அத்தியாயம் – 15
அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.
அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும் அவனால் சபரீஷிடம் சென்று அவள் பேசியதை மட்டும் மறக்க முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை.
‘நான் அவள் கணவன் என்னிடம் என்ன பேச வேண்டுமானாலும் அவளுக்கு உரிமை இருக்கிறது. என் தம்பியிடம் போய் எப்படி பேசலாம் அதுவும் நான் முடியாது என்று சொன்னபிறகு’ என்ற ஆதங்கம் இன்னமும் அவனுக்குள் கனன்றது.
அந்த கோபத்தை மேலும் அதிகப்படுத்துவதற்கு தோதாய் மற்றொரு சம்பவம் மறுநாளே நடந்தது. அன்று மருத்துவமனையில் இருந்து சீக்கிரமே அவன் வந்திருக்க ஆராதனா சுனீஷுடன் அந்த விளம்பரம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டான். அது வேறு அவன் கோபத்தை மேலும் மேலும் அதிகரித்தது.
அனீஷிடம் உள்ள ஒரே கெட்ட விஷயம் பிடிவாதம். இதுவரை அவன் எதற்கும் பிடிவாதம் பிடித்ததில்லை, இது இப்படித்தான் என்று எண்ணிவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடியவனே, அவன் அதிகம் யாரிடமும் பழகியிராததால் அவனின் பிடிவாத குணம் யாருமறியாதது சபரீஷை தவிர.
சென்னைக்கு சென்று படிக்க வேண்டும் என்பதும் வெளிநாட்டிற்கு சென்று மேற்ப்படிப்பை தொடர வேண்டும் என்பதும் கூட அவன் பிடிவாதத்தினால் தான். சபரீஷும் அவனுக்கு தோதாய் இருக்க அவர்கள் நினைத்தது நடந்தது.
அனீஷ் ஒருபுறம் வீம்பாய் இருக்க ஆராதனா ஒரு பக்கம் வீம்பாய் இருந்தாள். தொலைக்காட்சியில் அவர்களின் விளம்பரத்தை எப்போதாவது அவள் பார்த்துவிட்டால் போதும் அவளால் அவள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.
அனீஷிற்காக இறங்கி வரவேண்டும் என்று நினைத்தாலும் அந்த விளம்பரம் கண்ணில்படும் போதெல்லாம் அவள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாது, மாற்றிக் கொள்ளக் கூடாது என்ற உறுதி அவளுக்கு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஆராதனாவிற்கு அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது. உறக்கம் கலைந்து மெதுவாய் எழுந்தவள் அருகில் படுத்திருந்தவனையே உற்று நோக்கினாள். ‘இவர் ஏன் என்னை புரிஞ்சுக்காம பிடிவாதம் பிடிக்கிறார்’ என்று மனதிற்குள் நினைத்தவளின் வலக்கரம் அவனை தலை முடியை கோதியது.
அவள் கை விரல் சற்றே கீழே இறங்கி அவன் கன்னத்தை தொடலாமா?? வேண்டாமா?? என்று யோசிக்க எப்போதும் போல் இப்போதும் அவன் கன்னக் குழியை தொடாமலேயே சென்றது.
ஒரு பெருமூச்சுடன் கதவை திறந்து அவள் வெளியில் செல்லவும் அவள் தொடுகையில் விழித்துவிட்ட அனீஷ் அவள் இன்றாவது தொடுவாளா?? என்று எண்ணியிருக்க அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
‘இவ மட்டும் நம்மோட வேலை விஷயத்துல தலையிடாம இருந்தா எந்த பிரச்சனையுமில்லையே எங்களுக்குள்ள, என்னைக்கு தான் என்னை புரிஞ்சுக்க போறாளோ??’ என்ற கேள்வியுடனே அவனும் எழுந்து மருத்துவமனைக்கு செல்லத் தயாரானான்.
சாப்பிடும் போது முன்தினம் போலவே அவன் அன்னையையே அழைத்து பரிமாறச் சொன்னவன் அவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.
மருத்துவமனைக்கு வந்து அவன் அறையில் சென்று அமர்ந்தவன் தான் ஏதேதோ யோசனைகள் எண்ணக்குமிழியிட்டது அவனுக்குள். ஆராதனாவின் மேல் அவனுக்கு இருப்பது கோபமா என்றே அவனுக்கு புரியவில்லை.
காலையில் அவன் தலைமுடி கோதியவளிடம் கோபத்தை காட்ட அவனால் முடியவில்லை. ஆனாலும் முன்தின நினைவுகளை வலுக்கட்டாயமாக நினைவிற்கு கொண்டு வந்து அவளிடம் பேசாமலிருந்து அவனை புரிய வைக்க முயன்றான்.
