“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”

 

 

 

“நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா” என்றார் அபிராமி.

 

 

“ஹ்ம்ம் சரி கொடுங்கம்மா கொடுத்திட்டு வந்திடறேன்” என்றுவிட்டு காபி தம்ளர் அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள். வந்திருந்தவர்களுக்கு அவர்கள் முகம் பார்க்காமலே “எடுத்துக்கோங்க” என்றாள்.

 

 

“தேங்க்ஸ்…” என்றார்அப்பெண்மணி. அப்போது தான் மனோ அவரின் முகம் பார்த்து லேசாய் ஒரு புன்முறுவல் கொடுத்து நகர்ந்தாள்.

 

 

அபராஜித்தோ சும்மாயில்லாமல் நேராய் அங்கிருந்தவர்களை நோக்கிச் சென்றான்.

 

 

கணவன் மனைவி இருவராக அங்கு அமர்ந்திருக்க அந்த பெரியவரிடம் சென்று நின்றவன் “தா… தா… அப்ப்பா… தாத்தா… அப்பா” என்றவாறே தன் பிஞ்சு கரங்களால் அவர் கன்னத்தை தடவினான்.

 

 

அப்பெரியவருக்கு என்ன தோன்றியதோ சட்டென்று குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டார். அவன் முகத்தை ஆராய்வது போல் பார்த்தார்.

 

 

 

அவரின் கண்கள் எதையோ சொல்ல வருவதும் குழந்தையை தடவி பார்ப்பதுமாக இருந்தது. பின் தன் மனைவியை நோக்கி திரும்பியவர் சைகையில் ஏதோ சொல்ல முற்பட்டார்.

 

 

 

முகுந்தன் அப்போது தான் வாசலில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்தான். முகுந்தனை கண்டதும் அஜிஅப்பெரியவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு“மாமா… மாமா வா…” என்று சொல்லிக்கொண்டே அவனை நோக்கி ஓடினான்.

 

 

“ஹேய் அஜி கண்ணா மாமா தேடி வந்தீங்களா… வாங்க வாங்க உள்ள போகலாம்” என்று சொல்லிக்கொண்டே குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு உள்ளே வந்தான்.

 

 

“மாமா பா பா… டாடா” என்று அவனை பிடித்து உலுக்கினான் குழந்தை. முகுந்தனின் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர் வேறுயாருமல்ல பிரணவின் அன்னையும் தந்தையுமே…

 

____________________

 

 

பழனிக்கு செல்ல வேண்டும் என்று மாலதி முடிவெடுத்ததுமே அவருக்கு முகுந்தன் தான் ஞாபகத்திற்கு வந்தான்.

 

 

மாலதிக்குமுகுந்தன் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் நன்கு தெரியும். அவர்கள் எப்போது பழனிக்கு சென்றாலும் முகுந்தன் தந்தைகோவில் அறங்காவலர்களில் ஒருவராய் இருப்பதால் அவர்களின் மூலமே கடவுள் தரிசனம் செய்வர்.

 

 

கடைசியாய் முகுந்தனிடம் பிரணவ் எங்கிருக்கிறான் என்று விசாரித்து போன் செய்ததுடன் சரி. இன்று தான் அவன் வீட்டின் எண்ணைத் தேடி போன் செய்தார்இரவு ரயிலுக்கு கிளம்புவதாய்.

 

 

சிவமுருகன் தான் போனை எடுத்தார். அவர்களிடம்பேசிவிட்டு வைத்தவர் “முகுந்தா” என்றார்.

 

 

“அப்பா” என்று வந்து நின்றான் அவன்.

 

 

“நாளைக்கு பிரணவோட அம்மா அப்பா வர்றாங்க”

 

 

“என்ன… என்னப்பா சொல்றீங்க??”

 

 

“ஹ்ம்ம் ஆமாம் கோவில்ல ஏதோ வேண்டுதலாம். அதுக்காக தான் வர்றாங்க போல. நாளைக்கு அவங்க கூடமாட இருந்து நீ பார்த்துக்கோ”

“நான்மேல கோவில்ல சொல்லி வைக்கறேன். ஹ்ம்ம்…” என்று யோசித்தவர் “முகுந்தா நாளைக்கு அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா…” என்றவர்“அபிராமி” என்றழைத்தார்.

 

 

“நாளைக்கு அவங்க இங்க வரும் போது நான் மனோ இங்க இருக்க மாதிரி பார்த்துக்கறேன்ங்க” என்றார் அபிராமி கணவரின் எண்ணம் அறிந்தவராய்.

 

 

முகுந்தன் தான் இருவரையும் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அப்பா நினைக்கிறாரு அம்மா அதை அப்படியே சொல்றாங்க. நானெல்லாம் இப்படி இருப்பேனா’ என்று யோசித்துக் கொண்டான்.

