மலர் 8:

அதன் பிறகு நடந்த வேலைகள் அனைத்தும் அசுர வேகத்தில் நடைபெற்றது.கவி பாரதிக்கு சற்றும் நம்பிக்கை வரவில்லை. வெற்றி திருமணத்திற்கு சரி சொல்லிவிட்டான்..என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து அவளுக்கு மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

தான் கேட்ட விஷயம் உண்மைதானா..? என்று பலமுறை அவளுக்கு அவளாகவே கேட்டுக் கொண்டாள்.

வெற்றியின் வீட்டில் சொல்லவே வேண்டாம்.எல்லாம் தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது.வெற்றியின் அண்ணிகள்… கலா,தாரணிக்கும் இதில் மிகுந்த சந்தோசம்.

அனைத்து ஏற்பாடுகளும் அதி தீவிரமாய் நடக்க….திருமணத்தை தேனியில் தான் வைக்க வேண்டும் உறுதியாக சொல்லி விட்டான் வெற்றி.

இவன் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே மேல் என்று எண்ணிய குடும்பத்தினரும்…அவன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டினர்.

சொந்த வேலை விஷயமாக சென்னை சென்றிருந்த சாரதியின் காதுகளுக்கு செய்தி சற்று தாமதமாக போய் சேர….வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் அங்கிருந்து கிளம்பினான்.

“இன்னும் யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்கணும்….? என்றார் விஜயன்.

அவர்கள் பத்திரிக்கை வைப்பதற்காக சென்னை சென்றிருந்தனர். மறக்காமல் ஒவ்வொரு சொந்தமாய் நியாபகப்படுத்தி அழைப்பிதல் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

“இன்னும் சத்யா அண்ணி குடும்பத்துக்கு வைக்கலையே..? என்றார் தனம் தவிப்புடன்.

“கண்டிப்பா கவி இதுக்கு ஒத்துக்க மாட்டா…! என்றார் விஜயன்.

“அதுக்காக அப்படியே விட்டுட்ட முடியுமா….? என்றார் தனம்.

“நாம எப்படி அவங்க வீட்ல போய்..அவங்களை நேருக்கு நேரா பார்க்கிறது…? என்று விஜயன் தயங்க…

“அதெல்லாம் பார்த்தா சரி வருமா…?இங்க வந்தது வந்துட்டோம்… அவங்களுக்கும் வச்சிட்டு போய்டலாம்..! என்றார் தனம் பிடிவாதமாக.

“என்னமோ சொல்ற…?ஆனா அவங்க நம்மை எப்படி வரவேற்பாங்க என்று தெரியலை…அன்னைக்கு மதுரைக்கு கல்யாணத்துக்கு வந்திருந்தப்ப கூட..நம்ம கூட பேசலை…அதான் யோசனையா இருக்கு…! என்றார்.

“அவங்க நம்மை அடிச்சு விரட்டினாலும் பரவாயில்லை…நாம பத்திரிகை வச்சிட்டு வந்திடலாம்.. என்று பிடிவாதமாக அழைத்து  சென்றார் தனம்.

“சரி…இப்பவே இருட்ட போகுது…அவங்களுக்கு வச்சிட்டு அப்படியே கிளம்பலாம்..! என்றபடி இருவரும் சத்யா-திவாகர் வீட்டை அடைந்தனர்.

அந்த மாலை வேளையில்….அவர்களை தங்கள் வீட்டில் எதிர்பார்க்கவில்லை…சத்யாவும்,திவாகரும்.ஏனோ அவர்களை உள்ளே அழைக்கவும் மனம் இல்லை.அதற்காக வீட்டிற்கு வந்தவர்களை திருப்பி அனுப்பும்…பண்பும் அவர்களிடம் இல்லை.

“வாங்க..! என்றார் சத்யா வேண்டா வெறுப்பாய்.அவர்களின் அழைப்பு உதட்டில் இருந்து தான் வந்தது..மனதில் இருந்து வரவில்லை என்பதை உணர்ந்த விஜயன்…

“கவிக்கு கல்யாணம்…அதான் உங்களுக்கும் ஒரு எட்டு சொல்லிட்டு போகலாம் என்று… என்று அவர் சொல்லி முடிக்க போக…

“அப்படியா..ரொம்ப சந்தோசம்..! என்றார் திவாகர் முகம் எங்கும் மகிழ்ச்சியுடன்.

சத்யாவிற்கு ஏனோ அதை ரசிக்க முடியவில்லை.ஒப்புக்கு தலையை ஆட்டி வைத்தார்.

“அப்ப நாங்க கிளம்புறோம்..!என்று அவர்கள் எழுந்து நிற்க..