விடாகண்டனுக்கும் கொடாகண்டியாயிற்றே அவள். அவளைப்பற்றி முழுதாக அறியாமல் விட்டுவிட்டான் அவன். ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் யாரையும் எளிதில் கணித்துவிடும் அவனுக்கு ஆராதனா விஷயம் அடிகொடுக்கும் என்பதை அறியாமல் போனான்.
பேசலாமா?? வேண்டாமா?? என்று ஆவலும் அவள் மேல் கொண்ட பிரியமும் ஒருபுறம் அணிவகுத்து நிற்க மறுபுறம் அவன் எந்த தவறுமிழைக்கவில்லை என்று ஒரு மனம் சொல்ல தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
நல்லவேளையாக அன்று அவன் பார்க்க வேண்டிய நோயாளிகளை எல்லாம் மதியத்திற்கு மேல் வரச்சொல்லி இருந்ததால் யாரும் அவனை தொந்திரவு செய்யவில்லை.
நோயாளிகளை பார்வையிட செல்லாமல் இருந்தது மட்டும் உறுத்தலாக இருக்க வேறு ஒரு டாக்டருக்கு அழைத்து வழக்கமான பணிகளை செய்யச் சொன்னான். கிட்டத்தட்ட மதிய உணவு வேளை நெருங்கியிருந்த சமயம் அவன் அறைக்கதவு மெலிதாய் தட்டப்பட்டது.
“எஸ் கமின்” என்ற அவன் குரல் கேட்டு உள்ள நுழைந்த டாக்டர் பிரகாஷ் பதட்டமாயிருந்தான். “டாக்டர்” என்று ஒருவித டென்ஷனோடே அழைக்க “என்ன பிரகாஷ் எனிதிங் அர்ஜென்ட்??” என்றான்.
அவனோ பதில் கூறாமல் வியர்த்து போய் நின்றிருந்தான். “பிரகாஷ் என்னன்னு சொல்லு?? இப்படி பேசாம இருந்தா என்னன்னு நினைக்கிறது??” என்றான் அனீஷ்.
“சாரி அனீஷ் ஒரு தப்பு நடந்திடுச்சு. சாரி எல்லாம் என்னால தான்” என்றான் எதிரில் நின்றவன்.
“பிரகாஷ் நீ இன்னும் என்ன விஷயம்ன்னே சொல்லவே இல்லை??” என்றான் பொறுமையிழந்தவனாக.
“அந்த 205 ரூம்ல இருக்கற பேஷன்ட்க்கு செடேடிவ் டோஸ் கொஞ்சம் அதிகமா கொடுத்திட்டேன் அனீஷ்”
“என்ன பிரகாஷ் சொல்ற?? நீ அப்படி செய்யறவனில்லையே என்னாச்சு உனக்கு??”
“ரியலி வெரி சாரி அனீஷ், வீட்டில வைப் கூட ஒரு சின்ன பிரச்சனை அதே குழப்பத்தில இருந்ததுல இப்படி பண்ணிட்டேன். தப்பு தான் அனீஷ் என்னை மன்னிச்சுடு, எனக்கு இப்போ என்ன பண்ணறதுன்னே தெரியலை” என்று கையை பிசைத்தான் அவன்.
எவ்வளவு டோஸ்?? எப்போது கொடுத்தான்?? என்ற விபரத்தை கேட்டறிந்தவன் அவனை நிதானமாய் இருக்கச் சொன்னான். “என்ன பிரகாஷ் இது?? நாமெல்லாம் டாக்டர்ஸ் இப்படியா அஜாக்கிரதையா இருக்கறது”
“கணக்குல சின்ன தப்பு பண்ணா சரி பண்ணிடலாம். நம்ம தொழில் அப்படியில்லை. ஒரு சின்ன தப்பும் ஒரு உயிரையே வாங்கிடும், இனி நீ கொஞ்சம் கவனமா வேலை செய் பிரகாஷ். சரி நீ இப்போ கிளம்பு நான் இங்க பார்த்துக்கறேன்”
“உனக்கு இப்போ தேவை மனநிம்மதி, உன்னை முதல்ல சரி பண்ணிட்டு வா… இன்னொன்னும் புரிஞ்சுக்கோ, உன்னோட வீட்டு பிரச்சனை எல்லாமே ஆஸ்பிட்டல் வாசல்ல விட்டுட்டு வந்துடு”
“அதே போல ஆஸ்பிட்டல் பிரச்சனை எல்லாத்தையும் வீட்டு வாசல்ல கழட்டி வைக்கற செருப்பு போல அங்கேயே விட்டுட்டு வீட்டுக்குஉள்ள போ. தேவையில்லாம ரெண்டையும் குழப்பி நிம்மதி இல்லாம இருக்காத. இப்போ நீ கிளம்பு”
பிரகாஷோ தயங்கி நிற்க “என்ன??” என்றான் அனீஷ்.
