அத்தியாயம் பதிமூன்று:
ராஜி வெளியே வந்த போது செந்திலின் அம்மா அன்னபூரணியும் அசோக்கும் அப்போதுதான் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் இருவரின் முகமும் கூட ராஜியை எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது. ஏனென்றால் அவ்வளவு சுலபமாக அவர்கள் பக்கம் எல்லாம் திருமணம் ஆகாத பெண்கள் ஒரு வாலிபப்பையனை தனியாக வந்து பார்ப்பது என்பது மிக அரிது.
ஸ்னேகிதிகளோடு வருவதோ…. பெற்றோர்களோடு வருவதோ…. நடக்கக் கூடியது தான், தனியாக வருவது என்பது சாதரணமாக நடக்கக்கூடியது அல்ல.
அன்னபூரணிக்கு அந்த ஆராய்ச்சி இருந்தாலும் மகனை காணும் அவசரத்தில், “வாம்மா”, என்று அவளிடம் சொல்லி ஐ.சி.யு உள்ளே போக அவசரம் காட்டினார்.
சீனியப்பன் அவரை உள்ளே அனுப்பிவிட்டு வந்தார்.
ராஜி அவளின் பேகை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமாக மறுபடியும் சீனியப்பன் அவளிடம், “திரும்பவும் இங்கே வந்துடாதம்மா அப்பாக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்”, என்றார்.
அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்……… பார்வையே நான் வருவேன் என்றது. ராஜியை பற்றி நன்கு தெரிந்த சீனியப்பனுக்கும் புரிந்தது. அவர் கண்முன் அவர் பார்த்து வளர்ந்த பெண் ராஜி. அவரையறியாமல் நீண்ட பெருமூச்சு வெளியேறியது.
நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் அசோக்.
“சொன்னா புரிஞ்சிக்கோ பாப்பா”, என்றார்.
பதில் பேசாமல் திரும்பி நடந்தால் ராஜி…… சற்று தூரம் சென்றவள் அசோக்கை பார்த்து, “ஒரு நிமிஷம்”, என்று அழைத்தாள்……
“இவள் எதற்கு நம்மை கூப்பிடுகிறாள்”, என்று யோசனையோடே சென்றான் அசோக்.
“நீங்க உங்க போன் நம்பர் குடுக்கறீங்களா………. அவரை பத்தி ஏதாவது கேட்கணும்னா கேட்டுக்குவேன்……… கேட்டுகட்டுமா?……..”,
அவள் செந்திலை பற்றி சொல்லுகிறாள் என்று தெரிந்தும் அதை உறுதி படுத்திக்கொள்வதற்காக, “யாரைப் பத்தி”, என்றான்.
“அற்பப்பதரே”, என்பது போல அவனை முறைத்து பார்த்தவள்….. “உங்க நண்பரைப் பத்தி”, என்றாள்.
அவன் நம்பர் கொடுக்க………. நோட்டை எடுத்து எழுதிக்கொண்டாள்….. “அவங்க நம்பர் கிடைக்குமா”, என்று கேட்க…….
“எவங்க”, என்று கேட்க வாய்வரை வந்த வார்த்தையை அவளின் முறைப்பிற்கு பயந்து அடக்கினான்.
செந்திலின் நம்பரையும் சொல்ல அதையும் குறித்துக்கொண்டாள். மறுபடியும் ஒரு முறை, “நான் போன் பண்ணி கேட்கலாம் தானே…….. உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லையே”, என்று உறுதி படுத்திக்கொண்டே சென்றாள்.
அசோக் வந்தவுடனே சீனியப்பன், “பாப்பா என்ன கேட்டுச்சு”, என்றார்.
அவர் யாரை பாப்பா என்று சொல்லுகிறார் என்று புரியாமல்……. “யாரு”, என்றான்.
இப்போ பேசிட்டு போச்சு யாருன்னு கேட்கிற என்று முறைத்தார்.
