அத்தியாயம்- 17
உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று
பிறந்தாலும் பேராசை யாகாது அஃத றிந்தும்
சலுகைக் காரர்க் காசையானே னிப்போது
– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
சில நிமிடங்கள் அங்கு கனத்த அமைதி நிலவியது. வானதி பேசாமலே இருக்க “என்ன வானதி லவ் பண்ணுறியா?? அதை எப்படி என்கிட்டே சொல்றதுன்னு பயமாயிருக்கா??” என்றான் வானவன் பட்டென்று
ஆம் என்பதாய் தலையை ஆட்டியவள் அப்போது தான் உணர்ந்தவளாய் “அண்ணா உனக்கெப்படி தெரியும்…” என்றாள்.
“நீ லேசுல எதுலயும் சிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்… ஆனா கொஞ்ச நாளா உன் நடவடிக்கைல மாற்றம் தெரிஞ்சுது… சரி உனக்கு ஒரு பிரச்சனைன்னா நீயே என்கிட்ட சொல்லுவன்னு எனக்கு தெரியும்…”
“அதான் நீ சொல்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணேன்… நான் சொன்னது சரி தானே…”
“அவர் யாருன்னு…”
“அதுவும் தெரியுமே…” என்றதும் வெளியில் இருந்த ஆதியும் ஜோதிஷும் கூட பரபரப்பாயினர். அவர்கள் வெளியில் நின்றிருந்தாலும் அவர்கள் காதுகளை உள்ளே நடப்பதை கேட்பதற்காய் கொடுத்திருந்தனர்.
“ஜோ மாமா தானே…” என்றவன் பார்வை வெளியே நின்றிருந்தவர்களை உள்ளே அழைக்கும் விதமாய் பார்த்தது.
‘என்னடா இது இன்னைக்கு எல்லாருமா சேர்ந்து இப்படி சர்ப்ரைஸ் கொடுக்கறாங்க… இது உண்மையா…’ என்று திகைத்து நின்றிருந்தான் ஜோதிஷ்.
“வாங்க மாமா எதுக்கு வெளிய நின்னுட்டு இருக்கீங்க…” என்று வாய்விட்டு அவர்களை அழைக்கவும் அவர்கள் உள்ளே வந்தனர்.
அர்ஷிதா எல்லாருக்கும் ஆரஞ்சு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். “ஹேய் என்ன எதுக்கு அப்படி பார்க்குற…” என்றான் வானவன் வானதியை பார்த்து.
“மாமாவும் கண்டிபிடிச்சிட்டார், நீயும் கண்டுபிடிச்சுட்ட எப்படி தெரியும் உனக்கு…” என்று குழப்பமாய் அவனை பார்த்தாள்.
“ஹேய் லூசு வானதி நான் உன்னோட அண்ணன்டி, உன்னை அசைவு எனக்கு தெரியாதா… உனக்கு வேற யார் கூடவும் பழக்கமில்லைன்னு எனக்கு தெரியும்…”
“அதுவுமில்லாம ஜோ மாமா இப்போலாம் இங்க வர்றது இல்லைன்னு அன்னைக்கு அர்ஷிதா மாமாகிட்ட சொல்லும் போது கேட்டேன்… கொஞ்சம் உன்னை கவனிச்சு பார்த்ததுல அதுக்கு காரணம் நீன்னு புரிஞ்சுது…”
“நான் சொன்னது சரி தானே, என்னோட கணிப்பு சரின்னா உங்க விஷயம் தெரியக் கூடாதுன்னு நீ தான் மாமாவை இங்க வரவேணாம்ன்னு சொல்லியிருக்கணும்…” என்றான் நேரில் அவர்கள் பேசியதை கேட்டது போல்.
“ஆமா மாப்பிள்ளை அதே தான் நேர்ல பார்த்த மாதிரியே சொல்றியே…” என்றான் ஜோதிஷ்.
