அத்தியாயம் பதினைந்து:
வஜ்ரவேல் சென்றதும், நடராஜன் மனைவியை கடிந்து கொண்டார், “ஏன் தேவி இப்படி ஒரு விருந்து?, நீ இப்படிசெய்வன்னு நான் நினைக்கலை, எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா அவர் வீட்ல, நான் போய் மூக்கு பிடிக்க சாப்பிட்டிட்டு தான வந்தேன்….. அவர் என் வீட்டுக்கு வரும் போது இப்படி ஒரு சாப்பாடு தான் நான் போடுவானா?”,
“அடுத்தவங்களுக்கு ஒரு நல்ல சாப்பாடு கூட போட முடியாத அளவுக்கு நம்ம வக்கில்லாம போயிட்டோமா.. என்ன பண்ணி வெச்சிருக்க நீ”, என்று ஏகத்துக்கும் மனைவியை சத்தம் போட்டார்.
இப்படி சத்தம் போடுவார் என்று தேவி எதிர்பார்க்கவேயில்லை. அதையும் விட அவர் தன் மனைவியிடம் இப்படி என்றுமே சத்தம் போட்டதில்லை, ஏனென்றால் தேவி இப்படி சத்தம் போடும் சந்தர்ப்பத்தை அவருக்கு கொடுத்ததே இல்லை.
இன்று சமைப்பதில் அவர் அசால்டாக இருந்தார் என்பது தான் உண்மை, ஏனோ இன்னும் சிபி ஜெயஸ்ரீயின் திருமணத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க்கவில்லை, “இவர் பெண்ணுக்கு இருக்கும் குறைக்கு, அவளைத் திருமணம் செய்ததே அதிகம்”, போன்ற ஒரு எண்ணம் தான்.
அதனைக் கொண்டே ஒரு தடபுடல் விருந்து தயாரிக்காமல் ஏனோ தானோ வென்று பெயருக்கு ஒரு சமையல்.
ஆனால் அதற்காக நடராஜன் இவ்வளவு கோபப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் வீட்டினர் எல்லோர் முன்னிலையிலும் இப்படி சத்தம் போடவும், இன்னும் அதிகமாக புதிதாக வந்த ஜெயஸ்ரீயின் முன் சத்தம் போடவும், அவருக்கு கண்கள் கலங்கி விட்டது.
தேவி பேச முடியாமல் நின்றார். அவர் செய்தது தவறு தான்.
சிபி அம்மா கலங்கியது பொறுக்காமல், “அப்பா, விடுங்க! சாப்பிட்டுட்டு அவரே போயிட்டார். இப்ப எதுக்கு சத்தம் போடறீங்க”, என்று சமாதானமாக பேசினான்.
“சிபி, என்ன நினைச்சிருப்பார் அவர் நம்மளைப் பத்தி, இன்னும் கல்யாணத்துக்கு ஆனா செலவுல ஒரு பைசா நம்ம குடுக்கலை, ஏன் எவ்வளவு ஆச்சுன்னு கூட இன்னும் நான் கேட்கலை… நேத்து நம்மளை எப்படி கவனிச்சார், இதுல வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு நல்ல சாப்பாடு கூட போட மாட்டோமா…. இது தான் நம்ம வீட்டு மரியாதையா”,
“ஒரு சாம்பார், ஒரு புளிக்குழம்பு, ஒரு பொரியல், இதுதான் நம்மளால செய்ய முடியுமா? அதுவும் புளிக்குழம்பு என்ன போட்டு? பாவக்காய் போட்டு!”,
“எந்த மடையனும் இந்த மாதிரி ஒரு சமையலை முதல் முதலா வீட்டுக்கு வர்ற சம்மந்திக்கு போட மாட்டான். எனக்கு மனசே ஆறமாட்டேங்குது!”, என்று திரும்பவும் கத்த…
தேவியின் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஜெயஸ்ரீக்கு பதட்டம் ஏற ஆரம்பித்தது.
