அத்தியாயம் –9
விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுராவிற்கு கிளம்பினர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த பிருந்தாவன் இரண்டும் விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.
ராதாவும், கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிறங்கியிருப்பது போன்ற பரவசம் தரும் எழில்கோலம்! காதல் தான் அன்பு, அந்த அன்பின் தீவிரத்தன்மையை உணர்த்துவது தான் எங்களின் இந்த ஆனந்த கோலம் என்பதைச் சொல்லும் வகையில் இருக்கும் அந்த சிலைக்கருகில் மெய் மறந்து நின்றனர்.
அங்கு கண்ணன் பிறந்த சிறைசாலை இருந்த இடம் ஜென்மபூமி என்று அழைக்கப்படுகிறது. பழமை மாறாத கம்பீரச்சிறை! ஒரு ஆள் மட்டுமே நுழைந்து நடக்கும்படியான அந்த குறுகிய சந்துகளை எல்லாம் கடந்து நடக்க, பிஞ்சுக் குழந்தையாய் கண்ணன் அவதரித்த புனித இடத்தை காணக் காண அந்த காட்சி கண் முன்னே விரிகிறது.
நந்தகோபர் அக்குழந்தையை கூடையில் வைத்து தலை மேல் சுமந்து கொண்டு செல்வது, கண்ணன் ஆயர்பாடியில் பெண்களிடையே வம்பு செய்வது, வெண்ணெய் திருடி திண்பது என்று காட்சிகள் மனதில் தோன்ற ஆரம்பித்தது.
சுஜய் அந்த இடத்தை பற்றி சொல்லிக் கொண்டு வர மதுராவில் கால் பதித்ததுமே குறும்புக் கண்ணன் தன் பிஞ்சுப் பாதம் பதித்து, நின்ற, நடந்த, ஓடிய இடங்களிலா நாம்நிற்கிறோம் என்கிற எண்ணம் மேலோங்கி மீனாவைசிலிர்க்கச் செய்தது.
கண்ணனை போன்றதோர் குழந்தை தனக்கும் வேண்டுமென்றே பிரார்த்தனையே அக்கணம் அவளுடைய வேண்டுதலாய் இருக்க, தன்னையுமறியாமல் சுஜய்யை பார்த்தாள்.
அங்கிருந்த கடை ஒன்றில் கிருஷ்ணனின் உருவப்படத்தை வாங்கலாம் என்று நின்றிருக்க இவர்கள் தமிழ் பேசுவதை கண்ட ஒரு தமிழ் குடும்பம் அவர்களை நோக்கி வந்தது.
“தம்பி நாங்க மதுராவை சுற்றி பார்க்க தமிழ்நாட்டுல இருந்து வர்றோம், நீங்க தமிழ் பேசுறது பார்த்து தான் வந்தோம், எங்களோட வந்த கைடு எங்க போனார்ன்னு தெரியலை”
“ஒரு கிருஷ்ணன் பொம்மை வாங்கலாம்ன்னா கடைக்காரர் என்ன பேசறார்ன்னே எங்களுக்கு புரியலை. உங்களுக்கு ஹிந்தி தெரிஞ்சா எங்களுக்கு உதவ முடியுங்களா” என்று கேட்டு ஒரு பெண்மணி அவர்கள் அருகில் நின்றிருந்தார்.
“இந்த கடையிலேயே பார்க்கறீங்களா, இல்லை நீங்க பார்த்த கடைக்கே போகணுமா”
“பரவாயில்லை தம்பி, அதே படம் இங்கயும் இருக்கு. இங்கேயே பார்க்கலாம்” என்றவர் அவர்களுக்கு பிடித்த அந்த படத்தை எடுத்துக் காட்டா சுஜய் கடைக்காரரிடம் பேசி அந்த படத்தை வாங்கிக் கொடுத்தான்.