“இதேதடா வம்பு………. ஆளாளுக்கு என்னை பார்த்து முறைக்கிறாங்க…….. இவங்க பாஷையே எனக்கு புரியலைப்பா”, என்று நொந்து கொண்ட அசோக்………. “என் போன் நம்பரும் செந்தில் போன் நம்பரும் வாங்கிட்டு போச்சு”, என்றான்.
“நான் அவ்வளவு சொல்லியும் கேட்கலையா………. இன்னும் எத்தனை பிரச்சனையை இழுத்துவிடப் போகுதோ தெரியலையே”, என்று கவலைப்பட்டார்.
அதை பார்த்து காண்டு ஆனா அசோக்……….. “முதல்ல இழுத்து வச்சிருக்குற பிரச்சனையை பாருங்க……. இப்போதைக்கு அவன் கைதான் நமக்கு முக்கியம் எதுவா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்”.
“உனக்கு அண்ணாமலையை பத்தி சரியா தெரியாது அசோக்”,
“அவருக்கும் எங்களை பத்தி சரியா தெரியாது”, என்றான்.
“அவர்கிட்ட பணம் இருக்கு”,
“எங்ககிட்ட தைரியம் இருக்கு”,
“இப்படி பேசிப்பேசியே தாண்டா பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுக்காம இந்த காலத்து பசங்க ஒழிஞ்சு போறீங்க……..”,
“பிரச்சனை நாங்க பண்ணலை………. வந்தா பார்த்து தானே ஆகணும்……… அதுக்காக ஓடி ஒளியச் சொல்றீங்களா”,
“டேய்! நீயே இவ்வளவு பேசுனா………. உன் நண்பன் எவ்வளவு பேசுவான் நீ சொன்னதேதான்டா……… அவன்கிட்ட எதையும் இதைபத்தி நீ பேசாத இப்போ முதல்ல நம்ம கையை சரிபடுத்துவோம்”, என்றார்.
அப்போது தான் உள்ளே போய்விட்டு வெளியே வந்த அன்னபூரணி கண்கலங்கினார்…. “என்னங்க சின்ன அடினீங்க…….. சின்ன ஆபரேஷன்னீங்க…… கையில பெருசா கட்டு போட்டிருக்கு…….. ஐ.சி.யு ல வேற வெச்சிருக்காங்க”,
“எனக்கே ஒண்ணும் தெரியலை பூரணி”, என்றார் குரல் தழுதழுத்து……
“இப்படி ரெண்டு பேரும் கலங்கினா எப்படி? வந்துடுச்சு பார்த்து தானே ஆகணும்…… நல்லா ஆகிடுவான்………. கவலைபடாதீங்க”, என்று தேற்றினான் அசோக்.
அந்த கலக்கத்திலும், “அந்த பொண்ணு எதுக்குங்க இங்க தனியா வந்து போச்சு”, என்றார் அன்ன பூரணி. அவர் அப்படி கேட்டதும் நேற்றிலிருந்து நடந்தவைகளை எல்லாம் சொன்னார் சீனியப்பன்.
அப்போது தான் விஷயம் முழுவதும் அன்னபூரணிக்கும் அசோகிற்க்கும் தெரிய வந்தது.
“அப்போ அந்த பொண்ணை காப்பாத்த போய் தான் இப்படி ஆகிடுச்சா”, என்று அசோக் நினைக்க…….
“என்ன என் பையன் அந்த மாதிரியெல்லாம் ஒரு பொண்ணை பத்தி பேசியிருக்கானா”, என்று அன்னபூரணி நினைத்தார்.
அவன் அப்படியெல்லாம் செய்திருப்பான் என்று அன்னபூரணியால் நம்ப முடியவில்லை. தனக்கு தெரிந்த தன் மகன் இப்படிஎல்லாம் செய்யமாட்டான் என்று அந்த தாய் மனம் ஸ்திரமாக நம்பியது.
பிள்ளைகள் இந்த மாதிரி சில வேலைகள் செய்யும் போது எல்லோருக்கும் தெரிந்து அது கடைசியாக தான் பெற்றோருக்கு தெரியும். இது உலக நியதி….
