அத்தியாயம் ஏழு:
அடுத்த நாள் ஆகாஷுடன் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை ஊருக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு பயணப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி.
அவர்களின் ஊரிலிருந்து காரில் ஒரு முக்கால் மணிநேரப் பயணம் அவ்வளவே.
இது எதற்கு தேவையில்லாதது என்பது போல தேவிகாவிற்கு தோன்றினாலும் அவருக்கு தெரியாததா என்று நினைத்து கணவரை மறுத்து பேசாமல் அமைதியாகத்தான் இருந்தார்.
அன்று காலையில் செந்தில் அசோக்குடன் டீக்கடையில் தான் அமர்ந்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். பஸ்ஸிற்கு நேரமாகி விட்டது ஏன் இன்னும் ராஜியை காணவில்லை. ஒரு வேளை நேற்று நடந்த நிகழ்வால் பயந்துவிட்டாளா என்று ராஜியை பற்றி நினைக்க கூடாது என்று நினைத்ததற்கு மாறாக மனம் அவளையே நினைத்தது.
அதற்கு தகுந்தார் போல, “என்னடா மாப்ள! இன்னைக்கு உன் ஆளைக் காணோம். பஸ் வர்ற நேரம் ஆகிடுச்சு”, என்று அசோக் வேறு அவனிடம் கேட்டான்.
“தெரியலைடா”, என்றான் செந்தில்.
அதற்கு தகுந்தார் போல அவள் எப்பொழுதும் போகும் பஸ்சும் போய்விட்டது. இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செந்திலும் அசோக்கும் அந்த டீக்கடையை விட்டு எழுந்து நடந்தனர்.
அவர்கள் சிறிது தூரம் தான் நடந்திருப்பர், அப்போது ஆகாஷின் கார் அவர்களை கடந்து சென்றது. அதில் ஆகாஷும் ராஜியும் அமர்ந்து செல்வதை செந்தில் பார்த்தான் அசோக்கும் பார்த்தான்.
நேற்று நடந்த நிகழ்வால் அவளின் தந்தை அவளை காலேஜுக்கு காரில் அனுப்புகிறாரோ என்று தான் செந்திலுக்கு தோன்றியது. வேறு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை.
ஆனால் அசோக், “யாருடா அது”, என்றான்.
“அது யாருக்குடா தெரியும்! நேத்து அவங்கப்பா வந்த போது அவங்க கூட வந்தான்”.
“ஏண்டா அங்கயே இருக்க…….. யாருன்னு கண்டுபிடிக்க முடியலையா”,
“தெரியலைடா, எங்கப்பாவை கேட்டேன். அவருக்கே யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டாரு”.
“பார்த்துடா ஆள் பார்க்க ஜோரா இருக்கான். உன் லைன்ல க்ராஸ் பண்ணிட போறான்”.
“அவன் க்ராஸ் பண்ணா என்ன? க்ராஸ் பண்ணாட்டி என்ன? நான் தான் அவ வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேனே”, என்று மனதிற்குள்ளேயே செந்தில் நினைத்தான். ஆனால் அசோக்கிடம் சொல்லவில்லை.
“இது உன் ஆள் வீட்டு காரா என்ன?”,
“இல்லைடா, வந்தவன் இந்த காரில் வந்திருக்கான்”,
“நிறைய விலையுள்ள சொகுசு கார் மாதிரி தெரியுது……… ரொம்ப வசதியானவனோ”,
“யாருக்குடா தெரியும்! ஏதோ நமக்கு தெரிஞ்சது இண்டிகா, ஸ்விப்ட், இன்னோவா சுமோன்னு இப்படி சில கார் தான். இந்த கார் பேர் கூட எனக்கு தெரியலை”, என்றான் செந்தில்.