வானவன் திரும்பி அவனை பார்க்க அதிலிருந்தது என்னவென்று கண்டுபிடிக்க முடியாதவனாய் வாயை மூடிக் கொண்டான் ஜோதிஷ். ‘பயபுள்ளை இவ்வளவு நேரமும் மாமான்னு மரியாதையா தானே பேசிச்சு…’
‘இப்படி எதுக்கு இப்படி பார்த்து வைக்குது… ஒருவேளை நான் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டது பிடிக்கலையோ’ என்றவனின் முகம் சுருங்கி விட வானவன் வாய்விட்டு சிரித்தான்.
“என்ன மாமா பயந்துட்டீங்களா, சும்மா தான் பார்த்தேன் மாமா…” என்று கூற “எனக்கு பீதியை கொடுக்கறதுல அப்படி என்ன மாப்பிள்ளை உனக்கு சந்தோசம்” என்றான் அவன்.
“சரி அதெல்லாம் விடுங்க, என்ன முடிவு பண்ணியிருக்கீங்க… அவ படிப்பு முடியட்டும் தானே… இல்லை இப்போவே கல்யாணம் பண்ண எதுவும் ஐடியா இருக்கா…” என்றான் வானதியின் அண்ணனாக.
“இல்லை மாப்பிள்ளை கல்யாணம் இப்போ வேண்டாம், அவ படிச்சு முடிக்கட்டும்… உன்னோட தங்கச்சிக்கு வேலைக்கு போகணுமாம்… அவ ஆசைப்படி ஒரு வருஷம் வேலைக்கு போகட்டும் அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்…”
“சரி மாமா நாம இப்போவே இதெல்லாம் பேசினா சரியா வராது, முதல்ல இவளோட எக்ஸாம் முடியட்டும்… இன்னும் மூணு மாசம் தானே இருக்கு… அப்புறம் அதை பத்தி பேசுவோம்…”
‘நானாடா அவசரப்பட்டு இதெல்லாம் ஆரம்பிச்சேன்… நீயா கேட்ட நீயா வேணாம்ன்னு சொல்ற… எல்லாம் என் நேரம்…’ என்று பெருமூச்செறிந்தான் ஜோதிஷ்.
“மாமா என்னை தானே திட்டுறீங்க…” என்ற வானவனை பார்த்து சற்று மிரண்டான் ஜோதிஷ். “மாப்பிள்ளை நீ என்ன சந்திரமுகில வர்ற சூப்பர் ஸ்டார் சரவணன் மாதிரியே மனசுல நினைக்கிறது சொல்லி வைக்கிற…”
“ஹா ஹா மாமா இது ரொம்ப சிம்பிள் மாமா… முதல்ல உங்களை பேச வைச்சு என்ன விஷயமுன்னு கேட்டுட்டு நான் அதுக்கு மறுப்பா பேசினேன்… அப்போவே தெரியாதா எனக்கு நீங்க என்னை மனசுக்குள்ள திட்டுறீங்கன்னு…”
“எல்லாம் ஒரு சின்ன கால்குலேஷன் தான் மாமா… மனோதத்துவம் படிக்க போறவனுக்கு இதெல்லாம் தெரிச்சிருக்க வேண்டாமா…” ஜோதிஷ்.
“சரி ஆதி நான் கிளம்பறேன்… கிளம்பறேன் மாப்பிள்ளை… வீட்டுக்கு போகணும்… உங்கிட்ட எங்க விஷயத்தை சொன்ன மாதிரி என்னோட அம்மாகிட்டயும் எல்லாம் சொல்லணும் முடிவு பண்ணிட்டேன்…”
“ஓகே பை…” என்று சொல்லி விடைபெற்றவன் வானதியுடம் கண்களால் விடைபெற்று கிளம்பினான்.
ஜோதிஷ் கிளம்பியதும் வானதி அர்ஷியுடன் உள்ளே செல்ல ஆதி வானவனிடம் “ஏன் வானவா உனக்கொண்ணும் என் மேலயோ ஜோ மேலயோ எதுவும் கோபமில்லையே…”
“எதுக்கு கோபம் மாமா??”
