அத்தியாயம் – 4
ஆராதனா அவர்கள் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்தான் அனீஷ். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்தவளுக்கு அது கணவனென்று புரிய இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
“என்ன பண்ணுற ஆரா??” என்றவன் அவளை வேலை செய்ய விடாமல் அவள் கழுத்தில் முகம் பதித்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
“வேலை செஞ்சுட்டு இருக்கவளை வேலை செய்யவிடாம இப்படி தான் செய்வீங்களா??” என்றாள்.
“இதுவும் செய்வேன் இன்னமும் செய்வேன் யார் கேட்பாங்க??” என்றவன் மேலும் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
“என்னங்க ப்ளீஸ் கொஞ்சம் நேரம் என்னை விடுங்களேன். இந்த விரிப்பை மட்டும் மாத்திக்கறேனே??” என்று கெஞ்சினாள். “சரி போ… ஏதோ நீ ரொம்ப பாவமா கேட்குறியேன்னு விடுறேன்” என்றவன் ஒருவழியாக அவன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தான்.
அவன் கைபேசி ஒலித்து தான் இருப்பதை காட்ட அதை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான். யாரிடமோ பேசிவிட்டு வந்தவனின் முகம் யோசனையை சுமந்திருந்தது.
ஆராதனா விரிப்பை விரித்து முடித்தவள் அவன் யோசனை முகம் கண்டு அவனிடம் சென்றாள். “என்னங்க என்னாச்சு??” என்று கேட்டாள்.
“ஆரா தப்பா எடுத்துக்க மாட்டியே…” என்று இழுத்தான்.
“என்னன்னு சொல்லுங்க நான் என்ன தப்பா எடுத்துக்க போறேன்னு நீங்க நினைக்கறீங்க??” என்றாள்.
“இல்லைடா இன்னைக்கு ஒரு ஆபரேஷன் ஒண்ணு இருக்கு. ஆபரேஷன் பண்ண வேண்டிய டாக்டர்க்கு இன்னைக்கு வரமுடியாத சூழல். நான் போயாகணும் அதான்” என்று அவள் முகத்தை பார்த்தான்.
“அதுகென்னங்க தாராளமா போயிட்டு வாங்க, இதுல நான் தப்பா எடுத்துக்க என்னங்க இருக்கு??” என்றாள் சாதாரணமாய்.
“ஹேய் நிஜமா தான் சொல்றியா?? கல்யாணம் ஆன முதல் நாளே உன்னை தனியா விட்டுட்டு போறேன்னு உனக்கு பீலிங்க்ஸ் எல்லாம் இல்லையே??”
“அப்படி எல்லாம் எதுவுமே இல்லைங்க. நீங்க இங்க இருந்தா என்னை ஒரு வேலையும் பார்க்க விடாம சுத்தி சுத்தி வருவீங்க. சோ நீங்க தாராளமா போயிட்டு வாங்க” என்றாள் அசராமல்
“அடிப்பாவி கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் தான் ஆகியிருக்கு அதுக்குள்ள எந்த கவலையும் இல்லாம நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்றியே??” என்று போலியாக வருத்தப்பட்டான் அவன்.
அவளோ அவன் தப்பாக எடுத்துக் கொண்டானோ என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள். “என்னங்க உங்க வேலை பத்தி எனக்கு தெரியாதா?? கடவுளுக்கு சமானமான ஒரு வேலையில இருக்கீங்க!!!”
“ஒரு உயிரை காப்பாத்தற உன்னத வேலை பார்க்கற உங்களை வேலை பார்க்க விடாம நான் தடுப்பேனா?? நீங்க என் பக்கத்துல இருக்கணும்ன்னு எனக்கும் ஆசை தான்”
“அதுக்காக நீங்க என் முந்தானையே பிடிச்சுட்டு சுத்தணும்ன்னு எல்லாம் நான் நினைக்க மாட்டேங்க… நீங்க நேரமா கிளம்பி போயிட்டு வாங்க” என்றாள் நீளமாக.