அவனுக்கு கார் என்றாள் கொள்ளை இஷ்டம். அதனால் தான் கார் இல்லாத போதும்…… கார் ஓட்ட வாய்ப்பில்லாத போதும் கார் கற்றுக்கொண்டான். அங்கங்கே யாரவது டெம்போ, கார் என்று ஒட்டி வந்தால் தெரிந்தவர்களாக இருந்தால் சிறிது தூரம் ஒட்டாமல் விடமாட்டான். வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் மேல் அவ்வளவு பிரியம்.
“அந்த கார் பேரென்னன்னு பார்த்தியா”, என்றான் அசோக்.
“இல்லை! நேத்து எனக்கிருந்த மூட்ல சரியா கவனிக்கலை…… இன்னைக்கு தான் பார்க்கணும்”.
அது ரேஞ்ச் ரோவர்………… அதன் ரேஞ்சே வேறு என்று அவர்களுக்கு தெரியவில்லை. அந்த காரின் விலையே கிட்டதட்ட இரண்டரை கோடியை எட்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
நண்பனின் பேச்சை கேட்ட அசோக்………. “ஏண்டா மூடு சரியில்லை”, என்றான்.
“அதுவா”, என்றாரம்பித்த செந்தில்……… நேற்று பஸ்சில் நடந்ததை எல்லாம் சொன்னான்.
“அதென்ன ஆவூன்னா உனக்கு கையை நீட்டுற பழக்கம்…….. அவனுங்க டம்மி பீஸா இருக்கவும் ஒண்ணும் பிரச்சனையில்லாம இல்லாம போச்சு. அவனுங்களும் திரும்ப கையை வெச்சிருந்தா……….. யோசிக்காம கையை வெச்சிடுற………”,
“அப்புறம் யார் என்ன பண்ணினாலும் பார்த்துட்டு இருக்க சொல்றியா”,
“அப்படி கிடையாதுடா……….. முடிஞ்ச வரைக்கும் பிரச்சினை பண்ணாம ஒதுங்கி போறதுதான் நமக்கு நல்லது. நடந்ததை விடு. இனிமே இப்படி அவசரப்பட்டு யார் மேலயும் கையை வெக்காத”, என்றான் நண்பனின் மேல் கொண்ட அக்கறையால்.
செந்தில் நண்பனை மறுத்து எதுவும் பேசவில்லை.
காரில் போய்கொண்டிருந்த ராஜிக்கும் ஆகாஷுக்கும் நடுவில் பேச்சில்லா மெளனம் நிலவியது. ராஜிக்கு புதியவன் என்ற கூச்சம் இருந்தது……….. அதனால் அவள் தன் வாய்ப்பூட்டை அவிழ்க்கவில்லை. ஏதோ யோசனையிலேயே ஆகாஷ் இருப்பது மாதிரி தோன்றியது ராஜிக்கு.
காரை எடுத்து சிறிது தூரம் சென்ற பின் தான் அவள் சீட் பெல்ட் போடவில்லை என்று பார்த்தான்.
“சீட் பெல்ட் போட்டுக்கோ ராஜேஸ்வரி”, என்றான்.
அவளின் வீட்டிலும் சுமோ இருக்கிறது தான்……… இருந்தாலும் சீட் பெல்ட் எல்லாம் போட்டு பழக்கமில்லை. அவளும் முயற்சி செய்து பார்த்தாள் முடியவில்லை. அவள் தடுமாறுவதை பார்த்தவன் காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவனே போட்டுவிட்டான். அவன் போட்டுவிட்டது ராஜிக்கு ஒரு மாதிரி கூச்சமாக இருக்க………ஆகாஷிற்கு அதெல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்தது.
அவளுக்கு தன் தந்தையின் செய்கையில் சற்று ஆச்சர்யம் கூட………. எப்படி தன்னை ஒரு அந்நிய ஆடவனோடு அனுப்பியிருக்கிறார். அவ்வளவு நெருக்கமானவனா இவன். தன் தந்தைக்கு யாராக இருப்பான் இவன் என்றே யோசனையாக இருந்தது.
