அத்தியாயம் ஆறு:
ஹரியும் நிதினும் பால் காய்ச்சுவதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், பாத்திரம், பால் என்று சில பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.
அதிகாலையில் ஐந்து மணி நல்ல நேரம் என்று நிதினின் பெற்றோர்கள் கூறியிருக்க, அந்த நேரத்தில் எழுந்து குளித்து, இருவரும் பாலைக் காய்ச்ச முற்பட்டு, அதை வெற்றிகரமாக முடித்து பாலை தம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து அமர்ந்தனர்.
அவர்களுக்கு கீழ் வீட்டில் இருப்பவர்களும் வாடகைக்கு தான் இருக்க…. இன்னும் அவர்களின் அறிமுகம் இல்லை.
அவர்கள் எழுந்த பிறகு இந்த பாலை கொடுத்து அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று நிதின் சொல்லிக் கொண்டிருக்க… “நீ எதுவோ செய்”, என்பது போல ஹரி அமர்ந்திருந்தான்.
அவர்கள் அமர்ந்த பொழுது விடிந்தும் விடியாத காலைப் பொழுது, இன்னும் மணி ஆறைக் கூட தொட்டு இருக்கவில்லை…
அவர்கள் பால்கனியில் இருந்து பார்த்தால் ப்ரீத்தியின் வீடு நன்கு தெரியும், அதை பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.
அங்கே தான் வீட்டின் மெயின் கதவு இருந்தது….. முழுவதும் கம்பிகளால் சுற்றி பாதுக்காப்பு இருந்தாலும் அங்கே நடப்பது தெரியும்.
ஹரி பார்த்துக் கொண்டு இருந்த போதே கதவு திறந்தது….. அங்கே இருந்து ப்ரீத்தி வெளியில் வந்து மீண்டும் கதவை பூட்டி சாவியை உள்ளே போட்டாள்.
இன்னும் அவளின் வீட்டில் யாரும் எழவில்லை என்று அதனால் தெரிந்தது….. ப்ரீத்தியை பார்த்த ஹரி பார்த்தது பார்த்தபடி நின்றான்.
நிதின் அவனுக்கு எதிர்புறம் அமர்ந்து இருந்ததால் அவன் ப்ரீத்தியை பார்க்கவில்லை.
குட்டியாக ஒரு ட்ரௌசர், அதன் மேல் ஒரு ஸ்லீவ் லெஸ் பனியன்….. அமைதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்து அவளின் ஷூவை போட ஆரம்பித்தாள்.
“ஊப்ஸ், என்ன டிரஸ்டா இவ போட்டிருக்கா”, என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ஷூவை போட்டு முடித்தவள், அருகே லாங் கோட் மாதிரி இருந்ததை எடுத்து மாட்ட அது ஸ்லீவ் லெஸ் பனியனை கவர் செய்தது….
“ஹப்பா, இவ இப்படியே வெளில போகலை”, என்று ஒரு பெருமூச்சு ஹரியிடம் இருந்து வெளியேற…..
“இவன் எங்கடா பார்த்து பெருமூச்சு விடறான்”, என்றபடி நிதின் திரும்பி பார்த்தான்.
அங்கே ப்ரீத்தி படியில் இறங்க கம்பி கேட்டை திறந்து கொண்டிருந்தாள், அப்படியே பார்வையை எதிர் புறம் செலுத்த, அங்கே முகம் திருப்பி அவளை பார்த்துக் கொண்டிருந்த நிதின் தெரிந்தான்.
“யாருடா இவன்? இவ்வளவு காலையில உட்கார்ந்து இருக்குறான்”, என்று ப்ரீத்தியும் நிதினை பார்த்துக் கொண்டே இறங்கினாள்.
அவளுக்கு நிதினை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் சட்டென்று தெரியவில்லை. எங்கே பார்த்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டே இறங்கினாள்.
நிதினுக்கு ப்ரீத்தி அவனை பார்த்த பார்வையிலேயே, அவளுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்று தெரிந்தது.