அவள் பேச்சு அவனை கவர்ந்தது. திருமணம் முடிந்தே மறுநாளே வேலை இருக்கிறது என்று கணவன் கிளம்பினால் எந்த பெண்ணுமே சுணக்கமே கொள்வாள், ஆனால் இவளோ தன்னை புரிந்து இவ்வளவு தூரம் பேசுகிறாளே!!! என்று ஆச்சரியமாய் பார்த்தவனுக்கு சந்தோசமாயிருந்தது.
அவளை தன்புறம் இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டவன் சிறிது நேரம் எதுவுமே பேசாமலே இருந்தான். ஆராதனாவோ அவன் மேலும் எதுவும் குறும்பு செய்வான் என்று எதிர்பார்த்திருக்க அவனோ அவளை வெறுமே அணைத்து மட்டுமே இருந்தான்.
அப்போது அவர்கள் அறைக்கதவு படாரென்று திறந்ததில் ஆராதனா அவனிடம் இருந்து சட்டென்று விலகினாள். ‘என்ன இது கதவு திறந்திச்சு யாருமேகாணோம்’ என்று விழித்தாள் ஆராதனா.
இருவரும் கட்டிலின் மறுபுறம் நின்றிருக்க திறந்திருந்த கதவின் வழியாக நான்கு வயது பக்கத்து வீட்டு வாண்டு அஸ்வந்த் வந்திருந்தான்.
“ஆரா என்ன முழிக்கற இரு இரு, யாரு வர்றாங்கன்னு நீயே பாரு…” என்று அவன் கை நீட்டி காட்டவும் அஸ்வந்த் ஓடி வந்தான்.
“என்னடா இங்க என்ன பண்ணிட்டு இருக்க??” என்றான் அனீஷ் அவனை பார்த்து.
“அங்கிள் எனக்கு ஜுரம் அடிக்குது, டானிக் தாங்க??” என்றான்.
“மறுபடியும் உனக்கு ஜுரமா??” என்றவன் அவன் உயரத்திற்கு குனிந்து முட்டி போட்டு அமர்ந்தான்.
“என்னங்க குட்டி பையன் காய்ச்சல்ன்னு சொல்றான்?? நீங்க அவன்கிட்ட சாவகாசமா பேசிட்டு இருக்கீங்க?? என்னன்னு பாருங்க??” என்று பரபரத்தாள் அவன் மனையாள்.
“ஆரா இவனை பத்தி உனக்கு தெரியாது. ஒரு முறை இவனுக்கு ஜுரம்ன்னு ஒரு இனிப்பு டானிக் கொடுத்தேன். அதுல இருந்து இவனுக்கு இதே வேலையா போச்சும்மா. சும்மா சும்மா ஜுரம்ன்னு சொல்லிட்டு இங்க வந்திடுவான், மருந்து கொடுன்னு ஒரே தொல்லை பண்ணுவான்…” என்று அவன் கூறவும் இப்போது ஆராதனாவும் அஸ்வந்தின் உயரத்திற்கு குனிந்து அமர்ந்தாள்.
“ஏன் தம்பி சும்மாவே ஜுரம்ன்னு சொல்றீங்களா??” என்று கேட்கவும் குழந்தை அவளை மேலும் கீழும் பார்த்தான்.
“அங்கிள் இவங்க யாரு??” என்றான்.
“டேய் நேத்து கல்யாணத்துக்கு வந்தே தானே, அப்புறம் என்னடா இப்படி கேட்குற?? இந்த ஆன்ட்டியை தான்டா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்…”
“கல்யாணம் பண்ணிட்டீங்களா??” என்றவன் மேலே ஏதோ யோசனையாய் பார்த்துவிட்டு “அப்போ அங்கிள் எனக்கு எப்போ கல்யாணம் ஆகும், ஆன்ட்டி நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா??” என்று அனீஷிடம் ஆரம்பித்து ஆராதனாவிடம் முடித்தான்.
“டேய் என் பொழைப்புல ஏன்டா மண்ணை அள்ளி போடுற, நேத்து தான் கல்யாணம் பண்ணி இவளை கூட்டிட்டு வந்திருக்கேன். என் பொண்டாட்டியை என் முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றியேடா??” என்றவனை பார்த்து வாய்விட்டு நகைத்தாள் ஆராதனா.
“என்னங்க குழந்தை தான் ஏதோ தெரியாம கேட்குறான். நீங்க வேற அவனுக்கு சரியா பேசிட்டு” என்றவள் குழந்தையிடம் திரும்பி “குட்டி தம்பி உங்களுக்கு இப்போ கல்யாண வயசில்லை சரிங்களா??”
