை, வராவும் இல்லை.
“காலையில எனக்கு உன்னோட இருக்கிற டைம் கம்மியாகுதுன்னு சொல்லிட்டு, இப்போ ஓடறா பார்”, என்று மனதிற்க்குல்லேயே அவளை திட்டியவன், கீழே போனான்.
அங்கே இருந்தவள், இவனை பார்த்ததும், “நான் குட்டிய தூங்க வைக்கிறேன், அண்ணி!”, என்று கல்பனாவிடம் கூறி மறுபடியும் ஸ்ருதியை தூக்கி கொண்டு மேலே வந்தாள். அவள் தூக்கிக்கொண்டு பாதி படி ஏறிக்கொண்டு இருக்கும்போதே, “கல்பனா!”, என்று அதட்டினார் ராஜேஸ்வரி,
“ஸ்ருதிய அவ கிட்ட இருந்து வாங்கு! போ! நீ போய் தூங்க வை!”, என்று அதட்டினார் ராஜேஸ்வரி.
“எல்லாம் உன்னால் தான்!”, என்பது போல் ரமணன் வராவை பார்க்க………. “ஏன்மா நான் தூங்க வைச்சா என்ன?”, என்று தன் தாயிடம் வரா பதிலுக்கு கோபப்பட………..
“நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லை வரா! தம்பி சாப்பிட வர்றாங்க, நீ அவளை தூக்கிட்டு மேல போனா?”,
“ஏன் நீங்க சாப்பாடு போடமாட்டீங்களா”, என்றாள் பதிலுக்கு,
“இப்போ தான் சொன்னேன்! நீ ஒண்ணும் சின்ன பொண்ணு இல்லை. எத்தனை பேர் இருந்தாலும் சாப்பாடு விஷயத்துல அம்மாவும் மனைவியும் கவனிக்கற மாதிரி அவருக்கு இருக்காது”.
“நீ இப்படி செஞ்சேன்னு தெரிஞ்சா? உன் வள்ளிம்மா என்ன நினைப்பாங்க. இரு! நான் அவங்க கிட்டயே கேட்கறேன்”, என்றபடி அவர் போனை கையில் எடுக்க போக………
“நீங்க ஒண்ணும் அவங்களை கூப்பிடாதீங்க!”, என்று அவள் குரல் ஸ்ருதி இறங்கி…………….. அவள் கையில் வைத்து கொண்டிருந்த ஸ்ருதியையும் இறக்கிவிட………… மாடிப்படி இறங்கி வந்தாள்.
“வள்ளிம்மா”, என்ற வார்த்தை அவளிடம் நன்கு வேலை செய்தது.
அவள் இறங்கி வரவும் கண்களாலேயே, “நாம் செல்லலாம்”, என்று ராஜேஸ்வரி கல்பனாவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினார்.
“உம்”, என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு வரா வந்து அங்கே இருந்த சோபாவில் அமர………… சற்று நேரம் பார்த்தவன், அவனாகவே சென்று சாப்பாடை எடுத்து போட்டு கொண்டு சாப்பிட அமர………. அருகில் வந்தவள், “நான் போடட்டுமா”, என்க,
“நீ சாப்பாடு வைக்கறதுக்காக நான் வெய்ட் பண்ணலாம். ஆனால் என் பசி வெய்ட் பண்ணாது”,
அமைதியாக அவனை பார்த்திருந்தாள்.
அவன் சாப்பிட, சாப்பிட, என்ன தேவையோ வைத்தவள், அவன் சாப்பிட்டு முடித்ததும்,
“இவ்வளவு நாளா நானும் வள்ளிமாவும் உங்க கூடவா இருந்தோம். இப்போ மட்டும் என்ன?”.
அவளை பார்த்தவன், “அச்சோ, நீ இவ்வளவு புத்திசாலியா”, என்பது போல் பார்த்தான்.
“இல்லைன்னா இல்லை வரா! ஆனா இருக்குன்றப்போ இல்லாம இருக்க முடியாது. அதுக்கு தான் நான் இவ்வளவு நாளா இந்த பக்கம் வராம இருந்தேன், நீ கம்பம் வந்தப்போவும் சீக்கிரம் கிளம்பிடுவேன்”.