“ஐயோ! என்ன இது குட்டி டிரஸ்”, என்று நிதினாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஷார்ட்ஷில் ப்ரீத்தி கிரௌண்ட் ப்ராக்டிசிற்கு செல்கிறாள் என்று தெரிந்தது.
தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளலாமா வேண்டாமா என்று கேட்க ஹரியின் புறம் திரும்ப அவன் இருந்தால் தானே……
ப்ரீத்தி இறங்க ஆயுதமான உடனேயே அவள் தன்னை பார்ப்பாள் என்று தெரிந்து ஹரி அந்த இடத்தை விட்டு அகன்று இருந்தான்.
“இவன் எங்கடா போனான்”, என்று பார்த்த நிதின், “ஹரி”, என்று கூப்பிடப் போக,
அவன் பார்வை வட்டத்திற்குள் விழுந்த ஹரி…. “இஷ், கத்தாத”, என்று நிதினிடம் சைகை கட்டினான்.
“ஏன்”, என்று புரியாவிட்டாலும் அமைதியானான் நிதின். ப்ரீத்தி படியிறங்கிய உடன் வெளியே வந்து நின்று அவளை ஹரி பார்த்தான்.
அவனால் புன்னகையை அடக்கவே முடியவில்லை….. ப்ரீத்தி செய்து கொண்டிருந்த வேலை அப்படி……..
பூட்டியிருந்த கேட்டை திறக்காமல் அதில் அனாயாசமாக ஏறித் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தாள்.
எதற்கு இவன் முகத்தில் இவ்வளவு மலர்ச்சி என்பது போல நிதினும் அருகில் வந்து எட்டிப் பார்க்க ப்ரீத்தி மறுபுறம் கேட்டை விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள்.
நிதினுக்கு சிரிப்பு பொங்கியது…….
“உன் ஆளு கலக்குதுடா”, என்றான் நிதின்…….
“என்ன என் ஆளா, அவங்கப்பா கேட்டாங்க, உன்னை துவைச்சி தொங்க விட்டுடுவாங்க……”,
ஹரியை நிதின் பார்த்த பார்வை, “உன்னை எனக்கு தெரியாதா”, என்று சொல்ல….
ஹரி பார்வையை விலக்கி மெதுவாக ஓட ஆரம்பித்த ப்ரீத்தியின் மேல் நின்றது.
அவள் ஓடுவதற்கு ஏதுவாக அவள் முடி கட்டும் அசைய……. அதையே பார்த்தப்படி நின்றான்.
ஹரியின் அருகில் வந்து நின்ற நிதின், “உண்மையா சொல்லு? உனக்கு சென்னையில இங்க தான் ப்ரீத்தியோட வீடுன்னு தெரியாதா…..”,
“பெங்களூர்ல போட்ட போஸ்டிங்க நீதான் ரொம்ப ரிக்வெஸ்ட் செஞ்சு சென்னைக்கு மாத்தின”,
“அது உனக்கு இங்கன்றதால”, என்று ஹரி சொல்ல,
“இருக்கலாம், ஆனா அது மட்டும் ரீசன் இல்லைன்னு இப்போ இந்த மினிட்ல சம்திங் டெல்ஸ் மீ, நேத்து நீ வீடு மாத்தலாம்னு சொன்னது கூட சும்மா, உனக்கு ப்ரீத்தி இங்க இருக்கான்னு தெரியும்”,
“எஸ், தெரியும், இந்த ஏரியான்னு தெரியும், ரொம்ப கஷ்டப்பட்டு மாளவிகா கிட்ட கேதர் செஞ்சேன். ஆனா சத்தியமா இந்த வீடுன்னு கண்டிப்பா தெரியாது”, என்றான் உண்மையாக.
“எனக்கே ஷாக் தான், வீடு மாத்தலாம்னு சொன்னதும் நிஜம் தான், அவங்கப்பா நாம இங்க இருக்குறதை விரும்ப மாட்டார்டா”,
“அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் நாம இங்க வரணும்”, என்றான் நிதின், “உனக்கு அந்த பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் இருக்கா”, என்றான் கூடவே.