“வானதி விஷயம் தெரிஞ்சு சொல்லாம இருந்துட்டோம்ன்னு, இல்லை ஜோ வானதியை விரும்புறது பத்தி…”
“எனக்கு எதுவும் கோபமில்லை மாமா… ஜோ மாமாவும் உங்களை மாதிரின்னு நீங்க அன்னைக்கு எந்த அர்த்ததுல சொன்னீங்கன்னு எனக்கு தெரியாது… ஆனா உண்மையாவே நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி ஆளுங்க தான் மாமா…”
“ஜோ மாமா உங்களை போல அழுத்தமானவர் இல்லை… கொஞ்சம் துருதுருன்னு இருக்கார் அவ்வளோ தான்… மத்தப்படி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல மாதிரின்னு எனக்கு தெரியும் மாமா…”
“நான் அழுத்தமானவனா வானவா??”
“நிச்சயமா மாமா…”
“எதை வைச்சு சொல்ற…”
“எங்கக்காவை வைச்சு தான் சொல்றேன் மாமா… இந்த ரெண்டு மாசமா நான் உங்களை பார்த்திட்டு தானே இருக்கேன்… நீங்க எங்க அக்காவையும் மாத்தி இருக்கீங்க… நீங்களும் மாறியிருக்கீங்க…”
“சரி தானே மாமா… ரொம்ப அழுத்தமா இருந்து சாதிச்சுட்டுடீங்க மாமா…”
“ஏன் வானவா இப்படி எல்லாம் பேசற, உங்க அக்காவை ஏதோ தப்பு பண்ணற குழந்தை போல சொல்ற…”
“அவ தப்பு பண்ணுற குழந்தை இல்லை மாமா, புரியாம இருக்க குழந்தை அவ… அவகிட்ட பக்குவமா தான் சொல்லி புரிய வைக்கணும்… இல்லை அவளோட கவனத்தை மாத்தணும்…”
“நீங்க அவளோட கவனத்தை மாத்திட்டீங்க, அவளையும் மாத்திட்டு வர்றீங்க… இந்த மாற்றம் நல்லதா அமையணும் மாமா…”
“குந்தவை இன்னும் குழந்தையாய் தான் இருக்க மாதிரி தோணும்… ஆனா அவளுக்குள்ள நெறைய ஏக்கங்கள் இருக்கு… அதை நீங்க தெரிஞ்சுக்கலை…” என்றான் ஆதி.
“என்ன மாமா சொல்றீங்க…” என்றான் வானவன், தன்னால் எல்லாரையும் புரிந்து கொள்ள முடியும் என்று லேசாய் மிக லேசாய் ஒரு இறுமாப்பு அவனிடம் இருந்தது உண்மை… ஆதியின் பேச்சில் அந்த சிறு கர்வமும் சிதறியது.
தான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தான். “சொல்லுங்க மாமா அக்காவுக்கு எதுவும் கவலையிருக்குன்னு நினைக்கிறீங்களா??”
“அதை கவலைன்னு சொல்ல முடியாது வானவா… அவளோட சின்ன சின்ன ஆசைகள், ஏக்கம்ன்னு எல்லாம் நடக்காத போது ஒரு இறுக்கம் வருமே… அது போல தான் ஒரு இறுக்கம் குந்தவைக்கிட்ட இருக்கறது…”
“அதனால தான் தன்னை சுற்றி அவளே ஒரு வட்டம் வைச்சுகிட்டு அதுல இருந்து வெளிய வராம இருக்கா… அது தான் அவளை நமக்கு தனியா காட்டுது…”
“எப்படி மாமா அக்கா இப்படி தான்னு கண்டுபிடிச்சீங்க… அவளோட இருந்த இத்தனை வருஷத்துல நான் அவளை பத்தி எல்லாமே தெரிஞ்சு வைச்சிருக்கேன்னு நினைச்சேன்… ஆனா நீங்க தெரிஞ்ச அளவுக்கு கூட நான் அவளை தெரிஞ்சுக்கலைன்னு புரியுது…”
“குந்தவையை எனக்கு பிடிச்சதுனால அவளை புரிஞ்சுது…வேற ஒண்ணுமில்லை வானவா…”
“ரொம்ப சந்தோசமாயிருக்கு மாமா… நீங்க ரெண்டு பேரும் சந்தொசமாயிருக்கணும் எனக்கு தான் வேணும் மாமா…அக்காவை நினைச்சு கொஞ்சம் பயம் இருந்துச்சு…”
“இப்போ ஒரு சதம் கூட எனக்கு பயமில்லை, நீங்க அவளுக்கு எப்பவும் துணையா இருப்பீங்கன்னு புரியுது…அப்புறம் மாமா நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்திட்டேனே…”
“என்ன விஷயம் வானவா??”