காரில் ஏதோ இசை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது……… பாடல் எதுவும் இல்லை. ராஜியை அந்த இசை சற்றும் ஈர்க்கவில்லை. “ஏதாவது பாட்டு போடக்கூடாது இவன்….. இது என்ன டைங் டைங்ன்னு ஏதோ சத்தம்”, என்று அவளுக்கு தோன்றியது.
அது மேன்டலின் ஸ்ரீனிவாசின் ஒரு கான்செர்டின் ஆல்பம். அந்த மாதிரி இசையோடு எல்லாம் வளர்ந்தவள் அல்ல ராஜி………… அதனால் அவளுக்கு தெரியவில்லை.
குண்டும் குழியுமான ரோட்டில் கூட கார் அலுங்காமல் குலுங்காமல் சென்றது. அவர்கள் வீட்டிலும் நான்கு சக்கர வாகனம் இருக்கிறது தான்…….. ஆனால் அதில் பயணம் இவ்வளவு சொகுசாக இருக்காது. காரை சுற்றி பார்வையை ஓட விட்டு அமர்ந்திருந்தாள்.
வெண்ணந்தூரிலிருந்து ஆட்டையாம்பட்டி வழியாக அரியானூர் வந்து தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஏழை தொட்டது தான் போதும்……… அதுவரை மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் வேகமெடுக்க ஆரம்பித்தது.
ராஜிக்கு இது எதுவும் தெரியவில்லை. காரை சுற்றி பார்வையை ஒட்டிக்கொண்டு இருந்தவள் ஸ்பீடோ மீட்டரை பார்க்க அது நூற்றி முப்பது என்று காட்டியது.
“ஐயோ! இவ்வளவு வேகமா”, என்று பதறியவள்………. அவன் பேசினால் பேசலாம் என்று நினைத்துக்கொண்டிருந்ததை விட்டு அவனோடு பேசினாள், “எதுக்கு இவ்வளவு வேகம் மெதுவா போங்க”, என்றாள்.
“ஏன்? உனக்கு வேகம்னா பயமா”, என்றான்.
“பயம்னு கிடையாது………. எப்பவுமே மிதமான வேகத்துல போறதுதானே சேஃப்”.
“நான் எப்பவுமே வேகம் தான். இதுக்கு கம்மியா போறது எனக்கு கஷ்டம்”, என்றான்.
“அட்லீஸ்ட் ஒரு நூறுலயாவது போங்க……… இது ரொம்ப வேகம்”, என்றாள்.
“ஓகே! அஸ் யூ விஷ்”, என்று வேகத்தை தணித்தான்.
தன்னுடைய குணத்திற்கு எதிர் பதமோ அவளின் குணம் என்று அவளை அலசி ஆராய்ந்தது மனம்.
அவளின் உடையை மெதுவாக ஆராய்ந்தான். ஒரு ஸ்கை ப்ளூ கலர் சேலையில் இருந்தாள். அது அவளுக்கு நன்கு பொருந்தி இருந்தது. சற்று தோற்ற பொலிவையும் கொடுத்தது.
இருந்தாலும் அப்படி ஒன்றும் ஆகாஷை ராஜியின் தோற்றம் ஈர்த்துவிடவில்லை. “என்ன இருந்தால் ஒரு பத்தொன்பது, இருபது வயதிருக்குமா இந்த பெண்ணிற்கு. இவள் ஏன் இப்படி புடவையிலேயே இருக்கிறாள்………. நேற்றும் புடவையில் இருந்தாள்………. இன்றும் புடவையிலேயே இருக்கிறாள்” என்று ஆகாஷிற்கு ஆராய்ச்சியாக இருக்க அதை அவளிடம் கேட்க வேறு செய்தான்………
“நீ புடவையையே ஏன் கட்டுற”,
இவன் எதற்கு இதையெல்லாம் கேட்கிறான் என்பது போல ராஜிக்கு இருந்தாலும் அவனுக்கு பதில் சொல்ல தயங்கவில்லை.
