அத்தியாயம் –20
இன்று
———–
வண்டி காந்தி சிலை தாண்டி உள்ளே சென்றுக் கொண்டிருக்க மனோவிற்கு இருப்புக்கொள்ளவில்லை “எங்க போறோம்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்…” என்றாள் மீண்டும்.
“எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றான் முன்னில் அமர்ந்திருந்தவன்.
மனோவின் முகம் பூவாய் மலர்ந்தது “நிஜமாவா!! ஆனா முதல் முதலா போறோம் வெறும் கையோடவா போறது” என்று கூற பிரணவும் அப்போது தான் அதை உணர்ந்தான் போல டிரைவரிடம் வண்டியை ஒரு பழக்கடையின் முன் நிறுத்தச் சொன்னான்.
“வாங்கு ரதி…” என்று அவளிடம் சொல்லிவிட்டு அஜியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான். மனோவிற்கு தலைக்கால் புரியவில்லை.
முதன் முதலாய் மாமியார் வீட்டின் உறவினர்களை பார்க்க போகும் சந்தோசமும் படபடப்புமாய் இருந்தாள். பிரணவிற்குமே அந்த படபடப்பு இருந்தது.
தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபின் பிரணவ் கொஞ்சம் ஒடுங்கிப் போயிருந்தான். அவனின் பெரியப்பா தான் பிரணவிற்கு உற்ற தோழனாய் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அறிவுரை கூறி அவனை நல்வழிப்படுத்தினார்.
ஆம் அப்படி தான் சொல்ல வேண்டும். அறியாத புரியாத வயதில் ஏற்பட்ட பருவக்கோளாறில் இருந்து பிரணவும் தப்பியிருக்கவில்லை.
அவன் கவனம் படிப்பில் இருந்து சிதைந்து வேறு பாதையில் செல்ல வீட்டினரால் அவனை பெரிதும் கவனிக்க முடியவில்லை. மாலதி தான் குடும்பத்தின் பாரம் சுமக்க ஆரம்பித்திருந்தார்.
ஹேமாவும் சசியும் பெண் பிள்ளைகள் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டனர்.
படிப்பும் அப்படியே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வர். பிரணவிற்கு அக்காக்களிடம் சென்று நிற்க தயக்கம். கேட்டால் உதவுவர் தான் ஆனாலும் தன்னால் முடியாதா என்ற எண்ணத்தில் செல்ல மாட்டான்.
அவன் நன்றாகவே படிப்பவன் என்பதால் வீட்டினரும் பெரிதாய் அவனை கவனிக்கவில்லை அந்த காலாண்டு பரிட்சையில் அவன் பெயில் ஆகும் வரை.
அவன் பெயில் ஆனதும் மாலதி அவனை அடி பின்னி எடுத்துவிட்டார். அப்போது வந்த அவனின் பெரியப்பா அவனை கையோடு அழைத்து சென்றுவிட்டார்.
அவனை தோழனாய் பாவித்து அவனிடம் பேசி பேசி அவனின் குழப்பம் அறிந்து அவனை நல்வழிப்படுத்தினார். பருவத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தோன்றுவது இனக்கவர்ச்சி என்பதை புரிய வைத்து அவனை தெளிவாக்கினார்.
அதன் பின் தன் வாழ்க்கையில் எந்த தவறையுமே பிரணவ் செய்ததில்லை. அப்படிப்பட்டவரிடம் தான் உயர்வாய் மதிப்பவரிடம் அவன் மறைத்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது மனோபாரதியை அவன் திருமணம் செய்ததே…
அவரிடம்சொல்லக்கூடாது என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. எனோ அந்த நிமிடம் பிரச்சனை தீர்த்தால் போதும் என்றிருக்க சொல்லாமலே செய்து முடித்தான்.
பெரியப்பாவிடம் தான் சொல்லவில்லையே தவிர அவர் மகன் பிரகாஷை உடன் வைத்தே திருமணம் முடித்திருந்தான். அதன் பின்னரும் கூட அவரை சந்தித்து பேச முயற்சி செய்தான் தான். ஆனால் கோபத்தில் இருந்தவர் அவனை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
அன்று சென்றவன் தான் இன்று தான் அவரை மீண்டும் பார்த்தாலென்ன என்று தோன்ற அவர் தற்போது மாற்றலாகி வந்திருந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்து சேர்ந்தான்.