திரும்பி அசோக்கை ஒரு பார்வை பார்க்க……….. “அச்சோ! நம்ம தலை உருளுமே!”, என்று பயந்த அசோக்……… ஏதோ வேலையிருப்பது மாதிரி அந்த இடத்தை விட்டு நகரப் போக……….
“டேய் நில்லுடா”, என்று அடிக்குரலில் சீறினார் அசோக்கை பார்த்து அன்னபூரணி……
“என்னடா நடந்தது”,
“எனக்கு எதுவும் தெரியாதும்மா”, என்றான் அசோக்.
அவன் பதில் சொன்ன விதத்திலேயே ஏதோ இருக்கிறது என்று தெரிந்து கொண்டார் அன்னபூரணி.
“எனக்கு எதுவும் தெரியாதுன்னு தான் சொல்றியே தவிர அந்த மாதிரி எல்லாம் செந்தில் எதுவும் பண்ணலைன்னு நீ சொல்லலை……… இதுலயே தெரியுது உனக்கு விஷயம் தெரியும்னு, சொல்லுடா”,
சொன்னால் நண்பன் தொலைத்துவிடுவான் என்று பயந்த அசோக்……….
“எனக்கு எதுவும் தெரியாதும்மா”, என்றான்.
“உன் நண்பன் மேல ஆணையா சொல்லுடா…….”, என்று அன்னபூரணி அவனை கிடுக்கி பிடிக்க…..
அந்த மாதிரி ஆணைக்கெல்லாம் அசருகிற ஆள் இல்லை அசோக்…… இருந்தாலும் நண்பன் இப்படியிருக்கின்ற சூழலில் அவன் மேல் பொய் ஆணை செய்ய எல்லாம் மனம் வரவில்லை.
அவன் அமைதியாகவே நிற்க……… இப்போது அவனிடம் கெஞ்சினார். “டேய் சொல்லுடா! உங்க நல்லதுக்கு தானே கேட்கிறோம்! இன்னும் எதையாவது இழுத்து வைக்கிறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு சொல்லுடா”, என்றார்.
அவரின் அதட்டலுக்கு அடிபணியாத அசோக் அவரின் கெஞ்சலுக்கு அடிபணிந்து நடந்ததை சொன்னான்.
கடந்த ஒரு வருடமாக செந்தில் ராஜி பின்னால் சுற்றியதையும் இத்தனை நாட்களாக அவனை ஏறெடுத்தும் பார்க்கதா ராஜி……. சமீபகாலமாக அவனை பார்ப்பது போல தனக்கு தோன்றுவதையும்……… ஆனால் இப்போதெல்லாம் செந்தில் ராஜியை பார்க்காதது போலவும் சொன்னான்.
“என்னடா சொல்ற……… சுத்துனான்ற சுத்தலைங்கற….. ஒண்ணுமே புரியலைடா”,
“அதைத்தான்மா நானும் சொன்னேன்……… எனக்கு ஒண்ணும் புரியலை….. அதைத்தான் எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்”, என்றான் பரிதாபமாக…..
மொத்தத்தில் பெற்றவர்களுக்கு புரிந்தது……. ராஜியின் பின்னால் செந்தில் சுற்றியிருக்கிறான்…. அவளை காதலிப்பது போலவும் பேசியிருக்கிறான்…….
அப்போது அவன் காதலிக்கிறான் போல என்ற முடிவுக்கு அவனின் பெற்றோர் வந்தனர். சீனியப்பன் தான் நேரிலேயே பார்த்தாரே……… எப்படி ஒரு நொடியும் தாமதிக்காது ராஜிக்கு அடிபடாமல் செந்தில் காப்பாற்றினான் என்று.