“பேஷன்ட்டோட ரிலேஷன்ஸ் எல்லாம் அவர் இன்னைக்கு சாயங்காலம் கண் முழிச்சுடுவாருன்னு நினைச்சுட்டு இருப்பாங்க. நானும் காலையில அப்படி தான் சொன்னேன். அது வேற எதுவும் பிரச்சனையாகிடுமோன்னு??” என்று இழுத்தான் அவன்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காம நிம்மதியா வீடு போய் சேர்” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு அவன் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.
அனீஷுக்கு தற்போது நடந்த சம்பவம் தனக்கு படிப்பினையோ என்றே தோன்றியது. ஏனென்றால் அவனும் இது போல குழப்பத்தில் தானே இருந்தான், இருக்கிறான்.
நேற்றிலிருந்து அவன் எந்த பேஷன்ட்டையுமே பார்க்கவேயில்லையே, அது வேறு குற்றவுணர்ச்சியாக இருந்தது. இனி வீட்டு விஷயத்தை இங்கு நினைக்கக் கூடாது என்று பிரகாஷிற்கு சொன்னதை தனக்கானதாய் எடுத்துக் கொண்டு அந்த பேஷன்ட்டை பார்க்கச் சென்றான்.
ஜெனரல் விசிட் போல அந்த ப்ளோரில் இருந்த ஒரு ஒரு அறைக்குள்ளும் சென்றவன் நோயாளியை பார்த்து கொண்டிருந்தான். பிரகாஷ் சொன்ன அறை வந்ததும் அவனுக்கு பதட்டமாய் இருந்தது.
இது போல எந்த தவறும் அவன் மருத்துவமனையில் இதுவரை நடந்ததேயில்லை. பிரகாஷ் இப்படி செய்பவனல்ல என்பதால் தான் அவனை மன்னித்து அவன் வீட்டிற்கே அனுப்பி வைத்தான் அவன்.
இருந்தாலும் மனதின் ஓரம் குற்றவுணர்வு வந்து தாக்கியது. சாதாரணம் போல் அந்த நோயாளியின் விபரத்தை எடுத்து படித்துவிட்டு அவனை செக்கப் செய்தான்.
டியூட்டி நர்ஸை அழைத்து ஏதோ பேசியவன் அவன் உறவினர்களிடம் அவன் காலையில் தான் கண் விழிப்பான் என்று சொல்ல அவர்களோ காலையில் வந்து பார்த்த டாக்டர் மாலை கண்விழித்துவிடுவார் என்று சொன்னாரே என்று கேள்வி எழுப்பினர்.
“நீங்க சொல்றது சரி தான், ஆனா பேஷன்ட்க்கு வலி அதிகம் தெரியக்கூடாதுன்னு அவரை தூக்கத்துல தான் வைச்சிருக்கோம். அவருக்கு முழிப்பு வந்திட்டா வலி அதிகம் தெரியும். நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம்”
“நான் இங்க தான் இருக்கேன், நான் இவரை அப்பப்போ வந்து பார்த்திட்டே தான் இருப்பேன்” என்று அவர்களுக்கு பதில் உரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அனீஷ் சொன்னது போல் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றான். அவன் வீட்டிற்கு கூட செல்லவில்லை. பன்னிரண்டு மணிக்கு மேல் நினைவு வர இந்நேரம் எல்லோரும் உறங்கியிருப்பார்கள் என்று எண்ணியவன் யாருக்கும் சொல்லாமே விடுத்தான்.
ஆராதனாவிற்கு சொல்லிவிடலாம் என்று அவன் கைகள் மொபைலில் அவள் எண்ணை அழுத்தப் போக அந்த எண்ணத்தை கைவிட்டான். ஏன் நான் வர தாமதம் ஆனா இவ போன் பண்ணக் கூடாதா?? என்று ஆணின் ஈகோ தலைத்தூக்கியது அவனுக்கு அக்கணம்.
அந்த பேஷன்ட் மறுநாள் காலை ஐந்து மணியளவில் கண்ணை விழிக்கவும் அதன் பின்னே தான் அவன் வீட்டிற்கே கிளம்பிச் சென்றான். இரவெல்லாம் அனீஷ் வருவான் வருவான் என்று உறங்காமலே விழித்திருந்தாள் அவன் மனையாள்.