 

____________________

 

 

முகுந்தனுக்குபிரணவின் அன்னைவருவதாக சொல்லி போன் செய்தது எல்லாம் நினைவுக்கு வர அதைப்பற்றியும் மனோவை எப்படி அவர்களிடம் பேச வைப்பது என்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்க அபாரஜித் அவனை சிந்தனையை கலைத்தான்.

 

 

“மாமா… பா போலாம்… பா…” என்று அழைக்க பிரணவின் அன்னை குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

வந்திருந்தவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு சென்ற மனோவிற்கு அவர்களை பார்த்தது போல் நினைவு வர உள்ளே திரும்பிப் போக சென்றவள் அப்படியே திரும்பி நின்று அவர்களை பார்த்தாள்.

 

பார்த்தவள் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டாள். வந்திருந்தவர்கள் பிரணவின் பெற்றோர்.குழந்தை வேறு பிரணவின் தந்தையை பார்த்து தாத்தா என்றது இன்னமும் அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

 

 

பிரணவின் அன்னைக்கும் தந்தைக்கும் வேண்டுமானால் அவளை தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவளுக்கு அவர்களை நன்றாக தெரியுமே.

 

 

பிரணவ் எத்தனையோ முறை அவர்களின் புகைப்படத்தைஅவளுக்கு காட்டியிருக்கிறான். ‘ஆனா இவங்க இங்க எப்படி? நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சு வந்திருப்பாங்களோ!!’

 

 

‘முகுந்தன் அண்ணா சொல்லிட்டாங்களோ!! ச்சே ச்சே அப்படி இருக்காது இருந்திருந்தா இந்நேரம் அவங்க என்கிட்ட எதுவும் பேசியிருப்பாங்களே’ என்று அவளே கேள்வியும் கேட்டுக்கொண்டு பதிலும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

 

‘இப்போ நான் என்ன பண்ணணும். அவங்களை தெரிஞ்சது போல காட்டிக்கணுமா!! வேணாமா!! போய் பேசலாமா!!’ என்று யோசித்துக்கொண்டே நின்றிருந்தவளை பிரணவின் அன்னை மாலதியின் குரல் கலைத்தது.

 

வெங்கடேசனின் அருகில் குழந்தை இருக்கும் போதே என்ன துருதுருப்பு இவனுக்கு என்று வியந்தவர் அவனை தூக்கிக் கொள்ள எண்ணும் போதே அவன் முகுந்தனை தேடி ஓடிச் சென்றுவிட்டான்.

 

 

குழந்தையின் துறுதுறுப்பும் அவன் யாரையோ நினைவு படுத்துவது போலிருப்பதாய் தோன்றவும் எழுந்து சென்று முகுந்தனின் தோளில்வாகாய் சாய்ந்திருந்த குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தார்.

 

 

“முகுந்த் யாருப்பா இந்த குட்டிப்பையன்உன்னோட தங்கையும் அவங்க குழந்தையுமா!! ஆனா உனக்கு கூடப்பிறந்தவங்க யாருமில்லை தானே” என்றார் மாலதிமுகுந்தனை நோக்கி கேள்வியாய்.

 

 

அவர் அப்படி கேட்டதும் மனோவிற்கு உள்ளே சுறுசுறுவென்று வந்தது. மருமகளை தெரியாது பேரக் குழந்தையும் தெரியாது யார் பெற்ற பிள்ளையோ என்ற ரீதியில் அவர் முகுந்தனை கேட்டது அவளுக்கு உள்ளே வலித்தது.

 

 

கண்களில் லேசாய் கண்ணீரும் எட்டிப்பார்த்தது.அவர்கள்வீட்டின் வாரிசை யாரோ போல் கேட்டதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

 

 

மாலதியின் கேள்விக்கு முகுந்தன் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் மனோவே ஆரம்பித்தாள். அதுவரையிலும் அவர்களிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே நின்றுக் கொண்டிருந்தவள் “அண்ணா” என்றவள் நான் பார்த்துக்கறேன் என்பதாய் அவனுக்கு ஜாடை காட்டினாள்.

 

 

மாலதி திரும்பி மனோவை பார்த்தாள். முகுந்தனிடம் கேட்டால் இவளென்ன இடையில் என்ற ரீதியில் மனோவை பார்த்தார் அவர்.

 

 

“என்னை முறையா அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது உங்க மகன். எல்லாம் சரியா நடந்திருந்தா இவனை எனக்கு முன்னாடி நீங்க எல்லாரும் பார்த்திட்டுஅப்புறம்தான்நான் பார்த்திருப்பேன்”

 

 

“நான் யாருன்னு நானே சொல்லிக்க வேண்டிய நிலையில இருக்கறதை நினைச்சா சிரிக்கறதா அழறதான்னே தெரியலை எனக்கு” என்றவளின் குரல் லேசாய் உடைந்திருந்தது. கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.

 

 

“இன்னும்தெளிவா சொல்லணும்ன்னா உங்க பிள்ளையோட மனைவி நான், இவன் எங்க பிள்ளை.இதுஉங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான்”

 

 

என்ன சொல்கிறாள் இவள் என்ற ரீதியில் அவள் பேச்சை கேட்டவருக்கு அவள் சொல்லிய விஷயம் புரிந்ததும் மாலதிக்கு ஒன்றும் ஓடவில்லை.