“நீங்களும் அங்கிள் மாதிரி நல்லா படிச்சு பெரிய ஆளு ஆனதுக்கு பிறகு உங்களுக்கு கல்யாணம் பண்ணுவாங்க. இப்போ நீங்க ஜாலியா விளையாடுவீங்களாம். ஆன்ட்டி உங்களுக்கு ஒரு சாக்லேட் தருவேனாம்” என்றதும் குழந்தை வந்த விஷயத்தை மறந்து போனது.
“ஹைய் சாக்கி தருவீங்களா?? எப்போ தருவீங்க?? சீக்கிரம் தாங்க நான் போய் விளையாடணும்” என்றதும் அவள் கைப்பையில் வைத்திருந்த கிட்கேட்டை எடுத்து வந்து நீட்ட அவன் அதை வாங்கிக் கொண்டு ஓடியே விட்டான்.
“என்ன ஆரா மாயம் பண்ணுற?? பையன் இப்படி சமத்தா சொன்ன பேச்சை கேட்டு ஒடிட்டானே??” என்றான் அனீஷ்.
“ஏங்க நீங்களாம் என்ன டாக்டரோ?? குழந்தைங்களுக்கு சாக்லேட்ன்னா இஷ்டமா சாப்பிடுவாங்க. அதை பத்தி பேசினதும் அவனும் அவன் பேசினதை எல்லாம் மறந்திட்டு சாக்லேட் ஞாபகத்துல இருந்தான்”
“நான் என்னமோ மேஜிக் பண்ண மாதிரி பேசிட்டு இருக்கீங்க??” என்று சிரித்தாள்.
“உன்னை…” என்றவன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான். “நீங்க ஆஸ்பிட்டல் போகப் போறதில்லையா?? இங்கவே டேரா போட போறீங்களா??” என்றாள்.
“போகணும் ஆனா போகவே மனசில்லை” என்றவனின் பார்வை அவள் இதழை வருடியது. “நான் உன்னை தனியாவிட்டு போறேன்னு உனக்கு வருத்தமில்லையே” என்றான்.
“என்னது தனியா விட்டு போறீங்களா?? வீட்டில இவ்வளவு பேரு இருக்காங்க என்னமோ நான் மட்டும் தனியா இருக்க போற மாதிரி சொல்றீங்க??” என்றாள்.
அவள் கண்களை நேருக்கு நேராய் நோக்கியவன் “ஐ லவ் யூ ஆரா…” என்றான் பட்டென்று.
அவள் கண்களில் ஒரு மின்னல் ஓட அவனை குறும்பாய் பார்த்தவளின் இதழை தன் வசமாக்கியவன் மெதுவாய் அவளை விடுவித்து விட்டு “போயிட்டு சீக்கிரம் வந்திடறேன்” என்றுவிட்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் மீண்டும் அறையை ஒழுங்குபடுத்திவிட்டு யாழினியை காணச் சென்றாள். அவள் உடல்நிலை சரியாய் இல்லை என்பதை அறிந்து சுந்தராஜ் திலகவதி முதலில் வந்து அவளை நலம் விசாரித்து விட்டு சென்றனர்.
வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் என வந்து பார்த்து சென்றனர். இடையில் ஆராதனா ஒரு முறை அவளிடம் பேச முயல யாழினியோ அவளுக்கு பதில் கொடாமல் வந்திருந்தவர்களிடம் பேசியதை கண்டு ஆராதனாவிற்கு கோபம் வந்தது.
ஒவ்வொருவராக வந்து சென்ற பின் இனி யாரும் வரமாட்டார்கள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டவள் யாழினியை பார்த்து பொரிய ஆரம்பித்தாள்.
“உன் மனசுல என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க, போனா போகுது!!! போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்து போனா ரொம்ப தான் ஆடுற??”
“நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன், தெரிஞ்சோ?? தெரியாமலோ?? பிடிச்சோ?? பிடிக்காமலோ?? நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கு வாழ வந்திருக்கோம்”
“நீ என்னை உன் தோழியா நினைச்சு பேச வேண்டாம். நீயும் நானும் ஒரே வீட்டில இருக்கோம் அப்படிங்கறதுக்காக வாச்சும் என்கிட்ட பேசலாம்ல??”
