அத்தியாயம் – 11
“நாங்க இதுல பண்றதுக்கு என்ன இருக்கு சார். அவ நல்லா படிக்கற பொண்ணு ஏன் இப்படி லவ்ன்னு எல்லாம் ஆரம்பிச்சுட்டான்னு தெரியலை. அவங்க கிளாஸ் மிஸ் அந்த ரெகார்ட் நோட் பார்க்கலைன்னா எங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்காது”
“அவளை கூப்பிட்டு அந்த லவ் லெட்டர் பத்தி கேட்டா ஆமா லவ் பண்றேன்னு சொல்றா. சம்மந்தப்பட்ட அந்த பையனை விசாரிச்சா அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றான்”
“சோ இப்போ நீங்க சொல்லுங்க என்ன பண்ணலாம். உங்களை கூப்பிட்டு சொல்ல வேண்டியது எங்களோட கடமை அதை சொல்லிட்டோம். எங்களுக்குமே இது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு”
“பிள்ளைங்களை கண்டிச்சா தான் அவங்க இன்னும் அதிகமா அந்த விஷயத்துல தீவிரமா இறங்குவாங்க. அதான் நாங்க பேச முன்னாடி உங்களையும் வரச் சொன்னோம்” என்றார் தலைமை ஆசிரியை.
“சரி இந்த விஷயத்தை நானே பேசி தீர்த்துக்கறேன். அந்த பையன் வீட்டுக்கு இன்போர்ம் பண்ணீட்டீங்களா??” என்றான்.
“இல்லை இன்னும் இன்போர்ம் பண்ணலை. ஏன்னா அந்த பையனோட அப்பா இந்த ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் தம்பி. அதுவும் இல்லாம அந்த பையன் நான் அதை செய்யலைன்னு வேற சொல்றான். அதான் எந்த முடிவும் எடுக்க முடியலை” என்றார்.
“சரி முதல்ல நான் அந்த பையனை பார்க்கணும், அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ். அவனை திட்டவோ அடிக்கவோ நான் இப்போ கூப்பிடலை. உண்மையிலேயே என்ன நடந்துதுன்னு அவன்கிட்ட கேட்க தான் கூப்பிட சொல்றேன் அதுனால பயமில்லாம கூப்பிடுங்க ப்ளீஸ்” என்றான்.
அந்த பையனை அழைத்து வந்து அவன் முன் நிறுத்த அவனை தனியே அழைத்து சென்று பேச ஆரம்பித்தான் சுனீஷ். வந்திருந்தவன் முகமோ லேசாய் பயத்தில் வியர்த்திருப்பது போல் தோன்றியது.
“அப்புறம் உன் பேரு என்னப்பா??” என்றான்.
“ராகேஷ் சார்…”
“என்னை சும்மா அண்ணான்னே கூப்பிடு தப்பில்லை. சரி நீ இப்போ என்கிட்ட உண்மையை சொல்லுவேன்னு நினைக்கிறேன். நீ தானே அந்த லவ் லெட்டர் சுஷ்மிக்கு எழுதினது. உன்னை மிரட்டவோ அடிக்கவோ மாட்டேன். நீ எந்த பயமுமில்லாம என்கிட்ட சொல்லலாம்”
“அது வந்து அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைண்ணா…” என்று திக்கி திணறினான் அவன்.
“நான் திரும்ப திரும்ப ஏன் கேட்குறேன்னு உனக்கு தோணலாம். உண்மையிலேயே உன் மனசுல எதுவுமில்லைன்னா நான் சுஷ்மிக்கிட்ட வேற மாதிரி பேசணும் அதுக்காக தான் கேட்கறேன்”
“என்ன பேசுவீங்க அவகிட்ட??” என்று மெதுவாய் கேட்டான் அவன்.
பூனைக்குட்டி தானாய் வெளியே வருவது புரிந்தது. “உனக்கு தான் அவ மேல லவ் எல்லாம் இல்லைல இதை அவளுக்கு புரிய வைக்கணும். அவளை சமாதானப்படுத்தணும்”
“அவளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அதை பத்தி அவளுக்கு புரிய வைக்கணும். நீ லவ் பண்ணினது பொழுதுபோக்குன்னு அவளுக்கு சொல்லி அவளை பழைய மாதிரி மாத்தணும்” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.