“அப்பா விடுங்க!”, என்று சிபியும் சொல்ல……. ஈஸ்வரரும், “இன்னொரு நாள் கூப்பிட்டு நம்மளும் சிறப்பா செஞ்சிடலாம்! விடுடா!”, என்று சொல்லிக் கொண்டு இருக்க…
“நீங்க வாங்க அத்தை!”, என்று வனிதா அழும் தேவியை சமாதனம் செய்ய உள் அழைத்துப் போக முயன்றாள்.
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, கூடவே, “வந்த முதல் நாளே மாமியாரை அழ வெச்ச பெருமை யாருக்கு வரும், ரொம்ப திறமைசாலி!”, என்று ஜெயஸ்ரீயின் காதில் படும்படி சொல்லிக் கொண்டே போக….
இந்த வார்த்தைகளைக் கேட்ட ஜெயஸ்ரீயின் முகம் கன்றி விட்டது. கண்களில் நீரும் நிறைந்து விட்டது. அதை வெளியே விடாமல் இருக்க பெரு முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஜெயஸ்ரீ.
வனிதா சொல்லியது என்ன என்று சிபிக்கு கேட்கவில்லை, ஆனால் ஏதோ சொல்வதும் உடனே ஜெயஸ்ரீயின் முகம் மாறியதும் பார்த்துக் கொண்டு தானிருந்தான். கூடவே ஜெயஸ்ரீயின் கண்களில் நீரும் நிறைந்ததைய் பார்த்தான்.
முகம் துடைப்பது போல ஜெயஸ்ரீ, அதைத் துடைத்து விட்டதையும் பார்த்தான்.
சிபிக்கு கோபம் சட்டென்று ஏறியது…
“அண்ணி நில்லுங்க”, என்று வனிதா முன் சென்று நின்றான்.
அவன் சொன்ன விதமும், அவன் நின்ற விதமும் வனிதாவிற்கு ஒரு பயத்தைக் கொடுக்க, சுற்றிலும் பார்த்தாள், தன் கணவன் இருக்கிறானா என்பது போல,
அருள் மொழி அங்கு தான் இருக்கவும், சற்று தைரியமாக, “என்ன?”, என்று நின்றாள்.
“என்ன சொன்னிங்க இப்போ?”,
“நான் என்ன சொன்னேன்”,
“என்னவோ சொன்னிங்க! தைரியம் இருந்தா சொன்னதை அப்படியே சொல்லுங்க”, என்றான்.
“என்ன மிரட்டுற! பயந்துக்குவேணா”,
“பயமில்லைல்லா சொல்லுங்க”, என்று அப்படியே நின்றான்.
ஜெயஸ்ரீக்கு, “ஐயோ! இவர் ஏன் இதைப் பெரிது படுத்துகிறார். ஏற்கனவே என்னிடம் இன்னும் யாரும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை! இதில் ஏன் இவர் எப்படி செய்கிறார்”, என்பது போல நினைத்திருக்க,
“இங்க வா!”, என்று ஜெயஸ்ரீயை அதட்டினான். ஜெயஸ்ரீ போவதா வேண்டாமா என்று குழம்பி நிற்க்க,,,
“வான்னு சொன்னேன்!”, என்று ஏறக்குறைய கர்ஜித்தான்.
“டேய்! என்னடா?”, என்று அவன் போட்ட சத்தத்தில் நடராஜனும் அருள் மொழியும் வேகமாக அருகில் வந்தனர்.
“இவங்க ஏதோ சொன்னாங்க, சொன்னாங்க தானே!”, என்று ஜெயஸ்ரீயிடம் கேட்க…
“இல்லை!”, என்பது போல வேகமாக ஜெயஸ்ரீ தலையாட்டிய விதமே வனிதா ஏதோ சொன்னால் என்று அங்கிருந்த அத்தனை பேருக்கும் புரிந்தது.