“ஆடி மாசம் பிறக்க போகுதுல, அதுக்கு சீர் வைச்சுட்டு நாங்க அக்காவை வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்…” என்றான்.
“ஓ!!! சரி வானவா, போயிட்டு ரெண்டு நாள்ல வந்திடலாம்ல…” என்றான்.
“மாமா அக்கா மட்டும் தான் கூட்டிட்டு போவோம்… ரெண்டு நாள் எல்லாம் இல்லை அக்கா ஆடி மாசம் முடியற வரை அங்க தான் இருப்பா… அம்மா அதை உங்ககிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க…”
“நான் அதுக்கு தான் இங்க வந்ததே, அதைவிட்டு இங்க வேற கதை எல்லாம் பேசிட்டு சொல்ல மறந்திட்டேன் மாமா… நாளைக்கு ராஜராஜன் சித்தப்பா வருவாங்களாம்…”
“அவங்க வந்து எப்படியும் உங்ககிட்ட இதை சொல்லுவாங்களாம்… இருந்தாலும் அம்மா ஒரு வார்த்தை இதை பத்தி உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க…”
“நாளைக்கு அம்மாவும் அப்பாவும் வந்து சீர் வைச்சுட்டு அக்காவை கூட்டிட்டு போவாங்கன்னு நினைக்கிறேன்…”
“என்னது நாளைக்கேவா… அதுக்குள்ளே என்ன அவசரம் வானவா…”
“மாமா அடுத்த வாரம் ஆடி பிறக்குது… ஆனா அக்காவை கூட்டிட்டு போக நாளைக்கு தான் நல்ல நாள் போல அதான் மாமா… சரி மாமா நான் வீட்டுக்கு கிளம்புறேன்…” என்று சொல்லி ஆதியை கலவரப்படுத்திவிட்டு அவன் கிளம்பி சென்றுவிட்டான்.
குந்தவை மதியமே வந்துவிடுவாள் என்பதால் ஆதி சாப்பிட்டுவிட்டு அவளை அழைத்து வரச் சென்றான். மாலை அவள் வீட்டிற்கு வந்ததும் “குந்தவை ஆடி பிறகுதாமே…” என்றான் மொட்டையாக.
“ஆமா ஆடி எல்லா வருஷமும் பிறக்குது, அதுல உங்களுக்கு எதுவும் சந்தேகமா” என்றாள் அவள் சிரித்துக் கொண்டு…
‘நான் எவ்வளவு கவலையா கேட்குறேன் இவ எனக்கு கிண்டலா பதில் சொல்றா…’
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும், நாளைக்கு மாமாவும் அத்தையும் வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்களாமே… இதை ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லலை…”
“என்னது நாளைக்கு வர்றாங்களா… ஆடி அதுக்குள்ளவா பிறக்குது…” என்றாள் அவள்.
“என்ன கிண்டலா??” என்றான்.
“இல்லைங்க அம்மா போன வாரம் ஆடிக்கு கூப்பிடணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க… அது இவ்வளவு சீக்கிரம் பிறக்கும்ன்னு எனக்கு தெரியாது… நான் தான் போயிட்டு ரெண்டு நாள்ல வந்திடுவேனே…”
“என்னது ரெண்டு நாள்ல வந்திடுவியா… வானவன் நீ ஒரு மாசம் அங்க இருக்க வேண்டி இருக்கும்ன்னு சொன்னான்… நீ இப்படி சொல்ற, அப்போ நீ ரெண்டு நாள்ல வந்திடுவியா…” என்றான் மகிழ்ச்சியாக.
