அத்தியாயம் – 2
யாழினியை பார்த்து தைரியமாக புன்னகைத்து அவளுக்கு தெம்பூட்டிய ஆராதனாவிற்கு உள்ளே செல்லவே கால்கள் வரவில்லை. தன்னை தைரியமாக காண்பித்துக் கொண்டு ஒருவழியாக அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அனீஷோ அலங்கரித்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டு கையில் இருந்த கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘அய்யோ பாக்குறானே??. பாக்குறானே?? இப்படி பார்த்தா எனக்கு என்னமோ பண்ணுதே?? என்ன செய்வேன்??’ என்று மனதிற்குள்ளாக புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.
“என்ன ஆரா உள்ள வர்றதா உத்தேசமே இல்லையா?? அப்படியே கதவை திறந்து என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிறலாம்ன்னு தோணுதா??” என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றான்.
அவளை நோக்கி ஒரு எட்டு அவன் எடுத்து வைக்கும் முன் அவளாகவே உள்ளே வந்து நின்றாள். “நான் கேட்டதுக்கு பதில் சொல்லவேயில்லை, என்னை பார்த்து பயமாயிருக்கா?? இல்லை இன்னைக்கு நம்ம முதலிரவுன்னு நினைச்சு பதட்டமா இருக்கா??”
‘ரெண்டுமே தான்னு எப்படி சொல்லுவேன்??’ என்று மனதிற்குள் நினைத்தவளுக்கு பேச்சே வரவில்லை. வியர்வை முத்து முத்தாக அவள் முகத்தில் அரும்பியது.
அவளருகே நெருங்கி வந்தவன் “என்னாச்சு வேர்க்குது?? ஏசி கூலிங்கை அதிகம் பண்ணட்டுமா??” என்றான் அவள் வியர்வையை கைகொண்டு துடைத்தவாறே.
“இல்லை வேணாம்… ஏசி ரொம்ப குளிருது” என்று அவன் முன் ஒருவழியாக வாயை திறந்தாள்.
“பேசவே மாட்டேன்னு நினைச்சேன், பேசிட்டியே?? போன் பேசவும் கூச்சம் நேர்ல பேசவும் கூச்சம்ன்னா நான் என்ன செய்வேன்?? என்னை பார்த்தா பாவமா இல்லையா??”
‘அய்யோ இவர் ஏன் இப்படி எல்லாம் பேசுறாரு??’ என்று மீண்டும் அவள் மனதிற்குள்ளாகவே கேட்டுக் கொண்டாள்.
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் அவன் கேட்டதிற்கு பதிலாய்.
“ஏசி குளிருதுன்னு சொல்ற ஆனா இன்னும் உனக்கு வியர்க்குது. உடம்புக்கு என்ன பண்ணுது??” என்று மருத்துவனாய் அவளை கேட்டுக் கொண்டான்.
“ஹ்ம்ம்… ஜுரம்… ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு, அதான் வேர்க்குதுன்னு நினைக்கிறேன்” என்று வாய்க்கு வந்ததை கூறினாள்.
“அப்படியா உனக்கு ஜுரமாவா இருக்கு??” என்றவன் அவள் கைப்பிடித்து நாடியை பரிசோதித்தான்.
‘அச்சச்சோ இவர் டாக்டர்ன்னு மறந்துட்டமே. எனக்கு ஜுரமா இல்லையான்னு உடனே செக் பண்ணி சொல்லிடுவாரே’ என்று யோசித்தவளுக்கு அடிவயிற்றில் இருந்து ஏதோ செய்தது.
“கொஞ்சம் இப்படி உட்காரு” என்று அவன் சொல்லவும் சட்டென்று கட்டிலில் அமர்ந்தாள். “உன்னோட இதயம் வழக்கத்துக்கு மாறா ரொம்ப வேகமா துடிக்குதுஎன்ன விஷயம்??” என்றான்.
‘அவ்வளவு சத்தமாவா கேக்குது’ என்று வடிவேல் கவுன்டரை மனதிற்குள் கொடுத்தவள் வெளியிலோ “இல்லை!!! அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை!!! நான் எப்பவும் போல தான் இருக்கேன்”
“கூல்!!! கூல்!!!” என்றவன் கட்டிலை ஒட்டியிருந்த மேஜையின் இழுப்பறையை இழுத்து அதிலிருந்து அவன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்தவன் அதை இருகாதுகளிலும் பொருத்தி அவள் இதயத்தின் துடிப்பை அறிய முற்பட்டான்.