எப்போதும் தாமதம் ஆனால் போன் செய்து சொல்லுவான் ஆனால் ஏன் சொல்லவில்லை என்று யோசித்துக் கொண்டே உறங்காமல் விட்டிருந்தாள். அவளாக போன் செய்யலாம் என்ற எண்ணம் வந்த போதும் ஏதாவது முக்கிய ஆபரேஷனில் இருந்தால் கவனம் சிதறி விடுமே என்று எண்ணினாள்.
இருந்தாலும் இரண்டு மூன்று தரம் அவன் போனுக்கு அழைக்க முயற்சித்து அந்த எண்ணத்தை கைவிட்டாள். அவனுக்கு ஒரு குறுந்தகவலாவது அனுப்பி விடலாம் என்று எண்ணி “எப்போது வருவீர்கள்?? தாமதமாகுமா??” என்று அனுப்பினாள்.
அனீஷ் அவ்வப்போது அந்த பேஷன்ட்டை பார்க்க சென்றதால் கைபேசியை அவன் அறையிலேயே வைத்துவிட்டு சென்றிருந்தான். அவள் அனுப்பிய குறுந்தகவலை திரும்பி வந்த பின்னே பார்த்தவன் “காலை தான் வருவேன்” என்று அனுப்பினான். அந்த பேஷன்ட் கண் விழித்த பின்னே தான் மருத்துவமனையில் இருந்து கிளம்பினான்.
ஆராதனாவோ அவன் எப்படியும் காலையிலேயே வந்துவிடுவான் என்று எண்ணி குளித்து முடித்து சூடாக இட்லி அவித்து சாம்பார் சட்னி எல்லாம் தயார் செய்துக் கொண்டிருந்தாள்.
அனீஷ் வீட்டிற்கு வரும் போது ஆராதனா அவர்கள் அறையில் இல்லை. எங்கு போயிருப்பாள் என்று எண்ணினாலும் அவளை அழைக்கவில்லை அவன். துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறை விரைந்தான்.
அலுப்பு தீர குளித்து முடித்தவனுக்கு பசி எடுப்பது போல் இருந்தது. வீடு முழுக்க சமையலின் வாசம் வீசியதை அறிந்தவன் சாப்பாட்டு மேசைக்கு சென்று அமர்ந்தான்.
“அம்மா… அம்மா… அம்மா…” என்று அவன் மூணாவது முறையாக அழைக்க அப்போது தான் அவர் அறையில் இருந்து வெளியில் வந்தார். “என்னப்பா கூப்பிட்டியா??” என்றார்.
‘அம்மா சமைக்கலன்னா அப்போ சமைக்கறது ஆராதனாவா’ என்று எண்ணியவனின் மனம் கசிய ஆரம்பித்தது. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமலேயே “அம்மா பசிக்குது, டிபன் வைங்க… நைட்டே சாப்பிடலை” என்றான்.
“ஏன்ப்பா நைட் சாப்பாடு எடுத்து வைச்சுட்டு தானே நான் படுக்க போனேன். நீ சாப்பிடவே இல்லையா??”
“அம்மா நான் நைட் வீட்டுக்கே வரலை. ஒரு முக்கியமான கேஸ் அதான் வரமுடியலை” என்றான். அதற்கு மேல் அவனிடம் பேச்சை வளர்த்தாமல் சமையலறைக்குள் விரைந்தார் அவர்.
“அத்தை இதை அவருக்கு வைச்சுடுங்க” என்று ஒரு தட்டில் இட்டிலி வைத்து சட்டினியும் வைத்துக் கொடுத்தாள் அவள். “சாம்பார் இதுல இருக்கு அத்தை” என்றாள்.
“நீயே எடுத்திட்டு போம்மா??” என்றார் அவர்.
“வேணாம் அத்தை அவர் இன்னும் கோபமா தான் இருக்கார். மேல மேல கோபப்படுத்த வேண்டாம். நீங்களே பரிமாறுங்க அவர் உங்களை தான் கூப்பிட்டார்” என்று சொன்னது போது அவள் குரலில் வேதனை தெரிந்தது.
அவன் சாப்பிட்டு முடிக்கவும் “அம்மா காபி” என்று மீண்டும் அழைக்க அவரோ அவர்கள் அறைக்கு சென்றிருக்க வேறு வழியில்லாமல் ஆராதனாவே காபியை எடுத்து வந்து மேஜை மேல் அவனருகில் வைத்தாள்.
அதை பார்த்ததும் சுள்ளென்று அவனுக்கு கோபமேழுந்தது. அதை தொடக்கூட இல்லாமல் அங்கிருந்து எழுந்துவிட்டான். ‘ஏன் இதை என் கையில கொடுத்தா என்னவாம். அப்படி என்ன செஞ்சிட்டேன் நானு இவளுக்கு’ என்றதில் வந்த கோபமே அது.