“சே, சே, இல்லைடா! பட் என்னவோ அந்த பிரச்சனைக்கு அப்புறம் அவளை பார்க்கவே இல்லையா. பார்க்கணும் போல ஒரு இன்டியுசன் ஒரு ஆர்வம் மனசுக்குள்ள எப்பவும் ஓடிட்டே இருந்தது, நீ சென்னை வரவும் நானும் வந்துட்டேன் அவ்வளவு தான்…”,
“அப்போ இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு”,
“ம், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், ஆனா அவ டிரஸ் பாரு, எங்கம்மா வீட்டுக்கு உள்ள கூட விடமாட்டாங்க…….”,
“அவ ஸ்போர்ட்ஸ் பெர்சொனாலிட்டிடா”,
“அதெல்லாம் அம்மாவும் அப்பாவும் புரிஞ்சிக்க மாட்டாங்க….. இவங்க ஃலைப் ஸ்டைல் வேற, அதுவும் இவ சான்சே இல்லை”, என்று ஹரி பேச…..
அவனை நிதின் சந்தேகமாக பார்க்கவும், “நம்புடா ப்ரீத்தி அப்பா, நாம இங்க இருக்குறதை கூட விரும்பமாட்டார், இதுல வேற எல்லாம் பாஸிபிலே இல்லை”,
ஒரு வகையில் ஹரி சொல்வதும் நிஜம் தானே, ப்ரீத்தியின் அப்பாவை நிதினும் நேரில் பார்த்தவன் தானே……
பேச்சை மாற்றி, “என்ன சமைக்கலாம்”, என்று நிதின் கேட்கவும்,
“சாப்பிடற மாதிரி ஏதாவது”, என்று ஹரி பதில் சொல்லவும்,
“உன் லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சுடா. ஆனா பெருசா எல்லார்கிட்டயும் நல்ல பையன்னு ஒரு இம்ப்ரஸன்”,
“நான் நல்ல பையன்னு எப்பவாவது சொன்னேனா, அவங்களா நினைச்சிக்கிட்டா நானா பொறுப்பு”, என்று ஹரி தோளைக் குலுக்கினான்.
“நீ எவ்வளவு கெட்ட பையன்னு எனக்குத் தாண்டா தெரியும்”, என்று நிதின் கலாய்க்கவும்.
“மைக் குடுக்கறேன் ஊர் பூராவும் சொல்லு”, என்றான் புன்னகையோடு ஹரி.
“சொன்னாலும் நம்ப மாட்டாங்களே, அப்படி ஒரு இமேஜ் தானேடா நீ டிவலப் செஞ்சி வெச்சிருக்க”, என்றான் நிதின்.
“பேச்சைக் குறைடா, பேச்சைக் குறை”, என்றபடி ஹரி உள்ளே போனான்.
“என்ன பிளான்ல இருக்கானோ தெரியலையே”, என்று மனம் நினைப்பதை நிதினால் தடுக்க முடியவில்லை.
ஹரியை ஓரளவிற்கு நன்கு தெரிந்தவன். ஆனால் அவன் ப்ரீத்தியை தேடி இப்படி வருவான் என்று நிதின் கனவிலும் நினைத்து இல்லை.
ஒரு மூன்று நாட்கள் பார்த்த ப்ரீத்தி, ஜான் செய்தது மன்னிக்க முடியாதது, ஆனால் அது அப்போதே, அன்றே முடிந்து விட்டது. அதை ஹரி மனதில் வைத்திருப்பான் என்றோ, ப்ரீத்திக்காக சென்னை வந்திருப்பான் என்றோ இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.
ஆனால் இதுதான் நிஜம் என்று நிதினின் மனம் ஸ்திரமாக அவனுக்கு சொன்னது. ஏனென்றால் ஹரி ப்ரீத்தியை பார்த்த பார்வை அப்படி. அந்த மாதிரி நிதினுக்கு ஹரியை தெரிந்த நாளாக ஹரி யாரையும் பார்த்து, நிதின் பார்த்தது இல்லை.