அவளுக்கோ பதட்டமாகவே இருக்க மெல்ல அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் “உனக்கு ஜுரமெல்லாம் ஒண்ணுமில்லை!!! பயம் தான் அதிகமா இருக்கு” என்றவன் ஸ்டெத்தை கழற்றி முன்பு இருந்த இடத்திலேயே வைத்தான்.
“உனக்கு தூக்கம் வருதா??”
அவளோ வெகு வேகமாக தலையை உருட்டினாள். ‘அப்பாடா தப்பிச்சோம்டா சாமி’ என்று மனதார இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டாள்.
“அதான் பகல்ல நீ தூங்கி ரெஸ்ட் எடுத்தியே??” என்று சொல்லி அவள் நினைப்பில் நெருப்பை ஊற்றினான் அவன்.
“இல்லை நான் சரியாவே தூங்கலை!!” என்று சொல்லிக் கொண்டே அவனை பார்க்க அவன் பக்கென்று சிரித்துவிட்டான். அழகாய் விழுந்த கன்னக்குழிக்குள் இப்போது அவளும் விழுந்துவிட்டாள்.
“கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாமே??” என்று கேட்கவும் தன்னையறியாமல் அவள் தலை சரியென்பதாய் அசைந்து கொடுத்தது.
“குட் கேர்ள்!!!” என்றவன் அவள் கன்னத்தை லேசாக தட்டவும் அவள் முகம் சிவந்தது.
“சரி நான் ஒண்ணு கேட்பேன் நீ பதில் சொல்லணும்??” என்று அவன் கேள்வியாய் நோக்க “கேளுங்க!!!” என்றாள்.
“உனக்கு என்னை பிடிச்சிருக்கா?? இப்போவாச்சும் பேசு போன்ல சொல்லி கடுப்பேத்துன மாதிரி சொல்லாத”
“அதே கேள்வியை நானும் கேட்கலாமா??” என்று பதில் சொல்லாமல் அவன் கேள்வியை திருப்பி படித்தாள். “என்ன கேள்வி எனக்கு உன்னை பிடிச்சிருக்கான்னா?? என்றவன் அவசரமாய் அவன் கைபேசியை எடுத்து எதையோ தேடியவன் அவன் தேடியது கிடைத்ததும் அவள் முன் நீட்டினான்.
“என்ன??” என்றவளிடம் “கொஞ்சம் பாரு, அப்புறம் சொல்றேன்!!!”
அவன் கைபேசியில் காண்பித்தது பெண் பார்க்க வந்த அன்று அவளை எடுத்த புகைப்படமே. அதை பார்த்ததும் அவளுக்கு வியப்பு மேலிட “இது… இது அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ எடுத்தது மாதிரி இருக்கு. ஆனா நீங்க எப்போ?? எப்படி எடுத்தீங்க??”
“அது சஸ்பென்ஸ்!! அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் தினமும் இதை ஒரு முறையாச்சும் பார்த்திட்டு தான் இருக்கேன்!!! இப்போ சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்கா?? என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தான் அவன்.
அவளோ ஏதோ யோசனையாக அவனை பார்க்க “என்ன நான் வாயை திறந்து உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா தான் நம்புவியா?? இப்போ என்ன உன் மனசுல ஓடுதுன்னு சொல்லவா??” என்றவனை ஏறிட்டு பார்த்தாள்.
“போட்டோ காமிச்சுட்டா மட்டும் பிடிச்சிருக்குன்னு எப்படி அர்த்தம் அப்படின்னு நீ நினைக்கிற சரி தானே??” என்று அவன் கூறவும் ‘அடக்கடவுளே மனசுல நினைச்சதை அப்படியே சொல்றாரு’ என்றவள் அவனை பார்த்து அசட்டு சிரிப்பை சிந்தினாள்.