“அப்படி என்னடி பிடிவாதம் உனக்கு. நீ எப்பவுமே இப்படி தான் நீயா மனசுல ஒண்ணை நினைச்சுகிட்டு அது தான் சரின்னு அதையே பிடிச்சுட்டு தொங்க வேண்டியது”
“என்னைக்கு தான் உன் பிடிவாதத்தை விடப் போறியோ?? எனக்கு தெரியலை. கடைசியா சொல்றேன் ஒழுங்கா என் கூட பேசு. என் தோழியா இல்லைன்னா கூட பரவாயில்லை”
“உனக்கு அக்காங்கற முறையிலயாச்சும் பேசு?? என்ன?? என்ன முறைக்கிற?? உன் புருஷனோட அண்ணாவை கட்டினதால நான் தான் உனக்கு அக்கா முறை ஆகுறேன்”
“இனி இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன் அவ்வளோ தான் பார்த்து நடந்துக்கோ. வெறும் வாயை மென்னுட்டு இருக்கவங்களுக்கு நீயே அவலாகிடாதே பார்த்துக்கோ??” என்று கடுமையாகவும் கோபமாகவும் பேசிவிட்டு வெளியிறினாள்.
ஆராதனா சென்றதும் யாழினி யோசிக்க ஆரம்பித்தாள். ‘ச்சே இவ சொல்றது போல நான் வீண் பிடிவாதம் தான் பிடிக்கிறேனோ??’
‘அவளை மன்னிக்கறனோ?? இல்லையோ?? அவ சொன்னது போல ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம்ங்கறதுக்காக வாச்சும் நான் அவ கூட பேசியிருக்கலாம்’ என்று தன்னையே எண்ணி நொந்துக் கொண்டாள்.
யாழினியை பார்த்துவிட்டு சென்ற திலகவதிக்கு மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. யாழினி ஆராதனா போல் இல்லை என்று அவர் மனம் கூறிக் கொண்டிருந்தது.
எல்லோருமே ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை என்பதை உணர்ந்தவர் தான் என்றாலும் யாழினி ஒட்டுதலாக இருக்க மாட்டாளோ என்று மனதின் ஓரம் அவருக்கு அரித்துக் கொண்டிருந்தது.
சரியாக அந்நேரம் அவரை தேடி வந்தாள் ஆராதனா. அவளின் உறவினர்கள் எல்லாரும் காலையிலேயே கிளம்பிவிட்டிருக்க வீட்டில் சிலர் மட்டுமே இருந்தனர்.
மதிய உணவை பற்றி கேட்கலாம் என்று அவரிடம் வந்து நின்றாள் அவள். “அத்தை என்ன பண்றீங்க இங்க தனியா?? என்னைவிட்டு” என்று ஆரம்பித்தவளை வாஞ்சையாய் பார்த்தார்.
ஏனோ தனக்கு ஒரு மகள் இருந்தால் இப்படி தான் இருந்திருப்பாளோ குறும்பு செய்துக் கொண்டு என்று அவருக்கு தோன்றியது.
“உன்னைவிட்டு நான் என்னடா பண்ணப் போறேன். ஆமா என்னை தேடி வந்திருக்க என்னடா வேணும்” என்றார்.
“அத்தை… அது அது வந்து…”
“என்னடா என்னன்னு சொல்லு, என்கிட்ட எதுவும் கேட்கணுமா??”