“என்னது ஒரு மாசமா…” என்றவள் யோசிக்க ஆரம்பிக்க ஆதியின் முகம் வாடியது.
அதற்கு பின் இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை… அன்றைய பொழுது ஒரு மௌனமான பொழுதாகவே சென்றது. மறுநாள் விடியலில் போன் செய்த ராஜராஜன் வீட்டுக்கு வந்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
‘ஆமாம் இவருக்கு இப்போ தான் சொல்ல தோணுதா வீட்டுக்கு வர்றேன்னு…’ என்று முணுமுணுத்துக் கொண்டான் ஆதி.
காலையிலேயே மணிமேகலையும் இளங்கோவனும் மாலை மூன்று மணிக்கு மேல் அழைக்க வருவதாக சொல்லிவிட்டு செல்ல ஆதி அவன் அறையை விட்டு வெளியே வராமல் அதிலேயே அடைந்து கிடந்தான்.
‘இவளாச்சும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா… இங்கேயே இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லலாம்ல… இல்லன்னா போயிட்டு ஒரு ரெண்டு நாள்லயோ இல்லை ஒரு வாரத்துலயோ வந்திடலாம்ல…’ என்று புலம்பித் தீர்த்தான் ஆதி.
குந்தவையும் கனத்த மனதுடனே அவள் உடைமைகளே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அதே அறையில் கட்டிலில் வேலை பார்ப்பது போல் மடிகணினியை வைத்துக் கொண்டிருந்த ஆதி அதிகம் தவித்து போனான்.
அவ்வப்போது அவளை பார்ப்பதும் கணினியில் எதையோ செய்வதும் என்று அவனிருக்க மதிய உணவுக்காய் அவள் வந்து அழைக்க “எனக்கு பசிக்கலை, நீ போய் சாப்பிடு நான் அப்புறம் சாப்பிடுறேன்…”
“சித்தப்பா நீங்க வருவீங்கன்னு சாப்பிடாம உட்கார்ந்திருக்காங்க… ப்ளீஸ் சும்மா பேருகாச்சும் வந்து ரெண்டு வாய் சாப்பிடுங்களேன்… காலையிலேயே நீங்க சரியா சாப்பிடவே இல்லை…”
“இதெல்லாம் நல்லா பாரு, என்னை மட்டும் பார்க்காதே…” என்று முணுமுணுத்தான் அவன்.
“என்ன சொன்னீங்க?? ஒண்ணும் கேட்கலை…” என்றாள்.
“ஹான் வர்றேன்னு சொன்னேன்…” என்றவன் உணவருந்தச் சென்றான்.
சாப்பிட்டுவிட்டு வந்தவன் மீண்டும் அவன் அறைக்குள்ளேயே அடைந்தான். எப்போதும் அவன் மாமா வீட்டிற்கு வந்தால் அவருடன் பேசுவது பாட்டியை பற்றி விசாரிப்பது என்று இருப்பவன் இந்த முறை யாரை பற்றியும் கவலைப்படாமல் அவன் அறையிலேயே முடங்கியது அவருக்குமே ஆச்சரியம்.
குந்தவையும் சாப்பிட்டு வரவும் அவள் பெற்றோர் வரவும் சரியாக இருந்தது. வெளியே பேச்சு குரல் கேட்டதுமே ஆதிக்கு கடுப்பாக இருந்தது. ‘இப்போ தான் கொஞ்சம் நல்லா போயிட்டு இருந்துச்சு…’
‘அதுக்குள்ள இவளை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்களே… இவளும் பேசாம இருக்காளே…’ என்று மனம் குமைந்தான்.
குந்தவை வந்தவர்களை ஹாலில் அமர வைத்துவிட்டு அவனை அழைத்து வருவதாக கூறும் குரல் கேட்கவும் ஆதி மீண்டும் கணினியில் ஆழ்ந்தான். கதவு திறந்து உள்ளே வந்தவள் அவனை அழைத்தாள்.