ராகேஷுக்கு குற்றவுணர்வு தலைத்தூக்க தான் செய்த தவறுக்கு சுஷ்மி ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணியவன் “அண்ணே…” என்று வாயை திறந்து பேசினான்.
“சொல்லுப்பா”
“அந்… அந்த லெட்டர் எழுதினது நான் தான். ப்ளீஸ்ண்ணா என்னை தப்பா நினைக்காதீங்க. எனக்கு நிஜமாவே சுஷ்மியை ரொம்ப பிடிக்கும். நான் தான் அவளை ரொம்ப தொல்லை பண்ணி லவ் பண்ண வைச்சேன்”
“ஸ்கூல்ல கேட்கும் போது சொல்லாததுக்கு பயம் தான் காரணம் அண்ணா. எங்கப்பாக்கு சொல்லிட்டா அவர் என் தோலை உரிச்சுடுவார் அண்ணா. அதனால தான் ப்ளீஸ் அண்ணா” என்றவனின் கண்கள் லேசாய் கலங்கியது.
“நான் சொல்றதை கேட்பியா??” என்று அவன் அருகே வந்து அவன் தோளில் கைபோட்டான்.
“சொல்லுங்கண்ணா” என்றான்.
“இப்போ உனக்கு லவ் தேவையா?? நீ படிக்கிறதை மட்டும் பாரு, நீயே சொன்னேல உங்க வீட்டுக்கு தெரிஞ்சா உங்கப்பா உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்ன்னு”
“இது நீ காதலிக்கற வயசில்லை, அதுக்காக காதல் தப்புன்னு எல்லாம் நான் எதுவும் சொல்லலை. நீ இப்போ பிளஸ் டூ படிக்கிற, படிப்பை முடி. அடுத்து காலேஜ் அதையும் முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போ”
“அதுக்குள்ள உன் வாழ்க்கையில நெறைய மாற்றங்கள் வரலாம். அப்பவும் உனக்கு சுஷ்மி மேல விருப்பம் இருந்தா என்கிட்ட சொல்லு. உங்க வீட்டுல சொல்லி அவங்களோட வந்து பொண்ணு கேளு சரியா??” என்றான்.
“என்னடா இவனும் எல்லார் மாதிரியே அட்வைஸ் பண்ணுறானேன்னு நினைக்காத, உன் நல்லதுக்கு தான் சொன்னேன். சுஷ்மியே உன்கிட்ட வந்து பேசினாலும் அவகிட்ட சொல்லு”
“அவளை நல்லா படிக்க சொல்லு, அவளுக்கு நெறைய கடமை இருக்கு. அவளோட அக்கா இவளோட கல்யாணம் முடிஞ்சு தான் கல்யாணம் பண்ணனும் நினைக்கிறா??”
“அதுவரை பெரிய பொண்ணை வைச்சுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். அவ தான் அவளோட அக்காக்கு எல்லாம் செய்யணும். பார்த்து நடந்துக்கோ ராகேஷ். இன்னும் நாலு மாசம் தான் உன்னோட படிப்பு அதை முடி சரியா. இப்போ நீ கிளாஸ்க்கு போ”
“உனக்கு எந்த குற்றவுணர்ச்சியும் வேண்டாம். எப்பவும் போல இரு, போயிட்டு வா” என்று சொல்லி அவனை வழியனுப்பி வைத்தான். ராகேஷ் நல்ல மாதிரியாக தோன்றியதால் மட்டுமே அவன் அவ்வளவு தூரம் அப்பையனுக்கு எடுத்துரைத்திருந்தான்.
அவன் சென்ற சில நிமிடங்களில் சுஷ்மி அங்கு வந்தாள். சுனீஷை பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றாள். “நீங்க எப்படி சார் இங்க??” என்றாள்.
“உன் அக்காவும் வந்திருக்கா??” என்றான் அவன்.
அவளால் அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. மதுவும் வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவள் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
“இப்போ எதுக்கு சுஷ்மி அழற?? நீ என்ன தப்பு பண்ணிட்டேன்னு அழற விடு. உன் அக்கா தான் எமோஷனலா நடந்துக்கறா, நீ அப்படி இல்லையே சுஷ்மி. கண்ணை துடை”
“சார் அக்கா என்ன சொன்னா??”