எல்லோர் முகத்திலும் சலிப்பு, “ஐயோ இப்போது வேறா?”, என்பது போல,
புது பிரச்சனை வேண்டாம் என்பது போல தேவி, “இல்லை, அவ ஒன்னும் சொல்லலை!”, என்று பிரச்னையை முடிக்க வேண்டி சொல்ல…
அம்மாவை ஒரு பார்வை பார்த்த சிபி, திரும்பி ஜெயஸ்ரீயையும் முறைக்க, “விட்டுடுங்க”, என்ற கெஞ்சல் தான் அவளின் பார்வையில் இருந்தது.
“வேண்டாம்! விட்டு விடலாம்!”, என்பது போல அந்த இடத்தை விட்டு நகரப் போனான்.
அருள் மொழி வனிதாவை அதட்டினான், “நீ வாயை வெச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா”, என்று.
சிபி இவ்வளவு தன்னை அதட்டியும் அருள்மொழி அவனைக் கேள்வி கேட்காதது… அதுமட்டுமன்றி எப்போதும் சிபி அவளை அதட்டுவது, எல்லாம் சேர்ந்து கொதிநிலைக்கு கொண்டு போனது வனிதாவை.
தன் கணவனிடம், “என்ன? என்ன சொன்னேன்?, கல்யாணமாகி ரெண்டு நாள் ஆகுதுப் போகுது, அந்தப் பொண்ணு ஒரு பார்வை பார்த்தா உங்க தம்பி பேசாம போறார், நீங்க என்னை நிக்க வெச்சி பேசறீங்க! மாமா, அத்தையை அவ்வளவு திட்டுறார்! இந்த சாகசம் எங்களுக்கு தெரியலை!”, என்று சொல்லவும்,
ஜெயஸ்ரீக்கு அவமானத்தில் முகம் சிறுத்து விட்டது. இந்த மாதிரி பேச்சுக்கள் அவளுக்கு பழக்கமே இல்லை. அந்த இடத்திலேயே நிற்க பிடிக்கவில்லை, எங்கே போவது என்றும் தெரியவில்லை.
சிபிக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை….
“எங்கேர்ந்து இந்த மாதிரி பேச்சு எல்லாம் கத்துக்கிட்டீங்க, இந்த வீட்ல இதுவரைக்கும் இந்த மாதிரி யாரும் பேசினதே இல்லை…. சாகசம்! என்ன வார்த்தை இது! எங்க கத்துக்கிட்டீங்க? உங்க ஓடிப்போன தங்கச்சி கிட்ட இருந்தா..”,
“சிபி”, என்று கத்திவிட்டாள் வனிதா, “எதுக்கு எதைப் பேசற?”,
“அப்படித்தான் பேசுவேன்! இன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்குற பொண்ணை பார்த்து நீங்க என்ன வார்த்தை பேசறீங்க”, என்று சிபியும் பதிலுக்கு கத்தினான்.
“என்ன? உன் பொண்டாட்டி, அவளைப் பத்தி நான் எதுவும் பேசக் கூடாதா?”,
“பேசலாம்! தாராளமா பேசலாம்! ஆனா உரிமைல பேசறது வேற! இப்படி பேசறது வேற!”,
“என்ன அவ ரொம்ப ஒழுங்கோ! உன் கல்யாணம் நின்னதுக்குக் காரணமே அவ தான்!”,
“என்ன உளர்றீங்க? பைத்தியம் பிடிச்சிடுச்சா உங்களுக்கு!”, என்றான்.
ஆனால் இது என்ன புது விஷயம் வனிதா சொன்னது. என்ன என்பது போல அனைவர் பார்வையும் ஜெயஸ்ரீ மேல்….. இன்னுமே ஒடுங்கிப் போனால் ஜெயஸ்ரீ.
“என்ன சொல்லுங்க?”, என்று சிபி கத்த,
“அதெல்லாம் சொல்ல முடியாது!”, என்று வனிதா பின்னடித்தாள். அவள் பேசியது அவளுக்கே சற்று அபத்தமாகத் தோன்றியது. அந்த திருமணத்தில் ஜெயஸ்ரீ என்ன செய்தாள் என்று வனிதாவிற்குத் தெரியும். அதைக் கொண்டு தான் அந்த வார்த்தைகள்.