“எங்க காலேஜ்ல ஹாஃப் சாரி இல்லைனா சாரி தான் கட்டணும். அது கம்பல்சரி. இந்த ஒரு வருஷமா அதை கட்டி கட்டி அதுவே பழக்கம் ஆகிடுச்சு”, என்றாள்.
“உடையெல்லாம் ஒரு பெரிய விஷயமா……… ஒரு வேளை நான் அவளை திருமணம் செய்தால் அதை மாற்றி விடலாம்”, என்று அவனுக்கு அவனே சமாதானப்படுத்தி கொண்டான்.
“நீ என்ன படிக்கற”, என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
“பி எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ்”, என்றாள்.
“ஏன்? எதுவும் professional course படிக்கலை”,
“அப்பா தான் இதுக்கு சேர்த்துவிட்டாங்க”,
“ஒஹ்! உங்கப்பா சொல்றதை தான் கேட்பியா! நீயா எந்த முடிவும் எடுக்க மாட்டியா!”,
“அப்பா சொன்னா எதுவும் கேட்பேன்………. நானா முடிவெடுக்கற மாதிரி எந்த சூழ்நிலையும் அமையலை………. நீங்க என்ன படிச்சு இருக்கீங்க”,
“நானா! பி இ, எம் எஸ்”, என்றான்.
“பெரிய படிப்புதான்”, என்று நினைத்தாள்.
“என்ன பண்றீங்க”,
“நான் ஆஸ்திரேலியாவுல இப்போ இருக்கேன். இங்க சென்னைல தான் வேலை. இப்போ என்னை அங்கே அனுப்பி இருக்காங்க”, என்றான்.
“எதுல இருக்கீங்க”,
அவன் தன் கன்சர்னின் பெயரை சொன்னதும் அவளின் கண்களில் ஆர்வம் மின்னியது. “அங்கேயா வேலை பார்க்கறீங்க”, என்றாள். “எப்படி? எப்படி? செலக்ட் ஆனீங்க…….. அங்க செலக்ட் ஆகறதுக்கு நான் மேல என்ன படிக்கணும்”, என்றாள் ஆர்வமாக.
அவளின் ஆர்வத்தை பார்த்தவன்………. “உனக்கு வேலைக்கு போக அவ்வளவு இஷ்டமா…….. அதுக்கு நீ பி இ மாதிரி படிச்சிருக்கணும்”,
“ஆமாம்! ஆனா அப்பா அதுக்கெல்லாம் நீ ஒண்ணும் படிக்க வேண்டாம்……. இதை படின்னு சொல்லிட்டார்”.
“உங்கப்பாவை கன்வின்ஸ் பண்ணியிருக்கணும் நீ”, என்றான்.
“கேட்டேன், அப்பா ஒத்துக்கலை! அவருக்கு நான் வேலைக்கு எல்லாம் போறதுல இஷ்டம் இல்லை. சரி பி எஸ் சி முடிச்சிட்டு எம் சி ஏ பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்”, என்றாள்.
படிப்பை பற்றி பேசும்போது அவளின் குரலில் அவ்வளவு ஆர்வம். இவளுக்கு படிப்பின் மேல் மிகுந்த ஈடுபாடு போல என்று நினைத்துக்கொண்டான் ஆகாஷ்.
ஆகாஷின் படிப்பை, வேலையை கேட்ட பிறகு இத்தனை நேரமாக அவன் மேல் வராத ஆர்வம் கொஞ்சம் ராஜிக்கு வந்தது.
அதே ஈடுபாட்டோடு, அவன் தன் தந்தைக்கு யார் என்று தெரிந்துகொள்ளும் நோக்கத்தில்……… “ உங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் எப்படி பழக்கம்”, என்றாள்.
அவளிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை ஆகாஷ்………. சட்டென்று என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை……….. “தொழில் முறையில் பழக்கம்”, என்றான்.