“அதை விடு நீ என்ன முடிவெடுத்து இருக்க??”
“எதைபத்தி சார்??”
“ராகேஷ் பத்தி!!!”
“சார் நாங்க… நான்… நாங்க லவ் பண்றோம் சார்” என்றாள்.
“ஹ்ம்ம் அதான் உங்க ஸ்கூல்க்கே தெரிஞ்சிருக்கே?? சொன்னாங்க உங்க மிஸ்” என்றான் ஒட்டாமல்.
“சரி அப்புறம் எப்போ கல்யாணம்??உங்க வீட்டில சொல்லிட்டியா, இல்லை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறியா??”
“சார்… என்ன சார் பேசறீங்க நீங்க?? எனக்கு ஒரு அக்கா இருக்கா, அவளோட கல்யாணம் நடக்க வேண்டாமா??”
“ஓ உங்கக்காக்கு கல்யாணம் வேற பண்ணணுமா??” என்று நக்கலடித்தான்.
“சார் என்னை என்னன்னு நினைச்சீங்க. பொறுப்பில்லாதவன்னா??”
“நான் அப்படி நினைக்கவே இல்லை சுஷ்மி. ஆனா சந்தோசமாயிருக்கு உனக்கு உன் அக்கா பத்தி எல்லாம் நினைப்பிருக்கேன்னு. அப்புறம் எதுக்கு உனக்கு இப்போ இந்த லவ் எல்லாம்”
“சார்… அது வந்து…” என்று இழுத்தாள்.
“முதல்ல படிம்மா, மத்தது எல்லாம் தானாவே நடக்கும். உன்னோட அம்மா அக்காவை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா?? அவங்களுக்கு நீ நல்லா படிக்கறது மட்டும் தான் சந்தோசம்”
“படிச்சு நல்ல வேலைக்கு போ, அதுக்கு பிறகு உனக்கு பிடிச்ச பையனை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். இப்போ இதெல்லாம் கொஞ்சம் தூரமா ஒதுக்கி வை. நான் உன்னை மறக்க சொல்லலை, ஒதுக்கி தான் வைக்க சொன்னேன், புரியுதா??”
அவளுக்கு என்ன புரிந்ததோ மண்டையை ஆட்டினாள். “சார் நீங்க சொல்றது எனக்கு புரியுது. இதெல்லாம் என் படிப்பை பாதிக்கும்ன்னு நினைக்கறீங்களா??”
“கண்டிப்பா பாதிக்கும், நான் இதெல்லாம் வேண்டவே வேண்டாம்ன்னு சொல்லலை. உன் படிப்பு முடியறவரை அதை எல்லாம் தள்ளி வை சரியா?? அப்புறம் இன்னொரு விஷயம் உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க”
“நீ எப்பவும் போல இரு, உன் அக்கா இதை பத்தி உன்கிட்ட எதுவுமே கேட்க மாட்டா?? உனக்கா இதை பத்தி பேசணும்ன்னு தோணினா நீயே உன் அக்காகிட்ட பேசு”
“எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் அம்மா காதுக்கு போக வேண்டாம். அவங்க பாவம் வயசானவங்க ரொம்ப கவலைப்படுவாங்க” என்றான்.
“சார் சாரி சார் இனி இப்படி யாரையும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன்”
“சுஷ்மி அப்புறம் அந்த பையன் வந்து உன்கிட்ட பேசினா??”
“படிப்பு முதல்லன்னு சொல்லிடுவேன் சார், நீங்க கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னவளை பெருமையாய் பார்த்தான். எதையும் சட்டென்று புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி அப்பெண்ணுக்கு.
அவள் வகுப்பு ஆசிரியை தலைமை ஆசிரியை இருவரிடமும் அவர்களிடம் வித்தியாசம் பாராட்ட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு அவர்களை பற்றி எதுவும் சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கே அழைப்பு விடுக்குமாறு கூறி அவன் எண்ணையும் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்.
மது இன்னமும் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்தாள். அவளுக்குள் ஒரு குற்றவுணர்வு வந்திருந்தது. தங்கையை கேள்வி கேட்க தனக்கு எந்த அதிகாரமும் இல்லையே, தானே காதலித்துக் கொண்டிருப்பவள் தானே என்று எண்ணி கழிவிரக்கம் கொண்டு மேலும் அழுதாள்.