“அம்மா அப்பா வந்திருக்காங்க என்னை ஆடிக்கு அழைக்க…”
“ஹ்ம்ம் சரி அதுக்கென்ன இப்போ…”
“இப்படி பேசினா என்ன அர்த்தம்…”
“அதான் நீ ஊருக்கு முன்ன கிளம்பி ரெடியா இருக்கியே, கிளம்ப வேண்டியது தானே… எதுக்கு இங்க வந்து நிக்குற…” என்றவனின் குரலில் லேசான கோபம் இருந்ததை உணர்ந்தாள்.
“நீங்க இப்படி ரூம்லேயே இருந்தா எப்படி, வெளிய வாங்க…”
“வந்து என்ன செய்ய, நீ தான் கிளம்பி போக போறியே??” என்றவனின் குரலில் போகாதே என்ற மறைபொருள் இருப்பதை புரிந்துக் கொண்டாள். இருந்தாலும் என்ன பேசுவது என்று புரியவில்லை அவளுக்கு.
“நீங்க கோபமா பேசறீங்க… நான் வெளிய போறேன்…” என்றவள் ஏதும் பேசாமல் வெளியில் சென்றுவிட்டாள்.
‘ஏன் இப்படி பேசறீங்க நான் இங்கவே இருக்கேன்… அப்படி எதுவும் சொல்றாளா… ஒரு சமாதானமா பேசினா தான் என்ன…’ என்ற கோபம் அவனுக்குள் எழுந்தது.
குந்தவை மீண்டும் அறைக்குள் வந்தவள் கட்டிலுக்கு அந்த புறம் வைத்திருந்த அவள் உடைகள் அடுக்கி வைத்திருந்த பையை எடுக்கச் சென்றாள். அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்தான்.
“குந்தவை…” என்ற அவனழைப்பில் அவள் திரும்ப “ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு…” என்றான்.
“என்ன ப்ளீஸ்?? என்ன ஒண்ணு, எனக்கொண்ணும் புரியலையே??” என்றாள்.
“நான் புரிய வைக்கிறேன் வெயிட் பண்ணு…” என்று நிறுத்தினான் அவன்.
“வெயிட் பண்ணணுமா, என்ன புரிய வைக்க போறீங்க??”
“கொஞ்சம் பேசாம இருக்கியா…”என்றவனின் பார்வை அவள் இதழின் மேல் பதிந்த அவன் அவளுக்கு வெகு அருகில் சென்றான்.
“என்… என்ன சொல்றீங்க… ஏன் பேசாம இருக்க சொல்றீங்க… இப்… இப்போ எதுக்கு பக்கத்துல வர்றீங்க…” என்றவளின் குரல் தந்தி அடித்தது.
ஆதி அவளை மேலும் நெருங்கியவன் அவளை சுவற்றில் சாய்த்து நிறுத்தினான். ஒரு கையை சுவற்றில் ஊன்றியவன் மறு கையை சிறை போல் வைத்தான்.
“ப்ளீஸ் குந்தவை ஒரே ஒரு முத்தம், ப்ளீஸ்…” என்றவன் அதற்கு மேல் அவளை பேச விடாமல் அவள் இதழை சிறை செய்தான்.
சுவரில் பதித்திருந்தவன் கைகள் இப்போது அவள் இடையை வளைத்திருந்தது. நீண்டதொரு முத்த யுத்தம் நடந்துக் கொண்டிருக்க வெளியில் இருந்த குந்தவை என்ற அழைப்பு கலைத்தது.
ஆதி நெருங்கும் வரை மட்டுமே உணர்ந்திருந்தவள் தன்னிலை மறந்து நின்றிருந்தாள். வெளியில் கேட்ட அழைப்பில் ஆதி தான் தன்னிலைக்கு வந்து அவளை விடுவித்திருந்தான்.
அவள் கண்ணை மூடிய நிலையிலேயே நின்றிருக்க “குந்தவை…” என்று அவன் அழைக்க மெதுவாய் கண்ணை திறந்து பார்த்தவளுக்கு அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் போனது. “ஹேய் என்ன கீழே பார்த்திட்டு இருக்க, என்னோட முகத்தை பாரு…” என்று அவன் முகவாய் தொட்டு நிமிர்த்தினான் அவன்.