“நீங்க சாப்ட்வேர்ல வேலைக்கு போறீங்க……… எங்கப்பா தொழிலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்”,
“நல்ல ஷார்ப்பா இருக்காளே”, என்று நினைத்தவன்……. “எங்க குடும்ப தொழில் இருக்கு, துணிகளோட ஹோல் சேல் டீலர்ஸ், எங்க வீட்ல இருக்குறவங்க அதை பார்த்துக்கறாங்க, அது மூலமா பழக்கம்”, என்று விளக்கம் கொடுத்தவன்……..
“நான் இவளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து அழைத்து வந்தால் இவள் என்னை பற்றி தெரிந்து கொள்வது தான் அதிகமாக இருக்கிறதே”, என்று நினைத்தான்.
பேச்சு பேச்சாக இருந்த போதும் அவனுக்கு வழி சொல்ல ராஜி மறக்கவில்லை.
“இங்க திடீர்ன்னு என்ன விசிட்”, என்றாள்.
இதற்கும் என்ன பதில் சொல்வது என்று ஆகாஷிற்கு தெரியவில்லை இந்த பெண் ஏன் இப்படி நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறாள் எப்படி இவளிடம் இருந்து தப்பிப்பது என்று தீவிரமாக அவன் யோசிக்க……
அதற்குள் அவன் தொலைபேசி அவனை தொல்லை செய்ய…. “ஹப்படா”, என்று மூச்சு விட்டபடி அதனை எடுத்தான்……
அழைத்தது அனிதா……
எடுத்தவன், “ம், சொல்லு”, என்றான்.
“எங்க இருக்கீங்க”,
“ட்ரைவிங்க்ல இருக்கேன் கோவிலுக்கு போயிட்டு இருக்கோம்”,
“நீயும் ராஜேஸ்வரியுமா”,
“ம்”, என்றான்.
“அப்போ நான் அப்புறம் கூப்பிடவா”,
“வேண்டாம் நானே கூப்பிடறேன்”,
“இப்படி தான் நேத்து கூட சொன்ன…….. நான் நீ கூப்பிடுவன்னு பார்த்தா கூப்பிடவேயில்லை”,
பக்கத்தில் ராஜேஸ்வரி இருந்ததால் அனிதாவிடம் அதிகம் பேசாமல் அடக்கி வாசித்தான்.
“இல்லை! நானே மறக்கமா கூப்பிடறேன்! என்னை நம்பு! இப்போ வை!”, என்றான்.
வேறுவழியில்லாமல் போனை வைத்தால் அனிதா…..
அதற்குள் கோவில் வந்திருக்க…….. காரை பார்க் செய்து இறங்கினர்.
ஆகாஷ் காரை பார்க் செய்ய அருகில் இருந்த கடைக்கு சென்றாள் ராஜி.
“அண்ணா! மாலை பூசை தட்டும், எல்லாம் குடுங்க, கூட ஒரு அஞ்சு எழுமிச்சம் பழம் குடுங்க”, என்றாள்.
“எங்கம்மா அப்பாவை காணோம்! தனியாவா வந்த!”, என்றார் அந்த கடைக்காரர்.
“இல்லைண்ணா…….. எங்க சொந்தக்காரரோடு வந்திருக்கேன்”, என்றாள் ராஜி, ஆகாஷை எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் சொந்தம் என்று சொன்னாள்.
ஆகாஷ் அவள் பக்கத்தில் தான் நின்றிருந்தான்…….. “இவள் ஏன் இந்த கடைக்காரருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்”, என்பது போல அவனின் பார்வை இருக்க……
“இங்க நாங்க மாசம் மாசம் அமாவாசைக்கு வருவோம்…….. அப்பாக்கு இந்த கோவில் மேல நிறைய நம்பிக்கை……….. இந்த கடையில் தான் வாங்குவோம். அதனால எங்களை நல்லா தெரியும்”, என்று அவனின் மனதை படித்தவளாக பதில் கொடுத்தாள்.