“அது வந்து அத்தை நீங்க யாழினியை தப்பா நினைக்காதீங்க. அவ ஒரு பிடிவாதக்காரி மத்தப்படி நல்லவ அத்தை. என்னோட பிரண்டுன்னு நான் அப்படி சொல்லலை”
“எனக்கு பல வருஷமா அவளை தெரியும் அப்படிங்கறதால சொல்றேன். எனக்கு தெரியும் அத்தை நீங்க அவளை பார்க்க வந்தப்போ அவ பட்டும்படாம பேசினதை நானும் பார்த்தேன்”
“அப்போவே உங்க முகம் வாடி போனதையும் பார்த்தேன். நீங்க வருத்தப்படாதீங்க, அவளுக்கு இந்த இடம் புதுசில்லையா அதான் பழக சங்கடப்படுறா, வேற ஒண்ணுமில்லை”
“எனக்கு புதுசு தானே நான் மட்டும் எப்படி இப்படி வளவளன்னு உங்களை அறுக்கறேன்னு நீங்க நினைக்கறது எனக்கு புரியுது அத்தை. எனக்கு புது ஆளுங்க பழைய ஆளுங்கன்னு எப்பவும் பாகுபாடு எல்லாம் இல்லை”
“என் மனசுக்கு பிடிச்சிட்டா அவங்களை போட்டு அறுத்து தள்ளிடுவேன், இப்போ உங்களை போட்டு அறுத்துக்கிட்டு இருக்க மாதிரி” என்றாள் குறும்பாய்.
“சீய் வாயாடி!!!” என்றவர் அவளை செல்லமாய் தட்டிவிட்டு மீண்டும் தொடர்ந்தார். “எதுக்கு எனக்கு இவ்வளவு விளக்கம் எல்லாம் கொடுக்கறேடா. எனக்கு உன்னையும் புரியுது உன் தோழியையும் புரியுது. நானும் உங்க வயசை தாண்டி தானே வந்திருக்கேன்”
“அப்புறம் ஏதோ சொன்னியே நீ அறுக்கறேன்னு எனக்கு இப்படி பேச ஆளு கிடைக்காதான்னு ரொம்ப நாளா ஏங்கிக் கிடக்கேன். சின்…” என்றவர் இடை நிறுத்தினார்.
“என்னாச்சு அத்தை??” என்றாள்.
“காலையில பார்த்திருப்பியே சின்ன பையன் அஸ்வந்த் அவன் தான் எப்பவாச்சும் இங்க வந்து லொடலொடன்னு பேசிட்டு போவான். அது தான் எனக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கும்” என்றார் அவர்.
“அப்போ அத்தை நீங்க என்னை லொடலொடன்னு சொல்றீங்களா??” என்றாள்.
“உன்னை நான் எப்போடா அப்படி சொன்னேன்??”
“இப்போ சொன்னீங்களே அந்த அஸ்வந்த் பேசுறதை பத்தி அவன் லொடலொடக்குறான்னா நானும் அப்படி தானே??” என்றவளை வெகு ஆச்சரியமாய் பார்த்தார் அவர்.
ஏனோ மனதிற்குள் ஒரு நிம்மதி வந்தது அவருக்கு. “சரி அதெல்லாம் விடு நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. உனக்கும் யாழினிக்கும் என்னடா பிரச்சனை”
“உங்க வீட்டில சொன்னாங்க நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்ன்னு ஆனா இப்போ ஒரு சின்ன சண்டை பேசாம இருக்கீங்கன்னு. என்னடா விஷயம் ஏன் அப்படி இருக்கீங்க??” என்றார் திலகவதி.
“அத்தை என்ன நீங்க இப்போவே எல்லாம் கேட்குறீங்க?? இவ்வளவு சீக்கிரம் எல்லாம் சொல்லிட்டா என்ன சுவாரசியம் இருக்கும். அந்த கதை எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமா சொல்றேன் அத்தை”
“உனக்கு எப்போ சொல்லணும்ன்னு தோணுதோ?? அப்போ சொல்லு” என்றார் அவர்.
“அத்தை நீங்க தப்பா எதுவும் எடுத்துக்கலையே. எனக்கு சொல்றதை பத்தி ஒண்ணுமில்லை இவ்வளவு சீக்கிரம் பிளாஷ்பேக் சொல்லி உங்களை போரடிக்கணுமான்னு ஒரு யோசனை அதான் அத்தை” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.
“உன்னை பார்த்தா நீ பேசுறதை கேட்டா மனசுக்கு எவ்வளவு இதமா இருக்கு தெரியுமாடா… ஒரு சிலர் பார்த்தா!!! பேசினா!!! தான் இப்படி தோணும். நீ இவ்வளவு நாளா எங்கடா இருந்தே??”
“இந்த அனீஷுக்கு நானும் இரண்டு வருஷமா பொண்ணு தேடினேன். நீ அப்போவே என் கண்ணுல பட்டிருக்க கூடாதா??” என்றார் அவர்.