 

 

தான் என்ன உணர்கிறோம் என்றும் அவரால் வரையறுக்க முடியவில்லை. தனக்குள் தோன்றுவது மகிழ்ச்சியா கோபமா என்று அவருக்கே புரியவில்லை.

 

 

அதிர்ந்து போய் சிலையாய் நின்றிருந்தார். மேற்கொண்டு எதையும் பேசத் தோன்றவில்லை அவருக்கு.

 

 

பிரணவின் தந்தை வெங்கடேசனோ அவள் பேச்சு புரிந்ததும் அடுத்து அவர் பார்வை மருமகளின் மீது வீசி பின்னர் அவர் பேரனிடம் சென்று நின்றது.

 

 

அவர் கண்களில் ஒரு அலைபுறுதல் தெரிந்தது. தன்னிடம் குழந்தை வருவானா என்பது போல் அவனையே பார்த்திருந்தார். மாலதியும் இப்போது  அஜியின் மீது பார்வையை வீசினர்.

 

 

தன் பிள்ளையின் சிறுவயதை நினைவுப்படுத்தி அவனையே கொண்டிருந்த பேரனையே பார்த்துக் கொண்டிருந்தார். ஓரிரு நிமிடங்களில் தன்னை சுதாரித்தவர் மனோவைகேள்வியாய் நோக்கினார்.

 

 

முகுந்தனைகுற்றம் சாட்டும் பார்வை பார்த்தார். “மனோ இங்க வந்து ஒரு மாசம் தான் ஆகுது. தனியா இருக்க வேண்டாமேன்னு இங்க வந்து இருக்காங்க” என்று விளக்கம் கொடுத்தான் முகுந்தன்.

 

 

“அப்போ உனக்கும் உன் பிரண்டு பத்தி முதல்லயே தெரியும் அப்படி தானே!!” என்றார் அவர் அவனை பார்த்து.

 

 

“அவர் எங்களை பார்த்து மூணு மாசம் தான் இருக்கும். அதுவரைக்கும் அவர்க்கு எங்களை பத்தி எதுவும் தெரியாது” என்றாள் மனோ முகுந்தனுக்கு பதிலாய்.

 

 

“அவர்கிட்ட கேட்டதுக்கு பதிலா உங்க பிள்ளைக்கிட்டவே நீங்க பேசியிருக்கலாமே!!” என்றாள் அவள் இடையிட்டு.

 

 

முதல் முறையாய் பார்க்கும் ஒருவர், தன்னவனை ஈன்றவர் அவரிடம் தான் தான் அதிகப்படியாய் பேசுகிறோமோ என்று தோன்றியது அவளுக்கு.

 

 

ஆனாலும் அவளால் மனதில் தோன்றியதை பேசாமல் இருக்க முடியவில்லை. பிரணவிடமே அப்படிபட்பட்டென்று கேட்பவள் தானே, அவன் அன்னையை மட்டும் விட்டு வைப்பாளா என்ன!!

 

 

மாலதிமெதுவாய்அவளை திரும்பி பார்த்தார்.இவள் யார் என்னை கேள்வி கேட்பது என்று அவருக்கு தோன்றியது.

 

 

மகனை மருமகளை பேரனை பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியது எல்லாம் உண்மை தான்.ஆனால் இந்த நிமிடம் தன்னையே கேள்வி கேட்கும் இவளிடம் தான் சட்டென்று பணிவதா என்ற எண்ணம் அவருக்கு.

 

 

உடம்பு முடியாத கணவரை பார்த்து பிள்ளைகளை படிக்க வைத்து வேலை பார்த்து என்று ஓயாத உழைப்பை குடும்பத்திற்கு கொடுத்தவர் அவர்.

 

 

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை பார்த்து அதை எதிர்த்து துணிச்சலாய் எதிர் நீச்சல் போட்டு வாழ்கையை ஜெயித்து காட்டியும் இருந்த பெண்மணி.

 

 

தன்னை இச்சிறுபெண் கேள்வி கேட்பதா தன் மகன் கூட தன்னை எதிர்த்து பேசியதில்லை என்ற எண்ணம் தோன்றமனதின் ஓரத்தில் இன்னமும் மருமகளின் மீதிருந்த கோபம் நீர்க்குமிழியை போல்மேலெழும்பியது.

 

 

தன் மகனை தன்னை பிரிந்து இருந்ததிற்கு காரணம் அவளே என்ற எண்ணம் மட்டுமே மனதில் இப்போது நின்றது அவருக்கு.

 

 

அந்த எண்ணத்தில் மனதில் இருந்த வருத்தங்களை எல்லாம் கேள்வியாய் கேட்க ஆரம்பித்தார் அவர்.