“நீங்களும் தமிழ்நாடா”
“ஆமாங்க பூர்வீகம் தமிழ்நாடு தான், ஆனா நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே டெல்லி. என்னோட மனைவி தமிழ்நாடு தான்”
“நீங்க கண்ணன் படம் வாங்கலையா, உங்களை பார்த்தா புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி தெரியுது. இங்க உங்க வேண்டுதலை வைச்சுட்டு போங்க, அடுத்த வருஷமே உங்கவீட்டில ஒரு குட்டி கண்ணன் பிறப்பான்” என்று போகிற போக்கில் அப்பெண்மணி சொல்லிவிட்டு போக மீனா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
வெண்ணெய் தின்று கொண்டிருப்பது போன்ற அழகிய குட்டி கண்ணனின் சிலை ஒன்றை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருந்தவள் சுஜய்யை பார்த்தாள். “இதை வாங்கிக்கலாமா”
“வாங்கிக்கோ, வேற எதுவும் வேணுமின்னாலும் வாங்கிக்கோ”
அவன் சம்மதம் கொடுத்ததில் மீண்டும் அந்த கடையை அலசியவள் கண்ணில் யசோதை கண்ணனை அணைத்தவாறே இருந்த படம் பட்டது. அதையும் அவள் எடுத்து வைத்துக் கொள்ள சுஜய் கண்ணனும் ராதையும் மெய்மறந்த நிலையில் நின்றிருந்த படத்தை எடுத்துக் கொண்டான்.
மதுராவை சுற்றி பார்த்துவிட்டு கடைசியாக அங்கிருந்த மியூசியத்தையும் பார்த்துவிட்டு மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு டெல்லிக்கு பயணமானார்கள்.
டெல்லியை முன் மாலை பொழுதில் வந்தடைந்தவர்களை சுஜய் அங்கிருந்து V3S மகாலுக்கு அழைத்து சென்றான். அங்கிருந்த நகரும் படிக்கட்டில் ஏற மீனு ஆச்சரியப்பட்டாள். தன்னையறியாமல் அவள் கைகள் அவன் கரத்தை பற்றியது.
“இது நல்லாயிருக்கே, திரும்பவும் இதுல ஏறலாமா” என்றாள் வெள்ளந்தியாக.
“இங்க இது போல எல்லா மாடியிலயும் இருக்கு, இங்கேயே ஏறி ஏறி இறங்கினா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க. மேல ஏறும் போது கூட்டிட்டு போறேன்”
“அப்புறம் மீனு, நம்ம பசும்பொன்னுக்கும், கார்த்திக்கும் டிரஸ் எடுக்க தான் வந்திருக்கோம். அவங்க நாளைக்கு ஊருக்கு போறாங்க இல்லையா. லட்சுமி அக்கா சொன்னாங்க, நம்ம வீட்டுக்கு வந்துட்டு போறாங்க அவங்களுக்கு எதுவும் செய்யணும்னு”
“பார்த்து வாங்கிடு, தேனுவுக்கும் சேர்த்து வாங்கிடு” என்று அவளிடம் தனியே சொன்னவன் அருகில் இருந்த கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றான். நீங்க பார்த்திட்டு இருங்க, நான் பத்து நிமிஷத்தில வந்திர்றேன்” என்றவன் கதிரையும் கார்த்திகேயனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
‘இவர் என்ன லூசா, இந்த கடையில எங்களை தனியா விட்டுட்டு போறார், கூட ஒரு ஆம்பிளை துணை கூட இல்லாம எல்லாரையும் கூட்டிட்டு அவர் பாட்டுக்கு போறார்’
‘இந்த கடைக்காரன் கிட்ட நான் தமிழ்ல விலை கேட்டா சொல்லுவானா, சொட்டை மண்டைங்கறது சரியா தான் இருக்கு. மண்டை மட்டும் தான் இருக்கு. மூளையே இல்லை’ என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
தேனுவும், பசும்பொன்னும் அங்கு தொங்கவிடப்பட்டவற்றை எடுத்து பார்த்துக் கொண்டும் அதில் உள்ள விலையை பார்த்துக் கொண்டும் நின்றிருக்க, அய்யோ ‘மீனா என்னாச்சு உனக்கு அவங்க ரெண்டு பேரும் பார்க்கறதை போல நீயும் பார்க்க போயிருக்கலாமே’
‘உனக்கு என்ன தான் பிரச்சனை அவர் உன்கூட இல்லாம தனியா போயிட்டார்ன்னா, எதுக்கு தேவையே இல்லாம அவரை திட்டினேன்’ என்று அவளை அவளே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
தேனுவுக்கும், பசும்பொன்னும் உடைகள் தேர்வு செய்திருக்க, அவர்கள் இருவரும் இவளையும் எடுத்துக் கொள்ள சொல்ல வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. ‘அவர் இவங்களுக்கு எடுக்க சொன்னார், என்னை எங்கே எடுத்துக்க சொன்னார்’ என்று நினைத்து மீண்டும் முறுக்கிக் கொண்டாள்.