முதலில் அவன் தான் அவளை உதாசினப்படுத்தினான் என்பதை மறந்து அவள் உதாசினப்படுத்திவிட்டாள் என்று எண்ணி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.
பின்பு ஹால் சோபாவில் அமர்ந்து அவன் பேப்பர் படிக்க திலகவதியே காபியை எடுத்து வந்து மகன் கையில் கொடுத்தார். சபரீஷ் அன்று நேரமாகவே அலுவலகம் கிளம்பி உணவு மேஜையில் வந்து அமர்ந்தான்.
“என்ன அனீஷ் ஆஸ்பிட்டல் கிளம்பிட்டியா??” என்றவாறே அமர்ந்தான் சபரீஷ்.
“டேய் நான் இப்போ தான் ஆஸ்பிட்டல்ல இருந்தே வந்தேன். குளிச்சு சாப்பிட்டு பேப்பர் படிச்சுட்டு இருக்கேன். ஆமா நீ எங்க இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட??” என்றான்.
அப்போது மாமனார், மாமியார், சபரீஷுக்காய் டிபன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர் ஆராதனாவும், யாழினியும். “ஒண்ணும்மில்லை அனீஷ் இன்னைக்கு தான் அந்த புது விளம்பரத்தோட ஷூட்டிங், நீயும் வர்றியா??” என்றான்.
‘இன்னும் இவங்க மாறவே இல்லையா, ஒரு பேச்சுக்காக வாச்சும் நான் சொன்னதை கேட்டிருக்கலாமே. அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காச்சும் இந்த பேச்சு எடுக்காம இருந்திருக்கலாம்ல’ என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றி அவள் முகத்தை கோபத்தில் சிவக்க வைத்தது.
சபரீஷ் பேசியதுமே அனீஷ் ஆராதனாவை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தின் மாறுதல் அனைத்தும் கண்டுக்கொண்டான். “நான் வரலை சபரி, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் நீ போயிட்டு வா”
“முடிஞ்சா ஈவினிங் வந்திட்டு போயேன்” என்றான் சபரீஷும் விடாமல். “ஹ்ம்ம் சரி வரப்பாக்குறேன்”
“ஆனா அனீஷ் இதை இப்போவே முடிச்சாகணுமா??” என்று பத்தாவது முறையாக கேட்டுவிட்டான் சபரீஷ்.
“இங்க பாரு சபரி இதையே எத்தனை முறை தான் கேட்பே?? இது நம்ம வேலை நாம தான் செஞ்சாகணும். யாராச்சும் எதாச்சும் சொன்னாங்கன்னு அதையே நினைச்சுட்டு இருக்காதே. நீ போய் முதல்ல வேலையை முடி. கண்டதும் போட்டு குழப்பிக்காதே” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றான்.
சாப்பிட்டு முடித்து தற்செயலாய் நிமிர்ந்து அவன் யாழினியை பார்க்க அவளோ அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.‘நான் தான் இப்போ எதுவுமே பண்ணலையே, அப்புறம் எதுக்கு இவ இப்படி முறைக்கிறா??’
‘இவளை எப்படி சமாதானப்படுத்துறது. அன்னைக்கு சண்டை போட்டதில இருந்தே இப்படி தான் இருக்கா… நைட் நான் தூங்கின பிறகு தான் உள்ள வர்றா, நான் எழ முன்னாடி வெளிய போய்டுறா’
‘இன்னைக்கு இவகிட்ட பேசியே ஆகணும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சபரீஷ் வெளியில் கிளம்பிச் சென்றான். மாலை அவன் வீட்டிற்கு வந்ததில் இருந்து யாழினி அவர்கள் அறைக்கே வரவில்லை.
அப்படியே வந்தாலும் ஒரு ஐந்து நிமிடம் கூட நில்லாமல் வேகமாய் வெளியேறி சென்றாள். ‘எங்க போய்ட போறா?? இங்க தானே வந்தாகணும் இன்னைக்கு விடறதில்லை’ என்று எண்ணிக் கொண்டு அவளுக்காய் காத்திருக்க தொடங்கினான்.
மணி பத்தை கடந்தது, அப்போது அவர்கள் அறைவாயிலில் நின்று பார்த்துவிட்டு மீண்டும் வெளியில் சென்றுவிட்டாள். மேலும் ஒரு மணி நேரத்தை கடந்து நேரம் செல்ல செல்ல அதற்கு மேல் பொறுக்க முடியாத சபரீஷ் அவர்கள் அறை வாயிலுக்கு வந்து எட்டி பார்த்தான்.