ஆனால் இந்த காதல் எல்லாம் சரிவராது……. இது நடக்காது………. அண்ணாமலை நடக்க விடமாட்டார். அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று சீனியப்பன் நினைத்துக்கொண்டார்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தான் அவ்வளவு எளிதாக சீனியப்பனுக்கு அமையவில்லை. மகனின் வலி தோய்ந்த முகத்தை பார்த்த பிறகு அவனிடம் அதை பற்றி பேச அவரால் முடியவில்லை. முதலில் கை சரியாகட்டும் பிறகு பர்த்துக்கொள்ளலாம் என்று விட்டார்.
அன்னபூரணியையும் பேசவிடவில்லை…..
அடுத்த நாள் செந்திலை ஐ சி யு வில் இருந்து ரூமிற்கு மாற்றினர்.
அதற்குள் அண்ணாமலை ராஜியை கொண்டுபோய் விட்டு கூட்டி வர ஒரு டிரைவருக்கு ஏற்பாடு செய்துவிட்டார். காலையில் அந்த டிரைவருடன் காலேஜ் கிளம்பினாள் ராஜி……… இன்றைக்கும் செந்திலை போய் பார்ப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தோடு……
நடந்தவைகளை எல்லாம்அண்ணாமலை வாயிலாய் தெரிந்து கொண்டான் ஆகாஷ், “என்னடா இது இப்படி ஆகிவிட்டதே…… நாம் அந்த பையனை கண்டிக்கச் சொன்னால் நடுவில் ஏதேதோ நடந்து விட்டதே………”,
பிறகு அனிதாவுடனான திருமணத்திற்கு கேட்கவும்……. “இன்னும் தேவிகா ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா ஆகாஷ்”, என்றார்.
“என்னடா இந்தாளு உயிரை எடுக்கிறான்….. செய்யறதையும் செஞ்சிட்டான்…. இப்போ அதை சரி பண்ணுன்னு சொன்னா இன்னும் சம்மதமே வாங்காம இருக்கிறான்…… இவனை எல்லாம் என்ன பண்றது…… எல்லாம் இந்த அனிக்காக பார்க்க வேண்டியிருக்கு”.
கோபம் வந்தாலும் பொறுமையை இழுத்து பிடித்து “சீக்கிரம் பேசி சம்மதத்தை வாங்குங்க”, என்றான்.
சற்று நேரம் பொறுத்தான்…….. ராஜியை பற்றி அண்ணாமலை ஏதாவது பேசுவாரா என்று எதிர்பார்த்து…… அவர் அதுபோல எல்லாம் பேசும் எண்ணம் இருப்பது மாதிரி தெரியவில்லை எனவும் வைத்துவிட்டான்.
“இவங்க கல்யாணமே ஊசலாடுது…… இதுல இவங்களை நம்பி நான் வேற ராஜியை போய் பார்த்துட்டு வந்தேன்……….. இவங்க நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பாங்களா இல்லையானு தெரியலையே……… “,
இங்கே அண்ணாமலை, “இந்த ராஜி வேறு இப்போது பார்த்து இடக்கு பண்ணுகிறாள் அவளை கவனிப்பதா இல்லை அனிதா விஷயத்தை பார்ப்பதா…….”, என்று நினைத்துக்கொண்டிருந்தார்.
திரும்ப தேவிகாவிடம் பேச முடிவெடுத்தார்.
“தேவி அன்னைக்கு நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலையே”,
அவர் எதை கேட்கிறார் என்று புரிந்த தேவிகா…….. “பதில் சொல்லாதப்பவே தெரியலையா, அதுல எனக்கு சம்மதம் இல்லைன்னு…..”,
“ப்ளீஸ் தேவி! புரிஞ்சுக்கோ! நான் அவளை கட்டாயம் கல்யாணம் செஞ்சிக்கணும். அவ எந்த சூழ்நிலையில இருக்கான்னு உன்கிட்ட நான் சொல்லிட்டேன்……. அவ இங்க வரமாட்டா………. உனக்கு எந்த வகையிலும் தொந்தரவு குடுக்க மாட்டா…. இந்த சொத்துக்கும் பங்குக்கு வரமாட்டா……….. இப்போதைக்கு அவளுக்கு தேவை சமூகத்துல ஒரு அங்கீகாரம்……… அதை நான் கட்டுற தாலி மட்டும் தான் கண்டிப்பா கொடுக்க முடியும்…….”, என்றார் கெஞ்சுதலாக.
“நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்”, என்றார் தீர்மானமாக தேவிகா.
இப்படி பேசுபவளிடம் எப்படி பேசி சம்மதம் வாங்குவது என்று புரியாமல் நின்றார்.
“இவ சம்மதிச்சா என்ன? சம்மதிக்காட்டி என்ன? நான் தான் அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு இந்த அனிதாக்கிட்ட சொல்றேனே…….. அப்புறம் ஏன் அவ இவ சம்மதம் வேணும்னு இந்த அடம் பிடிக்கிறா”,
எப்படி பிரச்சனையை சுமுகமாக முடிப்பது என்பது தெரியாதவராக குழம்பினார்.
அந்த நேரம் பார்த்து ஆகாஷும் அண்ணாமலைக்கு போன் செய்தான்……… “பேசிட்டீங்களா”, என்று……….
“பேசினேன்”, என்று தயங்கியவர்………….. “அவ சம்மதம் கொடுக்கற மாதிரி தெரியலை……..”,
“சம்மதம் கொடுக்கலைனா அப்படியே விட்டுடுவீங்களா”,
“நா எப்போ விட்டுடுவேன்னு சொன்னேன்………. அவ சம்மதமே தேவையில்லைன்னு தானே சொல்றேன்”.
“ஆனா அக்கா ஒத்துக்க மட்டேங்கறாளே”,
“அதுக்கும் ஆசை…. இதுக்கும் ஆசைன்னா எப்படி? ஏதோ ஒண்ணு தான் முடியும். நீ அனிதாகிட்ட பேசு…… நானும் பேசறேன்”, என்றார்.
விவரங்களை அனிதாவிடம் ஆகாஷ் சொல்ல…….. “நான் வேணா ஒரு தடவை அவங்க மனைவிகிட்ட பேசட்டுமா”, என்றாள்.
“வேண்டாம் அனி! விட்டுடு! உன்னோட பேசறதை அவங்க விரும்ப மாட்டாங்க…….”,
“நான் ஒரு முயற்சி பண்ணி பார்க்கிறேனே”,
“எப்படி பேசுவ போன்லையா”,
“இல்லை நம்ம நேர்ல போகலாம்”, என்றாள்.
கேட்ட ஆகாஷ்……… “இதெல்லாம் சரிவராது அனி, அங்க போனா உனக்கு அவமானம் தான் மிஞ்சும்”,
“பரவாயில்லை நான் தப்பு பண்ணியிருக்கேன் அனுபவிச்சு தானே ஆகணும்”,
இப்படி பேசுபவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் ஆகாஷும் தடுமாறினான்.
தேவிகாவும் சரி அனிதாவும் சரி இருவரும் அவரவர் முடிவில் தெளிவாக இருந்தனர்.
“சரி! நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்”, என்றான் ஆகாஷ் அண்ணாமலையை மனதில் கொண்டு……..
“வேண்டாம்! அவர்கிட்ட கேட்காத, அவர் வேண்டாம்னு தான் சொல்லுவார். அப்புறம் அவரை மீறி என்னால செய்ய முடியாது. எனக்கு ஒரு தடவை அவங்களை பார்த்து மன்னிப்பாவது கேட்கனும்”.
“வேண்டாம் அனி சொல்லுறதைக் கேளு”, என்றான்.
அனிதா அவளின் முடிவில் உறுதியாக இருந்தாள்.
“சரி, யோசிக்கலாம் விடு”, என்று அப்போதைக்கு முடிவை ஒத்திப்போட்டான்.
அன்று முழுவதும் ராஜிக்கு செந்திலை போய் பார்ப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே கழிந்தது.
அன்று அசோகிற்கு போன் செய்து மட்டும் கேட்டாள்……. அவள் போன் செய்த போது அசோக் செந்திலுடன் தான் இருந்தான்.