“அக்கா என்னக்கா யோசிக்கிற, உனக்கும் பாரு”
“இல்லை எனக்கு வேணாம், உங்க ரெண்டு பேருக்கும் தான் எடுக்க சொன்னார். நீங்க பார்த்தாச்சுள்ள அது போதும்”
‘அடடா அக்காவை மாமா டிரஸ் எடுத்துக்க சொல்லலைன்னு கோபம் போல, மாமா வரட்டும் அவரை தனியா கூப்பிட்டு சொல்லிடணும்’ என்று நினைத்துக் கொண்டாள் தேனு.
ஆண்கள் மூவரும் நெறைய பைகளுடன் திரும்பி வந்தனர், தேனுவுக்கும், பசும்பொன்னுக்கும் எடுத்ததற்கும் சேர்த்து பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர தேனு சுஜய்யின் அருகில் வந்து அவன் காதில் கிசுகிசுத்தாள்.
“மாமா நீங்க அக்காவை டிரஸ் எடுத்துக்க சொல்லலையா, எங்கக்கா கோபமா இருக்கான்னு நினைக்கிறேன். என்னன்னு பாருங்க மாமா”
“தேங்க்ஸ் தேனு, உங்கக்காவை நான் சரி பண்ணிக்கறேன்”
கதிரும் தங்கைக்கு என்று நகை எடுத்துக் கொடுத்தவன் தேனுவிற்கும் உடைகள் எடுத்து கொடுத்திருந்தான்.
உடைகள் மற்ற பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டை வந்தடைய முன்னிரவு ஆகிவிட்டது.
வீட்டிற்கு வந்ததும் பசும்பொன்னை அழைத்து அவளிடம் ஒரு கைபேசி அடங்கிய பெட்டியை கொடுத்தான். “அண்ணா ஏற்கனவே இவ்வளவு எடுத்து கொடுத்திருக்கீங்க, இது வேறயா, என்னங்க அண்ணாகிட்ட சொல்லுங்க. பாருங்க போன் வேற வாங்கி கொடுத்திருக்காங்க”
“நீ வேற பொன்னு உங்க ரெண்டு அண்ணனுமே எதுவுமே கேட்க மாட்டேங்குறாங்க, அவங்க இஷ்டத்துக்கு வாங்கிட்டே இருக்காங்க. நீ அதை திறந்து பாரு அதுல ரெண்டு போன் இருக்கு, ஒண்ணு உனக்காம் இன்னொன்னு எனக்காம்”
“விடு எல்லாத்துக்கும் பதிலா அவங்க நம்ம வீட்டுக்கு வரும் போது நாம அவங்களை நல்லா கவனிச்சுக்கலாம்”
கதிர் தேனுவுக்காக வாங்கிய கைபேசியை அவளிடம் கொடுக்க அவளுக்கு சந்தோசம் பிடிபடவில்லை.
எல்லோரும் சாப்பிட அமர சுஜய் ”நாளைக்கு காலையில சீக்கிரம் கிளம்பி தயாரா இருங்க, நேரமே ஏர்போர்ட் போகணும். பசும்பொன் ஊருக்கு போனதும் எங்களை மறந்திடாதே, அடிக்கடி போன் பண்ணு, சரியா”
“என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, கதிர் அண்ணே மாதிரி தான் நீங்களும் எனக்கு. உங்களை என்னால எப்பவும் மறக்க முடியாது அண்ணே”
யாருமே கவனிக்காத ஒரு விஷயம் மீனா வாய் திறந்து எதுவுமே பேசவில்லை என்பது. ஏனோ மனதிற்குள் தனிமைப்பட்டது போல் ஓர் உணர்வு அவளுக்கு உருவானது.
சுஜய்க்கு தன்னை பிடிக்கவில்லையோ என்ற கவலை மனதை போட்டு உறுத்தியது. முன்தினம் அவள் தான் அவனை பிடிக்கவில்லை என்று கூறினாள் அதை மறந்தவளாக அவன் மேல் விசனத்தில் இருந்தாள்.