“ஹா ஹா என்னை பார்த்தா இப்படி சொல்றீங்க. எங்கம்மா நீ எப்போடி இந்த வீட்டில இருந்து போவே அப்போ தான் நிம்மதின்னு சொல்லிட்டு இருப்பாங்க. நீங்க என்னடான்னா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே அத்தை” என்று சிரித்தாள்.
“எப்படியோ யாழினியோட அம்மா மட்டும் உன்னை பத்தி சொல்லியிருக்கலைன்னா உன்னை பத்தி தெரியாமலே போயிருக்கும். உன்னை மாதிரி ஒருத்தியை மிஸ் பண்ணியிருப்போம்” என்றார் மனதிலிருந்து.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சுந்தர்ராஜ் உள்ளே வந்தார். மாமியாரும் மருமகளும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர் தொண்டைய செருமவும் சட்டென்று இருவருமே எழுந்து நின்றனர்.
“என்னங்க என்ன வேணும்??” என்றார் திலகவதி.
ஆராதனாவோ “என்ன மாமா?? காபி எதுவும் வேணுமா??” என்றாள்.
“இல்லைம்மா மதிய சாப்பாட்டுக்கு ஆளு வந்திருக்கு. அதை பார்த்து வாங்கி வைக்காம இங்க உன் அத்தை என்ன பண்ணிட்டு இருக்கான்னு பார்க்க வந்தேன்” என்று நிறுத்தினார் அவர்.
அவரை பார்த்து அசடு வழிந்தவள் “அதில்லை மாமா நான் தான் அத்தையை உட்கார வைச்சு மொக்கை போட்டுட்டு இருந்தேன். சாரி மாமா நான் போய் பார்த்து வாங்கி வைக்கறேன்” என்று அங்கிருந்து வெளியிறினாள் அவள்.
போகும் அவளையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். “ரொம்ப சூட்டிகையான பொண்ணுங்க, ஆனா ரொம்ப பொறுப்பு” என்ற மனைவியை ஒரு அதிசயத்துடன் பார்த்தார் சுந்தர்ராஜ்.
“என்னங்க அப்படி பார்க்கறீங்க??”
“இல்லை உன் வாயால நீ சட்டுன்னு யாரையுமே பாராட்ட மாட்டே, ஏன் நம்ம பிள்ளைங்களை கூட நீ பாராட்டினது இல்லை. கட்டின புருஷன் என்னை பத்தி கூட நீ பாராட்டி பேசினது இல்லை”
“உன்கிட்ட நல்ல பேரு எடுக்கறது வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்குறது போல அதான் யோசிச்சேன்” என்றார் அவர்.
“ஏங்க இப்படி எல்லாம் சொல்றீங்க நம்ம பிள்ளைகளையும் உங்களையும் நான் பாராட்டி பேசினா தான் நீங்க நம்புவீங்களா?? உங்களை நான் வேற தனியா பாராட்டணுமா??”
“என்னமோ ஆராதனா பார்க்கும் போது நமக்கு பொண்ணு இருந்தா இப்படி இருப்பாளோன்னு ஒரு சின்ன ஆசை. இவளும் நம்ம…” என்று பேச வந்தவர் கணவரின் முகத்தை பார்த்து வாயை மூடிக் கொண்டார்.
மதிய உணவுக்காய் திலகவதி யாழினிக்காய் ரசம் சாதம் வைத்து இஞ்சி துவையல் அரைத்து வைத்திருந்தார். ஆராதனாவிடம் கொடுத்து அவளுக்கு கொடுக்க சொன்னவர் வந்திருந்தவர்களை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி மருமகளை அனுப்பினார்.
யாழினியின் அறைக்கு சென்ற ஆராதனா சாதம் வைத்திருந்த கப்பில் ஒரு ஸ்பூனை போட்டு சிறிய கிண்ணத்தில் கொண்டு வந்திருந்த துவையலையும் அவள் முன் வைத்தாள்.