அவள் குரலை கேட்டதுமே செந்திலிடம் ராஜி என்றான் வாயசைப்பில்…… ரூமில் அப்போது சீனியப்பனும் அன்னபூரணியும் இல்லாததால் ஸ்பீக்கரில் போட்டான்.
“நான் ராஜி பேசறேன்….. நீங்க செந்தில் ஃபிரன்ட் தானே பேசறது”,
“ஆமாம் சொல்லுமா”,
“நேத்து உங்க பேர் கேட்க மறந்துட்டேன் அண்ணா”, என்றாள்.
“என்ன அண்ணாவா? இருக்குற மூணு தங்கச்சி போதாதுன்னு எக்ஸ்ட்ரா ஒண்ணா! டேய் அசோக்கு உனக்கு இதெல்லாம் தேவையாடா”, என்றான் மனதிற்குள்.
“என் பேர் அசோக்மா”,
“எப்படியிருக்காங்க அவங்க”,
“ம்! பரவாயில்லை இப்போ”,
“ரூம்க்கு மாத்திட்டங்களா”,
“மாத்திட்டாங்க”,
“நான் அவர்கிட்ட பேசமுடியுமா”, என்றாள் தயங்கி தயங்கி……….. அவள் குரலே ஏதோ செய்தது செந்திலுக்கு………
“வேண்டாம்”, என்று சைகையாலேயே சொன்னவன்…….. அவன் தூங்குவது போலசொல்லச் சொல்ல………
“அவன் தூங்குறான்மா”, என்றான் அசோக்.
“ஒஹ்”, என்ற ராஜியின் குரலிலேயே ஏமாற்றம் தெரிந்தது.
“சரி! நான் வெச்சிடறேன் அண்ணா”, என்று வைத்துவிட்டாள்……
இதற்காகவே அவளின் அம்மாவின் போனை வேலையிருக்கிறது என்று வாங்கி வந்து காலேஜில் யாருக்கும் தெரியாமல் ஒரு மரத்தின் மறைவில் நின்று போன் செய்தாள்…… காலேஜில் போன் உபயோகிக்க கூடாது……… தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் அதனால் பயந்து பயந்து அழைத்தாள்.
அன்று முழுவதுமே மூன்று முறை அழைத்தாள்…. அசோக் தான் ஒவ்வொரு முறையும் பேசினான். செந்திலின் போனுக்கு அழைத்தால் அது எடுக்கப்படவே இல்லை.
ராஜி அவ்வளவு கூட புரியாதவளா என்ன? செந்தில் தன்னிடம் பேசுவதை தவிர்க்கிறான் என்று புரிந்தது.
அங்கே அசோக்கும் செந்திலிடம் சண்டை பிடித்தான்…….. “ஏண்டா டேய்! அந்த பொண்ணு இவ்வளவு தரம் கூப்பிடுதே! ஒரு தடவை பேசிட்டா தான் என்ன?”,
“ஏண்டா? அண்ணான்னு சொன்னவுடனே பாசம் பொங்குதோ”,
“ஆமாம்! எனக்கு தங்கச்சிங்களே இல்லை பாரு! இந்த பொண்ணு கூப்பிட்ட உடனே உருகறதுக்கு….. நீ ஏன் பேசலைன்னு அதுக்கு பதில் சொல்லுடா! சும்மா பேச்சை மாத்தாத……..”, என்றான் நண்பனை பற்றி தெரிந்தவனாக……
“அவ என்னமோ இத்தனை நாளா இல்லாம ஒரு ஆர்வத்தோட என்னை பார்க்கற மாதிரி தோணுது……. அதான், அது தொடர வேண்டாமேன்னு தான் நான் அவளை தவிர்க்கிறேன்”,
“எப்போலருந்து இது! நீதானேடா அப்படி அவ உன்னை பார்க்க மாட்டளான்னு சுத்தின! இப்போ என்னடா இப்படி பேசற!”, என்றான் அதிர்ச்சியாக……..