“என்ன சொல்ல முடியாதா? என்ன திமிர் உங்களுக்கு? ஒரு பொண்ணைப் பார்த்து ஒழுங்கான்னு கேட்டுட்டு, காரணம் கேட்டா சொல்லமாட்டீங்களா!”, என்று அவன் சொன்ன விதத்தில்,
“ஐயோ! இவனை நிறுத்தவே முடியாது!”, என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.
ஜெயஸ்ரீ சுவரில் சாய்ந்து நின்று விட்டாள், “என்ன நடக்குமோ?”, என்று, மனதில் அப்படி ஒரு பயம்.
சிபி மிரட்டலாக அதட்டி பேசுவதால் ஜெயஸ்ரீக்கு அதுவரையிலும் அவனின் குணம் பிடிபடாமல் இருந்தது. அவன் தனக்காக இவ்வளவு பேசுவான் என்று கனவிலும் ஜெயஸ்ரீ நினைக்கவில்லை. இதுவரை சிபி பேசியது பிரச்னையானாலும் அவன் தன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்று புரிந்தே இருந்தது.
அது மனதிற்கு அப்படி ஒரு இதத்தைக் கொடுத்தாலும், கண்ணன் ராதாவின் விஷயம் தெரிந்தால் என்னிடம் எப்படி நடந்து கொள்வாரோ என்று மிகவும் பயந்து விட்டாள்.
அவள் செய்தது எல்லாம் ஒன்றுமில்லை என்று நினைத்தால் ஒன்றுமில்லை. ஆனால்? அவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் சார்பாகச் சாட்சிக் கையெழுத்து போட்டதே ஜெயஸ்ரீ தானே.
ஆனால் சத்தியமாக சிபியுடனான ராதாவின் திருமணம் பற்றி தெரியாது. அதை அவள் செய்ததற்கான காரணம், எவனும் தனக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற ஒரு செயல் தான்.
கண்ணன் யாரை திருமணம் செய்தாலும் தனக்கு ஒன்றுமில்லை, ஏதோ அவளின் தந்தை உதவி செய்து விட்டாரே என்று, அதுவும் அவளுக்கு குறைகள் இருப்பதால் அவளை நிராகரிக்க முடியாமல் திருமணம் செய்து கொள்ள அவன் இருப்பதை அறிந்தவள்…
“எனக்கு நீ தேவையில்லை”, என்று நேரடியாக சொன்னாள் திக்கலின்றி,
“இல்லை! உங்களுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும்”, என்று அவன் சொன்ன போது,
“ஒரு கஷ்டமும் இல்லை! உங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா கேளுங்க!”, என்று வார்த்தை விட
அவன் பெண் சார்பாகச் சாட்சிக் கையெழுத்து போடக் கூப்பிட, அவள் அதைச் செய்தாள்.
ஆனால் சிபி இதை புரிந்து கொள்வானா?
அருள் மொழி பக்கத்தில் வந்து, “டேய், விடுடா! அவ சொன்னது தப்பு தான்! அதுக்காகத் திமிர்ன்னு எல்லாம் ஏன் பேசற?”,
“திமிர் சொன்னா தப்பு! ஆனா இவங்க இவளைப் பார்த்து ஒழுங்கான்னு கேட்கலாமா?”,
மனைவிக்கு பரிந்து, “அது சும்மா பேச்சு வாக்குல பேசறது தான்… அதோட அர்த்தத்தைக் கொண்டு இல்லை”,
“அருள், சும்மா பேசாத பேச்சு வாக்குன்னு…… இன்னும் அவ இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து, அம்மா, அத்தை, அண்ணின்னு யாரும் ஒரு வார்த்தை பேசலை..”,
தன் மகன் இவ்வளவு கவனிப்பான் என்று தேவிக்கு அன்று தான் தெரியும். இவன் இவ்வளவு மரியாதை அந்த பெண்ணிற்கு கொடுப்பான் என்று தெரிந்திருந்தால் வந்தவுடனே அவளிடம் பேசியிருப்பார். அவன் திருமணம் நிச்சயாமனது முதல் இருந்த நடவடிக்கைகளைப் பார்த்து அவனுக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று தான் நினைத்திருந்தார்.