“சாப்பிடு காலையிலேயே கஞ்சி சாப்பிட்டியாம் உனக்கு வாய்க்கு எதுவும் பிடிக்காதுன்னு அத்தை ரசம் சாதம் இந்த இஞ்சி துவையலும் உனக்கு கொடுத்து விட்டிருக்காங்க”
“உனக்குன்னு ஒருத்தர் பார்த்து பார்த்து செய்யறாங்க. இதையும் நம்ம வீடுன்னு நினைச்சா எந்த தயக்கமும் தோணாது. இப்படியே இந்த மூடின கதவை போல உன் மனசை வைச்சுக்கிட்டா வெளிய யாரு எப்படின்னு உன்னால புரிஞ்சுக்க முடியாமலே போய்டும்” என்றாள்.
‘எதுக்கு இப்படி அட்வைஸ் பண்ணுறா’ என்று யோசித்தாலும் அவளை வெளியில் எதுவும் கேட்கவில்லை யாழினி. ஆராதனா அவளிடம் பேசிவிட்டு தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.
‘சாப்பாடு கொடுத்திட்டு போகாம இங்கவே இருக்கா’ என்று யோசித்தவள் சாப்பிட ஆரம்பித்தாள். தோழி அங்கேயே தனியாக மோட்டுவளையை பார்த்து அமர்ந்திருந்தது என்னவோ செய்தது.
‘எனக்கு பார்த்து செய்யற, இவ சாப்பிட்டாளோ என்னவோ??’ என்ற எண்ணம் தோன்றிய பின் அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை. தன் பிடிவாதம் எல்லாம் ஒதுக்கிவிட்டு “சாப்பிட்டியா??” என்றாள்.
ஆராதனாவோ அமைதியாய் இருந்தாள், ‘கொழுப்பு பிடிச்சவ இவளை தான் கேட்குறேன்னு தெரிஞ்சுட்டு வேணும்ன்னே பதில் சொல்லாம உட்கார்ந்திருக்கா பாரு. நான் கேட்டது காதுல விழுந்துச்சா?? இல்லையா?? இவளுக்கு’
“உன்னை தான் கேட்டேன் சாப்பிட்டியா??” என்று மீண்டும் குரல் கேட்டவும் ஆராதனாவோ வாசலை பார்த்தாள் குனிந்து கட்டிலுக்கு அடியில் எல்லாம் பார்த்தாள்.
‘திமிரு திமிரு இவங்களை பேர் சொல்லி கூப்பிடலையாம் அதுக்கு என்னமா ஓவரா சீன் போடுறா?? பாரு’ என்று மனதிற்குள் மீண்டும் பொருமினாள் யாழினி.
“என்னையா கேட்டே??” என்றவளிடம் எங்கோ பார்த்துக் கொண்டு ஆம் என்பதை தலையை ஆட்டினாள் ஆராதனா.
“எந்த உரிமையில கேட்டே யாழி?? உன் பிரண்டுன்னு கேட்டியா?? இல்லை உன் புருஷனோட அண்ணனை கட்டியிருக்காளேன்னு நினைச்சு கேட்டியா??” என்று நக்கல் அடித்தாள்.
‘எப்படி கேட்டா என்னடி, கேள்வி கேட்டா பதில் சொல்றதை விட்டு ஓவரா பேசிட்டு இருக்கா’ என்று திட்டினாள்.
“சரி சரி எப்படியோ கேட்டேன்னு நான் நினைச்சுக்கறேன். இன்னும் சாப்பிடலை இனி தான் சாப்பிடணும்” என்றாள் ஆராதனா.
மனம் அவளுடன் மேலும் பேசேன் என்று சொல்ல “ஏன் மாமாவோட சேர்ந்து சாப்பிட வெயிட் பண்ணுறியா??” என்றவளின் குரலில் இளக்கம் இருந்ததை அவளறியாமல் போனாலும் ஆராதனா அறிந்துக் கொண்டாள்.
இனி யாழினி கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்துவிட்டது. “இல்லை அவருக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்குன்னு ஆஸ்பிட்டல் கிளம்பி போயிருக்கார்”
“ஈவினிங் ஆகிடும் போல அவர் வர்றதுக்கு” என்ற ஆராதனாவை பார்த்த யாழினிக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை. அண்ணனும் தம்பியும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியோ என்று எண்ணியது அவள் மனம்.