“நீ புரிஞ்சுக்க மறுக்குற உனக்கு புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்” என்றவனின் முகம் சற்றே வாடியதை கவனித்தவளுக்கு ‘அச்சோ தேவையில்லாம யோசிச்சு இப்போ இவரை வருத்தப்பட வைச்சுட்டோமே என்று எண்ணியவள் “இல்லை அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை”
“உண்மையாவே ஒண்ணுமில்லை தானே” என்றவனுக்கு பதிலாய் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“சரி இப்போ நீ சொல்லு??” என்றான் விடாக்கண்டனாக.
“என்ன சொல்ல?? என்றாள் அவளும் விடாக்கண்டி தான் என்பது போல்
“என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்றான்.
“வீட்டில உங்களை எல்லார்க்கும் பிடிச்சுது, அதுனால எனக்கும் பிடிச்சுது” என்ற அவளின் பதிலை கேட்டு எப்போதும் போல் கடுப்பானான் அவன். “நான் என்ன உங்க வீட்டில இருக்கவங்களையா கல்யாணம் பண்ணியிருக்கேன்??”
“உன்னை தானே கல்யாணம் பண்ணேன்?? நாம தானே ஒண்ணா வாழப் போறோம்?? உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டா?? அம்மாக்கு பிடிச்சுது ஆட்டுக்குட்டிக்கு பிடிச்சுதுன்னு சொல்லிட்டு இருக்க??”
“உன்னை வைச்சுட்டு ரொம்ப கஷ்டம் ஆரா” என்று வெளிப்படையாகவே சலித்தான் அவன்.
“கொஞ்ச நேரம் பால்கனியில போய் நிப்போமா??” என்று வேண்டுமென்று பேச்சை மாற்றியவளின் பார்வை பால்கனி வாயிலை நோக்கி இருந்தது.
“இல்லை இன்னைக்கு பௌர்ணமி நிலவு ஜொலிக்குது அதான் போய் பார்க்கலாம்ன்னு…” என்று இழுத்தவள் இப்போது எழுந்து நின்றிருந்தாள்.
“இன்னைக்கு என்ன நாளுன்னு தெரியுமா?? நம்மோட முதலிரவு கிட்டத்தட்ட தேனிலவுன்னு சொல்லிக்கலாம். இப்போ போய் பௌர்ணமி நிலவு பார்க்கலாம்னு சொல்றியே??” என்று லேசாய் கோபம் வந்தாலும் குழந்தைதனமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளிடம் அவனால் மறுக்க முடியவில்லை.
அவன் அவளை பார்க்க அவளோ அவனை பாவமாய் பார்க்க உடன் எழுந்தவன் அவள் கையை பிடிக்க எண்ணி கையை நீட்ட அவனிடம் தப்பிப்பதாய் நினைத்து வேக எட்டு வைத்து அவள் பால்கனிக்கு சென்றாள்.
பால்கனியின் சுவற்றில் சாய்ந்து நின்று நிலவின் அழகையும் நிலவொளியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் பின்னே அணைவாக வந்து நின்றுக் கொண்டு “பிடிச்சிருக்கா?? என்று காதுக்கருகில் கேட்ட குரலில் உள்ளே சிலிர்த்தது அவளுக்கு. “என்ன??” என்றவளிடம் “நிலாவை கேட்டேன்”
“நிலா பிடிக்காம இருக்குமா??” என்றவளின் பார்வை அவர்கள் அறையை ஒட்டி அடுத்திருந்த பால்கனியையும் அதன் வாயிலையுமே பார்த்துக் கொண்டிருந்தது.
அவள் பார்வை போகும் திக்கை பார்த்தவன் “என்ன உன்னோட தோழி இவ்வளவு சீக்கிரம் தூங்கியாச்சான்னு யோசிக்கிறியா??” என்றான்.
“அவ என்னோட பிரின்ட்ன்னு உங்களுக்கு??”
“தெரியுமே ஏன்?? எனக்கு தெரிஞ்சிருக்காதுன்னு நினைச்சியா?? அதெல்லாம் உங்கம்மாவும் அப்பாவும் சொல்லிட்டாங்க. அவங்களை பாரு என்ன ஸ்பீடா இருக்காங்கன்னு”
“என் தம்பி இந்த விஷயத்துல ரொம்ப ஸ்பீட், உன்னோட பிரின்ட்டும் தான். உனக்கு தான் ஒண்ணுமே தெரியலை. சரியான மக்கு, இதுல நாகர்கோவில்ல இருந்து என்னை நம்பி என்னை கல்யாணம் பண்ணி வந்திருக்கே??