 

 

“ஹ்ம்ம் பேசியிருக்கலாம் தான். ஆனா சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டவன்கிட்ட நான் என்ன பேச முடியும். அன்னைக்கு கோவத்துல பேசினேன் தான் இல்லைன்னு சொல்லலைல”

 

 

“அதுக்காக திரும்ப வந்து எல்லாம் உங்களுக்கு பார்க்கணும்ன்னு தோணவேயில்லைல”

 

 

“அப்படி என்ன நான் சொல்லிட்டேன் அவனை. வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணா எந்த பெத்தவங்களுக்கு தான் கஷ்டமா இருக்காது”

 

 

“அதுக்காக ஒரு வார்த்தை கூட கேட்க கூடாதா!! கேட்டா அப்படியே போயிருவானா அவன். அம்மா அப்பா கூடப்பிறந்தவங்க எல்லாரையும் விட நீ தான் முக்கியம்ன்னு வந்திட்டான்”

 

 

“நீயாச்சும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி வைச்சிருக்கலாம்ல. ஒரு குழந்தையும் பிறந்தாச்சு இப்போ வரை எங்களை வந்து பார்க்கணும்ன்னு ஒரு முறை கூட உங்களுக்கு தோணவேயில்லையா!!”

 

 

“பெத்தவங்களுக்கு கேள்வி கேட்க கூட உரிமையில்லையா!! அதெல்லாம் கூட விடு, அவனுக்கு கோபம் என் மேல தானே”

 

 

“இந்த மனுஷன் என்ன பண்ணாரு. உடம்பு சரியில்லாத மனுஷனாச்சே அவருக்காகவாச்சும் வந்து பார்த்திருக்கலாம்ல” என்று மகனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்தும் மொத்தமாய்மருமகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.

 

 

“இவ்வளோ தானா இன்னுமிருக்கா!!” என்றாள் மனோ.

 

 

“என்னம்மா என்னை பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா!! கேள்வி கேட்டா உங்களுக்கு எல்லாம் பிடிக்காது இல்லை. கோபப்பட்டா அவ்வளவு தான் அதோட விட்டுட்டு போய்டுவீங்கள்ள” என்றார் மாலதி குத்தலாய்.

 

 

அவரின் குத்தல் பேச்சு அவளுக்கு புரியாமலில்லை.“நீங்க கேள்வி கேட்டதுல எந்த தப்புமில்லை. பெத்தவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு அவங்க பிள்ளை மேல” என்று சொல்லி நிறுத்தினாள்.

 

 

மாலதி அப்படி வா வழிக்கு என்ற ரீதியில் அவளை ஒரு பார்வை பார்த்தார்.

 

 

“அதே பெத்தவங்களுக்கு பிள்ளையை புரிஞ்சுக்கற உரிமையும் கடமையும் இருக்கு தானே”

 

 

“உங்க பிள்ளைக்கும் எனக்குமான உறவு இந்த மூணு வருஷமா தான். ஆனாஉங்க பிள்ளையை பத்தி இத்தனை வருஷமா வளர்த்த உங்களுக்கு அவரை பத்தி தெரியலையா??”

 

 

“உங்க பேச்சை மீறி கல்யாணம் பண்ணிக்கறவரா அவர். எதனால இப்படி நடந்துது என்னாச்சுன்னு கூட உங்களுக்கு கேட்கவே தோணலையா” என்றாள்.

 

 

“என்னாகணும் அதான் கல்யாணத்தை பார்த்திட்டு வந்து ஒருத்தர் சொல்றாரு. அந்த நிமிஷம் எங்களுக்கு எப்படியிருக்கும்ன்னு உங்களுக்கு ஏன் தோணலை” என்று அவர் திருப்பிக் கேட்டார்.

 

 

“எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு கூட நீங்க அவர்கிட்ட கேட்கலை, ஏன்?? நீங்க உங்க மகன் மேல அவ்வளவு தான் நம்பிக்கை வைச்சு இருந்திருக்கீங்க அப்படி தானே”

 

 

“என்னை விரும்பி தான் உங்க மகன் கல்யாணம் பண்ணிகிட்டார்ன்னு நீங்களும் மத்தவங்க மாதிரி நினைச்சுட்டீங்க இல்ல” என்று அவள் சொன்னதும் அவளை என்ன என்பது போல் பார்த்தார்.

 

 

“ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருந்து என்னை காப்பாத்த தான் உங்க மகன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார் அந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலே போய்டுச்சு”

 

 

“ஏன்னா நீங்க உங்க மகன் பேச வந்ததை காது கொடுத்து கூட கேட்கலையே. யாரோ ஒரு தூரத்து சொந்தம்அவர்உங்க மகனை பத்தி உங்ககிட்ட வந்து சொன்னா போதும் நீங்க நம்பிடுவீங்க இல்லையா அத்தை” என்றாள் அவள் இப்போது குத்தலாக.

 

 

அவள் பேச்சு மாலதிக்குள் லேசாய் கோபத்தை ஏற்படுத்தினாலும் தான் அவரசப்பட்டுவிட்டோமோ என்று அவரை நிதானிக்க செய்து அவள் பேச்சை கவனிக்க செய்தது.