ஆனால் இதில் நிதின் தனக்கு கவலைப்பட எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் ஹரி எதுவும் சமாளிப்பான் என்று தெரியும். அதனால் அவன் பாட்டிற்க்கு ரெடியாகப் போனான்.
அவர்கள் எட்டு மணிக்கு ஆபிஸ் கிளம்பும் வரையிலும் ப்ரீத்தி வந்ததாக தெரியவில்லை.
“என்னடா அந்த பொண்ணு ரொம்ப முன்னாடி போச்சு, இன்னும் காணோம்”, என்று நிதின் அவர்கள் வீட்டை பூட்டி கீழிறங்கும் போது சொல்ல…..
“அதென்ன அந்த பொண்ணு, என்னமோ மாதிரி இருக்கு கேட்க, ப்ரீத்தின்னு சொல்லு, இல்லை லக்ஷ்மின்னு சொல்லு, இல்லை ப்ரீத்திலக்ஷ்மின்னு சொல்லு”,
“டேய்ய்ய்ய்ய்ய்ய், எப்போ இருந்துடா இப்படி ஆனா”,
“இம், இப்போ இருந்து தான்”, என்று ஹரி சொல்லவும், அவன் பார்வையை ஒட்டி நிதின் பார்வையை செலுத்தினான்.
அங்கே வேர்க்க விறுவிறுக்க ப்ரீத்தி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
அவள் கேட்டின் அருகில் வரவும், ஹரியும் அவன் வீட்டு வாசலுக்கு போகவும் சரியாக இருந்தது.
இப்போதும் நிதினை தான் எங்கே பார்த்திருக்கிறோம் என்று யோசனையாக பார்த்துக் கொண்டே படி ஏறினாள் ப்ரீத்தி, அப்போதும் அவளுக்கு ஹரியை தெரியவில்லை, ஏனென்றால் அவள் தான் ஹரியின் முகத்தை பார்க்கவேயில்லயே, அவன் தான் ஹெல்மெட் மாட்டியிருந்தானே.
“என்னடா கண்ணாமூச்சி விளையாட்டு இது”, என்றபடி வண்டியை எடுத்த ஹரியின் பின் நிதின் அமர்ந்தபடி கேட்டான்.
“முதல்ல நான் கன்ஃபர்ம் பண்ணிக்கறேன்”, என்றபடி ஹரி வண்டியை பறக்க விட,
“எதை”, என்றான் நிதின்.
“டேய், பேச்சைக் குறைடா! என்னால நிஜமா முடியலை!”, என்றபடி ஹரி பேச்சை நிறுத்திக் கொண்டான்.
“நானும் தான் ஒரு பொண்ணு பின்னாடி ரெண்டு வருஷம் சுத்தினேன்.. இப்பவும் காலையில, சாயந்தரம் மெசேஜ்ஜா அனுப்பறேன்…… அவ என்னை தேடறாளா, நினைக்கிறாளா இல்லையான்னு கூட கண்டுபிடிக்க முடியலை”, என்று குறை பட்டான்.
‘இதுல மாளவிகா கிட்ட எனக்கு தெரியாம பேசி, நீ அட்ரெஸ் எல்லாம் வாங்கியிருக்க, எனக்கு அது கூட தெரியலை”, என்று இன்னும் குறைப் பட்டுக் கொண்டான்.
“கடைசியில நீ டிவலப் ஆகிடுவ போல, எனக்கும் ஏதாவது ஹெல்ப் பண்ணுடா”, என்றான் நிதின்.
நிதின் சொன்ன விதமே அவன் மாளவிக்காவை நினைத்து, மிகவும் அப்செட் என்பது ஹரிக்கு புரிய……
“நீ என்கிட்டே இதுவரைக்கும் ஐடியா கேட்கவே இல்லையே”, என்றான் ஹரி,
“ஒரு நிமிஷம் நிறுத்து”, என்று நிதின் சொல்லவும், என்னவென்று தெரியாமல் ஹரி நிறுத்த…..