“உனக்கு தெரியாது வரா, நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவ. நீ என் பக்கத்துல இருக்கும் போது நிறைய என் சிந்தனைகளை ஆக்ரமிப்ப”.
நிறுத்தியவன்……….. “உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ! இந்த வேலைய நீ தான் எனக்கு செலக்ட் பண்ணின. முதல்ல உங்களோட கட்டாயத்துக்காக நான் இதை செலக்ட் பண்ணினேன்”.
“ஆனா இப்போ எனக்கு நீ எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு. இதுல மைன்ட் டைவர்ஷன் இருக்க கூடாது”.
“இப்படி தினமும் நீ முகத்தை தூக்கி வைச்சா? நான் என்ன பண்ண முடியும். நான் என்ன எனக்காகவா கல்யாணம் முடிந்தவுடனே உன்னை விட்டுட்டு போனேன், உனக்காக தான் போனேன். நீ உன்னோட குழப்பங்கள்ள இருந்து நிரந்தரமா வெளில வர்றதுக்காக போனேன்”.
“நீ இப்போ வந்துட்டேன்னு எனக்கு தெரியும். வரலைன்னாலும் உன்னோட குழப்பங்களுக்கான காரணங்கள் நல்ல படியா முடிஞ்சிடுச்சு, அதனால தான் வந்தேன்”, என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வரமஹாலக்ஷ்மியின் கண்களில் கண்ணீர் மளமளவென இறங்கியது.
பார்த்தவனுக்கு சட்டென்று எரிச்சல் வர……….. “முதல்ல எதுக்கெடுத்தாலும் இப்படி அழறதை நிறுத்து! எனக்கு இது பிடிக்காது. உடனே அடுத்த கேள்வி கேட்காத, உனக்கு பிடிச்சதை நான் ஏன் செய்யனும்னு????????????” என்று கோபமாக உரைத்தவன்,
“சீக்கிரம் கிளம்பு கோயில் மூடிடுவாங்க, போன்ல உன் வள்ளிம்மா ஒரே தொல்லை, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்கு போகணுமாம்”,
“எட்டு மணி ஆகப் போகுது“, என்றாள்.
“எந்த கோயில் திறந்திருக்கோ, அங்க போகலாம்”.
“ஏன் அவசரம், நாளைக்கு போகலாமே!” என்றாள்.
“அம்மா தாயே! அப்புறம் நீ என்னை பார்த்து சிரிக்கவா? பாய்ன்னு சொன்னா சிரிக்கற………… அத்தை மட்டும் போதாது, மாமாவும் வேணும்னு குட்டி கிட்ட சொல்லற……………. இன்னும் டையலாக் எல்லாம் அடிக்கற, கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை எனக்கு தெரியும், இப்போ தெரியாதுன்னு. இதெல்லாம் நமக்கு ஆகாது நீ கிளம்பு”, என்றான்.
இதற்கும் நாம் கோயிலுக்கு போவதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தவாறே டிரெஸ் மாற்றுவதற்காக மேலே செல்ல கால் வைக்க……..
“பாப்பா, நீ எப்பவுமே அழகு தான்! டிரெஸ் மாற்றுகிறேன்னு இன்னும் லேட் பண்ணாதீங்க………. வாங்க!”, என்றான் சிறு குழந்தைக்கு சொல்வது போல்.
அவன் சொன்ன விதம் புன்னகையை வரவழைக்க………… “அம்மா! நாங்க கோயிலுக்கு போகிறோம், அண்ணி! அண்ணா வந்தா சொல்லிடுங்க”, என்று கத்திவிட்டு அவனுடன் சென்றாள்.
கேட்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் கல்பனாவின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்தது.
அத்தியாயம் இருபத்தி ஆறு
அன்றைய நினைவுகள் :
முகம் முழுவதும் ரத்தம்.
எத்தனையோ பார்த்து விட்ட ரமணனுக்கு இதை பார்க்க முடியவில்லை.
ஒரு நொடி கண்மூடியவன் மனதிற்குள், “இது வரா இல்லை யாரோ”, என்று கொண்டு வந்தான்.