 

 

“வீடு தேடி வந்து உங்ககிட்ட விளக்கம் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்த மனுஷனை எதுவும் பேச விடாம திட்டி அனுப்பிவிட்டுட்டீங்களே அத்தை!!” என்று சொல்லும் போது மீண்டும் குரல் உடைய ஆரம்பித்தது அவளுக்கு.

 

 

“உங்களுக்கு உங்க பிள்ளையை பத்தி தெரிஞ்சிருக்க வேணாமா!! அவர் இப்படி எல்லாம் செய்யக் கூடியவரான்னு நீங்க கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாமே அத்தை”

 

 

“எது உங்களை தடுத்துச்சு. உங்களுக்குஅந்தளவுக்குகோபம் கண்ணை மறைச்சிருக்கு”

 

 

“உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போய்டுச்சு அப்படி தானே” என்ற மனோ அறியவில்லை தான் தன்னையுமறியாமல் தன் கணவனுக்காய் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று.

 

 

“மாமாக்கு உடம்பு சரியில்லைன்னு அவர் சொல்லியிருக்கார். அவரை வந்து பார்க்க முடியலைன்னு எவ்வளவோ வருத்தப்பட்டிருக்கார்ன்னு எனக்கு நல்லா தெரியும்”

 

 

“உங்களை எல்லாம் நினைச்சு அவர் எவ்வளவு நாள் பீல் பண்ணியிருப்பார்ன்னு தெரியுமா உங்களுக்கு. எனக்கு அம்மா அப்பா இல்லாம போய்ட்டாங்க”

 

 

“நீங்க எல்லாரும் இருக்கீங்கன்னு நினைக்கும் போது யாருமே எங்களை புரிஞ்சுக்காம போயிட்டீங்களே.அவர்க்கு நீங்க எல்லாரும் இருந்தும் இல்லைங்கற மாதிரி ஆகிடுச்சு. வீட்டு பெரியவங்க இல்லாம ரெண்டு பேரும் உனக்கு நான் எனக்கு நீன்னு ஒத்தையா எவ்வளவு நாள் இருந்திருப்போம்”

 

 

“இவன் பிறக்கும் போது அவர் இந்தியாக்கு வரணும்ன்னு ஆசைப்பட்டார். ஏன் தெரியுமா!! உங்களை எல்லாம் திரும்பவும் பார்க்க மாட்டோமான்னு தான்”

 

 

“நீங்க அப்போ ஊர்ல இல்லைன்னு என்கிட்ட சொன்னார். குழந்தையை ஆஸ்பிட்டல்ல முதல்ல அவர் தான் வாங்கினார்”

 

 

“என் குழந்தையை எங்கம்மா தான் வாங்கணும்ன்னு ஆசைப்பட்டேன் அது நடக்கலைன்னு அன்னைக்கு அவர் வருத்தப்பட்டது உங்களுக்கு புரிஞ்சிருக்கவும் தெரிஞ்சிருக்கவும் வாய்ப்பில்லை”

“அவரோட வருத்தத்தை அவர் அதிகம் வெளிய காட்டிக்கிட்டதேயில்லை. நான் ரொம்ப வருத்தப்படுவேன்னு என்கிட்டயும் அதிகம் சொல்ல மாட்டார்”

 

 

“அவரையும் மீறி எப்போவாது அவர் சொல்றதே எனக்கு கஷ்டமாயிருக்கும். என்னால தானே அவர்க்கு இந்த நிலைமைன்னு நான் பலமுறை அழுதிருக்கேன்”

 

 

“நீங்க கேட்டதே நான் திருப்பி கேட்கறேன் தப்பா எடுத்துக்காதீங்க. இத்தனை நாள்ல உங்களுக்கு ஒரு முறை கூட உங்க மகனை பார்க்கணும்ன்னு தோணலையா!!” என்று கேட்டதும் அவரும் உடனே பதில் சொன்னார்.

 

 

முன்பு போல இப்போது அவருக்கு கோபம் வரவில்லை. மனோவின் பேச்சில் மனம் லேசாய் இளக ஆரம்பித்திருந்தது அவருக்கு.

 

 

அதை சட்டென்று வெளிக்காட்டிக்கொள்ள தான் மனமில்லை அவருக்கு. உடனே இறங்கி போவதை அவர் எப்போதும் செய்ததே கிடையாது.

 

 

ஆனாலும் அவர் பேச்சில் அந்த இளகல் நன்றாகவே வெளிப்பட்டது.“ஏன் தோணாம, அதெல்லாம் பல முறை தோணியிருக்கு. அவனை பத்தி நான் விசாரிக்காம எல்லாம் இல்லை”

 

“அவன் இப்போ என்ன வேலை பார்க்கறாங்கறது வரை எனக்கு தெரியும்.உன்னை பத்தியும் குழந்தை பத்தியும் தான் அதிகம் என்னால தெரிஞ்சுக்க முடியலை”

 

 

“ஒரு வேளை நான் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு அவன் நினைச்சிருக்கலாம். என்னை மாதிரி வீம்பு பிடிச்சவன் அவன். எனக்கிருக்கறதுல பாதியாச்சும் அவனுக்கும் இருக்கும்ல” என்று அவர் சொன்னதும் மனோவுக்கு சுர்ரென்றிருந்தது.