“அது அப்போ! இது இப்போ!”, என்றான் செந்தில்.
“என்னடா அது அப்போ! இது இப்போ! விட்டன்னா ஒரு அப்பு! அப்ப தெரியும்! அவ பின்னாடியே போய் அவ மனசை கலைச்சிட்டு இப்போ என்னடா அப்படியே பேக் அடிக்கற, அவங்கப்பாவை நினைச்சு பயந்தா?”,
“பயமா? எனக்கா? உனக்கு என்னை பார்த்தா பயப்படற மாதிரியா தெரியுது……”,
“அப்புறம் என்னடா”,
“இது சரிவராதுன்னு தோணுது……… எனக்கு அவளுக்கும் எப்பவும் சண்டை தான். எனக்கு அவளை பிடிக்கலை…….. தெரியாம ஐ லவ் யு சொல்லிட்டேன்னு அவ கிட்டயே சொல்லிட்டேன்”.
“என்ன? இதெல்லாம் எப்போ நடந்தது”,
“அப்பப்போ எங்களுக்குள்ள சண்டை வரும்போது நடந்தது”.
“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்ற? இப்போ அந்த பொண்ணு உன் பின்னாடி வருதே அதுக்கென்ன சொல்லப் போற”,
“அது நான் அவளை காப்பாத்தினேன்னு ஒரு பட்சாதபத்துல வருது…… நாளைடைவுல மறந்துடும்! அவளுக்கு என் மேல காதல் எல்லாம் இல்லை”,
“அப்படிங்கற…….. ஆனா எனக்கென்னவோ அப்படி தோணலை”,
“அப்படித்தாண்டா”,
“என்ன அப்படித்தாண்டா? உனக்கு அப்போ அவ மேல இப்போ லவ்வே இல்லைங்கற……..”,
“இல்லை”,
“அதெப்படி லவ்வு வரும் போகும்”,
“அது முன்னமே எனக்கு இல்லை போல……. நான் தான் சரியா தெரிஞ்சுக்காம இருந்துட்டேன்”,
“அப்போ உனக்கு அவ மேல எதுவும் இல்லைனா……. அவளுக்காக நீயேண்டா கையை இப்படி பண்ணி வெச்சிருக்குற……. அதுவும் யோசிக்காம ஒரு செகண்ட்ல பாஞ்சிருக்குற இதெல்லாம் லவ் இல்லாம தான் வருமா”,
“அது யாரா இருந்தாலும் காப்பாத்தனும்னு தான் நினைச்சிருப்பேன்”,
“ஒத்துக்கறேன்…….. நீ காப்பத்தனும்னு நினைச்சு இருப்ப……… ஆனா இவ்வளவு சீக்கிரம் உன்னால ஒரு பாசம் இல்லைனா செயல்பட்டு இருக்க முடியாது……… நீ போறதுக்குள்ள அவங்களுக்கு அடிபட்டிருக்கும்”,
அவன் சொல்வதை மெளனமாக கேட்டிருந்தான் செந்தில்…….
“இதுவே கல்யாணம் ஆனா பிறகு உனக்கும் அவளுக்கும் ஒத்துவராதுன்னு தோணினா அவளை விட்டுடுவியா?”,
“அதெப்படி விட முடியும்…….. அவ என் பொண்டாட்டி”,
“இப்போ ஐ லவ் யு சொல்லிட்டு மட்டும் எப்படி விடமுடியும்”,
“அவளுக்கு தான் என்னை பிடிக்கலையேடா”,
“அது அப்போ! இது இப்போ!”, என்றான் அவனை மாதிரியே…
“டேய்! அவகூட என்னை இப்படி குடைய மாட்டாடா உட்றா…..”,
“அதெப்படி விட முடியும்………. நீ ஐ லவ் யு சொன்னது சொன்னதுதான்”, என்றான்……..
இதே வார்த்தைகளை தான் ராஜியும் செந்திலிடம் சொல்ல போகிறாள் என்பதை அறியாதவனாக.