வரும் வழியிலேயே பிரகாஷை அழைத்து விலாசம் எல்லாம் வாங்கிவிட்டிருந்தான். மனோ பழங்கள் வாங்கி வரவும் அவள் முகம் பார்த்தவன் ‘இன்னும் முன்னமே கூட்டி வந்திருக்க வேண்டுமோ’ என்று எண்ணிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடு வந்துவிட “ரதி இறங்கும்மா வீடு வந்திருச்சு”
“ஹம்ம்…..” என்றவளின் குரல் லேசாய் நடுங்கியதை அவளாலேயே உணர முடிந்தது. பிரணவிற்கு வண்டியை அனுப்பிவிடுவதா இல்லை இருக்க வைப்பதா என்ற எண்ணத்திலேயே இருந்தான்.
பின் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து வண்டிக்கு செட்டில் செய்து அனுப்பிவிட்டவன் வீட்டை எட்டி நடையை போட்டான்.
வாசல் கதவு திறந்தே தான் இருந்தது. பிரகாஷ் மோனாவுடன் ஒரு வார விடுப்புக்கு வந்திருந்தான் என்று முன்னமே பிரணவிற்கு தெரியும்.
அவர்கள் இருவரும் பிரணவின் வரவை முன்பே அறிந்திருந்தாலும் வாயிலுக்கு வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை.
பிரணவ் மரியாதை நிமித்தம் கதவை தட்ட “யாரது” என்ற கணீர் குரல் அவனின் பெரியப்பாவின் இருப்பை அவனுக்கு உணர்த்தியது.
பிரணவோ எதுவும் பேசாமலே நின்றான், யோசனையுடனே வாயிலுக்கு வந்தவர் எதிரில் நின்றிருந்தவனை பார்த்து திகைத்து போனார்.
வா என்று அழைக்கவில்லை, முகம் இறுக்கிப் போய் திரும்பி நடக்க ஆரம்பித்தார். “கூப்பிட மாட்டீங்களா பெரியப்பா” என்றான்.
அவர் இப்போதும் எதுவும் பேசவில்லை. சத்தம் கேட்டதே என்று உள்ளிருந்து அவன் பெரியம்மா தான் வந்து எட்டி பார்த்தார். பார்த்தவர் பார்த்தவரே கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது அவருக்கு.
கணவரை பார்ப்பதும் அவனை பார்ப்பதும் என்று எல்லரையும் பார்த்துக் கொண்டிருந்தார். “என்னங்க…..” என்று அவரருகில் சென்று அழைக்க “என்ன” என்றார் அவர் சிடுசிடுப்புடன்.
“உள்ள கூப்பிடுங்க அவனை, நம்ம வீட்டு பிள்ளைங்க” என்று அவர் சொல்ல அவரோ திரும்பி மனைவியை முறைத்தார்.
பிரணவ் தன் தோளில் சாய்ந்திருந்த மகனின் காதில் ஏதோ கிசுகிசுக்க “தா… தா… தாத்தா…” என்று மழலையில் மிழற்ற அதற்கு மேல அந்த பெரியவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
விரைந்து வந்து அவனை நோக்கி கையை நீட்ட அவனும் முன்னமே அறிமுகமானவர் போன்று “தா… தா…” என்று கூறிக்கொண்டே தவ்வினான்.
“உங்களுக்கு பேரன் தான் வேணும் போல, உங்க பிள்ளை வேண்டாமா!!” என்று பிரணவ் கூற அருகில் வந்தவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
மனோபாரதி நடப்பதை திகைப்பாக பார்துக் கொண்டிருந்தாள்.
பிரணவோ அடிவாங்கிய உணர்வு எதுமின்றி மற்றொரு கன்னத்தை காட்ட அவர் மீண்டும் அறைவிட்டார்.
“அப்பாடா அடிச்சிடீங்களா!! இப்போ உங்க கோபம் போச்சா!! உள்ள கூப்பிடலாமே!!” என்றான் சகஜமாய்.
“நீ மாறவேயில்லைடா கண்ணா….. அப்படியே தான் இருக்க……”
என்று அவனை பார்த்து சொன்னவர் திரும்பி அருகில் !! இப்போ உங்க கோபம் போச்சா!! உள்ள கூப்பிடலாமே!!” என்றான் சகஜமாய்.