“ஒஹ்! நம்ம கேட்காமையே இவ நம்ம நினைக்கிறதை சொல்றாளே”, என்று ஆகாஷிற்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது.
“அண்ணா கொஞ்சம் நேரம் கழிச்சு கொண்டு வாங்க”, என்று சொன்னபடி சென்றாள்.
“பணம்”, என்று ஆகாஷ் கேட்க வரும்போது……. “கொடுத்துக்கலாம்”, என்றபடி நடக்க ஆரம்பித்தாள்.
“சரி! அதை ஏன் வாங்காம வர்ற”,
“அங்க பாருங்க”, என்று அவள் காட்ட……… அங்கே பார்த்தால் நிறைய குரங்குகள்.
“நான் கையில எடுத்து போனேன்……. நான் கோயிலுக்கு உள்ள போறதுக்குள்ளயே என் பின்னாடி வந்து அது பிடிங்கிடும்………. அந்த அண்ணா பத்திரமா உள்ள கொண்டுவந்துடுவாங்க……… திரும்ப வரும்போது கவர்ல போட்டுக்கலாம்…….. நீங்க வாங்க”, என்று அவனை அழைத்து சென்றாள்.
முதலில் அங்கே இருந்த நீரோடும் இடத்திற்கு அழைத்து சென்றாள்……. அங்கே தண்ணீர் ஓடை போல ஓடிக்கொண்டு இருந்தது. அங்கே இருந்தவர்களிடம் வாடகைக்கு வாளியை வாங்கினாள். அங்கே கிணறு கிணறாக தடுத்து விட்டிருக்க நிறைய ஆண்கள் குளித்து கொண்டிருந்தனர்.
“அங்கே போய் தண்ணி சேந்தி தலையில தெளிச்சுகங்க……… அப்படியே எனக்கும் கொஞ்சம் கொண்டு வாங்க”, என்றாள்.
இதெல்லாம் புதிதாக இருந்தது ஆகாஷிற்கு…….. அதைவிட அவள் தன்னிடம் வேலை சொல்வது இன்னும் புதிதாக இருந்தது.
“போவதா? வேண்டாமா?”, என்று அவன் யோசிக்க……….
“அங்க நிறைய ஆம்பளைங்க குளிச்சிட்டு இருகாங்க……… என்னால போக முடியாது, நீங்க போங்க”, என்றாள்.
இந்த பெண் எப்படி எல்லாவற்றையும் சரியாக படிக்கிறாள் என்று மிகவும் ஆச்சர்யமாகி போனது ஆகாஷிற்கு…….
கீழே இறங்கி அவள் சொன்னது போல செய்து தண்ணியை கொண்டுவந்தான்…… “தலையில் தெளிச்சுக்குங்க”, என்றவள்………. அவளும் தலையில் தெளித்துக்கொண்டாள்.
இதை எதற்கு செய்ய வேண்டும் என்று அவன் யோசித்துக்கொண்டே அவள் சொன்னதை செய்ய……
“இந்த தண்ணில நிறைய மூளிகைங்க கலந்து வருது…… இதுல குளிச்சா ரொம்ப நல்லது……… ஸ்கின் அலர்ஜி இருக்குறவங்க எல்லாம் இங்க நிறைய வருவாங்க. நம்ம குளிக்கலை இல்லையா அதனால தண்ணி தெளிச்சுக்கிட்டோம், ஜஸ்ட் ஒரு சாங்கியம்”, என்று அவனுக்கு விளக்கம் கொடுத்தாள்.
பின்பு அங்கே இருந்த கோவிலுக்குள் போகப்போகும் போது கடைக்காரரை பார்த்து அவள் கையாட்ட………… அவளின் சைய்கையை பார்த்து அந்த கடைக்காரர் அவளிடம் மாலை அர்ச்சனை தட்டு என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்தார்.