இறங்கியவன், “போடா, அவ்வளவு நாள் நான் மாளவிகா பின்னாடி சுத்தினது தெரிஞ்சும், கூலா நீ என்கிட்டே ஐடியா கேட்கலைன்னா சொல்ற, நான் உன்கூட வரமாட்டேன், போ”, என்று முறுக்கியபடி நிதின் அருகில் மெதுவாக சென்று கொண்டிருந்த பஸ்ஸில் ஹரி அனுமானிக்கும் முன்னரே ஏறி சென்று விட்டான்.
“டேய், நிதின்”, என்று ஹரி கூப்பிடும் முன்னர் பஸ் சற்று தூரமே சென்று இருந்தது.
“ஷ்”, என்று தலையில் கைவைத்த ஹரி, பஸ்சின் பின் போக ஆரம்பித்தான்.
ஆனால் நிதினின் கோபம் இறங்கவேயில்லை…….
இரவு வரையும் தொடர்ந்தது…… ஹரியுடன் அவன் பைக்கிலும் வரவில்லை….. திரும்பவும் பஸ்ஸில் ஏற…….
“போடா”, என்றபடி ஹரியும் அவனுக்கு முன் வீட்டிற்கு வந்து சமைக்க என்ன இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான்.
நிதின் வந்து படியேறும் போது, பக்கவாட்டில் இருந்து, “நம்ம எங்கேயாவது பார்த்திருக்கோமா”, என்று ஒரு குரல்…..
வேறு யார் ப்ரீத்தி தான்…… அப்படியே நின்றான் நிதின், என்ன சொல்வது என்று தெரியாமல்.
“எனக்கு உங்களை பார்த்த மாதிரி ஞாபகம் எங்க பார்த்தோம்”, என்றாள்.
“ஒரு வருஷத்துல நான் அடையாளம் தெரியாத அளவுக்கா மாறிட்டேன்”, என்று நிதின் சொல்லவும்……..
சில நொடிகள் யோசித்தவள், “ஹேய்”, என்று கண்டு கொண்ட விதத்தில் சிரித்தாள், “நீங்க மாலு சீனியர் தானே”, என்றாள் சரியாக…….
மாளவிகாவின் பெயரை கேட்டதும் நிதின் மீண்டும் அப்செட் ஆக, நிதினுக்கு பேச வாய்ப்பே கொடுக்கவில்லை, “அது நீங்க புதுசா மீசை வெச்சிருக்கீங்க, அம் ஐ ரைட். அது தான் எனக்கு தெரியலை… ஆமா, உங்க கூட இன்னொரு சீனியர் சுத்துமே, நான் தான் எல்லாம்ன்ற மாதிரி ஹெட் வெயிட்டோட, காந்திக்கு தம்பி மாதிரி, எல்லாரையும் மறப்போம் மன்னிப்போம்ன்னு, எங்க அது, எங்கே வேலைல இருக்கு”, என்று அவள் வீட்டில் இருந்தபடியே நீளமாக பேசவும்.
அவள் ஹரியை குறித்து பேசிய வார்த்தைகளை அசை போட்டான் நிதின், “யப்பா, என்ன டிஃபனிஷன்”, என்று நிதினால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ப்ரீத்தியின் பேச்சுக் குரல் கேட்டு, யாருடன் பேசுகிறாள் என்று பார்க்க, மாலினியும் ரகுவும் வந்தனர்.
யார் இது என்பது போல மாலினி பார்க்க….. இப்போதெல்லாம் கோவை பற்றிய பேச்சை அம்மாவுக்கு பிடிப்பதில்லை என்பதால், “தெரிஞ்சவங்க மா, இங்க பக்கத்துக்கு வீட்டுக்கு மேல குடி வந்திருக்காங்க, இப்ப தான் பார்த்தேன்”, என்று ப்ரீத்தி அறிமுகம் செய்து வைத்தாள்.
நிதினும் மரியாதையாக, “வணக்கம் ஆன்ட்டி”, என்று கை குவித்தான்….