சமையலறையின் விளக்கு எரிந்துக்கொண்டிருக்க அங்கு சென்றால் யாழினியை தவிர அங்கு ஒருவருமில்லை. “இன்னும் தூங்கலையா??” என்றவாறே அவளருகே சென்றான்.
அவனை அங்கு எதிர்பார்க்காத பதட்டத்தில் சட்டென்று பயந்து திரும்பி பார்த்தாள். “நான் தான் வந்தேன், எதுக்கு இப்படி பயப்படுற” என்றவன் “சரி வா தூங்க போகலாம்” என்றான்.
‘என்னால வரமுடியாது’ என்பது போல் அவள் பார்த்து வைக்க “இது வேலைக்கு ஆகாது” என்று சொல்லிக் கொண்டே சட்டென்று அவளை இருகைகளாலும் தூக்கவும் அதிர்ந்து விழித்தாள் அவள்.
“என்ன பண்றீங்க நீங்க?? விடுங்க என்னை, கீழ இறக்கி விடுங்க நானே வர்றேன்” என்றாள். “உன்னை நம்ப முடியாது” என்றவன் அந்த அறையை விட்டு வெளியே வர “லைட் ஆப் பண்ணலை” என்றாள்.
எங்கே இவளை கீழே இறக்கிவிட்டால் ஓடிவிடுவாளோ என்று எண்ணியவன் சட்டென்று அவன் தலையால் முட்டி விளக்கை அணைக்க பார்க்க “என்னை கீழ விடுங்க. நான் எங்கயும் ஓட மாட்டேன்” என்றாள்.
“ஏன் பேச மாட்டே?? ஓடமாட்டியா?? இதை நான் நம்பணும். ஒரு வாரம் எனக்கு டிமிக்கி கொடுத்திட்டு தானே இருக்க. உன்னை இறக்க முடியாது” என்றவன் மீண்டும் விளக்கை அணைக்க முயற்சி செய்ய இம்முறை அவள் கை தானாய் உயர்ந்து விளக்கை அணைத்தது.
அவளை தூக்கி வந்து அவர்களின் கட்டிலில் இறக்கி விட்டான். “என்னாச்சு யாழும்மா?? என்னை எதுக்கு இப்படி அவாய்ட் பண்ணுற?? நான் அண்ணி பத்தி பேசினது தப்பு தான்”
“அதுக்காக என்னை மன்னிச்சுடு. அதுக்காக இப்படி பேசாம எல்லாம் இருக்காத. நீயே யோசிச்சு பாரு இந்த பிரச்சனை ஆரம்பிக்க நானா காரணம்” என்றான் அவன்.
நிச்சயம் அவன் காரணமில்லை தான் ஆனாலும் அவனும் ஒரு காரணமாகி போனானே அனீஷ் ஆராதனாவின் இடைவெளிக்கு. அவள் பார்வை நீயும் ஒரு காரணம் தான் என்பதாய் பார்த்தது.
“ஏதாச்சும் பேசேன் யாழும்மா இப்படி இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது. என்னை ரொம்ப சோதிக்காதே யாழு” என்றான் அவன்.அப்போது யாழினிக்கு ஒன்று உரைத்தது, அது சபரீஷ் அவளிடம் இவ்வளவு தன்மையாய் பேசுவது. ‘இதென்ன புதுசா இவரு என்னை யாழும்மான்னு கூப்பிடுறார்’ என்று யோசித்தாள்.
“சரி இன்னைக்கு காலையில எதுக்கு என்னை முறைச்ச” என்றான் அவள் எண்ணங்களை தடைசெய்யும் விதமாக.
“ஏன்னு உங்களுக்கு தெரியாதா??”
“தெரியாம தான் கேட்குறேன், நீயே சொல்லேன் என்ன விஷயம்??”
“இப்போ அந்த ஆட் சூட் பண்ணலைன்னா தான் என்ன?? அட்லீஸ்ட் அதை பத்தி அந்த நேரத்துல பேசாமவாச்சும் இருந்திருக்கலாம்ல. ஏற்கனவே மாமா கோவமா இருக்காங்க”
“இந்த ஆராவோ அதுக்கு மேல மூஞ்சி தூக்கி வைச்சிருக்கா?? நீங்க பேசினது தான் தாமதம் ரெண்டு பேரும் மறுபடியும் முறைச்சுட்டு நிக்கறாங்க. நீங்க இதெல்லாம் தெரிஞ்சு பண்றீங்களா இல்லையான்னு எனக்கு புரியவே இல்லை” என்றாள் நிஜமான வருத்தத்துடன்.