“உன்னை கூப்பிடுறாங்க… நீ கிளம்ப வேண்டாமா??”
“ஹ்ம்ம் போகணும்…”
“என்னைவிட்டு போகணுமா??” என்றவனின் குரலில் இப்போது ஏக்கம் நிறைந்திருந்தது.
“ஹ்ம்ம் ஆமாம் போகணும்…” என்று அவள் தொடர்ந்து கூறவும் அதற்கு மேல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“சரி போயிட்டு வா…”
“நீங்களும் வாங்க…” என்றவள் அவனோடு வெளியில் சென்றாள்.
ஆடி சீரை வைத்துவிட்டு அவள் வீட்டினர் தயாராய் நின்றனர். “சரிம்மா குந்தவை போய் ரெடியாகி வாடா…” என்றார் மணிமேகலை.
“எங்கம்மா…” என்றவளை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர்.
“நம்ம வீட்டுக்கு தான்டா…ஆடிக்கு நீ அங்க வந்து தானே இருக்கணும்…” என்றார் மணிமேகலை.
“அம்மா இன்னும் என்னம்மா அந்த காலத்துலயே இருக்கீங்க… இந்த சம்பிரதாயம் எல்லாம் தேவையாம்மா… இங்க அர்ஷிக்கு பரீட்சை நேரம் வேற… அவருக்கும் இது ஆடிட்டிங் டைம் வேற…”
“இப்போலாம் என்னை கொண்டு வந்து வீட்டில விட்டுட்டு சமயத்துல திரும்பவும் ஆபீஸ் போயிடறார்… இல்லைனா விடிய விடிய உட்கார்ந்து வேலை பார்க்கறார்… கொஞ்ச நேரம் தூங்கிட்டு திரும்பவும் எழுந்து ஓடறார்…”
“அவ தனியா எப்படி பார்த்துக்குவா… அவ படிப்பாளா இல்லை சமைப்பாளா, இல்லை இவரை கவனிப்பாளா… நான் இங்க இருந்தா தான்ம்மா வசதிப்படும்…”
ஆதியோ மனதிற்குள் ‘என் பொண்டாட்டிக்கு என் மேல இவ்வளவு பாசமா, எனக்கு ஆடிட் நேரமெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கா… அதெப்படி தெரியாம போகும்… இவ இன்காம்டாஸ்ல தானே வேலை பார்க்குறா…’ என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.
“ஏன்டா செல்லம் நாம என்ன ரொம்ப தூரத்துலையா இருக்கோம்… இந்தா இருக்க எதிர் வீடு தானேடா… அவங்க நம்ம வீட்டில வந்து சாப்பிட்டு போறாங்க…”என்றார் மணிமேகலை
“அதே தான்ம்மா நானும் சொல்றேன், இவ்வளவு பக்கத்துல இருந்துட்டு நான் இங்க அவங்க அங்கன்னு இருக்க முடியாதும்மா… அவங்க வந்து தினமும் நம்ம வீட்டில வந்து சாப்பிடுவாங்களா…”
“ரொம்ப வேலை அதிகம் இருந்தா அவர் ஆபீஸ்லயே தங்கிடுவார்… நான் வர்றதுக்கு முன்னாடி எல்லாம் மங்களம் ஆன்ட்டி வீட்டில போய் தங்க வைச்சுட்டு இருந்தார்… இனிமேயும் அப்படி இருக்க முடியுமா…”
“அதான் நான் இங்க இருக்கேன்லம்மா… சொன்ன புரிஞ்சுக்கோங்கம்மா…”
“சரிடா நீ தினமும் இங்க வந்துபோ யாரு வேண்டாம்ன்னு சொன்னது, இதெல்லாம் சம்பிரதாயம்டா செய்யணுமே…”
“அம்மா நான் தினமும் இங்க வந்து போறதுக்கு நான் இங்கயே இருக்கேன்… இந்த சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம்மா… இவர் வீட்டுக்கு வராம ஆபீஸ்லயே இருந்திட்டார்ன்னா அப்போ என்ன செய்யா…ஏன் சித்தப்பா நீங்களே சொல்லுங்க… நான் சொல்றது சரி தானே…” என்று ராஜராஜனை பார்த்தாள்.