“இருங்க சாப்பிட்டு போகலாம்..! என்றார் திவாகர் தர்ம சங்கடமான நிலையில்.

“அதனால் என்ன அண்ணா…பரவாயில்லை… என்றபடி இருவரும் கிளம்பி சென்றனர்.

அவர்கள் வெளியேறுவதற்கும்…பனி மலர் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

அவளைப் பார்த்து திகைத்தவர்கள்….அவளிடம் எப்படி பேசுவது என்று தயங்க…

“எப்படி இருக்கிங்கம்மா…எப்படி இருக்கிங்கப்பா..? என்றாள் அவளாகவே.

அவள் கேட்ட கேள்வியில் உண்மையில் உடைந்து போனார்கள்… இருவரும்.

“நல்லாயிருக்கோம் மலர்..நீ எப்படிம்மா இருக்கே..? என்றார் தனம்.

“நானும் நல்லா இருக்கேன்ம்மா…? என்றவள்…என்ன விஷயம்…திடீர்ன்னு வந்திருக்கிங்க..? என்றாள்.

“அது..கவி..கவிக்கு கல்யாணம் மலர்.அதான் பத்திரிக்கை வைக்கலாம் என்று வந்தோம்..! என்றார் தனம்…அவள் முகம் பார்க்காமல்.

“அட..நல்ல விஷயத்தை ஏன் இவ்வளவு சோகமா சொல்றிங்க..! நாங்க கண்டிப்பா வருவோம்..நீங்க கவலைப்படாம போங்க..! என்றாள் பெரிய மனுஷியாய்.

“எங்க மேல் உனக்கு கோபம் இல்லையாமா..? என்றார் விஜயன்.

“என்னக்கென்ன கோபம்..?? என்றாள் கேள்வியாய்.

“அன்னைக்கு மதுரையில் சங்கரி கல்யாணத்தில் பார்த்துட்டு கூட..பேசாம போயிட்டியேமா… என்றார் தனம்.

“அது வந்தும்மா…நான் அன்னைக்கு உங்களை கவனிக்கலை.. எனக்கு அன்னைக்கு கொஞ்சம் மனசு சரியில்லை..அதான்..! என்று பதில் கூறினாள்.

“அப்ப நாங்க கிளம்புறோம்மா…அவசியம் கல்யாணத்துக்கு வரணும்..! என்றபடி சென்றனர்.

உள்ளே நுழைந்த மலரிடம்..அவங்ககிட்ட என்ன பேச்சு உனக்கு.. என்று கடிந்து கொண்டார் சத்யா.

அதுக்காக எப்படிம்மா பார்த்திட்டு பேசாமல் வருவது..? என்று மலர் சொல்ல..

“இப்ப இங்க வந்து பத்திரிக்கை வைக்கலைன்னு யார் அழுதா..? என்றார்.

“நாம கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு போறோம்மா..! என்றாள் தீர்க்கமாய்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மலர்..?” என்று சத்யா கத்த..

“நாம கண்டிப்பா போறோம்மா..!! என்று சொன்னவள் ஒரு அழுத்தமான பார்வையுடன் முடித்துக் கொண்டாள்.

“எதுக்கு போயிட்டு வந்து நீ அழுவதற்கா..? என்றார் சத்யா.

“சாரிம்மா…நான் இனி எதற்காகவும் அழ மாட்டேன்..! என்றாள்.

ஆபீஸ் போயிட்டு கலைச்சு போய் வந்திருக்க பொண்ணு கிட்ட எதுக்கு வாயாடிட்டு இருக்க…மலர் நீ போம்மா…போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா..என்று அனுப்பி வைத்த திவாகர் சத்யாவை முறைத்தார்.

“எப்ப எதை பேச வேண்டும் என்று தெரியாதா சத்யா உனக்கு..? என்று திவாகர் கடிந்து கொள்ள..

“ஆமா…நான் என்ன சொன்னாலும் குத்தம்….என்னமோ பண்ணுங்க..உங்க அளவுக்கு எனக்கு இளகின மனசு கிடையாது.. அவளே இப்பதான் கொஞ்சம் மாறிட்டு வரா…மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா..? என்றார் சத்யா.

“காயம் எரியும் என்று மருந்து போடாமல் இருந்தால் சரியாகுமா…? அவள் காயத்திற்கு மருந்து..நம் காயத்திற்கு மருந்து…இனி அவள் கையில் தான் உள்ளது.இனி அவள் விருப்பம் எதுவோ..அது தான் இந்த வீட்டில் நடக்க வேண்டும்..! என்று தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார் திவாகர்.