“நீ மாறவேயில்லைடா கண்ணா….. அப்படியே தான் இருக்க……”
என்று அவனை பார்த்து சொன்னவர் திரும்பி அருகில் நின்றிருந்த மனைவியை பார்த்து “மரகதம்…..” என்று ஜாடை காட்டினார்.
மரகதம் எள்ளென்றால் எண்ணெயாய் நிற்பவராயிற்றே
கையில் ஆரத்தித்தட்டுடன் நின்றிருந்தார். “ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க” என்று கூறி இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்.
மனோ தயங்கிக் கொண்டே நிற்க “உள்ளே வாம்மா…… உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை” என்று பிரணவின் பெரியப்பா கிருஷ்ணன் கூற மனோ உள்ளே சென்றாள்.
எதுவுமே தெரியாதது போல உள்ளிருந்து பிராகாஷும் மோனாவும் வந்தனர். “உன்னோட கூட்டுக்களவாணிகள் வர்றாங்க பாரு” என்றுவிட்டு அவர் பேரனை கொஞ்ச ஆரம்பித்தார்.
பிரண்வ் தான் அப்படியே நின்றுவிட்டான். “பெரியப்பா அண்ணா எங்க…. உங்களுக்கு முன்னாடியே தெரியுமா!!” என்றான்.
“தெரியும்…… யாருமே இல்லாம உன்னை தனியா விட்டிருவேன்னு நினைச்சியா!!” அதான் எல்லாம் தெரிஞ்சும் கண்டும் காணாம இருந்திட்டேன்” என்றார் அவர்.
பிரணவ் அவரருகில் சென்றவன் “பெரியப்பா அது வந்து…. மன்னிச்சுடுங்க பெரியப்பா… பெரியம்மா நீங்களும் தான்…” என்றவன் “ரதி இங்க வா…” என்றுவிட்டு இருவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
“ஏன்டா எங்கிட்ட கூட சொல்லாம விட்டுட்டியே அதான் எனக்கு கோபம். நான் திட்டினா உடனே போயிடுவியா, திரும்ப வந்து பேச மாட்டியா… எனக்கென்னன்னு இருந்திடுவியா…”
“இந்த வீட்டு மூத்த வாரிசை நாங்க இப்படி வளர்ந்த பிறகு தான் கண்ணுல காட்டுவியா!!” என்றார் ஆதங்கமாய்.
“உங்க அண்ணி கூட இப்போ மாசமா இருக்கா… உன்னோட களவாணி அண்ணன் அதுக்காக தான் இங்க வந்திருக்கான்” என்றார்.
பிரகாஷ் அருகில் வந்து “அப்பா…”
“எல்லாம் தெரியும் நீ எதுவும் சொல்ல வேணாம்… இனிமேலாச்சும் ஒண்ணா இருந்தா எனக்கு அது போதும்”
“பெரியப்பா ரதி….”
“இந்த வீட்டு மருமக அதுக்கென்ன இப்போ…..”
“இல்லை அது எங்க கல்யாணம், அவளை பத்….”
எதுவும் தெரிய வேணாம் விடு….” என்றவர் “மரகதம் விருந்துக்கு ரெடி பண்ணு” என்றார்.
“என்னங்க… அதெல்லாம் அப்புறம்…”
என்ன விளையாடுறியா??”
“நீங்க மட்டும் தான் விளையாடணுமா!!”
“என்ன சொல்ற??”
“எம் பேரனை நீங்களே வச்சு விளையாடிட்டு இருக்கீங்க.. கொஞ்சம் கொடுங்க என்கிட்ட” என்று கணவரை பார்த்து இடித்தவர் அஜியை நோக்கி கையை நீட்ட அவன் அவரிடமும் சுலபமாய் ஒட்டிக் கொண்டான்.
பிரகாஷ் மோனாவை பார்த்ததும் துள்ளி குதித்த அஜிக்கு ஒரே கொண்டாட்டமாய் இருந்த்து. மனோவிற்கு தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு வந்து மூச்சடைத்தது.