 

 

“சோநீங்க எங்களை உளவு பார்த்திருக்கீங்க. அதுக்கு என்ன அவசியம் வந்திச்சுன்னு நீங்க நினைக்கறீங்க. ஒரு வார்த்தை உங்க பிள்ளைக்கிட்ட நீங்களா பேசியிருந்தா கூட சட்டுன்னு தீர்ந்திருக்க கூடிய பிரச்சனை”

 

 

“உங்களுக்கு கோபமிருந்தா அது என் மேல தானே இருந்திருக்கணும். நான் வெளிய இருந்து வந்தவ யாரோ எவரோ எப்படியிருப்பேனோன்னு உங்களுக்கு தோணியிருக்கலாம்”

 

 

“நீங்களா ஒரு பெண்ணை பார்த்து கட்டி வைச்சிருந்தாலும் அப்படி தானே இருந்திருக்கும்.அந்த பொண்ணு கல்யாணம் ஆகி வந்த பிறகு தானே அவளோட குணநலன் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்”

 

 

“அப்படி யாரோ ஒரு பொண்ணை நான் என் மகனுக்கு கட்டி வைக்க அப்போ நினைச்சிருக்கலை. என்னோடஅண்ணன் பொண்ணு இந்துவை தான் அவனுக்கு கட்டி வைக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்”

 

 

மனோவிற்கு இந்த செய்தி புதிது. பிரணவிற்கு இந்துவுடன் திருமணம் பேசியிருக்கிறார்கள். ஆனால் இவர் ஏன் என்னிடம் இதை சொல்லவில்லை என்று மனம் அடித்துக் கொண்டது.

 

 

மாலதியிடம் இன்னமும் பேசி முடிக்கவில்லை என்பது நினைவிற்கு வர இந்து பற்றிய எண்ணத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தாள்.

 

 

“என்னை நீங்க ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம். ஆனாப்ளீஸ் அத்தை உங்க மகனை நீங்கபுரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க” என்றாள் சற்றே இறங்கிய குரலில்.

 

 

மனோ அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் பிரணவ் பற்றிய தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

 

 

ஆனாலும் அவ்வப்போது அவளின் குணம் தலைத்தூக்கும் போது மனம் மீண்டும் கோப முகம் பூசிக் கொள்ள தவறியதில்லை.

 

 

ஏனோ இன்று பிரணவின் அன்னையை பார்த்ததும் மனம் பிரணவை பற்றிய நினைவுகளை தத்தெடுத்தது.அவனுக்காய் தான் பேசுகிறோம் என்றறியாமலே பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

அவன் குடும்பத்தினருக்காய் அவன் ஏங்கிய பொழுதுகளை அவளறிவாள். எல்லாம் கண்முன் நிழலாட மனதில் இருந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் அவரிடம் கேட்டுவிட்டாள்.

 

 

ஒரு நிமிடம் தான் அதிகமாய் பேசிவிட்டோமே என்று தோன்றினாலும் தான் கேட்ட கேள்வியில் எந்த தப்பும் இல்லை என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

“நான் அதிகமா பேசியிருந்தா மன்னிச்சிருங்க. சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன். அவரை யாருமே சரியா புரிஞ்சுக்கலை” என்றவள் தன்னையும் உணர்ந்து தான் சொன்னாளோ அவளே அறியாள்.

 

 

அப்போதே அவள் மனம் அவனின் பால் சரிய ஆரம்பித்ததை அவள் உணரவில்லை. பிரணவின் அன்னையும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் அவளை பார்த்தார்.

 

 

அவரால் உடனே அவளுக்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. தன்னிலையில் இருந்து சட்டென்று இறங்கி போக அவரால் முடியவில்லை.

 

 

திரும்பி தன் கணவரை பார்க்க அவர் மெதுவாய் எழுந்து வந்தார். “போயிட்டு வர்றோம்” என்று சொல்லிவிட்டு அவர் வேகமாய் வாசலுக்கு சென்றுவிட வெங்கடேசனோ பேரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

குழந்தையை நோக்கி அவர் கையை நீட்ட அவனும் அவரிடம் தவ்வினான்.

 

 

அவனை அணைத்து உச்சி முகர்ந்தவர் மருமகளை நோக்கி கனிவான ஒரு பார்வை செலுத்திவிட்டு முகுந்தனிடம் விடைபெறும் விதமாய் தலையசைத்து வெளியில் சென்றுவிட்டார்.

 

 

அறைக்கு வந்த பின்னும் மாலதியின் காதுகளில் மனோபாரதி கேட்ட கேள்விகளே வரிசைக்கட்டி நின்றது.