எல்லோரும் சந்தோஷ மனநிலையில் இருந்ததால் அவளின் மாற்றம் யார் கண்ணுக்கும் இலகுவாக தெரியவில்லை. அவர்கள் அறைக்குள் சென்றவளுக்கு அங்கு நடந்த மாற்றம் கண்ணில் படவேயில்லை.
கட்டிலில் ஏதோவொரு கோபத்திலே அமர்ந்திருந்தாள் சுஜய்யின் வருகைக்காக. ‘வரட்டும் இந்த மனுஷன் வந்ததும் நல்லா நாக்கை பிடுங்கற மாதிரி கேட்குறேன். நான் ஒருத்தி பொண்டாட்டின்னு ஞாபகம் இருக்கா இல்லையா இவருக்கு’
சுஜய் வந்தவன் உடைமாற்றி வந்தான், அவ்வப்போது அவன் கண்கள் மீனுவை பார்க்கவும் தவறவில்லை. எதுவும் பேசாமல் கட்டிலில் அமர்ந்தான். அவன் எதுவும் பேசுவான் என்று அமர்ந்திருந்தவளுக்கு அவன் வாயை திறக்க போவதில்லை என்றதும் கரையில் விழுந்த மீனை போல் துள்ளினாள் மீனா.
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க”
“கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா”
“என்ன கிண்டல் பண்றீங்களா”
“இல்லையே நீ கேட்டதுக்கு தானே பதில் சொன்னேன்”
“நான் யாரு உங்களுக்கு”
“அது உனக்கு மறந்திடுச்சா”
“எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு, உங்களுக்கு தான் எல்லாமே மறந்திடுச்சு, ஊருக்கு போகும் போது வேலப்பர் கோவில்ல போய் பூசாரிக்கிட்ட சொல்லி மந்திரிக்கணும்”
“உனக்கும் ஞாபகம் இருக்குள்ள,அப்புறம் எதுக்கு என்னை கேட்குற மீனு”
“மீனுவாம்… மீனு… இப்படி கொஞ்சலா கூப்பிடுறதுல ஒண்ணும் குறைச்சலில்லை”
“உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை, என்ன சொல்லணுமோ, இல்லை என்ன கேட்கணுமோ அதை நேரடியா சொல்லு”
“உங்களுக்கு உங்க தங்கச்சி என்னோட தங்கச்சி எல்லாம் கண்ணுக்கு தெரிவாங்க. கட்டின பொண்டாட்டி மட்டும் கண்ணுக்கு தெரிய மாட்டா அப்படி தானே”
“கொஞ்சம் பேசாம இருக்கியா” என்றான் அமைதியாக
“எதுக்கு பேசாம இருக்கணும், என் மனசுல பட்டதை கேட்டே ஆகணும்”
“கேளு அதுக்கு முன்னாடி நான் சொல்றதையும் கேளு”
“முடியாது, கேட்க முடியாது”
“அப்போ நீ சொல்றதையும் என்னால் கேட்க முடியாது” என்றவன் எழுந்து அவர்கள் அறையை ஒட்டிய வேறொரு அறைக்குள் எழுந்து சென்றான்.
மீனாவுக்கு அழுகை வரும் போல இருந்தது, என்னை பேசவே விடமாட்டேங்குறார் என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருக்க அவள் முன் நிழலாடியது.
“மீனு! மீனு! மீனு!” என்றவன் அழைக்க நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தாள்
“என்ன வைச்சிருக்கீங்க மீனுக்கு எதுக்கு இப்படி ஏலம் போடுறீங்க என் பெயரை”
“இந்தா இதை பாரு” என்று அவளிடம் நெறைய பைகளை திணித்தான்.
“என்ன! என்னது இது!”
“பிரிச்சு பாரு” என்றவன் மேலே எதுவும் பேசாமல் கட்டிலில் அமர்ந்தான்.