இல்லையென்றால் அவனால் செயல்பட முடியாது என்று நன்கு அறிவான்.
“எப்படி இறங்கலாம்”, என்று அவன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே சிலர் அருகே ஓடி வந்தனர்.
“இறங்கலாம்!”, என்றாள் குழி முழுவதும் அவள் இருந்தாள்.
அவன் கண்களில் அவனையறியாமல் கண்ணீர் நிறைந்ததால், கண்கள் வேறு சரியாக தெரியவில்லை.
முயன்று கட்டுக்குள் வந்தவன், ஊன்றி பார்த்ததில் ஒரு இடத்தில் சிறிது இடம் தெரிய……….. மெதுவாக இறங்கி………….. அவள் மேல் கால் வைத்து விடாதவாறு ஒற்றை கால்களில் நின்றான்.
அப்படியே குனிந்து அவளை ஒரு கையால் தூக்க முயன்ற பிறகு, சிறிது இடம் கிடைக்க…………… இரு கால்களிலும் நின்றவன். அவளை தூக்கி தோள் மேல் போட்டான்.
அவளிடம் சிறிது அசைவு தெரிய, “வரா”, என்று கூப்பிட்டு கொண்டே மேலே அவளை தூக்கி எப்படி ஏறுவது என்று பார்த்தான்.
யாரோ கைகளை நீட்டினர் அவளை வாங்குவதற்காக…………………… கொடுக்க மனமில்லாமல் தன்னை தூக்குவதற்கு ஏதுவாக கைகளை நீட்டினான்.
இருவரையும் யாரால் ஒருங்கே தூக்க முடியும். ஒருவர் கைகொடுக்க அதோடு சேர்த்து இரண்டு மூன்று பேர் பிடிக்க……………. அவனுடைய கால்களை பக்கவாட்டில் வைத்து மளமளவென்று ஏறி அவளை கீழே கிடத்தினான்.
எதை கொண்டு அவள் முகத்தின் ரத்தத்தை துடைப்பது என்று தெரியாமல் தன்னுடைய டீ ஷர்ட் கழட்றியவன் அவள் முகத்தை துடைத்தான். மேல் நெற்றியில் இருந்து ரத்தம் வந்து உறைந்திருந்தது.
பல்ஸ் பார்த்தான். பணியில் சேர்ந்ததில் இருந்து நிறைய கடினமான சூழல்கள் பார்த்துவிட்டதால் அவன் உள்மனது கூறியது, சீரியஸ் அல்ல, அவள் ஸ்டேப்ள் என்றே சொல்லியது.
“வரா! வரா!”, என்று கன்னத்தில் தட்டினான். கொஞ்சம் அதற்கு செவிசாய்ப்பது போல் கண்களில் அசைவு தெரிய………….. பக்கத்தில் இருந்தவரிடம் தண்ணீர் வாங்கி முகத்தை துடைத்து, மறுபடியும், “வரா! வரா!”, என்று பலமாக அழைத்து தட்ட துவங்கினான்.
மெதுவாக கண்ணை திறந்தாள். அவனை பார்த்தவுடனே, அவன் தானா என்பதற்காக அவன் கையை பிடித்தவள், “வெங்கி”, என்றாள்.
அந்த நேரத்திலும், “எப்போ வந்த?”, என்று கேட்ட அவள் முகத்தில் வலியையும் மீறி ஒரு நிம்மதி தெரிந்தது.
“ரொம்ப வலிக்குது!”, என்றாள்.
“ஒண்ணுமில்லை வரா! நம்ம இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்!”, என்றபடியே இரு கைகளால் அவளை அவன் தூக்கி கொண்டு போக, “வலிக்குது”, என்று முனகினாள்.
“சரியாயிடும்”, என்று கம்மிய குரலில் சொல்லிக்கொண்டு……… அவளை தூக்கி கொண்டு ஏறக்குறைய ஓடினான்.
உதவிக்கு வந்தவர்களை, “தேவையில்லை”, என்று ஒதுக்கினான்.