“சாரி யாழு நான் வேணும்ன்னு செய்யலை, அனீஷ் கேட்டதும் பதில் சொல்லணும்ன்னு தான் அதை சொன்னேன். சாதாரணமா தான் பேசினேன், அவங்க இப்படி முட்டிப்பாங்கன்னு நினைச்சு எல்லாம் நான் சொல்லலை” என்றான் பாவமாய்.
‘என்னடா இது இன்னைக்கு இவன் பண்றது எல்லாம் ரொம்ப புதுசா இருக்கே. ஏதேது இந்த சிடுமூஞ்சி மாறிடுச்சா?? அப்படி நடந்தா இந்த உலகம் என்னாகறது, நம்ப முடியலையே’ என்ற யோசனை அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“என்னாச்சு யாழு?? என்னை எதுக்கு அப்படி பார்க்குற??” என்றான் அவள் மனதின் எண்ணத்தினை படித்தவன் போல்.
“இன்னைக்கு என்ன எல்லாமே புதுசா இருக்கு?? அதான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.
“ஏன் என் பொண்டாட்டிகிட்ட தானே இப்படி இருக்கேன். அதுல என்ன கஷ்டம் உனக்கு” என்றவனை மிகுந்த ஆச்சரியமாக பார்த்தாள் அவள்.
“நிஜமாவே எனக்கு புரியலை. திடிர்னு என்ன புதுசா என் மேல பாசம் பொத்துட்டு வருது…”
“புதுசா எல்லாம் இல்லை. உன் கேள்விக்கு நான் பதில் அப்புறம் சொல்றேன். நீ இப்போ சொல்லு ஏன் என்னைவிட்டு விலகி விலகி போறே”
‘இவனென்ன லூசா?? இவ்வளவு நேரமும் அதைபத்தி தானே பேசிட்டு இருந்தோம்’ என்று நினைத்தவளின் பார்வை அதை பிரதிபலித்தது. இருந்தாலும் இவன் எதை பற்றி கேட்கிறான் என்று எண்ணினாள்.
“அன்னைக்கு நீங்க உங்க அண்ணாகிட்ட பேசாம இருந்திருக்கலாம் தானே. நீங்க ஆருவை பத்தி சொல்லப் போக அதுனால தானே எல்லாமே. இன்னைக்கு மறுபடியும் நீங்க தானே ஆரம்பிச்சு வைச்சீங்க” என்றாள் குற்றம் சாட்டும் பார்வையுடன்.
“நான் ஒரு ஆத்திரக்காரன் யாழும்மா அந்த நேர கோபம் உடனே அனீஷுக்கு போன் பண்ணிட்டேன். அது ரொம்பவே தப்பு தான், நான் பண்ணது சரின்னு சொல்ல வரலை”
“ஆனா ஒண்ணு புரிஞ்சுக்கோ அனீஷுக்கு நான் சொன்னதினால மட்டும் கோபமில்லை. நானும் ஒரு காரணமே தவிர நான் மட்டுமே காரணமில்லை. இதை நீ புரிஞ்சுக்கோ யாழு”
“அப்போ ஆருவால தான் எல்லா பிரச்சனையும்ன்னு சொல்ல வர்றீங்களா??”
“ஆமாம்ன்னு சொன்னா நீ என்ன ஒத்துக்கவா போறே??” என்றான்.
“உங்களை நான் கேட்டேனா?? என்னை எதுக்கு சமாதானப்படுத்த முயற்சி பண்றீங்க?? அன்னைக்கும் இப்படி தான் கண்ணுமண்ணு தெரியாம திட்டுறீங்க…”
“உன் பிரண்ட்டு தானே, நீயும் இப்படி தானே பேசுவன்னு என்னென்னமோ வாய்க்கு வந்ததெல்லாம் பேசறீங்க. கடவுளே என்னை ஏன் இந்த ஆத்திரத்துக்கும் அவசரத்துக்கும் நடுவுல மாட்டிவிட்ட” என்று கடைசி வாக்கியத்தை மட்டும் முணுமுணுத்தாள்.
ஆனால் அது எப்படியோ அவன் காதில் விழுந்துவிட்டது. “யாழினி” என்றான் அதட்டலாய்.
என்ன என்பது போல் அவனை பார்த்தாள். “யாரை ஆத்திரம்ன்னு சொன்னே??”
“எல்லாம் உங்களை தான் சொன்னேன், வேற யாரை சொல்லுவேன்”
“அப்போ அவசரம்ன்னு சொன்னது??”
“உங்க பாஷையில சொல்லணும்னா என்னோட பிரண்ட்டு” என்று நொடித்தாள். அவள் சொல்லிய விதம் அவனுக்கு சிரிப்பை வரவைக்க லேசாய் புன்னகைத்தான்.