“இங்க கொண்டு வந்து தர்றீங்க, அப்போ வேணுமின்னே என்னை வெறுப்பு ஏத்துனீங்களா”
“நான் எதுவுமே செய்யலை, நீயா தான் பேசுற. இப்போ சொல்லு உனக்கு என்கிட்ட என்ன சொல்லணும்”
“இதை எல்லாருக்கும் கொடுக்கும் போது கொடுத்திருக்கலாம்ல, கார்த்தி அண்ணா பசும்பொன்னுக்கு வாங்கி கொடுக்கறாங்க, இந்த கதிரேசன் கல்யாணமே ஆகலை தேனுவுக்கு போன் வாங்கி கொடுக்கறான், டிரஸ் வாங்கி கொடுக்கறான்”
“நீங்க எதுவும் எனக்கு வாங்கி தரலைன்னு அந்த நேரம் எனக்கு உங்க மேல கோபம். நீயே எடுத்துக்கோன்னு கூட சொல்லலை ஏன்”
“நீ தான் சொன்னியே, ஒண்ணு உன்னோட தங்கை இன்னொருத்தர் என்னோட தங்கைன்னு அதுனால தான் அவங்களுக்கு அதை வெளிய வைச்சு கொடுத்தேன். பொண்டாட்டிக்கு தனியா தானே கொடுக்கணும்”
“அதான் பிரிச்சு பாரு, நான் இது மாதிரி இதுக்கு முன்னாடி வாங்கினது இல்லை. உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரு, இல்லைன்னா மாத்திக்கலாம்”
ஏனோ அவன் பதில் அவளுக்கு உள்ளுர சந்தோசத்தையும் திருப்தியையும் கொடுத்தது. அவன் சொன்னது போல் எதையும் மாற்ற அவளுக்கு விருப்பமில்லை. எல்லாவற்றையும் ஒரு சந்தோசத்துடனே பார்த்தாள்.
“எல்லாமே நல்லாயிருக்கு, உங்களுக்கு பழக்கமில்லைன்னு சொல்லிட்டு இவ்வளவு எடுத்து இருக்கீங்க”
“உனக்கு நல்லாயிருக்குமான்னு மட்டும் தான் யோசிச்சேன், அப்புறம் தான் எடுத்தேன். போன் எப்படியிருக்குன்னு பாரு”
போனை பிரித்தவள் “என்னங்க இது சோப்பு டப்பா மாதிரி இருக்கு”
சுஜய்க்கு அந்நேரம் உனக்கு தேவையா என்பது போல் இருந்தது.
“என்னம்மா இப்படி சொல்ற”
“எங்கப்பா போன் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா, நம்பர் எல்லாம் போடுறதுக்கு வசதியா அதுல பட்டன் இருக்கும். இதை போய் போன்னு சொல்றீங்க, இதுல பட்டனே இல்லையே”
“இது ஸ்மார்ட் போன் அப்படி தான் இருக்கும், எல்லாமே நீ டச் பண்ணாலே போதும். இரு நான் சொல்லி தரேன்” என்றவன் அவளுக்கு விளக்க பாடம் எடுக்க அவள் கேட்ட கேள்வியில் அவன் களைத்து தான் போனான்.
“போனை இப்போ சார்ஜ்ல போடு, நாளைக்கு ஊருக்கு போன் போட்டு பேசு. எல்லாருடைய நம்பரும் அதுல பதிஞ்சு வைச்சுட்டேன்”
“உங்க… உங்களோட நம்பர்”
“அதுவும் தான்”
“என்னன்னு பதிஞ்சு வைச்சு இருக்கீங்க”
“அதை நீயே கண்டுபிடிச்சு எனக்கு நாளைக்கு போன் பண்ணு பார்க்கலாம். இப்போ தூங்கலாமா. எனக்கு தூக்கம் வருது நாளைக்கு வேற ஏர்போர்ட் போகணும், எனக்கு ஆபீஸ்ல வேற நிறைய வேலை இருக்கு”
“ஒரு நிமிஷம்… இன்னும் ஒண்ணு”
“என்னம்மா சொல்லு”
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா”
“இப்போ அந்த கேள்விக்கு என்ன அவசியம்”
“இல்லை அன்னைக்கு பழி வாங்கறேன்னு சொன்னீங்க, இன்னைக்கு இதெல்லாம் செய்யறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை, உங்களை புரிஞ்சுக்கவே முடியலை”
“அதுனால தான் கேட்குறேன், உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையா”
“இப்போ இதுக்கு நான் பதில் சொல்லலை, சீக்கிரமே உனக்கு புரியும்” என்றுவிட்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான்.