அதற்குள் சிவசங்கரன் வந்துவிட, அவளை ஆம்புலன்சிர்க்கு கொண்டு செல்லாமல் அவருடைய காருக்கு கொண்டு சென்று படுக்க வைக்க முற்பட……
அவனை கீழே குனிய சொன்னவள்,
“ஸ்ரீதர் எங்கே?”, என்றாள்.
இந்த நேரத்திலும் அவன் நினைவா எண்ணங்கள் வட்டமிட்டன. பதில் சொல்ல அவசியமில்லாத போதும்……….
“அவன் அங்கே காருக்குள்ள மாட்டியிருக்கான்”, என்றான் ரமணன்.
“அவனை காப்பாற்றேன்”, என்றாள் வரா அந்த வலியிலும்,
“அவங்க பார்த்துப்பாங்க!”, என்று சொல்லிய ரமணன், அவளை படுக்க வைத்து………… பக்கத்தில் சிவசங்கரனை அமர சொல்லி, கார் ஓட்ட முன்புறம் வர……….
“ப்ளீஸ் வெங்கி! அவனை காப்பாத்து, அவன் தான் என்னை காப்பாற்றினான்”, என்றாள் ஒற்றை சொல்லாய்.
சொன்னவள், அந்த வலியிலும்………… கண்கள் தானாக வலியில் மூடும் போதும்………… விடாமல் சிரமப்பட்டு கண்களை திறந்து, அவனை நேர் பார்வை பார்த்தாள்.
தாமதியாது, “சரி, நீ அய்யாவோட போ”, என்றவன், அவர்கள் கார் சென்ற பிறகே அங்கே அந்த இடத்திற்கு வந்தான்.
அதற்குள் ஸ்ரீதருடைய தந்தை மற்றும் வேறு ஆட்கள் அங்கே வந்தனர்.
எல்லாரும் முன்புறம் காரை பிரிக்க முற்பட்டு கொண்டிருந்தனர்.
சென்று, “என்ன செய்யலாம்”, என்று ஆராய்ந்து பார்த்தான்.
ஸ்ரீதர் மயங்கி இருந்தான்.
“டேய், ஒடைங்கடா! காரை ஓடைச்சாவது என் பையனை வெளிய எடுங்கடா!”, என்று கத்தி கொண்டிருந்தார்.
அவர் தான் தந்தை, என்று கூற்றின் மூலமாக உணர்ந்தவன், “ராம் பிரசாத் எங்கே?”, என்றான் அவரிடம் சென்று நேரடியாக……………
அவர் அவனிடம் பதில் சொல்லவில்லை, அருகில் நின்றவன், “எங்களை கேட்டா”, என்றான்.
நின்றது நின்றபடி ஸ்ரீதரின் தந்தையையே பார்த்திருந்தவன், “நான் உன்கிட்ட கேட்கலை”, என்றான் பதில் சொன்னவனிடம்.
அருகில் இருந்தவன், “நீ யாரு?”, என ஒருமையில் அழைத்து, விரல் நீட்டி கேட்க…….
கேட்டவன் அவன் கையை கூட கீழே விட்டிருக்க மாட்டான், அதற்குள் ரமணன் அவனை ஓங்கி விட்ட அறையில் தூரப்போய் விழுந்தான்.
“யார் கிட்டடா கைய நீட்டுற, ஆள் தெரியாம தூக்கிடிங்கடா. ஏண்டா இப்படி செஞ்சோம்னு நீங்க ரொம்ப வருத்தபடுவீங்க”, என்று அவனிடம் கத்தியவன்,
திரும்பி, “இன்னும் உங்க பையன் பொனமாகளை, ஆனா இன்னும் பத்து நிமிஷத்துல ராம் இங்க வரலைன்னா…………. இந்த வண்டி இடிபாடுளையே உங்க பையனும் சேர்ந்து பொதஞ்சிடுவான். அப்புறம் காரோட சேர்த்து அவனையும் பொதைக்க வேண்டியது தான்”, என்றான்.