“ப்ச்! என்னடா பிரச்சனை? கணவரிடம் இன்னும் நிறைய திட்டு விழப் போகிறது”, என்பது அந்த பெண்மணிக்கு நிச்சயம் தெரிய, நடராஜனைப் பார்க்க, அவர் தேவியைத் தான் முறைத்துக் கொண்டிருந்தார். அவர் வஜ்ரவேலை கவனிப்பதில் இருந்ததால் இதைக் கவனிக்கவில்லை என்பது ஒரு புறம், இன்னொரு புறம் அவரின் மனைவி இப்படி நடப்பார் என்று அவர் நினைத்ததேயில்லை.
“என்ன செய்திருக்கிறாய் நீ”, என்பது போல தேவியை முறைத்தார்,
அவசரமாக தேவி, “விடுடா! இவளை நான் பார்த்துக்கறேன்”, ஜெயஸ்ரீயை, “நீ வாம்மா”, என்று தேவி அருகில் அழைக்க,
“அதெல்லாம் அப்புறம், நீங்க பார்த்துக்காம யாரு பார்த்துக்குவா! உங்களை நான் விடறதா இல்லை, அவங்கப்பா இருந்தார்ன்னு தான் பேசாம இருந்தேன்!”,
“முதல்ல அண்ணி ஏன் அப்படி சொன்னாங்க அதை சொல்லுங்க”,
எல்லோரும் இப்போது வனிதாவை முறைத்தனர். அதுவும் அருள்மொழி பார்த்த பார்வை…..
“இல்லை, இல்லை, ஒன்னுமில்லை, சாரி தெரியாம உளறிட்டேன்”, என்று வனிதா உடனே இறங்கி வந்தாள்.
“ஐயோ! இது முடிந்துவிட்டால் போதும்!”, என்பது போல ஜெயஸ்ரீயும் வேண்டி நிற்க…
ஆனால் சிபி விடுவதாயில்லை, “சொல்லுங்க”, என்று ஸ்திரமாக நிற்க…
வனிதா வாயைத் திறக்கவில்லை. திரும்பி ஜெயஸ்ரீயை ஒரு பார்வை பார்த்தான், “நீ இதில் ஏதாவது செய்தாயா?”, என்பது போல…
சொல்லிவிடுவதே உத்தமம் என்பது போல ஜெயஸ்ரீக்கு தோன்ற, முயன்று திக்கி பேசினாள்..
“நான், நான்……”, என்று அவள் திக்கும் போதே, எப்போதும் அவளைப் பேசச் சொல்லும் சிபி, எல்லோர் முன்னிலும் அவள் தடுமாறி நிற்பதை காண சகியாமல், “இரு!”, என்பது போல சைகை செய்தவன், பக்கத்தில் இருந்த ஒரு பேப்பர், பென் கொடுக்க,
“நான் சாட்சிக் கையெழுத்துப் போட்டேன், அவங்க கல்யாணத்துக்கு!”, என்று எழுதி அவனிடம் நீட்டினாள்.
இது என்ன என்று அதைப் பார்த்ததும் சிபி குழம்பினான்… உடனே அவளிடம், “நீ சாட்சிக் கையெழுத்துப் போட்டியா!”, என்றான் அவள் எழுதியது எல்லோருக்கும் தெரியட்டும் என்பது போல,
“ஆமாம்”, என்பது போல கலக்கத்தோடு ஜெயஸ்ரீ தலையாட்ட,
வனிதா, “தெரிந்து விட்டதா”, என்பது போல பார்க்க…. “இது என்ன?”, என்பது போல எல்லோரும் மீண்டும் ஜெயஸ்ரீயை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க….