அவர்கள் சென்ற நேரம் பூசாரி இல்லாமல் இருக்க ஸ்தலத்தின் பெருமைகளை கூறினாள்.
சித்தர் கோவில் அமைஞ்சிருக்குற இந்த இடத்தை சுத்தி மலை இருக்கில்ல….. இந்த மலைக்கு பேரு கஞ்ச மலை…….. மலை மேல சிவன் இருக்கார். இங்க இருக்கிறது சித்தேஸ்வரர் என்று மூலஸ்தானத்தை காட்டினாள்.
“இங்க பதினெட்டு சித்தர்கள்ல ஒரு சித்தர் இங்க இருந்து மலை மேல இருக்குற சிவனை வழிபட்டதா ஐதீகம். இங்க இருக்கிற தண்ணில நிறைய மூலிகைங்க கலந்து இருக்கு. இதுல குளிச்சா அவ்வளவு நல்லது”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பூசாரி வந்துவிட்டார்.
இவளை பார்த்தவுடன், “என்னமா அப்பா வரலை”, என்றார் அவரும்.
“இல்லை சாமி! அவருக்கு கொஞ்சம் வேலை”, என்றாள்.
பூசை முடிந்து வெளியே வந்ததும் அங்கே கிணறு போல இருந்த கோவில் குளத்தில் உப்பு மிளகை வாங்கி மூன்று முறை போட்டு அவனையும் போடச்சொன்னாள். பின்பு அங்கிருந்த துர்க்கை சந்நிதிக்கு அழைத்து சென்றாள். அங்கே உள்ளே போவதற்கு முன் இருந்த மற்றொரு கிணற்றை எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இவன் பொறுமையாக அவள் செய்வதனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்தான்.
“இல்லை! இங்க ஆமை இருக்கும். இருக்குதான்னு பார்த்தேன்”, என்றாள் அவனிடம் சிறுபிள்ளை போல.
அங்கே துர்கையை வழிபட்டவுடன் வெளியே வந்தார்கள்.
“கிளம்பலாமா”, என்று அவன் கேட்க………
அங்கே பக்கத்தில் இருந்த சிறிய மலையை காட்டி……. “மேல முருகன் இருக்கார், போகலாமா”, என்றாள்.
“ம், சரி!”, என்று அவன் தலையாட்ட.
“படில ஏறியும் போகலாம்…….. இல்லை கார் போறதுக்கு பின்னாடி வழி இருக்கு”, என்றாள்.
“காரிலேயே போகலாம்”, என்று அந்த சிறிய மலையின் மேல் காரை ஏற்றி முருகனை வழிபட்டு நின்றார்கள்.
மேலே இருந்து பார்க்கும்போது அதன் சுற்றி உள்ள பகுதிகள் நன்கு தெறிய…. “அதுதான் தான் சேலம் ஸ்டீல் பிளான்ட்”, என்று தூரத்தில் தெரிந்ததை அவனுக்கு காட்டினாள்.
அவள் சுவாரசியமாக அதனை பார்க்க……….. ஆகாஷ் அவளை பார்த்தான். அப்படி தோற்றத்தில் ராஜி அவனை ஈர்க்காவிட்டாலும் நடத்தையில் அவனை ஈர்த்தாள்.
அவளோடு இருக்கும் இந்த பொழுது நல்ல விதமாகவே கழிந்தது அவனுக்கு.
ஆகாஷிற்கு நன்கு தெரியும் அவன் ஒரு ஹான்ட்சம் பெர்சன் என்று…… யாரும் அவனுடைய தோற்றத்தால் சற்று ஈர்க்கப்படுவர்.
ஆனால் அப்படி ஒன்றும் ராஜியின் கண்களில் ஆகாஷ் பெரிதாக ஆர்வத்தை பார்க்கவில்லை. அவனுடன் பேசும்போதும் ஒரு வெட்கம், வழிசல் அதுபோல எல்லாம் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் சற்று கூச்சம் இருந்த போதும் பேச ஆரம்பித்தவுடன் சாதாரணமாக பேசினாள். தயங்காமல் அவனின் கண் பார்த்து பேசினாள். ஒரு ஆளுமை அவளின் பேச்சில் இருந்ததை உணர்ந்தான்.