‘இப்போ நான் என்ன கேட்டேன்னு முகத்தை தூக்கி உர்ருன்னு வைச்சுக்கிட்டு படுக்கறார். கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவேயில்லை. ஹ்ம்ம் எப்படியோ போகட்டும். சொட்டைமண்டை போடா’ என்று திட்டிக் கொண்டு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு விளக்கணைத்து படுத்தாள்.
மறுநாள் ஏர்போர்ட்க்கு சென்று பசும்பொன்னையும் கார்த்திகேயனையும் வழியனுப்பினர். பசும்பொன் வீட்டில் இருந்து கிளம்பும் போதே மீனுவுக்கு அழுகையாக வந்தது.
பசும்பொன் அழவே ஆரம்பித்துவிட்டாள், “பசும்பொன் பார்க்க போனா, நாங்க தான் உன்னை வழியனுப்ப அங்க வந்திருக்கணும். ஆனா நீ என்னோட வந்திருக்க, எதுவும் வருத்தப்படாதே”
“அண்ணே இவளை நல்லா பார்த்துக்கோங்க, நாங்க எல்லாரும் சின்ன வயசில இருந்தே ஒண்ணா வளர்ந்தோம், ஒண்ணாவே இருப்போம். இப்போ ஆளுக்கு ஒரு இடமா பிரியறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”
“இவ அதிகம் பேசக் கூட மாட்டா, அவளை பார்த்துகோங்கண்ணே”
“மீனா என்னம்மா இது எதுக்கு அழற, நீ எனக்கு தங்கை மாதிரி தான் அழாதே. நாங்க எங்க போகப் போறோம், அதே ஊர் தானே.
நீ ஊருக்கு வரும் போது வந்து இவளை பாரு, உங்க ரெண்டு பேருக்கிட்டயும் போன் இருக்கு. அடிக்கொருசம் பேசிக்கோங்க. பசும்பொன்னை நான் கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன்”
தேனு, மீனா, பசும்பொன்னை சமாளித்து ஒருவழியாக அவர்கள் ஏர்போர்ட் வந்தடைந்தனர். அவர்களை விமானம் ஏற்றிவிட்டு தேனுவையும் மீனாவையும் வீட்டில் இறக்கிவிட்டவன் அவனுடைய மடிகணினியை எடுக்க வீட்டிற்குள் வந்தான்.
அதற்குள் அவன் கைபேசி சிணுங்க அதை எடுத்து காதில் வைத்தவன் அங்கு மீனு இருப்பதை கவனிக்கவில்லை(?).
“சொல்லு கௌதம்”
“நாங்க வந்தாச்சு… இம்ம் வந்து நாலு நாளாச்சு”
“கல்யாணம் பிடிச்சிருக்கு, பிடிக்கலைன்னு என்ன இருக்கு. கல்யாணம் நடந்தாச்சு, என்னை கை நீட்டி அடிச்சா இல்லே அதான் அவளை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளை எனக்கு சுத்தமா பிடிக்கலை கௌதம்”
“சரி கௌதம் நான் உன்கிட்ட நேர்ல நெறைய பேசணும். போன்ல ரொம்ப பேச முடியாது, இப்போ போனை வைக்கிறேன். இன்னைக்கு ஆறு மணிக்கு நாம பார்க்கலாம், சரியா” என்று சொல்லி போனை வைத்தான். மீனு அவன் எதிரில் வந்து நின்றாள்.
“என்ன எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. பிடிக்கலைன்னா அப்படியே போக வேண்டியது தானே, நானா உங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன்”
“ஊர்ல இருந்த மத்த பயலுக மாதிரி நீங்களும் பேசாம போயிருக்கலாம்ல, என்னை பிடிக்காம கட்டிக்கிட்டு இப்போ யாருக்கும் கஷ்டம்” என்றாள் கோபமாக
“ஒரு பேச்சுக்கு சொன்னது உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குல, அன்னைக்கு கொஞ்சம் கூட யோசிக்காம என்கிட்டயேஎன்னை பிடிக்கலைன்னு சொன்னியே, அதோட வலி என்னன்னு உனக்கு தெரியுமா”
- காற்று வீசும்