ஸ்ரீதரின் தந்தை வெங்கட ரமணனை பார்க்க,
ஒன்றும் பேசாமல் ஸ்ரீதர் இருந்த காரிடம் சென்றவன்…………… “தள்ளுங்க, நான் பார்க்கிறேன்”, என்று சொல்லி சீட்…………. அவன் இருந்த பொசிஷன்…….. என்று ஆராய முற்பட, அருகில் இருந்தவர்கள் அவனுக்கு வழிவிட்டனர்.
ஸ்ரீதரின் தந்தையின் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று, “அவனை ஏன் விடுகிறீர்கள்”, என்று கேட்க,
“யாரோ பெரிய போலிஸ் ஆஃபிசறாங்க. இன்னொரு பொண்ணை இப்போதான் காப்பாத்தி ஹாஸ்பிடல் அனுப்பினார்”, என்று சொல்லி கொண்டிருக்கும் போதே………. பின்பக்க காரின் கதவை பிடுங்கி எறிந்து, சீட்டை பின்புறம் இருந்து இழுக்க ஆரம்பித்தான்,
அது வரவில்லை என்ன செய்வது என்று அவன் ஆராய்ந்து கொண்டிருக்க…….
ஸ்ரீதரின் தந்தை அவர்களின் ஆட்களை அழைத்து………. “அவனை கொண்டு வந்து இங்க விட்டுட்டு போய்ட சொல்லுங்கடா”, என்று ராமை அழைத்து வர சொல்லி அனுப்பியவர்…………
ரமணன் அருகே சென்று, “அந்த தம்பி ஒரு சேதாரமுமில்லாம வந்துடும். இவனை எப்படியாவது வெளில எடுங்க, சீக்கிரம்!”, என்றார்.
திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தவன்……….. பதில் பேசாது, வேறு ஆட்களை வைத்து, காரில் இருந்த டூல்ஸ் பாக்ஸ் எடுத்து, இரண்டே நிமிடத்தில் தேர்ந்தவன் போல் எதை எதையோ செய்து சீட்டை கழட்டி பின்புறமாக இழுக்க சொன்னவன்…………… ஸ்ரீதரை அப்படியே கையில் தாங்கி படுக்க வைத்த நிலையில், கால்களை தனித்தனியாக எடுக்க முற்பட ஒரு கால் வெளியில் வந்தது.
அடுத்த கால் எடுக்க முடியவில்லை. நன்றாக மாட்டி இருந்தது. எப்படியோ இரண்டு மூன்று பேரின் உதவியை வைத்து கொண்டு எடுத்தான்.
எடுக்க, எடுக்க, ரத்தம் சிதறி தெறித்தது. அவன் மேல் எல்லாம் ரத்தம்.
அதற்குள் அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த போன் விடாமல் அடித்தது.
அப்படியே ஸ்ரீதரை தூக்கி எழுந்தான். பின்பு ஸ்ட்ரெச்சரில் அவனை வைத்தான், எல்லாரும் வேகமாக ஸ்ரீதரை ஆம்புலன்ஸ்ஸில் ஏற்ற வந்தனர்.
“இருங்க!”, என்றவன் அவன் தந்தையை பார்த்து………. “ராம் அண்ணா, எங்கே?”, என்றான்.
“கூட்டிட்டு வர்றாங்க தம்பி! ஸ்ரீதரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகட்டுமே!”, என்று அவர் சொல்லும்போதே…………. மறுபடியும் போன் அடிக்க அதை ஒரு கையால் எடுத்து கொண்டே…………. “போங்க!”, என்று ஸ்ரீதரை பிடிதிருந்தவர்களிடம் சொல்லி………… “அவனுக்கு பதிலாக நீங்க இருங்க, அண்ணா வரவரைக்கும்”, என்று ஸ்ரீதரின் அப்பாவிடம் சொன்னான்.
“என்னடா பெருசா உதார் விடுற!”, என்று மறுபடியும் ஸ்ரீதரின் தந்தையிடம் இருந்தவர்கள் சத்தம் போட……….
“வாங்கடா! எவனுக்காவது தைரியம் இருந்தா, வந்து கூப்டுக்குங்கடா”, என்று இவன் அவர் முன் சென்று நின்றான்.