“மிது போகலாமா??”
“எங்கே??”
“உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னேனே??”
“சார் நான் இப்போ எதுவும் பேசற நிலைமையில இல்லை சார்” என்றாள்.
“மிது அப்போ உன் தங்கை பத்தி எதுவும் உனக்கு தெரிய வேண்டாமா?? நான் அவங்ககிட்ட என்ன பேசின்னேன்னு உனக்கு தெரிய வேண்டாமா??” என்றான்.
“சொல்லுங்க” என்று எழுந்து நின்றாள்.
“இங்க வேண்டாம் வா” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று வண்டியில் அமரச் சொன்னான்.
அவளை அழைத்துக் கொண்டு பொட்டானிக்கல் கார்டன் சென்றான். “இங்க எதுக்கு வந்திருக்கோம்??”
“உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னேன்ல??”
“சார் உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது?? உங்க கூட பேசுற மனநிலையில நான் இல்லை”
“மிது எதுக்கு சொன்னதே சொல்லிட்டு இருக்க, உள்ள வா” என்று அழைத்துச் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர வைத்தான். பள்ளியில் சுஷ்மியிடமும் ராகேஷிடமும் பேசியதை கூறினான்.
அவன் பேசி முடித்ததும் அவள் விழிவிரிய அவனை பார்த்தாள். “தேங்க்ஸ் தேங்க்ஸ்ங்க… நான் அவகிட்ட பேசியிருந்தா கண்டிப்பா அழுது புலம்பி இல்லை அவளை அடிச்சுன்னு களேபரம் செஞ்சிருப்பேன்”
“இவ்வளவு பொறுமையா ஹேண்டில் பண்ணியிருக்க மாட்டேன்”
“உன் தங்கச்சி உன்னை மாதிரி இல்லை மிது, அவ ரொம்ப புத்திசாலி பொண்ணு. அழகும் புத்திசாலித்தனமும் அவகிட்ட இருக்கு. அவளை ஈசியா கன்வின்ஸ் பண்ண முடிஞ்சுது”
“இதை வேண்டாம்ன்னு சொல்லி அதோட சாதக பாதகங்களை எடுத்து சொன்னா அவ புரிஞ்சுக்ககூடியவ” என்றான் அவன்.
“அப்போ நான் மக்கா??” என்று பெண்களுக்கே உரிய அந்த பொறாமையுணர்வு தலைத்தூக்க கேட்டவளை பார்த்து சிரித்தான்.
“உன் தங்கச்சி மேல பொறாமையா??”
“இல்லை நான் மக்கான்னு…”
“அதை பத்தி அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம். சரி வா கிளம்பலாம்” என்று எழுந்து நின்றான் அவன்.
அதுவரை மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகியதில் அவன் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னானே அது என்னவாக இருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
“என்ன மிது?? என்ன யோசனை??”
“இல்லை நீங்க என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களே?? அதான் யோசிச்சேன்”
“அதான் நீ அதை கேட்குற மனநிலையில இல்லைன்னு சொன்னீயே??” என்றுவிட்டு இரண்டு அடி நடக்க ஆரம்பித்தான்.
அவளும் பின்னோடு வரவும் “என்ன மிது?? எதுவும் பேசாம வர்றே?? அது என்னனு கேட்க மாட்டியா??”
“என்கிட்ட சொல்லணும்னா நீங்களே சொல்லுவீங்கன்னு தெரியும். அதான் எதுவும் கேட்கலை” என்றாள்.
“உட்கார்” என்று மீண்டும் அவளை அமர சொன்னான்.
“சரி நான் சுத்தி வளைக்க விரும்பலை. நேராவே சொல்லிடறேன், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படுறேன்” என்றுவிட்டு நிறுத்தினான்.
அவன் கூறி முடிக்கவும் மதுவின் கைகள் இரண்டும் சில்லென்று ஆனது, சட்டென்று ஒரு பயம் மனதிற்குள் பரவியது. அடிவயிற்றில் எதுவோ பிசைய ஆரம்பித்தது.
