அத்தியாயம் ஒன்பது:
இன்றைய நிகழ்வுகள்
காரில் ஏறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரை எதுவுமே ரமணன் பேசவில்லை. சிவசங்கரனாக அவருடைய பயண கால விவரங்களை சொன்னவர், “நம்ம வீட்லையே தங்கிக்கலாம் தம்பி. கவர்மென்ட் அல்லாட் பண்ணினா கூட இங்கயே இருங்க”, என்றார்.
எதுவுமே அதற்கு அவன் பதிலளிக்கவில்லை. அமைதியாகவே வந்தான்.
வீடு வந்து இறங்கும் முன்னர், டிரைவரையும் அவருடைய பி.ஏ வையும் ஒரு நிமிடம் வெளியே இருக்க சொன்னவன்,
“நீங்க கவலைப்படாம உங்க வேலையை பாருங்க, அவளை பார்க்க கடமைப்பட்டவன் நான் தான். இங்க இருக்க முடிஞ்சா இருக்கேன், இல்லை தனியா இருந்தா பரவாயில்லைன்னு தோணினா தனியா இருக்கேன். எதுவா இருந்தாலும் இனிமே அவளை விட்டுட்டு இருக்க மாட்டேன்! சரிதானே”, என்றான்.
ஒன்றும் பதில் பேசாமல் வெங்கட ரமணனின் கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்து கொண்டவர், “இந்த ஜென்மத்துல உங்க அப்பாக்கும் உங்களுக்கும் நான் பட்ட கடமை கொஞ்ச நஞ்சமல்ல! எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் அது தீராது!”.
“என்னை வாழ்க்கையில வளர்த்து விட்டவர் உங்க அப்பா, அது நிலை குலையாம காப்பாத்தி விட்டது நீங்க!, ஒரு பொண்ணுக்கு அப்பாங்கற முறையில…………..”, மேலே, மேலே, அவர் பேசப்போக…………
“ஐயா! இவ்வளவு உணர்ச்சி வசப்படாதீங்க! எனக்கு உங்க பொண்ணு தான் வாழ்க்கை! அது என்னைக்கும் மாறாது!. இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசாதீங்க!. சகஜமா இருங்க! அப்போ தான் எல்லாரும் என்னோட சகஜமா இருப்பாங்க, முக்கியமா உங்க பொண்ணு!”, என்றான்.
அதற்குள் “என்னடா கார், நின்று இவ்வளவு நேரமாகி விட்டதே இன்னுமே யாரையும் காணோமே!”, என்று ராஜேஸ்வரியும் ராம் பிரசாத்தும் வெளியே வர…………., “நீங்க வாங்க ஐயா! எல்லோரையும் பதட்டப்படுதாதீங்க!”, என்றவாறே அவரை அழைத்து ரமணன் இறங்கினான்.
“வாங்க தம்பி!” என்று ராஜேஸ்வரி அழைத்து, அவனுடைய பொருட்கள் எடுக்க தேட, “ஒரு பேக் மட்டும் தான் அத்தை!, மற்ற பொருட்கள் நாளைக்கு தான் வரும்!”, என்றவன்,
ராமை பார்க்க, இருவருமே ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை, சிறு புன்னகை மட்டுமே, ராம் அவன் அருகில் வந்தவன், “உடனே வர்றேன்னு சொல்லிட்டு ரொம்ப நாள் பண்ணிட்டியேடா, ஐ மிஸ்ட்யு எ லாட்”, என்றான்.
“மீ டூ அண்ணா!”, என்றவன், ராமை மென்மையாக அணைத்து விடுவிக்க அதை லானில் இருந்து பார்த்து கொண்டிருந்த கல்பனா……………..,
“ஐய்யோ! அறிவிருக்கா இவனுங்களுக்கு, எத்தனை வருஷம் கழிச்சு வீட்டுக்கு வர்றான், பொண்டாட்டிய கொஞ்சாம இவனுங்க கொஞ்சிட்டு இருக்காங்க”,
ராமை மனதிற்குள் திட்டியவள்!
“நம்ம மனுஷனுக்கு தான் விவரம் பத்தாதுன்னா, இவன் அதுக்கு மேல இருக்கான்! என்னமா ஆக்ட் குடுக்கறான் பாரு! பொண்டாட்டிய விட்டுட்டுட்டு போயிட்டு, ஒரு போன் கூட பண்ணாம, ஏன் பண்ணாம என்ன? அதை எடுத்து பேச கூட செய்யாம! ஒண்ணுமே நடக்காத மாதிரி கொஞ்சறாங்கப்பா”, என்று ரமணனையும் திட்டினாள் மனதிற்குள்,
ரமணன் திரும்பி கல்பனாவை பார்த்தவன், ராமை பார்த்து, “உங்க பாஸ் நிக்கறா! இன்னும் கொஞ்சம் லேட் பண்ணினோம் மனசுக்குள்ள திட்டிட்டு இருக்கறவ வெளிலயே திட்ட ஆரம்பிச்சுடுவா, வாங்க!”, என்றான்.
அவர்கள் அருகில் வந்தவுடன், “வாங்க மாப்பிள்ளை சார்!”, என்று கரம் குவித்து வரவேற்க, அது ராஜேஸ்வரியும் சிவசங்கரனும் இருப்பதால் தான் என்று ராமிற்கும் ரமணநிர்க்கும் புரிய இவனும் பதிலுக்கு, “வணக்கம் அண்ணி!”, என்றான்.
“என்னை அடையாளம் கூட தெரியுதா!” என்றாள் மெதுவாக, அவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக……………
ரமணன் அவளை பார்க்க……………… “இதுவரைக்கும் நான் உனக்கு ஒருநாளைக்கு நாலு…………… அப்போ இவ்வளவு வருசமா…………”, என்று ஏதோ கணக்கு போட,
“என்ன?”, என்று ராம் அதட்ட,
“இதுவரைக்கும் மொத்தமா இத்தனை வருசத்துல ஒரு ஏழாயிரம் ஃபோனாவது பண்ணி இருப்பேன்! ஒண்ணாவது நீ அட்டென்ட் பண்ணினியா! இப்போ என்னவோ வந்து கட்டி பிடிச்சு கொஞ்சிக்கறீங்க!”, என்றாள் காட்டமாக. ( மனதிற்குள் கெட்ட வார்த்தையில் வைதாள் ).
அவளுடைய வாயில் வரும் வார்த்தைகளின் தன்மையை அறிந்த ரமணன், “அது தான், இங்க தானே இருக்க போறேன்! பொறுமையா திட்டுவியான்! வா…………….”, என்றபடி சாவகாசமாக உள்ளே நடந்தான்.
“பெரிய சர்வாதிகாரி இவன்!”, என்று முணுமுணுத்தவாறு அவனை பின் தொடர்ந்தாள் கல்பனா.
உள்ளே நுழைந்தவுடன் அங்கே வரமஹாலக்ஷ்மி இல்லாததை பார்த்த சிவசங்கரன், “பாப்பா எங்கே? வாசலுக்கு வந்திருக்க வேண்டாமா?”, என்றார் ராஜேஸ்வரியை பார்த்து…………..,
அவர் கேட்ட விதமே இங்கே இல்லாது அவள் எங்கே போனாள். நீ ஏன் அவளை போக விட்டாய் என்ற குற்றச்சாட்டு இருந்தது.
“அது………..”, என்று ராஜேஸ்வரி இழுக்க, “குழந்தைய தூங்க வெக்கறா! என்று ராம் சொல்ல………
“ரொம்ப முக்கியமா! ஒருநாள் லேட்டா தூங்கினா என்ன?”, என்று அவர் கடிந்து கொள்ள…………..
“நான் பார்த்துக்றேன்னு சொன்னன் தானே ஐயா, நீங்க இப்படி பதட்டபடாதீங்க!”, என்று ரமணன் கூறிய பிறகே, அவர் கடிந்து கொள்வதை விட………………
“அத்தை! நீங்க அவருக்கு என்ன வேணுமோ பாருங்க! அவருக்கு நைட் டெல்லி போகணும்! நாளைக்கு மறுபடியும் வெளிநாடு போகணும்! அவரை பாருங்க!”, என்று அந்த இடத்தை விட்டு அவர்களை கிளப்பினான்.
ராம் கல்பனாவிடம், “குட்டி தூங்கிட்டாளான்னு பாரு! இல்லைன்னா அவளை தூக்கிட்டே வராவை வர சொல்லு!”, என்றான்.
“எங்கயிருக்கா?”, என்று ரமணன் கேட்க………… “அவ ரூமில் தான், அது குட்டி அவளோட தூங்கி பழகிட்டாளா, தூக்கத்திற்கு ஒரே அழுகை. ரொம்ப நேரம் சமாளிச்சோம் முடியலை. இப்போ தான் தூங்க வைக்கிறேன்னு போனா!”, என்று தயங்கி தயங்கி ராம் கூற,
“ஏன் இவ்வளவு நாள் பார்க்காம இருந்தாங்கள்ள! இப்போ ஒரு பத்து நிமிஷத்துல என்ன குறைஞ்சா போய்டுவாங்க! நீங்க எதுக்கு சமாதானம் சொல்றிங்க! அவங்க குழந்தையை தூங்க வெக்கற வயசுல, அண்ணன் குழந்தையை தூங்க வெக்கறா! அதுக்கு நீங்க பில்ட் அப்பு!”, என்று ராமிற்கு பரிந்து வர……………..
“ஆத்தா!………. இப்பத்திக்கு நான் இங்க தான் இருக்க போறேன்! நீ என்னை டைம் செடியுள் போட்டு வைவியாம்! மலை இறங்கு, இல்லையா உன்கிட்ட திட்டு வாங்கறதுக்கு தான் இவர் லைசென்ஸ் வாங்கியிருக்காருள்ள இவரை கவனி!”, என்று ராமை பார்த்து சிரிக்காமல் சீரியசாக கூற,
ராம் வெகு நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிக்க…………….. அதையே ரசனையோடு கல்பனா பார்த்திருக்க……………. இவன் மேலே ரூமிற்கு சென்றான்.
அத்தியாயம் பத்து
அன்றைய நினைவுகள்:
ரமணனின் ஒரு பார்வை, வராவை படுத்தி எடுத்து விட்டது. காய்ச்சலில் விழுந்தவள், ஒரு வாரம் ஹாஸ்பிடல் வாசத்தை அனுபவத்த பிறகே வீட்டிற்கு வர முடிந்தது.
அது ரமணனால் தான் என்று யாருக்கும் தெரியவில்லை. பரீட்சை முடிந்ததில் இருந்து ரமணன் ஸ்பெஷல் க்ளாசெஸ் போகும் சமயம் தவிர மற்ற நேரங்களில் ராம் பிரசாத்தோடு தான் இருப்பான். ராமிற்க்கே வராவின் காய்ச்சலின் காரணம் ரமணன் என்று தெரியவில்லை.
ஆனால் அதை ரமணன் உணர்ந்தான். அதனால் வராவை அதன் பிறகு அவன் எந்த தொந்தரவும் செய்யவில்லை. அதே சமயம் முன்பு போல் பேசவும் இல்லை. வராவுமே சிறுமி அல்லவா! இவனால் தான் காய்ச்சலில் விழுந்தாள்! என்பதை எப்பொழுதும் போல் மறந்து போனாள்.
ரமணனிடம் பயம் இருந்தாளும் ஒரே வீட்டில் இருக்கும் பொழுது பேசாமல் இருக்க முடியாது. அதனால் அவளாக பேசும் சந்தர்பங்கள் வரும் பொழுது இவனிடம் பேசினாலும் சரியாக இவன் பதிலளிக்க மாட்டான். அதனால் அதிகம் அதன்பிறகு வராவும் அவனிடம் பேசவில்லை.
சின்ன விஷயம், ரமணன் செய்ததை அவன் அம்மாவிடம் சொல்லிவிட்டாள். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அம்மா கோச்சிங் அது இது என்று தன்னை வருத்தி எடுக்கவும் வராதான் காரணம் என்று அவளிடம் பேசுவதை அவன் தவிர்த்து விடுவான். அவன் வீட்டில் இருக்கும் நேரம் மிக குறைவு என்பதால் யாருக்கும் தெரியவில்லை.
சிவசங்கரன் ராமநாதனுக்கு என்ன மரியாதை கொடுப்பாரோ, அவ்வளவு மரியாதை ரமணனுக்கும் கொடுப்பார். அவருக்குமே பயம். நம்மை நம்பி பையனை அனுப்பி வைத்திருக்கிறார்களே, ஜாக்ரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று.
அவன் வீடே தங்குவதில்லை. கோச்சிங் அது இது என்று முழு நேரமும் வெளியே சுற்றுகிறான் என அறிந்து அவராக ஒரு நாள் ரமணனிடம்,
“எங்கே தம்பி ஆளையே பார்க்க முடியலை, ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க”, என்க……………..“ராமண்ணா கிட்ட கேளுங்க மாமா! என் செட்யுல் அவங்களுக்கு தெரியும்”, என்று விடுவான்.
.ராமை பார்த்தால், “எனக்கு அவன் எங்க போறான்! என்ன பண்றான்னு தெரியும்பா! ஃப்ரீ டைம் என்னோட தான் இருப்பான்”, என்றான். அதனால் கவலை அகன்றவராக அவர் சென்றார்.
பரீட்சையின் முடிவுகள் வர நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான். என்ட்றன்ஸ் எக்ஸாம்மிலும் நல்ல மதிப்பெண்கள். மெடிசின் ப்ரீ சீட் கிடைக்கும் அளவுக்கு கட்டாஃப் இருந்தது. அவன் அது எதையும் செலக்ட் செய்யவில்லை.
அவன் அம்மா அவனிடம், “நீ என்ன வேண்டுமானாலும் படி! உன் விருப்பம், ஆனால் கட்டாயம் ஐ பி எஸ் ட்ரை செய்ய வேண்டும், எந்த டிகிரி என்றாளும் உன் விருப்பம். ஆனால் கல்லூரி மட்டும் சென்னையில் தான்”, என்று விட……………..,
சட்டம் படித்தவர்கள் மத்தியில் இருந்ததாலோ என்னவோ? சட்டத்தை தேர்வு செய்து சென்னை சட்டக் கல்லூரிக்குள் நுழைந்தான்.
கல்லூரி திறப்பதற்கு இன்னும் நாள் இருந்ததால், அவனுடைய அன்னையும் தந்தையும் அவனை வற்புறுத்தி அவனை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு முறை அம்மாவிடம் கேட்டு அவர் பரிட்ச்சை முடியட்டும் பிறகு பார்க்கலாம், என்று சொன்ன பிறகு அவனாக ஊருக்கு வருகிறேன் என்று கேட்கவேயில்லை. மிகுந்த ரோஷக்காரன்.
ஒரு வாறாக அவனை நிறைய சமாதானம் செய்து அவன் அம்மா அவனை ஊருக்கு கிளப்பினார்.
ஊரில் அவனுடைய பழைய நண்பர்களை பார்த்து உற்ச்சாகம் மேலிட இருந்த ஒரு மாதமும் அங்கேயும் ஊர் சுற்றல், தந்தையிடம் ஒரே கொஞ்சல்.
ராமநாதனையும் வெங்கட ரமணனையும் ஒரு மாதம் சமாளித்து மறுபடியும் அவனை சென்னை கிளப்புவதற்க்குள் அவன் அன்னைக்கு போதும் போதும் என்றாகி விட்டது,
அந்த உற்சாகத்தோடு வந்ததினாலோ என்னவோ அவனாகவே சென்று வராவிடம் பேசினான்.
அவள் டீ.வீ பார்த்துக்கொண்டிருந்த போது வேண்டுமென்றே அருகில் அமர்ந்து, “பாப்பா என்ன பண்ணுது!”, என்றான்.
வராவிற்கு கோபம் வந்தாலும், ரமணனிடம் அதை காட்டுவதற்கு அவளுக்கு பயம்.
“நான் உனக்கு பாப்பா இல்லை! அப்பாக்கும் அண்ணாக்கும் தான் பாப்பா! இனிமே அப்படி கூப்பிடாதீங்க”. அவள் முகம் கோபத்தில் சிவப்பது அவனுக்கு பார்பதற்க்கு அழகாக தோன்றியது.
அவளின் பதிலை கேட்டவன், உதடு பிதுக்கி, “ம்!!!!!!!!!!..”, நான் கூட நீ……….. பெரிய பொண்ணா வளர்ந்துட்டேன்னு பாப்பான்னு கூப்பிடவேண்டாம்னு சொல்றன்னு நினைச்சேன்! அது இல்லையா! நீ இன்னும் பாப்பா தானா! நான் மட்டும் தான் கூப்பிடக்கூடாதா!”, என்று ஒன்று தெரியாதவன் போல் அவளை கடுப்படிக்க, அவளுக்கு அவனை எதிர்த்து பேச பயம்.
அவளுக்கு தெரியும் தனியாக மாட்டினால் தான் அவன் சீண்டுவான் என்று. ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு அகன்று அவனை திட்டுவதற்காக அவன் அண்ணனை தேடி போக அவனை காணவில்லை.
கோபத்தை அடக்கி கொண்டு அவள் அண்ணன் வருவதற்காக காத்திருந்தவள், ராம் பிரசாத் வந்ததும் அவனிடம் பொறிய தொடங்கினாள்.
“அண்ணா! அந்த வெங்கி இல்லையில்லை மங்கி!”, என்று கூறி சற்று நிறுத்தியவள், ராம் தன்னை திட்டுவான் என்றுணர்ந்து…………..,
“இல்லையில்லை! மகாகனம் பொருந்திய………… ஸ்ரீமான் வெங்கட ரமணன் அவர்கள்!”, என்று அவள் அபிநயம் பிடித்து ஆரம்பித்த போதே, அவள் பின்னால் ரமணன் வந்து நின்று கொண்டான்.
அதனை அவள் அறியவில்லை. அவள் கூறிய விதம் ராமிற்க்கும், ரமணனிர்க்கும் புன்னகையை வரவழைத்தது. “தான் இங்கே நிற்பதை அவளுக்கு உணர்த்தவேண்டாம்”, என்று சைகையால் ராமிற்கு ரமணன் உணர்த்த, ராம் புன்னகையை அடக்கி அமைதியாகவே நின்றான்.
“அது என்ன பாப்பா?, மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் வெங்கட ரமணன்”, என்றான் ராம்.
“அதுவா உங்களுக்கு நான் அவனை மங்கி சொன்னா கோபம் வரும்! அதனால தான் இது. மகாகனம் எதுக்குன்னா அவனுக்கு தலைகனம் ஜாஸ்தி!”, என்றாள் கோபமாக.
“சரி என்ன இப்போ அதுக்கு”,.
“அண்ணா அவன் கிட்ட சொல்லி வைங்க! அவன் என்னை வம்புக்கு இழுக்கறான்! எனக்கு கோபம் வந்தது…………..”, என்று அவள் இழுக்க……..
“வந்தது………..” என்று பின்பாட்டு பாடினான் ரமணன்.
அதை உணராதவளாக, “என்ன செய்வேன்னு…………….”, என்று மிரட்டு வது போல் நிறுத்த,
“அவளுக்கே தெரியாது!!!!!!!!!!”, என்று மறுபடியும் பின்பாட்டு பாடினான் ரமணன்.
இதையெல்லாம் ஒரு புன்னகையோடு பார்த்த ராம், “பாப்பா! நீ இதை ஏன் அவன் கிட்டயே சொல்ல கூடாது”, என்று கேட்க…………
“ வேண்டாம்! நீயே அவன் கிட்ட சொல்லிடு!”, என்க,
“கொஞ்சம் திரும்பி நீயே சொல்லிடு பாப்பா! அவன் உன் பின்னாடி தான் நிக்கறான்!”, என்று ராம் சொல்ல…………
“அம்மாடி!!!!!!!!!!!!!” என்று சத்தம் எழுப்பியவள், “நீ போடா!!!!!!!!!!!!!”, என்று அவளுடைய அண்ணனை ஒரு அடி வைத்து விட்டு அவள் ஓடினாள்.
“பாப்பா ஓடாத நில்லு! அண்ணன் இருக்கேன்! அவனை ஒரு கை பார்க்கலாம்!”, என்று ராம் கத்த கத்த ஓடியே போனாள்.
பார்த்த ரமணன் பெருங் குரலெடுத்து சிரிக்க, “ரமணா! ஏற்கனவே அவளுக்கு உன்னை பார்த்து பயம்! நீ இப்படி அவளை பார்த்து உன்னோட அப்பா மாதிரி சிரிச்சென்னு வை! நான் பாவம், என்னை ஒரு வழி பண்ணிடுவா! ப்ளீஸ் இப்படி சிரிக்காத!”, என்றான்.
நாட்கள் விரைவாக இப்படியே செல்ல…………. வராவின் பயம் மட்டும் ரமணனிடம் சிறிதும் குறையவில்லை. ரமணனும் சீரியஸ் பெர்சனா என்பதால் அவனாக எல்லோரிடமும் சிரித்து பேசுவது அப்பூர்வம்.
வரமஹாலக்ஷ்மியின் வீட்டில் எல்லோருக்கும் அவன் குணம் தெரியுமாதலால் அவனை அட்ஜஸ்ட் செய்ய பழகிகொண்டனர்.
மாதம் ஒரு முறை சுந்தரவள்ளியும் ராமநாதனும் ரமணனை பார்க்க வருவர். இல்லையென்றால் அவனை வரவழைத்து கொள்வர். அவர்கள் வரும் பொழுது வரா அவர்களிடம் இந்த ஒரு மாதமாக நடந்த ரமணனின் கதையை முழுவதுமாக ஒன்று விடாமல் அவளுக்கு தெரிந்தை கூட்டி, குறைத்து, ஏற்றி, இறக்கி, சொல்லிவிடுவாள்.
வராவிற்கு அதிக செல்லம் அவர்கள் குடும்பத்தினர் கொடுப்பதை உணர்ந்த சுந்தரவல்லி……………. ராஜேஸ்வரியிடம் எப்பொழுதும் கடிந்து கொள்வார்.
“இப்படி அவளுக்கு செல்லம் கொடுக்காத ராஜேஸ்வரி, அவளை பொத்தி பொத்தி வைக்காத! எல்லோரோடையும் ஃப்ரீயா பழக விடு. பொண்ணுங்க தைரியமா வளரனும். இவ சின்ன விஷயத்துக்கு கூட பயப்படறா பிடிவாதமா இருக்கா!”, என்று வரும் போதெல்லாம் சொல்வார்.
ஏனோ அவருக்கு வராவை பார்த்தால் உலக நடப்பு தெரியாமல் வளரும் சிறு பெண் போலவே தோன்றினாள்.
வெங்கட ரமணனை பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பும் ராம் பிரசாத்திடம் வந்தது. ரமணனும் வழக்கறிஞ்சருக்கு படித்ததால் காலேஜ் நேரம் போக மீதி நேரம் ரமணனுடனே இருப்பான்.
இப்படியே நாட்கள் செல்ல, வரா பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்க, ரமணன் தன்னுடைய சட்டப் படிப்பை முடித்தான். இப்போதெல்லாம் அவன் வராவிடம் முட்டி மோதுவதில்லை, பயமுறுத்துவதில்லை.
வாரா பெரிய மனுஷியான போது வந்த அவனுடைய அன்னை அவனிடம், “முன்பு போல் நீ அவளுடன் ரகளை செய்ய கூடாது”, என்று தெளிவாக கூறி சென்றிருக்க, அவன் அவளிடம் கலாட்டா செய்வதோ பயமுறுத்துவதோ இல்லை,
ஆனால் தனியாக என்று அவளிடம் எந்த கலாட்டாவும் செய்யா தேவையில்லை, அவன் வெளியில் செய்யும் அடிதடிகளே நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வராவிடம் ரமணனை பற்றிய பயத்தை அதிகரித்து கொண்டிருந்தது.
ரமணன் காலேஜ் செல்வது ராயல் என்பீல்ட் புல்லட்டில் தான். அதுவும் சைலேன்செர் எடுத்து விட்டு வைத்திருப்பான். அதனால் சத்தம் அதிகமாக வரும். அந்த புல்லட்டில் அவன் வீட்டை விட்டு கிளம்பினால் அது கிளப்பும் சத்தம் எல்லோரையும் அவனை திரும்பி பார்க்க வைக்கும்.
நிறைய தடவை டிராபிக் போலீஸ்ஸிடம் மாட்டியிருக்கிறான். ஆனால் ஒரு முறை கூட அமைச்சரின் பெயரை உபயோகித்ததில்லை. பணம் என்ற பெரிய மனிதன் நம்மிடம் இருக்கும் போது வேறு எந்த பெரிய மனிதனும் தேவையில்லை என்றுனர்ந்தவனாக, அத்தனை பேருக்கும் வெள்ளையப்பறை தள்ளியே சமாளித்து விடுவான்.
ராம் கூட, “உங்கம்மா உன்னை போலிஸ் ஆக்கனும்னு சொல்லிடிருக்காங்க! நீ என்னடா இப்படி பார்க்கரவங்களுக்கு எல்லாம் லஞ்சமா தள்ளர!”, என……………
“அதுக்காகத்தான் ராமண்ணா! இப்போவே எல்லா கலாட்டாவையும் பண்ணறேன்! நம்ம போலீஸ் ஆயிட்டா இதெல்லாம் செய்ய முடியாதில்லை! நம்ம கரக்டா நடந்துக்கணும்”, என்பான்.
இந்த ஐந்து வருடங்களாக அவன் சட்டம் படித்து கொண்டே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எக்சாமிர்க்கும் படித்து கொண்டு தான் இருந்தான். இங்கே சட்டப் படிப்பின் இறுதி படிப்பை முடித்தவுடனே அவனுடைய அம்மா அவனை டெல்லிக்கு ஸ்பெஷல் கோசிங்கிர்க்கு பேக் செய்து அனுப்பிவிட்டார்.
சுமார் எட்டு மாத காலம் அவன் கோச்சிங் முடித்து ப்ரிலிமினரி பாஸ் செய்து மெயின் எக்சாமிற்கு அப்பியர் ஆக தான் மறுபடியும் வராவின் வீட்டிற்கு வர, இந்த குறுகிய காலத்திலேயே வராவிடம் நிறைய வித்தியாசம் அவனுக்கு தெரிந்தது.
வரா………….! அழகான, மிக! மிக! அழகான, பார்ப்பவர் யாராயினும் திரும்ப பார்க்க வைக்கும் பெண். தன்னை கவனித்து அழகு படுத்தி கொள்ள மாட்டாள். தன்னுடைய தோற்றத்திற்கு மிகவும் கவனிப்பு கொடுக்க மாட்டாள்.
ஆனால் இப்போது அவனுக்கு தோன்றியது! அவள் தன்னை அழகுபடுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவது போல அவனுக்கு தோன்றியது.
கல்லூரியில் அடி எடுத்து வைத்திருந்தாள். சென்னையில் இருந்த ஒரு புகழ் பெற்ற தனியார் பெண்கள் கல்லூரியில் பி பி ஏ சேர்ந்திருந்தாள். படிப்பில் சுமார் தான் வரா. ஒரு ஆவரேஜ் ச்டுடேன்ட். அதனால் வேறு தொழிற் கல்வி எதற்கும் அவளை சேர்க்காமல் ராம் பிரசாத் இதில் சேர்த்தான்.
ராமிற்க்கும் இருபத்தி ஒன்பது வயதாக, அவனுக்கு மும்முரமாக பெண் பார்த்து கொண்டிருந்தனர். வக்கீல் தொழில் பார்த்தாலும், அவன் தந்தையை போலவே அரசியலிலும் இருந்தான். பார்க்கும் பெண்களை எல்லாம் அவன் வேண்டாம்! வேண்டாம்! என்று சொல்லி கொண்டிருந்தான்.
சுந்தரவல்லி மூலமாக இந்த விஷயத்தை அறிந்த ரமணன், “ஏன் ராமண்ணா! இப்படி பார்க்கறவங்களை எல்லாம் வேண்டாம்னு சொல்றிங்க!”, என்று ரமணன் கேட்க, “எனக்கு பிடிக்கலை!”, என்றான்.
“ஏன்????????/”, என்றவனிடம், “போட்டோ பார்த்தா எப்படி தெரியும்?”, என்றான்.
“நேர்ல பாருங்க!”, என்றதற்கு,
“நேர்ல பார்த்து பிடிக்கலைன்னா?……………… நான் வேண்டாம்னு சொன்னா அவங்களுக்கு மனசு கஷ்டப்பாடாதா?”, என்றான்.
“இதுக்கு என்ன செய்ய முடியும். உங்களுக்கு எப்படி தான் வேண்டும்!”, என்று ரமணன் கேட்க………..
“அதுதான் எனக்கே தெரியலையே!”, என்று ராம் அசடு வழிந்தான்.
அந்த நேரம் பார்த்து வரா கல்லூரியில் இருந்து வர, ரமணன் வந்ததில் இருந்து அவளிடம் பேசவேயில்லை. அவனை பார்த்தாலே ஏதோ வேலை இருப்பது போல் ஓடிக்கொண்டிருந்தாள்.
வித்தியாசமாக ஏதோ அவளிடம் தெரிய என்ன என்று அவனுக்கு புரியவில்லை. “பாப்பா! இங்க வாங்க!”, என்றான் ரமணன் வேண்டுமென்றே அவளை பார்த்து,
அவளை “பாப்பா” என்று அழைத்ததற்கு எப்போதும் கோபப்படுவாள்! ஆனால் இப்பொழுது அமைதியாகவே வந்து அமர்ந்தவள், “சொல்லுங்க வெங்கி!”, என்றாள்.
“நான் உன்னை பாப்பான்னு கூப்பிட்டேன்! நீ ஏன் கோபப்படலை!”,
ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்க,
தற்பொழுது கூப்பிட்டது முக்கியமாக பட, “உங்க அண்ணன் வர்ற பொண்ணை எல்லாம் வேண்டாம்னு சொல்றான்! ஏன்னு கேட்க மாட்டியா?”, என்றான்.
கேட்டதும் விழித்தாள், “நான் என்ன பண்றது”, என்றாள்.
“ம்!!!!!!!!!!!!, அண்ணனுக்கு பிடிக்கற மாதிரி பொண்ணு பார்க்கிறது”.
“நானா நான் எப்படி பார்க்க முடியும்! அவங்கவங்களுக்கு பிடிச்சதை அவங்க அவங்க தானே பார்க்கணும்!”, என்றாள்.
இப்போது விழிப்பது வெங்கட ரமணனின் முறையாயிற்று.