“ஏன் நாகர்கோவில்ன்னா அப்படி என்ன இளக்காரம் உங்களுக்கு??” என்றாள்.
“நான் ஒண்ணும் ஊரை தப்பா பேசலை, அங்க இருந்து இங்க வந்து அதுவும் என்னை நம்பி எப்படி தைரியமா இங்க வந்தேன்னு யோசிச்சேன்”
“ஏன் உங்களை நம்பறதுக்கு என்ன?? நீங்க என்ன கெட்டவரா?? உங்களை பார்க்கும் போதே தெரியுது நீங்க எவ்வளவு நல்ல மாதிரின்னு, நீங்க பொண்ணு பார்க்க வந்த போதே எனக்கு உங்களை பிடிச்சு போச்சு”
“எனக்கு பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா எங்க வீட்டில உங்களை எனக்கு கட்டி வைச்சிருக்கவே மாட்டாங்க. எனக்கு பிடிக்க போய் தான் நான் இப்போ இந்த ஊர்ல வாழ வந்திருக்கேன்”
“உங்களை நம்பாம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?? நான் ஒண்ணும் மக்கு எல்லாம் இல்லை” என்றவள் அறியவில்லை அவன் அவள் மனதில் உள்ளவற்றை வெளியே கொண்டு வரவே அவளை தூண்டி பேசியிருக்கிறான் என்று.
திரும்பி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை தன் புறம் திருப்பியவன் “எப்படி எப்படி கொஞ்ச நேரம் முன்னாடி யாரோ சொன்னாங்க?? எங்க வீட்டில இருக்கவங்களுக்கு பிடிச்சுது அதனால எனக்கும் பிடிச்சுதுன்னு” என்று அவள் முன்பு சொல்லியதை அவன் சொல்லிக் காட்ட அவள் உளறியதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள்.
“எத்தனை நாள் கேட்டிருப்பேன் போன்ல ஒரு தரம் கூட என்கிட்ட நீ முழுசா பத்து நிமிஷம் கூட பேசினதில்லை. பிடிச்சிருக்கான்னு கேட்டா என்னை வெறுப்பேத்துற மாதிரி பதில் சொன்னே?? இன்னைக்கு தான் உன் வாயில இருந்து உண்மை வந்திருக்கு.”
“ஆமா நீ எல்லாம் எப்படி காலேஜ் படிச்ச?? நீ நல்லா படிக்கிற பொண்ணு தானா??” என்றான் மீண்டும் அதிமுக்கிய சந்தேகமாக, எதையோ ஆரம்பிப்பவன் போல்.
அவன் கேட்டதில் அவளுக்குள் இருந்த சண்டைகோழி சிலிர்த்து “ஹ்ம்ம் யாரை பார்த்து இப்படி கேட்குறீங்க?? நானெல்லாம் கோல்டு மெடலிஸ்ட் என்னை பார்த்து நீங்க எப்படி இப்படி கேட்கலாம்??” என்றாள் சிறு கோபத்துடன்.
“எப்படி நெட்ரூ பண்ணுவியா?? இல்லை படிச்சு தான் பாஸ் பண்ணியா??” என்றான் அடுத்ததாக.
“நான் மனப்பாடம் பண்ணி படிக்கிற ஆளெல்லாம் இல்லை, எதையும் புரிஞ்சு தான் படிப்பேன். அதனால தான் கோல்டு மெடலிஸ்ட்” என்றாள் பெருமையாக.
“புரிஞ்சு தான் படிப்பியா!! அப்போ சந்தோசம் தான்!!” என்றவன் அதை வேறு அர்த்தத்தில் சொன்னதை அவள் உணரவேயில்லை.
மீண்டும் அவள் வெளிப்புறம் திரும்பி நிலவையும் உடன் உலாவரும் நட்சத்திரங்களையும் வேடிக்கை பார்க்க அவள் பின்னே வந்தவன் அவள் காதருகே குனிந்து “அப்போ பாடம் படிப்போமா??”