சிபி ஜெயஸ்ரீயிடம், “அப்போ உனக்கு அந்தப் பொண்ணை தெரியுமா?”,
“தெரியாது”, என்பது போல தலையாட்டினாள்.
“என்னைத் தெரியுமா”,
“தெரியாது”, என்பது போல தலையாட்டினாள்.
“எங்க கல்யாணம் அடுத்த நாள் நடக்க இருந்தது தெரியுமா?”,
“தெரியாது”, என்பது போல தலையாட்டினாள்.
இத்தனையைக் கேட்டவன், “எதுக்கு கையெழுத்துப் போட்ட”, என்று கேட்கவில்லை.
சிபி வனிதாவை பார்த்தவன், “இது எப்படி உங்களுக்கு தெரியும்”, என்றான்.
“ஐயோ! என்ன இது?”, என்பது போல வனிதா தடுமாற….
“கண்டிப்பா இவ சொல்லியிருக்க மாட்டா!”, என்று ஜெயஸ்ரீயைக் காட்டியவன், “ஏன்னா நீங்க அவ கிட்ட பேச்சுக் குடுக்கவேயில்லை! அதுமட்டுமில்லாம அவ என்கிட்டயே இன்னும் சரியா பேச ஆரம்பிக்கலை! அப்புறம் உங்ககிட்ட எங்க சொல்லுவா?”,
“ஸோ, நீங்க உங்க தங்கச்சிக் கிட்ட பேசறீங்க! அப்படிதானே! அதுவும் என் பொண்டாட்டிய அவ உங்க கிட்ட குறை சொல்றாளா”, என்று கேட்ட விதத்தில் எங்கே விட்டால் ராதாவை நேரில் போய் பார்த்து திட்டுவான் போல தோன்றியது.
“இல்லையில்லை, அவ குறை சொல்லலை, நடந்ததை சொன்னா! அவ்வளவுதான்!”
“அப்போ நீங்க ஏன் குறை சொல்றீங்க? என்ன சொல்ல வர்றீங்க? உங்க புருஷனை விட்டு யாரோ சொன்னா யாரோடவோ போயிடுவீங்களா?”, என்று வார்த்தையை சாட்டைகளாய் சுழற்றினான்.
“சிபி, என்ன பேச்சு இது”, என்று ஆளுக்கு ஒரு பக்கம் சத்தம் போட்டனர்.
“சரி வேண்டாம், கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா மட்டும் என் அண்ணனை விட்டுப் போயிருப்பாங்களா?”,
“டேய்! என்னடா பேசற?”, என்று அருள்மொழி கோபப்படவும்…..
“கேட்கற நமக்கு இது எவ்வளவு அசிங்கமா இருக்கு! அப்புறம் இவங்க தங்கச்சி போனதுக்கு இவளை ஒழுங்கான்னு கேட்பாங்களா? இவளைக் காரணம் சொல்வாங்களா?”, என்று சிபி கோபப்படவும்,
ஜெயஸ்ரீக்கு தாங்க முடியாத அழுகை, “ஏன்?”, என்று தெரியவேயில்லை. இப்படி ஒரு ஆதரவை சிபியிடம் இருந்து ஜெயஸ்ரீ எதிர்பார்க்கவேயில்லை.
கூட சில வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட மனைவிக்கு குடும்பத்துள் ஒரு பிரச்சனை என்று வரும் போது கூட நிற்க மாட்டர், மாமனாரோ மாமியாரோ இல்லை நாத்தனார் அல்லது அண்ணன் தம்பி மனைவிகள் வாயில் விழுந்து அவள் அரைபடும் போது பார்த்துக் கொண்டு தான் நிற்பார்.