சத்யாவிற்கும்…சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

உள்ளே நுழைந்த மலருக்கோ….ஏனோ மனதைப் பிசைந்தது. என்னவென்று புரியாத ஒரு உணர்வு.கையில் இருந்த பத்திரிக்கையில் மாப்பிள்ளையின் பெயரைப் பார்த்தவளுக்கு…. காரணமே இல்லாமல் கண்கள் கலங்கியது.

“நான் என்ன செய்வது செல்வா…? இந்த கல்யாணத்திற்கு நான் போக வேண்டுமா…? நீ சொல்.. என்று மானசீகமாய் செல்வாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் மலர்.

அவள் நினைவுகள்..கொஞ்சம் பின்னோக்கி இழுத்து செல்ல…

“ஹேய் பப்ளிமாஸ்…இறங்கு…இது என் அம்மா.. என்று அவளை இறக்கி விட்டு சத்யாவின் மடியில் அமர்ந்தான் செல்வா.

அந்த அழகிய நினைவுகள் அவளுக்குள் பசுமையாய் விரிய… தன்னை மறந்து இதழ்களில் சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் மலர்.

“நானு..நானு.. என்று மலர் அழுக….

“அச்சோ…என் செல்லக் குட்டி அழறாளே..! டேய் இறங்குடா தடிமாடு.. என்று செல்வாவை இறக்கி விட்டு விட்டு மீண்டும் மலரைத் தூக்கிக் கொண்டார் சத்யா.

“அம்மா….இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை…நீங்க எனக்கு அம்மாவா…? இல்லை அவளுக்கு அம்மாவா…? என்று எகிறினான் பத்து வயது செல்வா.

அவன் பேசுவது புரியாமல்…நான்கு வயது பனி மலர்…தன் முட்டைக் கண்ணை வைத்து முழித்துக் கொண்டிருக்க..

“செல்வா…அப்படியெல்லாம் பேசக் கூடாது கண்ணா….அவளுக்கு யாரும் இல்லை..அதனால் அவள் இனி நம்ம கூட தான் இருப்பா… நீதான பெரிய பையன்..நீதான் அவளை பொறுப்பா பார்த்துக்கணும்..! என்றார் சத்யா.

“அதெல்லாம் முடியாது… என்று செல்வா கால்களை உதைத்துக் கொண்டு அடம்பிடிக்க…அவனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்…பனிமலர்.

அவன் அவளை முறைக்க…அவன் அருகில் சென்றவள்..அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு…அழகாய் சிரிக்க….அதன் அழகில்…ஹேய் பப்ளிமாஸ்.. என்று பக்கத்தில் இருத்திக் கொண்டான் செல்வா.

இப்படித்தான் அவர்களின் உறவு ஆரம்பமாகியது.தாய்,தந்தை இழந்து வந்தவளுக்கு..தன் தாயையும்,தந்தையையும்,அவர்களின் பாசத்தையும் பகிர்ந்து அளித்தான் செல்வா.

அதுவரை ஒற்றைப் பிள்ளையாய் வாசம் செய்த அவனுக்கு…அந்த வீட்டில் இன்னொரு பெண் உடன் வளருவது…முதலில் பிடிக்கவில்லை என்றாலும்…அதன் பிறகு அவளையும் ஏற்றுக் கொண்டான்.

பனி மலருக்கும்…முதலில் அவனைக் கண்டாலே கொஞ்சம் பயம் தான் இருக்கும்…நாட்கள் ஆக ஆக….அவனிடம் இருந்த பயம் சுற்றிலும் விட்டுப் போனவளாய்….அவனை விட…சத்யா-திவாகர் இடத்தில் செல்லமாகிப் போனாள்.

அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான் செல்வா. அவளின் அனைத்து தேவைகளையும் அவன் அறிவான்.

“நான் கூட பயந்துகிட்டே இருந்தேன் சத்யா..ஆனா இப்ப ரெண்டு பேரும் இருக்குறதைப் பார்த்தா அந்த பயம் தேவையில்லாம வந்ததுன்னு தோணுது..! என்றார் திவாகர்.

“ஆமாங்க…!செல்வா இதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று நானும் பயந்தேன்.நல்ல வேளை…அப்படி எதுவும் நடக்கவில்லை… என்று சத்யாவும் சொல்ல…

அந்த இரு மனங்களும்…அவர்களின் ஒற்றுமையிலும்,பாசப் பிணைப்பிலும் நெகிழ்ந்து போயினர்.

அவளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பாதுகாவலனாய் தொடங்கி…அவள் நினைத்த அனைத்தையும் நிறைவேற்றும் தாயுமானவனாகவும் மாறிப் போனான் செல்வா.