“டேய் ஸ்ரீதரை முதல்ல கொண்டு போங்கடா! தாமதிக்காதீங்க!”, என்று சொன்னவர், “நான் இருக்கேன், அவன் போகட்டும்”. என்று நின்றார்.
அதற்குள் கட்டாகியிருந்த போன்…………. மறுபடியும் ஒலிக்க ஆரம்பித்தது. அவசரமாக அதை எடுத்து பார்க்க………… ராமநாதன் அழைத்தார்.
“என்ன அப்பா!”, என்று அவனின் கேள்விக்கு………….
ரமணா, “ராம் கிடைச்சானா, இல்லையா”, என்றார் பதட்டமாக………..
“அப்பா எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சுப்பா, வந்துட்டு இருக்காங்க”,
“வந்தவுடனே மதுரை அனுப்புடா”, என்றார். அவருக்கு வராவின் நிலையை பற்றி நினைவு இருந்த மாதிரி கூட தெரியவில்லை.
“என்ன அப்பா?”, என்றான் பதட்டமாக……….. “கல்பனாக்கு ஆபரேஷன் பண்ணி குழந்தையை வெளிய எடுக்கலாம்னு இருக்காங்க”.
“கல்பனாவுக்கு பி.பி ரொம்ப அதிகமா இருக்கு, அடிபட்டிருக்கு வலியில துடிக்கறா. மயக்க மருந்து குடுத்தேன்றாங்கடா………. ஆனா கத்திட்டே இருக்கா. நான் கையெழுத்து போட்டுட்டேன். இருந்தாலும் அவனை உடனே அனுப்பு”.
பேசிக்கொண்டு இருக்கும்போதே……… ஒரு சுமோ வந்தது. ராம் அதிலிருந்து இறங்கினான்.
வெங்கட ரமணன் அவன் அருகில் ஓடி அவனை கண்களால் ஆராய “எனக்கு ஒன்றுமில்லை”, என்றவன், அப்போதுதான் சுற்றுபுறத்தை பார்த்தான்.
ஆக்சிடென்ட் ஆனது பார்த்து…….. “யாருக்கு என்ன? இங்க ஏன் நிக்கற?”, என்றான் பதட்டத்துடன்.
“வராக்கு அண்ணா! ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்காங்க. அடிபட்டிருக்கு. நீங்க வாங்க நாம போகலாம்”.
அவன் வந்த டூ வீலர் இருக்க………… மறுபடியும் வேகமாக எடுத்து கொண்டு பறந்தனர்.
ஸ்ரீதரின் அப்பாவின் புறம் அவர்கள் திரும்ப கூட இல்லை. அவர்கள் வராவை பார்க்க ஓடினர்.
அங்கே சென்றால் ஐ ஸீ யு வில் இருந்தாள்.
வெளியே இருந்த சிவசங்கரன், “உயிருக்கு பயமில்லை, எங்க? எங்க? அடிபட்டு இருக்குன்னு பார்த்துட்டு இருக்கோம்னு சொல்றாங்க”, என்றார் அடக்கப்பட்ட கண்ணீருடன்.
அதற்குள் போன் மணியடிக்க……….. “அப்பா”, என்றான்,
“ரமணா, குழந்தை பொழைக்காதுங்கராங்கடா”, என்றார் அங்கே அவர்.
“இங்க வாராக்கு ஆக்சிடென்ட், அடிபட்டிருக்கு”, என்றான் இவன்.
இருபுறமும் ஆழ்ந்த அமைதி……
“என்ன செய்யட்டும்?”, என்றவனிடம்,
“வராவை உன்னால அங்க பார்த்துக்க முடியும்னு தோணினா, அவங்களை அனுப்பிவை. இங்க அவங்க தேவை அதிகம்”, என்றார்.
“சரி”, என்று வைத்தவன்…….. எப்படி சொல்வது என்று புரியாமல், “மதுரைக்கு இப்போ ஃப்ளைட் இருக்கா”, என்றான் சிவசங்கரனிடம்.
“எதுக்கு?”, என்றார் அவர். இன்னும் பதட்டத்துடன் அங்கே கல்பனாவுக்கு வலி எடுத்திடுச்சுன்னு ஹாஸ்பிடல் சேர்த்திருக்காங்க”, என்று மட்டும் சொன்னான்.