“பாடமா!!!” என்று அதிர்ச்சியாய் அவள் அவனை பார்க்க குனிந்து சட்டென்று அவளை இருகைகளாலும் தூக்கியதும் சற்றே மிரண்டவளின் விழிகளை நோக்கி “பாடம் தான் வேற பாடம் நான் சொல்லி தரேன்” கன்னம்குழிய சிரித்துக் கொண்டே சொன்னவனின் சிரிப்பில் தன்னை தொலைத்தாள்.
“நான் வெயிட்டா இல்லையா?? இப்படி சட்டுன்னு தூக்கிட்டீங்க??” என்றவளின் கைகள் அவன் கழுத்தில் மாலையாய் விழுந்திருந்தது அவளை மெல்ல கட்டிலில் இறக்கியவன் தானும் அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.
“கட்டின பொண்டாட்டியை தூக்க கூட முடியலைன்னா எப்படி?? அதெல்லாம் தூக்க முடியும், வெயிட் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை” என்றவனின் கண்கள் அருகில் படுத்திருந்தவளை மேலிருந்து கீழாக அலசியது.
அவன் பார்வையில் சட்டென்று எழுந்து அமர்ந்தாள் ஆராதனா. “என்ன ஆரா?? எழுந்துட்ட?? என்னாச்சு?? பிடிக்கலையா??” என்றவனின் முகம் அவள் முகத்திற்கு வெகு அருகில் இருந்தது.
அவள் தலை இல்லையென்பதாய் ஆட்ட “அப்போ உனக்கு சம்மதமா?? உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்??” என்று கூறியவனை அக்கணம் அவளுக்கு மறுக்க தோன்றவில்லை.
அவன் முகத்தை பார்த்து சம்மதம் சொல்ல தயங்கியவள் அவன் மார்பில் சாய்ந்துக் கொள்ள அவனுக்கு அவள் சம்மதம் புரிந்தாலும் அதை அவள் வாய்மொழியாய் கேட்க விரும்பினான்.
அவளை மெதுவாய் நிமிர்த்தி அவள் கண்களோடு கலந்தவன் “அதை உன் வாயால சொல்லமாட்டியா??” என்று அவன் கேட்கவும் அவள் முகம் சிவந்தது.
“என்… என்ன சொல்ல??” என்று திணறியவளின் அருகில் நெருகியவன் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு “உனக்கு சம்மதம்ன்னு இந்த உதட்டை சொல்ல சொல்லு” என்றான்.
மாயக்கண்ணணாய் அவன் அவளை பார்த்து சிரிக்க அவள் உதடுகள் சத்தமேயில்லாமல் “சம்மதம்…” என்று முணுமுணுத்ததை சாதகமாய் கொண்டு அவன் முன்னேறினான்.
அவன் முழுதாய் அவள் மேல் படரவும் ‘இவரு பெரிய ஆளு தான் பேசியே கரைச்சுட்டாரே…’ என்று நினைத்த ஆராதனா அவனுள் கரைந்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் அவள் இதழை தன்வசமாக்கியவன் பின் அவளை மொத்தமாய் தன் வசமாக்கினான். அவளும் முழுமனதுடன் அவனுடன் கலக்க அங்கு அவர்களின் இல்லறம் தாம்பத்திய பந்தத்தில் இணைந்து அவர்கள் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது.
இங்கு இருவரும் முழுமனதாய் வாழ்க்கையை ஆரம்பித்திருக்க அடுத்த அறையிலோ அதற்கு நேர்மாறாய் இருந்தது. ஆராதனாவின் சிரிப்பும் அவள் எப்போதும் தன்னுடன் இருப்பாள் என்ற நம்பிக்கை கொடுத்த தைரியத்தில் அவள் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கு அவளின் கணவன் அவன் டேபில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அவள் மெதுவாய் உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்தவளை அவன் வரவேற்ப்பான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் எதுவுமே சொல்லாதிருந்தது பெரும் ஏமாற்றமாய் இருந்தது.
கையோடு கொண்டு வந்திருந்த பாலை அவன் முன்னே நீட்டினாள், அப்போது தான் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் பார்வை அவளை முழுதும் வருடுவதை பார்த்தவள் முகம் சிவந்து தலையை குனிந்து கொண்டாள்.