“மாமா இன்னைக்கே வேலைக்கு கிளம்பிட்டாரா?? உனக்கு வருத்தமா இல்லையா??” என்றாள் மனதில் தோன்றியதை மறைக்காமல்.
“எதுக்கு வருத்தம் யாழி. அவர் என்ன வேணும்னேவா கிளம்பி போனார், வேற டாக்டர் வரலையாம் அதான் போயிருக்கார். வேலை இருந்தா போய் தானே ஆகணும். இதுக்காக எல்லாம் வருத்தப்பட முடியுமா??”
“ஏன் காலையில இவருக்கு முன்னாடி தம்பி கூட தான் கிளம்பினார் நீ என்ன வருத்தமா பட்டே, அது போல தான் இதுவும். நாம தானே புரிஞ்சுக்கணும்” என்றுவிட்டு அவள் பாட்டுக்கு பேச ஆரம்பித்தாள் யாழினி சாப்பிட்டு முடிக்கும் வரையிலும்.
‘ச்சே நான் தான் முட்டாள்தனமா இருந்துருக்கேன். அவர்க்கு வேலை இருந்தா போய் தானே ஆகணும். நாம புரிஞ்சுக்காம அவர் மேல வருத்தமா இருக்கோமோ??’
‘அவர் எப்படி இருந்தாலும் அவரை நான் தான் புரிஞ்சுக்க முயற்சி பண்ணனும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் யாழினி.
ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு உடல் சூடாவது அப்போது தான் உரைத்தது, ஆராதனா அவள் சாப்பிட்டு முடித்தவற்றை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் அறைக்குள் வந்து பார்க்க யாழினியின் கண்கள் சிவந்து இருந்தது.
உடனே வெளியே சென்று திலகவதியை அழைத்து வந்தாள். “அத்தை யாழிக்கு திரும்பவும் ஜுரம் அடிக்குது. அவருக்கு போன் பண்ணலாமா, ஐயோ அவர் வேற ஆபரேஷன்ல பிசியா இருப்பாரே என்ன செய்ய” என்று பதறியவளை பார்த்து அமைதியாக இருக்குமாறு கூறினார் அவர்.
“யாழினி காலையில அனீஷ் மாத்திரை எதுவும் கொடுத்தானாம்மா??” என்றவரிடம் “ஆமாம் அத்தை கொடுத்தாங்க” என்றாள் யாழினி.
“அது எங்க இருக்கு??” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஆராதனா மாத்திரையுடன் அவர் முன் நின்றாள். “இந்த மாத்திரை தான் அத்தை கொடுத்தாங்க” என்றாள்.
“அதை யாழினிக்கு கொடு, அதை சாப்பிட்டதும் ஜுரம் விட்டிரும். காலையில நீ கஞ்சி சாப்பிட்டு மாத்திரை போடலைன்னு நினைக்கிறேன். ஊசி தான் போட்டாச்சேன்னு சாப்பிடாம இருந்தியா??” என்று கண்டிப்பாய் பார்த்தவரை கண்டு தலைகுனிந்தாள் யாழினி.
“யாழி ஏன்டி இப்படி பண்றே??” என்று அதட்டிய ஆராதனா “இந்த இதை முதல்ல போடு” என்று அவள் வாயை திறக்கவும் மாத்திரையை போட்டு தண்ணீரை கொடுத்தாள் அவளுக்கு.
“இதை காலையிலே போட்டிருந்தா இந்நேரம் யாழினி மான்குட்டி போல துள்ளிட்டு இருந்திருப்பா?? இப்போ கொஞ்சம் நேரம் படுத்து தூங்குடா, சாயங்காலம் சூடா ஒரு ஹெர்பல் டீ போட்டு தரேன், அப்புறம் எல்லாம் சரியாகிடும்” என்றுவிட்டு வெளியிறினார் அவர்.
ஆராதனாவும் அவரோடு சென்று விட ‘ச்சே அத்தை கூட எவ்வளவு நல்ல மாதிரி இருக்காங்க. நான் எல்லாரையும் பார்க்கற பார்வை தான் தப்பாயிருக்குன்னு தோணுது’
‘அதான் எல்லாமே தப்பாவே எனக்கு தெரியுது’ என்று யோசித்தவளுக்கு தெரியாது தன்னவன் அவள் எண்ணம் போல் இருந்ததில்லை என்று.