“எதுக்கு இப்போ சிரிக்கறீங்க?? என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா போச்சா??”
“கொஞ்சம் மூச்சு விடறியா?? எதுக்கு இப்படி எனக்கு மேல பேசவிடாம நீயே பேசுற?? நீ அளவா தான் பேசுவேன்னு நினைச்சேன். ஆனா நீ பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறியே?? நானும் கொஞ்சம் பேசவா?? எனக்கும் கொஞ்சம் பேச இடம் கொடேன்”
சொல்லுங்க!!! சொல்லுங்க!!! என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அவனை பார்த்தாள்.
“இங்க பாரு நானோ இல்லை அனீஷோ எதுவும் தப்பு பண்றோம்ன்னு நீ நினைக்கிறியா??”
“அப்போ அது சரின்னு நீங்க சொல்றீங்களா??”
“தப்புன்னு நீ சொல்றியா??” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.
“சரியானது இல்லைன்னு நான் சொல்றேன்”
“தப்பானதும் இல்லைன்னு நானும் சொல்றேன்”
“இப்போ என்ன தான் சொல்ல நினைக்கறீங்க??” என்றாள் இழுத்து வைத்த பொறுமையுடன்.
“நீ அன்னைக்கு ஒண்ணு சொன்னே?? என் வேலை விஷயத்துல தலையிடுறது இல்லைன்னு அது உனக்கு ஞாபகம் இருக்கா??”
‘அப்போ நான் இதை பத்தி எந்த கருத்தும் சொல்லக்கூடாது அதை தானே சொல்ல வர்றார் இவர்’ என்று எண்ணியவள் “ஆமாம் சொன்னேன்”
“இப்பவும் நான் அதே தான் சொல்றேன். நீங்களா தான் என்கிட்ட சரியா தப்பாங்கற மாதிரி கேட்டீங்க?? என் மனசுல நியாயம்ன்னு பட்டதை நான் சொன்னேன்”
“இனி அந்த கருத்தை கூட நான் பகிர்ந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க” என்றவள் மேலே பேசாமல் கட்டிலில் திரும்பி படுத்துக் கொண்டாள்.
என்றுமில்லா திருநாளாய் யாழினியை சமாதானப்படுத்தி பேசலாம் என்று நினைத்தவனுக்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியது. அவள் பேசியது வேறு அவன் கோபத்தை தூண்டிவிட “ஏய் என்னடி நினைச்சுட்டு இருக்க??”
“நான் பாட்டுக்கு பொறுமையா பேசணும்ன்னு நினைச்சா நீ எதுக்கு இப்படி தாம்தூம்ன்னு குதிக்கிற??” என்றான் கோபமாய்.
எழுந்து அமர்ந்தவள் “என்னை மன்னிச்சுடுங்க, நான் தான் உங்க குணம் தெரியாம பேசிட்டேன். இதோட இந்த பிரச்சனையை விடுங்க. நாம இதை பத்தி திரும்ப பேச வேண்டாம்” என்று முகத்தை திருப்பிக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.
“உன்னை மதிச்சு உன்கிட்ட பேச வந்தேன் பாரு என்னை உதைக்கணும்” என்று இரைந்துவிட்டு அவனும் அவளுக்கு முதுகுக்காட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.
____________________
ஆராதனாவிற்கு இந்த நாலு நாட்களாய் சாப்பாடே சரியாக உள்ளே செல்லாமல் அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலே வாந்தி வருவது போல் இருந்தது.
அனீஷும் அவளை எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவளின் போக்கை அவனும் கவனிக்க தவறியிருந்தான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த ஆராதனாவிற்கு வயிற்றை பிரட்ட காலையில் சாப்பிட்ட அனைத்துமே வெளியில் வந்துவிட்டது.
தன்னை சுத்தப்படுத்திவிட்டு மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு கண்ணை செருகியது. ஏதோ நினைவு வந்தவளாய் தனக்குள் யோசித்தவளுக்கு மின்னலாய் தோன்றி எதுவோ புரிபடுவது போல் இருந்தது.
தன்னை சமாளித்துக்கு கொண்டு அவள் பர்சை எடுத்துக்கொண்டு மாமியாரிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்று சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அவள் கையோடு கொண்டு வந்த உபகரணம் கொண்டு தன்னை சுயப்பரிசோதனை செய்து பார்த்தவளின் உள்ளம் துள்ள ஆரம்பித்தது. ஆம் அவளின் சுயப்பரிசோதனையின் முடிவு சொல்லியது அவள் கர்ப்பமாயிருக்கிறாள் என்று………..