தன்னுடைய பத்து வயதில்….தன் கைகளைப் பிடித்து சிரித்த அந்த பனி மலர் தான் அவனுக்கு எப்பொழுதும் நியாபகத்திற்கு வருவாள்.

அவன் அவளை ‘பப்ளிமாஸ்.. என்று அழைப்பதற்கு சரியாக..அவளும் குண்டு குண்டு கன்னங்களுடன்.. கொழுகொழுவென்று இருப்பாள்.

“இப்படி ஒரு தேவதைப் பெண்ணை உடன் இருந்து வளர்க்க…  என் தங்கைக்கும்……அவள் கணவனுக்கும் கொடுத்து வைக்கவில்லையே..! என்று அவ்வப்பொழுது நெக்குருகிப் போவார் திவாகர்.

செல்வாவுடன் இருந்த அனைத்து நாட்களும் அவளுக்கு பசுமையை மட்டுமே நியாபகப் படுத்தும்.

சத்யாவின் உறவுகள்..எத்தனையோ பேர்…இதென்ன நாத்தனார் பெண்ணை..இப்படி செல்லாம் கொடுத்து வளர்க்கிறிங்க… இதெல்லாம் சரிப்படாது…அவளை ஏதாவது நல்ல ஆசிரமமா பார்த்து சேர்த்து விடு… என்று தவறான புத்திமதிகள் சொன்ன போதும்..அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்…மலரை வளர்த்தனர்.

செல்வாவிற்கும் இப்படி எல்லாம் பேசும் உறவுகளை சுத்தமாய் பிடிப்பதில்லை.அதுவும் மலரை யாராவது ஒரு வார்த்தை சொன்னால் பொங்கி விடுவான்.அந்த அளவிற்கு அவள் மேல் உயிராய் இருந்தான்.

அதன் காரணமாகவே உறவுகளுடன் அவர்கள் அதிகம் தொடர்பில் இல்லாமல் இருப்பது போன்று பார்த்துக் கொண்டனர்.

பனி மலரும்….தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தாள்.செல்வாவோ…தன் படிப்பை முடித்து விட்டு…வேலைக்கு சேர்ந்திருந்தான்.

“ஹேய் பப்ளி…எனக்கு வேலை கிடைச்சுடுச்சு.. என்று சந்தோஷமாக கூவியபடி வீட்டினுள் வர…

“அடக் கடவுளே….உனக்கு யார் இவ்வளவு சீக்கிரம் வேலை கொடுத்தா..? என்று மலர் யோசிக்க…

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது…நான் என்ன உன்னை மாதிரி மக்கு பிள்ளையா…? என்றபடி துரத்த…

“வேண்டாம் செல்வா…ஏதோ தெரியாம சொல்லிட்டேன்…வேண்டாம்.. என்றபடி அவள் ஓட…

“நில்லு…நில்லுன்னு சொல்றேன்ல….அம்மா அவளைப் பிடிங்கம்மா.. என்றான் செல்வா.

“ஆரம்பிச்சுட்டிங்களா..? என்று சத்யா நொந்து கொள்ள…

“சரி..சரி..சரண்டர்…எங்கே ஸ்வீட்….எங்கே காரம்… என்று மலர் கேட்க…

“இந்தா ஸ்வீட்… என்றபடி மலரிடம் அந்த இனிப்பு பெட்டி முழுவதையும் கொடுத்தான்.

“முழுசா எனக்கா…? என்றாள் வாயைப் பிளந்து.

“ஆமாம்டி பப்ளிமாஸ்…எல்லாமே உனக்கு தான்..நல்லா தின்னு தின்னு…பண்ணிக் குட்டி மாதிரி பெருத்துடு…அப்பறம் பாவம்.. உன்னைக் கட்டிக்க போறவன்…. என்று செல்வா நக்கலடிக்க..

“பாருங்க சத்யாம்மா.. என்று தன் அத்தையிடம் தஞ்சம் புகுந்தாள் பனிமலர்.

“எதுக்குடா பிள்ளைய கண்ணு வைக்குற…? என்றார் சத்யா.

“என்னது புள்ளையா…யாரு இவளா…? நல்லா பாருங்கம்மா…எப்படி சிலிண்டர் மாதிரி இருக்கான்னு…? என்று கிண்டலாய் சொல்ல..

“நான் அவ்வளவு குண்டாவா இருக்கேன்…! என்றவளின் கண்கள் அழுவதற்கு தயாராய் இருக்க…

அவளின் முகத்தைப் பார்த்தவன்….சும்மா சொனேன் பப்ளி…ரொம்ப இல்ல…கொஞ்சம் மட்டும் குண்டா இருக்க.. என்றபடி ஓடி விட்டான்.