வனிதாவிற்கு தோன்றியது எல்லாம் ஒன்றே தான், “இந்த சிடுமூஞ்சிப் பய கிட்ட இருந்து என் தங்கச்சி தப்பிச்சிட்டான்னு நினைச்சேனே…. இல்லையில்லை….. இவன் கூட வாழ அவளுக்கு தான் குடுத்து வைக்கலை….”,
“இன்னும் என் பொண்டாட்டி என்கிட்டேயே சரியா பேசலை, உன்கிட்ட எப்படி சொல்லியிருப்பான்னு கேள்வி கேட்கிறான். பேசாதப்போவே இப்படி கவனிக்கிறான் இன்னும் பேசினா…”,
“இப்ப என்ன பண்ணனும்ங்ற”, என்று வனிதா இறங்கி வர…
“இந்த மாதிரி ஜாடை பேசறது, மரியாதையில்லாம பேசறது, இதெல்லாம் இருக்கக் கூடாது… நீங்க அவகிட்ட பேசறதும் பேசாததும் உங்க விருப்பம்”, என்றவன்,
அருள் மொழியிடம் திரும்பி, “இன்னும் உன் வீட்டுக்காரம்மா அவங்க தங்கச்சிக்கு அக்காவா தான் இருக்காங்க, என் அண்ணியா இல்லை போல”.
“ஆனா நான் இன்னும் அண்ணியா தான் நினைக்கிறேன், உனக்காக தான் அமைதியா போறேன்”, என்று சொல்லி சிபி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
தேம்பியபடி ஜெயஸ்ரீ தடுமாறி அவன் பின் போனாள்… இப்படி ஒரு சிபியை யாருமே கற்பனை செய்தது கூட இல்லை. அப்போதும் அழாத என்று ஜெயஸ்ரீயை தேற்றவெல்லாம் இல்லை, மெளனமாக அவளின் பொருட்களை எடுத்து அவர்களுக்கு என்று இப்போது புதிதாய் ஒதுக்கப்பட்ட ரூமில் வைத்தான்.
ஜெயஸ்ரீ அவனிடம் கண்ணனின் திருமணத்தில் நடந்தது என்ன என்று சொல்ல முற்பட……. அவள் திணறி பேச முற்படும் போதே,
“அவங்களைப் பத்தி எதுவும் பேசாத, எனக்குத் தலைவலிக்குது, எரிச்சலா வருது, ஆமா என்ன வயசு உனக்கு, நீ போய் ஒரு கல்யாணத்துல சாட்சிக் கையெழுத்துப் போடுவியா… உன்னை போட வெச்சிருக்காங்க… அந்தப் பய மட்டும் என் கண்ல மாட்டட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு”,
“இதுவரைக்கும் எப்படியோ? இனிமே என்னைக் கேட்காம எந்த வேலையும் செய்யக் கூடாது”, என்று அவளை அதட்டியவன் ஒன்றும் பேசாமல் அப்படியே தரையில் படுத்து விட்டான்.
பொதுவாக கீழே அமரமாட்டாள் ஜெயஸ்ரீ, அன்று இருந்த காலின் வலியில் அப்படியே சுவரோடு சரிந்து அமர்ந்து விட்டாள்.
குடும்பத்தாரின் சொற்களில் இருந்து காப்பாற்றி விட்டான், ஆனாலும் இன்னும் அவளைத் தோள் சாய்த்துக் கொள்ளவில்லை.
இருவரும் ஆளுக்கு ஒரு புறம் பார்த்து இருந்தனர். இன்னும் வாழ்க்கை அவர்களுக்கு நிறைய நிறைய சோதனைகள் வைத்திருந்தது.
திருமண பந்தத்தை சிபி மதித்தான்.. மனைவியையும் மதித்தான்.. அதனைக் கொண்டே அத்தனை பேரையும் பேச விடாமல் செய்தான்.
மனைவிக்கு மதிப்பு மிகவும் முக்கியம் தான். அதை விடவும் காதல் முக்கியம் அல்லவா…
சிபி நல்லவனா கெட்டவனா என்ற ஆராய்ச்சி ஒரு முடிவிற்கு வந்தது… சிபி நல்லவன் தான். மனைவியை விட்டுக் கொடுக்காத கணவன் கூட…. ஆனால் காதலனா ?
.