எல்லாரும் வேண்டும் என்று விரும்பியவள் அவள் தான். ஆனால் இந்த நிமிடம் எல்லாரும் ஒன்றாய் இருக்கும் போது தன்னால் அவர்களுடன் இயல்பாய் ஓன்ற முடியாமல் போகிறதே என்று கலங்கினாள்.
“உள்ள வாம்மா… இது உன் வீடா நினைச்சுக்கோ எனக்கு நீயும் மோனாவும் ஒண்ணு தான். ஒத்த ஆம்பிளை பிள்ளை எனக்கு… நீங்க தான் எனக்கு இனி மகளா இருக்கணும்” என்று கூறிய மரகதத்தை பார்த்ததும் தன் அன்னையின் நினைவில் கண்ணீர் பொலபொலவென்று வந்துவிட்டது.
“என்னாச்சும்மா… எதுக்கு அழற நான் எதுவும் கஷ்டப்படுத்திட்டனா!!” என்று அவர் பரிதாபமாய் பார்க்க பிரணவ் விரைந்து வந்தான்.
“எதுக்கு இப்போ வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணுற” என்றான் சற்றேறிய குரலில்.
“டேய் நீ போடா எதுக்கு இப்போ இங்க வந்த, நீ குரல் கொடுக்கறதை பார்த்தாலே அவ அழுதிருவா போல. நாங்க பேசிக்கறோம் நீ போ” என்று பிரணவை மரகதம் விரட்ட அவன் அமைதியாய் நின்றான்.
நீ பதில் சொல்லாமல் நான் போக மாட்டேன் என்பது போல் நின்றிருந்தான். “ஒண்ணுமில்லை அத்தை…. நீங்க பேசினதும் அம்மா ஞாபகம் வந்திடுச்சு சாரி அத்… அம்மான்னு கூப்பிடவா” என்று அவள் கேட்கவும் அவர் உருகிப் போய்விட்டார்.
பிரணவ் அவளையை தான் பார்த்திருந்தான். நிறைய நாட்களை வீணடித்து விட்டோமோ, தனிமையை அதிகம் உணர்ந்திருக்கிறாள் போல என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
“மனோ இதுக்கா அழுவாங்க பாரு உங்க வீட்டுக்காரர் நாங்க என்னமோ உன்னைய சொல்லிட்டோம்ன்னு நேரா உள்ள வந்திட்டார்” என்று கிண்டலத்தாள்.
“ஏன் அக்கா நீங்க மாசமா இருக்கீங்கன்னு ஏன் என்கிட்ட சொல்லவேயில்லை”
இங்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் தெரியும் மனோ. நீங்க வேற கோவிலுக்கு கிளம்பிட்டு இருந்தீங்க அதான் உங்களை தொல்லை பண்ணலை. எப்படியும் இங்க வருவீங்கன்னு தான் சொல்லலை”
“நாங்க இங்க வருவோம்ன்னு உங்களுக்கு முதல்லயே தெரியுமா!!” என்று விழிவிரித்தாள் மனோ.
“எனக்கும் தெரியும்டா ராஜாத்தி” என்றார் மரகதம்.
“அப்போ மாமா சொன்ன மாதிரி எல்லாரும் தான் கூட்டுக்களவாணிகள் போல. மாமாக்கு மட்டும் தெரியாது அப்படி தானே”
“அவருக்கு மட்டும் தான் தெரியாது. தெரிஞ்சிருந்தா மனுஷன் வானத்துக்கும் பூமிக்கும்ல குதிச்சிருப்பார். பேரன் தாத்தான்னு கூப்பிட்டதும் அந்த பொக்கைவாய் கிழவனுக்கு உலகமே மறந்திருச்சு” என்று அவர் சத்தம் போட்டு சொல்ல மனோ “மா… மா…” என்றாள்.
“அம்மான்னு சொல்லுடா அதென்னா மா… மான்னு இழுக்கற”
அதில்லைம்மா மாமா… “ என்றாள்
“என்ன சத்தம்” என்ற கர்ஜனை குரலில் சட்டென்று அடங்கினார் மரகதம். ‘அச்சோ பொக்கைவாய்ன்னு சொன்னது காதுல விழுந்திருக்குமோ’ என்று எண்ணிக்கொண்டே அவர் மனோவை பார்க்க அவள் ‘ஆம் விழுந்துவிட்டது’ என்பதாய் கண்ணசைத்தாள்.