அவனை முழுதாய் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்தாள். அவன் எப்போதடா நம்மை புரிந்து கொள்வான் என்று அதுநாள் வரை இருந்தவளுக்கு அவன் அவளை பிடித்திருக்கிறது என்று சொல்லிய கணம் ஏதேதோ யோசனைகள் வந்து அவளை குழப்பியடித்தது.
“அது வந்து நான்… எனக்கு அப்படி” என்று அவள் சொல்லும் போதே அவள் பேச்சை நிறுத்துமாறு கையை காண்பித்தான்.
“மிது உனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லைன்னு பொய் மட்டும் சொல்லிடாதே?? இவ்வளோ நாள் உன்னோட அன்பை கவனிக்காம இருந்திருக்கேன். புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்”
“நான் இப்போ அப்படியில்லை, என்னால உறுதியா சொல்ல முடியும். உனக்கு என்னை பிடிக்கும்ன்னு”
“நீயே மனசு குழப்பத்துல இருக்க, அதனால தான் உன்கிட்ட இப்போ நான் இதை பத்தி சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சேன்”
“ஆனா உன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு நான் நினைச்சதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. நீ இப்போ இருக்கற மனநிலையில உன் தங்கையோட காதலோட நீ இதை கம்பேர் பண்ணி பார்த்து வருத்தப்படுவ”
“ரெண்டாவது உன் குடும்பத்தை பத்தி யோசிப்ப, முக்கியமா உங்கம்மா. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி போய்ட்டா அம்மா என்னாவங்க அப்படின்னு எல்லாம் உன் யோசனை போகும்”
“ஆனா உனக்கு உங்கம்மா பத்தி எப்பவும் கவலை வேண்டாம். அந்த உறுதியை என்னால தரமுடியும் அவங்களை கூடவே வைச்சு பார்த்துக்கலாம். சோ நீ அதை நினைச்சு கவலைப்பட்டா அது சுத்த வேஸ்ட்”
“சொல்ல வேண்டாம்ன்னு யோசிச்சவன் சொன்னதுக்கு காரணம். நான் என்ன சொல்லப் போறேனோன்னு ஒரு ஆர்வம் உனக்குள்ள இருந்துச்சே அது தான் காரணம்”
“சரி மிது கிளம்புவோம், ஆல்ரெடி நான் நெறைய லெக்சர் அடிச்சிட்டேன். எனக்கே போரடிக்குது. கடைசியா ஒண்ணு மிது ரொம்ப யோசிச்சு வேணாம்ன்னு சொல்றதா இருந்தா என்கிட்ட நீ அதை பத்தி பேசவே வேண்டாம்”
“சரின்னு சொல்றதா இருந்தா மட்டும் பேசு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நீயா வந்து பேசலைன்னா உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு எடுத்துக்கறேன் சரியா??”
“போவோமா??”
“இல்லை நீங்க வந்து ப்ளீஸ் எப்பவும் போல பேசுங்க. இது இதெல்லாம் நமக்குள்ள வேண்டாமே”
“மிது இதைபத்தி நாம இனி பேச வேண்டாம். உன்னோட லவ் ஒண்ணும் பப்பி லவ் இல்லை, முட்டாள்தனமான முடிவெடுத்துட்டோம்ன்னு யோசிக்க புரிஞ்சுக்கோ?? வா போவோம், அப்புறம் சுஷ்மிக்கிட்ட அவளை திட்டுறது போலவோ கண்டிக்கறது போலவோ பேசாதே??”
“எப்பவும் போல இயல்பா பேசு சரியா??” என்றுவிட்டு அவளை அழைத்து சென்று அவள் வீட்டில் விட்டுவிட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.
____________________
மதிய வேளை பொழுது போகாமல் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா லோக்கல் சேனல் ஒன்றை மாற்றி வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்தவளின் முகம் யோசனையில் சுருங்கியது. இது போன்ற விளம்பரங்கள் அவளுக்கு எப்போதும் பிடிப்பதில்லை.
அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளின் கைபேசி அடிப்பதையும் மறந்து யோசனையில் லயித்திருந்தாள் அவள்.
அப்போது சட்டென்று எதுவோ அவளுக்கு புரிவது போலவும் புரியாதது போலவும் ஒரு உணர்வு தோன்றியது அவளுக்கு. மனதில் ஒரு பாரம் வந்து ஏறியது போல் மனம் பாறாங்கல்லாய் கனத்தது….