“இன்னும் நிறைய நாள் இருக்கே”, என்றான் பதட்டத்துடன் ராம் பிரசாத்.
“நீங்க ரெண்டு பேரும் அங்க போங்க அண்ணா! நான் இங்கே பார்த்துக்கறேன்”,
“நீ எதையாவது மறைக்கிரியா, எனக்கு பயமாயிருக்கு! சொல்லு ரமணா!”, என்று அவன் அருகில் வந்து அவன் கைபிடித்து ராம் கேட்க……………
“அண்ணா பேசற நேரம், நீங்க அங்க போனா கல்பனாவுக்கு தைரியமா இருக்கும், கிளம்புங்க!”,
“இங்கே பாப்பா!!!!!!!!!!!!”, என்று இழுத்த சிவசங்கரனிடம், “நான் பார்த்துக்கறேன் ஐயா, நீங்க சீக்கிரம் கிளம்புங்க”,
அங்கே அவர்கள் சென்றபோது, கல்பனா கதறிய கதறல் அவர்களுக்கு ஹாஸ்பிடல் வாசல் வரை கேட்டது.
உறவினர்கள் நிறைய பேர் வாசலிலேயே தென்பட்டனர். எல்லோர் முகங்களையும் பார்த்தவுடனயே பயம் அதிகரிக்க……….. வேகத்தை இன்னும் அதிகரித்து ஏறக்குறைய ஓடினான், ராம் பிரசாத்.
கல்பானவின் கதறலே குழந்தைக்கு ஏதோ என்று உணர்த்த, ராமநாதன், சுந்தரவல்லி, ராஜேஸ்வரி, அவன் மாமனார், அவர்கள் குடும்பத்தினர் என்று எல்லாரும் இவன் வருவதற்காக காத்திருந்தது போல் இருந்தது.
ராஜேஸ்வரி அவனை பார்த்ததும், “ராம்”, என்று மறுபடியும் அழ துவங்க……..
ராஜேஸ்வரி என்று அதட்டிய சுந்தரவல்லி, “நீ உள்ள போப்பா!”, என்றார்.
ராமநாதனை பார்த்த சிவசங்கரன், “ஒரே நாள்ல நான் ஒண்ணுமில்லாம போயிட்டேனே அண்ணா”, என்றார்.
“நான் இருக்கிற வரைக்கும், நீ அந்த வார்த்தையை சொல்லாதடா”, என்று ராமநாதன் அவரை தேற்றி கொண்டிருக்க…………..
ராம் பிரசாத் உள்ளே சென்றவுடனே, “நீங்க இந்த பொண்ணோட கணவரா”, என்ற டாக்டர். அங்கே அவன் மாமியாரும் இருந்தார்.
“ஆம்” என்ற அவனின் தலையசைப்பிற்கு………….
“சொல்லுங்க சர்! இந்த பொண்ணு! இப்படி அழுதா போட்டிருக்கிற தையல் பிரிஞ்சிடும், உள்ள ப்லீடிங் அதிகம் ஆகிடும். அப்புறம் இவளையும் எங்களால காப்பாற்ற முடியாது. மயக்க மருந்து குடுத்தும் ரெஸ்பான்ஸ் ஆகலை, கத்தறா!”, என்றார்.
கண்களில் கண்ணீர் அவனையறியாமல் இறங்கியது, குழந்தை இறந்து விட்டதா, ராம் பிரசாத்திர்க்கே மயக்கம் வரும் போல் இருந்தது.
“கல்பனா”, என்ற அவனின் குரல் கல்பனாவின் செவிகளில் எட்டியது போல தெரியவில்லை.
அங்கே இருந்த சிஸ்டர் அவளை அதட்டி கொண்டிருந்தார்.
“அம்மா! தோ பாரு, கத்தாதா! தையில் பிரிஞ்சிடும்! அமைதியாயிரு, இன்னொரு பையன் அம்மா எங்கேன்னு கேட்டுட்டு இருக்கான்! அவனை நினைவில் வை!”, என்று…………….