“பொக்கைவாய் கிழவி சமையலை பார்க்காம என்ன என்னை பத்தி வெட்டிப்பேச்சு” என்றார் அவர்.
மனோவிற்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது, அவள் மோனாவை பார்க்க அவளோ சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினாள்.
“என்னையும் நீ அப்பான்னு கூப்பிடலாம்” என்று போகிற போக்கில் அந்த மனுஷன் சொல்லிச் செல்ல ‘இவர் என்ன சொல்கிறார்’ என்று மனதில் ஓட்டிப் பார்த்தவளுக்கு மீண்டும் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.
எல்லா உறவுகளும் தனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதாக தோன்றியது. வந்தவுடன் இருந்த இறுக்கமும் ஒதுக்கமும் அவளைவிட்டு விடைபெற்று சென்றிருந்தது.
பிரணவ் மீண்டும் அங்கு வர “வா ரூம்முக்கு போகலாம்” என்று அவளை அழைத்தான்.
“நான் இங்க இருக்கனே!!” என்றவளை வித்தியாசமாய் பார்த்தான்.
“மேல ரூமுக்கு போங்க… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க வண்டியில வந்த களைப்பு இருக்குமாயில்லையா!! குழைந்தைக்கும் அலுப்பா இருக்கும் போங்க” என்று மரகத்தின் கரிசனம் உண்மையிலேயே அவள் அன்னையின் குணத்தை ஒத்திருந்தது.
“ஹம்ம் சரிம்மா!!” என்று அவருக்கு தலையாட்டிவிட்டு பிரணவின் பின்னே சென்றாள். படியில் ஏறும் போது அவள் எப்போது முன்னே சென்றாள் என்றாள் என்பதை அவள் உணரவேயில்லை பின்னால் வந்து பிரணவ் அணைக்கும் வரை.
“என்ன பண்றீங்க ரித்திக் விடுங்க” என்று வாய் தான் சொன்னது மனது அவன் அருகாமையை ரசித்தது.
அதை சரியாக கண்டுப்பிடித்தவனாக “கிட்ட வரவேண்டாம்ன்னா தள்ளிவிடு” என்று சவாலாய் சொன்னான்.
“தள்ளிவிட மாட்டேன்னு தைரியமா உங்களுக்கு”
“பார்றா முதல்ல என்னடா இது எல்லாரும் ஏத்துக்குவாங்களான்னு உள்ள வரும் போது ஒரு லுக் விட்ட, அப்புறம் என்னடான்னா வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணிட்டு சென்டிமென்ட் லுக் விடுற…”
“என்னை பார்த்து மட்டும் தான் நீ இதுவரை லுக் விட்டதில்லை” என்று அங்கலாய்த்தான்.
அறைக்குள் அவளை தள்ளி வந்து கதவை அடைத்தவன் மனைவியுடன் கட்டிலில் சாய்ந்தான். “என்ன சார் ரொம்ப சந்தோஷ மூட்ல இருக்கா போல இருக்கு”
“ஹ்ம்ம் ஆமாடி செல்லப் பொண்டாட்டி. சத்தம் போட்டு பாட்டு பாடணும் போல இருக்கு”
“பாடுங்க…”
“எவ்வளோ வருஷம் ஆச்சு தெரியுமா… எல்லரையும் ரொம்ப மிஸ் பண்ணேன்… அதுவும் பெரியப்பான்னா எனக்கு ரொம்ப இஷ்டம், அப்பாவோட என்னால பேச மட்டும் தானே முடியும்”
பதிலுக்கு அவர் பார்வை மட்டும் தான் கிடைக்கும். ஆனா அப்பாவோட அட்வைஸ் எல்லாம் ஒட்டுமொத்தமா பெரியப்பா மூலமா தான் எனக்கு கிடைச்சது”
“ஹ்ம்ம் அதான் அவர் அடிக்கும் போது வாங்கிட்டு நின்னீங்களா!!”