“என் பொண்ணு சொல்றது சரி தானே அண்ணி… அவ அங்க வந்துட்டா இங்க எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுவாங்க, பாவம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட அவங்க ரெண்டு பேரும் தனியா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க…” என்று அவளுக்கு சப்போர்ட் பண்ணுவது போல் பேசி அவளை கிண்டலடித்தார் அவர்.
‘இந்த மாமா எல்லாம் கெடுத்திடுவார் போலயே… அவளே இங்க இருக்கேன்னு சொல்ற, இவர் என்ன அவளை கலாட்டா பண்ணுறார்… ஆதி நீயே களத்துல இறங்குடா… உன் மாமா குட்டையை குழப்புறார்…’
ஆதி எதையோ பேச வாயை திறந்தவன் ‘அய்யோ நாம பேசினா இன்னும் கிண்டலடிப்பாங்களே’ என்று எண்ணி சட்டென்று வாயை மூடிக் கொண்டான்.
“என்ன சித்தப்பா கிண்டல் பண்றீங்க போல, இதுக்கு முன்னாடி அவங்க எப்படி இருந்தாங்கன்னு உங்களுக்கு தான் தெரியுமே… இனியும் உங்க மருமகனும் மருமகளும் கஷ்டப்படணுமா…”
“அம்மா போதும் சும்மா அவளை வா வான்னு கூப்பிட்டு, அக்கா தான் சொல்றாளே… இன்னும் என்ன சடங்கு சம்பிரதாயமோ போங்க…” என்று குந்தவைக்கு சப்போர்ட்டாக வந்து சேர்ந்தான் வானவன்.
“சரிம்மா… ஆனா ஒரு ரெண்டு நாள் வந்து இருந்துட்டு போ… அதுக்காச்சும் சரின்னு சொல்வியா??” என்று மகளை பார்த்தார் மணிமேகலை.“கண்டிப்பா வர்றேன்ம்மா…” என்றாள் குந்தவை.
மணிமேகலைக்கு உள்ளுர ஒரு வருத்தம் இருக்கவே செய்தது, மகள் திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாக சம்மதம் சொன்னது போல் இருந்தது அவளுக்கு.
திருமணத்தின் போதும் கலகலப்பில்லாமல் இருந்த மகளின் பேச்சு மாறியிருந்ததில் அவருக்குமே சந்தோசம், அதனாலேயே அவர் அதிகம் பேசவில்லை. மகளின் மாற்றம் அவருக்கு உவகையாகவே இருந்தது.
அவர்கள் கிளம்பும் போது அவளும் அவர்களுடனே கிளம்பிச் சென்றாள். ஆதிக்கு அன்றைய இரவு ஏகாதசியாகவே இருந்தது. ஒரு புறம் அவள் இரண்டு நாளில் வந்துவிடுவாள் என்று மகிழ்ச்சியும் மறுபுறம் அவள் அருகில் இல்லா இரவு அவனுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கவில்லை.
இடைவெளி இருந்தாலும் இந்த இரண்டு மாதமாக சேர்ந்தே பயணித்த தண்டவாளம் போல் அவன் உடனிருந்தவள் அருகில் இல்லாமல் ஆதிக்கு மனது எதுவோ போல் இருந்தது…
எப்போதடா இரண்டு நாட்கள் கழியும் என்று ஒரு ஒரு மணி நேரத்தையும் கழித்தான். மறுநாளைய விடியல் அவனை பரபரப்பாக்கியது.
அவள் தன்னுடன் அலுவலகம் வருவாளா இல்லை தனியாக போவாளா என்ற கேள்வி அவனை தொக்கி நிற்க அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேகமாக குளித்து சாப்பிட்டு கிளம்பி வந்தான்…….