 

 

தான் எங்கு தவறு செய்தோம் என்ற எண்ணமும் குற்றவுணர்வும் அவரை மெதுவாய் தின்றது. ஏதேதோ எண்ணங்கள் குழப்பமாய்வந்து போனது.

 

 

வெங்கடேசன் மாலதியிடம் எதுவும் பேசவில்லை. அவர் எதையாவது சொல்லுவார் சைகை செய்வார் என்று எண்ணியிருந்த மாலதியிடம் அவர் ஒன்றுமே சொல்லாதது மாலதிக்கு எதுவோ செய்தது.

 

 

தான் எந்த பதிலும் சொல்லாமல் முகத்தில் அடித்தது போல் கிளம்பி வந்திருக்கக் கூடாது என்று புரிந்தது அவருக்கு.

 

 

இரவு முழுவதும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னே தான் அவரால் நிம்மதியாக உறங்கவே முடிந்தது. மறுநாள் காலை முதல் வேலையாக முகுந்தனின் வீட்டிற்கு சென்று நின்றிருந்தார்.

 

 

வீட்டு பெரியவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றதிற்காய் மன்னிப்பு கோரியவர் மனோவை பார்க்க வேண்டும் என்று கூற முகுந்தன் மனோவின் வீட்டிற்கு அழைத்து சென்றான் அந்த காலை வேளையில்.

 

 

இவ்வளவு காலையில் யார் அழைப்பு மணி அழுத்துவது என்ற யோசனையுடன் அப்போது தான் குளித்து முடித்து வந்திருந்த மனோ கதவை திறந்தாள்.

 

 

முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை வந்திருந்தவர்களை பார்த்து. வாய் தானாக “உள்ள வாங்க மாமா, வாங்க அத்தை” என்று அழைப்பு விடுத்தது.

 

 

உள்ளே வந்தவர் “நீ… உன் பேரு மனோபாரதி தானேம்மா??” என்று மட்டும் கேட்டார்.

 

 

மனோவும் ஆம் என்பதாய் தலையசைத்தாள். “உங்க அம்மா அப்பா ஆக்சிடென்ட்ல…” என்று முடிக்காமல் விட்டார்.

 

 

பெற்றவர்களின் நினைவில் உடனேகண்கள் கலங்கிவிட “ஹ்ம்ம்” என்றாள்.“நேத்து நான் எதுவும் சொல்லாம கொள்ளாம போயிட்டேன்னு நினைச்சு வருத்தப்பட்டியா”

 

 

“சில விஷயங்களை சட்டுன்னு என்னால ஏத்துக்க முடியலை. நீ சொன்னதும் புரிய ஆரம்பிச்சாலும் உனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. அதனால தான் எதுவும் சொல்லாம கிளம்பிட்டேன்”

 

 

“நானும் அதிகமா பேசிட்டேன், முதல் முறையா பார்க்கற உங்ககிட்ட மரியாதை இல்லாம எதிர்த்து கேள்வி கேட்டுட்டேனோன்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மன்னிச்சிருங்க அத்தை என் மேல எந்த கோபமும் வேணாம் ப்ளீஸ்” என்றாள் மனோவும்.

 

 

“எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை. ஒரே பையன் அவன் கல்யாணம் எங்க முன்னாடி நடக்கலைன்னு வருத்தம்”

 

 

“அவன் விரும்பின விஷயத்தை முன்னாடியே எங்ககிட்ட சொல்லியிருந்தா கல்யாணம் பண்ணி வைச்சிருக்கலாமேன்னு ஒரு ஆதங்கம்”

 

“நாங்க முன்னாடியே எல்லாம் விரும்பலை. அது என்னோட சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு” என்று மாலதியின் பேச்சின் இடையே சொன்னாள் மனோ.

 

 

“ஹ்ம்ம் இப்போ புரியுது அன்னைக்கு எங்க சூழ்நிலையை சொன்னேன். அப்போ அப்படி தான் எங்களுக்கு தோணிச்சு”

 

 

“அன்னைக்கு அந்த கோபம் தான் அவனை பேச வைச்சது. நீ தான் அவனை பிரிச்சுட்டன்னும் நான் நினைக்க ஆரம்பிச்சிருந்தேன்”

 

 

“அவனை மட்டுமில்ல உன்னையும் பார்க்கணும்ன்னு தான் இப்போ தேடினேன். சென்னைக்கு உங்களை பார்க்க வீட்டுக்கு போயிருந்தேன்”

 

 

“நீங்க வீடு காலி பண்ணிட்டதா சொன்னாங்க. இங்க உங்களை பார்ப்பேன்னு நான்நினைக்கவே இல்லை”

 

 

“எதிர்பாரா சந்திப்பு தான் நீயே உன் வாயால எங்க மருமகள்ன்னு சொல்ல வேண்டிய சூழ்நிலை அமைஞ்சிருக்க வேண்டாம் தான்”

 

 

அவர் பேச ஆரம்பித்ததும் மனோவிற்கு மீண்டும் குற்றவுணர்ச்சி எழ “இல்லைநான்… ரொம்ப பேசிட்டேன் நீங்க… மன்னிச்சிருங்க” என்றாள் மனோ.