அவன் ஓடுவதைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டாள்.அவன் எவ்வளவு சீண்டினாலும் அவளுக்கு கோபமே வராது. அவர்களுக்கு இடைப்பட்ட புரிதல் அவ்வாறு இருந்தது.

செல்வாவிற்கும் அவளை வம்பு இழுக்கவில்லை என்றால்.. அன்றை நாள் முடிவடையாது.

இப்படி சந்தோஷத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் வாழ்வில்….புயல் வீசத் தொடங்கினால்….?? வீசத் தொடங்கியது.

பனிமலர் தன் கல்லூரியின் முதல் நாளை வெகு ஆவலுடன் சந்திக்க காத்திருந்தாள்.ஏனோ..படபடப்பாய் இருந்தது.அதற்கு ஆறுதல் அளித்தவனும் அவனே…!படபடப்புடன் முதல் நாள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்.

“மலர்..மலர்…சாப்பிட வாம்மா…! என்ற சத்யாவின் குரலில்… சிந்தனையில் இருந்து மீண்டாள்.ஏனோ சட்டேன்று கனவு உலகத்தில் இருந்து வெளியில் வந்ததைப் போன்று இருந்தது அவளுக்கு.

ஆயாசமாய் மூச்சை விட்டவள் எழுந்து சாப்பிட செல்ல…அவள் பாதியில் விட்டு சென்ற நினைவுகள்…அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

அங்கு தேனியில் திருமண ஏற்பாடுகள் படு ஜோராய் நடந்து கொண்டிருந்தாலும்…வெற்றியால் ஏனோ அதில் ஒன்ற முடியவில்லை. மனதில் உள்ள பாரங்கள் அவனை வெகுவாய் அழுத்திக் கொண்டிருந்தது.

கவி பாரதிக்கும் அதே நிலைதான்….

அவள் துறை சார்ந்த யாருக்கும் அழைப்பு கொடுக்க கூடாது என்பது வெற்றியின் கட்டளைகளில் ஒன்றாக இருந்தது.

அவளும் அவளின் துறையில் யாருக்கும் சொல்லவில்லை. அதனால் வரும் பிரபலத்தை அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று அமைதியாய் இருந்தாள்.

“என்ன கொழுந்தனாரே..! ஏன் முகத்தை இப்படி உம்முன்னு வச்சிருக்கிங்க..? என்றாள் கலா.

“அப்படியெல்லாம் இல்லை அண்ணி..ஏதோ ஒரு யோசனை..! என்று மழுப்பினான் வெற்றி.

“ஏன் வெற்றி..உனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் தானே..? என்றாள் கலா சந்தேகமாய்.

“உங்களுக்கு எதுக்கு அண்ணி இப்படி ஒரு சந்தேகம்..? என்றான்.

“இல்லை உங்க முகமே சரியில்லை..எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கீங்க…? அதான் கேட்டேன்..! என்றாள்.

“என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது…! என்று சிரிக்க முயன்றான்.

“அப்படித்தான் தெரியுது..! என்றபடி சென்றாள் கலா.

தீவர சிந்தனையில் இருந்தான்.சாரதியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்..என்ற ஒரு உணர்வும் அவனுக்கு இருந்தது.

வெற்றி எண்ணியதைப் போல…சாரதியும் தீயின் வேகத்தோடு தான் இருந்தான்.

‘அன்றைக்கு என்னவோ பெரிய இவன் மாதிரி பேசினான்…எனக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று..! இப்ப என்னடான்னா நான் இங்க இல்லாத சமயம் பார்த்து கல்யாணத்தையே முடிக்க பார்க்கிறானா..? என்று மனதிற்குள் எண்ணியவன்..

‘பார்க்கிறேன்..! இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது என்று..? என்று மனதிற்குள் திட்டங்களை வகுத்தபடி நடந்து கொண்டிருந்தான்.

திருமண நாள் நெருங்க நெருங்க..ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு உணர்வு..அதை யாராலும் பிரித்தறிய முடியாது.

அனைவரும் எதிர்பார்த்த அந்த நாளும் விடிந்தது…..

இந்த விடியல்….யாருக்கு நல்ல விடியல்….???

 

நானொரு சோக சுமைதாங்கி…

துன்பம் தாங்கும் இடிதாங்கி…

பிரிந்தே வாழும் நதிக்கரை போல..

தனித்தே வாழும் நாயகி…

இணைவது எல்லாம் பிரிவதற்காக..

இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக…

மறந்தாள் தானே நிம்மதி…!