அவனாக, “நேத்து தான் இங்க குடிவந்தோம், இங்க…….”, என்று அவனின் வேலை பார்க்கும் கம்பனியின் பெயரையும் சொல்ல….. அது பெரிய கம்பனி என்பதால் மரியாதையாக பார்த்தார் மாலினி.
பின்பு அவர்கள் பேசட்டும் என்பது போல நகர்ந்து விட்டார்…… பிள்ளைகளின் பின் கண்காணிக்கும் வழக்கம் இல்லாததால்.
ஆனால் கண்டிப்பாக கோவை கல்லூரி சீனியர்கள் என்று தெரிந்திருந்தால் பேச விட்டிருக்கவே மாட்டார்.
“இது என் தம்பி”, என்று ரகுவையும் அறிமுகப்படுத்தினாள்.
பின்பு மரியாதை நிமித்தம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நிதின் நகர்ந்து விட்டான்….. இவள் மீண்டும் ஹரியை பற்றி கேட்டால் சொல்லுவத வேண்டாமா என்று தெரியாமல்.
நிதினை தெரிந்து கொண்டதில் இருந்து ப்ரீத்திக்கு ஹரி என்ன செய்கிறான் என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாகிவிட்டது.
தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல தோன்ற……
பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தாள் ஹரியின் வீட்டு பால்கனியை,அங்கே யாரும் தெரியாததால், போகலாமா வேண்டாமா என்று நிதினின் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் இங்க நிக்கற?”, என்றபடி ரகு வரவும்,
“அம்மா கிட்ட சொல்லாதா, நாம முன்ன பார்த்தது நான் கோவை காலேஜ்ல படிச்ச சீனியர். அங்க ஒரு சீனியர் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினார் ஒரு ப்ராப்லம் அப்போ…..”,
“பட் அப்பா, இங்க திடீர்ன்னு கூட்டிட்டு வந்துட்டதால, என்னால தேங்க்ஸ் கூட சொல்ல முடியலை. அப்புறம் மாலு கிட்ட கேட்டேன், அவளும் குடுக்கலை…… எனக்கு ஜஸ்ட் கேட்கணும்”, என்றாள்.
“இவருக்கு தெரியுமா அவரை”, என்று ரகு கேட்கவும்,
“தெரியுமாயிருக்கும், ரெண்டு பேரும் சேர்ந்து தான் சுத்துவாங்க, நீ போய் கேட்டுட்டு வர்றியா”,
“நானா, நான் மாட்டேன்”, என்றான் பயத்தோடு ரகு.
“ஐயோ, இதுல என்ன இருக்கு, நம்ம ரெண்டு பேரும் போவோமா, வா”, என்று ப்ரீத்தி கூப்பிட்டாள்.
“அங்க கீழ வீட்டுல இருக்குற ஆன்ட்டி பார்த்தா பேச நிறுத்திக்குவாங்க, செம போர்”,
“அப்போ இப்படியே குதிச்சிடுவோம்”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சில படிகள் இறங்கி, அப்படியே இந்த மாடிப்படியில் இருந்து அந்த படிக்கு தாவினாள்.
“ஐயோ, குரங்கு!”, என்று ரகு மெதுவாக கத்தினான்.
“ஷ், கத்தாத, அம்மா வந்துடுவாங்க! நீ வா ஜஸ்ட் டூ மின்ட்ஸ், டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்துடலாம்”, என்று ப்ரீத்தி கை காட்ட ரகுவும் தாவினான்.
இருவரும் அந்த பால்கனிக்கு ஏறி கதவின் அருகில் வந்து நின்றனர்.
கதவு திறந்து தான் இருந்தது. ஆனாலும் உள்ளே எப்படி போவது என்று நினைத்து வெளியில் இருந்த காலிங் பெல்லை அடித்தனர்.
நிதின் மூட் அவுட்டில் இருந்ததினால் வெளியில் வரவில்லை…. ஹரி தான் வெளியில் வந்தான்.
ஹரியை அங்கே ப்ரீத்தி எதிர்பார்க்கவில்லை…….
கதவின் அருகில் நின்று கொண்டிருந்தவள், ஹரி வரவும் சற்று பின் போனாள். பேச்சும் எழவில்லை.