“ஹா… ஹா… அது பெரியப்பாவோட கோபத்தோட அளவு… அடிச்சதும் எல்லாம் மறந்திடுவாரு… இதுக்கு முன்ன ஒரு முறை வாங்கியிருக்கேன். அதுக்கு பிறகு இப்போ தான்”
“அடி வாங்குறது கூட ஒரு சுகம் தான் தெரியுமா!! ஒருத்தரோட உரிமையோட அளவு அந்த அடியில தான் தெரியும். என் மேல இருக்கற பாசம் தானே அவரை அடிக்க வைச்சது” என்று பேசியவனை ஆச்சரியமாய் பார்த்தாள்.
“என்னால தானே எல்லாரையும் மிஸ் பண்ணீங்க” என்றவளின் குரல் இறங்கி விட்டிருந்தது.
“அடி வாங்க போறே நீ!!” நல்ல மூட்ல இருக்கேன் இப்படி பேசி என்னை டென்ஷன் பண்ணாதே!!”
“நீ எனக்கு கிடைச்சிருக்கியே அது எனக்கு வரமில்லையா!!! உன்னால தானே அஜி நமக்கு கிடைச்சான். அது எவ்வளவு பெரிய வரம். இதெல்லாம் விட்டு எப்போபாரு எதாச்சும் பேசி நீ குழம்பி என்னையும் குழப்பிவிடுற” என்றான்.
“சரி சரி பேச மாட்டேன். ஆமா அஜி எங்க??”
“மேடம்க்கு இப்போ தான் புள்ளை ஞாபகம் வருதா!!”
“அதெல்லாம் எப்பவும் இருக்கு, கீழ இருக்கானான்னு உறுதிப்படுத்திக்க தான் கேட்டேன்”
“ஹ்ம்ம் கீழ தான் இருக்கான்… பெரியப்பா அவனை கூட்டிட்டு வெளியே போயிருக்கார்”
“சின்ன குழைந்த மாதிரி அவர் அவங்கிட்ட விளையாடுறது பார்த்தா மனசுக்கு நிறைவா இருக்கு. கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோன்னு தோணிச்சு”
“இங்க வந்த மாதிரி அங்க… உங்க வீட்டுக்கு… இல்லை நம்ம வீட்டுக்கு எப்போ கூட்டி போவீங்க…”
“மாமா… அத்தை… உங்க அக்காஸ் மாமாஸ் எல்லாம் எப்போ பார்ப்போம்” என்று அவள் ஆரம்பிக்கவும் பிரணவ் வழக்கம் போல் அமைதியானான்.
‘கூட்டி போவோமா!! அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா!! அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரவணன் பற்றி தெரிந்தால் எப்படி ரியாக்ட் செய்வாள் என்பதை யோசித்து தான் சற்று நிதானித்திருந்தான்.
இங்கு வந்தது முதல் அவனுக்குமே இனியும் யாரையும் பிரிந்து இருக்க மனமில்லை. அவன் பெரியப்பாவை போன்று தானே எல்லாரும் தன்னை நினைப்பர் என்று தோன்ற முதல் வேலையாய் அவர்களை சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
“கூடிய சீக்கிரம் அங்கயும் போகலாம் ரதிம்மா… ஆனா அங்க என்ன நடந்தாலும் நீ வருத்தப்படக் கூடாது. என்ன பேசினாலும் யோசிக்காம எப்பவும் எந்த முடிவும் நீ எடுக்க கூடாது சரியா” என்று கேட்க மிக நல்லப்பிள்ளையாய் தலையை ஆட்டினாள்.
பிரணவ் என்ன அறிவுரை சொல்லி என்ன பயன் நடக்கப் போவதை அவனால் தடுத்த நிறுத்த முடியாமல் போனது. பிரணவ் குடும்பத்தினர் அங்கு வந்த இரண்டு நாட்கள் விளையாட்டாய் சென்றுவிட்டது.
மனோவும் அஜியும் அங்கு எல்லாருடனும் அழகாய் பொருந்திப்போயினர். கணவனும் மனைவியும் அதிக சந்தோசத்துடனும் ஒற்றுமையுடனும் இருந்தது கண்திருஷ்டியாய் இருந்தது போலும்.
மறுநாளைய விடியல் நல்ல விடியலாய் இல்லை அவர்களுக்கு. பிராகாஷும் மோனாவும் மருத்துவமனை சென்றிருக்க வீட்டு பெரியவர்கள் வத்தலகுண்டில் ஒரு விசேஷ வீட்டிற்கு சென்றிருந்தனர்.