“இப்படி என் முன்னாடி நீட்டினா என்ன அர்த்தம்??” என்று அவன் கேட்டதும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட “இல்லை உங்களுக்கு கு… குடிக்க” என்றாள்.
“அதை சொல்லாம நீ பாட்டுக்கு நீட்டினா??” என்றான்.
“சாரி” என்றவள் “பால் சாப்பிடுங்க” என்றாள்.
“எனக்கு பால் பிடிக்காது, நீ வேணும்ன்னா குடி” என்றதும் ‘அடக்கடவுளே பிடிக்காததுக்கா இவ்வளவு அலப்பறை பண்ணுறார்’ என்று நினைத்தாலும் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாதவள் மீண்டும் அவனிடம் “இல்லை சம்பிரதாயம் கொஞ்சமாச்சும் குடிக்கலாமே” என்று அவனை பார்த்தாள்.
நிமிர்ந்து அவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியது “சரி கொடு” என்றுவிட்டு அதை வாங்கி சிறிது அருந்தியவன் அவளிடம் நீட்டினான். “தேங்க்ஸ்” என்றவள் அதை குடித்துவிட்டு அவனருகில் வந்தமர்ந்தாள்.
அவனோ இன்னமும் அவன் டேபில் எதையோ டைப் செய்துக் கொண்டிருந்தான். என்ன தான் மதிய நேரம் கொஞ்சம் உறங்கியிருந்தாலும் கல்யாண அலுப்பு அவளுக்கு களைப்பையும் உறக்கத்தையும் கொடுத்தது.
தன்னை மீறிய கொட்டாவியை அடக்க முற்பட்டவளுக்கு இவன் எதுவுமே பேசமாட்டானா என்றிருந்தது. ‘ஏன் இப்படி இருக்கார் என்னை பிடிக்கலையா இவருக்கு, எதுவுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம்’
‘கல்யாணம் நிச்சயம் ஆனதுல இருந்து ஒரு முறை கூட போன்ல பேசவேயில்லை. பொண்ணு பார்க்க வந்த போது பார்த்தது தான் அதுக்கு பிறகு கல்யாணத்துல பார்த்தது தான்’
‘இவர் எப்போமே இப்படி தானா?? இல்லை வேற எதுவும் பிரச்சனையா இருக்குமா?? இல்லை இவங்க குடும்பமே இப்படியா??’
‘ச்சேச்சே… இருக்காது. அம்மா சொன்னாங்களே இவரோட அண்ணா ஆராதனாகிட்ட தினமும் பேசுறாருன்னு. இவர் தான் இப்படி போல, எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்களா என்ன??’ என்று தனக்குள்ளே கேள்வியும் கேட்டுக் கொண்டு சமாதானமும் அவளே செய்துக் கொண்டாள்.
எப்படி யோசித்த போதும் அவன் எனக்கென்ன என்பது போல் இருந்தது மனதில் ஓரத்தில் அவளுக்கு வலிக்கவே செய்தது. கண்கள் வேறு எனக்கு சற்று ஓய்வு கொடு என்று கெஞ்சுவது போல் இருந்தது.
அவனாய் பேசுவான் என்று அவளுக்கு தோணாததால் “நான் படுக்கட்டுமா?? தூக்கம் வருது” என்றவளை திரும்பி பார்த்தவன் “தூக்கமா அதான் பகல்ல தூங்கினியே??” என்றான்.
‘என்ன இவர் இப்படி எல்லாம் பேசுறாரு’ என்று அவனை பார்த்தவள் “இல்லை ஒருவாரமாவே ஒழுங்கா தூங்கலை. நீங்களும் ஏதோ பிசியா வேலை பார்க்கறீங்க…”
“நீங்க என்கிட்ட எதுவுமே பேசாம இருந்தா நானும் எவ்வளவு நேரம் தான் சும்மாவே உட்கார்ந்து இருக்கறது. அதான் தூக்கம் வந்திடுச்சு” என்று எப்படியோ அவள் மனதில் நினைத்ததை சொல்லி விட்டாள்.
“ஏன் நீ பேச வேண்டியது தானே?? நீ கேட்டு நான் பதில் எதுவும் சொல்லாம இருந்தேனா?? என்னமோ நான் பேசவே பேசாத மாதிரி சொல்ற??” என்றான் சபரீஷ்.