அவனை பற்றி தான் கேட்கவந்தாள், ஆனால் அவனிடம் சரளமாக பேச முடியாமல் தயங்கி நின்றாள்.
கதவின் அருகில் வந்ததும் தான் ஹரி ப்ரீத்தியைப் பார்த்தான், அவனும் ப்ரீத்தியை எதிர்பார்க்கவில்லை. இனி திரும்பி போக முடியாது என்று தெரிந்தவனாக, ஹரி அவளை யாரென்றே தெரியாதது போல,
“சொல்லுங்க, யார் நீங்க? என்ன வேணும்?”, என்று ரகுவை பார்த்ததும் கேட்டான்……
“இவனுக்கு என்னை தெரியவில்லையா, ஒரு வேளை பாய் கட்டில் இருந்து முடி வளர்த்ததினால் தெரியவில்லையோ”, என்று ப்ரீத்தி ஹரியையே பார்த்தாள்.
“இங்க ஒரு சார் வந்தாங்க இல்லையா, அக்காக்கு தெரிஞ்சவங்க, ஒரு டீடெயில் கேட்கணும்”, என்பது போல ரகு சொல்ல,
ஹரி, “நிதின்”, என்று குரல் கொடுத்தான்.
நிதின் வரவும், “இவங்க உன்னை தேடி வந்திருக்காங்க”, என்று ப்ரீத்தியையும் ரகுவையும் காட்ட,
“என்ன”, என்பது போல இருவரையும் நிதின் பார்க்க….
“ப்ரீத்தி பேசு”, என்றான் ரகு.
“இவனுக்கு என்னை தெரியவில்லையா”, என்று அதே எண்ணத்தில் ப்ரீத்தி நின்று கொண்டிருக்க….
ப்ரீத்தி அப்படியே நிற்கவும், ரகுவாக, “அக்காக்கு ஒருத்தர் பத்தி கேட்கணும்னு வந்தா”, என்று நிதினை பார்த்து சொல்லியவன்,
“ப்ரீத்தி கேளு”, என்றான்…..
ப்ரீத்தி நைட் பேன்ட் ஷர்ட்டில் இருந்தாள், முடியை எப்போதும் போல போனிடெயில் போட்டிருந்தாள்.
அப்போதும் ப்ரீத்தி அப்படியே நிற்கவும், “ப்ரீத்தி”, என்று மெதுவாக அவளின் கை பிடித்து அசைக்கவும்,
ரகுவை பார்த்தாள்,
“யாரையோ கேட்கணும்னு சொன்னியே, கேளு!”, என்று ரகு சொல்லவும்,
“இவனுக்கு தன்னை அடையாளம் கூட தெரியவில்லை, இவனைப் போய் நான் கேட்பதா”, என்று நினைத்தவள், “வேண்டாம், வா!”, என்று ரகுவிடம் சொல்லி, திரும்ப வேகமாக இறங்கி பாதி படியில் அவளின் வீட்டு படிக்கு தாவி ஏற……
“இவ தானே கூப்பிட்டா, ஏன் இப்படி……?”, என்று புரியாமல்…..
“சாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டோம்!”, என்று சொல்லி ரகு ப்ரீத்தி சென்ற வழி சென்றான்.
ஹரியின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“என்னடா நடக்குது”, என்பது போல நிதின் அவனை பார்க்க……
“நாம பொண்ணுங்களை நினைச்சு, நாம அவங்க பின்னாடி சுத்தினா பத்தாது, அவங்க நம்மை நினைக்க வெக்கணும், நம்ம பின்னாடி சுத்த வெக்கணும்”, என்ற காதலின் முதல் இலக்கணத்தை சொல்லி ஹரி செல்ல…..
வாய் பிளந்து பார்த்திருந்தான் நிதின்.
காலையில் இவன் பேசியது என்ன? இப்போது இவன் பேசுவது என்ன? முன்னுக்கு பின் முரணாக பேசும் ஹரியை பார்த்தது பார்த்தபடி நின்றான் நிதின்.