ராஜியின் இந்த செய்கைகள் எல்லாம் ஆகாஷை கவர்ந்தன என்றே சொல்ல வேண்டும். நிறைய சுயக்கட்டுப்பாடு உடையவள் என்று நினைத்தான்.
கீழே வந்து மறக்காமல் அந்த கடைக்காரருக்கு பணம் கொடுத்தாள்……. ஆகாஷ் பணம் எடுத்த போது கூட, “என்கிட்ட இருக்கு”, என்று அவனுக்கு முன் கொடுத்துவிட்டாள்.
நிறைய சுயமரியாதை பார்ப்பாள் போல என்று ஆகாஷிற்கு தோன்றியது.
பின்பு கிளம்பி வீடு வந்து சேர்ந்து அவர்கள் வீட்டு வாசலில் இறங்கிய போது… செந்தில் அங்கு வெளியே நின்றிருந்த டெம்போவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு இருந்தான்.
இவர்கள் இருவரையும் சற்று ஆராய்ச்சியுடன் தழுவின அவன் விழிகள். அவனை பார்த்தும் பார்க்காதது போல ராஜி உள்ளே சென்று விட அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நின்று பார்த்துவிட்டு போனான் ஆகாஷ்.
“இங்கே என்ன சினிமாவா காட்டுறாங்க…….. அவன் வாயை தொறந்து பார்த்துட்டு போறான்”, என்று ஆகாஷை பற்றி நினைத்தான் செந்தில்.
அவர்கள் சித்தர் கோவிலுக்கு தான் போயிருந்தர் என்று செந்திலுக்கு தெரியும். அன்று காலையில் அவன் வந்தவுடனே நேற்று பஸ்ஸில் ராஜியின் துணை நின்றதற்காக அண்ணாமலையும் தேவிக்காவும் அவனுக்கு நன்றி உரைத்து இருந்தனர்.
“அதனால தான் அவங்க கார்ல காலேஜ் போறாங்களா”, என்ற அவனின் கேள்விக்கு “இல்லை, சித்தர் கோவிலுக்கு போயிருக்காங்க”, என்று அண்ணாமலை சொல்லியிருந்தார்.
“இவர் போகாம எதுக்கு அவனோட பொண்ணை தனியா அனுப்பியிருக்கார்… யார் அவன் இவங்களுக்கு?”, என்ற கேள்வி அவன் எண்ணத்தில் ஓடியது.
ஆகாஷ் உள்ளே சென்றவுடன் அவனின் காரை பார்த்தான் செந்தில். அதில் இருந்த காரின் பேரை படித்தான். அவனுக்கு தெரியாத பேராக இருக்கவும், அவனின் போனில் இருந்த நெட்டில்…….. அதன் விலை என்னவென்று பார்க்க……… கிட்டதட்ட இரண்டரை கோடி என்று இருக்கவும்…….. மூச்சு விடவும் மறந்தான்.
மெதுவாக சென்று அந்த காரை கைகளால் வருடி கொடுத்தான். “ம்! பெரியாள் தான். இரண்டரை கோடி ரூபா காருல அசால்டா சுத்துறான். கொடுத்து வச்சவன்! அவன் சம்பாதிச்சானோ இல்லை அவங்கப்பன் வாங்கி கொடுத்தானோ……… பொறந்தா இப்படி பொறக்கணும்டா, சம்பாரிச்சா இப்படி சம்பாரிக்கணும்டா…….. என்னையும் பாரு, என் வேலையையும் பாரு, என் சம்பளத்தையும் பாரு………”, என்ற அவனின் நிலை மேல் அவனை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேறியது.