அத்தியாயம் –17
சுஜய் வீட்டிற்குள் நுழைந்தவன் நேரே அவர்கள் அறைக்கு சென்று அவன் உடமைகளை மேசை மேல் வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தான்.
ஏற்கனவே அவன் பல குழப்பத்தில் இருந்ததால் மீனாவை அவன் கவனிக்கவில்லை. அவன் கவனிக்காமல் சென்றதில் மீனாவுக்கு மேலும் எரிச்சல் தோன்ற அவனுடன் மல்லுக்கட்ட தயாரானாள்.
சுஜய் குளித்து உடைமாற்றிக் கொண்டவன் மடிகணினியை எடுத்துக் கொண்டு கட்டிலிலேயே அமர்ந்தான். ஸ்கைப்பில் டெல்லியில் இருக்கும் சுர்ஜித்துடன் பேசிக் கொண்டிருந்தான்.
வேலை முடிந்ததும் சற்றே களைப்பாக தோன்ற காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அப்போது தான் மீனா ஞாபகமே அவனுக்கு வந்தது.
‘என்ன பண்ணுறா, வந்ததுல இருந்து அவளை காணோமே’ என்று யோசித்தவன் வரும் போது அவள் சோபாவில் அமர்ந்திருந்தது ஞாபகம் வந்தது.
‘என்னாச்சு இவளுக்கு இந்நேரம் பத்து தரம் எழுந்து வந்திருப்பாளே’ என்று யோசித்துக் கொண்டே வெளியில் வந்தால் அவள் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள்.
‘இப்போ நாம இவளை எதுவும் கேட்கலாமா வேணாமா. கேட்டாலும் தப்பு கேட்கலைன்னாலும் தப்பா போகும். சரி கொஞ்ச நேரம் கழிச்சு கேட்போம்’ என்று நினைத்தவன் “மீனு ஒரு காபி வேணும், ரொம்ப தலை வலிக்குதும்மா”
வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவள் உள்ளே சென்றாள். காபியை போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் லொட்டென்று டிபாயின் மீது வைத்தாள்.
“என்னது இது”
“ஹ்ம்ம் காபிதெரியலியா உங்களுக்கு. நீங்க தானே கேட்டீங்க”
“அதை இப்படி தான் வைப்பியா”
“அதான் வைச்சுட்டேன்ல, எடுத்து குடிக்க வேண்டியது தானே”
காலையில் இருந்து மனக்குழப்பத்தில் இருந்தவனுக்கு அவள் செயல் மேலும் எரிச்சலையும் கோபத்தையும் கிளப்ப “உனக்கு பிடிக்கலைன்னா, என்னால போட்டு தரமுடியாதுன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே”
“எதுக்கு இப்படி முகத்தில அடிச்ச மாதிரி கிளாசை சத்தத்தோட வைக்கிற”
“நான் இருக்கற டென்ஷன்ல நீங்க கேட்டீங்களேன்னு எழுந்து போய் காபி போட்டுட்டு வந்து கொடுத்தா ஏன் பேசமாட்டீங்க”
“வீட்டுக்கு வந்தீங்களே பொண்டாட்டி என்னவோ மாதிரி இருக்காளே என்ன ஏதுன்னு கேட்போம்ன்னு நினைக்காம எப்போ பார்த்தாலும் அந்த லேப்டாப் முன்னாடியே உட்கார்ந்திட்டு இருக்கறது” என்று அவள் பொரிய ஆரம்பித்தாள்.
“உனக்கு மட்டும் தான் டென்ஷன் இருக்குமா, ஆபீஸ் போயிட்டு வர்றவனுக்கு இருக்காதா. அதுக்காக இப்படி தான் முகத்தில அடிச்ச மாதிரி செய்யறதா”
“இப்போ என்ன பண்ணிட்டேன்னு தாம் தூம்னு குதிக்கறீங்க” என்று அவள் படபடவென பட்டாசாக வெடிக்க ஆரம்பித்தாள்.
“இதுக்கு மேல இங்க இருந்தேன் தேவையில்லாம பிரச்சனை பெரிசாகும்” என்றவன் உள்ளே சென்று உடைமாற்றிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
‘இப்போ எதுக்கு இப்படி கோவிச்சுக்கிட்டு போறார். நான் என்ன கேட்டுட்டேன் இப்போ, போனா போகட்டும். எப்படியும் வீட்டுக்கு தானே வரணும் அப்போ பேசிக்கறேன்’ என்று முடிவெடுத்தாள்.
வெளியே கிளம்பி சென்றவனோ தேவையில்லாத குழப்பங்களினால் இப்படி கோபத்தில் கிளம்பி வந்துவிட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
கார் நின்ற பின்னே தான் அது என்ன இடம் என்று திரும்பி பார்த்தான். ‘அய்யோ ஆபீஸ்க்கு தான் வந்திருக்கோமா’ என்று நினைத்தவன் வண்டியை விட்டு இறங்கினான்.
அலுவலகத்தில் இன்னும் விளக்கு எரிந்துக் கொண்டிருக்க உள்ளே சென்று சென்று பார்த்தான். “என்ன கதிர் இன்னும் வேலை முடியலையா” என்று கேட்ட குரலில் கதிர் திரும்பி பார்த்தான்.
“ஆமாண்ணே ஒரு கொட்டேஷன் கொடுக்கணும்ண்ணே அதான் உட்கார்ந்து ரெடி பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்னண்ணே திரும்ப வந்திருக்கீங்க. நீங்க கிளம்பிட்டீங்கன்னு அப்போவே செக்யூரிட்டி சொன்னார்”
“ஹான்… ஆமா கதிர் அப்போவே கிளம்பிட்டேன், ஒரு பைல் விட்டுட்டு போயிட்டேன். அதான் எடுக்கலாம்ன்னு வந்தேன். என்னால உனக்கு உதவ முடிஞ்சா சொல்லு கதிர்”
“நான் பண்ணிடுவேன் நீங்க கிளம்புங்கண்ணே”
“உனக்கு மட்டும் நேரமாகலையா கதிர், ஒண்ணும் பிரச்சனையில்லை. நீ இருக்கறவரை நானும் இங்கயே இருக்கேன். எனக்கும் ஒரு வேலை இருக்கு, அதை முடிச்சுட்டே கிளம்பறேன்” என்று அவன் அறைக்குள் சென்றான்.
சற்று நேரம் கணினியை உசுப்பி வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு காலையில் அவன் மாமாவுடன் பேசியது ஞாபகத்திற்கு வந்து மீண்டும் தலையை வலிக்க ஆரம்பித்தது.
சில நாட்களாகவே மீனுவிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது அவனுக்கு. காலையில் அவன் மாமா பிரஷாந்த் வர்மா போன் செய்திருந்தார்.
____________________
“ஹலோ சுஜய் எப்படி இருக்க, மீனா எப்படி இருக்கா”
“நல்லாயிருக்கேன் மாமா” என்றவன் அங்கு உள்ளவர்கள் பற்றி பரஸ்பரம் நலம் விசாரித்தான்.
“சொல்லுங்க மாமா திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க, நானும் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுட்டே இருந்தேன்”
“சும்மா உன்கிட்ட பேசலாம்ன்னு தான் போன் பண்ணேன் சுஜய். பெரிய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டோம், உன்கிட்ட சொல்லணும் தோணிச்சு அதுவும் ஒரு காரணம்ன்னு வைச்சுக்கோயேன். சரி நீ என்ன என்கிட்ட பேசணும்ன்னு நினைச்ச”
“ஓ!!! சூப்பர் மாமா, நல்ல விஷயம். நல்ல மாப்பிள்ளையா பாருங்க”
“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவேயில்லையே சுஜய், மீனாகிட்ட பேசிட்டியா”
“நான் அதை பத்தி தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன் மாமா. மீனுகிட்ட சொல்லணும்ன்னு தோணிட்டே இருக்கு”
“ஹ்ம்ம் உன்கிட்ட இதை நான் எதிர்பார்த்தேன், உனக்கு இப்போ தான் சொல்லணும்ன்னு தோணிச்சா”
“இல்லை மாமா அது வந்து அவகிட்ட சொல்லாம இருக்கறது ரொம்பவும் உறுத்தலா இருக்கு”
“எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியது தானே சுஜய்”
“இல்லை மாமா அது வேண்டாம், எனக்கு மீனுகிட்ட மட்டும் சொன்னா போதும் மாமா. அவகிட்ட உண்மையா இல்லையோன்னு எனக்குள்ள குற்றணர்ச்சியா இருக்கு”
“ஆனா சுஜய் உங்கப்பாவோட விருப்பம் நீ எல்லார்கிட்டயும் சொல்றதுல தான் இருக்கு. உங்க கல்யாணத்தப்போவே நான் சொன்னேன் நீ தான் கேட்கலை”
“என்ன மாமா சொல்றீங்க அப்பாவோட விருப்பமா. அப்பா தானே எதுவும் தெரிய வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க”
“உங்கப்பா சாகறதுக்கு முன்னாடி ஒரு நாள் என்னை கூப்பிட்டு பேசினார், அவருக்கு அப்புறம் உனக்குன்னு யாரும் இருக்க மாட்டாங்களோன்னு அவருக்கு கவலை”
“ஏன் நாங்க இல்லையான்னு கேட்டதுக்கு, இதுவரைக்கும் அவனுக்கு நீங்க இருக்கீங்க எப்பவும் இருப்பீங்க. ஆனாலும் என்னோட சொந்தங்களை ஒரு முறையாச்சும் அவன் போய் பார்க்கணும்னு சொன்னார்”
“உண்மை சொல்லி போய் பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்ன்னு சொன்னார். இதைபத்தி உன்கிட்ட நான் பேசணும்னு சொன்னார்”
“என்ன சொல்றீங்க மாமா”
“ஆமா சுஜய். உங்கப்பா என்கிட்ட பேசினது நிஜம், அவருக்கு எதுவும் ஆகிடும்ன்னு அவருக்கு தோணியிருக்கு அதான் என்னை கூப்பிட்டு சொல்லியிருக்கார்”
“நான் உன்கிட்ட பலமுறை இதை பத்தி பேச நினைச்சு இருக்கேன், நீ உங்கப்பா இறந்த துக்கத்துல இருந்து மீண்டு வராம இருந்ததுனால நான் அதை பத்தி உன்கிட்ட பேசமுடியலை”
“ஊருக்கு போன்னு நான் சொன்னப்போ எல்லாம் கேட்காதவன், திடீர்னு ஊருக்கு போனே. எங்களுக்கும் போன் போட்டு எனக்கு கல்யாணம் வாங்கன்னு சொன்னே”
“அப்போ கூட நான் சொன்னேன் நீ தான் எதையும் பேச வேண்டாம் மாமா. இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னே. நீயா ஒரு நாள் இப்படி என்கிட்ட சொல்ற நாளுக்காக தான் காத்திட்டு இருந்தேன்”
“சொல்லிடு சுஜய் எல்லார்க்கிட்டயும் சொல்லிடு, இன்னும் உனக்கு என்ன தயக்கம்”
“இல்லை மாமா, எனக்கென்னமோ மீனுகிட்ட சொன்னா போதும்ன்னு தோணுது. மத்தவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு எனக்கு தெரியலை”
“நான் சொல்றதை சொல்லிட்டேன் சுஜய் உனக்கு சரின்னு பட்டதை செய். இனியும் தாமதிக்காதே”
“சரி மாமா” என்றுவிட்டு போனை வைத்தவன் கௌதமுக்கு அழைத்தான்.
“கௌதம் மாமா கூப்பிட்டிருந்தார்” என்றவன் அவரிடம் பேசியதை அவனிடம் பகிர்ந்து கொண்டான்.
“பாரு சர்வா நான் சொன்னதை தான் அவரும் சொல்லி இருக்கார்”
“எனக்கு அவகிட்ட எப்படி சொல்றதுன்னே தெரியலை. ஏன் இவ்வளவு நாளா மறைச்சேன்னு கேட்பாளே”
“ஆமா கேட்க தான் செய்வாங்க என்ன உண்மையோ அதை சொல்லுடா”
“ஹ்ம்ம் சொல்றேன் கௌதம்”
“சரி சரி சீக்கிரமா நல்ல சேதியா சொல்லு”
“நல்ல சேதியா என்னடா சொல்ற”
“நீ சீக்கிரம் அப்பா ஆகப்போற சேதி தான்”
“என்னது அப்பாவா என்னால அவளை நெருங்கவே முடியலை”
“என்ன சர்வா சொல்ற”
“அவளுக்கு பல குழப்பங்கள் என்னை முழுசா ஏத்துக்க கொஞ்ச நாள் அவகாசம் கேட்டிருக்கா”
“அதுக்காக நீ பெரிய இவனாட்டம் சரின்னு சொன்னியா. நீ பெரிய தியாகி தான்டா”
“அதுமட்டும் காரணமில்லை கௌதம், என்னால அவ மனசை ஜெயிக்கவோ அவளை நெருங்கவோ முடியாம எல்லாம் நான் பேசாம இல்லை”
“அப்புறம் என்னடா”
“அவளுக்கு என்னை பத்தி தெரிஞ்ச பிறகு தான் என்னால அவளை நெருங்கவே முடியும்”
“அப்புறம் ஏன்டா பேசாம இருக்கே, எப்போவே சொல்லி இருக்க வேண்டியது தானே”
“என்னமோ தெரியலை அவகிட்ட போனாலே என்னால பேச முடியலை கௌதம். திடீர்னு கல்யாணம் நடந்துட்டதால அவளே குழம்பி இருக்கா நாம வேற போய் எதுவும் சொல்லி குழப்ப வேணாம்ன்னு இருந்துட்டேன்”
“அதுக்கு அப்புறம் தாத்தா இறந்தது, கதிர், தேனு கல்யாணம்ன்னு அப்படியே ஓடிப்போச்சு”
“இப்போ என்ன தான் பண்ணப் போறே”
“அதான் சொன்னேனே அவகிட்ட சொல்லிட போறேன்”
“முதல்ல போனை வை, அவகிட்ட சொல்லிட்டு அப்புறமா எனக்கு போன் பண்ணு” என்றவன் போனை வைத்துவிட்டான்.
____________________
ஏதோதோ எண்ணக்கலவையில் நேரம் பார்க்காமல் இருந்தவனை கதிர் அழைத்தான்.
“அண்ணே வேலை முடிஞ்சிருச்சு கிளம்பலாம், நீங்க வேலை முடிச்சுட்டீங்களா”
“முடிஞ்சுது கதிர், ஆமா மணி என்ன”
“பத்தரை மணியாகுதுண்ணே”
“என்னது பத்தரையா” என்றவன் அவன் சட்டை பாக்கெட்டையும் பேண்ட் பாக்கெட்டையும் தடவினான்.
“என்னண்ணே என்ன தேடுறீங்க”
“இல்லை மொபைல் எங்க வச்சேன்னு தேடுறேன்”
“நீங்க மொபைல் எடுத்துட்டு வந்தீங்களாண்ணே” என்று அவன் சொன்னதும் தான் அவன் நினைவிற்கு வந்தது கைபேசியை வீட்டிலேயே விட்டு வந்தது.
‘அய்யோ மணி ஆனதை பார்க்காம விட்டுட்டேனே, மீனு வேற என்னை தேடுவாளே’ என்ற பதட்டம் அவனுக்குள் வந்தது.
“சரி கதிர் கிளம்பலாம், நான் உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்”
“இல்லைண்ணே நான் பைக்ல தான் வந்திருக்கேன், நான் போய்டுவேன். நீங்க வண்டியை எடுத்துட்டு கிளம்புங்கண்ணே”
“போயிட்டு வர்றேன் கதிர்” என்று அவனிடம் விடைபெற்று காரை கிளப்பினான்.
காரை அவன் வாசலில் நிறுத்தியிருக்கவில்லை மீனு வாசலுக்கே ஓடி வந்துவிட்டாள். ஏற்கனவே ராமு அண்ணா வேறு வாசலியே காத்திருந்தார். மீனு ஓடுவதை பார்த்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த லட்சுமியும் பின்னோடு வந்தார்.
அவன் காரைவிட்டு இறங்க ஓடி வந்தவள் அவனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். “தம்பி காரை நான் உள்ளே விட்டுக்கறேன் நீங்க உள்ள போங்க. உங்களை காணோம்ன்னு அம்மா ரொம்ப நேரமா அழுத்திட்டு இருக்காங்க. நீங்க போனை வேற வீட்டுல வைச்சுட்டு போயிட்டீங்க போல”
“பாவம் ரொம்பவே பயந்திட்டாங்க, நீங்க அவங்களை கவனிங்க” என்றுவிட்டு அவனிடம் கார் சாவியை வாங்கி கொண்டு போனார் ராமு.
லட்சுமியும் “தம்பி என்னவா இருந்தாலும் வீட்டுக்கு நேரத்துக்கு வந்திடுங்க, மீனாம்மா ரொம்பவும் பயந்திட்டாங்க” என்றுவிட்டு போனார்.
அவளை அணைத்தவாறே உள்ளே அழைத்துச் சென்றான். “மீனு இப்போ எதுக்கு அழற, நான் தான் வீட்டுக்கு வந்திட்டேன்ல”
அவளோ அழுகையை நிறுத்தாமல் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு அழுதாள்.
“மீனு இப்போ ஆச்சுன்னு இப்படி அழுதிட்டு இருக்க, சொல்லிட்டு அழு”
“நான் இனிமே உங்ககூட சண்டை போடமாட்டேன். நான் செஞ்சது தப்பு தான் இனிமே இப்படி கோவிச்சுகிட்டு எல்லாம் போகாதீங்க மாமா…….. ப்ளீஸ்…….” என்று மேலும் அழுதாள்.
“மீனு இதுக்கா அழுதிட்டு இருக்க, நான் எதுவும் நினைக்கலைம்மா. பேசிட்டே இருந்தா தேவையில்லா வார்த்தை தடிக்குமோன்னு நினைச்சு தான் நான் வெளியே கிளம்பி போனேன்”
“நானும் ஏதோ டென்ஷன்ல இருந்தேன் அதான். அப்போ ஏதோ பேச கோபம் வந்திடுச்சு, தப்பு என்னோடது தான். நீ எப்பவும் மாதிரி தான் இருக்க, நான் தான் தேவையில்லாம பண்ணிட்டேன், சாரிம்மா”
“இல்லை மாமா தப்பு என்னோடது தான். என்ன இருந்தாலும் நான் அப்படி செஞ்சு இருக்கக்கூடாது. எப்பவும் கோபம் வராத உங்களுக்கே கோபம் வரவைச்சுட்டேன்”
“மீனு விடும்மா, சும்மா அழுதிட்டே இருக்காதா. நான் தான் இப்போ வீட்டுக்கு வந்திட்டேன்ல. மாமாக்கு ரொம்ப பசிக்குது. வாம்மா போய் சாப்பிடலாம்”
“நான் எடுத்து வைக்கிறேன், நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க. நிஜமாவே உங்களுக்கு என் மேல கோபமில்லையா மாமா. நான் என்னை மாத்திக்கறேன் மாமா” என்றவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
“மீனும்மா ப்ளீஸ் அழாதே, எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை” என்று சொல்லி அவள் கண்ணீரை சுண்டிவிட்டான்.
“நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் மீனு”
“சொல்லுங்க மாமா”
“இப்போ வேணாம், நாளைக்கு பேசறேன்”
“சொல்லுங்க மாமா, ஒண்ணும் பிரச்சனையில்லை”
“இல்லை மீனு வேண்டாம் கண்டிப்பா நாளைக்கு உன்கிட்ட பேசறேன்”
மறுநாள் வெள்ளிக்கிழமை அழகாக விடிந்தது, மெதுவாக கட்டிலில் புரண்டு படுத்தவன்,கைகள் கண்ணை திறவாமலே கட்டிலை துழாவியது. அருகில் காலியாக இருக்க கண் விழித்து பார்த்தான். மீனு எழுந்துவிட்டிருந்தாள் போலும்.
கட்டிலை விட்டு எழுந்தவன் குளித்து கிளம்பி வர மீனு அவர்கள் அறைக்குள் வந்தாள். “கிளம்பிட்டீங்களா மாமா? சாப்பிட வாங்க உங்களுக்கு பிடிக்கும்ன்னு பொங்கல் செஞ்சிருக்கேன்”
“ஹம்ம் சரி மீனு இதோ வந்திடுறேன்”
“ஒரு நிமிஷம் மாமா கொஞ்சம் திரும்புங்க” என்றவள் கையில் வைத்திருந்த விபூதியை அவன் நெற்றில் பூசினாள்.
“காலையிலேயே கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சா”
“ஹ்ம்ம் ஆமாம் மாமா இன்னைக்கு வெள்ளிக்கிழமைல அதான். அதுமில்லாம நேத்து வேற நீங்க வர லேட் ஆகிடுச்சா அதான் மனசுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு கோவிலுக்கு போயிட்டு வந்தேன்”
மீனு இவ்வளவு தன்மையாக பேசியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் இப்படி மாறியிருப்பது சற்றே கஷ்டமாகவும் இருந்தது அவனுக்கு. அவளிடம் அவனுக்கு பிடித்ததே அவளின் துறுதுறுப்பும், பட்பட்டென்று அவள் பதில் கொடுப்பதும் தான்.
“மீனு இங்க வா” என்றழைத்தான்.
“என்ன மாமா”
“ப்ளீஸ் மீனு நீ எப்பவும் போல இரு, இப்படி ரொம்பவும் அமைதியா நீ பேசுறது எனக்கு என்னவோ போல இருக்கு”
“என்னது நான் அமைதியா பேசுறேனா? யார் சொன்னது மாமா? ஏதோ இன்னைக்கு ஒரு நாள் அமைதியாக இருக்க முயற்சி பண்ணேன். அது பிடிக்கலையா உங்களுக்கு”
“ஹா ஹா ஹா…” என்று வாய்விட்டு சிரித்தான். “இது தான் என்னோட மீனு”
சாப்பிட்டு அலுவலகம் கிளம்பி சென்றவனுக்குள் நிம்மதி முற்றிலும் தொலைந்திருந்தது. கௌதமிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.
போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன் “ஹலோ” என்றான்.
“என்னடா சொல்லிட்டியா?”
“இன்னுமில்லைடா… நேத்து வேற பிரச்சனை அதுனால அதை பத்தி பேச முடியலை”
“என்ன தான் பிரச்சனையோ போடா”
“இல்லைடா இன்னைக்கு அவகிட்ட பேசறேன்னு சொல்லியிருக்கேன். சரி அதை விடு நீ நம்ம ஆபீஸ்க்கு போய் பார்த்தியா” என்று அலுவலக விஷயம் பேச ஆரம்பித்தான்.
அவனிடம் பேசிவிட்டு வைக்க மீனுவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அவளுக்கு போட்டு பேசினான்.
“சொல்லு மீனு”
“மணியாச்சு நீங்க சாப்பிட வரலையா”
“நான் வர்றதுக்கு ரெண்டு மணிக்கு மேல ஆகும் மீனு. நீ சாப்பிடு நான் வந்திடுறேன்”
“இல்லை நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம், நான் காத்திட்டு இருப்பேன் வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
புதிதாக ஒரு ஆர்டர் வந்திருக்க சுஜய் அதை தயார் செய்வதில் மும்முரமாக இருந்ததில் நேரமாகியதை கவனிக்கவே இல்லை. திருப்திகரமாக வேலை முடிந்த பின்னே அவனால் மூச்சு விட முடிந்தது.
அதை அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பிவிட்டு மணியை பார்க்க நாலு மணியாகியிருந்தது. ‘ச்சே டைம் ஆகிடுச்சே மீனு சாப்பிடாம இருப்பாளே’ என்று எண்ணிக் கொண்டே அவன் கைபேசியை பார்க்க அவளிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருந்தது.
முக்கிய வேலையில் இருந்ததால் போனை சைலன்ட் மோடில் வைத்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது. உடனே மீனுக்கு அழைத்து பேச அவள் குரலோ ஒரு மாதிரியிருந்தது. வீட்டிற்கு வந்துக் கொண்டிருப்பதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
வீட்டிற்கு வந்ததும் மீனுவை தேட அவள் சோபாவிலே அமர்ந்திருந்தாள். “சாரி மீனும்மா ஒரு முக்கியமான ஆர்டர் அதுக்கு தேவையானது எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்ததுனால நான் வர்றதுக்கு நேரமாகிடுச்சு”
“நான் தான் சொன்னேன்ல உன்னை சாப்பிட சொல்லி, எதுக்கு இப்படி காத்திட்டு உட்கார்ந்திருக்க”
“ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல, உங்களுக்கு என் மேல இன்னமும் கோபமிருக்கு அதானே”
“மீனு முக்கியமான வேலைன்னு சொன்னேன்ல அதான் போனை சைலன்ட்ல போட்டுட்டேன். அதான் நீ போன் பண்ணதை கவனிக்கலை, மறுபடியும் உன்கிட்ட சாரி கேட்டுக்கறேன் மீனும்மா”
“வேணும்னா உன் கால்ல வேணா விழட்டுமா”
அவள் கையை அவன் முன் நீட்டினாள். “என்ன மீனு”
“கால்ல விழறேன்னு சொன்னீங்க, அதெல்லாம் வேணாம். வேணும்னா என் கையை காலா நினைச்சுக்கோங்க”
“உன்னை…” என்றவன் சிரித்துக் கொண்டான் அவள் கையை பிடிக்கவும் மறக்கவில்லை.
“ஆமா இந்த நேரத்துல வந்திருக்கீங்க, இப்போ சாப்பிட்டு ஆபீஸ் போனா எப்போ வருவீங்க”
“நான் தான் ஆபீஸ்க்கு திரும்ப போகப்போறதில்லையே. சாப்பிட்டு உன் கூடவே தான் இருக்க போறேன்”
“ஹைய் ஜாலி மாமா சரி வாங்க சாப்பிடலாம். நீங்க என்கிட்ட ஏதோ பேசணும் சொன்னீங்களே” என்று ஞாபகப்படுத்தினாள்.
“சாப்பிட்டு பேசலாம்” என்றவன் அவர்கள் அறைக்குள் சென்றுவிட்டான்.
சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் சென்று அமர்ந்தனர் இருவரும். அந்த மாலை வேலை ஏகாந்தமாக இருந்தது. அது பனிக்காலம் என்பதால் லேசாக வாடை காற்று வீசியது.
“மீனு”
“சொல்லுங்க மாமா”
“உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா”
“ஒரு விஷயம் சொல்லணும்ன்னு நீங்க சொல்லிட்டே தான் இருக்கீங்களே தவிர என்னன்னு சொல்லவே இல்லையே”
மாடிக்கு வரும் போது அவன் கையோடு ஒரு காகித உறையை எடுத்து வந்திருந்தான். அதை கையில் எடுத்தவன் “நீ எங்கப்பாவும் அம்மாவும் ஒண்ணா இருக்க போட்டோ பார்க்கணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தியே, இந்தா பாரு. அதுல இன்னும் சில போட்டோவும் இருக்கு” என்று அந்த உறையை அவளிடம் கொடுத்துவிட்டு தூரச் சென்று நின்றான்.
- காற்று வீசும்