 

“மன்னிப்பு எல்லாம் வேண்டாம்மா… பிரணவ் கல்யாணம் பண்ணிகிட்டது உன்னை தான்னு எனக்கு இப்போ தான் தெரியுது”

 

 

‘இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம், என்னை இவருக்கு ஏற்கனவே தெரியுமா… எப்படி தெரியும் அவர்என்னை பத்தியா பேசியிருப்பாரோ!! ஆனா எப்போ!!’ என்று அவசரமாய் அவள் எண்ணம் சென்றது.

 

 

அவரிடம் அதை எப்படி கேட்பது என்று யோசித்து அப்படியே நின்றிருந்தாள். “உன் மேல எனக்கு இப்போ எந்த கோவமும் இல்லைம்மா”

 

 

“நீ பேச ஆரம்பிச்சதும் எனக்கும் என் மனசுல இருக்கறதை கேட்கணும்ன்னு தோணிச்சு, கேட்டுட்டேன். நான் பேசின எதையும் நீயும் மனசில வைச்சுக்காத”

 

 

“பிரணவ்கிட்ட நான் பேசியிருக்கலாம், அவன் சொன்னதை கேட்டிருக்கலாம். ஹ்ம்ம்…” என்று யோசித்தவர் “ஹ்ம்ம்சரிஅந்த கதை எல்லாம் இப்போ எதுக்கு”

 

 

“குட்டி பையன் எங்க?? தூங்கறானா” என்று அவர் கேட்ட மனோ ஆம் என்பதாய் தலையசைத்தாள். எழுந்து உள்ளேசென்றவர் உறங்கும் குழந்தையின் அழகை ரசித்தார். கண்களில் லேசாய் ஈரம் கசிய ஆரம்பித்திருந்தது.

 

முகுந்தன்முதல் நாளிலிருந்தே அவர்களை பே என்று தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

‘இந்த மனோ பொண்ணு பார்க்க தான்சைலென்ட்டா இருக்குது என்ன வாங்கு வாங்குது!! டேய் பிரணவ் எப்படிடா நீ சமாளிக்கற’

 

 

‘சைலென்ட்டா இருக்கற மனோவே இவ்வளவு பேசினா நம்மாளு படபட பட்டாசாச்சே எனக்கு தினம் தினம் தீபாவளி தன போல’ என்று எண்ணிக்கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன்.

 

 

பிரணவின் அன்னையும் தந்தையும் அபாரஜித்தை தூக்கியவர்கள் கீழே விடவேயில்லை. அன்று இரவு அவர்கள் ஊருக்கு திரும்பி செல்ல பதிந்திருந்தார்கள்.

 

 

மறுநாள் சசியை பார்க்க அவள் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்பதால் அவர்கள் அன்று புறப்பட்டே ஆக வேண்டும்.

 

 

இருவருக்கும் மனமேயில்லை அங்கிருந்து கிளம்ப. “ஏம்மா மனோ நீயும் குட்டிப்பையனும் தனியா தானே இங்க இருக்கீங்க”

 

 

“எங்களோடவே வந்திடுங்களேன்” என்று அழைக்க மனோ திட்டவட்டமாய் மறுத்தாள் வரமுடியாது என்று.

 

“ஏம்மா அப்போ உனக்கு இன்னும் எங்க மேல எல்லாம் கோபம் இருக்கு தானே” என்றார் மாலதி.

 

 

“இல்லைஅப்படி எல்லாம் இல்லை. நாங்க அவர் வரும் போது வர்றோம். அவர் இல்லாம நாங்க வர்றது சரியாப்படலை. புரிஞ்சுக்கோங்க அத்தை ப்ளீஸ்…” என்றாள் மனோ.

 

 

மாலதியும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. அவர்கள் அன்று இரவு கிளம்பி ஊருக்கு சென்றுவிட்டனர்.இரண்டு தினங்களுக்கு ஒரு முறை அவளுக்கு தவறாமல் போன் செய்து பேசிவிடுவார் மாலதி.

 

 

அவர்ஊருக்கு செல்லும் முன் சொன்ன விஷயம் ஒன்று இன்னமும் அவளுக்கு உறுத்தலாய் இருந்தது. அதன் அர்த்தம் என்ன என்று இன்னமும் விளங்கவில்லை அவளுக்கு.

 

 

அவர் சொன்னது இது தான் “பிரணவ் எதையும் பிடிக்காம பண்ண மாட்டான். அவனுக்கு பிடிக்காம எதையும் செய்ய வைக்க முடியாது. ஒரு விஷயம் செஞ்சா அதை முழுமனசோடவும் பிடிச்சும் தான் செய்வான்” என்றார் அவர்.

 

 

இதற்கு என்ன அர்த்தம் என்று தான் அவளுக்கு இன்னும் பிடிப்படவில்லை.