“நான் அப்படி சொல்லலை நீங்க ஏதோ வேலையா இருக்க மாதிரி இருந்திச்சு. இன்னைக்கும் கூட நீங்க பிசியா இருக்கீங்க. நானா எப்படி உங்களை டிஸ்டர்ப் பண்ண, அதான் பேசாம இருந்தேன்”
“அப்போ தெரியுதுல்ல நான் வேலையா இருக்கேன்னு அப்புறம் என்ன கொஞ்ச நேரம் எனக்காக காத்திட்டு இருக்க முடியாது. இப்போவே இப்படின்னா நீ தினமும் எனக்காக எப்படி காத்திட்டு இருப்ப” என்றான் வெடுக்கென்று.
‘இவருக்கு தன்மையாவே பேசத் தெரியாதா??’ என்று நினைத்தவளுக்கு அவன் பேசியது கண்ணில் முணுக்கென்று கண்ணீரை கொண்டு வந்து விட அவள் அமைதியானாள். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை, மேலும் பத்து நிமிடம் கழிய அவன் டேப்லேட்டை மூடிவிட்டு அதை மேஜையில் வைத்தான்.
திரும்பி அருகில் இருந்தவளை பார்க்க அவளோ அமைதியாய் அமர்ந்திருந்தாள். “தூக்கம் வருதுன்னு சொன்னே தூங்க வேண்டாமா??” என்றான் அவன்.
“ஹ்ம்ம் தூங்கணும்…” என்றாள் யாழினி.
“சரி படு…” என்று அவன் கூறவும் அவள் படுக்க கட்டிலின் அருகில் இருந்த விளக்கை அணைத்தவன் விடிவிளக்கை போட்டுவிட்டு அவளின் மேல் அவன் கையை போட்டான்.
சட்டென்று அவள் மேல் ஒரு கரம் விழவும் லேசாய் அதிர்ந்தவள் திரும்பி படுக்க அவனோ எதுவுமே சொல்லாது அவள் விருப்பம் கூட அறியாது அவன் தேவை தான் முக்கியமாய் நேராய் காரியத்தில் இறங்கினான்.
அவனை தடுக்கும் வழி தெரியாது திகைத்த யாழினிக்கு கண்களில் கண்ணீர் பெருகியது. கொஞ்சம் கூட என்னை பற்றி இவருக்கு சிந்தனை இருக்காதா என்று அவள் மனம் கதறியது.
அவனோ தன் தேவை முடியாதவனாய் அவளில் தன்னை முழுவதுமாய் தொலைத்துக் கொண்டிருந்தான். அவனுக்காய் களைப்பு தோன்ற அதன்பின்னே அவளை விடுவித்தவன் உறங்க ஆரம்பித்தான்.
யாழினிக்கு விழியில் பெருகிய நீர் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தது. அருகிலிருந்தவனை அவள் திரும்பி பார்க்க அவனோ தன் பிரம்மச்சரிய விரதம் முடிந்ததில் திருப்தியுற்றவனாய் ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தான்.
மெதுவாய் எழுந்தவள் குளியலறைக்குள் சென்று குழாயை திருகி அப்படியே நின்றாள். அவள் கண்ணீர் அந்த நீரில் கரைவேனா என்பது போல் வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. ‘ஏனோ அந்நேரம் அவளுக்கு காதலித்து திருமணம் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ…’ என்று எண்ணியதும் ஆராதனாவின் நினைப்பு அவளுக்குள் ஓடியது.
வெகு நேரமாய் நீரின் முன் நிற்பது உணர ஷவரை மூடியவள் அருகிருந்த துவாலையை எடுத்து தலையை துவட்டினாள். மற்றொரு துவாலையை எடுத்து உடலில் போர்த்துக் கொண்டு ஈர உடைகளை அலசி நீர் வடிய அருகிருந்த கம்பியில் போட்டவள் வெளியில் சென்றாள்.
இருளிலேயே அங்கிருந்த பீரோவில் மாலை அவள் அடுக்கி வைத்த அவள் உடைமையில் ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
வெகு நேரமாய் விழித்திருந்தவள் கணவனை பார்ப்பதும் ஏதோ யோசிப்பதுமாய் இருந்தவள் தன்னையறியாமல் உறங்கிப் போனாள்…